Tuesday, July 27, 2021
முகப்பு மறுகாலனியாக்கம் தனியார்மயம் - தாராளமயம் - உலகமயம் ஸ்பைஸ் ஜெட் - மல்லையா வழியில் மாறன் சகோதரர்கள்

ஸ்பைஸ் ஜெட் – மல்லையா வழியில் மாறன் சகோதரர்கள்

-

லாநிதி மாறனின் ஸ்பைஸ் ஜெட் நிறுவனம் புதைகுழியில் சிக்கியிருக்கிறது. 2011-ல் திணற ஆரம்பித்து 2012-ல் மூச்சை விட்ட விஜய் மல்லையாவின் கிங் ஃபிஷர் ஏர்லைன்சின் அடியொற்றி இப்போது ஸ்பைஸ் ஜெட் நெருக்கடியை எதிர்கொண்டிருக்கிறது; இந்திய தனியார் விமான சேவைத் துறையின் அடுத்த கோல்மால் திவால்.

தரை தட்டும் ஸ்பைஸ் ஜெட்
தரை தட்டும் ஸ்பைஸ் ஜெட்

சனிக்கிழமை (நவம்பர் 29, 2014) இரவு ஸ்பைஸ் ஜெட் நிறுவனத்தின் முதன்மை செயல்பாட்டு அலுவலர் சஞ்சீவ் கபூர், “நவம்பர் சம்பளம் வழங்குவது 1-3 நாட்கள் தாமதமாகும்” என்று அந்நிறுவனத்தில் பணி புரியும் 5,000 ஊழியர்களுக்கு மின்னஞ்சல் மூலம் தெரிவித்திருக்கிறார். ஒரு நிறுவனம் திவாலாவதன் கடைசி அறிகுறி இதுதான் என்பது கிங் ஃபிஷர் அத்தியாத்திலேயே பார்த்தோம்.

மாறன் சகோதரர்களது விமானம் தள்ளாடக் காரணம் என்ன? குத்தகைக்கு (லீஸ்) எடுத்த விமானங்களுக்கு வாடகைப் பணம் கட்ட முடியவில்லை. கட்டண நிலுவைக்காக ஒரு டஜன் போயிங் 737 விமானங்களை அவற்றின் சொந்தக்காரர்கள் திரும்ப பெற்றிருக்கின்றனர். ஜூலை மாதம் 33 போயிங் 737-800 விமானங்கள், 6 போயிங் 737-900ER விமானங்கள் மற்றும் 15 Q400 விமானங்கள் ஸ்பைஸ் ஜெட் கைவசம் இருந்தன. இப்போது 20 போயிங் விமானங்கள் மட்டுமே உள்ளன, அவற்றில் 18 மட்டுமே இயக்கத்தில் உள்ளன.

ஊழியர்களுக்கு சம்பளம் தாமதமானது.
ஊழியர்களுக்கு சம்பளம் தாமதமானது.

விமானங்களை பராமரிப்பதற்கான உதிரி பாகங்கள் வாங்க பணம் கொடுக்க முடியவில்லை. தரையில் நிற்கும் விமானங்களிலிருந்து பாகங்கள் கழற்றி பறக்கப் போகும் விமானத்தில் பொருத்தி ஓட்டுகிறார்கள் என்று ஃபர்ஸ்ட் போஸ்ட் இணையதளம் தெரிவிக்கிறது.

நவம்பர் மத்தியில் ரத்து செய்யப்பட்ட 75 சேவைகள் டிசம்பர் முதல் வாரத்தில் மீண்டும் இயக்கப்படும் என்று அறிவித்திருந்தது நடக்கவில்லை. விமானம் புறப்படும் நேரங்களில் மாற்றம், விமான சேவை ரத்து போன்ற தகவல்களை பயணிகளுக்கு கடைசி நேரத்தில் தெரிவித்து அதிர்ச்சி கொடுக்கிறது ஸ்பைஸ் ஜெட். அதனால், பயணிகள் மத்தியில் கடும் எதிர்ப்பும் அதிருப்தியும் ஏற்பட்டுள்ளது.

இந்தூர், வாரணாசி, அவுரங்காபாத், சூரத், மைசூர், திருவனந்தபுரம், ஷார்ஜா, காத்மாண்டு, காபூல் ஆகிய இடங்களில் தனது செயல்பாட்டை முடக்க திட்டமிட்டுள்ளது, ஸ்பைஸ் ஜெட்.

தொடர்ந்து 5 காலாண்டுகளாக நஷ்டம். “நிறுவனத்தின் மொத்தக் கடன்கள் மொத்த சொத்து மதிப்பை விட ரூ 1,459 கோடி அதிகமாக உள்ளன” என்று அதன் கணக்குகளை தணிக்கை செய்த பத்லிபாய் என்ற தணிக்கை நிறுவனம் கூறியுள்ளது. கடந்த மார்ச் மாதத்தில் முடிந்த நிதியாண்டில் சுமார் ரூ 1,000 கோடி இழப்பு. ஸ்பைஸ் ஜெட்டை இந்த புதைகுழியிலிருந்து மீட்பதற்கு குறைந்தது ரூ 1,500 கோடி ($25 கோடி) தேவை; அதில் ரூ 1000 கோடி உடனடியாக வேண்டும் என்று ஆசிய பசிபிக் விமான போக்குவரத்து மையம் மதிப்பிட்டுள்ளது.

“சன் தொலைக்காட்சியின் சேர்மன் மற்றும் நிர்வாக இயக்குனரான கலாநிதி மாறனுக்கு, பத்தோடு பதினொன்றாக இருப்பதில் நம்பிக்கை இல்லை. எதைச் செய்தாலும் அதில் முதல் இடத்தை பிடிக்க முயற்சிப்பவர்” என்று தொடங்குகிறது 2010-ம் ஆண்டில் ஸ்பைஸ் ஜெட்டை சொந்தமாக்கிக் கொண்டதை அடுத்து கலாநிதி மாறனைப் பற்றி எழுதப்பட்ட ஃபைனான்சியல் எக்ஸ்பிரஸ் கட்டுரை. “அவர் தொட்டதெல்லாம் பொன்னாகும், எதையும் பிளான் பண்ணி வெற்றிகரமாக செய்து முடிப்பதில் அவருக்கு நிகர் அவரே” என்று அவரது தமிழக ஜால்ராக்கள் கலாநிதி மாறனைப் பற்றி புகழ்ந்து வருகின்றனர்.

கலாநிதி மாறன்
சிக்கனமான, ஒழுக்கமான’ தமிழ் முதலாளி கலாநிதி மாறன்

மூன்று ஆண்டுகளாக திட்டமிட்டு பிறகு அப்போது லாபத்தில் இயங்கிக் கொண்டிருந்த ஸ்பைஸ் ஜெட் நிறுவனத்தின் 37.75% பங்குகளை ரூ 940 கோடி கொடுத்து வாங்கி அதை தன் கட்டுப்பாட்டில் கொண்டு வந்தார் கலாநிதி மாறன். 2013-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 130 கோடி ரூபாய் கொடுத்து தனது பங்கு விகிதத்தை 48.59% ஆக உயர்த்திக் கொண்டார், டிசம்பர் மாதம் அது 53.48% ஆக உயர்ந்தது.

‘விஜய் மல்லையா போன்று கவர்ச்சிப்பட காலண்டருக்கு ஃபோட்டோ எடுப்பது, கார் பந்தய நிறுவனத்தில் காலை விடுவது என்று மூலதனத்தை வீணாக்காத, ‘சிக்கனமான, ஒழுக்கமான’ தமிழ் முதலாளி கலாநிதி மாறன். பூமாலை வீடியோ இதழில் ஆரம்பித்து 33 சேனல்கள் கொண்ட சன் தொலைக்காட்சி குழுமம், எஸ்சிவி கேபிள் வலைப்பின்னல், இந்தியா முழுவதிலுமாக 45 பண்பலை வானொலி சேவைகள், மலேசிய முதலாளி அனந்தகிருஷ்ணனுடன் இணைந்து சன் டைரக்ட் டி.டி.எச் சேவை, தமிழில் 5 வார பத்திரிகைகள், 2 தினசரிகள், சன் பிக்சர்ஸ் திரைப்பட தயாரிப்பு வினியோக நிறுவனம் என்று பல தொழில்களுக்கு சொந்தக்காரர். கலாநிதி மாறனின் சன் தொலைக்காட்சி குழுமம் ஆசியாவின் மிக லாபகரமான தொலைக்காட்சி நிறுவனம் என்று ஹாங்காங்கைச் சேர்ந்த மீடியா பார்ட்னர்ஸ் ஏசியா நிறுவனம் மதிப்பிட்டிருக்கிறது.

அதாவது இந்தியாவில் குறிப்பிட்டுச் சொல்லும் ஒரு தரகு முதலாளியாக மாறன் சகோதரர்கள் உயர்ந்து விட்டனர். அத்தகைய கலாநிதி மாறனுக்குச் சொந்தமான ஸ்பைஸ் ஜெட்தான் இப்போது மல்லாந்து உயிரை விட ஆரம்பித்திருக்கிறது. அவர்களது வளர்ச்சி முதலாளித்துவத்தின் மோசடியான வளர்ச்சி என்றால் வீழ்ச்சியும் அவ்வாறே நடந்தாக வேண்டும்.

இந்தியாவில் பொதுத்துறை நிறுவனமான ஏர்-இந்தியா, இந்தியன் ஏர்லைன்ஸ் மட்டும் விமான சேவை வழங்கி வந்த காலத்தில், ‘பொதுத்துறை என்றால் ஊழியர்கள் வேலை செய்ய மாட்டார்கள், விமானம் தாமதமாக போகும், நிறுவனம் நஷ்டத்தில் இயங்கும். தனியார் வந்தால்தான் எல்லாம் சரியாகும்’ என்று உதார் விட்டுக் கொண்டிருந்தனர் முதலாளித்துவ அறிவுஜீவிகளும் இந்திய வாழ் அமெரிக்க கனவு நடுத்தர வர்க்கத்தினரும். அந்த கனவை நனவாக்கும் விதமாக 1991 முதல் இந்தியப் பொருளாதாரத்தில் தனியார் மயம், தாராள மயம், உலக மயம் அறிமுகப்படுத்தப்பட்டது. ‘இந்தியா ஏழை நாடாக இருந்தாலும், 80% மக்கள் ஒரு நாளுக்கு ரூ 20 செலவில் காலம் தள்ளினாலும், எஞ்சிய 20%-ஐ கணக்கு போட்டுப் பார்த்தாலே நடுத்தர வர்க்கத்தின் எண்ணிக்கை 20 கோடி வருகிறது. அது அமெரிக்காவின் மக்கள் தொகைக்கு நிகரானது. அதற்கு மேற்கத்திய தரத்திலான, மேற்கத்திய பாணியிலான பொருட்கள், சேவைகள் விற்க வேண்டும், விற்க முடியும்’ என்று பன்னாட்டு நிறுவனங்கள் வகுத்த திட்டத்தின் ஒரு பகுதிதான் இந்த தனியார் விமான சேவைகள்.

தனியார் விமான சேவை
பன்னாட்டு நிறுவனங்கள் பணம் சம்பாதிக்க இந்திய தனியார் விமான சேவைகள்

விமான பைலட்டுகள், பொறியாளர்கள் என்று திறமை வாய்ந்த ஊழியர்களுக்கும் பல லட்சம் சம்பளம் கொடுக்க வேண்டும்; விமான எரிபொருள் வாங்க பணத்தை எண்ணி வைக்கா விட்டால் தொழிலை தொடர முடியாது; விமானங்களை விற்கும் அல்லது குத்தகைக்கு விடும் பன்னாட்டு நிறுவனங்களுக்கும் கறாராக பணம் கட்ட வேண்டும்; விமான நிலையங்களை பயன்படுத்த பணம் கட்ட வேண்டும். இருப்பினும் எரிபொருள் வாங்கவும், விமான நிலைய கட்டண பாக்கியையும் இந்திய அரசு கடனாக பலருக்கும் கொடுக்கிறது. அதாவது அரசு பணத்தில் தனியார் முதலாளிகள் தொழில். இது போக அரசு வங்கிகள் மூலதனக் கடனைவே வாரி வழங்குகின்றன.

அப்படித்தான் மல்லையா பட்டை நாமம் போட்டார்.

இந்நிலையில் பல நிறுவனங்கள் போட்டி போடும் போது, விமானத்தில் பறக்கப் போவதாக சொல்லப்பட்ட நடுத்தர வர்க்கமோ ஆகக் குறைந்த பயணச் சீட்டு எங்கு கிடைக்கும் என்று வேட்டையாடி, ரயிலில் மூன்றாம் வகுப்பு குளிர்பதன பெட்டி கட்டணத்தோடு ஒப்பிட்டு, சல்லிசாக டிக்கெட் கிடைத்தால்தான் தான் விமானப் பயணத்தை தேர்ந்தெடுக்கின்றனர். வாடிக்கையாளர்களிடமிருந்து லாபம் சம்பாதிக்க வழி இல்லை. ஸ்பைஸ் ஜெட் கூட இந்த ஆண்டு தொடக்கத்தில் பல காலாண்டுகள் நஷ்டத்தைத் தொடர்ந்து சிறப்பு தள்ளுபடி கொடுத்து வருமானத்தை பெருக்க ஆரம்பித்திருந்தது.

“விமான போக்குவரத்துத் துறையில் கிட்டத்தட்ட ஏகபோக நிறுவனமாக இருந்தால் எளிதாக லாபம் ஈட்டலாம். துறையில் முன்னணி வகிக்கும் ஜெட் ஏர்வேஸ் கூட போட்டியை எதிர் கொள்ளும் போது திணறுகிறது” என்கிறார் அஞ்சுலி பார்கவா என்ற பிசினஸ் ஸ்டேண்டர்ட் பத்திரிகையாளர். ‘பல நிறுவனங்கள் போட்டி போட்டு சிறப்பாக சேவை வழங்குவதால் நுகர்வோர் பயன்பெறுவார்கள்’ என்ற சந்தை பொருளாதாரவாதிகள் முன் வைக்கும் அடிப்படையின் லட்சணம் இவ்வளவுதான்.

இந்நிலையில் ஒன்றுக்கும் மேற்பட்ட நிறுவனங்கள் பல ஆயிரம் அல்லது சில லட்சம் மேட்டுக்குடியினருக்கு சேவை அளிக்க போட்டி போடும் போது, ஒவ்வொன்றும் ஆக அதிக பங்கை பிடிக்க முயற்சிக்கும் போது குழப்பங்களும், அராஜகமும்தான் மிஞ்சுகின்றன.

மறுகாலனியாக்கம்
வளர்ச்சி, முன்னேற்றம் என்ற பெயரில் உழைக்கும் மக்களை புறக்கணிக்கும் மறுகாலனியாக்கம்.

எனவே, 1991-ல் விமான போக்குவரத்துத் துறையில் ஆரம்பித்து வைக்கப்பட்ட மறுகாலனியாக்கக் கொள்கை போயிங், ஏர்பஸ் போன்ற பன்னாட்டு விமான உற்பத்தி நிறுவனங்களுக்கு விமானங்களை விற்பதற்கு சந்தையை உருவாக்கிக் கொடுப்பதைத் தவிர எதையும் உருப்படியாக சாதிக்கவில்லை. டெக்கான், சஹாரா, தமானியா, ஈஸ்ட்-வெஸ்ட், கலிங்கா, என்.ஈ.பி.சி, பாரமவுண்ட் என்ற பல பெயர்களில் தொடங்குவதும், இணைவதும், மூடுவதுமாக பல தனியார் நிறுவனங்கள் பூச்சி காட்டிக் கொண்டிருக்கின்றன; இந்த வரிசையில் சமீபத்தில் வீழ்ந்ததுதான் மல்லையாவின் கிங் ஃபிஷர். முக்கியமான இந்த வீழ்ச்சியில் இந்திய அரசின் பணம் அதாவது மக்களின் பணம் ஏராளமிருக்கிறது.

1993-ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட மோடி-லுஃப்ட் நிறுவனம். ஜெர்மனியின் லுஃப்தான்சா விமான சேவை நிறுவனத்துக்கும் இந்திய தரகு முதலாளி எச்.கே மோடிக்கும் இடையேயான கூட்டு முயற்சி. லுஃப்தான்சா தனது விமானங்களை வாடகைக்கு விட்ட வகையிலும், தொழில்நுட்ப ஆலோசனை சேவை என்ற வடிவத்திலும் பணம் சம்பாதித்தது. 3 ஆண்டுகளுக்குள் லுஃப்தான்சாவுக்கு குத்தகை கட்ட முடியாமல் மோடி லுஃப்ட் ஊத்தி மூடிக் கொண்டது. வெவ்வேறு பெயர்களில் பல முதலாளிகள் வசம் இருந்த அந்நிறுவனத்தின் விமான சேவை உரிமம் இப்போது ஸ்பைஸ் ஜெட் என்ற பெயரில் கலாநிதி மாறனிடம் உள்ளது.

இப்போது ஸ்பைஸ் ஜெட் செய்திருப்பது போலவே விஜய் மல்லையாவின் கிங் ஃபிஷர் ஏர்லைன்ஸ் 2011-ம் ஆண்டில் ஊழியர்களுக்கு சம்பளம் கொடுப்பதை தாமதப்படுத்த ஆரம்பித்தது; அக்டோபர் 2012 வாக்கில் மேலும் பணம் இல்லாமல் தனது செயல்பாட்டை நிறுத்திக் கொண்டது. ஆயிரக்கணக்கான ஊழியர்களின் சம்பளப் பணத்துக்கு நாமம் போட்டதோடு, பொதுத்துறை வங்கிகளிடம் வாங்கிய ரூ 7,000 கோடி கடனுக்கும் கோவிந்தா போட்டு செட்டிலாகியிருக்கிறார் விஜய் மல்லையா.

கலாநிதி மாறன் பல ஆயிரம் கோடி மதிப்பிலான தனது சார்மாஜ்யத்தை கட்டுவதற்கு உதவியாக சுமார் 15 ஆண்டுகளுக்கு அவரது தாத்தாவின் கட்சி மத்தியில் ஆளும் அரசில் பங்கேற்றது; அவரது தந்தை மத்திய அமைச்சராக இருந்தார்; பின்னர் தம்பி தயாநிதி மாறன் அமைச்சராக அமர்த்தப்பட்டார். ஒருக்கால் இவர்கள் நேரடி அரசியலில் இல்லை என்றாலும் இந்த வளர்ச்சியை சாதித்திருக்கவே முடியும். அதாவது முதலாளிகளுக்குள் கட்சி பேதம் எதுவுமில்லை. எல்லா முதாளிகளும் அரசின் செல்லப் பிள்ளைகள்தான்.

இந்த பொருளாதாரக் கொள்கைகளை பயன்படுத்தி பணத்தைக் குவித்துக் கொண்ட தரகு முதலாளிகளோ தனி விமானங்களிலும், ஹெலிகாப்டர்களிலும் பறக்கிறார்கள். 2010-11ம் ஆண்டில் கலாநிதி மாறனுக்கும், அவரது மனைவி காவேரி மாறனுக்கும் சன் தொலைக்காட்சி குழுமம் மொத்தம் ரூ 128 கோடி ஊதியமாக வழங்கியிருக்கிறது. இவ்வளவு பணத்தை கொடுத்த மக்களோ சன் தொடர் அழுகை சீரியல்களை பார்த்து கண்ணீரை விரயமாக்கியிருக்கின்றனர்.

மத்தியில் காங்கிரஸ் ஆட்சிக்குப் பிறகு மோடி அமைச்சரவை வந்த உடன் ஸ்பைஸ் ஜெட், ஜிண்டால் ஸ்டீல், டி.எல்.எஃப், போன்ற காங்கிரஸ் பிரிவு தரகு முதலாளிகளுக்கு அதிர்ஷ்டம் குறைவாகவும் மோடியுடன் இணக்கமான தரகு முதலாளிகளான அதானி, அம்பானி, பூர்த்தி போன்ற நிறுவனங்களுக்கு அளவிலா யோகமும் ஆரம்பித்திருக்கின்றது. நெருக்கடிகளில் சிக்கும் போது வங்கிக் கடனோ, அரசு உதவியோ பெறுவதற்கு ஆளும் கட்சியின் நல்லாசி இல்லாத முதலாளிகள் கொஞ்சம் காத்திருக்க வேண்டும்.

தனியார் மயத்தின் புகழ் பாடிக் கொண்டிருக்கும் நடுத்தர வர்க்கம, தான் கனவு கொண்ட சொர்க்கம், கொடுங்கனவாக மாறி வருவதை பார்த்து புலம்பிக் கொண்டிருக்கிறது. உழைக்கும் மக்களை கொடூரமாக சுரண்டும் மறுகாலனியாக்க பொருளாதாரக் கொள்கைகள் இப்போது பெரும்பான்மை நடுத்தர வர்க்கத்தையும் நடுத்தெருவில் விட்டு வருகிறது.

ஸ்பைஸ் ஜெட் விமான ரத்துக்களைத் தொடர்ந்து “சென்னையிலிருந்து புறப்படும் எல்லா ஸ்பைஸ்ஜெட் விமானங்களும் ரத்து செய்யப்படுகின்றன” என்று வாட்ஸ்-அப்பிலும், டுவிட்டரிலும் தகவல்கள் பறந்தன. கலகலத்துப் போன பல பயணிகள் தொலைபேசியில் ஸ்பைஸ்ஜெட் கால் சென்டரை தாக்க ஆரம்பித்தார்கள். இன்னும் சிலர் நேராக சென்னை விமான நிலையத்துக்கே போய் விட்டார்கள்.

ரத்து செய்யப்பட்ட விமானங்களில் முன்பதிவு செய்திருந்த பயணிகள் மாற்று விமானத்தில் இடம் கேட்டு ஸ்பைஸ்ஜெட் கவுண்டர்கள் முன்பு குவிந்தார்கள். அந்த விமானங்கள் நிரம்பியிருந்ததால், அவர்கள் ஜெட் ஏர்வேஸ் கவுண்டருக்கு போனார்கள். அங்கு டிக்கெட்டுக்காக ஒருவருக்கொருவர் அடித்துப் பிடித்துக் கொண்டார்கள் என்கிறார் ஒரு போலீஸ் அதிகாரி.

“ஹைதராபாத்துக்கு தவிர்க்க முடியாத ஒரு பிசினஸ் சந்திப்புக்குப் போக முன்பதிவு செய்திருந்தேன். அதை ரத்து செய்து ஸ்பைஸ் ஜெட் அனுப்பிய குறுஞ்செய்தியில் நாங்கள் வேறு முன்பதிவு செய்து கொள்ளலாம் என்று குறிப்பிடப்பட்டிருந்ததால், ஸ்பைஸ் ஜெட் கால் சென்டருக்கு பேசினோம். ஆனால், என்னை இரண்டு முறை 30 நிமிடங்கள் காத்திருக்க வைத்து விட்டு இணைப்பை துண்டித்து விட்டார்கள். கடைசியில் விலை அதிகமாக கொடுத்து ஏர் இந்தியா விமானத்தில் போக வேண்டி வந்தது.” என்றார் பிரதீக் ரக்சன் என்பவர்.

“வழக்கமாக ஒரு நாளைக்கு 1,200 முதல் 1,300 தொலைபேசி அழைப்புகள் எங்களுக்கு வருகின்றன. 10% முதல் 12% அழைப்புகளை ஏற்க முடியாமல் கைவிட்ட அழைப்புகள் என்று நாங்கள் ஒதுக்குகிறோம். ஸ்பைஸ் ஜெட் விமானங்களை ரத்து செய்ததால், வாடிக்கையாளர் அழைப்புகள் இன்னும் அதிகமாகி ஒதுக்கப்பட்ட அழைப்புகளின் எண்ணிக்கை 25% ஆக உயர்ந்திருக்கிறது” என்கிறார் ஒரு மிகப்பெரிய பயண முகவர் நிறுவனத்தின் செயல்பாட்டு இயக்குனர். தனியார் வழங்கும் வாடிக்கையாளர் சேவை என்று இதைத்தான் மெச்சிக் கொள்கிறது நடுத்தர வர்க்கம்.

சென்னையைச் சேர்ந்த அனந்த் மூர்த்தி என்ற பத்திரிகையாளர் தனது நண்பரின் திருமணத்தில் கலந்து கொள்ள குவகாத்தி செல்ல செப்டம்பர் மாதமே முன்பதிவு செய்திருந்தார். பயண தேதிக்கு 3 நாட்களுக்கு முன்பு அவரது விமானம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக குறுஞ்செய்தி வந்தது. மறு பதிவு செய்ய வாய்ப்புள்ள அடுத்த விமானம் திருமணம் முடிந்த ஒரு வாரத்துக்குப் பிறகுதான் புறப்படுகிறது. “பதிலாக கிடைத்த பணம் இன்னொரு விமானத்தில் கடைசி நேரத்தில் பதிவு செய்வதற்கு தேவையானதில் 4-ல் ஒரு பங்கு கூட இல்லை. நான் எனது பயணத்தை ரத்து செய்தேன்” என்கிறார் மூர்த்தி.

கடைசி நேரத்தில் சீட்டு வாங்குபவர்களுக்கு அதிக விலை, முன் கூட்டியே பதிவு செய்பவர்களுக்கு தள்ளுபடி என்ற போட்டிச் சந்தை அராஜகத்தினால் மூர்த்தி நண்பரின் திருமணத்தில் கலந்து கொள்ள முடியவில்லை.

மோடி லுஃப்டில் ஆரம்பித்து ஸ்பைஸ் ஜெட் வரையிலான இந்த நிறுவனத்தின் வரலாறு இந்தியாவின் மறுகாலனியாக்கத்தோடு ஒட்டி வளர்ந்திருக்கிறது. இதன் பேரலையில் மக்கள்தான் திண்டாடுகிறார்கள். முதலாளிகளோ தங்கள் நிறுவனங்களை திவாலாக்கிவிட்டு சொந்த சொத்துக் கணக்கை குறைவில்லாமல் பெருக்கிக் கொள்கிறார்கள். அமெரிக்க வீட்டு கடன் நெருக்கடியிலேயே இதைத்தான் நாம் பார்த்தோம்.

வளர்ச்சி, முன்னேற்றம் என்ற பெயரில் பெரும்பான்மை மக்களை புறக்கணித்து அன்னிய முதலீடு, மால்கள், சொகுசு பங்களா வீடுகள், ஐந்து நட்சத்திர விடுதிகள், கார்ப்பரேட் மருத்துவமனைகள் என்று பெரும்பான்மை மக்களை புறக்கணித்து வகுக்கப்படும் மறுகாலனியாக்க பொருளாதாரக் கொள்கைகள் ஸ்பைஸ் ஜெட் விமானங்களைப் போல தரை தட்டி வீழ்வது உறுதி.

ஆனால் இந்த தரைதட்டலில் மாறன் சகோதரர்களுக்கு எந்த பிரச்சினையும் இல்லை. இவர்களது நிறுவனங்களை நம்பி வாழ்க்கையை அமர்த்திக் கொண்ட ஊழியர்கள் பாடுதான் திண்டாட்டம். கூடவே அரசு பணம் என்ற பெயரில் மக்கள் பணம் இவர்களை தூக்கி நிறுத்த பயன்படுத்துவார்கள்.

ஆகவே தனியார்மயத்தை கூண்டோடு புதைக்காமல் இந்தியாவுக்கு விடிவு காலமில்லை.

– பண்பரசு.

மேலும் படிக்க

 1. அய்யா நீங்க தனியார் மயத்த ஒழிக்கனுமுனு சொல்லுறீங்க அரசு ரயில் நிலையங்களை தனியாரிடம் ஒப்படைக்க முடிவு செய்துள்ளது யென்ன பன்றது ரயில்வே ஊழியர்கள் சங்கம் அமைதியா இருக்க மாறி தெரியுது, பாதிக்கபடும் மக்கள் தான் தெருவில் இறங்கி போராட வேண்டும்…

  • Suresh Prabhu,Railway Minister has given a new explanation.According to him privatization is different from executing railway projects through private sector.The end result is same.We have seen it in toll plazas.Modi says that Indian Railway is mostly used by poor people.In the same meeting he announces that there is a proposal to entrust Railway Stations to private sector.After take over of the stations by private sector,can poor people enter the stations by paying the high entrance fees that would be levied by the private sector?Petroleum minister says that the govt is levying excise duty on petrol and diesel to finance welfare measures aimed at poor people.But,already budget allocation for Education,Health and Rural Development is cut to the tune of about 30000 crores.Petroleum Minister says that any further reduction in international oil prices will be passed on to the consumers.Already the price per barrel has dropped from $107 to $70 without any significant relief to common men.

   • பெட்ரோல் விலை தற்போதைய நாள் நிலவரப்படி $66 க்கு வந்துவிட்டது,ஆனால் மக்களாகிய நமக்கு குழைத்த நாமம் தான்.

 2. தரகு முதலாளி என்ற பதத்துக்கு யாராவது விளக்கம் கொடுக்க முடியுமா?
  முதலாளிக்கும் தரகு முதலாளிக்கும் என்ன வித்தியாசம்?

 3. தரகுன்னா commission தானே? அப்புறம் எப்படி stock holder? பங்காளர்னு சொல்லலாமில்லையா?

 4. சரவெடி,

  தரகு முதலாளி என்றால் தரகு வேலை பார்ப்பவர். யாருக்கு தரகு வேலை, என்ன தரகு வேலை?

  அன்னிய முதலாளி லாபம் சம்பாதிப்பதற்கு நம் நாட்டில் தரகு வேலை பார்ப்பவர். உதாரணமாக இந்தப் பதிவில் மோடி-லுஃப்ட் நிறுவனத்தில் லுஃப்தான்சா லாபம் சம்பாதிக்க தரகு வேலை பார்த்தவர் எஸ் கே மோடி என்ற இந்திய தரகு முதலாளி.

  இதே போல மாறன் சகோதரர்கள், அம்பானி, அதானி போன்ற இந்திய தரகு முதலாளிகள் தமது ஒவ்வொரு தொழிலிலும் தொழில்நுட்பம், சந்தை, மூலப்பொருட்கள், மூலதனம் இவற்றில் ஒன்று அல்லது அனைத்துக்கும் அன்னிய நிறுவனத்தை அண்டி தொழில் செய்வதை பொருத்திப் பார்த்துக் கொள்ளலாம். அவர்கள் சம்பாதிக்கும் லாபத்தை விட அவர்களது கூட்டாளி, ஆலோசகர், வழிகாட்டி பன்னாட்டு நிறுவனம் அதிகம் சம்பாதித்துப் போகும்.

  இத்தகைய தரகு முதலாளிகளுக்கும் முதலாளிக்கும் (தேசிய) என்ன வித்தியாசம்?

  தரகு முதலாளியின் சம்பாத்தியம் சொந்த நாட்டு நலனை சார்ந்து இல்லை, வெளிநாட்டு நிறுவனத்தோடு ஒட்டி இருக்கிறது. அதனால், சொந்த நாட்டு வளர்ச்சிக்கு தடையாக இருக்கும் பிற்போக்கு சக்திகளை (சாதி, மதம்) ஒழித்துக் கட்டாமல், அவற்றை பயன்படுத்தி தனது கூட்டாளி (அதாவது எஜமானுக்கு) க்கு தரகு வேலை பார்த்து சம்பாதித்துக் கொடுப்பது, அதன் மூலம் தனது வருமானத்தை எப்படி பெருக்கிக் கொள்வது என்று பார்ப்பார்.

  இந்தியா போன்ற நாடுகளில் வரலாற்று காரணங்களால் (சுமார் 90 வருடம் நேரடி காலனி ஆட்சி, அதற்கு முன்பு அதே கால அளவுக்கு கும்பனி ஆட்சி) உள்நாட்டு முதலாளிகள் தோன்ற முடியாமல், வெளிநாட்டு முதலாளிகளுக்கு தொண்டு செய்வதற்காகவே தொழில் செய்யும் முதலாளிகள் தோன்றி வளர்ந்தார்கள். தேசிய நலனை முன் வைக்கும் முதலாளிகள் தோன்றினாலும் வளர்ந்து வலு பெறுவதற்கான சூழல் உருவாகவில்லை.

 5. //அன்னிய முதலாளி லாபம் சம்பாதிப்பதற்கு நம் நாட்டில் தரகு வேலை பார்ப்பவர். உதாரணமாக இந்தப் பதிவில் மோடி-லுஃப்ட் நிறுவனத்தில் லுஃப்தான்சா லாபம் சம்பாதிக்க தரகு வேலை பார்த்தவர் எஸ் கே மோடி என்ற இந்திய தரகு முதலாளி.// அப்பிடி பார்த்தா எல்லா முதலாலியும் தரகு வேலை பார்ப்பவர்கள் தானே, எந்த ஒரு நிருவனமும் மாற்று நிருவனத்துடன் ஒப்பந்தம் செய்து கொண்டுதானே லாபம் பார்க்கிறது அப்பிடி இருக்கும் போது தரகு வேலை செய்யாத முதலாளிகளை கண்டுபிடிப்பதே இயலாத காரியம் இல்லையா …
  இந்தியா போன்ற நாடுகளில் வரலாற்று காரணங்களால் (சுமார் 90 வருடம் நேரடி காலனி ஆட்சி, அதற்கு முன்பு அதே கால அளவுக்கு கும்பனி ஆட்சி) உள்நாட்டு முதலாளிகள் தோன்ற முடியாமல், வெளிநாட்டு முதலாளிகளுக்கு தொண்டு செய்வதற்காகவே தொழில் செய்யும் முதலாளிகள் தோன்றி வளர்ந்தார்கள். தேசிய நலனை முன் வைக்கும் முதலாளிகள் தோன்றினாலும் வளர்ந்து வலு பெறுவதற்கான சூழல் உருவாகவில்லை.எல்லாம் சரிதான் அனால் இந்திய முதலாளிகளே உலக பணக்காரகளின் வரிசையில் இருப்பது ஏடன் தரகுத்தனதின் பரிசா..

  • அய்யா, 67 வருடங்கள் தரகு வேலை பார்த்தால் உலக பனக்காரர்கள் வரிசையில் சேரமுடியாதா?

   • Joseph,

    //அப்பிடி பார்த்தா எல்லா முதலாலியும் தரகு வேலை பார்ப்பவர்கள் தானே, எந்த ஒரு நிருவனமும் மாற்று நிருவனத்துடன் ஒப்பந்தம் செய்து கொண்டுதானே லாபம் பார்க்கிறது அப்பிடி இருக்கும் போது தரகு வேலை செய்யாத முதலாளிகளை கண்டுபிடிப்பதே இயலாத காரியம் இல்லையா …//

    இந்தியாவில் உள்ள பெரிய முதலாளிகள் எல்லோருமே தரகு வேலை பார்ப்பவர்கள்தான். அதை ‘எந்த ஒரு நிறுவனமும் மாற்று நிறுவனத்துடன் ஒப்பந்த் செய்து கொண்டு’ என்று பொதுப்படையாக சொல்லி விட முடியாது. இந்திய நிறுவனங்கள் அன்னிய நிறுவனங்களுடன் செய்து கொள்ளும் ஒப்பந்தம் நமது மக்களிடம் கொள்ளையடித்து அன்னிய நிறுவனத்துக்கு ஆதாயம் தேடித்தருவதாக இருப்பதை ஒவ்வொரு விஷயத்திலும் பொருத்திப் பார்த்துக் கொள்ளலாம்.

    //எல்லாம் சரிதான் அனால் இந்திய முதலாளிகளே உலக பணக்காரகளின் வரிசையில் இருப்பது ஏடன் தரகுத்தனதின் பரிசா..//

    அப்படி இல்லை என்று உங்களுக்குத் தோன்றுகிறதா? அப்படி இருப்பதால்தான் இந்திய முதலாளிகள் உலகப் பணக்காரர் வரிசையில் போகும் போது இந்திய மக்களில் பெரும்பாலானோர் வறுமைக் கோட்டுக்குள் தள்ளப்படுகின்றனர். குழந்தைகள் ஊட்டச் சத்துக் குறைவால் பாதிக்கப்படுகின்றனர். தரகு வேலை பார்த்த இவனே உலகப் பணக்காரர் வரிசையில் என்றால், அவனது தரகு வேலையில் முழு ஆதாயம் அடைந்த பன்னாட்டு நிறுவனங்கள் எவ்வளவு கொள்ளை அடித்துக் கொண்டு போயிருக்கும் என்று யோசித்துப் பார்த்தால் நமது நாட்டின் அவலங்களுக்கு காரணங்களில் முக்கியமானது பிடிபடும். ஏன் இந்தியா அமெரிக்கா போல முன்னேற மாட்டேங்குது என்பதும் புரியும்.

 6. வாங்குகிற சம்பளத்தில் முறையாக வருமான வரி கட்டி விட்டு, மிஞ்சுகின்ற பணத்தில் குடும்பத்தை ஓட்டுச் செல்லும் சாமான்ய அரசு ஊழியர்கள் சந்திக்கும் பிரச்சனைகள் பல. அனால், அரசுப் பணத்தைக் ஒரு புறம் கொள்ளை அடித்துவிட்டு, பம்மாத்து செய்யும் இவர்களை அரசு ஒன்றும் செய்யாது வேடிக்கை பார்கிறது. இது தான், புதிய பொருளாதாரக் (அடாவடிக்) கொள்கை.

 7. மாறன் “தம்பிகள்” வாங்கிய மொத்த
  கடனையும் தள்ளுபடி செய்துவிடும்- மத்திய அரசு….
  தம்பிங்க பொழைக்கத் தெரிந்த புள்ளைங்க….

 8. மக்களின் வரிப்பணத்தில் தான் சம்பளம் வழங்கப்படுகிறது என்பதை வலியுறுத்தி, அரசு ஊழியர்களின் தலையில் குட்டி வேலை வாங்க அரசாங்கத்திற்க்கு துப்பு இல்லை.அரசு ஊழியர்கள் சங்கத்தின் அராஜகத்திற்க்கு அளவே இல்லை. தனியார் முதலாளிகளின் தில்லு முல்லு,மக்கள் பணம் கொள்ளையடிப்பு,நிறுவன மூடுவிழா எதையும் அரசாங்கத்தால் தடுக்க முடியவில்லை. மக்கள் ஆட்சி என்ற பெயரில் தகுதி இல்லாதவனெல்லாம் தலைவன் ஆனால் இதுதான் நடக்கும்.அனைவருக்கும் வாழ உரிமை உண்டு. ஆனால் நல்ல நிர்வாகம் என்பது சிலரால்தான் முடியும்.அவர்கள் சாதாரண மக்களைவிட பலமடங்கு தொலைனோக்கு பார்வை கொண்டவர்களாக இருக்கவேண்டும்.அப்படிப்பட்டவர்களை உருவாக்க, முன்னோர்கள் காட்டிய வழி, கல்விமுறையில் மாற்றம்,பண்டைய இலக்கியங்களில் கூறப்பட்ட நீதிபோதனைகள் கடைபிடிக்க வேண்டும்.நமக்குத்தான் பண்டைய இந்தியா என்றாலே குப்பைதானே.என் முன்னோர்களின் உடை அசிங்கமானது என்று கூவிக்கொண்டே,நாம் நிர்வாணமாக அலையும் “முற்போக்கு கைபுள்ள” தானே.கிறுக்குப் பயலுக்கு கிறுக்கன்தான் நிவாகி. மக்களாட்சியில் இந்த கைபுள்ள இன்னும் நிறைய அடி வாங்குவான். ஏன்னா இவன் ரொம்ப நல்லவன்.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க