Wednesday, October 20, 2021
முகப்பு செய்தி சுரங்க தொழிலாளிகள் உயிரில் உங்கள் செல்பேசி சார்ஜ் ஆகிறது

சுரங்க தொழிலாளிகள் உயிரில் உங்கள் செல்பேசி சார்ஜ் ஆகிறது

-

COAL_CHHATTISவாழ்க்கையை நடத்துவதற்குத்தான் வேலை. அந்த வேலையே வாழ்வை பறிக்கும் அபாயமுடையது என்றால்?

பிப்ரவரி – 2014 இரவு. தெலுங்கானாவில் இருக்கும் சிங்கரேணி நிலக்கரி சுரங்கம். 52 வயது பாப்பையாவும், 45 வயது சங்கரையாவும் தரைக்கு கீழே உள்ள ஆழ் சுரங்கத்திற்கு சென்று வேலையை ஆரம்பிக்கிறார்கள். திடீரென்று சுரங்க கூரை இடிந்து விழுந்து மற்ற தொழிலாளிகள் ஓடுகிறார்கள். ஆனால் மேற்சொன்ன இருவர் மட்டும் கொல்லப்படுகிறார்கள்.

SCCL என்றழைக்கப்படுகிறது, சிங்கரேணி நிலக்கரி நிறுவனம். தெலுங்கானா மாநில அரசும், மத்திய அரசும் இந்த நிறுவனத்தை 51:49 பங்கு விகிதத்தில் நடத்தி வருகின்றன. பிராணதியா – கோதாவரி பள்ளத்தாக்கில் வரும் இப்பகுதியில் புவியியில் மதிப்பீட்டின் படி 8,791 மில்லியன் டன் நிலக்கரி இருக்கிறது. இங்கே 15 திறந்தவெளி சுரங்கங்களையும், 34 ஆழ் சுரங்கங்களையும் சிங்கரேணி நிலக்கரி நிறுவனம் நடத்தி வருகிறது. மொத்த தொழிலாளிகளின் எண்ணிக்கை 62,805.

ஆந்திரத்து நடுத்தர வர்க்கம் அமெரிக்காவில் வாழ்க்கையை அமைத்துக் கொள்ள்ளும் கனவிலும், நனவிலும் இருக்கிறார்கள்; பாப்பையா, சங்கரையா போன்றோருக்கு சுரங்கம் சென்றால் வீடு திரும்புவோமா, தெரியாது.

இது கோதாவரியின் கதை மட்டுமல்ல. அரசு மதிப்பீட்டின் படியே ஒவ்வொரு மூன்று நாட்களிலும் ஏதோ ஒரு கனிம சுரங்கத் தொழிலாளி இந்தியாவில் கொல்லப்படுகிறார். பக்கச் சுவர் மற்றும் கூரைச் சுவர்கள் இடிந்து விழுவதிலேயே நமது தொழிலாளிகள் அதிகம் கொல்லப்படுகின்றனர்.

கப்பல் உடைப்பு, சுரங்கம் இரண்டும்தான் இந்தியாவில் மிக அபாயகரமான தொழில். இங்கே அபாயம் தொழிலாளிகளுக்கு மட்டும்தான். ஆதாயம் முதலாளிகளுக்கு. ஆதாயத்தின் அளவு எப்படி இருக்கும் என்பது மன்மோகன்சிங்கின் நிலக்கரி ஒதுக்கீட்டு ஊழலைப் பார்த்தாலே தெரியும்.

இந்தியாவில் மட்டுமல்ல, வளர்ந்து வரும் நாடுகள் உலகைச் சேர்ந்த சீனா, பிரேசில் இரண்டிலும் கூட மேற்சொன்ன இரு தொழில்கள் அபாயரமானவையே. இங்கே ஆதாயம் பன்னாட்டு நிறுவனங்கள் மற்றும் ஏகாதிபத்திய நாடுகளுக்கு.

தொழிற்துறை வல்லுனர்கள் மற்றும் இந்திய நிலக்கரி நிறுவன அதிகாரிகளின் கூற்றுப்படியே அதிகாரப்பூர்வ விபத்து எண்ணிக்கைகளை விட உண்மையான விபத்துக்கள் அதிகம். என்ன இருந்தாலும் அப்துல்கலாமின் கனவில் 2020-ம் ஆண்டு வல்லராசகும் நாட்டின் கௌரவம் முக்கியமில்லையா?

இந்தியா 89 வகையான கனிம வளங்களை உற்பத்தி செய்கிறது. இதற்கென 569 நிலக்கரி சுரங்கங்கள், 67 எண்ணெய் எரிவாயு வயல் சுரங்கங்கள், நிலக்கரி அல்லாத 1,770 சுரங்கங்கள் மற்றும் சிறு சுரங்கங்கள் என ஒரு இலட்சத்திற்கும் மேல் இருக்கின்றன. இவற்றில் ஒரு இலட்சம் நிரந்தர தொழிலாளிகளும் பத்து இலட்சத்திற்கும் மேற்பட்ட தினக்கூலி ஒப்பந்த தொழிலாளிகளும் பணிபுரிகின்றனர்.
இவர்கள்தான் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் ஐந்து சதவீதத்தை அளிக்கின்றனர்.

மேற்கத்திய நாடுகளில் இருக்கும் “தரமான சுரங்க வழிமுறைகள்” இங்கே இல்லை. இதுவே அடிக்கடி நடக்கும் விபத்தில் தொழிலாளிகள் கொல்லப்படுவதற்கு காரணம். பாதுகாப்பு ஏற்பாடுகளும், நவீன தொழில் நுட்ப சாத்தியங்களும் இருக்கின்றன. ஆனால் அவற்றை பயன்படுத்தினால் முதலாளிகளின் இலாபம் குறையும். விளைவு இந்த நர பலி.

தொடு பேசி, பல்நோக்கு பேசி எல்லாம் பேரங்காடிகளில் கிடைத்தாலும் பாதாளத்தில் நமது தொழிலாளிகளுக்கு குறைந்த பட்சம் தரமான தலைக்கவசமோ இல்லை ஷூக்களோ கூட கிடையாது.

ஜூலை 6, 2012-ல் மேகாலாய மாநிலத்தின் நங்கல்பிபிரா சுரங்கத்தில் நடந்த விபத்தில் 15 சுரங்க தொழிலாளிகள் கொல்லப்பட்டனர். இதை ஒட்டி விசாரித்த தேசிய மனித உரிமை ஆணயம் “ இந்தியாவில் சுரங்க பாதுகாப்பு குறித்த பார்வை” எனும் அறிக்கையை வெளியிட்டது. அதில் சமீப காலமாக இத்தகைய விபத்துக்கள் அதிகம் நடப்பதாக குறிப்பிட்டுள்ளது.

2009 – 2013 காலத்தில் இந்திய சுரங்கங்களில் மட்டும் மொத்தம் 752 தீவிர விபத்துக்களை அதிகாரப்பூர்வமாக பதிவு செய்திருக்கிறார்கள். சுரங்கப் பாதுகாப்பு இயக்குநரகம் இதை அறிவித்திருக்கிறது. நெய்வேலி மற்றும் சிங்கரேணி சுரங்கங்களின் விபத்துக்களும் இதில் அடக்கம்.

தனியார் சுரங்கங்களில் அதிகம் விபத்து நடப்பதாக கூறித்தான் 1973-ல், நிலக்கரி சுரங்கங்களை தேசியமயமாக்கும் சட்டத்தை அமல்படுத்தினார்கள். பிறகு பொதுத்துறை சுரங்கங்களிலிருந்து தனியார் நிறுவனங்களுக்கு நிலக்கரி போவதால், அதே அபாயம் தொடர்கிறது. இப்போது அரசுதான் முதலாளி என்று இதை சுருக்கி பார்ப்பது தவறு.

சுரங்கங்களுக்குத் தேவைப்படும் முதலீட்டை செய்தால் இந்த விபத்துக்களை தவிர்க்கலாம். ஆனால் நிலக்கரியை எரித்து வரும் முதலாளிகளின் லாபம் குறையும். இதனாலேயே வெடி வைத்து தகர்த்தல், பெரும் எந்திரங்களை பாதுகாப்பின்றி இயக்குதல் காரணமாக பல விபத்துக்கள் நடக்கின்றன.

நிலக்கரி சுரங்கம், ஏர் இந்தியா இரண்டும் அரசுத்துறை மட்டுமல்ல, விதிமுறைகளும் ஒன்று என்றாலும், சுரங்க தொழிலாளியின் மரணத்திற்கு பத்து இலட்ச ரூபாய் கூட கொடுப்பதில்லை. விஐபிகள் பறக்கும் விமானத்தை பாதுகாக்கும் பொருட்டு ஏர் இந்தியா ஊழியர்களுக்கு அதிக நிவாரணம. விஐபி வீட்டு அறைகளுக்கு மின்சாரம் தரும் நிலக்கரியை எரிப்பது போல தொழிலாளிகளையும் கொல்கிறார்கள்.

நவீன தொழில் நுட்ப வசதிகள் இருந்தாலும் சுரங்கங்களில் விபத்துக்கள் நடக்கலாம். 2010-ம் ஆண்டு நியூசிலாந்தின் பைக் ஆறு சுரங்கம், அமெரிக்காவின் பிக் பிரான்ஞ் சுரங்கம் இரண்டிலும் 29 தொழிலாளிகள் கொல்லப்பட்டனர். அதே நேரம் இந்த வசதிகள் ஏதுமற்று பணிபுரியும் இந்திய தொழிலாளிகள் எவ்வளவு அபாயத்தில் இருக்கின்றனர் என்பது வெள்ளிடை மலை.

ஆக தெரிந்தே மரண வாய்ப்பை மேற்கொள்ளும் இந்த தொழிலாளிகளுக்கு ஊதியமும், நிவாரணமும் மற்ற துறைகளைக் காட்டிலும் மிக அதிகம் இருக்க வேண்டும். ஏன் இல்லை?

சுரங்க விபத்து மட்டுமல்ல, சுரங்க வேலை தரும் நுரையீரல் தொடர்பான நோய்கள் – மரணங்கள், புற்று நோய், என்று ஏராளம் அவஸ்தைகளை இத்தொழிலாளிகள் பெறுகிறார்கள். வினவில் வெளிவந்த கோலார் சுரங்க தொடர் கட்டுரை அதை விரிவாக பேசுகிறது.

நிலக்கரியை எரித்து மட்டுமல்ல, இந்த தொழிலாளிகளை கொன்றும்தான் நமது வீட்டின் மின்சார வாழ்வு ஜொலிக்கிறது.

தேவை அஞ்சலியா, அரசு-முதலாளிகளை எதிர்க்கும் கோபமா?

– வேல்ராசன்.

(இந்த செய்திப்பதிவு இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழில், அனில் சசி என்பவரால் எழுதப்பட்ட One death every third day in India’s most dangerous job  செய்தியினை தழுவி எழுதப்பட்டது. )

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க