privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்திருச்சி : மக்கள் ஆதரவுடன் ஆட்டோ தோழர்கள் போராட்டம்

திருச்சி : மக்கள் ஆதரவுடன் ஆட்டோ தோழர்கள் போராட்டம்

-

auto-poster-3குறுநில மன்னர்கள் என தம்மை கருதி கொண்டு தன்னிச்சையாகவும் அடாவடியாகவும் செயல்படும் அதிகார வர்க்க கும்பல்

டந்த சில மாதங்களாக தமிழகம் முழுவதும் ஆட்டோக்களுக்கு மீட்டர் பொருத்துவது சம்பந்தமாக பரபரப்பான அறிக்கைகளையும், உத்தரவுகளையும் அதிகாரிகள் பத்திரிகைகளில் கொடுத்த வண்ணம் உள்ளனர். ‘ஆட்டோ ஓட்டுனர்கள் அதிகப்படியான கட்டணம் வசூலிப்பதாகவும் இதனை முறைப்படுத்த மீட்டர் பொருத்த வேண்டும்; அதனை அதிகாரிகள் கண்காணிக்க வேண்டும்’ என்று நீதிமன்றம் உட்பட யோக்கிய சிகாமணிகள் அனைவரும் ஒன்று சேர்ந்து அமுல்படுத்த முயல்கின்றனர்.

தமிழகத்தில் இரண்டு இலட்சம் ஆட்டோக்கள் இருப்பதாகவும், இந்தியாவின் பிற மாநிலங்களை ஒப்பிடும் போது இது மிகவும் அதிகம் என்றும் அங்கீகரித்து புதிய ஆட்டோக்களுக்கு அனுமதி (permit) வழங்குவதை நிறுத்தி வைத்திருக்கும் தமிழக அரசு, இதே காரணத்தால் வாழ முடியாமல் தடுமாறும் ஆட்டோ ஓட்டுனர்களை பாதாளத்தில் தள்ள படுகுழி தோண்டும் வேலையைச் செய்ய முனைந்துள்ளது. ஆம். கட்டுப்படியாகவே முடியாத ஒரு கட்டணத்தை நிர்ணயித்து இதைத்தான் அமுல்படுத்த வேண்டும் என்று தன்னிச்சையாக அறிவித்து அவசரகதியில் அமுல்படுத்த அடாவடி செய்தது அதிகார வர்க்கம்.

தமிழகத்தில் ஆட்டோக்களுக்கு மீட்டர் பொருத்தி முறைப்படுத்த வேண்டும் என்ற உச்ச நீதி மன்ற உத்தரவை அமுல்படுத்த ஆரம்பித்த தமிழக அரசு, அனைத்து சங்கங்களையும் அழைத்துப் பேசி ஆட்டோ ஓட்டுனர்கள், RTO, மாவட்ட நிர்வாகம் என முத்தரப்பு கமிட்டி அமைத்து ஆட்டோ கட்டணத்தை நிர்ணயிக்கவோ, அமுல்படுத்தும் காலத்தை தீர்மானிக்கவோ முயற்சிக்கவில்லை.

தான் சொல்வதுதான் சட்டம் இதனை மாற்றவோ, பரிசீலிக்கவோ மாட்டோம் என்ற மமதையில் மீட்டர் போடாத ஆட்டோக்களை தண்டிக்கவும், பறிமுதல் செய்யவும் போலீசார் மற்றும் போக்குவரத்து துறை ஆகிய இரண்டு தரப்பிலும்  வெளியூர்களில் இருந்து கூடுதல் அதிகாரிகளை வரவழைத்திருந்தனர். யார் ஆட்டோவை வழிமறித்து அபராதம் என்ற பெயரில் வழிப்பறி செய்வது என்பதில் போலீசுக்கும் சாலைப்போக்குவரத்து அலுவலகத்துக்கும் (RTO) இடையில் போட்டி நடந்தது. இறுதியாக போக்குவரத்து அதிகாரிகளுக்கு பம்பர் பரிசாக அனுமதி கிடைத்தது. போலீசின் பாதுகாப்புடன் ஆட்டோக்களை வழிமறித்து வழிப்பறி செய்வது என திட்டமிட்டனர்.

வெறும் கையில் முழம் போடும் அரசு!

சட்டமன்றத்தில் 110 விதியின்படி அறிக்கை வாசித்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஆட்டோக்களுக்கு மீட்டர் பொருத்த 90 கோடி ரூபாய்வரை ஒதுக்குவதாகவும், 3 மாதத்துக்கு ஒரு முறை எரிபொருள் விலை உயர்வுக்கேற்ப கட்டணங்களை திருத்தியமைப்பதாகவும், மீட்டரை அரசே வழங்குவதாகவும் அறிவித்தார். இது நடைமுறையில் உள்ள பல சிக்கல்களை அலசி அராயாமல் அவசரகதியில் எடுத்த முடிவாகும். மக்களின் வாழ்நிலை எதுவும் தெரியாமல் மக்களை ஆட்சி செய்யும் இந்த அதிகாரிகளுக்கு இது தெரியாமல் போனது ஆச்சரியமில்லைதான்.

மாநிலத்தின் தலைமை மட்டத்தில் உள்ள அதிகார வர்க்க கோமாளிகள் எடுத்த முடிவை அமுல்படுத்துவதில் திருச்சி மாவட்ட மட்ட கோமாளிகள் இன்னும் ஒரு படி முன்னேறி எந்தவித முன்னேற்பாடுகளையும் செய்யாமல் ஒருவார காலத்திற்குள் அனைத்து ஓட்டுனர்களும் தாமாகவே முன்வந்து மீட்டர் பொருத்தி ஓட்ட வேண்டும் என தடாலடியாக உத்தரவிட்டனர். பெரு நகரமான சென்னைக்கும் சிறு நகரமான திருச்சி போன்ற ஊர்களுக்கும் ஒரே அளவுகோலில் கட்டண நிர்ணயம் செய்தது பொருத்தமில்லை என்பது கூட இந்த அதிகாரிகளுக்கு விளங்கிக்கொள்ள முடியவில்லை. நுகர்வோர் அமைப்பு என்கிற பெயரில் சில மோடுமுட்டிகளைக் கொண்டு அறிக்கைவிட வைத்தனர்.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது சொடுக்கவும்]

ரூ 1700-க்கு மீட்டர் பாக்ஸை வாங்கி ரூ 2500-க்கு விற்பனை செய்ய அதில் சிலரை அனுமதித்து ஆதாயம் அடைய வைத்தனர். போதிய மீட்டர் உற்பத்தியே இல்லாத நிலையில் குறுகிய காலத்திற்குள் ஓட்டுனர்கள் இதனை செய்ய முடியாது என நன்றாகத் தெரிந்து கொண்டே அபராதம் போடுவது, வண்டிகளைப் பறிமுதல் செய்வது, என்ற வகையில் ஆயிரக்கணக்கில் வசூலிக்கலாம் என்ற திட்டத்தோடு காத்திருந்தனர்.

இந்த சூழலில் ஆட்டோ ஓட்டுனர் பாதுகாப்பு சங்கம் , இந்த அடாவடித் தனத்திற்கு எதிராக களம் இறங்கி ஆட்டோ ஓட்டுனர்களை ஒருங்கிணைத்தது. மக்களுக்கும் ஆட்டோ ஓட்டுனர்களுக்கும் இடையே முரண்பாட்டை வளர்க்கும் அதிகார வர்க்க சதியை முறியடிக்கும் வகையில் இயக்கம் எடுத்தது.

முதல் கட்டமாக 4 வகையான சுவரொட்டிகள் தயாரித்து அனைத்து ஆட்டோக்களிலும் ஒட்டப்பட்டது.

அதுவரை ஆர்.டி.ஓ மற்றும் பிற அதிகாரிகளின் செய்தி மட்டுமே வெளி வந்த நிலையில், நாம் பத்திரிகை செய்தி கொடுத்தும் பிரசுரிக்காமல் இருட்டடிப்பு செய்யபட்ட வேலையில் இத்தகைய சுவரொட்டிகள் ஆட்டோ ஓட்டுநர்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும், ஆதரவையும் பெற்றது.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது சொடுக்கவும்]

அடுத்த கட்டமாக, அவல வாழ்க்கையில் இருக்கும் ஆட்டோ ஓட்டுனர்கள் இந்த உத்தரவால் புதிதாக சந்திக்கப்போகும் பிரச்சினைகள், அதிகாரிகளின் அகம்பாவ மனோபாவத்துடன் கூடிய உத்தரவுகள், ஆகியவற்றை உள்ளடக்கி  பிரசுரங்கள் அச்சிட்டு நகரில் உள்ள அனைத்து ஓட்டுனர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் விநியோகிக்கப்பட்டது. அனைத்து சங்கங்கள் மற்றும் அதிகாரிகளுக்கு நெருக்கடியையும், ஓட்டுனர்கள் மத்தியில் மகிழ்ச்சியையும், பொது மக்கள் மத்தியில் ஆதரவையும் இந்த பிரசுரம் ஏற்படுத்தியது. (அந்த பிரசுரத்தின் உள்ளடக்கத்தை தனியே வெளியிடுகிறோம் : வினவு)

மக்கள் மத்தியில் ஆதரவை திரட்டும் வகையில், மத்திய பேருந்து நிலையம், சத்திரம் பேருந்து நிலையம் போன்ற மக்கள் கூடும் முக்கிய பகுதிகள், நூற்றுக்கணக்கான ஆட்டோ ஸ்டாண்டுகள் உள்பட அனைத்து பகுதியிலும் பிரசுரங்கள் வழங்கப்பட்டது. இதில் நூற்றுக்கணக்கான ஓட்டுனர்கள் சங்க வேறுபாடின்றி கலந்து கொண்டனர். இது மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. “ஆட்டோவிற்கு ஒதுக்கிய 90 கோடி ரூபாயையும் ஆட்டையை போட்டுட்டானுங்களா?” என மக்கள் நக்கல் செய்தும் நமது நியாயத்தை அங்கீகரித்தும் பேசினர்.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது சொடுக்கவும்]

இந்த நிலையில், ‘அனைவரும் சேர்ந்து போராடினால்தான் வெற்றியடைய முடியும் தனித்தனியாக செயல்படுவது பாதகத்துக்கே வழிவகுக்கும்’ என சுட்டிக்காட்டி அனைத்து சங்கங்களுக்கும், நூற்றுக்கணக்கான ஸ்டாண்டுகளுக்கும் நமது சங்கத்தின் சார்பில் கடிதம் தரப்பட்டது.

ஓட்டுனர்கள் மத்தியில் இதற்கு ஆதரவு இருந்தது. சேர்ந்து செய்யலாம் என்று பலரும் விருப்பம் தெரிவித்தனர். ஆனால் அவர்களின் தலைமையிடம் இருந்து எந்த பதிலும் இல்லை.

வேறு வழி இல்லாமல் நமது சங்க நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்களை அழைத்து ஆலோசனை செய்தபின் வேலை நிறுத்தம் செய்யலாம் என்றும் அனைத்து ஓட்டுனர்களிடமும் ஆதரவை கோருவது என்றும் முடிவு செய்யப்பட்டது.

சுவரொட்டிகள், பிரசுரம் தயாரிக்கப்பட்டு 3 நாட்களுக்கு முன்னதாக அறிவிப்பு செய்யப்பட்டது. பத்திரிகைகளிலும் செய்தி வெளியானது. பிற சங்கங்களிடமெல்லாம் இது சலசலப்பை ஏற்படுத்தியது. அதோடு மட்டும் அல்லாமல் நகரத்தை 15 பகுதிகளாக பிரித்து தனித்தனி குழுக்கள் அமைத்து ஓட்டுனர்களை சந்தித்து ஆதரவு திரட்டப்பட்டது. இது வரை சங்கங்களின் மீதே நம்பிக்கையில்லாமல் எந்த சங்கத்திலும் சேராத நூற்றுகணக்கான ஓட்டுனர்கள் கூட தம்மை நமது சங்கத்தில் இணைத்துக் கொண்டு போராட உணர்வு பூர்வமாக முன்வந்தனர்.

பிற சங்கங்களைச் சேர்ந்த ஓட்டுனர்கள் தமது தலைமையிடம் கொடுத்த நெருக்குதல் காரணமாக, சி.ஐ.டி.யு (CITU) வினரும் அதே தினத்தில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிடப் போவதாக அறிவித்தனர்.

மனிதநேய தொழிலாளர் சங்கம் நமது நிலைபாட்டை ஆதரித்து வேலை நிறுத்தம் செய்ய ஆதரவு தெரிவித்தனர். தி.மு.க தொழிற்சங்கத்தின் சில கிளைகள் அதே தினத்தில் வேலை நிறுத்தம் நடைபெறும் என அறிவித்தனர். ஏ.அய்.டி.யு.சி-யின் குறத்தெரு ஸ்டேன்ட் ஓட்டுனர்கள் நமது சுவரொட்டியைப் பெற்று தங்கள் ஆட்டோக்களில் ஒட்டி ஆதரவு தந்தனர். இவற்றைத் தவிர, மாவட்டம் முழுவதுமிருந்து நிறைய ஸ்டேன்ட் ஓட்டுனர்கள் நம்மைத் தொடர்புக்கொண்டு ஆதரவும், வாழ்த்தும் தெரிவித்த வண்ணம் இருந்தனர்.

நாளேடுகளான தினகரன், மாலைமலர், மாலை முரசு, தமிழ்முரசு போன்றவைகளில் நமது பத்திரிகை செய்தி வெளியாகியிருந்தது. இதனால் மொத்த ஓட்டுனர்கள் மத்தியிலும் வேலை நிறுத்த செய்தி பரவியது.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது சொடுக்கவும்]

இந்த நிலையில், வேலை நிறுத்தத்திற்கு முதல் நாள் (டிசம்பர்-8) போலீசார் தமது பிரித்தாளும் வேலையைத் தொடங்கினர். ஓட்டுனர்களை சந்திக்கப் போவதாக காவல்துறை ஆணையர் அலுவலகத்திற்கு அழைத்தனர். நமது சங்க பிரதிநிதிகளும் சென்றனர். நம்மைக் கண்ட அதிகாரிகள், “ உங்களை அழைக்கவில்லை, முற்றுகை அறிவித்த சி.ஐ.டி.யு-வினர் மட்டும் வந்தால் போதும்” என அறிவித்தனர். நாம் அங்கிருந்து திரும்பி விட்டோம்.

நாம் திட்டமிட்டபடி வேலை நிறுத்த தயாரிப்பில் இருந்த வேளையில், டிசம்பர்-9 காலை நாளிதழ்களில்,“வேலை நிறுத்தம் மற்றும் முற்றுகை போராட்டம் வாபஸ், பேச்சுவார்த்தையில் சுமூக தீர்வு காணப்பட்டது” என  சி.ஐ.டி.யு மற்றும் போலீசார் செய்தி வெளியிட்டனர். இது ஓட்டுனர்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தியது. பலரும் நமது சங்கத்தை தொடர்பு கொண்டு விவரத்தை கேட்டனர். உடனடியாக நாம் அனைத்து கிளைகளுக்கும் தகவல் கொடுத்து வேலை நிறுத்தம் திட்டமிட்டபடி நடக்கும். சி.ஐ.டி.யுவினர் கைவிட்ட போராட்டத்தையும் சேர்த்து நடத்துவோம். திருச்சி மத்திய பேருந்து நிலையத்திலிருந்து பேரணியாக சென்று ஆர்.டி.ஓ அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்துவோம் என்று அறிவித்தோம்.

அன்று காலை வழக்கமாக ஓடும் ஆட்டோக்களில் 80% இயங்கவில்லை. பள்ளிக்குழந்தைகளை ஏற்றிச் செல்லும் ஆட்டோக்கள் உள்ளிட்ட அனைத்து சவாரியும் நிறுத்தப்பட்டன. அ.தி.மு.க., சி.ஐ.டி.யு-வைச் சேர்ந்த சிலர் மட்டுமே ஆட்டோவை இயக்கினர். மற்றவர்கள் வேலை நிறுத்தத்தில் கலந்து கொண்டனர். 11 மணி அளவில் திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகில் உள்ள பெரியார் சிலை முன்பு 200-க்கும் மேற்பட்ட ஆட்டோ ஓட்டுனர்கள் திரண்டு ஆர்.டி.ஓ அலுவலகத்தை முற்றுகையிட புறப்பட்டனர்.

காவல் துறை தடுத்ததால் அங்கேயே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இவர்களில் 3 பெண்கள் உட்பட 107 ஓட்டுனர்களைக் கைது செய்து மண்டபத்தில் அடைத்து வைத்தது காவல்துறை. மற்ற ஓட்டுனர்கள் வெளியில் நிறுத்தப்பட்ட நூற்றுக்கணக்கான ஆட்டோக்களை பாதுகாப்பதிலும், கைது செய்யப்பட்ட ஓட்டுனர்களுக்கு உதவி செய்வதிலும் ஈடுபட்டனர்.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது சொடுக்கவும்]

தோழமை அமைப்பான மனித உரிமை பாதுகாப்பு மையம், புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி, மக்கள் கலை இலக்கியக் கழகம், பாய்லர் பிளான்ட் ஒர்க்கர்ஸ் யூனியன், சுமைப்பணி தொழிலாளர் பாதுகாப்பு சங்கம், அனைத்து தரைக்கடை வியாபாரிகள் பாதுகாப்பு சங்கம் ஆகியவற்றின் தோழர்கள் மண்டபத்திற்கு சென்று போராட்டத்தில் ஈடுபட்ட ஓட்டுனர்களை வாழ்த்தியும் நம்பிக்கையூட்டியும் பேசினர்.

ஓட்டுனர்கள் தங்களின் வாழ்க்கை பிரச்சினைகளைப் பற்றியும் போராட்டத்தில் ஈடுபட்டதன் மூலம் கிடைத்த பெருமிதம் குறித்தும் பேசினர். தோழமை அமைப்புத் தோழர்கள், போராடியவர்களை வாழ்த்தியதுடன், தொழிலாளர்கள், விவசாயிகள், மாணவர்கள் உள்பட உழைக்கும் மக்கள் அனைவருக்கும் இந்த அரசு கொடுத்து வரும் நெருக்கடிகள், இன்றைய அரசியல் சூழ்நிலை, போராடித்தான் தீர வேண்டும் என்ற நிலைமைகள் பற்றி உரையாற்றினர்.

ஓட்டுனர்கள் உள்பட அனைவரும் ஒரு புரட்சிகர சங்கத்தில் இணைந்து உரிமைக்காக போராடியது நல்ல மகிழ்ச்சியையும், உற்சாகத்தையும் ஏற்படுத்தியதாக கூறினர். அனைவரும் அன்று மாலை 7 மணியளவில் விடுதலை செய்யப்பட்டனர். அதே நேரத்தில் தமது கோரிக்கைகளை வென்றெடுக்க கூடுதல் நாட்களை சிறையில் கழிக்க நேர்ந்தாலும் தயார் என்ற மனநிலையுடன் அடுத்தகட்ட போராட்ட முயற்சிக்கு ஆயத்தமாகி வருகின்றனர்.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது சொடுக்கவும்]

நம் உரிமைக்காக சமரசமின்றி துணிந்து போராடினால் அதிகாரிகளின் அடாவடியையும், அடக்குமுறையையும் முறியடிக்க முடியும் என்ற அனுபவம் இப்போராட்டத்தின் மூலம் பெறப்பட்டது. வெளியில் இருந்து இறக்கப்பட்ட ‘அபராத அதிகாரிகள்’ தமது கொள்ளையை தற்சமயம் நிறுத்தி வைத்துள்ளதுடன் மீட்டர் பொருத்த ஒருமாத காலம் அவகாசம் அளித்துள்ளனர் என்பதும் இந்த போராட்டத்திற்கு கிடைத்த முதல் கட்ட வெற்றியாகும்.

ஆனால், சமரசமே வாழ்க்கையாகிப் போன CITU, தான் அறிவித்த போராட்டத்தைக் கூட நடத்த துப்பற்று, போராடுவதற்காக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்த ஓட்டுனர்களை அமைதியாக உட்கார வைத்து, போராட்டத்தை வாபஸ் பெற்ற சூழ்நிலையை ‘திறமையாக விளக்கி’ வேலை நிறுத்தத்தில் கலந்து கொள்ள வேண்டாம் என்று சொல்லி அனுப்பி வைத்தனர். அதிகாரிகளுக்கு கொடுத்த வாக்குறுதியைக் காப்பாற்றுவதில்தான் எவ்வளவு விசுவாசம்!

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது சொடுக்கவும்]

ஆட்டோ ஓட்டுனர்கள் பாதுகாப்பு சங்கம் வெளியிட்டுள்ள பத்திரிகை செய்தி

  1. ஆட்டோக்களின் கட்டணத்தை முறைப்படுத்த முனையும் அரசு, அதில் தொடர்புடைய பல்லாயிரம் ஆட்டோ ஓட்டுனர்களைக் கலந்து பேசி அவர்களுடன் சேர்ந்து ஒத்த முடிவெடுக்க வேண்டும் என்ற அடிப்படை ஜனநாயக கோரிக்கையைக் கூட மதிக்கவில்லை. பெயரளவுக்கு ஓட்டுனர்களின் கருத்தை மட்டும் கேட்டு விட்டு அவர்கள் தெரிவித்த கருத்துக்கு நேரெதிராக ஒரு கட்டணத்தை அறிவித்து, ‘‘இதுதான் கட்டணம். டிசம்பர் முதல் இதைத்தான் வாங்க வேண்டும். இல்லையேல் தண்டக் கட்டணம் வசூலிப்போம், ஆட்டோக்களைப் பறிமுதல் செய்வோம்” என்றெல்லாம் மிரட்டிப் பணிய வைக்க முயற்சிக்கிறது அரசு. ஓட்டுனர்களுக்கு கட்டுப்படியாகாத இந்த கட்டணத்தை ஏற்க மறுத்து ஆட்டோ ஓட்டுனர்கள் தமிழகம் முழுவதும் போராடி வருகின்றனர். அதே அடிப்படையில் திருச்சியிலும் இந்த போராட்டத்தை முன்னெடுத்துள்ளோம். இதற்கு ஆதரவு தந்த அனைத்து ஆட்டோ ஓட்டுனர்கள், பொதுமக்கள், வியாபாரிகள் அனைவருக்கும் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறோம்.
  2. அதிகார வர்க்க அடாவடிப்போக்கை பின்பற்றாமல், உடனடியாக மாவட்ட நிர்வாகம் கீழ்க்கண்ட கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டுமென கோருகிறோம்.
  • மாவட்ட அளவில் ஆட்டோ ஓட்டுனர்களின் பிரதிநிதிகளான ஆட்டோ சங்கங்கள், வட்டார போக்குவரத்து அலுவலர், மாவட்ட நிர்வாகம் ஆகியவற்றை உள்ளடக்கிய குழு அமைத்து அக்குழுவின் பொறுப்பில் கட்டண நிர்ணயமும் அவ்வப்போதைய நிலைமைக்கேற்ற கட்டண மாற்றமும் செய்து கொள்ள வழிவகுக்க வேண்டும். குறிப்பாக, விரிந்த பரப்பு, மக்கள் தொகை, வாழ்க்கைத் தரம், தினசரி வந்து செல்லும் மக்கள் எண்ணிக்கை என எதிலும் ஒப்பிட்டுப் பார்க்கவே முடியாத வகையில் உள்ள மீப்பெரு நகரான சென்னைக்கும், திருச்சி போன்ற பிற நகரங்களுக்கும் ஒரே கட்டணம் என்ற பொருத்தமில்லாத முயற்சியைக் கைவிட வேண்டும்.
  • இந்தியாவில் எங்குமில்லாத அளவுக்கு ஆட்டோக்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ள தமிழகத்தில் ஆட்டோ ஓட்டி வாழ்க்கை நடத்த முடியாத அவல நிலையில் ஓட்டுனர்கள் வாழ்ந்து வருகின்றனர். இதை அங்கீகரித்து புதிய ஆட்டோ அனுமதி( பர்மிட் ) வழங்குவதை நிறுத்தி வைத்துள்ள அரசின் செயலை வரவேற்கிறோம். இப்படி ஒரேயடியாக நிறுத்துவதை மாற்றி, உண்மையில் ஆட்டோவை நம்பி வாழ்க்கையை ஓட்டும் ஓட்டுநர்களுக்கு மட்டும் பர்மிட் வழங்குவதை உறுதி செய்ய வேண்டும்.
  • ஓட்டுனர்களின் இன்றைய வறிய பொருளாதார நிலையைக் கணக்கில் கொண்டு தமிழக அரசு அறிவித்தவாறு ஆட்டோவுக்கு பொறுத்துவதற்கான டிஜிடல் மீட்டரை அரசே பொறுப்பெடுத்து விலையில்லாமல் வழங்குவதுடன், அதைப் பொருத்தவும், பழுதானால் சரி செய்யவும் போதிய வசதிகளை செய்து தர வேண்டும். இந்த ஏற்பாடுகள் ஏதுமில்லாமல் உயர் நீதி மன்ற உத்தரவை அமுல்படுத்திவிட்டதாக கணக்குக் காட்ட முயற்சிப்பது அரசின் பொறுப்பற்ற செயலாகும். எனவே, மீட்டர் பொறுத்தும் அவசரகதியாக உத்தரவை நிறுத்தி வைக்க வேண்டும். முன்ஏற்பாடுகள் அனைத்தையும் முடித்த பின் இதை அமுல்படுத்த வெண்டும்.
  • நகரத்தில் இயங்கும் தனியார் பேருந்துகள், கால் டாக்சிகள், ஷேர் ஆட்டோக்கள், அனைத்தையும் முறைப்படுத்தி ஆட்டோ ஓட்டுனர்களின் வாழ்க்கையைப் பாதுகாக்க வேண்டும்.
  • பொதுப் போக்குவரத்தை இயக்குவதற்கான வில்லை ( badge) பெற அடிப்படைத் தகுதியை 8-ம் வகுப்பு என்றாக்கி பழைய ஓட்டுனர்களின் வாழ்வைப் பறிக்கும் அடாவடித்தனத்தை தடுத்து நிறுத்த வேண்டும்.
  • தமிழகம் முழுக்கவுள்ள 2 இலட்சம் ஆட்டோ ஓட்டுனர்கள், தாங்களே நிர்ணயிக்கும் கட்டணத்தை அனுமதிக்காமல் அரசுதான் நிர்ணயிக்கும் என்று கடுமை காட்டுகிறது அரசு. ஆனால், ஏற்கெனவே தான் நிர்ணயித்து வந்த பெட்ரோல், டீசலின் விலையை நான்கே நான்கு முதலாளிகளிடம் விட்டுக்கொடுத்திருப்பது முரண்பாடானது என்பதுடன் சர்வாதிகாரத்துக்கு சாமரம் வீசுவதாகும். கோடிக்கணக்கான மக்களை வதைப்பதாகும். இதை உடனடியாக மாற்றி நூறு கோடி மக்களின் நலனைப் பாதுகாக்க வேண்டும். பொது போக்குவரத்தான ஆட்டோ, பேருந்து போன்றவற்றுக்கு மானிய விலையில் பெட்ரோல், டீசல் வழங்க வேண்டும்.

கோரிக்கையை வலியுறுத்தி நடைபெறும் போராட்டங்களை மதிக்காமல் அரசு அடக்குமுறையை நம்பி செயல்படுமேயானால் அடுத்த கட்ட போராட்டங்களை தீவிரமாக முன்னெடுப்பது தவிர, எமக்கு வேறு வழியில்லை என்பதை தெரிவித்துக் கொள்கிறோம் .

நன்றி,

(சி.கோபிநாத்)
மாவட்டத் தலைவர்,
ஆட்டோ ஓட்டுனர் பாதுகாப்பு சங்கம்,
திருச்சி.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க