Wednesday, November 6, 2024
முகப்புவாழ்க்கைபெண்குரோம்பேட்டை டாஸ்மாக் முற்றுகை - செய்தி, புகைப்படங்கள்

குரோம்பேட்டை டாஸ்மாக் முற்றுகை – செய்தி, புகைப்படங்கள்

-

“ஊத்திக் கொடுப்பதும், சீரழிப்பதுமா… அரசின் வேலை?” என்ற கேள்வியை முன்வைத்து கடந்த இரண்டு மாதங்களாக உழைக்கும் மக்களிடையே பிரச்சாரத்தில் ஈடுபட்டனர் சென்னை பெண்கள் விடுதலை முன்னணி தோழர்கள். பேருந்து, இரயில், உழைக்கும் மக்கள் பகுதிகள், கடைவீதிகள் என அனைத்துத் தரப்பினரிடமும் பிரச்சாரமும் வசூலும் மேற்கொள்ளப்பட்டது. பிரச்சாரத்தின்போது பெண்களிடம் பலத்த ஆதரவினை காண முடிந்தது.

wlf-tasmac-siege-10பிரசுரம், இன்றைய தமிழக நிலை, அதற்கான தீர்வு மற்றும் ஏற்ற படத்துடன் (ஓவியம்) பேசியது. மக்களிடம் சிறந்த வரவேற்பைப் பெற்றது.

பகுதிப் பெண்கள் பலர், பிரசுரத்தை நம்மிடம் காட்டி, “இந்தப் படத்தை போஸ்டர் அடிச்சி, வீட்டுக்குவீடு ஒட்டணும்மா” என்று கூறியதிலிருந்து இது விளங்கும்.

பேருந்துப் பிரசாரத்தின்போது, ஒருவர் “சரியான விசயந்தான், (பஸ்ஸிலிருந்தவர்களை நோக்கி) முக்கியமான பிரச்சினையப் பத்தி பேச வந்திருக்காங்க, பேசமா கவனியுங்க” என்று கூறியது, மேலும்,”தாராளமா வசூல் போடுங்க” என்று ஊக்குவித்தது என பலவிதமான ஆதரவைக் காண முடிந்தது.

wlf-tasmac-siege-05பேருந்துகளில் பேசும்போது, பலர் தோழர்களிடம், “சாராயக்கடைய முடூணும் சரி, இலவசங்களை ஏன் வேணாங்கிறீங்க?”, “டாஸ்மாக் இல்லனா, அரசுக்கு வருமானம் இருக்காதே, மறுபடியும் எல்லாத்தையும் வெலை ஏத்திடமாட்டாங்களா?” என்று பல கேள்விகளை முன் வைத்தனர்.

அதற்கு, தோழர்கள் பொறுமையுடன், “குடும்பமே சீரழிந்து, குடியால கணவரை இழந்தபிறகு இலவசம் எதுக்கு, இலவசமா கொடுக்கவேண்டிய, கல்வி, மருத்துவம், தண்ணீர், வேலை இதெல்லாம் தனியாருக்கு கொடுத்துட்டு, சாராயக்கடையை மட்டும் அரசு நடத்தும்னா, மக்கள் மேல அக்கறையில்லாத அரசு எதுக்கு?” என்று விளக்கிப் பிரச்சாரத்தை தொடர்ந்தனர்.

இதன் மூலம், பேருந்தில் பிரச்சாரத்தினை மக்கள் நன்கு கவனிக்கின்றனர் என்பதை உணர முடிந்தது. பல பேருந்துகளில், நடத்துனர்களும், ஓட்டுநர்களும் ஆதரவளித்தனர். “சீக்கிரம், பேசிடுங்கமா டைம் ஆச்சி கெளம்பணும்” என்றும், சிலர், “பேச, நேரம் இல்ல, எல்லார்கிட்டயும் நோட்டீசு குடுத்துடுங்க, நேரம் ஆயிடுச்சி கத்துவாங்க” என்று தங்களால் முடிந்த ஆதரவை தர யாரும் மறக்கவில்லை.

wlf-tasmac-siege-02கடைவீதியில் பிரச்சாரத்தின்போது, மளிகைக் கடைக்காரர் ஒருவர், “இந்த நாடு திருந்தாது, அரசியல்வாதிகள கேள்விக்கேட்க முடியாது, கேட்டா… துட்டு வாங்கிட்டுதானே ஓட்டுப் போட்டே வாயை முடூ னு சொல்வானுங்க, இவனுங்களையும் மாத்த முடியாது” என்று விரக்தியுடன் பேசினார்.

அதற்கு, தோழர்கள் “நீங்க, சொல்றதுஎல்லாம் கரெக்டுதான், இந்த நிலைமைக்கு நம்மள தள்ளிவிட்டது யாரு, எதையும் யோசிக்கவிடாம போதையில வெச்சிருக்கறது யாரு, இத நாம எல்லாருக்கும் விளக்க வேணாமா, அதுக்கான தீர்வு காண வேண்டாமா, இதனால, நம்ம புள்ளங்கதானே பாதிக்கபோவுது அப்ப நம்ம முன்ன நின்னு செயல்பட வேணாமா” என்று விளங்க வைத்தனர்.

அம்பேத்கர் பகுதியில் ஒரு குடும்பத்திடம் பேசியபோது, “சரியான விஷயம்மா, எங்க ஏரியாவுல பல குடும்பம் பாதிக்கப்பட்டுகிட்டிருக்கு, சாப்பாடு ஆக்க வைச்சிருந்த காசு, பரவாயில்ல, இந்தாங்க வைச்சிக்கிங்க எங்களோட ஆதரவு இதுக்கு எப்பவுமே உண்டு” என்று தன்னிடம் இருந்த 100 ரூபாயைக் கொடுத்து சிலிர்க்க வைத்தார்.

ராமதாஸ் கட்சியை சேர்ந்த ஒருவர், “எங்கம்மா, நாங்களும் பூரண மதுவிலக்கு கொண்டு வரணும்னு போராடுனோம், அதெல்லாம் முடியாது, குடிக்கிறவனே திருந்தினாதான் உண்டு. பொம்பளங்க நீங்க முழுவீச்சா செய்யறது ரொம்ப சந்தோஷமா இருக்கு” என்று நிதி கொடுத்துதவினார்.

அதைப்போல, வைகோ கட்சியை சேர்ந்த ஒருவரும், “எங்க ஆதரவு உங்களுக்கு எப்பவும் உண்டு, எங்க தலைவரு எல்லாத்துக்கும் நடைபயணமாக போறாரு, ஆனா ஒண்ணும் வேலைக்கு ஆகமாட்டேங்குது” என்றார்.

இப்படியாக, காலை முதல் மாலை வரை பெண்கள் தீவிரப் பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.

பிரச்சாரத்தின்போது தொப்பி, பேட்ச், மற்றும் முழக்கம் பொருந்திய ஏப்ரான்களை அணிந்துச் சென்றது, ஜெயலலிதா வேடமிட்ட தோழர் தன் கழுத்தில் சாராயப் பாட்டில்களை மாலையாக அணிந்து வந்தது, பார்ப்போரை, இவர்கள் முழுமூச்சாக இறங்கி வேலைசெய்கிறார்கள் என்பதை உணரவைத்தது.

வண்டியை நிறுத்திவிட்டு இளைஞர்கள், நிதி கொடுத்துவிட்டு பிரசுரம் பெற்று சென்றது என்று பல அனுபங்களை கற்றுத் தந்தது இந்த இயக்கப்பிரச்சாரம்.

ஆர்ப்பாட்டம்

இப்படியாக முழுவீச்சில் நடைபெற்ற பிரச்சாரத்தைத் தொடர்ந்து, 24.12.12 அன்று நாகல்கேணியில் உள்ள டாஸ்மாக் கடையை முற்றுகை ஆர்ப்பாட்டத்தில் இறங்கியது, பெண்கள் விடுதலை முன்னணி.

wlf-tasmac-siege-13காலை 11 மணிக்கு முற்றுகை ஆர்ப்பாட்டம் என்று சுவரொட்டிகள் மூலம் தெரிந்துக் கொண்ட போலீசு நாகல்கேணியில் உள்ள எந்த கடை என்று திணறி, மூன்று கடைகளையும் இழுத்து மூடி அடைத்து காவல் காத்து கிடந்தது.

குழந்தைகள், பெண்கள், மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் என்று 70 மேற்பட்டவர்களால் நாகல்கேணி டாஸ்மாக் எதிரில் தொடங்கியது முற்றுகை ஆர்ப்பாட்டம்.

இழுத்து மூடுவோம்! இழுத்து மூடுவோம்!,
தமிழகமெங்கும், டாஸ்மாக் கடைகளை
இழுத்து மூடுவோம்! இழுத்து மூடுவோம்!

ஊத்திக் கொடுக்கும் தமிழக அரசே!
தாலி அறுக்குது டாஸ்மாக் கடைகள்!
டாஸ்மாக் கடைகளை இழுத்து மூடுவோம்!
இழுத்து மூடுவோம்!

என்று முழக்கங்கள் நாகல்கேணியை அதிர செய்தன.

wlf-tasmac-siege-05தலைமை தாங்கிய தோழர் அமிர்தா ஆற்றிய உரையில்,

“பெரும்பான்மையான தோல் தொழிற்சாலையில் வேலை பார்க்கும் தொழிலாளிகள் நிறைந்த இந்த பகுதியில் 3 டாஸ்மாக் கடைகள் எதற்கு?” என்று கேள்வி எழுப்பினார்.

“சரியான குடிநீர் வசதி இல்லை. 10 நாட்களுக்கு ஒரு முறை குடிநீர் வருவதே சிரமமா இருக்கு. பக்கத்துல பள்ளிகூடம் இருக்கு. பள்ளிக் கூடத்தில படிக்கற மாணவர்களுக்கு எப்படி சாராயம் கொடுக்குது அரசு. வேலைக்கு போயிட்டு பெண்கள் நிம்மதியா வீடு சேர முடியல. வழியில குடிச்சிட்டு அம்மணமா படுத்துகிடக்கிறாங்க. சீண்டி சில்மிஷம் பண்றாங்க.  இதையெல்லாம் பெண்கள் அனுபவிக்க வேண்டியிருக்கிறது” என்று சுட்டிக்காட்டினார்.

மேலும்,  சாராயக்கடைகளால் இளம் விதவைகள் கிராமமே உருவாகி இருப்பதை இடித்துரைத்தார். “பர்மிஷன் கேட்கும்போது, போலிசு 24,25 வேணாம்மா, எம்.ஜி.ஆர். நினைவுநாளும், கிறிஸ்மசும் வருது தொந்தரவு பண்ணாதீங்க, ஜனங்க கொண்டாடட்டும்” என்று கூறிய அவலத்தை எடுத்துரைத்தார்.

wlf-tasmac-siege-06“அரசு சட்டப்படியே 3 கி.மீ தூரத்துக்கு ஒரு சாராயக் கடைதான் இருக்கணும், ஆனா இங்க அரை கி.மீட்டருக்கு 3 கடை இருக்கு. தனது சட்டத்தையே அமல்படுத்த வக்கற்றது” என்று அரசை தோலுரித்தார்.

“பக்கத்துல,கேரளத்துல படிப்படியா மதுவிலக்கு என்ற பேச்சுனா இருக்கு, ஆனா தமிழகத்துல டார்கெட் குறைஞ்ச காரணத்தை அலசவும், சரக்கு விற்பனை அதிகரிக்கவும் அதிகாரிகள் ஆலோசனை நடத்துகின்றனர்” என்று அதிகாரிகளை அம்பலப்படுத்தினார். மாணவர்களும், வயது வித்தியாசமின்றி குடித்து, ஆபாசப் படங்களைப் பார்த்து சீரழிவதையும், இதனால் தொடரும் பாலியல் வன்கொடுமைகளையும் உதாரணங்களுடன் விளக்கினார்.

தற்போது, நாகல்கேணியில் உள்ள சாராயக்கடைகளை பெண்கள் விடுதலை முன்னணிக்கு பயந்து மூடிவைத்திருப்பதே நம் போராட்டத்துக்கு வெற்றியின் முதல்படிதான்” என்றார்.

மேலும், “தமிழகமெங்கும் அரசு நடத்தும் சாராயக் கடைகளை மூடும்வரை போராட்டம் முழுவீச்சில் தொடரும்” என்று கூறி முடித்தார்.

இடைவிடாத முழங்கங்களுடன் ஆர்ப்பாட்டம் தொடர்ந்தது.

wlf-tasmac-siege-11சாராயக்கடைகளை பூட்டிவிட்டு வந்த டாஸ்மாக் ஊழியரே எங்கள் பின்னால் நின்று சரியான போராட்டம்தான் என்று கூறினார்.

காற்றில் பறந்த பேனரை எழுத்துக்கள் மறையாதவாறு தடுத்து நின்றது பெண் போலிசு .

இது எல்லார் வீட்டிலும் குடியால் பாதிப்பு உள்ளதை உணரவைத்தது.

ஆர்ப்பாட்டத்தில், ஜெ வேடமணிந்த தோழர் பாட்டில் மாலையுடன் இருந்தது அனைவரையும் நின்று யோசிக்க வைத்தது.

பகுதி மக்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது ஆர்ப்பாட்டம்.

ஆர்ப்பாட்டத்துக்கு வெளியே நின்ற பெண் ஒருவர், போலிசைக் காட்டி, “மத்தவங்ககிட்ட எப்படி நடத்துப்பானுங்க? இவங்ககிட்ட எவ்ளோ மரியாதைப் பாத்தியா?” என்று மற்றவரிடம் கூறி சிரித்தார்.

ஆர்ப்பாட்டம் முடிந்து, டீக்குடிக்க நின்ற தோழர்களிடம், ரோந்து சென்ற போலீசு வண்டி அருகில் வந்து “எங்கம்மா, போகணும், நாங்க வண்டியில விட்டுடட்டுமா?” என்று பவ்வியமாக பம்மியது போலிசு.

“வேணா சார்… நாங்க பஸ்சுக்காக காத்திருக்கோம், வந்ததும் போயிடுவோம்” என்றனர் தோழர்கள் கறாராக.

பஸ்ஸில் ஏறியதும், கண்டக்டர் முதல் பயணிகள் வரை அனைவரும், “முடிச்சிட்டீங்களா, இப்படி செஞ்சாதான் மூடுவானுங்கமா, தொடர்ந்து செய்யுங்கமா” என்று உற்சாகத்துடன் ஆதரவளித்தனர்.

ஆர்ப்பாட்டத்தில் பங்கு பெற்றவர்களை மக்கள் விஐபியைப் போல பார்த்தனர்.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது சொடுக்கவும்]

தகவல்
பெண்கள் விடுதலை முன்னணி,
சென்னை

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க