Tuesday, April 13, 2021
முகப்பு போலி ஜனநாயகம் போலீசு போலீசு அடக்குமுறையுடன் மொழிப்போர் நினைவுநாள்

போலீசு அடக்குமுறையுடன் மொழிப்போர் நினைவுநாள்

-

மிழ்நாட்டு மாணவர்களின் இந்தித்திணிப்பு எதிர்ப்புப் போராட்டத்தின் பொன்விழா ஆண்டினை நினைவு கூர்ந்து அப்படி ஒரு மொழிப்போரினை மீண்டும் துவக்க வேண்டிய அவசியத்தை வலியுறுத்தி புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி தமிழகம் முழுவதும் பேருந்து, ரயில், குடியிருப்புப் பகுதிகள் என எல்லா இடங்களிலும் மக்களிடம் பிரச்சாரம் செய்து வருகிறது.  சைக்கிள் பேரணி, கல்லூரிகளில் வாயில் நாடகம் என பல வடிவங்களில் பிரச்சாரம் செய்யப்பட்டது.

ஜனவரி 25, 2015 அன்று மொழிப்போர் தியாகிகள் நாள் புரட்சிகர அமைப்புகளால் தமிழகத்தின் அனைத்து முக்கிய நகரங்களிலும் கடைப்பிடிக்கப்பட்டது. அது தொடர்பான தகவல்கள், புகைப்படங்களின் நான்காவது பகுதி.

9. தருமபுரி மாவட்டம்

ருமபுரி மாவட்டத்தில் ஜனவரி 25 தமிழக மாணவர்களின் வீரம் செறிந்த போராட்டத்தை நினைவு கூரும் வகையில் பேருந்துகளிலும், பள்ளி கல்லூரிகளிலும் சுவரொட்டிகள் ஒட்டி, பிரசுரம் வினியோகிக்கப்பட்டது. தெருமுனைக் கூட்டம் நடத்தத் திட்டமிடப்பட்டது.

anti-hindi-imposition-dharmapuri-2பென்னாகரம், தருமபுரி, சேலம் பகுதிகளில் பேருந்து பிரச்சாரம் செய்யப்பட்டது. பென்னாகரத்தில் சுவரொட்டி ஒட்டி, தியாகிகள் புகைப்படத்தை பிடித்துக் கொண்டு பேருந்து நிலையம் நடுவில் செஞ்சட்டையும், செங்கொடியும் பிடித்துக் கொண்டு வீரம் செறிந்த முழக்கமிட்டனர். கல்லூரி மாணவர்கள், இளைஞர்கள் கலந்து கொண்ட கூட்டத்தை தருமபுரி மாவட்ட அமைப்பாளர் தலைமை தாங்கி நடத்தினார். மாணவர்கள், பொதுமக்கள் கூட்டத்தில் கலந்து கொண்டு பிரசுரத்தை கேட்டு வாங்கி போனார்கள். கூட்டம் முடிந்து தியாகிகள் புகைப்பட பேனரை பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டது.

anti-hindi-imposition-dharmapuri-1திட்டமிட்டபடி மாணவர்கள் செங்கொடியைக் கட்டிக் கொண்டு சைக்கிள் பேரணியாக 40 கிலோமீட்டர் பிரச்சார பயணம் மேற்கொண்டனர். மாணவர்களின் பிரச்சார பயணம் வழிநெடுகிலும், பாதசாரிகளையும், இரு சக்கர ஓட்டுனர்களையும், பேருந்து பயணிகளையும் திரும்பிப் பார்க்க வைத்தது; வண்டியை நிறுத்தி பிரசுரங்களை கேட்டு வாங்கிக் கொண்டு ஆதரவு தெரிவித்து சென்றனர். ஒரு இளைஞர் பிரசுரத்தை வாங்கிக் கொண்டு தானும் உறுப்பினர் என்று அடையாள அட்டையைக் காட்டிக் கொண்டு சென்றார்.

anti-hindi-imposition-dharmapuri-3செல்லும் வழியில் இருந்த முக்கிய பேருந்து நிலையங்களிலும், பள்ளிகளிலும், கல்லூரிகளிலும் தெருமுனைக் கூட்டம், வாயிற்கூட்டம் நடத்தப்பட்டது. ஆசிரியர்கள் நிதியளித்தனர். மாணவர்கள் பிரசுரம் கேட்டுப் பெற்றனர். “இப்படி எல்லாம் செய்தால்தான் நாட்டைக் காப்பாற்ற முடியும்” என்று ஒருவர் கூறினார். ஒரு அம்மா, “எங்க பிள்ளையும் இந்த மாதிரி விஷயத்துக்கு அனுப்பணும். நம்ம தாய்மொழியை அழிக்க விடக் கூடாது” என்றார். கல்லூரி வாயிற் கூட்டத்தில் மாணவர்கள் ஆர்வமாக கலந்து கொண்டனர்.

சனவரி 25 காலை மாணவர்கள் பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து முழக்கமிட்டு உரை நிகழ்த்தினர்.  செங்கொடியை உயரப் பிடித்து டவுன் பஸ் ஸ்டாண்டிற்கு சென்றனர். வழியில் பிரசுரம் வினியோகித்தனர். முழக்கமிட்ட போது போலீஸ் வந்து இன்னொரு முறை செய்தால் கைது செய்வோம் என்றனர்.

anti-hindi-imposition-dharmapuri-4ராஜகோபால் பூங்கா அருகில் கூட்டம் தொடங்கப்பட்டது. போலீஸ் வந்து கைது செய்யப் போவதாக கூறியது.

“வண்டியில் ஏற முடியாது. பேசுவது எங்கள் உரிமை” என்று மாணவர்கள் கூற வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் மாணவர்களை குண்டுக் கட்டாக தூக்கி வண்டியில் போடப்பட்டனர். நெற்றியில் அடிபட்டது, கால் நகம் பிய்ந்தது, சட்டை கிழிந்தது என்று தோழர்கள் காயமடையும் அளவுக்கு முரட்டுத்தனமாக வண்டியில் தூக்கிப் போடப்பட்டனர்.

“போலீஸ் அராஜகம் ஒழிக” என்று மாணவர்கள் முழக்கமிட்டனர். போலீஸ் வண்டியிலும் ஆர்ப்பாட்டம் தொடர்ந்தது.  காவல் நிலையத்திலும் மரியாதைக் குறைவாக பேசிய போலீசை அடக்கி உணவு, காயமடைந்தவர்களுக்கு மருத்துவம் என தமது உரிமைகளை பெற்றனர் தோழர்கள். போராட்டத்தின் மூலம்தான் எதையும் சாதிக்க முடியும் என்பதை நடைமுறையில் உணர்ந்தனர்.

மாலையில் விடுவித்த போது கொடியை கேட்ட போது, “வெப்பன்ஸ் எல்லாம் கொடுக்க முடியாது” என்றார்.

“கத்தியா, துப்பாக்கியா, வெப்பன்ஸ் என்று சொல்றீங்க. கொடிய கொடுக்காட்டா இந்த இடத்தை விட்டுப் போக முடியாது” என்று கூறியதும்,

“குடுக்க முடியாது, உங்க மேல எஃப்.ஐ.ஆர் போட்டிருக்கு, கிளம்புங்க” என்றார்.

இந்த “வெப்பன்”ஸை கண்டு போலீஸ் பயப்படுகிறது. எனவே செங்கொடி என்ற ஆயுதத்தை எடுத்து பார்ப்பன ஆரிய சாம்ராஜ்ய கனவை ஒரே போடாக ஒழிப்போம்.

கைது செய்யப்பட்ட மாணவர்களின் அனுபவத்தைக் கேட்ட பிற மாணவர்கள் தாமும் போராட்டத்தில் கலந்து கொண்டிருக்க வேண்டும் என்று ஆர்வம் தெரிவித்தனர்.

தகவல்
புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி,
தருமபுரி மாவட்டம். செல் : 8148055539

10. புதுச்சேரி

புதுச்சேரி புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் சார்பில், நகரின் முக்கிய பகுதியில் அமைந்துள்ள பெரியார் சிலைக்கும், மொழிப்போர் தியாகிகளின் உருவப்படத்திற்கும் மாலை அணிவித்தல், ஆரிய – பார்ப்பன ஆதிக்கத்திற்கு, இந்து மதவெறி பாசிசத்திற்கும் முடிவு கட்ட உறுதிமொழி ஏற்றல் ஆகிய நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.

புதுச்சேரி புஜதொமு தலைவர் தோழர். சரவணன் தலைமை ஏற்று பெரியார் சிலைக்கு மாலை அணிவித்தார். புஜதொமு செயற்குழு உறுப்பினர் தோழர். கருப்பையா மொழிப்போர் தியாகிகளின் உருவப் படங்களுக்கு மாலை அணிவித்தார்.

புதுச்சேரி புஜதொமு பொதுச் செயலாளர் தோழர். பழனிசாமி மொழிப்போர் தியாகிகளின் போராட்டத்தை நினைவு கூரும் விதமாகவும், இன்றைய போராட்டத்தின் அவசியத்தைப் பற்றியும் விளக்கினார்.  அவர் உறுதிமொழியை வாசிக்க தோழர்கள் உறுதிமொழி ஏற்றுக் கொண்டனர்.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது சொடுக்கவும்]

இணைப்பு சங்கத் தோழர்கள், பகுதி தோழர்கள் கலந்து கொண்டனர்.

தகவல்,
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி, புதுச்சேரி.
தொடர்புக்கு : 95977 89801.

11. புதுவை பல்கலைக் கழகம்

மொழிப்போர் தியாகிகள் நினைவேந்தல் மற்றும் பார்ப்பனிய எதிர்ப்பு உறுதிமொழி ஏற்பு நிகழ்வு கடந்த 23 சனவரி-2015 வெள்ளி அன்று பிற்பகல் 3.30 மணி அளவில் பல்கலைக்கழகத்தின் இரண்டாவது நுழைவாயில் முன்பாக நடைபெற்றது.

puduvai-uni-gate-meeting-11நிகழ்கலைத்துறை மாணவர்களாகிய நமது தோழர்களின் பறையிசை முழக்கத்தோடு தொடங்கிய இந்தஎழுச்சிமிகு நிகழ்வினை பல்கலைக்கழக மாணவர்களும், ஊழியர்களும், அருகாமைப் பகுதிமக்களும் ஆர்வத்துடன் பார்த்துச் சென்றனர்.

puduvai-uni-gate-meeting-05பறையிசை தொடங்கிய சிறிது நேரத்திற்கெல்லாம் மாணவர்களைக் காக்கவோ, பல்கலைக்கழகத்தில் நடைபெறும் மாணவர் விரோதச் செயல்களைத் தடுக்கவோ வராத காவல்துறை நம்மிடம் வந்து “அனுமதிக் கடிதம் கொடுங்கள்” என்று கேட்டது.

“ஒலிபெருக்கி வைக்காத நிகழ்விற்கு போலீஸ் அனுமதி எதற்கு?” என்று நமது தோழர்கள் திருப்பிக் கேட்க,

“நாளைக்கு எதாச்சும்னா எங்ககிட்ட வரமாட்டிங்களா?” என்று நைச்சியமாகப் பேசியது காவல்துறை.

அதற்கு நாடகத்துறை ஆய்வாளர் தோழர் ஆனந்தன் “உங்ககிட்ட வர மாட்டோம் போங்க! வந்துமட்டும் எங்களுக்கு என்ன பாதுகாப்பு கொடுத்துட்டீங்க? ஒரு அப்பாவி ஏழை மாணவன பல்கலைக்கழக அதிகாரிகள் 4 பேர் சேந்து அடிச்சிருக்காங்க, அப்போ நீங்க எங்களுக்கா பாதுகாப்புக் கொடுத்தீங்க? இப்போ நீங்க பேசுற மொழி வாழணுமின்னு 50 வருஷத்துக்கு முன்னாடி இவ்வளவு பேரு செத்திருக்காங்கன்னு அவுங்களுக்கு விழா எடுக்கறோம், நீங்க இதுல கலந்துக்காம அனுமதி கடிதம் கேக்குறிங்க?” என்று சீற்றத்துடன் பதிலளிக்க பம்மியது போலீசு.

puduvai-uni-gate-meeting-02“சரி சரி, சீக்கிரம் முடிங்கப்பா” என்று சொல்லிவிட்டு நிகழ்வைப் பார்த்துக்கொண்டு நின்றனர் காவலர்கள்.

பறை முழக்கத்தைத் தொடர்ந்து மொழிப்போர் தியாகிகளின் நினைவைப் போற்றி வீரவணக்கம் செலுத்தியும் பார்ப்பனப் பகைமுடிக்கச் சூளுரைத்தும் விண்ணதிர முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

puduvai-uni-gate-meeting-07தோழர்கள் எழுப்பிய பறைமுழக்கம் நிகழ்வின் மையமாக அமைந்து அனைவரையும் ஈர்த்தது.

 • We are not against Hindi, but we are against imposition of any language!
 • Salute to martyrs of anti Hindi imposition struggle! let us carry forward their anti-Hindutva struggle!
 • Make all 22 languages as official languages of India!
 • Not only Tamil people but people of Maharashtra, Punjab, West Bengal, Karnataka and Andhra Pradesh also protested against Hindi Imposition
 • மொழிப்போர் தியாகிகளின் பொன்விழா நினைவாண்டில் பார்ப்பனியப் பகைமுடிக்கச் சூளுரைப்போம்!

ஆகிய வாசகங்கள் எழுதப்பட்ட அட்டைகளைக் கையிலேந்தி நின்றது நமது நினைவேந்தல் நிகழ்வின் நோக்கத்தை மக்களுக்கு அறிவிப்பதாக அமைந்திருந்தது.

இது பல்வேறு மொழிபேசுவோர், குறிப்பாக இந்திமொழி பேசுவோர் அதிகம் படிக்கும் பல்கலைக்கழகம் என்பதால், நாம் இந்தி மொழியை எதிர்க்கவில்லை என்பதும், இந்தி மொழி மற்றும் இந்து/காவி/பார்ப்பனப் பண்பாட்டுத் திணிப்பையே எதிர்க்கிறோம் என்பதும் விளக்கப்பட்டது. பலரும் அதனை ஏற்றதோடு இந்திமொழி பேசும் மாணவர்கள் சிலர் நிகழ்விலும் பங்கேற்றனர்.

puduvai-uni-gate-meeting-06குறிப்பிடத்தக்க நிகழ்வாக, இந்திமொழித்துறையின் பேராசிரியர் ஒருவர் நமது இந்திமொழி எதிர்ப்புப் போராட்டத்தின் நியாயத்தை தொடர்ந்து ஆதரித்து வந்திருப்பதோடு, இந்த நிகழ்விற்கும் தனது முழுமையான ஆதரவைத் தெரிவித்தார்.

தமிழ்த்துறை ஆய்வாளர் தோழர் சிவராஜ் பார்ப்பன எதிர்ப்பு உறுதிமொழியை வாசிக்க எல்லோரும் பார்ப்பன இந்துவெறிப் பாசிச எதிர்ப்புக் கோட்டையாக தமிழ் மண்ணை கட்டியமைக்க உறுதிபூண்டனர்.

puduvai-uni-gate-meeting-08பார்ப்பனிய எதிர்ப்பு உறுதிமொழி:

தமிழ்நாட்டு மாணவர்களின் இந்தித் திணிப்பு எதிர்ப்பு போராட்டத்தின் பொன்விழா ஆண்டு

 • மொழிப்போர் தியாகிகளின் நினைவை நெஞ்சில் ஏந்தி வீறுகொண்டெழுவோம்!
 • தமிழ் தேசிய இனத்தின் கடவுள் – ஆன்மீக மறுப்பு, வேத, வைதீக – பார்ப்பன, சமஸ்கிருத – இந்தி எதிர்ப்பு பாரம்பரியத்தை போர்வாளாக ஏந்துவோம்!
 • மீண்டும் படையெடுத்து வருகிற ஆரிய – பார்ப்பன, வேத, வைதீக, சமஸ்கிருத – இந்தி ஆதிக்க பண்பாட்டை போரிட்டுவீழ்த்துவோம்!
 • ஆரிய – பார்ப்பன எதிர்ப்புப் போரின் தளப்பிரதேசமாக தமிழ்நாட்டை மீண்டும் கட்டியமைப்போம்! என்று மொழிப்போர் தியாகிகளின் பொன்விழா ஆண்டில் உறுதியேற்போம்!
 • பெரியாரின் சுயமரியாதை தமிழ் மண்ணிலிருந்து பார்ப்பனியத்தையும், சாதி ஆதிக்கத்தையும், மொழி, இன, பண்பாட்டு ஒடுக்குமுறைகளையும் அடியோடு அறுத்தெறிந்து, பார்ப்பனப் பாசிச எதிர்ப்பின் கோட்டையாக தமிழகத்தை மீண்டும் மாற்றவும் இந்த மொழிப்போர் தியாகிகளின் பொன்விழா நினைவாண்டில் சூளுரைப்போம்!

ஆங்கிலத்துறை ஆய்வாளர் தோழர் முருகானந்தன் மொழிப்போர் தியாகிகளை நினைவுகூரவேண்டியதன் அவசியத்தையும் இன்று நாடு எதிர்நோக்கியுள்ள பார்ப்பன இந்துவெறி அபாயத்தினை ஒன்றுசேர்ந்து எதிர்த்துப் போராடி வீழ்த்தவேண்டியதன் அவசரத் தேவையையும் விளக்கிப் பேசினார். மேலும் நாம் எந்த ஒரு மொழிக்கும் எதிரானவர்கள் அல்ல, ஆனால் எந்தவொரு மொழியும், பண்பாடும், ஒடுக்குமுறையும் பிறர்மீது திணிக்கப்படுவதற்கு எதிரானவர்கள் என்றும், இந்தியின் மூலம் இந்திய ஆளும் வர்க்கம் திணிக்க முயல்வது ஒரே அகண்ட பாரதம் என்ற தமது காவிக் கனவினைத்தான் என்றும் விளக்கினார்.

puduvai-uni-gate-meeting-04இறுதியாக தோழர் ஆனந்தன் வந்திருந்தோருக்கு நன்றியும் வாழ்த்தும் கூறி இதுபோன்றே எல்லா மாணவர், சமூக, அரசியல் போராட்டங்களிலும் அனைவரும் பங்கேற்று தங்களின் கடமையை ஆற்றவேண்டுமென்று கேட்டுக்கொண்டு நிகழ்வினை நிறைவுசெய்து வைத்தார்.

puduvai-uni-gate-meeting-02தமிழ்த்துறை, நாடகத்துறை, பொருளாதாரத்துறை பேராசிரியர்கள் பலரும் இந்த மொழிப்போர் வரலாற்றை இன்றைய மாணவர்களிடம் எடுத்துச்செல்லும் நமது பணியை வாழ்த்தியதோடு ஆதரவும் நிதியும் நல்கினர்.

“தமிழ் படிக்கும் மாணவர்களுக்கே மொழிப்போராட்ட வரலாறு தெரியவில்லை, இந்த மாணவர்களுக்கு நன்றாக விளக்கிச் சொல்லுங்கள்” என்று தமிழ்த்துறை பேராசிரியர்கள் கூறினர்.

பெண்கள்/மாணவிகள் அதிக எண்ணிக்கையில் நிகழ்வில் பங்கேற்றது நமது பார்ப்பன எதிர்ப்புப் போராட்டத்திற்கு உற்சாகம் ஊட்டுவதாக இருந்தது.

puduvai-uni-gate-meeting-01முழக்கங்கள்

வீர வணக்கம் வீர வணக்கம்!
தியாகிகளுக்கு வீர வணக்கம்!
உழைக்கும் மக்களின் உரிமைக்காக,
உயிர்நீத்த தியாகச் சுடர்கள்,
எல்லோருக்கும் வீரவணக்கம்!

வர்க்கப் போரில் தன்னுயிர் ஈந்த,
தியாகிகளுக்கு வீரவணக்கம்!
சாதி தீண்டாமை இழிவுகள் போக்கி,
பார்ப்பனியத்தின் கொடுங்கோன்மை நீக்கி,
மானமும் அறிவும் புகட்ட உழைத்த
தியாகிகளுக்கு வீரவணக்கம்!

பார்ப்பனிய எதிர்ப்புப் போராளிகள் தந்தை பெரியாருக்கும்,
அண்ணல் அம்பேத்காருக்கும் வீரவணக்கம்!
வீர வணக்கம் வீர வணக்கம்!
மொழிப்போர் தியாகிகளுக்கு வீர வணக்கம்!

தமிழ் மக்களின் மொழி உரிமை காக்க,
தமிழினத்தின் தன்மானம் காக்க,
தன்னுயிரீந்த தியாகிகளுக்கு,
வீரவணக்கம் வீரவணக்கம்!

puduvai-uni-gate-meeting-10சாதி இழிவை தீண்டாமையை,
நியாயப்படுத்தும் பார்ப்பனியத்தின்,
கொலைக்கருவியான சமஸ்கிருதத்தையும்,
அதன் குழந்தையான இந்தியையும்,
தமிழ் மண்ணில் நுழையவிடாமல்,
தன்னுயிர் இழந்தும் பார்ப்பனியம் எதிர்த்த,
மொழிப்போர் தியாகிகளுக்கு வீரவணக்கம்!

சாதி மத எல்லைகள் கடந்து,
தமிழ் மக்களின் மொழியையும் பண்பாட்டையும்,
காக்கப் போராடிய தியாகிகளுக்கு,
வீரவணக்கம் வீரவணக்கம்!

தந்தை பெரியார் தொடங்கிவைத்த,
பார்ப்பன ராஜாஜியின் இந்தித்திணிப்புக்கு
எதிரான போராட்டத்தில்,
சிறையில் மாண்ட நடராசனுக்கும்,
தாளமுத்துவுக்கும் வீரவணக்கம்!

பெரியாரின் தளபதியாக,
இந்தி எதிர்ப்பு பார்ப்பனிய எதிர்ப்பு,
படைநடத்திய பட்டுக்கோட்டையார்,
அழகிரிக்கு வீரவணக்கம்!

தமிழைக் காக்க இந்தித் திணிப்பை எதிர்க்க,
தீயிலேரிந்து தன்னுயிரீந்த,
சிங்கத் தமிழன் சின்னசாமிக்கு,
வீரவணக்கம் வீரவணக்கம்!

காவல்துறையின் துப்பாக்கிக்கு,
பலியாகி தன்னுயிரீந்த,
ராஜேந்திரனுக்கு வீரவணக்கம்!

கோடம்பாக்கம் சிவலிங்கத்திற்கும்
விருகம்பாக்கம் அரங்கநாதனுக்கும்,
வீரவணக்கம் வீரவணக்கம்!

puduvai-uni-gate-meeting-09தமிழ் இனத்தின் தமிழ் மொழியின்,
உரிமை காக்கவும் இழிவுபோக்கவும்,
தன்ன்னுயிரீந்த உழைக்கும் மக்கள்,
யாவருக்கும் வீரவணக்கம்!

நெஞ்சில் ஏந்துவோம், நெஞ்சில் ஏந்துவோம்!
மொழிப்போர் தியாகிகளின் வீரத்தை,
தியாகத்தை நெஞ்சிலேந்துவோம்!

தமிழினத்தின் தமிழ் மொழியின்,
பார்ப்பனிய எதிர்ப்புப் பண்பாட்டை,
பகுத்தறிவு பாரம்பரியத்தை நெஞ்சில் ஏந்துவோம்!

போர்வாளாய்க் கைய்யிலேந்துவோம், போர்வாளாய்க் கைய்யிலேந்துவோம்!
தமிழ் மண்ணின் சாதி மறுப்பு,
பார்ப்பனிய எதிர்ப்புப் பண்பாட்டை, போர்வாளாய்க் கைய்யிலேந்துவோம்!

முறியடிப்போம், முறியடிப்போம்!
தந்தை பெரியாருக்கும் அண்ணல் அம்பேத்காருக்கும்,
பூலேவுக்கும் அடங்கி ஒடுங்கி,
வாலைச் சுருட்டிய பார்ப்பனியத்தின்,
மறுபடைஎடுப்பை முறியடிப்போம்!

வெட்டி வீழ்த்துவோம், வெட்டி வீழ்த்துவோம்!
சாதி மத ஒடுக்குமுறைகளால்,
சனாதனத்தின் கொடுங்கரங்களால்,
தாழ்த்தப்பட்ட சாதி மக்களை,
சிறுபான்மை மதத்தவரை,
பல்தேசிய இனங்களை மொழிகளை,
உழைக்கும் மக்களை ஒடுக்க நினைக்கும்
காவிவெறி இந்துவெறி மதவெறி,
ஆதிக்கத்தை வெட்டி வீழ்த்துவோம்!

பார்ப்பனியப் பாசிசத்தை,
வேரோடு வெட்டி வீழ்த்துவோம்!
22 மொழிகள் பட்டியலில்,
சமஸ்கிருதம் இந்திக்கு உயரிடமா?

ஒரே நாடு ஒரே மொழி,
ஒரே மதமென்னும் காவிகளின்
அகண்ட பாரதக் கனவினையும்,
அடியோடு வெட்டி வீழ்த்துவோம்!

சாதி மத இனத் தடை கடந்து,
மாணவராய் உழைக்கும் மக்களாய்,
ஒன்றிணைவோம் ஒன்றிணைவோம்!

பார்ப்பனியப் பாசிச சாதி எதிர்ப்பின்,
பாசறையாக தமிழ் மண்ணை மாற்றுவோம்!
மொழிப்போர் தியாகிகளின் வரலாற்றை,
நினைவுகளை நெஞ்சில் ஏந்தி,
இந்தி சமஸ்கிருதத் திணிப்பையும்,
இன அடையாள அழிப்பையும்,
சாதி மத ஒடுக்குமுறை இழிவையும்,
வேரோடும் வேரடி மண்ணோடும்,
வேரோடும் வேரடி மண்ணோடும்,
வெட்டி வீழ்த்தச் சூளுரைப்போம்!
வெட்டி வீழ்த்தச் சூளுரைப்போம்!

மொழிப்போர் தியாகிகளின் பொன்விழா நினைவாண்டில்,
பார்ப்பனியப் பகைமுடிக்கச் சூளுரைப்போம்!

புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி வாழ்க!
புதுவைப் பல்கலைக்கழக மாணவர் வாழ்க!
மாணவர் ஒற்றுமை ஓங்குக!

தகவல்:
புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி, புதுச்சேரி.
தொடர்புக்கு: அலைபேசி 9486391209
மின்னஞ்சல்: rsyfront.pu@gmail.com

12. கரூர்

ரூர் லைட்ஹவுஸ் கார்னரில் உள்ள பார்ப்பன சித்தாந்ததிற்கு சிம்ம சொப்பனமாக விளங்கிய பெரியாரின் சிலைக்கு மாலையணிவித்து மரியாதை செலுத்தி உறுதியேற்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி கரூர் மாவட்ட செயலாளர் தோழர் இரா பாக்கியராஜ் தலைமை ஏற்றார். மனித உரிமை பாதுகாப்பு மையம் தோழர் இராமசாமி முன்னிலை வகித்தார்.

karur-rsyf-anti-hindi-imposition

தகவல்
புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி,
கரூர்

13. விருத்தாசலம்

னித உரிமை பாதுகாப்பு மையமும், மாணவர்களின் கல்வி உரிமைக்கான பெற்றோர் சங்கமும் இணைந்து சனவரி 25, 2015 மாலை 6 மணிக்கு விருத்தாசலம் பெரியார் நகர் பேருந்து நிறுத்தத்தில் மொழிப்போர் தியாகிகளுக்கு வீரவணக்கமும், உறுதியேற்பு நிகழ்ச்சியும் நடத்தினர்.

virudai-parents-association-1இந்நிகழ்ச்ச்சிக்கு திருச்சி மாவட்டம் மொழிப்போர்த்தியாகி கீழப்பழவூர் சின்னசாமியின் துணைவியாரும், மகள் திராவிடச்செல்வி இருவரும் கலந்து கொண்டனர். அவர்களுக்கு மரியாதை செலுத்தும் விதமாக பொன்னாடை போற்றிச் சிறப்பிக்கப்பட்டனர்.

virudai-parents-association-2

மாணவர்களின் கல்வி உரிமைக்கான பெற்றோர் சங்கத் தலைவர் வை.வெங்கடேசன் தலைமை ஏற்க, எழுத்தாளர் இமையம், மனித உரிமை பாதுகாப்பு மைய செயலர் புஷ்பதேவன், திராவிடர் கழகத்தைச் சார்ந்த செழியன், ஓய்வுபெற்ற தலைமையாசிரியரான சிவராமசேது முதலியோர் தியாகிகளை நினைவு கூர்ந்து பேசினர்.

தியாகி சின்னசாமியின் மகள் திராவிடச்செல்வி உணர்ச்சிபூர்வமாக பேசினார்.

பேசிய பிற பேச்சாளர்கள்

 • மக்கள் மொழியில் கோயிலில் கூட தமிழ் அர்ச்சனை மறுக்கப்பட்டு மொழி இழிவுபடுத்துவதற்கு எதிராக போராடி தமிழை நிலை நாட்டவேண்டிய கடமைகளை பேசி தெளிவுபடுத்தினர்.
 • பெயர் வைப்பதில் கூடதமிழை தவிர்த்து வரும் கொடுரத்தை தமிழர்கள் நாம் அனுமதிக்ககூடாது என புரியவைத்தனர்.
 • பள்ளிகளில் தமிழை படிக்காமல் பட்டம் பெறும் அவலத்தை தோலுரித்தனர்.

இறுதியில் ஆரிய பார்ப்பன எதிர்ப்புப் போரின் தளப்பிரதேசமாக கட்டியமைப்போம் என்று உறுதிமொழி ஏற்கப்பட்டு, கூட்டம் நிறைவடைந்தது.

தகவல்
மாணவர்களின் கல்வி உரிமைக்கான பெற்றோர்கள் சங்கம்,
விருத்தாசலம்

அறந்தாங்கியில் பொதுக்கூட்டம்

pala-rsyf-poster-mozhipor-2முந்தைய பகுதிகள்

 1. மொழிப்போர் தியாகிகள் நாள் – மக்களைத் திரட்டிய பு.மா.இ.மு
 2. மொழிப்போர் தியாகிகள் நாள் – கோவை, கடலூர், சிதம்பரம், விருத்தாசலம்
 3. திருச்சி, வேதாரண்யம், விழுப்புரம் – மீண்டும் துவங்கியது மொழிப்போர்

இறுதிப் பகுதி – தஞ்சை நிகழ்வு மற்றும் அறந்தாங்கி பொதுக்கூட்டம் தொடரும்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க