privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புகட்சிகள்அ.தி.மு.கதிருச்சி, வேதாரண்யம், விழுப்புரம் - மீண்டும் துவங்கியது மொழிப்போர்

திருச்சி, வேதாரண்யம், விழுப்புரம் – மீண்டும் துவங்கியது மொழிப்போர்

-

மிழ்நாட்டு மாணவர்களின் இந்தித்திணிப்பு எதிர்ப்புப் போராட்டத்தின் பொன்விழா ஆண்டினை நினைவு கூர்ந்து அப்படி ஒரு மொழிப்போரினை மீண்டும் துவக்க வேண்டிய அவசியத்தை வலியுறுத்தி புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி தமிழகம் முழுவதும் பேருந்து, ரயில், குடியிருப்புப் பகுதிகள் என எல்லா இடங்களிலும் மக்களிடம் பிரச்சாரம் செய்து வருகிறது.  சைக்கிள் பேரணி, கல்லூரிகளில் வாயில் நாடகம் என பல வடிவங்களில் பிரச்சாரம் செய்யப்பட்டது.

ஜனவரி 25, 2015 அன்று மொழிப்போர் தியாகிகள் நாள் புரட்சிகர அமைப்புகளால் தமிழகத்தின் அனைத்து முக்கிய நகரங்களிலும் கடைப்பிடிக்கப்பட்டது. அது தொடர்பான தகவல்கள், புகைப்படங்களின் மூன்றாவது பகுதி.

6. திருச்சி

திருச்சியில் மாநகரம் தழுவிய அளவில் சுவரெழுத்து பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்பட்டன. ஸ்ரீரங்கம் தொகுதியில் இடைத் தேர்தல் நடைபெறுவதையொட்டி தேர்தல் நடத்தை விதிகளை காரணம் காட்டி சுவரெழுத்துக்களை போலீசார் அழித்து விட்டனர்.

trichy-mozhipor-campaign-01தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருக்கும் போதே பாசிச கோமாளி எம்.ஜி.ஆரின் பிறந்தநாள் கொண்டாட்டங்கள், சுவரெழுத்துக்கள் உள்ளிட்டவற்றை அனுமதித்த போலீசு, மொழிப்போர் தியாகிகளின் நினைவேந்தலை தடுப்பதில் முனைப்புடன் செயல்பட்டது. நக்குற நாய்க்கு செக்கு வேறு சிவலிங்கம் வேறு என்பது தெரியாது என்பதை நிரூபித்தது ஜெயா போலீசு.

இதனைத் தொடர்ந்து மக்கள் மத்தியில் பிரச்சாரங்களை கொண்டு செல்லும் விதமாக ஆயிரக்கணக்கான துண்டு பிரசுரங்களை அச்சிட்டு மக்கள் மத்தியில் கொண்டு சென்றோம். குறிப்பாக, கல்லூரி மாணவர்கள் மத்தியில் பிரச்சாரங்கள் விரிவாக முன்னெடுக்கப்பட்டது. கல்லூரி விடுதிகளில் குறும்படங்கள் திரையிட்டு மொழிப்போர் தியாகிகளின் நினைவை நெஞ்சில் ஏந்தி செயல்பட வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தியும், ஆரிய பார்ப்பன எதிர்ப்பு போரின் தளப்பிரதேசமாக தமிழ்நாட்டை கட்டியமைக்க உறுதியேற்கும் உணர்வினை உருவாக்கியும் சிறப்புக்கூட்டங்கள் பு.மா.இ.மு தோழர்களால் நடத்தப்பட்டன.

trichy-mozhipor-campaign-03மொழிப்போர் தியாகிகளை நினைவு கூறுவது கூடவே, தந்தை பெரியாரின் இந்தி எதிர்ப்பு போராட்ட பங்களிப்பை உயர்த்தி பிடிக்கும் வகையில், சனவரி 25 அன்று காலை 10 மணி அளவில் திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகில் உள்ள தந்தை பெரியார் சிலைக்கு புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் இணைப்பு சங்கமான பாய்லர் ப்ளாண்ட் ஒர்க்கர்ஸ் யூனியனின் பொதுச்செயலாளரான தோழர் சுந்தர்ராஜ் தலைமையில் ம.க.இ.க, பு.மா.இ.மு, பு.ஜ.தொ.மு மற்றும் பெ.வி.மு தோழர்கள் மாலை அணிவித்தனர். சுமார் 15 நிமிடம் எழுச்சிகரமாக முழக்கமிட்டு உரையாற்றினர்.

trichy-mozhipor-campaign-02அதன் பின்னர் அங்கிருந்து இருசக்கர வாகனங்கள் மற்றும் ஆட்டோக்களில் செங்கொடிகளுடன் முழக்கமிட்டு ஊர்வலமாக புறப்பட்டனர். அமெரிக்கன் மருத்துவமனை, நீதிமன்றம், புத்தூர் 4 ரோடு, தென்னூர் உள்ளிட்ட பகுதிகளின் வழியே ஆயிரக்கணக்கான பிரசுரங்களை மக்கள் மத்தியில் விநியோகித்துக் கொண்டே சென்ற ஊர்வலம், தென்னூர் அருகில் உள்ள தக்ஷின பாரத ஹிந்தி பிரச்சார சபா வளாகத்தின் முன் முடிவுற்றது.

சுமார் அரை மணி நேரம் அங்கே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தை புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணியின் மாவட்ட பொருளாளர் தோழர் ஓவியா தலைமை தாங்கி நடத்தினார். ம.க.இ.க தோழர் ஜீவா உள்ளிட்டோர் எழுச்சியுரையாற்றினர்.

trichy-mozhipor-campaign-20“தி.மு.க, அ.தி.மு.க, ம.தி.மு.க, நாம் தமிழர் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் போலீசிடம் முன் கூட்டியே அனுமதி பெற்றும், (மக்கள் நடமாட்டம் இல்லாத உழவர் சந்தை அமைந்துள்ள பகுதி வழியாக) அமைதி ஊர்வலமாக செல்லும் போது நீங்கள் மட்டும் சர்ச்சைக்குரிய இடத்தில் இவ்வாறு உரிய முன் அனுமதி பெறாமல் ஊர்வலம் ஆர்ப்பாட்டம் நடத்துவது சரியல்ல” என்று போலீசார் தோழர்களை தடுத்து நிறுத்தி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

“சீழ் உள்ள இடத்தில் தானே அறுவை சிகிச்சை செய்ய வேண்டும்! இது எங்கள் உரிமை இதற்கு யாரிடமும் அனுமதி பெறவேண்டிய அவசியம் எங்களுக்கு இல்லை” என்று உறுதியான குரலில் மறுப்பை தெரிவித்துவிட்டு இந்தி பிரச்சார சபாவின் முன்பு முற்றுகையிடும் விதமாக விண்ணதிரும் முழக்கங்களை எழுப்பினர் தோழர்கள்.

trichy-mozhipor-campaign-12“இந்தி என்பது மொழியல்ல
பார்ப்பன ஆதிக்க அடையாளம்!

இந்தி கற்றால் வேலை என்பதை
ஏற்றுக்கொள்வது அவமானம்!
வேலைவாய்ப்பு என்பதற்காக
நடத்தலாமா விபச்சாரம்?

இந்தி என்பது மொழியல்ல
சமஸ்கிருதத்தின் மறுஉருவம்!
சமஸ்கிருதம் மொழியல்ல – அது
சாதியைத் திணித்த மனுதர்மம்!

பல மொழியை கற்பது வேறு
பார்ப்பன மொழிக்கு பணிவது வேறு!
பார்ப்பனியத்தை ஏற்க மாட்டோம்
பார்ப்பன இந்தியை எதிர்த்து நிற்போம்!

பார்ப்பனியத்தின் பிடரியைப் பிடித்து
உலுக்கி எடுத்த தமிழ்மண்ணில்
மீண்டும் திரும்புது வரலாறு!
கொட்டமடிக்குது ஆர்.எஸ்.எஸ்!

அனுமதியோம்! அனுமதியோம்!
தியாகிகள்மண்ணில்தமிழ்மண்ணில்
பார்ப்பனியம்கொட்டமடிக்க
அனுமதியோம்! அனுமதியோம்!

சபதமேற்போம்! சபதமேற்போம்!
மொழிப்போர்தியாகிகளே
உங்கள் பெயரால் உறுதியேற்போம்!

வீழ்த்துவோம்! வீழ்த்துவோம்!
ஆரிய – பார்ப்பன, வேத, வைதீக,
சமஸ்கிருத இந்தி
ஆதிக்கபண்பாட்டை
போரிட்டு வீழ்த்துவோம்!

ஆணையிடு! ஆணையிடு!
தமிழ்வழி கல்வி பயின்றோர்க்கு
தமிழகத்தில் அரசு வேலை என்று ஆணையிடு!

கல்வி நிலையங்களில் தமிழ் பயிற்று மொழி
அரசு தமிழே நிர்வாக மொழி
நீதி மன்றங்களில் தமிழே வழக்காடுமொழி
என ஆணையில் தமிழை வைப்போம்!

என முழங்கி போராட்டத்தை தொடர்ந்தனர்.

அடுத்தடுத்து வந்த காவல்துறை உயர்அதிகாரிகள் வேறு வழியின்றி பேரணியை அனுமதித்து மொழிப்போர் தியாகிகளின் நினைவிடத்திற்கு செல்ல அனுமதித்தனர்.

பெண்கள் குழந்தைகள் என நூற்றுக்கும் மேற்பட்டோர் உணர்வுப்பூர்வமாக முழக்கமிட்டு பங்கேற்றனர்.

இதனைத் தொடர்ந்து கீழப்பழுர் சின்னசாமி, விராலிமலை சண்முகம் ஆகிய மொழிப்போர் தியாகிகளின் கல்லறையில் மாலை அணிவித்து வீரவணக்கம் செலுத்தப்பட்டது. மனித உரிமைப் பாதுகாப்பு மையத்தின் மாவட்ட தலைவர் காவிரிநாடன் மற்றும் ம.க.இ.க மையக்கலைக் குழு தோழர் சத்யா உள்ளிட்டோர் நினைவேந்தல் உரை நிகழ்த்தி உறுதி மொழியேற்று உணர்வூட்டினர்.

trichy-mozhipor-campaign-24மாற்று கட்சிகள் அனைத்தும் இந்நாளை துக்க தினம் போல் அமைதி ஊர்வலமாக நடத்துகையில் புரட்சிகர அமைப்புகள் முழக்கமிட்டு பறையடித்து போராட்டக் களம் போல் மாற்றின.

trichy-mozhipor-campaign-23

செய்தி:
புரட்சிகர மாணவர்-இளைஞர் முன்னணி,
மக்கள் கலை இலக்கியக் கழகம்,
திருச்சி பகுதி.

7. வேதாரண்யம்

 வேதாரண்யம் பகுதியின் விவசாயிகள் விடுதலை முன்னணி சார்பாகவும், புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணியின் சார்பாகவும் இந்தி-பார்ப்பன எதிர்ப்பு போரின் அடையாளமாக பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து இந்தி எதிர்ப்பு, மொழிப்போர் தியாகிகளின் தியாகத்திற்கு வீர வணக்க முழக்கம் இடப்பட்டது.

அதனையொட்டி நடந்த அரங்கக் கூட்டத்தில் ஆசிரியர்களும், மாணவர்களும் கலந்து கொண்டு, இந்தி எதிர்ப்புப் போராட்ட வரலாற்றை இளைஞர்களிடமும், மாணவர்களிடமும் கொண்டு செல்ல வேண்டிய காலச் சூழலின் அவசியத்தை விளக்கினர்.

தகவல்:
விவசாயிகள் விடுதலை முன்னணி,
வேதாரண்யம்

8. விழுப்புரம்

விழுப்புரம் நகரம் முழுவதும்  பேருந்து,  ரயில் நிலையம், அறிஞர் அண்ணா அரசினர் கலைக்கல்லூரி,  விவேகானந்தா கலைக்கல்லூரி,  ES பொறியியல் கல்லூரி, அரசு பொறியியல் கல்லூரி, நீதிமன்றம்,  மாவட்ட ஆட்சியர் வளாகம்,  மக்கள் குடியிருப்பு பகுதி என அனைத்து இடங்களிலும் முழு வீச்சில் பிரச்சாரம் செய்யப்பட்டது.

tttewqqகுறிப்பாக தமிழர் திருநாள் என்று அழைக்கப்படும் பொங்கலையொட்டி 13,14,19 ஆகிய தினங்களில் விடுமுறை என்பதால் சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்கு செல்லும் பேருந்துகள் அனைத்திலும் பிரச்சாரம் செய்யப்பட்டது. பேருந்தில் இருந்த பல இளைஞர்கள் நமக்கு வாழ்த்து கூறி ஆதரவளித்ததோடு, மட்டுமல்லாமல் தமிழ் வாழ்க! என்று பேருந்திலேயே ஒரு இளைஞர் முழக்கமிட்டு தனது உணர்வை வெளிப்படுத்தினர்.

mozhipor-rsyf-vpm-420, 21, 22 -ஆகிய தேதிகளில் நகரத்தில் உள்ள 10 – பள்ளிகளிலும்,  4 – கல்லூரிகளிலும் அனைத்து ஆசிரியர்களுக்கும் மற்றும் கல்லூரி மாணவர்களுக்கும் விளக்கி பேசி பிரசுரம் விநியோகிக்கப்பட்டது.  குறிப்பாக அரசு உதவி  பெரும் சம்ஸ்கிருத பள்ளியின் தலைமை ஆசிரியர் ஒருவரை சந்தித்து பேசுகையில் ‘நாங்களே சமஸ்கிருதம் சொல்லி தருகிறோம், எங்க பள்ளியிலேவா’  என்று கேட்டார். அதற்கு நாம் ‘இது தமிழ்நாடு!  தமிழுக்குத்தான் முதல் முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்’ என்று விளக்கி கூறியதும் நம் பிரசுரத்தை வாங்கிகொண்டார்.

mozhipor-rsyf-vpm-223-ம் தேதி நீதிமன்றத்திற்கு சென்று பிரச்சாரம் செய்தோம்.  அன்றைய தினம்  விழுப்புரம் மற்றும் திண்டிவனம் வழக்கறிஞர்கள் சங்கங்கள் திண்டிவனம் போலீஸ் இரண்டு வழக்கறிஞர்களை தாக்கியதை கண்டித்து எஸ்.பி அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டம் அறிவித்து இருந்தனர்.  இதனால் விழுப்புரம் மாவட்டம் முழுவதும் உள்ள வழக்கறிஞர்கள் நீதிமன்றத்திற்கு  வந்திருந்தனர். இதனால் நீதிமன்றத்தில்  பரபரப்பான சூழல் நிலவியது.

mozhipor-rsyf-vpm-1நெருக்கடியான சூழலிலும்  நாங்கள் நீதிமன்ற வளாகத்துக்குள் சென்று பிரசாரத்தை செய்தோம்.  வழக்கறிஞர்களுக்கு பிரசுரம் கொடுக்கும்போது அங்கு ஒரு குழுவாக நின்று பேசிக்கொண்டு இருந்த வழக்கறிஞர்கள் பிரசுரத்தை ஆர்வமாக வாங்கி படித்தனர். அவர்களில் ஒருவர் இவர்கள் மட்டும்தான் எந்த இடத்திலும் துணிச்சலுடன் பிரச்சாரத்தை செய்கிறார்கள் என்று தங்களுக்குள் பேசிக்  கொண்டிருந்தனர். இந்த பிரச்சாரம் வழக்கறிஞர்களிடமும் அங்கே  இருந்த மக்களிடமும் நல்ல வரவேற்பை பெற்றது.

அன்று மாலை மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகம் முழுவதும் பிரச்சாரம் செய்யப்பட்டது. குறிப்பாக ஆட்சியர் அலுவலகம்,  கருவூலம், வனத்துறை, ஊனமுற்றோர் நலத்துறை, பதிவுத்துறை, அஞ்சல்துறை, என  அனைத்து  அலுவலகங்களிலும் பிரசுரம் விநியோகிகப்பட்டது. அப்போது அரசு ஊழியர் ஒருவர்  ‘நான் கள்ளக்குறிச்சியில் வேலை பார்க்கிறேன், எங்கள் அலுவலகத்தில் உள்ளவர்களுக்கு பிரசுரம் கொடுக்கவேண்டும். கொஞ்சம் கூடுதலாக பிரசுரம் வேண்டும்’ என்று கேட்டு ஆர்வத்துடன் வாங்கி சென்றார்.

mozhipor-rsyf-vpm-524-ம் தேதி விழுப்புரம் நகரின் மையப்பகுதியில் உள்ள குடியிருப்பு பகுதியில் பிரச்சாரம் செய்யப்பட்டது. அப்பகுதியில் பத்துக்கும் மேற்பட்ட தோழர்கள் பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். இதனை பார்த்த அந்த பகுதியை சேர்ந்த 10-ம் வகுப்பு, 12-ம் வகுப்பு, கல்லூரி மாணவர்கள் மற்றும் புதிய இளைஞர்கள் நம்முடன் சேர்ந்து பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.இதனை பார்த்த மக்கள் உற்சாகமாக நம் பிரசுரத்தை வாங்கி படித்தனர்.  ஒவ்வொரு வீடாக சென்று விளக்கி பேசியதும் மக்கள் ஆர்வமாக கவனித்தனர்.  மேலும் நமக்கு டீ, வடை கொடுத்து தோழர்களின் களைப்பை போக்கி நம்மை மேலும் உற்சாகப்படுதினர்.
இந்த பிரச்சாரம் தமிழ் மொழியையும்,  தமிழரின் வாழ்வையும்,  பண்பாட்டையும் தாக்கி அழிக்க ஆரிய-பார்ப்பன கூட்டம் மீண்டும் படையெடுத்து வரும்போது  உழைக்கும் தமிழ் மக்கள் அதற்க்கு எதிராக போராட எழ வேண்டும் என்ற கருத்தை போர்க்குணத்தோடு வலியுறுத்துவதாக இருந்தது.

ஊர்வலம்  தொடக்கம்

சனவரி 25-ம் தேதி காலை 10.00 மணிக்கு ரயில் நிலைய வாயில் முன் 100 -க்கும் மேற்பட்ட மாணவ, இளைஞர்கள் ஊர்வலத்திற்கு ஆயத்தமானார்கள். ஊர்வலம்  ரயில்வே நிலையத்திலிருந்து  சென்று காமராசர் வீதியில் உள்ள பெரியார் சிலைக்கும், மற்றும் மொழிப்போர்த் தியாகிகளின் உருவப்படத்திற்கும் மாலை அணிவித்து உறுதியேற்பது என திட்டம்.  எனவே அதற்கான வேலையை தொடங்கினோம். மொழிப்போர் தியாகிகளின் படங்களை கட்டுவது,  தங்களுடைய சட்டையில் பேட்ஜ், தலையில் தொப்பி அணிவது மேலும்  தட்டிகளும், பேனர்களும் பேரணிக்கு தயார் செய்யப்பட்டன. எப்பொழுதும் மக்கள் அதிகம் வரும் அப்பகுதியில் புரட்சிகர மாணவர்-இளைஞர் முன்னணியின் ஊர்வலம் களை கட்ட தொடங்கியது. அந்த “வீரன் இன்னும் சாகவில்லை” என்ற பகத்சிங் பாடல் ஓங்கி ஒலித்துக்கொண்டு இருந்தது. அங்குமிங்கும் நடந்துகொண்டிருந்த மக்கள் நின்று கவனித்தனர்.  மேலும் நம்மிடம் இருந்த பிரசுரத்தை ஆர்வமாக வாங்கி படித்தனர்.

mozhipor-rsyf-vpm-6சரியாக 11.00மணிக்கு ஊர்வலம் ரயில் நிலையத்தில் தொடங்கியதை அடுத்து கம்பீரமாக எழுப்பபட்ட முழக்கம்  தமிழ்நாட்டு மாணவர்களின் இந்தி திணிப்பு எதிர்ப்பு போராட்டத்தின் பொன்விழா ஆண்டு நிகழ்ச்சி எதற்காக என்பதை ஊர்முழுக்க அறிவிப்பதாக இருந்தது. மொழிப்போர் தியாகிகளின் உருவப்படத்தை இரு தோழர்கள் வழிகாட்டியாக எடுத்து செல்ல, செங்கொடிகள் மற்றும் தட்டிகளுடன் தோழர்கள் பின்தொடர குருசாமிப்பிள்ளை வீதி, நாப்பாளையம் வீதி, திருவிக வீதிகளின் வழியாக காமராசர் வீதியில் உள்ள பெரியார் சிலைக்கு ஊர்வலம் சென்றடைந்தது. மேலும் கடைகளில் இருந்தும்,  சாலையின் இருபுறம் நின்றும் வீட்டின் மாடிகளில் இருந்தவாறும் மக்கள் ஊர்வலத்தை  கவனித்தனர்.  இரு தோழர்கள் அவர்களுக்கு பிரசுரம் விநியோகித்தார்கள். ஊர்வலத்தில்  எழுப்பப்பட்ட   முழக்கத்தை கவனித்த அப்பகுதி மக்களுக்கு இந்த ஊர்வலத்தின்  நோக்கம் என்ன  என்பதை உணர்த்தும் வகையில் அமைந்தது. ஊர்வலம் முழுவதையும் தோழர்கள் ஸ்ரீராம், தம்பிதுரை இருவரும் தொண்டர்படையாக  இருந்து வழிகாட்டியதோடு   மட்டுமல்லாமல், தோழர்கள் சோர்வடையாமல் இருக்க தொடர்ந்து தண்ணீரும் வழங்கியபடியே வந்தனர்.

mozhipor-rsyf-vpm-3சரியாக 11.45 மணிக்கு பெரியார் சிலைக்கு வந்தடைந்தோம்.

அங்கு வந்த காவல் துறை ஆய்வாளர்  பு.மா.இ.மு செயலரிடம் “நீங்கள் ஊர்வலத்திற்கு  மட்டும்தான் அனுமதி வாங்கினீர்கள் ஒலிபெருக்கி  அனுமதி வாங்கவில்லையே” என்றார்.

அதற்கு நாம் “நீங்க மனுவை இன்னொரு முறை பாருங்கள் அதில்  தெளிவாக குறிப்பிட்டுள்ளோம்”  என்றதும்

அதன்பின் சமாளிக்கும் விதமாக “நேரம் அதிகமாகிவிட்டது” என்றார்.

அதற்கும்  “நீங்கள்தான் 11.00 மணிக்கு அனுமதி தந்தீர்கள்” என்று   கூறியவுடன்

“சரிங்க தம்பி நீங்கள் நடத்துங்கள்” என்று கூறி ஒன்றுமே தெரியாத அப்பாவி போல் நைசாக பின்வாங்கினர்.

அதன் பின் உறுதியேற்பு கூட்டத்தை பு.மா.இ.மு செயலர் தோழர். மோகன்ராஜ் தலைமையேற்று நடத்தினார். தோழர்கள் பெரியார் சிலைக்கும்,  மொழிப்போர் தியாகிகளின் சிலைக்கும் மாலை அணிவித்து உறுதியேற்றனர்.

இறுதியாக பேசிய தோழர். செல்வக்குமார்  மொழிப்போர் வரலாற்றையும், அதற்கான தற்போதைய தேவையையும்  விளக்கினார்.   மேலும் உலகில் வளர்ந்த பல முன்னணி நாடுகள் அனைத்து துறைகளிலும் தன்னுடைய தாய் மொழியை தான் பயன்படுத்துகின்றனர். தாய்மொழியில் படிக்கும் போதுதான் சுயமாக சிந்திக்கும் ஆற்றல் வளரும். அதனால் தான் அவர்களால் முன்னணி நாடாக விளங்க முடிகிறது. பி.ஜே.பி-ஆர். எஸ்.எஸ் கும்பல் கூறுவது  போல இந்தி,சமஸ்கிருதம் படித்தால் நாட்டை முன்னேற்ற பாதைக்கு கொண்டு செல்லலாம் என்பது சுத்த பொய்.அனைத்து தேசிய இன, மொழி, பண்பாடு, கலாச்சாரம் அனைத்தையும் ஒழித்து இந்தி-இந்து-இந்தியா என்ற ஆர்.எஸ்.எஸ்-ன் அகண்ட பாரத கனவை நனவாக்குவது தான் இவர்களின் திட்டம்.

எனவே மீண்டும் படையெடுத்து வரும் ஆரிய-பார்ப்பன கூட்டத்தை தமிழகத்தை விட்டே விரட்ட உழைக்கும் மக்களாகிய நாம் புரட்சிகர அமைப்புகளின் பின்னால் ஓரணியில் திரள வேண்டும். இதுவே மொழிப்போர் தியாகிகளுக்கு நாம் செலுத்தும் உண்மையான நினைவேந்தலாகும் என கூறி முடித்தார்.

தகவல்
புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி,
விழுப்புரம்

  1. சென்னையில் நடந்த பிரச்சாரம், தெருமுனைக்கூட்டம்
  2. கோவை, கடலூர், சிதம்பரம், விருத்தாச்சலம் நிகழ்வுகள்

– தொடரும் (கரூர், பென்னாகரம், புதுச்சேரி பு.ஜ.தொ.மு, புதுவை பல்கலை பு.மா.இ.மு, சிதம்பரம் பெற்றோர் சங்கம் நிகழ்வுகள் மற்றும் அறந்தாங்கியில் நடக்கவிருக்கும் பொதுக்கூட்டம் பற்றிய செய்திகள்)