privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புமறுகாலனியாக்கம்தொழிலாளர்கள்ராணிப்பேட்டை நரகத்தில் வட இந்தியத் தொழிலாளிகள்

ராணிப்பேட்டை நரகத்தில் வட இந்தியத் தொழிலாளிகள்

-

இராணிப்பேட்டை சிப்காட் – வட இந்தியத் தொழிலாளர்களின் நிலை

30 அடி நீளம், 50 அடி அகலத்தில் ஒரு ஆஸ்பெஸ்டாஸ் கூரை போட்ட ஷெட். அங்குதான் ஒவ்வொரு நாளும் கிடைக்கும் ஓய்வு நேரமான 6 மணி நேரத்தை தூங்கி, பாட்டு கேட்டுக் கொண்டு, சாப்பிட்டுக் கொண்டு செலவழிக்க வேண்டும். தூங்கி எழுந்தால் சில அடிகள் தூரத்தில் பணியிடம். அதிகாலை 6 மணியிலிருந்து மாலை 6 மணி வரை “ரெகுலர் ஷிப்ட்”, அதன் பிறகு இரவு 12 மணி வரை “ஓவர் டைம்” என்பது வாடிக்கையான வேலை.

“பதினெட்டு மணி நேரம் தொடர்ந்து  வேலை செய்யும் போது ஓய்வெடுத்தாலோ அல்லது வேலையை மெதுவாக செய்தாலோ அது சிசிடிவி கேமரா மூலம் பதிவாகிவிடும். வீட்டிலிருந்தே முதலாளியால் பார்க்க முடியும். ஒன்று மறுநாள் திட்டு வாங்க நேரிடும். இல்லையேல் ஓய்வெடுத்த நேரத்திற்கு சம்பளம் வெட்டப்படும். பெரும்பாலும் எல்லாத் தொழிற்சாலைகளின் நிலையும் இதுதான்.”

அழகூட்டப்பட்ட தோல்
எப்போதும் துணையாக தோல் நெடி

தூங்கும் போதும், விழித்திருக்கும் போதும் பக்கத்து ஷெட்டில் இயங்கும் தோல் பதனிடும் உருளைகளின் சத்தம் இடைவிடாத துணையாக காதில் ஒலித்துக் கொண்டே இருக்கும். சுவாசிப்பதற்கு ஆலைக்குள் பதனிடப்படும் ஆயிரக்கணக்கான தோல்களின் நாற்றத்தோடு நூற்றுக்கணக்கான இரசாயனங்களின் நெடி கலந்த காற்று 24 மணி நேரமும் துணையாக இருக்கும்.

உடன் தங்கியிருக்கும் 18 தொழிலாளர்களோடு சேர்ந்து வேலை ஆரம்பிப்பதற்கு முன்பு அல்லது வேலைக்கு நடுவில் ஷெட்டுக்குள்ளேயே சமைத்துக் கொள்ள வேண்டும், சாப்பிட்டுக் கொள்ள வேண்டும். ஷெட்டுக்கு எதிர் முனையில் இருக்கும் கழிப்பறையை பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

தோல் உருளைகள்
தூங்கும் போதும், விழித்திருக்கும் போதும் காதை நிறைக்கும் உருளைகளின் இயக்கம்

குளிப்பதற்கும், துவைப்பதற்கும் மஞ்சள் கலந்த தண்ணீர் தாராளமாக பயன்படுத்திக் கொள்ளலாம். அதையே கொஞ்சம் வடிகட்டி குடிக்கலாம்.

வாடிக்கையாளர் தேவை குறைவாக இருந்தால் ஞாயிற்றுக் கிழமைகளில் மதியத்துக்கு மேல் உருளைகளின் இயக்கம் தற்காலிகமாக நிறுத்தப்படும்.  அன்று மாலைதான் வார விடுமுறை. துணி துவைக்க, கடைக்குப் போய் சமையலுக்கான பொருட்கள் வாங்கி வர, இதற்குப் பிறகு நேரம் இருந்தால் பொழுதுபோக்க வெளியில் போய் வரலாம்.

இந்த ‘பூலோக சொர்க்கத்திலிருந்து’ சொந்த ஊருக்கு தொலைபேசிக் கொள்ளலாம். சில ஆயிரம் மாதச் சம்பளத்தில் ஊருக்கு அனுப்பியது போக மிச்சம் பிடித்து ஆண்டுக்கு ஒருமுறை அல்லது இருமுறை ஊருக்குப் போய் வரலாம்.

ranipet-leather-waste-disaster-08ஜனவரி 30, 2015 அன்று வேலூர் மாவட்டம் இராணிப்பேட்டை சிப்காட் வளாகத்தில் தனியாரால் பராமரிக்கப்படும் தோல் இரசாயனக் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தின் இரசாயன சகதி சேகரிப்புத் தொட்டி உடைந்து 10 வட இந்தியத் தொழிலாளர்கள் கொல்லப்பட்ட நிகழ்விற்குப் பிறகு தொழிலாளர்கள் சிலரை சந்தித்து பேசிய போது கிடைத்த அவர்களது வாழ்க்கை சித்திரம்தான் மேலே சொன்னது.

கொல்கத்தாவைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் தனது 17-வது வயதில் ரூ 4,200 மாத ஊதியத்தில் ஒரு தோல் தொழிற்சாலையில் பணிக்கு சேர்ந்திருக்கிறார். ஏழு ஆண்டுகள் உழைப்புக்குப் பிறகு அவரது ஊதியம் இன்று ரூ 5,700 ஆக உயர்ந்திருக்கிறது.

மாலை 6 மணி முதல் இரவு 12 வரை மிகை நேரப்பணியாக கருதப்படும். மிகை நேரப்பணி என்றால் இருமடங்கு ஊதியம் என்பது விதியாக இருந்தாலும் இங்கே ஒரு மடங்கு ஊதியம்தான் எல்லா ஆலைகளிலும் தரப்படுகிறது.

தோல் தொழிற்சாலை பணி
அபாயகரமான இரசாயனங்களை கையாள்வது, வேகமாக இயங்கும் சிக்கலான எந்திரங்களை இயக்குவது என்ற வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு கையுறை மூக்குக் கவசம் உள்ளிட்ட பாதுகாப்பு உபகரணங்கள் எதுவும் தரப்படுவதில்லை.

இவருக்கும் இவரோடு பணிபுரியும்  17 வயது முதல் 24 வயது வரை உள்ள திருமணமாகாத 18 இளைஞர்களும் தொழிற்சாலை முதலாளி கருணையுடன் ஒதுக்கிக் கொடுத்த ஷெட்டில் வசித்துக் கொண்டு ஆலையில் வேலை செய்கிறார்கள்.

அபாயகரமான இரசாயனங்களை கையாள்வது, வேகமாக இயங்கும் சிக்கலான எந்திரங்களை இயக்குவது என்ற வேலை செய்யும் இவர்களுக்கு பாதுகாப்பு கையுறை மூக்குக் கவசம் உள்ளிட்ட பாதுகாப்பு உபகரணங்கள் எதுவும் தரப்படுவதில்லை.

குடும்பத்தோடு வசிப்பவர்கள் மட்டுமே சிப்காட் குடியிருப்புப் பகுதிகளில் வாடகைக்கு வீடு எடுத்து தங்குகின்றனர். அப்படி வசிப்பவர்களில் ஒருவர் மற்றொரு தொழிற்சாலையில் பணிபுரியும் வட இந்திய தொழிலாளி ஒருவர். தோல் தொழிற்சாலையில் 10 ஆண்டுகள் பணிக்குப் பிறகு அவரது இன்றைய மாத ஊதியம் ரூ 10,000 எனவும் கூறினார். இதில் வாடகைக்கு மட்டுமே ரூ 2,000 போய்விடுகிறது. மனைவி, இரண்டு குழந்தைகள் அவர்களுக்கான உணவு, பராமரிப்பு, மருத்துவம், குழந்தைகளுக்கான கல்வி உள்ளிட்ட தேவைகள் அனைத்தையும் இந்தத் தொகைக்குள் பார்த்துக் கொள்ள வேண்டும்.

இவர்கள் ஊருக்குச் செல்வது அரிதாகவே சாத்தியமாகிறது. ஆண்டிற்கு ஒருமுறையோ அல்லது ஒன்றரை ஆண்டுக்கு ஒரு முறையோதான் செல்கின்றனர். அதற்கு மேல் சென்று வர பொருளாதாரம் அனுமதிக்காது, அப்படியே அனுமதித்தாலும் முதலாளிகள் லீவு தர மாட்டார்கள்.

ராணிப்பேட்டை வட இந்தியத் தொழிலாளர்கள்
சிப்காட் வளாகத்தில் பணிபுரியும் ஆயிரக்கணக்கான வட இந்திய தொழிலாளர்களின் நிலை இதுதான்

சிப்காட் வளாகத்தில் பல்வேறு தொழிற்சாலைகளிலும் பணிபுரியும் சுமார் 5,000 வட இந்திய தொழிலாளர்களின் நிலை இதுதான்.

இந்தியாவில் உலகிலேயே அதிக எண்ணிக்கையில் 35.6 கோடி இளைஞர்கள் உ ள்ளனர் என்று ஐக்கிய நாடுகள் சபை அறிக்கை ஒன்று கூறுகிறது. பெரும்பாலான இளைஞர்களுக்கு அவர்களது கிராமங்களில் அழிக்கப்பட்டு வரும் விவசாய பொருளாதாரத்தில் அற்பக் கூலிக்கான வேலை மட்டுமே கிடைப்பதால் இவர்கள் பெருமளவில் தமிழகம் மற்றும் பிற தொழில் மையங்கள், பெருநகரங்களை நோக்கி படை எடுக்கின்றனர். பெரும்பாலும் தெரிந்தவர்கள் அல்லது உறவினர்கள் மூலமாக ஒருவரைத் தொடர்ந்து மற்றவர்களும் வருகின்றனர்.

“மேக் இன் இந்தியா” என்ற முழக்கத்தின் கீழ் அன்னிய நிறுவனங்களை முதலீடு செய்ய  அழைத்து வந்து இத்தகைய இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகளை அதிகரிக்கப் போகிறேன் என்பது மோடியிசத்தின் சவடால்களில் ஒன்று.

இந்த சவடால் மோடியால் புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்டதல்ல, 1990-களிலிருந்தே 25 ஆண்டுகளாக “அன்னிய நேரடி முதலீடு” என்ற பெயரில் அமல்படுத்தப்பட்டு வரப்படுவதுதான். கூடவே, ‘அன்னிய முதலீட்டை ஈர்க்க தொழிலாளர் நலச்சட்டங்களை கைவிட வேண்டும், தொழிற்சாலைகள் மீதான கண்காணிப்புகளை ஒழித்துக் கட்ட வேண்டும். சுற்றுச் சூழல் சட்டங்களை செல்லாமல் செய்து விட வேண்டும்’ என நாட்டை அன்னிய நிறுவனங்களுக்கு காலனியாக்கும் கொள்கை அமல்படுத்தப்பட்டு வருகிறது. கடந்த 8 மாதங்களில் அதை இன்னும் தீவிரமாக செய்து வருகிறது மோடி அரசு.

இந்த மறுகாலனியாக்கக் கொள்கைள் ஆலைத்துறையிலும், கட்டுமானத் துறையிலும், பிற சேவை நிறுவனங்களிலும் உருவாக்கியிருக்கும் வேலை வாய்ப்பின் குறுக்குவெட்டுதான் ராணிப்பேட்டையில் பணிபுரியும் வட இந்தியத் தொழிலாளர்களின் வாழ்க்கை.

north-indian-workersசிப்காட் பகுதி தொழிற்சாலைகளில் பணிபுரிவோரைப் பற்றிய பதிவேடு கிடையாது. அப்பகுதியில் வசிப்பதற்கான பதிவேடும் கிடையாது. எத்தனை வட இந்திய தொழிலாளர்கள் சிப்காட் பகுதியில் உள்ளனர் என்கிற கணக்கு அரசாங்கத்திற்கே தெரியாது. உழைப்பை மட்டுமே விற்கும் நாடோடிகளாக கொத்தடிமைகளாக மட்டுமே இவர்களது வாழ்க்கை தொடர்கிறது. இவர்கள் நவீன கால கொத்தடிமைகள்.

இவர்களுக்குள்ளே சங்கமோ அமைப்போ எதுவும் கிடையாது. இவர்கள் தனித்தனியாய் இருப்பதை சாதகமாக்கிக் கொண்டு இவர்களிடமிருந்து பணத்தையும் கைபேசிகளையும் உள்ளுர் போக்கிரிகள் சிலர் மிரட்டிப் பறிப்பது சமீப காலமாக அதிகரித்து வருவதால் இவர்கள் வெளியில் நடமாடுவதைக்கூட தவிர்த்து வருகிறார்களாம்.

இவர்களில் ஒருவர் காணாமல் போனாலோ அல்லது அடித்து கொல்லப்பட்டாலோ அல்லது பலர் கொத்துக் கொத்தாய் செத்துப் போனாலோ யாராலும் கண்டு பிடிக்கவோ அடையாளம் சொல்லவோ முடியாது. அரசாங்கம் இவர்களை நிச்சயம் கண்டு கொள்ளப் போவதில்லை. இவர்களாக அமைப்பாக ஒன்று சேர்ந்தாலொழிய இவர்களுக்கு விடிவேதுமில்லை.

ஆலைக்கு வெளியே மக்கள் குடியிருப்பு பகுதிகளில் தொழிலாளர்கள் தங்குவதற்கு வசிப்பிடங்களை முதலாளிகளே உடனடியாக ஏற்பாடு செய்து தரவேண்டும். தொழிலாளர்களை ஆலைக்குள்ளே தங்க வைக்கும் அனைத்து முதலாளிகளையும் கைது செய்யப்பட  வேண்டும்.

தொழிலாளர் சட்டங்கள் அனைத்தையும் காலில் போட்டு மிதித்துவிட்டு கொட்டமடிக்கும் முதலாளிகள், முதலாளிகளுக்கு துணைபோகும் தொழிலாளர் நலத்துறை உள்ளிட்ட அரசு அதிகாரிகள் மற்றும் அரசாங்கம் உள்ளிட்ட இந்த சமூக விரோத பயங்கரவாதக் கூட்டத்தை ஒழித்துக் கட்டாமல் தொழிலாளர்களுக்கு விடிவில்லை.

Ranipet-Murder-2தமது பணியிட மற்றும் வாழும் உரிமைகளுக்காக சங்கமாக திரண்டு ஆயிரக்கணக்கான அமெரிக்கத் தொழிலாளர்கள் 1886-ம் ஆண்டு சிகாகோ நகரில் நடத்திய வேலை நிறுத்தப் போராட்டத்தைப் போன்று தொழிலாளர் வர்க்கம் மீண்டும் எழவேண்டும். உழைக்கும் மக்களையும், இந்த உலகையும் முதலாளித்துவ பேரழிவிலிருந்து காப்பாற்ற வழி காட்ட வேண்டும்.

சிகாகோ எரிமலையாய் சீறட்டும் தொழிலாளி வர்க்கம்! பொங்கி எழும் நெருப்புச் சுனாமியில் அழியட்டும் முதலாளித்துவ பயங்கரவாதம்!

தகவல்
மக்கள் கலை இலக்கியக் கழகம்,
வேலூர்

(படங்கள் இணையத்திலிருந்து எடுக்கப்பட்டவை. விளக்கத்திற்காக மட்டும் பயன்படுத்தப்பட்டுள்ளன)