Tuesday, July 27, 2021
முகப்பு கட்சிகள் சி.பி.ஐ - சி.பி.எம் கடலூர் கந்தசாமி மகளிர் கல்லூரி மாணவிகள் போராட்டம்

கடலூர் கந்தசாமி மகளிர் கல்லூரி மாணவிகள் போராட்டம்

-

ச்சையப்பன் சொத்துக்களை பார்ப்பன ஆதிக்க சாதிக் கூட்டம் தின்று கொழுத்ததை எள் முனையளவாவது தடுத்து ஒடுக்கப்பட்ட சமூகக் குழந்தைகள் கல்வி பெற உருவாக்கபட்ட பச்சையப்பன் அறக்கட்டளையிலும் அதன் கீழ் இயங்கும் 14 கல்வி நிறுவனங்களிலும் கொள்ளை கொடிகட்டி பறக்கின்றது.

cuddalore-girs-students-1கடலூரில் உள்ள கந்தசாமி மகளிர் கல்லூரியில் ( KNC) இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெறுவதில்லை. கேமராக்களை வைத்து மாணவிகளை வேவு பார்ப்பது, கட்டிட நிதி பெற்று கழிவறைகள் கூட கட்டாமல் இன்னொரு புறம் ஓட்டுக் கட்சி தலைவர்களை அழைத்து அரசியல் நிகழ்ச்சி நடத்துவது, முற்பகல் கல்லூரிக்கான மாணவர்கள் சேர்க்கையின் போது பொது பட்டியல் மட்டும் வெளியிட்டுவிட்டு, வெய்டிங் லிஸ்டு வெளியிடாமல், காசுக்கு விற்பனை செய்வது என்று முறைகேடுகள் நிரம்பி வழிகின்றன.

“மாலை நேர சுயநிதி கல்லூரியின் மூலம் மாணவிகள் சேர்க்கையை அதிகரித்து கொள்ளையடிப்பதையே குறிக்கோளாக கொண்டிருக்கும் KNC கல்லூரி முதல்வர் மல்லிகா சந்திரன் மீது நடவடிக்கை எடு” என்று போர்க்கொடி தூக்கிய கணிதத்துறை பேராசிரியை சாந்தியை பணியிடை மாற்றம் செய்துள்ளது பச்சையப்பன் அறக்கட்டளை கும்பல்.

பேராசிரியை சாந்தியின் பணியிடை மாற்றத்தை ரத்து செய்ய வேண்டியும், ஊழலால் நாற்றமெடுத்து நாறுகின்ற பச்சையப்பன் அறக்கட்டளையை அரசுடைமையாக்கக் கோரியும் இங்கே மாணவிகள் இரண்டு மாதங்களாக பல்வேறு வகையில் போராடி வருகின்றனர்.

அதன் தொடர்ச்சியாக 27.01.2015 அன்று காலை சுமார் 10 மணியளவில் 300 மாணவிகள் மேற்கண்ட கோரிக்கைகளை முன்வைத்து இரண்டு மணி நேரம் முழக்கமிட்டு ஒரு மணி நேரம் வகுப்பு புறக்கணிப்பு செய்து பிறகு வகுப்புக்கு சென்றனர்.

பின்னர் தலா பத்து ரூபாய் என்று நிதி வசூல் செய்து இந்திய மாணவர்கள் சங்கம் என்ற பெயரில் 24 மணி நேர உள்ளிருப்புப் போராட்டம் என்று நுழைவு வாயிலில் பேனர் கட்டி விட்டு மாலை 2 மணிக்கு மேல் மாணவிகள் தாங்களாகவே  உள்ளிருப்பு போராட்டம் தொடங்கினர்.

இரவு போராட்டம் தொடங்கியதும் கடலூர் NT போலீசார் வந்து, “இரவு நேரங்களில் போராட்டம் நடத்துற உங்களையல்லாம் எவன் கல்யாணம் செஞ்சுக்குவான்? ஊர்ல எவனாவது உங்களை குடும்பப் பெண் என்று மதிப்பார்களா? ஒழுங்கா எல்லோரும் வீட்டுக்கு ஓடி விடுங்க” என வக்கிர புத்தியுடன் மிரட்டியது.

“அதெல்லாம் எங்களோட பிரச்சனை அதை நாங்க பார்துக் கொள்கிறோம். முதலில் நீங்க எங்க கல்லூரியை விட்டு வெளியே போங்க” என மாணவிகள் எச்சரித்து வெளியேற்றினார்கள்.

மாணவிகளோடு இணைந்து போராட வந்த பெற்றோர்களிடம், “எஃப்.ஐ.ஆர் போடப் போறோம். உன் பிள்ளைப் படிப்பு பாழாய் போக போகுது” என மிரட்டி விரட்டி அடித்தனர். அவர்கள் கொண்டு வந்த உணவு பொட்டலங்களை மாணவிகளுக்கு கொடுக்க விடாமல் பிடுங்கி சாக்கடையில் வீசினார்கள்.

“வீட்டில் சொல்லாமல் வந்துவிட்டேன், அதனால் வீட்டுக்கு போகிறேன்” எனக் கூறிய ஒரு மாணவியிடம் ஒரு பெண் எஸ் ஐ, “என்னடி உன்னோட பாய்பிரண்ட பார்க்க போறியா. உன்னுடைய செல்போனை கொடு, பாய்பிரண்ட் நம்பர் எடு” என்று பலபேர் முன்னிலையில் அந்த மாணவியை அசிங்கப்படுத்தினார். அந்த மாணவி அழுது கொண்டே போராடும் மாணவிகளோடு இணைந்து கொண்டார்.

பின்னர் RDO ஷர்மிளா வந்து போராடும் மாணவிகளை பார்த்து, “உங்களுக்கு எங்களால பாதுகாப்பு வழங்க முடியாது ஆதலால் எல்லோரும் கலைந்து செல்லுங்கள்” என்றார்.

இதற்கு மாணவிகள், “கல்லூரியை பாதுகாக்க போராடும் நாங்கள் எங்களையும் பாதுகாத்துக் கொள்ள மாட்டோமா? எங்களின் கோரிக்கையை நிறைவேற்ற முயற்சி எடுத்தால் போதும்” என்று முகத்தில் அறைந்தாற்போல் பதில் அளித்தனர்.

இச்சம்பவத்தை கேள்விப்பட கடலூர் பகுதி புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி தோழர்கள், மனித உரிமை பாதுகாப்பு மைய தோழர் கடலூர் மாவட்ட இணை செயலாளர் செந்தில்குமார் தலைமையில் உள்ளிருப்பு போராட்டம் நடத்தும் மாணவிகளை சந்திக்க சென்றனர்.

போராடிக் கொண்டு இருந்த மாணவிகளை வக்கிரமாக திட்டிக்கொண்டு இருந்த போலீசும், நிர்வாகத்திற்கு ஆதரவான ரவுடிகளும் தோழர்களைக் கண்டதும், “நீங்க எதற்கு இங்கு வந்திங்க” என்று தோழர்களை வெளியேற்றுவதில் கவனமாக இருந்தார்கள்.

தோழர்கள் போலீசிடம், “நாங்கள் ஒரு ஜனநாயக அமைப்பு. இப்படி போராடுகிற மாணவிகளை அச்சுறுத்தும் நோக்கத்தில் நிறைய போலீசை குவிப்பதும், உணவு கொண்டுவந்த உறவினர்களை தடுப்பதும் தவறு” என்றும் அவர்கள் கொண்டு வந்த ஆட்டோவை விடுவிக்க கோரியும் டி.எஸ்.பி-யிடம் பேசினர்.

அப்போது, பா.ஜ.கவைச் சேர்ந்த வழக்குரைஞர் முழு குடிபோதையில், “எங்க அண்ணன் பொண்ணு உள்ள இருக்கிறாள், அவள வெளிய அனுப்புங்க” என்று கூறிக்கொண்டு மாணவிகளை கேவலமாக திட்டிக்கொண்டு இருந்தார்.

இதை பார்த்த தோழர்கள், “அவர்கள் அவர்களுடைய கல்லூரிக்காகதானே போராடுகிறார்கள். போராடும் மாணவிகளை இப்படி அசிங்கமாக பேசலாமா” என்று கேட்டவுடன்,

“உங்க வீட்டு பொண்ணாயிருந்தா இப்படி விடுவீங்களா” என்று கேட்டு விட்டு, அந்த நேரத்தில் வெளியேறிக் கொண்டிருந்த சில மாணவிகளின் ஒரு மாணவியை பார்த்து “இப்பவே இப்படியெல்லாம் போராட்டம் நடத்துறது உங்களுக்கு அசிங்கமா இல்லையா” என்று கேட்டு அங்கு சலசலப்பை ஏற்படுத்தினார்.

அங்கு வந்த பத்திரிக்கை நிருபர்கள் நடக்கின்ற எந்த சம்பவத்தையும் புகைப்படமோ, வீடியோ பதிவோ செய்யாமல் போலீசோடு சேர்ந்து நின்று கொண்டு இருந்தனர். “போராடும் மாணவிகளை போலீசு கட்டாயப்படுத்தி வெளியேற்றுவதையும் அவர்களை தரக்குறைவாக பேசுவதையும் பதிவு செய்யாமல் நிற்கிறீர்களே” என்று தோழர்கள் கேட்டதற்கு ஒரு நிருபர் போலிசுக்கு ஆதரவாக பேசினார். மற்றவர்கள் செயலற்று நின்று கொண்டிருந்தனர்.

போலீசுகாரர்கள் ஒரு மாணவியின் தந்தையிடம் , “உங்க பெண்ணை போராட்டத்துக்கு அனுப்பியிருககீங்களே, நாளைக்கு அந்த பெண்ணை எவராவது மதிப்பார்களா” என்று கேட்டுக்கொண்டு இருக்கும் போது அந்த மாணவி போலீசிடம், “எதுவாக இருந்தாலும் எங்கிட்ட பேசுங்க. எங்க அப்பாவ மிரட்டுற வேல வேணாம். FIR போடணும்னா போட்டுக்கோங்க” என்று கூறி, “நைனா நீ தைரியமா வீட்டுக்குப் போ. நான் மாணவிகளோடுதான் இருக்க்கிறேன்” என்று சொல்ல, “அந்த மாணவி திமிரா பேசுகிறது” என ஆணாதிக்க திமிரோடு கூறினார், போலீஸ் அதிகாரி.

அதற்கு நம் தோழர்கள், “இதில் எந்த திமிர்த்தனமும் இல்லையே, அவர்கள் உரிமைக்காக போராடுகிறார்கள். இரவு நேரத்தில் பெண் காவலர்கள் வீட்டுக்கு போகாமல் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகிறார்கள். இவர்களையும் திமிர் பிடித்தவர்கள் என்று சொல்வீர்களா” என்று கேட்டவுடன் பிறகு அமைதியானார்.

பிறகு உள்ளிருப்பு போராட்டம் நடத்திய மாணவிகளை பு மா இ மு தோழர்கள் தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு, “உங்களுடைய போராட்டம் மிகச் சரியானது. காவல் துறையின் அடக்குமுறைகளைக் கண்டு பயந்து விடவேண்டாம். ‘பெண்கள் இரவு நேரங்களில் போராடினால் இவர்களை யார் திருமணம் செய்து கொள்வார்கள், இவர்களை யார் மதிப்பார்கள், இவர்களெல்லாம் வீட்டிற்கு அடங்காதவர்கள்’ என்றெல்லாம் போலீசு பேசுவதைக் கேட்டு துவண்டு விடவேண்டாம். ஆர்.டி.ஓ. ஒரு பெண், அவர் இரவு நேரத்தில் பணிபுரிகிறார், பெண்கள் இரவுக் காவலர்களாக வேலை செய்கிறார்கள், இவர்களையும் தவறானவர்கள் என்று போலீசு பேசுவார்களா ? எதைப் பேசினால் நீங்கள் போராட்டத்தைக் கைவிடுவீர்கள் என்று புரிந்து பேசுகிறார்கள்.

இந்தப் பிரச்சனை போன்று எல்லா கல்லூரியிலும் இருக்கிறது. இதற்கு முதல் காரணம் தனியார்மயப் பொருளாதாரக் கொள்கைதான். அரசுடைமையாக்கினால்தான் இந்த பிரச்சனைகளுக்கு தீர்வு காண முடியும். நீங்கள் கல்லூரியில் உறுதியாக நின்று உள்ளிருப்பு போராட்டத்தை தொடருங்கள்,வெளியில் மக்களிடம் இந்த போராட்டத்தை நாங்கள் எடுத்து செல்கிறோம்.

பச்சையப்பன் அறக்கட்டளையை அரசுடமையாக்கவும், பேராசிரியர் சாந்தியின் பணியிடை மாற்றத்தை இரத்து செய்யவும் தொடர்ந்துப் போராட பு மா இ மு உங்களோடு இணைந்து நிற்கும்” என்று மாணவிகளை உற்சாகப் படுத்திப் புரட்சிகர வாழ்த்து கூறினார்கள். இதை லவ்டு ஸ்பீக்கரில் ஒலிபரப்பி அனைத்து மாணவிகளும் ஆர்வமாகக் கேட்டனர்.

அன்று இரவு 2 மணி அளவில் பெண் போலீசு கல்லூரிக்ககுள்ளே சென்று தூங்கிய மாணவிகளை எழுப்பி உங்களுடைய தொலைபேசி எண்ணை கொடுங்க என்று கேட்டதுக்கு மாணவிகள் கொடுக்கவில்லை என்றதும் அவர்கள் புத்தகப் பையை எடுத்து அதை கீழே கொட்டி அதில் இருந்த மாணவிகளின் அடையாள அட்டையில் உள்ள விவரங்களை எடுத்துக் கொண்டனர்.

இச்சம்பவத்துக்கு பிறகு மாணவிகள் பு.மா.இ.மு ஆதரவுடன் அனைவரும் ஒன்று சேர்ந்து போலீசுக்கு எதிராக வரண்டாவில் வந்து முழக்கமிட்டனர். இதனால் போலீசு பின்வாங்கியது.

போராட்டம் நடந்து கொண்டிருந்த போது இரவே  சுவரொட்டி தயாரித்து நகர பேருந்துகளில் போலீசையும், ரவுடிகளையும் அம்பலப்படித்து பரவலாக ஒட்டப்பட்டது.

cuddalore-knc-poster 28/01/15 காலை 10 மணிக்கு சி.பி.ஐ(எம்)-ஐச் சேர்ந்த ரமேஸ் பாபு  வந்து, “நாம் அறிவித்தது போல 24 மணிநேரம் முடிந்துவிட்டது. நாம் போராட்டத்தை முடித்துக் கொள்ளலாம்” என்று மாணவிகளின் தன்னெழுச்சியான போராட்டத்தை முடித்து வைக்க முயற்சித்தார்.

மாணவிகள், “நமது போராட்டத்தின் விளைவு என்னவென்றே தெரியாமல் எப்படி போராட்டத்தை முடித்துக் கொள்வது” என்று கேட்டதற்கு “போராட்டத்தை முடித்தால் தான் என்னவென்று தெரியும்” என்று மாணவிகள் போலீசையும் கல்லூரி நிர்வாகத்தையும் எதிர்கொண்டு நடத்திய போராட்டத்தை முடித்து வைத்து நிர்வாகத்துக்கு உதவி செய்தார்.

மாணவிகள் அடுத்த கட்டமாக எனனசெய்வது என்று புரியாமல் இருந்த போது போலிசும், ஓட்டுக் கட்சி  SFI யும் இணைந்து மாணவிகளை கல்லூரியை விட்டு வெளியேற்றியது.

அப்போது கடலூர் பேருந்து நிலையத்தில் போஸ்டர் ஒட்டிக் கொண்டிருந்த 2 தோழர்களை காவல் துறை கைது செய்து, “பேருந்தில் போஸ்டர் ஓட்ட அனுமதி வாங்கினீர்களா” என்று கேட்டனர். அதற்குத் தோழர்கள் “மூலம், பவ்த்ரம் ஆண்மைக் குறைவு, ஆபாசப் போஸ்டர்கள் இவற்றை எல்லாம் உங்களிடம் அனுமதி வாங்கித்தான் ஓட்டுகிறார்களா” என்று கேட்டதற்கு “தேவை இல்லாமல் பேசாதே” என முறைத்தது போலீசு. பேருந்து நடத்துனர் இருவரிடம் புகார் வாங்கி தோழர்கள் மீது போலீசு வழக்கு போட்டு KNC ,பச்சையப்பன் அறக்கட்டளைக்கு சாதகமாக நடந்து கொண்டு பின்னர் தோழர்களை ஜாமீனில் விடுவித்தது திருப்பாப் புலியூர் போலீசு.

மீண்டும் KNC மாணவிகளை தொடர்பு கொண்டு அனைத்துக் கல்லூரி மாணவர்களையும் ஒன்றிணைத்து பேராசிரியர் சாந்தியின் பணிநீக்கத்திற்கு எதிராகவும், கொள்ளைக் கூடாரமாக உள்ள பச்சையப்பன் அறக்கட்டளையை அரசுடமையாக்கவும் தொடர்ந்து போராடுவதென முடிவு செய்யப்பட்டுள்ளது.

இவண்
புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி
கடலூர்
தொடர்புக்கு:9791776709

  1. நாட்டில் இது போல பல ஆயிரக்கணக்கான தன்னெழுச்சியான போராட்டங்கள் நடந்து கொண்டு தான் இருகின்றன. மாணவிகளின் இத்தகையப் போராட்டங்கள் மெச்சத் தகுந்தது. இப்படிப்பட்ட தன்னெழுச்சியான போராட்டங்களின் வீச்சை சரியான அமைப்பும் தலைமையும் எடுத்துக் கொள்ளாமல் விட்டால் காயடித்து விடுவார்கள் இந்த அதிகார வர்க்க கைகூலிகள்.

    தோழர்கள் சரியான நேரத்தில் அம்மாணவிகளின் பிரச்சினையை எடுத்தாண்டது அருமையான நிகழ்வு.

    தோழர்களுக்கு நன்றி.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க