privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புபார்ப்பனிய பாசிசம்சிறுபான்மையினர்காவிப் பாசிசமும் கார்ப்பரேட் பாசிசமும் மோடியின் இரு கண்கள்

காவிப் பாசிசமும் கார்ப்பரேட் பாசிசமும் மோடியின் இரு கண்கள்

-

மறுகாலனியத் தாக்குதலும் இந்துவெறியர்களின் கொட்டங்களும் ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள்

‘வளர்ச்சி’,’ முன்னேற்றம்’ என்று கூறிக் கொண்டு நாட்டின் மூலவளங்களைப் பன்னாட்டு நிறுவனங்களுக்குத் தாரை வார்ப்பது, கூடுதலாக 12 அணு உலைகளை நிறுவி மக்களை நிரந்தர ஆபத்தில் வைப்பது, ஏழை மக்களுக்கு வழங்கப்படும் மண்ணெண்ணெய் உள்ளிட்ட அனைத்து மானியங்களையும் வெட்டி வயிற்றிலடிப்பது, காப்பீடு துறையில் அந்நிய முதலீடு, நிலக்கரி வயல் ஒதுக்கீடு தொடர்பான மசோதாக்களைக் கொல்லைப்புறமாக அவசரச் சட்டத்தின் மூலம் நிறைவேற்றியிருப்பது – என நாட்டின் மீதும் மக்களின் மீதும் பொருளாதார ரீதியாகப் பயங்கரவாதத் தாக்குதல்களைக் கட்டவிழ்த்துவிடும் அதேவேளையில், இந்துத்துவ செயல்திட்டத்தைத் தீவிரமாக்கி, பார்ப்பனப் பாசிச மேலாதிக்கத்தை நிலைநாட்ட வெறிபிடித்து அலைகிறது மோடி அரசு.

கட்டாய மதமாற்றம்
ஆசை காட்டியும் அச்சுறுத்தியும் ஏழை முஸ்லிம்களை கட்டாய மதமாற்றம் செய்யும் இந்துவெறி குண்டர்களின் கொட்டம்.

இந்தித் திணிப்பு, சமஸ்கிருதத் திணிப்பு, குரு உத்சவ், புராணக் குப்பைகளைப் பாடத் திட்டத்தில் சேர்ப்பது, பகவத் கீதையைத் தேசிய நூலாக அறிவிக்கத் துடிப்பது, சவப்பெட்டி ஊழல் புகழ் முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் பிறந்தநாள் என்பதால், கிறிஸ்துமஸ் தினத்தை ‘நல்லாட்சி’த் தினமாகக் கொண்டாட வேண்டுமென்று உத்தரவிட்டிருப்பது, கிறிஸ்துமஸ் தினத்தன்று நவோதயா மற்றும் சி.பி.எஸ்.இ. பள்ளிகள் விடுமுறையின்றி இயக்கப்பட்டு, அன்று மாணவர்களுக்கு வாஜ்பாய் குறித்த கட்டுரை போட்டிகளை நடத்த வேண்டும் என்று மைய அரசின் மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகம் உத்தரவு பிறப்பித்திருப்பது என்பதோடு, தாய் மதத்துக்குத் திரும்புதல் என்ற பெயரில் கட்டாய மத மாற்றத்தையும் ஆளும் இந்துவெறி பாசிச கும்பல் அரங்கேற்றி வருகிறது. சிறுபான்மை மக்களுக்கு எதிராக நஞ்சைக் கக்குவதோடு, தொடர்ந்து தாக்குதல்களையும் நடத்திவருகிறது.

இந்து மதத்துக்குச் சிறுபான்மை மக்களைச் சேர்க்கும் “கர் வாபஸி” எனும் நிகழ்ச்சிகளை நடத்தி ஆக்ராவில் ஏறத்தாழ 200 ஏழை முஸ்லிம்களை ஆர்.எஸ்.எஸ். இன் அடியாள் படையான பஜ்ரங்தளம் கட்டாய மதமாற்றம் செய்துள்ளது. ரேசன் கார்டு, ஆதார் அட்டை, உதவித் தொகை, போலீசுத் தொல்லையிலிருந்து பாதுகாப்பு என ஒருபுறம் ஆசை காட்டியும், மறுபுறம் குடியிருக்கும் இடத்தைவிட்டுக் காலி செய்து விடுவோம் என மிரட்டியும் நடத்தப்பட்ட கட்டாய மதமாற்றம் இது. இது போல குஜராத்தின் வல்சாத் பகுதியிலும், கேரளத்தின் ஆலப்புழையிலும் கட்டாய மதமாற்ற நிகழ்ச்சிகளை விசுவ இந்து பரிசத் நடத்தியுள்ளது. அலிகாரிலுள்ள கிறித்துவர்களை கிறிஸ்துமஸ் தினத்தில் மதமாற்றம் செய்யப் போவதாக தர்ம ஜக்ரான் மன்ஞ் எனும் இந்து வெறி அமைப்பும், அதேநாளில் ஏறத்தாழ 5000 கிறித்துவர்களையும் முஸ்லிம்களையும் மதமாற்றம் செவோம் என்று பா.ஜ.க. நாடாளுமன்ற உறுப்பினரான ரவுடி சாமியார் ஆதித்யநாத், ஆர்.எஸ்.எஸ். தலைவர்களுள் ஒருவரான ராஜேஸ்வர் சிங் ஆகியோர் பகிரங்கமாக அறிவித்துள்ளனர்.

கடந்த நவம்பர் இறுதியில் பிரதமர் மோடி நாகாலாந்துக்குப் பயணம் செய்தபோது, நாடெங்கும் தொடரும் கிறித்துவர் மீதான தாக்குதலைத் தடுத்து நிறுத்துமாறு கிறித்துவ சபைகளின் சார்பில் மனு அளிக்கப்பட்டது. அடுத்த நாளே டெல்லியிலுள்ள செயிண்ட் செபாஸ்டியன் தேவாலயம் தாக்கப்பட்டுத் தீயிடப்பட்டுள்ளது. டெல்லி மட்டுமின்றி, ஜார்கண்ட், கர்நாடகா, கேரளா, சட்டிஸ்கர், உ.பி., தமிழ்நாடு, ம.பி., பஞ்சாப் முதலான மாநிலங்களிலும் கிறித்துவ தேவாலயங்கள் தாக்கப்பட்டுள்ளன. சட்டிஸ்கரில் கிறித்துவ குடும்பங்களுக்கு ரேஷனில் உணவுப் பொருட்கள் வழங்கப்படாமல் இரு மாதங்களுக்கு இழுத்தடிக்கப்பட்டுள்ளது. கிறிஸ்துமஸ் பாடல்களைப் பாடிப் பிரச்சாரம் செய்வதற்குப் பல கிராமங்களில் தடை விதிக்கப்பட்டுள்ளதோடு, கிறித்துவர்கள் இக்கிராமங்களில் நுழைவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. குஜராத்தில் 100 கிறித்துவர்களை விசுவ இந்து பரிசத் கட்டாய மதமாற்றம் செய்துள்ளது.

தாக்கப்பட்ட தேவாலயம்
பார்ப்பன கும்பலின் நிகழ்ச்சி நிரலின்படி, இந்துவெறி குண்டர்களால் தாக்கப்பட்டு தீயிடப்பட்டுள்ள டெல்லி செயிண்ட் செபாஸ்டியன் தேவாலயம்

பாபர் மசூதி இடிப்பு தொடர்பாக அமைக்கப்பட்ட லிபரான் கமிசனின் குற்றவாளிகள் பட்டியலில் இருப்பவரான இந்துவெறி வாஜ்பாயிக்கும், இந்து மகாசபை நிறுவனர் மாளவியாவுக்கும் மோடி அரசு பாரத ரத்னா விருது வழங்குகிறது. தமிழகத்தில் பெருமாள் முருகன் எழுதிய “மாதொரு பாகன்” நாவலை இந்துவெறிக் கும்பல் எரித்து கண்டனம் தெரிவித்துக் கொட்டமடிக்கிறது. அமீர்கானின் “பீகே” படத்தைத் தடைசெய்ய வேண்டுமென இன்னுமொரு இந்துத்துவ கும்பல் புறப்பட்டுள்ளது. சனாதன தர்மத்தை நிலைநாட்டவே காந்தியைச் சுட்டுக் கொன்ற இந்துவெறியன் கோட்சேவுக்கு தேசபக்தர் என்று முலாம் பூசி, உ.பி.யின் மீரட் நகரில் கோட்சேவுக்குச் சிலை அமைக்க இந்துவெறி கும்பலால் அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. கோட்சே சிலைகளைத் தமிழகத்தின் மாவட்டத் தலைநகரங்களில் அமைக்கப் போவதாக தமிழக இந்து மகாசபை தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. கோட்சேவுக்குச் சிலை வைத்தால் என்ன தவறு என்று திமிராகக் கேட்கிறார், இந்துவெறி அர்ஜுன் சம்பத். பெரியாரைச் செருப்பால் அடிப்போம் என்று சொன்ன இந்துவெறி ஹெச்.ராஜா பெரியாரும் அண்ணாவும் தமிழகத்தில் பிறந்தது தவறு என்று மீண்டும்  திமிருடன் கொக்கரிக்கிறார். பா.ஜ.க. நாடாளுமன்ற உறுப்பினரான இந்துவெறி சாத்வி நிரஞ்சன் ஜோதி, ராமனை ஏற்காதவர்கள் முறைதவறிப் பிறந்தவர்கள் என்று திமிராகப் பேசியுள்ளார். அண்மையில் பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தின் விழா ஒன்றில் பேசிய சு.சாமி, பள்ளி-கல்லூரி வரலாற்றுப் பாடங்களில் அக்பர், பாபர் போன்ற மொகலாய மன்னர்களின் பாடங்களை நீக்கிவிட்டு இந்து மன்னர்கள் பற்றி அதிகம் கூறப்பட வேண்டும், மசூதிகளை இடித்துவிட்டு அங்கு இந்து கோயில்களைக் கட்ட வேண்டும். பள்ளிகளில் சமஸ்கிருதம் கட்டாயப் பாடமாக்க வேண்டும், மதமாற்றத் தடைச் சட்டம் கொண்டுவர வேண்டுமென்று நஞ்சைக் கக்கியுள்ளார்.

இப்படி அடுத்தடுத்து அதிரடியான நடவடிக்கைகளையும், திமிர்ப் பேச்சுக்களையும் இந்துத்துவப் பரிவாரங்கள் ஏதோ உணர்ச்சி வேகத்தில் செய்வதாகக் கருத முடியாது. இவைதான் ஆர்.எஸ்.எஸ். பார்ப்பன கும்பலின் நிகழ்ச்சிநிரலாக உள்ள செயல்திட்டங்கள். மேலும், இது மறுகாலனியத் தாக்குதலைத் திசைதிருப்புவதற்கான கருவியாகவும் பயன்படுகிறது. ஆனால், இந்துத்துவ நிகழ்ச்சிநிரலை களத்தில் நின்று முறியடிக்கும் நோக்கம் எதுவும் எதிர்க்கட்சிகளிடம் இல்லை.

சாத்வி நிரஞ்சன் ஜோதி
“ராமனை ஏற்காதவர்கள் முறைதவறிப் பிறந்தவர்கள்” என்று திமிராகப் பேசும் நாடாளுமன்ற உறுப்பினரான இந்துவெறி ஆ.

இந்துவெறி சாத்வி நிரஞ்சன் ஜோதியின் திமிர்ப் பேச்சையும், மதமாற்ற நடவடிக்கைகளையும் எதிர்த்து, எதிர்க்கட்சிகள் சாத்வியைப் பதவி நீக்கக் கோரி முழக்கமிட்டு நாடாளுமன்றத்தை முடக்கின. பிரதமர் பதிலளிக்க வேண்டுமென்று வலியுறுத்தின. ஆனால், பிரதமர் மோடியோ நாடாளுமன்றத்துக்கு வருவதேயில்லை; வந்தாலும் வாயைத் திறப்பதுமில்லை. மதமாற்ற நிகழ்ச்சிகளில் மைய அரசுக்கோ பா.ஜ.க.வுக்கோ எவ்வித தொடர்பும் இல்லை என்று ஒருபுறம் மறுத்துவிட்டு, மறுபுறம், கட்டாய மதமாற்றத் தடைச்சட்டம் கொண்டுவரத் தயார், எதிர்க்கட்சிகள் ஆதரிக்கத் தயாரா என்று நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் வெங்கையா நாயுடு மடக்கவும், எதிர்க்கட்சிகள் அடங்கிப்போவிட்டன.

இப்படித்தான், இதற்கு முன்பு காஷ்மீருக்குச் சிறப்பு அந்தஸ்து அளிக்கும் சட்டப்பிரிவு 370-ஐ நீக்க வேண்டுமென்ற பா.ஜ.க.வின் கொள்கை மீது விவாதங்கள் கிளப்பப்பட்டன. இத்தகைய இந்துத்துவ செயல்திட்டங்களை ஆளும் இந்துவெறி பாசிஸ்டுகள் அடுத்தடுத்து கொளுத்திப் போடுவதும், அதை வைத்து விவாதங்களைத் தூண்டி நடத்துவதும், நாட்டின் கவனத்தை இதை நோக்கி இழுப்பதும், பிரதமர் கருத்து கூற வேண்டும் என எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்தில் குரலெழுப்புவதும், தமது கையாலாகாத்தனத்தை மூடிமறைக்கும் தந்திரத்துடன் இத்தகைய நடவடிக்கைகள் மூலம் பா.ஜ.க.வை முடக்கிவிட்டதைப் போன்ற தோற்றத்தை எதிர்க்கட்சிகள் ஏற்படுத்துவதும் நடக்கிறது. பிறகு புதியதொரு இந்துவெறி நடவடிக்கையை ஆளுங்கும்பல் முன்தள்ளுவதும், அதன் பிறகு அதன் மீது விவாதம், பிரதமர் கருத்து கூறவேண்டும், நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் கோருவதும்  எனத் திருகுசுழல் போல இவை தொடர்ந்து கொண்டிருக்கின்றன.

இருப்பினும் மோடி யோக்கியவானைப் போலவும், ‘வளர்ச்சி’யைச் சாதிக்க உழைத்து வருவதாகவும், சாத்வி போன்றவர்கள்தான் இந்துவெறியோடு அலைவதாகவும் ஒரு கருத்துப் படிமம் திட்டமிட்டே உருவாக்கப்படுகிறது. இப்படித்தான் இந்துவெறி வாஜ்பாயி மிதவாதி போலவும், அத்வானியைத் தீவிரவாதி போலவும், பின்னர் அத்வானி மிதவாதி போலவும் மோடியைத் தீவிரவாதி போலவும் ஒரு தோற்றத்தை ஊடகங்கள் ஏற்படுத்தின. இப்போது இந்துவெறி பயங்கரவாதி மோடியை மிதவாதியாக்கி அமித்ஷாவை அரசியல் சாணக்கியராக்கி, பிற இந்துவெறியர்கள்தான் தீவிரவாதிகள் போலவும் ஒரு தோற்றத்தை ஏற்படுத்துகின்றன.

இந்துவெறியன் ஹெச்.ராஜா.
“பெரியாரைச் செருப்பால் அடிப்போம்! பெரியாரும் அண்ணாவும் தமிழகத்தில் பிறந்தது தவறு!” என்று திமிருடன் கொக்கரிக்கும் இந்துவெறியன் ஹெச்.ராஜா.

“பிரதமர் நரேந்திர மோடி, பா.ஜ.க.வின் துணைப் பரிவாரங்களாகத் தம்மைக் கருதிக் கொள்ளும் சில அமைப்புகளுக்கு மூக்கணாங்கயிறு கட்டி, தார்க்குச்சி போடும் வேளை வந்துவிட்டது. உடனே இதைச் செய்யாவிட்டால், கட்சிக்கும் ஆட்சிக்கும் அயல் எதிரிகளே தேவையில்லை. இந்த அனுகூல சத்ருக்களே போதும்” என்று இதையே “துக்ளக்” சோ  தந்திரமாகக் கூறுகிறார். (துக்ளக் 10.12,2014) “இதுவா நீங்கள் கூறிய வளர்ச்சி?” என்று புலம்புகிறது ஆனந்த விகடன். கருணாநிதியோ, “மதச்சார்பற்ற அரசாகத் தொடர்ந்து நடைபெற இனியாவது பிரதமர் மோடி நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று தி.மு.க. சார்பில் வலியுறுத்துவதாக” மொன்னையாக அறிக்கை வெளியிட்டுக் கொண்டிருக்கிறார். மதச் சார்பின்மை பேசும் தி இந்து, எக்னாமிக் அண்டு பொலிடிகல் வீக்லி முதலானவை கூட, “பிரதமர் தனது கட்சிக்குக் கட்டுப்பட்டவராக இருக்கலாம்; ஆனால், அவர் நாட்டின் அரசுக்குத் தலைமைப் பொறுப்பில் உள்ளவர் என்பதால், அவர் முன்வந்து இந்துத்துவ நடவடிக்கைகளைத் தடுக்க வேண்டும்” என்று திருடனிடமே வேண்டுகோள் விடுக்கும் நிலைக்கு தரம் தாழ்ந்து கிடக்கின்றன. மோடியைப் பிரித்து ‘வளர்ச்சி’யை முன்னெடுத்துச் செல்லுமாறு கோருவதன் மூலம் இரட்டை மோசடிகளை – மறுகாலனியத் தாக்குதலை ‘வளர்ச்சி’ என்று நியாயப்படுத்தும் மோசடியையும், இந்துவெறியர்களை மோடி அடக்கி வைப்பார் என்று நம்பவைக்கும் மோசடியையும் இவர்கள் திட்டமிட்டே செய்து வருகின்றனர்.

இதைச் சாதகமாக்கிக் கொண்டு, மறுகாலனியத் தாக்குதல்களால் ஆத்திரம் கொள்ளும் மக்களின் வெறுப்பை இந்துத்துவ திட்டங்களைச் செயல்படுத்துவதற்கு எதிரான கருத்து மோதலாக மடைமாற்றிவிடுவதில் மோடி கும்பல் குறியாக இருக்கிறது. ஒரே கல்லில் இரண்டு மாங்காய் என்பதைப் போல, ஒரே நேரத்தில் இரண்டு நோக்கங்களையும் மோடி கும்பல் நிறைவேற்றிக் கொள்கிறது. காவிப் பாசிசமும் கார்ப்பரேட் பாசிசமும் மோடியின் இரண்டு கண்களாக உள்ளன. ஒரு நாணயத்தின் இரு பக்கங்களைப் போல கார்ப்பரேட் பாசிசமும் காவிப் பாசிசமும் இணைந்துள்ளன. மறுகாலனியாதிக்க கொள்ளையைத் தீவிரமாகச் செயல்படுத்திவரும் அதேவேளையில், இந்துவெறியர்களின் நடவடிக்கைகளை மட்டும் விவாதப் பொருளாக்கி, இந்த விவகாரத்தைத் திட்டமிட்டே திசைதிருப்பும் மோடி கும்பலின் சூழ்ச்சிக்கு எதிர்க்கட்சிகள் தெரிந்தே துணை போகின்றன. இதைச் சாதகமாக்கிக் கொண்டு, நாங்கள் ஆட்சியதிகாரத்தில் இருக்கிறோம், என்ன வேண்டுமானாலும் செய்வோம் என்று காவிக்கூட்டம் திமிருடன் செயல்படுகிறது. இந்துத்துவப் பரிவாரங்கள் மதவெறியைக் கைவிடப்போவதுமில்லை, முதலாளித்துவ ஊடகங்கள் வேண்டுகோள் விடுப்பதைப் போல ‘வளர்ச்சி’யைச் சாதிக்கும் பொருட்டு அவர்களை மோடி அரசு தடுக்கப் போவதுமில்லை என்பதேயே தீவிரமாகிவரும் மறுகாலனியத் தாக்குதலும் காவிக்கூட்டத்தின் கொட்டங்களும் நிரூபிக்கின்றன.

– குமார்
________________________________________
புதிய ஜனநாயகம், ஜனவரி 2015
________________________________________