Tuesday, September 22, 2020
முகப்பு உலகம் ஆசியா கொரியன் ஏர் 'ரைட் ராயல்' சீமாட்டிக்கு ஒராண்டு சிறை

கொரியன் ஏர் ‘ரைட் ராயல்’ சீமாட்டிக்கு ஒராண்டு சிறை

-

பொது இடத்தில் மன்னிப்பு கேட்கும் சோ இந்த வழக்கில் தப்பிக்க நிறைய சதிகள் செய்தார்.
பொது இடத்தில் மன்னிப்பு கேட்கும் சோ இந்த வழக்கில் தப்பிக்க நிறைய சதிகள் செய்தார்.

ந்த செய்தி பின்னணியை அறிய இதன் முதல் பாகமான “பருப்பு பாக்கெட்டும் கொரிய மேட்டுக்குடி திமிரும்” படித்து விட்டு வாருங்கள்.

 “nut rage” – பருப்பு வன்முறை என்று ஊடகங்களில் பிரலமான கொரிய சீமாட்டி சோ ஹைனுக்கு நீதிமன்றம் 12.02.15 அன்று ஓராண்டு சிறை தண்டனை விதித்துள்ளது. கொரியன் ஏர் விமான நிறுவனத்தின் தலைவரின் மகளான சோ சென்ற வருடம் டிசம்பர் 5-ம் தேதி விமான நிறுவன ஊழியரை இழிவுபடுத்தியதிலிருந்து உலகம் முழுக்க இழி புகழ் பெற்றுவிட்டார்.

மேகடாமியா பருப்பை பாக்கெட்டோடு தட்டில் வைத்து விட்டார் என்று உணவு பறிமாறும் ஊழியர்களின் தலைவரை இழிவுபடுத்தி, விமானத்தில் இருந்து இறக்கி விட்டு, பரிமாறிய தொழிலாளியை மண்டியிட வைத்து, தள்ளி விட்டு எல்லாம் ஆடினார் இந்த கொரிய மேட்டுக்குடி சீமாட்டி.

இந்தக் குற்றங்களோடு விமான பைலட்டின் பணிகளை இடையூறு செய்ததற்கும் சேர்த்து சியோல் மாவட்ட நீதிமன்றம் 40 வயது சோ-வை தண்டித்திருக்கிறது. எனினும் இந்த வழக்கை நீர்த்துப் போகச் செய்வதற்காக சோ தரப்பு போக்குவரத்து அமைச்சகத்தோடு தொடர்பு கொண்டதில் அம்மையாருக்கு மட்டும் தொடர்பில்லை என்று நீதிமன்றம் தெரிவித்திருக்கிறது. ஆனால் இப்படி நடந்ததற்கு முகாந்திரம் உள்ளதை பின்னர் பார்ப்போம்.

இந்த வழக்கில் அரசு தரப்பு வழக்கறிஞர் சோ-வுக்கு மூன்றாண்டு தண்டனையும், சோ- தரப்பு தாங்கள் குற்றமே செய்யவில்லை என்றும் கோரினார்கள். பின்னர் இந்த அம்மா முன்னர் எதற்காக மன்னிப்பு கோரினார்? டிசம்பரிலிருந்து சிறையிலிருக்கும் சோ இன்னும் எட்டு மாதங்கள் சிறையிலிருக்க வேண்டும்.

கொரியாவின் பணக்கார பெண்களில் ஒருவரான சோ, நீதிபதிக்கு எழுதிய மன்னிப்பு கடிதத்தில் சிறையில் அடிப்படை வசதிகள் இல்லையென்றாலும் சகித்துக் கொண்டு வாழ்ந்ததை குறிப்பிடுகிறார். தன்னுடைய தவறுகளை அறிவதாகவும், அதனால் மன்னிக்குமாறும் கூறியிருக்கிறார். அதாவது சட்டப்படி குற்றம் செய்யவில்லை என்று வழக்கறிஞர் மூலம் டெக்னிக்லாக வாதிட்டுவிட்டு பின்னர் தண்டனை உறுதி என்றதும் சென்டிமெண்டை போட்டு தண்டனையை குறைப்பது பொதுவாக பரப்பன அக்ரஹாரம் முதல் தென் கொரியை வரை நிலவும் குற்றவாளிகளின் உத்தி.

இந்த விவகாரம் கொரியாவில் மிகவும் முக்கியத்துவம் பெற்று மக்களிடையே ஒரு பொதுக்கருத்து உருவானதன் அடிப்படையிலேயே நீதிமன்றம் கொஞ்சம் இறங்கி வந்திருக்கிறது. தென்கொரியாவின் பொருளாதாரத்தை கட்டுப்படுத்தும் நிறுவனங்கள் அனைத்தும் பாரம்பரிய பணக்கார குடும்பகளுக்கு சொந்தமானவை.  “Chaebol” என்று கொரிய மொழியில் அழைக்கப்படும் இவர்கள் பல்வேறு தொழில்களை தமது குடும்ப வலைப்பின்னலால் ஆக்கிரமித்திருக்கின்றனர். தாய் நிறுவனத்தில் தலைவராக இக்குடும்பத்தின் தலைவர் இருப்பார். அவருக்கே அனைத்து வானளாவிய அதிகாரங்கள் இருக்கும். ஏனைய குடும்ப உறுப்பினர்கள், வாரிசுகள் குடும்ப இடத்தின் வலிமைக்கேற்ப நிறுவனங்களின் நிர்வாகிகளாக இருப்பார்கள்.

கொரியாவை கையில் வைத்திருக்கும் பணக்கார குடும்பங்கள்
கொரியாவை கையில் வைத்திருக்கும் பணக்கார குடும்பங்கள்

அப்பட்டமான மன்னராட்சி முறையில் செயல்படும் இக்கொரிய மேட்டுக்குடி குடும்பத்தில் ஒரு ஆணோ, பெண்ணோ எந்த தகுதியும், அடிப்படையும் இன்றி உயர்பதவிகளுக்கு வந்துவிடுவார்கள். எப்போதும் சட்டத்திற்கு அப்பாற்பட்டவர்கள் என்பதாகவே இவர்கள் நடந்து கொள்வார்கள். இதனாலேயே தொழிலாளிகளையும், ஊழியர்களையும் பிச்சைக்காரர்களைப் போல இழிவாக நடத்துவார்கள். அடிமைகளைப் போல தண்டிப்பார்கள். இத்தகைய குடும்ப தலைவர்கள் ஏதாவது ஊழல் வழக்கில் பிடிபட்டால் மேல் முறையீட்டில் நீதிமன்றம் விடுவித்துவிடும். கொரியாவை முன்னேற்றிய தியாகிகள் என்று பாராட்டு பத்திரம் வாசிக்கப்பட்டு இக்குற்றவாளிகள் புன்னகையுடன் விடுதலையாகி வருவார்கள்.

இப்பேற்பட்ட் பின்னணியில் சோ எனும் சீமாட்டி தண்டிக்கப்பட்டார் என்றால் எந்த அளவு கொரிய மக்கள், தொழிலாளிகள் இவர்கள் மேல் வெறுப்போடு இருப்பார்கள் என்பதை அறியலாம். இக்குடும்பங்களின் 2 அல்லது 3-ம் தலைமுறை வாரிசுகள் தம்மை ராயல் கோமகன்களாகவும், சிறப்பு சலுகை கொண்ட ஆளும் வர்க்கமாகவும் கருதிக் கொள்வார்கள் என்று யோன்சி பல்கலை உளவியல் பேராசிரியர் வாங் சங் மின் குறிப்பிடுகிறார்.

1999-ம் ஆண்டில் தாத்தா ஆரம்பித்த கொரியன் ஏர் நிறுவனத்தில் சேர்ந்த பேத்தி சோ, 2006-ல் 32 வயதில் துணை தலைவராகிறார். அவரது இரு இளைய உடன் பிறப்புகளும் இப்படித்தான் நிர்வாகிகளாக திணிக்கப்பட்டனர்.

டாய்லட் பேப்பர், சோப், உள்ளாடை மட்டுமே வழங்கப்பட்டாலும் சக சிறைவாசிகள் இதர குளியல் மற்றும் அலங்கார பொருட்களை வழங்கியதாக நீதிமன்றத்திற்கு எழுதிய கடிதத்தில் சோ குறிப்பிடுகிறார். இந்த உதவி செய்த எவரும் இந்த வழக்கு குறித்து தன்னிடம் ஏதும் பேசவில்லை என்கிறார் சோ. இறுதியில் நாகரிகம் என்பது சிறையில் இருக்கும் சாதாரண மக்களிடம்தான் இருக்கும் என்பதை ‘நாகரிக’ உலகம் நமக்கே சொந்தமென்று கருதும் அம்மணி புரிந்து கொண்டிருப்பார்.

இந்த சிறை அனுபவம் மற்றவர்களை புரிந்து கொள்ள தனக்கு உதவியதாகவும் குறிப்பிடுகிறார். கம்யூனிச நாடுகளில் உழைப்பு முகாம்களுக்கு அனுப்பப்படும் குற்றவாளிகள் குறித்து கண்ணீர் விடும் கோமகன்கள் இந்த வரிகளை தினசரி சொல்லி பார்க்கட்டும். இறுதியில் ஒரு முதலாளித்துவ நாட்டின் மேட்டுக்குடி குற்றவாளியைக் கூட கம்யூனிச ‘பாணி’யில் சிறையில் இருக்கும் ‘கிரிமினல்கள்’தான் திருத்த வேண்டியிருக்கிறது.

மற்றவர்களை பற்றி யோசித்திருந்தால், வேலை செய்யும் தொழிலாளிகளை அடிமைகள் போல நடத்தாதிருந்தால், உணர்ச்சிகளை கட்டுப்படுத்தியிருந்தால் இந்த வழக்கு நடந்திருக்காது என்று நீதிபதி குறிப்பிடுகிறார். விமானத்தின் பாதுகாப்பு கேள்விக்குறியாக்கப்பட்டது, ஊழியர்கள் வார்த்தைகளாலும், உடல்ரீதியாகவும் தாக்கப்பட்டது, இன்னும் அவர்கள் வேலை திரும்ப முடியாத சூழல், உலகெங்கும் தென் கொரியாவின் மானம் கப்பலேறியது என்று இந்த வழக்கின் மூலத்தையும் நீதிபதி சுட்டிக் காட்டுகிறார்.

கூடவே சொ வருத்தம் தெரிவித்ததையும், பாதிக்கப்பட்ட பணியாளர்களுக்கு கொரியன் ஏர் உதவ முயற்சித்ததையும் நீதிமன்றம் கணக்கில் கொண்டிருப்பதாகவும் நீதிமன்றம் கூறியிருக்கிறது. ஒருவேளை மேல்முறையீட்டில் இவ்வார்த்தைகளை வைத்து அம்மணி விடுதலையும் செய்யப்படலாம்.

“ஒரு ஆரம்ப பள்ளியில் இருக்கும் பணக்கார குழந்தை ஒரு ஏழை குழந்தையை எப்படி மட்டமாக பார்க்குமோ அது போல இந்த பருப்பு வன்முறை இருக்கிறது” என்கிறார் சாங் சபின் எனும் பள்ளி ஆசிரியர். கூடவே சோ அறிவுப்பூர்வமான முதிர்ச்சி பெற கட்டாய சமூக சேவை செய்ய வேண்டும் என்று கூறுகிறார்.

Chaebolஎனினும் சோ தரப்பு இந்த வழக்கை நீர்த்துப் போக கடைசி வரை தனது ராயல் குடும்ப உரிமைகளை வைத்து முயன்றது. அதில் ஒன்று கொரியன் ஏரைச் சேர்ந்த யூ வூன் ஜின் எனும் நிர்வாக அதிகாரி, பாதிக்கப்பட்ட ஊழியர்கள் பொய் சாட்சி சொல்லுமாறு நிர்ப்பந்தித்தது. இது நீதிமன்றத்திலும் நிரூபிக்கப்பட்டு இந்த சீமானுக்கு எட்டு மாதம் சிறை தண்டனை வழங்கப்பட்டிருக்கிறது.

அதே போல அரசின் போக்குவரத்து அமைச்சகத்தின் அதிகாரியான கிம் வூன் என்பவர் அமைச்சகம் இந்த விவகாரம் குறித்து நடத்திய விசாரணை தகவல்களை கொரியன் ஏர் நிறுவனத்திற்கு வழங்கியிருக்கிறார். இவருக்கும் ஆறுமாதம் சிறை தண்டனையும், ஒரு வருட பணி நிறுத்தமும் வழங்கப்பட்டிருக்கிறது.

இதிலிருந்து என்ன தெரிகிறது? இன்னமும் கொரிய கோமான்கள் ரைட் ராயல் பாசிஸ்டுகளாகத்தான் உலா வருகிறார்கள். சியோலிலே இதுதான் நிலைமை என்றால் ஸ்ரீபெரும்புதூரில் இவர்கள் நமது தொழிலாளிகளை எப்படி நடத்துவார்கள் என்பதை யோசித்து பாருங்கள். இது ஏதோ கொரியாவுக்கு மட்டுமல்ல நம்மூர் அம்பானி, அதானிகளுக்கும் கச்சிதமாகவே பொருந்தும்.

கொரிய தொழிலாளி வர்க்கம் இத்தகைய ராயல் குடும்பங்களிடமிருந்து அனைத்தையும் மீட்டால்தான் தமது சுயமரியாதையையும் மீட்க முடியும். அதற்கு ஒரு துவக்கமாக இந்த பருப்பு வன்முறை இருக்கிறது. இல்லையென்றால் ஒரு இளவரசி இரண்டு மாதம் சிறையில் இருப்பதெல்லாம் நடக்குமா என்ன?

–    வேல்ராசன்.

படங்கள், செய்திகள் பல்வேறு உலக செய்தி இணையத்தளங்களில் இருப்பவை.

சந்தா செலுத்துங்கள்

இணையத்தில் உழைக்கும் மக்களின் குரலாக பதினோரு ஆண்டுகளாக போராடும் வினவுடன் கை கோருங்கள். ஆதரியுங்கள்

  1. //இந்த சிறை அனுபவம் மற்றவர்களை புரிந்து கொள்ள தனக்கு உதவியதாகவும் குறிப்பிடுகிறார். கம்யூனிச நாடுகளில் உழைப்பு முகாம்களுக்கு அனுப்பப்படும் குற்றவாளிகள் குறித்து கண்ணீர் விடும் கோமகன்கள் இந்த வரிகளை தினசரி சொல்லி பார்க்கட்டும்//

    🙂

  2. //இதிலிருந்து என்ன தெரிகிறது?//

    அந்த நாட்டின் நீதி பரிபாலன முறமையை காட்டுகிறது.
    எச் எல் தத்து மாதிறியான நீதிபதிகள் அங்கு இல்லை என்பது புலனாகிறது.

  3. பார்ப்பனர்கள் கொலைசெய்தால் தலைமயிர் மட்டுமே மழிக்கப்பட்டால் போதும் மற்றவர்களெனில் சிரைச்சேதம் எனும் நடைமுறையைக்கடைபிடிக்க வழிவகுத்த ” மனுதர்ம வழித்தொன்றல்கள்” போலும் அந்த கொரியன் “ரைட் ராயல்கள்”. காலம்தாழ்ந்தினும் இயற்கையின் வழி தண்டனைகள் உரியவர்களுக்கு கிட்டியேதீரும் என்பதனை நிருபிப்பதே மேற்காட்டிய செய்தியின் கருத்து.

  4. ஏம்ப்பா வினவு… டெல்லி எலக்சனைப் பத்தி இன்னும் ஒரு பதிவும் வரக்காணாமே. யாரோட சேந்து யார வய்யிரதுன்னு ஒரே கொழப்பமா இருக்கா… சீக்கிரம் எல்லாத்தரப்புக்கும் வசை குடுங்க

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க