privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புபோலி ஜனநாயகம்போலீசுசெய்யாறு டாஸ்மாக் கடை உடைப்பு: தோழர்கள் மக்கள் போர்க்கோலம்

செய்யாறு டாஸ்மாக் கடை உடைப்பு: தோழர்கள் மக்கள் போர்க்கோலம்

-

  • செய்யாறு அழிவிடைதாங்கி மக்களின் – புமாஇமு தோழர்களின் டாஸ்மாக் சாராயக் கடை உடைப்பு போராட்டத்தை உயர்த்திப்பிடிப்போம் !
அழிவிடைதாங்கி டாஸ்மாக் உடைப்புப் போராட்டம்
செய்யாறு அழிவிடைதாங்கி மக்களின் – புமாஇமு தோழர்களின் டாஸ்மாக் சாராயக் கடை உடைப்பு போராட்டத்தை உயர்த்திப்பிடிப்போம் !

பூரண மதுவிலக்கு என்பது இப்போது பேஷனான வார்த்தையாகி விட்டது. அதைப் பேசாத கட்சிகள் இல்லை. ஒவ்வொருவரும் ஒவ்வொரு நாள் போட்டி போட்டுக்கொண்டு கலர் கலராக இயக்கம் எடுக்கிறார்கள்.

  • காந்தியவாதி சசிபெருமாள் காலில் விழுகிறார், கண்ணீர் விட்டு கதறுகிறார்.
  • சட்டக்கல்லூரி மாணவி உண்ணாவிரதம் இருக்கிறார்.
  • வைகோ கல்லூரி மாணவர்களை வைத்துக்கொண்டு மரத்தான் போட்டி வைக்கிறார், கண்ணீர் வடிக்கிறார்.
  • திமுக, மதிமுக, காங்கிரசு, பாஜக, பாமக உள்ளிட்ட எல்லாக் கட்சிகளுமே “பூரண மதுவிலக்கா, ஆமாம் சாமி” என்கின்றன.

ஆனால் இந்தக் கட்சிக்காரர்கள்தான் பார்களை வைத்து நடத்திக்கொண்டு இருக்கிறார்கள். இதை எல்லாம் விட பெரிய கூத்து என்ன வென்றால் சரக்கை எப்படியெல்லாம் விதம் விதமாக கலந்து குடிக்கலாம் என்ற வேதங்களை சட்டமாக்கத் துடிக்கும் ஆர்.எஸ்.எஸ், பிஜேபி, பார்ப்பன கும்பல் கூட பூரண மதுவிலக்கு என்ற பெயரில் உண்ணாவிரதம் இருக்கிறார்கள்.

அழிவிடைதாங்கி டாஸ்மாக் உடைப்புப் போராட்டம்
போலீசு, நீதிமன்றம், அதிகார வர்க்கம் என எல்லாமே மக்களுக்கு எதிரானவையாக மாறிப்போன இந்தச் சூழலில் அரசை எதிர்க்காமல் பூரணமதுவிலக்கு எப்படி சாத்தியம்?

லட்சக்கணக்கான, கோடிக்கணக்கான உறுப்பினர்களைக் கொண்ட எந்த ஒரு கட்சியாலும் இதை நடைமுறைப்படுத்த முடிகிறதா என்ன? முடியாது என்பது தான் தான் பதில்.

போலீசு, நீதிமன்றம், அதிகார வர்க்கம் என எல்லாமே மக்களுக்கு எதிரானவையாக மாறிப்போன இந்தச் சூழலில் அரசை எதிர்க்காமல் பூரணமதுவிலக்கு எப்படி சாத்தியம்?

அதிகாரத்தை கையில் எடுக்காமல் பூரணமதுவிலக்கு எப்படி சாத்தியம்?

அரசாங்க கஜானா காலியானால் அதை நிரப்ப எந்த வேலையையும் செய்யலாம் என்று சொன்ன சாணக்கியனின் வாரிசான பார்ப்பன ஜெயாவின் ஆட்சியில் இப்படிப்பட்ட மொக்கைத்தனமான போராட்டங்கள் ஜெயிக்குமா என்ன?

எப்படிப்பட்ட போராட்டத்தை மேற்கொண்டால் டாஸ்மாக்கை ஒழிக்க முடியும் என்பதற்கு தமிழகத்துக்கே முன்மாதிரியாக அமைந்து இருக்கிறது செய்யாறு அழிவிடைதாங்கி மக்களின்- புமாஇமு தோழர்களின் டாஸ்மாக் சாராயக் கடை உடைப்புப் போராட்டம்.

அழிவிடைதாங்கி டாஸ்மாக் உடைப்புப் போராட்டம்
எப்படிப்பட்ட போராட்டத்தை மேற்கொண்டால் டாஸ்மாக்கை ஒழிக்க முடியும் என்பதற்கு தமிழகத்துக்கே முன்மாதிரி.

செய்யாறு வட்டத்தில் உள்ள அழிவிடைதாங்கி கிராமத்தில் உள்ள பள்ளிக்கு அருகில் டாஸ்மாக் கடையை திறந்தது முதல் வெங்களத்தூர், குத்தனூர், அழிவிடைதாங்கி உள்ளிட்ட சுற்றுவட்டார ஏழு கிராம மக்களுக்கும் பிரச்சினைதான்.

பெண் பிள்ளைகள் யாரும் அச்சமில்லாமல் பள்ளிக்கு செல்லமுடியவில்லை, தினமும் குடிகாரர்கள் தங்கள் பிள்ளைகளை கேலி செய்வதை கண்டு பொறுக்க முடியாமல் இருந்தனர், அம்மக்கள்.

அழிவிடைதாங்கி டாஸ்மாக் உடைப்புப் போராட்டம்
வெடிப்பதைத் தவிர வேறு வழி இல்லை. காத்திருந்தார்கள் மக்கள் தீப்பொறிக்கு.

தங்கள் வீட்டுப் பிள்ளைகளே குடிகாரர்களாக சீரழிந்து வருவதைக் கண்டு குமுறிக்கொண்டு இருந்தார்கள்.

டாஸ்மாக் கடையை இழுத்து மூட வேண்டும் என்று இரண்டு வருடங்களாக மக்கள் போராடிக்கொண்டு இருக்கிறார்கள். 3 முறை டாஸ்மாக் கடையை முற்றுகைப் போராட்டமும் நடத்தியாயிற்று, இனி அடுத்து என்ன?

வெடிப்பதைத் தவிர வேறு வழி இல்லை. காத்திருந்தார்கள் மக்கள் தீப்பொறிக்கு.

அப்பகுதியில் உள்ள புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி தோழர்கள் மூலமாக அந்த டாஸ்மாக் சாராயக்கடையை அப்புறப்படுத்த வேண்டும் என்று அனைத்து கிராமங்களிலும் பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது. தங்களின் உணர்வுகளுக்கு சாணை பிடிக்க வந்த புமாஇமுவின் இளந்தோழர்களை வாரி அணைத்துக்கொண்டார்கள் கிராம மக்கள்.

குறித்த நாளான பிப்ரவர் 15-ம் வந்தது, ஏழு கிராம மக்களும் திரண்டனர். பறைமுழங்க, முழக்கங்கள் வெடிக்க வெடிகுண்டுகளாய் டாஸ்மாக் கடையை முற்றுகை இட்டனர், உழைக்கும் மக்கள்.

பாதுகாப்பிற்கு வந்து இருந்த பிரம்ம தேசம் காவல் நிலையத்தின் ஒரு எஸ்.ஐ உள்ளிட்ட மூன்று போலீசும் “எப்பவும் போல கத்திட்டு போயிடுவானுங்க” என்று ஏளனமாய் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர்.

நேரம் ஆகிக்கொண்டே இருந்தது. டாஸ்மாக் அதிகாரிகளோ, இல்லை அரசின் அதிகார வர்க்கமோ யாரும் வரவில்லை,

முக்கால் மணி நேரமாக நடந்த முற்றுகையை சூரியன் மேலும் சூடேற்ற, இனி அடுத்து என்ன செய்வது?

அழிவிடைதாங்கி டாஸ்மாக் உடைப்புப் போராட்டம்
“எப்பவும் போல கத்திட்டு போயிடுவானுங்க” என்று ஏளனமாய் வேடிக்கை.

புமாஇமுவின் மாநகர செயற்குழு உறுப்பினர்களான தோழர்கள் ராஜாவும் சாரதியும் மக்களைப் பார்த்து “இப்போது என்ன செய்வது? வழக்கம் போல வாயை மூடிக்கொண்டு போவதா? இல்லை நமது வாழ்க்கையை அழித்துக்கொண்டு இருக்கும் டாஸ்மாக் கடையை அழிக்கப்போகிறோமா?………………..” என்று கேட்டனர்.

அழிவிடைதாங்கி டாஸ்மாக் உடைப்புப் போராட்டம்
“வழக்கம் போல வாயை மூடிக்கொண்டு போவதா? இல்லை நமது வாழ்க்கையை அழித்துக்கொண்டு இருக்கும் டாஸ்மாக் கடையை அழிக்கப்போகிறோமா?………………..”

பேசிக்கொண்டு இருக்கும் போதே ஒருவர் உள்ளே போய் சாராய பாட்டில்கள் கொண்ட ஒரு கேசை தூக்கிப் போட்டு உடைக்க, அவ்வளவுதான் மொத்த மக்களும் சாராயக்கடைக்குள் புகுந்து அனைத்து பாட்டில்களையும் உடைக்க ஆரம்பிக்க, இருந்த சிறுவர்களோ கால்களில் சாராய பாட்டிகள் குத்தி ரத்தம் வந்த போதிலும் தங்கள் பங்கிற்கு கடைக்குள் புகுந்து துவம்சம் செய்தனர். எல்லாம் முடிந்து விட்டது, சற்று நேரத்தில்.

அழிவிடைதாங்கி டாஸ்மாக் உடைப்புப் போராட்டம்
சாராயக்கடைக்குள் புகுந்து அனைத்து பாட்டில்களையும் உடைக்க ஆரம்பிக்க, இருந்த சிறுவர்களோ கால்களில் சாராய பாட்டிகள் குத்தி ரத்தம் வந்த போதிலும் தங்கள் பங்கிற்கு கடைக்குள் புகுந்து துவம்சம் செய்தனர்.

ஒரே வெற்றிமுழக்கம், எப்போது இது நடக்கும் என்று மக்கள் நினைத்துக்கொண்டு இருந்த விசயம் இன்று நடந்தே விட்டது.

பாட்டில்களை உடைத்தவர்களால் நம்மை உடைக்க எவ்வளவு நேரமாகும் என்று யோசித்து தங்கள் படையை வரவழைத்தது, போலீசு.

அழிவிடைதாங்கி டாஸ்மாக் உடைப்புப் போராட்டம்
பாட்டில்களை உடைத்தவர்களால் நம்மை உடைக்க எவ்வளவு நேரமாகும்.

வெற்றிப்பறை முழங்க பேரணி தொடங்கியது ஊரில், ஆரவாரமாக.

இடைமறித்த போலீசு தோழர்களை கைது செய்ய முயல, அதை பொதுமக்கள் தடுக்க அந்த இடமே களேபரமானது.

“அந்தப் பசங்களை மட்டும் கைது பண்ணாதீங்க, கைதுன்னா எங்க எல்லாத்தையும் பண்ணுங்க” என்று போலீசை முற்றுகையிட்டது மக்கள் கூட்டம்.

‘கொஞ்சம் கூட மதிக்கவே மாட்டேங்குறாங்களே’ என்று என்ன செய்வதென்று முழித்தது போலீசு.

அழிவிடைதாங்கி டாஸ்மாக் உடைப்புப் போராட்டம்ஒரு கட்டத்தில் தோழர்கள் ராஜா, சாரதி இருவரையும் போலீசு வேனில் ஏற்ற போலீசை முற்றுகையிட்டனர் மக்கள். அதட்டல் , மிரட்டல், கெஞ்சல் என எப்படி சொன்னாலும் மக்கள் கேட்பதாக இல்லை. “அவங்களை இறக்கிவிடாம போக மாட்டோம்” ஒருமித்த குரல் இடியாய் இறங்க, வேனில் ஏற்றிய தோழர்களை விடுவித்து

“இதெல்லாம் சரியில்ல, உங்களை எப்படி கவனிக்கணுமோ அப்படி கவனிக்குறோம், இப்போ கிளம்புறோம்” என்று கிளம்புவது போல நடித்து கொஞ்ச நேரம் கழித்து திரும்பி வந்தது போலீசு.

தோழர்களை விடுவித்த மக்கள் தங்கள் வீடுகளில் அழைத்து உணவு ஏற்பாடு செய்ய கலைந்து சென்றனர்.

நேரம் பார்த்த போலீசு பெண்தோழர்கள் 4 பேர்கள் மற்றும் ஆண்தோழர்கள் 5 பேர்களை வலுக்கட்டாயமாக கைது செய்தது. இதைக்கண்ட கிராமமக்கள் எதிர்த்து நிற்க அவர்களை தடியடி நடத்தி விரட்டியடித்தது. தங்கள் மீது அடிவிழுந்த போதும் “நமக்காக வந்த புள்ளைகளை விடக்கூடாது” என்று தாய்மார்கள் சண்டையிட்டனர்.

அழிவிடைதாங்கி டாஸ்மாக் உடைப்புப் போராட்டம்அவர்களை மிருகத்தனமாகத் தாக்கி சந்திரா என்ற தாயை கைது செய்தது, போலீசு.

பிரம்ம தேசம் காவல் நிலையத்திற்கு சென்றால் ஊர்மக்கள் பிரச்சினை செய்வார்கள் என்பதால் 14 கிமீ தொலைவில் உள்ள சாராயப் புகழ் தூசி காவல் நிலையத்திற்கு கைது செய்யப்பட்டவர்களை கொண்டு சென்றது.

இரண்டு மணி நேரம் கழித்து போலீசு பாதுகாப்புடன் டாஸ்மாக் திறக்கப்பட்டது, மீண்டும். கைது செய்த பின்னர் அழிவிடைதாங்கியில் படையைக் குவித்து டாஸ்மாக் கடையை திறந்தது போலீசு.

அழிவிடைதாங்கி டாஸ்மாக் உடைப்புப் போராட்டம்
கைது செய்த பின்னர் அழிவிடைதாங்கியில் படையைக் குவித்து டாஸ்மாக் கடையை திறந்தது போலீசு.

என்னடா இது அநியாயம். மது நாட்டுக்கும் வீட்டுக்கும் கேடு என்கிறான், அவனே சாராயக்கடையையும் திறந்து வைக்கிறான் , மக்கள் போராடினால் அவர்களை அடித்துவிட்டு போலீசைப் போட்டு டாஸ்மாக்கை திறக்கிறான் எனில் அரசு எப்படிப்பட்ட எதிர் சக்தியாக மாறிவிட்டது?

காவல் நிலையத்தில் ஏகப்பட்ட கெடுபிடிகள், வழக்கறிஞர்கள் உட்பட யாரையுமே தோழர்களைப் பார்க்க அனுமதிக்கவில்லை. வக்கிர புத்தியுடன் தோழர்களை போட்டோ எடுப்பது, செல்போன்களை பறித்துக் கொள்வது போன்ற தங்களுக்கே உரிய இழி செயல்களை செம்மையாகச் செய்தது போலீசு.

“டாஸ்மாக் பிரான்ச் மேனேஜர் வரட்டும்”, “எஸ்.பி வரட்டும்” என்று மதியம் முதல் இரவு வரை இழுத்தடித்து ரிமாண்ட் என்றது. தெரிந்த விசயம் தான் எனினும் போட்ட பிரிவுகள்தான் விசித்திரமானவை. “பொதுச் சொத்துக்கு சேதம் விளைவித்தது, அரசு ஊழியரை பணி செய்யவிடாமல் தடுத்தது, கொடும் காயம் விளைவித்தது, அவதூறு…. ” இப்படி ஏராளம்.

அழிவிடைதாங்கி டாஸ்மாக் உடைப்புப் போராட்டம்
சாராயம் பொதுச் சொத்து என்று அறிவித்திருக்கின்றன போலீசும், அரசும்.

எது பொதுச் சொத்து ? சாராயம் பொதுச் சொத்து என்று அறிவித்திருக்கின்றன போலீசும், அரசும்.

வந்தவாசியில் உள்ள நடுவரின் இல்லத்தில் தோழர்கள் 9 பேரும், அந்த வீரத்தாயும் நடுவர் முன் நிறுத்தப்பட்டனர், இரவு 11.30 மணிக்கு.

போலீசு தண்ணீரோ உணவோ தராமல் கொடுமைப்படுத்துவதையும் தங்களை தாக்கியதையும் நள்ளிரவிலும் நடுவரிடம் வெளிப்படுத்தினார்கள் தோழர்கள்.

அடிமைகளையே பார்த்து பழக்கப்பட்ட நீதிபதியால் நமது தோழர் சிவரஞ்சனி கேட்ட “டாஸ்மாக் கடையை எதிர்த்துப் பேசினால் என்ன தப்பு?” என்ற கேள்விக்கு பதில் கூறமுடியவில்லை.  “சாராயம் பொதுச் சொத்தா” என்று போலீசிடம் கேள்வி கேட்கவும் முடியவில்லை.

அழிவிடைதாங்கி டாஸ்மாக் உடைப்புப் போராட்டம்
“டாஸ்மாக் கடையை எதிர்த்துப் பேசினால் என்ன தப்பு?”

இரவு ஒரு மணிக்கு தோழர்களை வேலூர் சிறைக்குச் செல்ல பணித்தார்கள். உறங்கும் நேரம் கடந்தாலும் களைப்பு கண்களை மறைத்தாலும் “டாஸ்மாக் கடைகளை உறங்க வைக்காமல் நமக்கு உறக்கமேது” என்ற வகையில் முழக்கமிட்டுக் கொண்டே சென்றார்கள்.

இந்த நாட்டில் நீதி நேர்மை நியாயத்தை யார் பேசினாலும் தண்டனைதான் இதுதான் அரசின் நீதி.  “வாழ்வை அழிக்கும் சாரயத்தைப் பற்றி பேசக்கூடாது” என்கிறது போலீசு அது தேசத்துரோகமாம்.

பிரசுரத்தை மாங்கு மாங்கென்று அனைத்து அதிகாரிகளும் படித்து அதில் அவதூறு இருப்பதாக வழக்கும் போடுகின்றனர்.

பூரண மதுவிலக்கை இந்த அரசு முறைக்குள் நின்று சாதிக்க முடியுமா? இல்லை அழிவிடைதாங்கி உழைக்கும் மக்களின் புமாஇமு தோழர்களின் வழியிலான போர்க்குணமான போராட்டங்களின் மூலம் இதை சாதிக்க முடியுமா?

அழிவிடைதாங்கி டாஸ்மாக் உடைப்புப் போராட்டம்
பூரண மதுவிலக்கை இந்த அரசு முறைக்குள் நின்று சாதிக்க முடியுமா? இல்லை அழிவிடைதாங்கி உழைக்கும் மக்களின் புமாஇமு தோழர்களின் வழியிலான போர்க்குணமான போராட்டங்களின் மூலம் இதை சாதிக்க முடியுமா?

நேற்று முதலே அனைத்து தொலைக்காட்சிகளிலும் இன்று காலை முதல் அனைத்து நாளிதழ்களிலும் முக்கியச்செய்தியாக “பொது மக்கள் டாஸ்மாக் கடை சூறை” என்று இச்செய்தி வந்திருந்தது.

டாஸ்மாக்கை அழிக்க அவதாரம் எடுத்த அழிவிடைதாங்கியில் போலீசு குவிக்கப்பட்டு இருக்கிறது. போராடிய மக்களும் தோழர்களும் சிறையில் இருக்கிறார்கள். டாஸ்மாக் போலீசு பாதுகாப்புடன் திறக்கப்பட்டு இருக்கின்றது.

முடிவல்ல இது, தொடக்கம், அழிவினை இடை மறித்து தாங்கிய அழிவிடைதாங்கியில் மட்டுமல்ல தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள் அழிக்கப்படுவது உறுதி.

அழிவிடைதாங்கி டாஸ்மாக் உடைப்புப் போராட்டம்
முடிவல்ல இது, தொடக்கம், அழிவினை இடை மறித்து தாங்கிய அழிவிடைதாங்கியில் மட்டுமல்ல தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள் அழிக்கப்படுவது உறுதி.

இது ஒரு தேசவிடுதலைப் போராட்டம். ஆம், இளைஞர்களை மாணவர்களை உழைக்கும் மக்களை சிந்திக்க விடாமல் நாட்டின் மீது அக்கறையற்றவர்களாக மாற்றும் போதைக்கு எதிரான போராட்டம்.

சீனாவின் தேசவிடுதலைக்கு மாணவர்கள், இளைஞர்கள் திரளக்கூடாது என்பதற்காக பிரிட்டிஷ் அரசு கப்பலில் டன் டன் ஆக அபினைக் கொண்டு வந்து கொட்டியது. அதற்கு எதிராக தொடங்கியதுதான் அபினி யுத்தம் . அந்த யுத்தத்தில் வெற்றியும் பெற்றார்கள் சீன மக்கள்.

இதோ இந்த தேச விடுதலைப் போருக்கு மாணவர்கள், இளைஞர்களே உங்களை அறைகூவி அழைக்கின்றோம். எம்மோடு புமாஇமுவில் இணையுங்கள், தேச விடுதலைப்போரில் பங்கு கொள்ளுங்கள்.

அழிவிடைதாங்கி டாஸ்மாக் உடைப்புப் போராட்டம்
புமாஇமுவில் இணையுங்கள், தேச விடுதலைப்போரில் பங்கு கொள்ளுங்கள்.

உழைக்கும் மக்களே, ஜனநாய சக்திகளே!

அழிவிடைதாங்கி உழைக்கும் மக்களின் – புமாஇமுவின் முன்னுதாரணமிக்க போராட்டத்தை பின்பற்ற வேண்டிய நேரம் இது.

பள்ளிகள் கல்லூரிகள், குடியிருப்புப் பகுதிகளில் டாஸ்மாக் கடையை வைக்கக்கூடாது என்ற விதி இருந்தும் மீறி வைக்கும் இந்த அரசாங்கத்தை, மக்களின் குடி கெடுக்கும் டாஸ்மாக்கை அடித்து உடைக்காமல் தீர்வு இல்லை.

தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளை அகற்றிடுவோம், அழிவிடைதாங்கி உழைக்கும் மக்கள் மீதான போலீசு அராஜகத்துக்கு எதிராக குரல் கொடுப்போம்!

அழிவிடைதாங்கி டாஸ்மாக் உடைப்புப் போராட்டம்தகவல்
புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி
காஞ்சிபுரம், சென்னை மாவட்டங்கள்

தொடர்புக்கு : 9445112675