Saturday, October 31, 2020
முகப்பு போலி ஜனநாயகம் அதிகார வர்க்கம் மணல் கொள்ளையும், ஏரிகளின் அழிவும்

மணல் கொள்ளையும், ஏரிகளின் அழிவும்

-

தமிழகத்தின் நீர்வளமும், பாசன கட்டமைப்பும் அரசின் புறக்கணிப்பாலும், அதிகாரிகளின் ஒத்துழைப்போடு நடக்கும் மணல் கொள்ளையாலும்,  நீதிமன்றங்களின் பாராமுகத்தாலும் எப்படி அழிக்கப்பட்டு வருகின்றது என்றும் இது குறித்து நாம் செய்ய வேண்டியது என்ன  என்பதையும் விளக்கும் கட்டுரைத் தொடரின் முதல் பகுதி.

மணல் கொள்ளையும் ஏரிகளின் அழிவும்

ற்று மணல் முறையற்ற வழிகளில் தோண்டி எடுக்கப்படுவதால் தமிழ் நாட்டின் ஏரிகளுக்கு ஏற்படும் பாதிப்பை விளக்குவதே இந்த கட்டுரையின் நோக்கம்.

ஆற்றின் மட்டத்தை சரியாக வைத்திருப்பது மணல்

மணல் என்பது புவியியல் மாறுபாட்டின் ஒரு பகுதியாக பாறைகள் சிதைந்து உருவாகும் ஒரு கனிமம் என்பதை பலரும் அறிந்திருப்பார்கள். அது உருவாக இயற்கை ஏராளமான ஆண்டுகளை எடுத்துக் கொள்ளும். இன்று நாம் பயன்படுத்தும் ஆற்று மணல் உருவாவதை எக்காரணம் கொண்டும் விரைவாக்க முடியாது. எனவே, நாம் ஆற்றிலிருந்து எடுக்கும் மணலும், இயற்கையில் உருவாகும் மணலும் ஒரே விகிதத்தில் இருந்தால் மட்டுமே சமநிலையைப் பேண முடியும். மணலை ஆழமாகத் தோண்டி எடுப்பதன் மூலம் ஆறுகளைப் பள்ளமாக்கி அத்துடன் இணைக்கப்பட்டிருக்கும் கால்வாய்களுக்கு தண்ணீர் செல்லாமல் தடுத்துக் கொண்டிருக்கிறார்கள். இதன் எதிர் விளைவுகள் குளங்கள் வறண்டு போய் தமிழ் நாட்டின் நீர்வளம் குன்றி விடும். அந்த நாள் வெகு தொலைவில் இல்லை என்பதை நாம் இந்த தொடர் மூலம் விளக்க இருக்கிறோம்.

குளங்கள் இல்லாத ஊர்களைத் தமிழ்நாட்டில் காண்பது அரிதினும் அரிது. இந்தக் குளங்கள் ஆங்காங்கு பெய்யும் மழை நீரை மட்டும் சேமிப்பது இல்லை. பல மைல் தொலைவில் உள்ள ஆற்றில் இருந்து பெரும் நீரையும் பெற்று சேமிக்கின்றன. இப்படி சிறுதும் பெரிதுமான நீர்நிலைகள் அனைத்தும் பல கோடிக்கணக்கான மைல்கள் நீளமுடைய கால்வாய்களால் ஆறுகளுடன் இணைக்கப்பட்டுள்ளன. சுருங்கச் சொன்னால், இந்தக் கால்வாய்கள் அனைத்தும் ஆற்றில் தொடங்கி குளங்களில் இணைந்து, பின்னர் மீண்டும் ஆற்றில் வந்து முடிகின்றன. வெகு சொற்பமான அளவு தண்ணீரே கடலுக்கு சென்று சேர்கிறது. எனவே, ஆறுகள் சீருடன் இருந்தால் மட்டுமே தமிழ் நாட்டில் உள்ள குளங்கள் சீருடன் இருக்கும்.

மதுரை மாவட்டத்தில் குளங்கள், கால்வாய்கள், கிராமங்களைக் காட்டும் வரைபடத்தின் ஒரு பகுதி
மதுரை மாவட்டத்தில் குளங்கள், கால்வாய்கள், கிராமங்களைக் காட்டும் வரைபடத்தின் ஒரு பகுதி (படத்தைப் பெரிதாகப் பார்க்க அதன் மீது சொடுக்கவும்)

இங்கே இணைக்கப்பட்ட படத்தை பார்க்கவும். சுமார் 140 சதுர கிலோமீட்டர் பரப்பளவுக்குட்பட்ட ஒரு சிறிய பகுதியில் 40 ஏரிகளை நீங்கள் பார்க்கலாம். வைகை ஆறு வட பகுதியில் ஓடுவதை பார்ப்பீர்கள். எண்ணற்ற சிற்றோடைகள் மலைகளில் தொடங்கி ஏரிகளில் முடிவதையும் அவை மீண்டும் இணைந்து பெரிய ஓடைகளாகி பின்னர் மீண்டும் ஆற்றில் இணைகின்றன. இவை அனைத்தும் பல நூறு ஆண்டு கால மனித உழைப்பு என்பதை நீங்கள் அறிந்து கொள்ள வேண்டும். இந்தச் சிற்றோடைகளை நம்பியே ஏரிகள் இருக்கின்றன. இந்த ஓடைகள் அனைத்திலும் அடியில் தேங்கும் மணலை அள்ளிவிட்டால் இந்தக் குளங்களின் நிலை என்னவாகும். ஓடைகளிலிருந்து வரும் தண்ணீர் குளங்களுக்கு செல்லாமல் வீணாகி எங்கோ சென்று சேரும். இது தவிர்த்து ஆற்றுடன் நேரடியாக இணைக்கப்பட்ட குளங்களை கீழ் வைகைப் பகுதியின் வரைபடத்தில் பார்க்கலாம்.

மனித உழைப்பின் மாண்புறு படைப்புகளில் மகத்தானது அவன் உருவாக்கிய ஏரிகளும் குளங்களும். அதனினும் மகத்தானது அவன் இயற்கையை மனிதநேயமாக்கியது. செயற்கையான குளங்களை இயற்கையான ஆறுகளுடன், இணைத்த நல்வினைப் பயன்தான் இன்று நாம் பயன்படுத்தும் நீர். பல நூறு ஆண்டுகளாகப் பெற்ற அறிவின் பலன் இது. தமிழ்நாட்டில் மட்டும் சுமார் நாற்பது ஆயிரம் பாசனக் குளங்கள் இருப்பதாகவும், இதைப்போல ஐந்து மடங்கு எண்ணிக்கையிலான சிறிய குளங்கள், ஊரணிகள், குட்டைகள் இருக்கின்றனவென்றும் புள்ளிவிபரங்களும் மதிப்பீடுகளும் தெரிவிக்கின்றன. தமிழகத்தில் உள்ள மிகப் பெரும் ஏரிகள் காலத்தால் பல நூறு ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்டவை. எடுத்துக்காட்டாக, 3 மில்லியன் கன மீட்டருக்கு மேல் கொள்ளளவு கொண்ட ஏரிகள் மொத்தம் 116. இவற்றில் 6 ஏரிகள் மட்டுமே கி.பி. பன்னிரண்டாம் நூற்றாண்டுக்குப் பின்னர் கட்டப்பட்டவை. மீதியுள்ள 110 ஏரிகள் அதற்கும் வெகு காலத்திற்கும் முன்பே கட்டப்பட்டவை.

ஆற்றின் தரை மட்டத்தை அளவிட்டு அந்த அளவினை நம்பியே ஏரிகளுக்கு நீரை இட்டுச்செல்லும் கால்வாய்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஆற்றில் மணல் அள்ளும்பொழுது அதன் ஆழம் அதிகரித்து விடுவதால் ஆற்றில் வரும் நீர் மேல் ஏறி கால்வாய்கள் வழியாக குளங்களுக்குச் செல்லாது. ஒரு பேச்சுக்காக கால்வாய்களையும் சேர்த்து ஆழமாகத் தோண்டினாலும் குளங்களின் தரை மட்டத்தை தாழ்த்த முடியாது. ஒரு வேளை குளங்களைத் தோண்டி ஆழமாக்கினாலும் பாசனம் பெறும் நிலங்களை ஆழமாக்கிட முடியாது. இதனால் ஆற்றில் நீர் வந்தாலும் குளங்கள் நிரம்பாமல் வீணாகி கடலுக்குச் சென்று சேரும். பன்னெடுங்காலம் நீர் வழங்கி நம் சமூகத்தைக் காத்து வந்த இந்தக் குளங்கள் பாழ்பட்டு அழிந்து படுவதில் இந்த மணல் கொள்ளையர்களுக்கு ஒரு பெரும் பங்கு உண்டு என்பதை நாம் அறிந்து கொள்ள வேண்டும்.

ஏரிகளைக் காப்பது முதல் பணி

ஆற்றில் மணல் எடுப்பதால் நிலத்தடி நீர் சேமிக்க வழியில்லாமல் போய் விடும் என்பதைப் பற்றிப் பலரும் பேசி வருகிறார்கள். ஆனால், அதை விட மிக முக்கியமானது ஆறுகளை நம்பி இருக்கும் ஏரிகள், குளங்கள் நாசமாவது தான். தமிழகம் உள்ளிட்ட தென்னிந்தியாவின் பெரும்பகுதி கடினப் பாறைகளால் ஆனது. இந்தப் பாறைகளில் தண்ணீர் சுலபமாக இறங்கி சென்று சேராது. அது ஒரு நீண்ட செயல். இயற்கையாகவே, தமிழகத்தின் புவியியல் அமைப்பின்படி நிலத்தடியில் நீர் இருப்பது மிகவும் குறைவு. இப்போது நாம் உறிஞ்சும் நிலத்தடி நீர் பல ஆயிரம் ஆண்டுகாலத்தில் உள்ளிறங்கி பாறைகளின் இடுக்குகளில் தேங்கியது. ஆறுகளில் ஓடும் நீரால் மட்டுமே நிலத்தடி நீர் பெரும் அளவில் சேமிக்கப் படுவதில்லை. ஆற்றின் ஓரங்களில் உள்ள ஊர்களில் மட்டும் கிணற்றைக் கொண்டுள்ள விவசாயிகள் இதுபற்றி கவலை கொண்டிருப்பது உண்மை தான். ஆனால், தமிழ் நாட்டின் பெரும் பகுதி கிராமங்கள் ஆற்றிலிருந்து வெகு தொலைவில்தான் உள்ளன. அவர்கள் வைகை போன்ற ஆறுகள் நாசமாவதை எதிர்த்து ஒன்றும் செய்ய இயலாமல் குமுறி வருகின்றனர். அத்தகைய கிராம மக்கள் பெருகி வரும் மணல் கொள்ளையினால் ஆற்றில் இருந்து தொலைவில் உள்ள தமது குளங்களுக்கு நீர் வருவதில்லை என்பது பற்றிய கவலையில் ஆண்டு தோறும் மூழ்கி வருகிறார்கள். எனவே, ஆற்று மணல் கொள்ளையிடப்படுவதன் முதல் சேதம் ஏரிகளுக்கும் கால்வாய்களுக்கும்தான். அதிலும் பெரும் ஏரிகளுக்கு ஏற்படும் சேதம் மிகவும் தீவிரமானது. பல நூறு ஆண்டுகள் பணி செய்த இத்தகைய ஏரிகளை அழிக்கும் மணல் கொள்ளையை நிறுத்துவது மட்டுமே எதிர் வரும் பேரிழப்பை தடுக்கும்.

வைகை ஆறும் குளங்களும்

தமிழ் நாட்டின் முக்கியமான ஆறுகளில் வைகையும் ஒன்று. தமிழ் நாட்டில் குறைவான மழை பெறும் மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்கள் கடந்த ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக நம்பியிருந்த இந்த வைகை ஆறுதான் தமிழ்நாட்டில் முதன் முதலில் சீரழிக்கப்பட்டது. ஆற்று மணல் அள்ளப்படுவதால் அதனை அண்டியிருக்கும் குளங்கள் அடையும் சேதத்தை வைகைப் பாசனப் பகுதி முழுவதும் காணலாம். பத்தொன்பதாம் நூற்றாண்டில் எழுதப்பட்ட மதுரை நாட்டு அரசிதழ் நூல் (Mathura Country Manual) வைகையை நம்பி சுமார் மூவாயிரத்திற்கும் மேலான ஏரிகள் இருந்ததாக குறிப்பிடுகிறது.

கீழ்வைகை என்று அழைக்கப்படும் மதுரைக்கு கிழக்கே உள்ள பகுதியில் மட்டும் சுமார் 96 கால்வாய்கள் நானூறு ஏரிகளுக்கு நேரடியாகவும் சுமார் ஆயிரம் ஏரிகளுக்கு அதன் நீட்சியாகவும் தண்ணீரை இட்டுச் செல்கின்றன. கீழ் வைகையின் ஒரு சிறிய பகுதியில் அமைந்துள்ள ஆற்றுடன் கூடிய கால்வாய் கட்டமைப்பை இப்படத்தில் காண்க.

கீழைவைகையின் ஒரு சிறிய பகுதியில் ஆற்றுடன் கூடிய கால்வாய் கட்டமைப்பு
கீழைவைகையின் ஒரு சிறிய பகுதியில் ஆற்றுடன் கூடிய கால்வாய் கட்டமைப்பு

கீழ் வைகைப் பகுதிகளில், மட்டும் இவ்வாறு ஆற்று நீரை கால்வாய்கள் மூலம் ஏரிகளுக்குப் பெற்று பயன் அடையும் மொத்தப் பாசனப் பரப்பு சுமார் இரண்டு லட்சம் ஏக்கர். இந்த நிலங்கள் மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களில் இருக்கின்றன. இப்படி காலத்தால் பழமையான பாசன முறைகளை கொண்டது வைகை. தமிழ் நாட்டில் கடலில் கலக்காத ஆறு என்ற புகழைப் பெற்ற பெரும் ஆறு வைகை. வைகை கடைசியாக ராமநாதபுரம் பெரிய ஏரியில் சென்று கலக்கிறது. சொட்டுத் தண்ணீர் கூட வீணாக்காமல் பயன்படுத்தி வாழ்ந்த ஒரு சமூகம் இன்றோ சீரழிந்து சின்னாபின்னமாகி கிடக்கிறது. இங்கு குறிப்பிடும் ஏரிகளுக்கும் பெரியாறு பாசனத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை என்பதை வாசகர்கள் அறிந்து கொள்ள வேண்டும். அதை வேறொரு சமயம் விளக்கலாம்.

பிரடெரிக் காட்டன் என்ற பொறியாளர் ஒரு சிறப்புரையில் வைகையைப் பற்றி 1901 ம் ஆண்டு எழுதினார், “நீர்பாசனத்தை பெருக்குவதென்றால் வைகையைப் போல செய்திட வேண்டும்”. ஆண்டுக்கு இருபது நாட்களுக்கும் குறைவாக மட்டுமே நீர் ஓடும் வறண்ட வைகையில் அப்படியென்ன சிறப்பான முறையிருந்திருக்க முடியும்?

அவர் இவ்வாறு எழுதினார்,

“எனது நினைவு சரியாக இருக்குமானால், இந்திய தீபகற்பத்தின் கடைகோடியில் ஓடும் வைகை ஆற்றின் நீர் எப்போதோ ஒருமுறை மட்டுமே கடலில் சென்று சேர்கிறது; நாம் வியப்புறும் வண்ணம் அந்த ஆற்று நீரின் ஒவ்வொரு சொட்டும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. அந்த ஆற்றில் மழைக்காலங்களில் வெள்ளம் ஓடும் பொழுது ஆற்றின் குறுக்கே அங்கும் இங்குமாக அணைகள் போடப்பட்டு, தண்ணீர் திருப்பி விடப்பட்டு பயிர்க் காலம் முழுதுக்குமான தேவைகளை நிறைவு செய்யும் வண்ணம் குளங்களில் ஆங்காங்கு சேமிக்கப்படுகிறது. என்னைப் பொறுத்தவரை, இதுதான், மிகப் பெரும் ஆறுகளை நாம் நடத்தும் நெறி முறையாக இருக்க வேண்டும். தற்காலத்தில் மிகப் பெரும் நீர்த்தேக்கங்களை உருவாக்குவதற்கான இடங்களைத் தேடியலைவது என்பது பெருமைக்குரிய விசயமாக கருதப்படுகிறது. நீர்த்தேக்கங்களின் அளவு பெரிதாக ஆக அதை நிர்மாணிக்கும் செலவுகள் குறையக் கூடும் என்பது உண்மையே. ஆனாலும், தண்ணீரின் உண்மையான மதிப்பை அறிய வேண்டுமானால், அதற்காகும் செலவுகள் முதன்மையான காரணமாக இருக்கக் கூடாது மாறாக, அது எங்கே எப்படி தேக்கப்படுகிறது என்பதே முக்கியமானதாகும்.

நீர்தேக்கங்கள் அமைக்க புதிய இடங்களை எப்படி தேர்வு செய்ய வேண்டும் என விரும்பும் மாணவர்கள் தீபகற்ப இந்தியாவின் புவியியல் வரைபடங்களை முதலில் தெளிவாக ஆராயவேண்டும். அங்கே தான், ஒவ்வொரும் பள்ளமும் மேடும் ஒரு ஏரியாக உருப்பெற்றிருப்பதைக் காண முடியும். ஏரிகள் என்று அழைக்கப்படும் இந்த நீர்த்தேக்கங்கள் பெரும் பஞ்ச காலத்தில் பேருதவியாக இல்லாவிட்டாலும் வறண்ட காலங்களில் மதிப்பிட முடியாத தண்ணீரை தேக்கி வைக்கும். கூடவே, இந்த ஏரிகளை அருகில் இருக்கும் பெரிய ஓடைகள் அல்லது வற்றாத ஆற்றுடன் இணைத்துவிட்டால் பஞ்ச காலத்திலும் கூட தண்ணீரை ஆங்காங்கே தேக்கி வைத்துக் கொள்ள முடியும். நமது மாபெரும் பொறியாளர் சர். ஆர்தர் காட்டன் (Sir Arthur Cotton) இப்படி வற்றாத ஆறுகளை இணைத்து ஆங்காங்கு அமைக்கப்பட்டுள்ள பழமையான ஏரிகளுக்கு நீரை வழங்க ஒரு திட்டம் தீட்டியுள்ளார் என்பதை நீங்கள் அறிவீர்கள். ஆனாலும், நான் உங்களனைவரையும் கேட்டுக் கொள்வது என்னவென்றால் பல பள்ளத்தாக்குகளைக் கொண்டிருக்கும் இந்தியா முழுவதும், வைகையில் அமைக்கப்பட்டுள்ளது போன்ற ஒரு பாசன கட்டமைப்பை ஏன் ஏற்படுத்தக் கூடாது என்பதுதான்.”

என்ன செய்ய வேண்டும் என்பதையும் அவரே சொன்னார்.

கீழ் வைகை பகுதியின் குளங்கள்
கீழ் வைகை பகுதியின் குளங்கள்

நீரை மிகவும் சிக்கனமாகவும் சீரிய முறையிலும் தேக்கி வைக்கும் வழிமுறைகளுக்கு ஒரு மிகப் பெரிய சான்று உண்டென்றால் அது இங்கே தான். உயர்ந்த அதிகாரத்தையும் அறிவாற்றலையும் கொண்டிருக்கும் நாம் காலத்தால் பழமையான இந்த முறையை பின்பற்ற வெட்கப்பட வேண்டியதில்லை.

பிரெடெரிக் காட்டன் 1901 -ம் ஆண்டு எழுதிய “இந்தியாவின் மாபெரும் ஆறுகளை பற்றிய ஒரு கடிதமும் இரண்டு கட்டுரைகளும்: நாட்டை வளமாக்கவும் பெரும் பஞ்சங்களை தடுக்கவும் செய்யத்தகுந்தது என்ன ? எனது எழுபது ஆண்டு கால ஆய்வுப் பணிக்குப் பின் எழுதியது” என்ற நூலில் இருந்து எடுக்கப்பட்ட மேற்கோள்.

பிரெடெரிக் காட்டன், ஒரு ஆங்கிலேயர், ஏகாதிபத்திய மனப் பாங்குடையவர். இந்தக் கட்டுரையை அவர் எழுதிய போது அவர் வயது தொண்ணூற்று நான்கு. எழுபது ஆண்டுகள் பொறியியல் பணியும் ஆய்வும் செய்த அனுபவம் மிக்கவர். இந்தியா மட்டுமின்றி பல நாடுகளைச் சுற்றியவர். இங்கிலாந்து நாட்டின் பிரபலமான ஒரு பொறியியல் கல்லூரியில் பயிற்சி முடிந்து செல்லும் இளம் பொறியாளர்களுக்கு என அவர் இதனை எழுதினார். வைகையின் பாசனத்தைப்பற்றி தலை சிறந்த பொறியாளர்கள் மட்டுமின்றி கிறித்தவப் பாதிரிகள், வரலாற்று ஆய்வாளர்கள், ஆங்கிலேய அதிகாரிகள், நிலவியல் வல்லுனர்கள் என்று பலரும் வியந்து எழுதியுள்ளனர். ஆறுகளையும் குளங்களையும் வன்முறையின்றி ஒரு சேர இணைக்கும் இந்த தொழில் நுட்பத்தை வைகையில் கண்டவர்கள் பலர்.

வைகை ஆற்றின் நீர் சுமார் ஆயிரம் கிராமங்களுக்குச் சென்று சேரும் வண்ணம் ஒரு வலைப் பின்னல் போன்ற கால்வாய்களும் ஏரிகளும் அடங்கிய ஒரு கட்டமைப்பை பழந்தமிழர்கள் பல நூறு ஆண்டுகளாக செய்து வைத்திருந்தனர். ஆனால், வைகையின் இன்றைய நிலை என்ன?

இதோ, தமிழ்நாட்டு அரசின் வைகை குறித்த 2004-ம் ஆண்டு வெளியான மிக விரிவான ஒரு சுற்றுப்புற சூழல் அறிக்கை, விரகனூர் அருகில் உள்ள கீழ் வைகைக் கால்வாய்களைப் பற்றி இவ்வாறு கூறுகிறது:

“இந்த இடத்தில், மிக ஆழமாக மணல் அள்ளப்பட்டுள்ளது. மணல் தோண்டப்பட்டதாலும், அதனை அடுத்து ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளதாலும் கால்வாய்கள் எதுவும் செயல்படவில்லை. கட்டனூர் கால்வாய் இருந்த இடம் தெரியாமலே போய்விட்டது. இது தவிர்த்த இரண்டு கால்வாய்கள் அவை தொடங்கும் இடத்திலேயே காணவில்லை, சிறிது தூரம் சென்ற பின்னர் மட்டுமே தென்படுகின்றன. ஆனாலும் கூட, வைகை ஆற்றிலிருந்து இந்தக் கால்வாய்களுக்கு தண்ணீர் செல்லும் என்ற பேச்சுக்கே இடம் இல்லை”.

இதே அறிக்கை, வைகையாற்றின் பாசனம் பெறும் பகுதி நெடுகிலும் என்னென்ன சூழல் மாசுகள் உள்ளன, அதனால் ஆறும், பாசனக் குளங்களும் எதிர்நோக்கும் பிரச்சனைகள் என்னென்ன என்று தெரிவிக்கிறது. சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக உலகப் பெரும் பொறியாளர்கள் வியக்கும் வண்ணம் செயல் பட்டு வந்த ஆறும் கால்வாயும் இன்று எப்படி அழிந்து ஒழிந்து வருகிறது என்பதை தெரிந்து கொள்ளலாம்.

ஆறு பள்ளமானால் கால்வாய் மேடிட்டுப் போகும் என்பதை ஏற்கனவே பார்த்தோம். ஒரு எடுத்துக் காட்டாக, மதுரை நகரத்திற்கு மேற்கிலும் கிழக்கிலும் ஒரு பத்து கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள எட்டுக் கால்வாய்களின் நிலையை கீழ்க்கண்ட அட்டவணையில் காணலாம்.

ஆற்றுக் கால்வாய்களின் நிலைமை

அட்டவணை-1 மதுரை நகருக்கு அருகில் உள்ள கால்வாய்களின் நிலை

வரிசை எண் கால்வாயின் பெயர் கால்வாய்க்கும் ஆற்றுக்கும் இடையே தோண்டப்பட்ட மணல் பள்ளம் (அடிகளில்) கால்வாயின் நிலைமை
1 மாடக்குளம் கால்வாய் 20 பாசனப் பரப்பு 3400 ஏக்கரில் இருந்து 400 ஏக்கர் ஆக குறைந்து விட்டது. மிகுந்த சிரமங்களுக்கு இடையே வேறு ஒரு பகுதியில் இருந்து நீர் வழங்கப் பட்டு வருகிறது.
2 கீழமாத்தூர் வரத்துக் கால்வாய் 15 பயன்பாட்டில் இல்லை.
3 துவரிமான் வரத்துக் கால்வாய் 15 பயன்பாட்டில் இல்லை. சுமார் 440 ஏக்கரில் பாசனம் இல்லை
4 கோச்சடை கால்வாய் 30 பயன்பாட்டில் இல்லை. சுமார் 500 ஏக்கரில் பாசனம் இல்லை.
5 அச்சம்பத்து ஊற்றுக் கால்வாய் 25 பயன்பாட்டில் இல்லை
6 அவனியாபுரம் வரத்துக் கால்வாய் 40 பயன்பாட்டில் இல்லை. 1250 ஏக்கரில் பாசனம் இல்லை. மதுரை நகரின் சாக்கடை நீர் தேக்கப் படுகிறது.
7 சிந்தாமணி கால்வாய் 15 பயன்பாட்டில் இல்லை. 482 ஏக்கரில் பாசனம் இல்லை.
8 அனுப்பானடி வரத்துக் கால்வாய் 10 பயன்பாட்டில் இல்லை. 996 ஏக்கரில் பாசனம் இல்லை

இந்தக் கால்வாய்கள் அனைத்தும் மிகவும் புராதனமானவை என்பதை மீண்டும் சொல்லவேண்டியதில்லை. கி.பி. எட்டு முதல் பனிரெண்டாம் நூற்றாண்டு வரையிலான பல கல்வெட்டுகள் வைகையில் வெட்டப்பட்ட கால்வாய்கள் குறித்த ஏராளமான தகவல்களைக் கொண்டிருக்கின்றன. மேலே கண்ட குளங்கள் அனைத்தும் குறைந்தது பத்து நூற்றாண்டுளுக்கும் முந்தியவை. அவற்றில் சில சங்க காலத்தில் இருந்தே இருப்பதாகவும் சில அறிஞர்கள் கூறி வருகிறார்கள். எப்படிப் பார்த்தாலும் ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலே பணி செய்து வந்த இந்தக் கட்டுமானங்கள் இன்று செயலில் இல்லை.

தண்ணீர் வராத இந்தக் குளங்களில் பல அழியும் நிலையில் இருக்கின்றன. மதுரை நகரைப் பற்றிய ஒரு இடைக்காலக் கல்வெட்டு “மாடக்குளக் கீழ் மதுரை” என்று அழைக்கிறது. இதன் பொருள் மாடக்குளத்தினால் பயன் பெற்ற மதுரை நகரம் என்பது. மதுரைக்கு முகவரி தந்த இந்தக் குளம் இன்று அழியும் நிலையில் இருக்கிறது. ஆண்டு தோறும் வைகையில் இருந்து தண்ணீர் பெற மிகுந்த சிரமம் அடைகிறது. பல நூறு ஆண்டுகள் செயல் பட்ட இந்தக் கால்வாய் கடந்த நாற்பது ஆண்டுகளுக்குள் செயல் படாமல் போய் தற்சமயம் வேறு ஒரு இடத்தில் ஆற்றை மடக்கி, நீரைத் தேக்கி, மடைமாற்றி சுற்றி வளைத்து தண்ணீரை கொண்டு வருகிறார்கள் பொதுப் பணித்துறையினர். வெகு விரைவில் இதுவும் சாத்தியமில்லாமல் போகும்.

ஆற்றிலே மணலைத் தோண்டி, தமிழ்நாட்டின் வரலாற்றுக்கும் புவியியலுக்கும் மணல் கொள்ளையர்கள் விட்டுச் சென்ற அடையாளம் இது தான்.

வைகை ஆற்றுக்கும் ஏரிகளுக்குமான நீண்ட நெடிய தொடர்பை இன்னமும் விரிவாக இனி வரும் கட்டுரையில் பார்க்கலாம்.

– கிருஷ்ணராஜ்

சந்தா செலுத்துங்கள்

இணையத்தில் உழைக்கும் மக்களின் குரலாக பதினோரு ஆண்டுகளாக போராடும் வினவுடன் கை கோருங்கள். ஆதரியுங்கள்

 1. //மணல் தோண்டப்பட்டதாலும், அதனை அடுத்து ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளதாலும் கால்வாய்கள் எதுவும் செயல்படவில்லை//
  //கால்வாய்கள் அவை தொடங்கும் இடத்திலேயே காணவில்லை//
  //ஆற்றிலிருந்து இந்தக் கால்வாய்களுக்கு தண்ணீர் செல்லும் என்ற பேச்சுக்கே இடம் இல்லை//
  //பயன்பாட்டில் இல்லை. 1250 ஏக்கரில் பாசனம் இல்லை. மதுரை நகரின் சாக்கடை நீர் தேக்கப் படுகிறது.//

  வயிறு எரிகிறது. நாம் அழிவை நோக்கி விரைந்து செல்கிறோம்.

  மணற் கொள்ளையர்கள் என்று மட்டும் பேசுவது சரியல்ல. நம்மிடையே கட்டப்படும் கட்டிடங்கள் எல்லாமே அளவுக்கு மீறியவைகள் தான். இதை மற்றும் மேலும் பல தேவைகளை குறைத்துக்கொள்ளாத வரை நமது அழிவுப்பயணம் நிற்கப்போவதில்லை.ஒரு காலத்தில் இந்த கட்டிடங்கள் பாலங்கள் மட்டும் தான் இருக்கும். மனிதர்கள் இருக்கமாட்டார்கள். சிந்து சமவெளி நகரங்களைப்போல.

 2. ம.க.இ.க ,வினவு மற்றும் தோழர்கள் பணி என்னை மெய் சிலிர்க்க வைக்கிறது பணம் வாங்கிகொண்டு பிட் செய்தி எழுதும் பத்திரிக்கை,ஆபாச படம் போட்டு பிழைப்பு நடத்து பத்திரிக்கைகல், வினவு முன்பு முட்டிபோட வேண்டும். நாட்டை சுரண்டும் இந்த கொடியவர்களுக்கு எப்ப தண்டனை கிடைக்குமோ? இவர்களை யார் தண்டிக்க போகிறார்களோ? சாதியை ,மதத்தை சொல்லி உழைக்கும் மக்களை பிரித்து சுரண்டி திங்கும் இவர்களை, உழைக்கும் வர்க்கம் VS சுரண்டும் வர்க்கம் என்று மக்கள் ஒன்று திரண்டால் மட்டுமே இது சாத்தியம். இந்த கட்டுரை எழுத்தாளர்களுக்கும் ,செய்திகளை சேகரித்த தோழர்களுக்கும் வாழ்த்துக்கள்.

 3. திரு.சகாயம் இ.ஆ .ப அவர்களே நீங்கள் நடத்தும் விசாரணைக்கு வினவில் வெளிவரும் செய்தியை கணக்கில் எடுத்துகொள்ளுங்கள்,உங்களளுடைய நேரம்,செலவு எல்லாம் மிச்சம் ஆகும் ,அதைவிட மக்களுக்கு உண்மையை தெளிவாக கூறமுடியும்.

 4. கரிகாலன் கட்டிய கல்லணையும் பாசன வாய்க்கால்களும் இராசேந்திர சோழன் அமைத்த வீராணம் ஏரியும் ஆயிரம் ஆண்டுகட்குப் பின்னரும் உயிர்காக்கும் அமைப்புகளாக நிற்கின்றன. தமிழ் மன்னர் காலத்தில் அமைக்கப்பட்ட ஏரிகள், குளங்களை விட கடந்த ஆயிரம் வருடங்களில் செய்யப்பட்ட பெரிய முன்னேற்றங்கள் இல்லை என்பது வருந்தத்தக்கது.
  மன்னர் கால நீராதாரங்களின் மீது நடத்தப்பட்டுள்ள ஆக்கிரமிப்புகளை இக்கால மன்னர்கள், மீட்க வேண்டும். பொதுப் பயன்பாட்டுக் குளங்கள் மழை நீர் சேகரிப்பு, நீர் சிக்கனம், இயற்கைமுறையில் நீர்த் தூய்மை, மறு சுழற்சி ஆகியவைகளுக்கு நம் முன்னோர்களின் நிலைத்த, நீடித்த வாழ்முறைக்குச் சான்றுகள். மின்சக்தியை மையப்படுத்தும் நீர்ப் பயன்பாட்டு முறைகள் நீடிக்க மாட்டா. இப்பொழுதே நம் மின் நிலையங்களுக்கு வேண்டிய நிலக்கரியை ஆப்பிரிக்காவிலிருந்து கொண்டுவர முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. ஆப்பிரிக்க நிலக்கரியும் வறண்டு போனால் என்ன செய்வது? ஆட்சியாளர்கள் என்ன செய்யப் போகிறார்கள்?
  வேளாண்மைக்கான உள்கட்டமைப்புகள் பசுமைப் புரட்சிக் காலத்தில்
  ஆறுகளைச் சிறைப் பிடிக்கும் அவலக் காலம் இது. அவற்றை மீட்க அனைத்து வகையிலும் நாம் ஒன்றிணைந்து போராட வேண்டும். அதே நேரத்தில் ஒவ்வொரு வடிநிலத்திலும் மழைநீர் வெளியேறி ஓடுவதைத் தடுத்து ஏரி, குளங்களில் தேக்கவும், நிலத்தடி நீராகச் சேமிக்கவும் தேவையான கட்டமைப்புகளையும் உருவாக்க வேண்டும். குறைந்து கொண்டே போகும் நிலத்தடி நீர்மட்டமும், நிலத்தடி நீரில் அதிகரிக்கும் அதீத உப்பும் மனித உடல்நலனையும், வேளாண்மையையும் அச்சுறுத்தும் பெரிய சக்திகள். இதனை வெல்ல மழைநீர் சேகரிப்பும் நிலத்தடி நீராக உட்புகுத்தலும் இன்றியமையாதவை.
  ஏற்கெனவே கடல்நீரைக் குடிநீராக்கும் திட்டங்கள், போத்தல் நீர் வணிகம் ஆகியவற்றால் பல நிறுவனங்கள் இந்தியாவை பெருஞ்சந்தையாக்கக் துடிக்கின்றன…….

 5. திருபெருமந்தூர் ஏரி, அமரம்பேடு ஏரி, நல்லூர் ஏரி, சோமங்கலம் ஏரிகள் நீர் நிரம்பியதும் உபரி நீர் இணைப்பு கால்வாய்கள் மூலம் செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர் வரும்..அந்த வழியிலும், கிருஷ்ண்ணா நதிநீர் கால்வாய்களில் தான் இப்படி சிப்காட் தொழிற்ச்சால கண்ணாடி கழிவுகள், இராசயன கழிவுகள் கொட்டப்படுகின்றன்..இதைதான்..இந்த விசநீரைத்தான் சென்னை குடிநீர்க்கு என்று கொண்டு செல்கின்றனர்..

 6. பாலாற்று படுகை…செம்பரம்பாக்கம்ஏரி..பெரியபுராணம்…
  செம்பரம்பாக்கம் ஏரி நீர்பாசனத்தினால் பயன்பெற்ற 64 கிராமங்களும் குன்றத்தூரை சுற்றியுள்ளவைகளாகும்… 12ஆம் நூற்றாண்டை சேர்ந்த பெரியபுராணம் எழுதிய சேக்கிழார் குன்றத்தூரைச் பிறந்து வாழ்ந்தவர்.. செம்பரம்பாக்கம் ஏரியை பற்றிய வரலாற்று குறிப்புகள் ஏதும் உள்ளதா என்று பெரியபுராண சொற்பொழிவாளர் கலாநிதி கே.பி. அறிவானந்தம் அவர்களிடம் கேட்ட பொழுது பெரியபுராணத்தில் செம்பரம்பாக்கம் ஏரி.. குன்றத்தூர் பற்றி தகவல்கள் இல்லை என்றார். ஆனால் சேக்கிழாருக்கு பின் வந்த நூற்றாண்டை சேர்ந்த கொற்றவன்குடி உமாபதி சிவாச்சாரியார் (கி.பி. 1300-1325).எழுதிய சேக்கிழார் புராணம் எனும் “திருத்தொண்டர் புராண வரலாறு” என்ற பாடல் நூலில் குன்றத்தூர் பற்றி தகவல் உள்ளது என்றார். அந்த பாடல்:
  “பாலாறு வளம்சுரந்து நல்க மல்கும்
  பாளை விரி மணம்கமழ்பூஞ் சோலை தோறும்
  காலாறு கோவியிசை பாட நீடு
  களிமயில்நின்று ஆடுமியல் தொண்டைநாட்டு
  நாலாறு கோட்டத்துப் புலியூரக் கோட்ட
  ந்ன்றிபுனை குன்றைவள நாட்டு மிக்க
  சேலாறு கின்றவயல் குன்றத் தூரில்
  சேக்கிழார் திருமரபு சிறந்த தன்றே!”
  பாலாறு நீரினால் வளம்சுரந்து வயல்கள் செழித்த குன்றத்தூர் என்று வருகின்றது.. பாலாற்று நீர் கால்வாய்கள் மூலம் குன்றத்தூரை சுற்றி உள்ள கிராமங்களுக்கு விவசாயம் செய்ய கொண்டுவரப்பட்டு உள்ளது. இப்பொழுதும் திருபெரும்ந்தூர் ஏரி பாலாற்றுடன் பாங்காங் கால்வாய் மூலம் இணைக்கப்பட்டுள்ளது. திருபெரும்ந்தூர் ஏரி உபரி நீர் சவுத்திரி கால்வாய் மூலம் செம்பரம்பாக்கம் ஏரிக்கும்..இடையில் உள்ள சோமங்கலம் ஏரி, வெங்காடு ஏரி, அமரம்பேடு வருகின்றது… மேலும் பாலாறு, கூவம் ஆறு, கொசத்தலை ஆறு, பூண்டி ஏரி, புழல் ஏரி அனைத்தும் இணைப்புக்கால்வாய்கள் மூலம் நமது முன்னோர்களால் இணைக்கப்பட்டு சிறப்பாக பராமரிக்கப்பட்டது. குடிமராமத்து முறை இந்த நீர்நிலைகளை தூர்வாரி உயிர்ப்புடன் பலநூற்றாண்டுகளாக பராமரிக்கப்பட்டு உழவு, குடிநீர் தேவைகளைப் பூர்த்தி செய்தத்து.. ஆனால் கடந்த 20 ஆண்டுகளுக்குள் தமிழக ஆட்சியாளர்கள், அதிகாரிகளால் அலட்சியம் செய்யப்பட்டதால் இந்த இணைப்பு கால்வாய்கள் ஆக்கிரமிப்பிற்கு உள்ளாக்கப்பட்டு விட்டது. பாலாற்று கனிம மணல் அரசியல்வாதிகள்-அதிகாரிகள்-பெரும் பணக்காரர்களால் கொள்ளை அடிக்கப்பட்டு அதில் நீர் வரத்து நின்று போனது…
  பாலாறு- ஏரிகள்- இணைப்புகால்வாய்கள்-ஆறுகள்-குளங்கள் பாதுகாத்தால் சென்னை-திருவள்ளுர்-காஞ்சிபுரம் மாவட்டங்களுக்கு தேவையான குடிநீர் தராளமாக கிடைக்கும். கிருஷ்ணா- வீராணம் என்று தேவையற்ற செலவிணங்கள் தவிர்க்க முடியும்… யாரிமும் குடிநீருக்கு கையேந்த அவசியம் இல்லை.. அத்துடன் பாலாறு- ஏரிகள்- இணைப்புகால்வாய்கள்-ஆறுகள்-குளங்கள் பாதுகாத்தால் என்பது இயற்கையை உயிர்ப்புடன் வைக்கப்பட்டு பல் உயிர்ப்பு வளம் (BIO-DIVERSITY) அழியாமல் காப்பாற்றப்படும்.
  இல்லையெனில் குண்டி கழுவ கூட கார்ப்பரேட் கம்பெனிகளிடம் நீரை விலை கொடுத்த வாங்க வேண்டி வரும்..

 7. ஏரிகள் மாவட்டம் செங்கல்பட்டு மாவட்டம் (இன்றைய ஸ்ரீபெரும்புதூர் , திருவள்ளுர் மாவட்டங்கள்) ஏரிகள் மாவட்டம் என்று அழைக்கப்பட்டன..… ஆயிரக்கணக்கான ஏரிகள், குளங்கள், இணைப்பு கால்வாய்கள் நிறைந்த இருந்தன… 16 நூற்றாண்டுகளுக்கு முன் பல்லவர் ஆட்சி காலத்தில் உருவாக்கப்பட்டு…. பிற்க்கால சோழர் ஆட்சியில் செழுமைப்படுத்தப்பட்டு, ஆங்கிலேடர் ஆட்சியில் சிறப்பாக பராமரிக்கப்பட்டன….இந்த மாவட்டங்கள் செ 16 நூற்றாண்டுகளாக நம் முன்னோரிகள் கூட்டு உழைப்பு, கூட்டு சிந்தனையால் உருபெற்ற பல ஏரிகள் நம் தலைமுறையில் அதுவும் 20 ஆண்டுகளில் அழிக்கப்பட்டு விட்டன …. புதிய பொருளாதார கொள்கை என்றும், வளர்ச்சி என்றும் ஏரிகளை, நீர்நிலைகளை குப்பை தொட்டிகளாக கருதி இந்திய மற்றும் பன்னாட்டு நிறுவனங்கள் இராசயன- மங்காத கழிவுகளை கொட்டி சீரழிக்கின்றன..நிலத்தடி நீர்மட்டம் அதல பாதாளத்திற்குச் சென்று விட்டது. தண்ணீருக்காக, 1,200 – 1,300 அடி ஆழத்திற்கு ஆழ்துளை கிணறுகள் அமைக்கும் இக்கட்டான நிலை ஏற்பட்டுள்ளது.’மழை இந்த வருஷமும் ஏமாத்திடுச்சே… தண்ணிக்கு அல்லாட வேண்டியது தான்…’ என்ற வார்த்தையை, பருவமழை பொய்க்கும் போதெல்லாம், தமிழக மக்கள் கூறுவது வழக்கம். மழை பெய்யவில்லை என, வருத்தப்படுவதில் தவறில்லை. ஆனால், கொட்டிய மழைநீரையும் சேமிக்காமல்,ஏரிகளை, நீர்நிலைகளை அழித்து விட்டு , கழிவுகளை கொட்டி வீணடித்துவிட்டு, ‘வருண பகவான் ஏமாத்திட்டாரு’ என, குறைகூறுவது சரியல்ல.

 8. அதியமானைப் போன்ற “அறிவுஜீவிகள்” இதற்கெல்லாம் என்ன கருத்து வைத்திருக்கிறார் என அறிய ஆவலாக இருக்கிறது… இப் பிரச்சனைகளை ஃபிரீமார்கெட் எக்கனாமிஎவ்வாறு எதிர்கொள்ளும் அல்லது என்ன தீர்வுகளை தரும் என லிங்க் கொடுப்பார் எனநம்புவோமாக…

  • மணல் மட்டும் அல்ல , ஆயிலும் அதே கதை தான் .

   அரசாங்கம் நீர்வளத்தை காக்க கண்டபடி மணல் அள்ளுவதை தடுகிறது ( தடுத்து இருக்க வேண்டும் ) என்று வைத்து கொள்வோம் .

   முதலில் உள்ளூர் மணல் விலை மிகவும் அதிகமாகும் . பணக்காரர்களுக்கு மட்டும் கிடைக்கும் .

   முதலாளிகள் உடனே மணல் அதிகமாக கிடைக்கும் ஊரில் இருந்து இறக்குமதி செய்வார்கள்

   அடுத்து பாலைவன மணலும் கூட சிறப்பு ரயிலில் கொண்டுவரப்பட்டு தரமில்லை என்றாலும் சினிமா நடிகர்களை வைத்து “நானே பாலைவன மணல் தான் நம்பறேன்” என்று கூரவைக்கபட்டு மக்கள் மத்தியில் பொது கருது உருவாக்கப்படும்

   அப்பொழுதும் மணல் விலை அதிகம் , சுரண்டுவதற்கு ஏழை நாடுகளும் ஒதுகொள்ளவிலை என்றால்,
   இப்பொழுது இதுவம் காஸ்ட் எபெக்டிவ் இல்லை என்றால் , செங்கல் பதிலாக புதிய தொழிநுட்பத்தில் வீடு கட்ட முடியுமா என்று புதிய பொருள் தேடப்படும் .

   • இராமன்,

    இப்படி சொல்ல உங்களுக்கு வெட்கமாக இல்லை. கட்டுரை, மணல் கொள்ளையால் ஏற்படும் பிரச்சினைகளை சொல்கிறது. அதற்கு மாற்று என்னவென்பதை பற்றி பேச வக்கத்து அதை நியாப்படுத்தும் உங்களது வாதம் இயல்பிலேயே மக்கள் விரோதமானது.

    உங்களுக்கு சில கேள்விகள்,

    1. சட்டம் 3 அடி தான் மணல் அள்ள வேண்டும் என்று சொல்கிறது. ஆனால் நடப்பதோ சட்டத்திற்கு புறம்பாக மணற்கொள்ளை நடக்கிறது. இது சரியா?

    2. மணல் விலையேறி ஏழை எளிய மக்கள் வாங்க முடியாமல் தடுமாருவார்களே என்று பம்மாத்து காட்டாமல், அந்த விலையேற்றத்தால் யார் இலாபமடைவார்கள் என்றும் யாருக்கு நட்டம் என்றும் கூற முடியுமா? இப்பொழுது மட்டும் என்ன மணல் ஏழை எளிய மக்கள் வாங்குமளவிற்கு விலைக் குறைவாகவா கிடைக்கிறது?

    3. மணல் என்பது பொது மக்களின் சொத்து என்ற நினைப்பிருக்கட்டும் முதலாளித்துவக் கைக்கூலிகளுக்கு. யார் சொத்தை எடுத்து யார் விலை நிர்ணயம் செய்வது? அப்படியே எடுக்கப்படும் மணலானது யாருக்கு பயன்படுகிறது? இருக்கும் மணலை எல்லாம் அள்ளி நீங்களே தின்றுத் தீர்த்து விட்டால் வீடில்லாமல் வாழும் மக்களுக்கு என்ன பதில்?

    3. இயற்க்கை வளங்களின் பயன்பாடு என்பது அதன் மறு உற்பத்தி சக்திகளைப் பொருத்தது. இங்கே ஆறு என்பது அமுத சுரப்பியா எடுக்க எடுக்க ஊறிக் கொண்டே இருக்க. வயல் வெளிகளில் தானியங்களின் உற்பத்திக்காக விவசாயிகள் ஒவ்வொருப் பட்டத்திற்கும் சிறிது இடைவெளி கொடுப்பார்கள். ஆனால் இங்கே நடப்பது என்ன? இடைவிடாமல் இலாப வெறிக்காக நடக்கும் இந்த கொள்ளை எங்கு கொண்டு நம்மை விடும் என்பதை பற்றி கிஞ்சித்தும் அக்கறைக் கொள்ளாத உங்களை போன்றவர்களே மக்கள் விரோதிகள்.

    4. சரி வீடு கட்ட மணல் வேண்டும். இதை யாரும் மறுக்க முடியாது. ஆனால் கண்ணை விற்று சித்திரம் வாங்க முடியுமா? அப்படியே அப்படி அள்ளப்பட்ட மணலை வைத்து யாருக்கு வீடு கட்டுகிறார்கள்?

    5. இது போல மக்கள் எதிர்ப்பால் மணல் கிடைக்காமல் விட்டால் வெளிநாடுகளில் மணலை இறக்குமதி செய்வார்கள். அங்கேயும் எதிர்ப்பு வந்தால் வேறொரு தொழில்நுட்பத்திற்கு செல்வார்கள். உங்களுக்கு கொஞ்சமாவது அறிவு நாணயம் இருந்தால் இப்படி சொல்வீர்களா? ஏன் அதை இப்பொழுது செய்திருக்க வேண்டியது தானே? அதாவது அந்த மணலை கொள்ளையிடாமல் அந்த புதிய தொழில் நுட்பத்தை புகுத்தி கட்டிடங்களை எழுப்ப வேண்டியது தானே?

    6. இது போன்ற கொள்ளைகளுக்காக நடிகர்களை வைத்து விளம்பரம் தேடுவது முதலாளித்துவ யுத்தி தானே. கோக்கு விளம்பரம் ஒன்று போதுமே.

    நன்றி.

    • Please read the reply for Ahilan one more time.

     His question is ஃபிரீமார்கெட் எக்கனாமிஎவ்வாறு எதிர்கொள்ளும்

  • அகிலன்,

   ஃபிரீ மார்கேட் என்பது விதிகளே இல்லாத காட்டுமிராண்டி ஆட்டம் அல்ல. அப்படி புரிந்து கொண்டிருப்பவர்களிடம் விவாதித்து தீர்க்க முடியாது. Rule of Law என்று இருக்கிறது. ஆனால் இந்தியாவில் இது பல இடங்களில் பேருக்கு தான் உள்ளது. மணல் மற்றும் கனிம வளங்களை வெட்டி எடுக்கும் முறைகளில் சட்ட விதிகளை பின்பற்றாமல் செயல்படுவது அல்லது பின்பற்றுவதில் உள்ள நடைமுறை சிக்கல்கள் (எல்ல டாகுமெண்டுகளின் சரியாக, சட்டபடி வைத்திருந்தாலும் லைசென்ஸ் கிடைக்காது, லஞ்சம் கொடுத்தால் தான் கிடைக்கும் நிலை) இவை எல்லாம் கணக்கில் கொள்ளாமல் பொத்தாம் பொதுவாக இது தான் முதலாளியம் என்பது அறியாமை. வளர்ந்து நாடுகளிலும் மணல் மற்றும் கனிம சுரங்கங்கள் பல ஆண்டுகளாக ஒழுங்காக நடக்கின்றன. (சில நேரங்களில் அங்கும் சட்ட விரோதங்கள் இருக்கலாம், nothing is 100 % perfect) ; ஆனால் பொதுவாக அந்நாடுகளில் இந்தியாவை போல் மாஃபியா ராஜ்ஜியம், இத்துறைகளில் சாத்தியமில்லை. அவைகளும் முதலாளிய நாடுகள் என்ற பெயரில் தான் வகைப்படுத்தபடுகின்றன.

 9. John P. Mencher, Agriculture and Social Structure in Tamil Nadu, Bombay,
  The Chembarambakkam tank is the biggest tank in
  Chingleput district. It is an ancient tank formed long before the days of the
  British rule. The bund is about 5 ½ miles long and the tank has the
  capacity of 3,120 m.cu. ft. The water spread at full tank level is about 9 ½
  square miles. In addition to the rainfall on its own catchment the tank also
  receives supplies from the Palar and Cooum rivers
  The supply from Palar river to the Chembarambakkam tank is
  through Chowdarykal Channel and supply from Cooum is through New
  Bangaru Channel taking off from Korattur Anicut It is interesting to
  know that the Palar basin is the most tank intensive basin in Tamil Nadu……
  .Tanks are the main source of irrigation in the Chingleput
  district. About 450,000 acres are irrigated by as many as 653 tanks found
  throughout the district. Though rainfall is generally favourable in the
  locality, the district is peculiarly suited to tank irrigation and topography of
  the district favours this method of irrigation97. According to the statistical
  atlas of Chingleput district almost every village has atleast one tank

 10. இன்று ஒரு சின்ன குழாயில் நீர் பிடிக்கும் காலத்தில் நாம் இருக்கிறோம். ஆனால், நமது தமிழ் இலக்கியங்களில் சொல்லப்பட்டிருக்கும் நீர் நிலைகள் மொத்தம் 47 ஆகும்… நீர் இன்று அமையாது உலகு ..என்பதற்கு .. தமிழர்கள் எப்படி நீரை அதை சேமிக்கும் தொழில்நுட்பங்களை புரிந்து கொண்டார்கள் என்பதை இந்த சொற்களே சாட்சி..
  (1) அகழி (Moat) – கோட்டையின் புறத்தே அகழ்ந்தமைக்கப்பட்ட நீர் அரண்.
  (2) அருவி (Water Falls) – மலை முகட்டில் தேங்கிய நீர் குத்திட்டு விழுவது.
  (3) ஆழிக்கிணறு (Well in Sea-shore) – கடலுக்கு அருகே தோண்டி கட்டிய கிணறு.
  (4) ஆறு (River) – பெருகி ஓடும் நதி.
  (5) இலஞ்சி (Reservoir for drinking and other purposes) – பல வகைக்கும் பயன்படும் நீர் தேக்கம்.
  (6) உறை கிணறு (Ring Well) – மணற்பாங்கான இடத்தில் தோண்டி சுடுமண் வலையமிட்ட கிணறு.
  (7) ஊருணி (Drinking water tank) – மக்கள் பருகும் நீர் நிலை.
  (8) ஊற்று (Spring) – பூமிக்கடியிலிருந்து நீர் ஊறுவது.
  (9) ஏரி (Irrigation Tank) – வேளாண்மை பாசன நீர் தேக்கம்.
  (10) ஓடை (Brook) – அடியிலிருந்து ஊற்று எடுக்கும் நீர் – எப்பொழுதும் வாய்க்கால் வழி ஓடும் நீர்.
  (11) கட்டுங்கிணக் கிணறு (Built-in -well) – சரளை நிலத்தில் வெட்டி, கல், செங்கல் இவைகளால் சுவர்கட்டிய கிணறு.
  (12) கடல் (Sea) – சமுத்திரம்.
  (13) கண்மாய் (கம்மாய்) (Irrigation Tank) – பாண்டிய மண்டலத்தில் ஏரிக்கு வழங்கும் பெயர்.
  (14) கலிங்கு (Sluice with many Venturis) – ஏரி முதலிய பாசன நீர் தேக்கம் உடைப்பெடுக்காமல் இருப்பதற்கு முன் எச்சரிக்கையாக கற்களால் உறுதியாக்கப்பட்டு பலகைகளால் அடைத்து திறக்கக்கூடியதாய் உள்ள நீர் செல்லும் அமைப்பு.
  (15) கால் (Channel) – நீரோடும் வழி.
  (16) கால்வாய் (Suppy channel to a tank) – ஏரி, குளம் ஊருணி இவற்றிக்கு நீர் ஊட்டும் வழி.
  (17) குட்டம் (Large Pond) – பெருங் குட்டை.
  (18) குட்டை (Small Pond) – சிறிய குட்டம். மாடு முதலியன் குளிப்பாட்டும் நீர் நிலை.
  (19) குண்டம் (Small Pool) – சிறியதாக அமைந்த குளிக்கும் நீர் நிலை.
  (20) குண்டு (Pool) – குளிப்பதற்கேற்ற ஒரு சிறு குளம்.
  (21) குமிழி (Rock cut Well) – நிலத்தின் பாறையை குடைந்து அடி ஊற்றை மேலெழுப்பி வரச்செய்த குடை கிணறு.
  (22) குமிழி ஊற்று (Artesian fountain) -அடி நிலத்து நீர் நிலமட்டத்திற்கு கொப்பளித்து வரும் ஊற்று.
  (23) குளம் (Bathing tank) – ஊர் அருகே உள்ள மக்கள் குளிக்கப் பயன்படும் நீர் நிலை.
  (24) கூவம் (Abnormal well) – ஒரு ஒழுங்கில் அமையாத கிணறு.
  (25) கூவல் (Hollow) – ஆழமற்ற கிணறு போன்ற பள்ளம்.
  (26) வாளி (stream) – ஆற்று நீர் தன் ஊற்று நீரால் நிரப்பி மறுகால்வழி அதிக நீர் வெளிச் செல்லுமாறு அமைந்த அல்லது அமைக்கப்பட்ட நீர்நிலை.
  (27) கேணி (Large Well) – அகலமும், ஆழமும் உள்ள ஒரு பெருங்கிணறு.
  (28) சிறை (Reservoir) – தேக்கப்பட்ட பெரிய நீர் நிலை.
  (29) சுனை (Mountain Pool) – மலையிடத்து இயல்பாயமைந்த நீர் நிலை.
  (30) சேங்கை (Tank with Duck Weed) – பாசிக்கொடி மண்டிய குளம்.
  (31) தடம் (Beautifully Constructed Bathing Tank) – அழகாக் நாற்பபுறமும் கட்டப்பட்ட குளம்.
  (32) தளிக்குளம் (Tank Surrounding a Temple) – கோயிலின் நாற்புறமும் சூழ்ந்தமைந்த அகழி போன்ற நீர் நிலை.
  (33) தாங்கல் (Irrigation tank) – இப்பெயர் தொண்ட மண்டலத்தை ஒட்டிய பகுதியில் ஏரியை குறிக்கும்.
  (34) திருக்குளம் (Temple tank) – கோயிலின் அருகே அமைந்த நீராடும் குளம்.
  (35) தெப்பக்குளம் (Temple tank with inside pathway along parapet wall) – ஆளோடியுடன் கூடிய, தெப்பம் சுற்றி வரும் குளம்.
  (36) தொடு கிணறு (Dig well) – ஆற்றில் அவ்வப்பொழுது மணலைத்தோண்டி நீர் கொள்ளும் இடம்.
  (37) நடை கேணி (Large well with steps on one side) – இறங்கிச் செல்லும் படிக்கட்டமைந்த பெருங்கிணறு.
  (38) நீராவி (Bigger tank with center Mantapam) – மைய மண்டபத்துடன் கூடிய பெருங்குளம். ஆவி என்றும் கூறப்படும்.
  (39) பிள்ளைக்கிணறு (Well in middle of a tank) – குளம் ஏரியின் நடுவே அமைந்த கிணறு.
  (40) பொங்கு கிணறு (Well with bubbling spring) – ஊற்றுக்கால் கொப்பளித்துக் கொண்டே இருக்கும் கிணறு.
  (41) பொய்கை(Lake) – தாமரை முதலியன மண்டிக்கிடக்கும் இயற்கையாய் அமைந்த நீண்டதொரு நீர் நிலை.
  (42) மடு (Deep place in a river) – ஆற்றிடையுடைய அபாயமான பள்ளம்.
  (43) மடை (Small sluice with single venturi) – ஒரு கண்ணே உள்ள சிறு மதகு.
  (44) மதகு (Sluice with many venturis) – பெரிய மடை அடைப்பும் திறப்பும் உள்ள, பல கண்ணுள்ள ஏரி நீர் வெளிப்படும் மடை.
  (45) மறு கால் (Surplus water channel) – அதிக நீர் கழிக்கப்படும் பெரிய வாய்க்கால்.
  (46) வலயம் (Round tank) – வட்டமாய் அமைந்த குளம்.
  (47) வாய்க்கால் (Small water course) – ஏரி முதலிய நீர் நிலைகள் ஆகும்..

 11. பெருத்த பயன்பாட்டிற்கான வாழ்நாள் முயற்சி இந்த கட்டுரை. டிசம்பர். . 10,11,12 ஆகிய நாட்களில் சென்னையில் நடைபெறவிருக்கும் தமிழ் நாட்டு ஆறுகள் பற்றிய தேசிய கருத்தரங்கில் கலந்து பேச வரவும். இந்தியாவின் தண்ணீர் மனிதர் மற்றும் பல செயல்பாட்டாளர்கள், அறிவியளாளர்கள் பங்கேற்கின்றனர். தொடர்பு: tamilnadufian@ gmail.com
  WhatsApp:8220024627

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க