Monday, July 26, 2021
முகப்பு மறுகாலனியாக்கம் கல்வி மெட்ரிக்குலேசன் பள்ளிகள் : மெக்காலேயின் வாரிசுகள் - 2

மெட்ரிக்குலேசன் பள்ளிகள் : மெக்காலேயின் வாரிசுகள் – 2

-

மெட்ரிக்குலேசன் – மழலையர் பள்ளிகள் மெக்காலேயின் உண்மையான வாரிசுகள் – 2

(தமிழ்நாட்டை பீடித்திருக்கும் ஆங்கில வழி மெட்ரிகுலேசன் பள்ளிகள் குறித்து 1997-ம் ஆண்டு ஜூலை புதிய ஜனநாயகம் இதழில் வெளியான கட்டுரை. (மே இதழில் வெளியான முதல் பகுதி)

மெட்ரிகுலேசன் பள்ளிகள் கொண்டு வரும் கலாச்சார சீரழிவு, கல்வித் தரம் சீர் குலைவு, மாணவர்களின் அறிவுத் திறன் வீழ்ச்சி இவற்றை அம்பலப்படுத்தும் இந்தக் கட்டுரை, இப்பள்ளிகளை நடத்துவது ஆளும், எதிர்க்கட்சி பிரமுகர்களும் அவர்களைச் சார்ந்த பணக்காரர்களும்தான் என்பதை விளக்குகிறது.)

ல மெட்ரிகுலேசன் பள்ளிகள் சீரழிந்த திரைப்பட ஆபாச பாடல்களுக்கான கூத்துகளையே ஆண்டு விழா – கலை விழா என்ற பெயரில் நடத்துகின்றன; மிக மோசமான ஏகாதிபத்திய ஆபாச கலாச்சார நாயகர்களான மைக்கேல் சாக்சன், தமிழக மைக்கேல் சாக்சனின் காட்டு கூச்சல், அரைகுறை ஆடை நடனம் இல்லாமல் இருக்காது.

ஆங்கில வழிக்கல்வி
மம்மி,டாடி பண்பாட்டால் மடியும் தமிழ்ப் பண்பாடு

இவர்கள் தான் தாய்மொழி, சொந்த பண்பாடு, உடை போன்றவற்றை அநாகரிகமாக பார்க்கக் கூடிய பார்வையை ஊட்டி வளர்க்கிறார்கள். ஒரு மெட்ரிகுலேசன் மாணவி தன் தந்தையிடம் “அப்பா இனி எங்க ஸ்கூலுக்கு வரும் போது வேட்டியில் வராதீங்கப்பா, புள்ளைங்களும், ஆசிரியர்களும், ஏன் தலைமை ஆசிரியருமே ஒரு மாதிரியா பாப்பாங்கப்பா.” என்கிற அளவிற்கு நமது பாரம்பரிய உடை பற்றிய சீரழிந்த பார்வை விதைக்கப்பட்டிருக்கிறது.

மம்மி,டாடி பண்பாட்டால் மடியும் தமிழ்ப் பண்பாடு

தமிழில் பேசினால் தண்டனை, அபராதம், ஒரு நாள் முழுவதும் முட்டி போடவைப்பது போன்ற கண்மூடித்தனமான போக்கு சர்வசாதாரணமாகி விட்டது. இல்லையேல் இடம் கிடையாது. லண்டனிலா பள்ளி இருக்குன்னு கேட்காதீங்க; அங்கு கூட இத்தகைய போக்கு இல்லை. தமிழகத்தில் உள்ள சில தமிங்கிலனத்தின் அருவருக்கத் தக்க மெட்ரிக்குலேசன் பள்ளிகளில் தான் இந்த நிலை.

மொழியில் மட்டுமல்ல, ஆங்கிலேயனைப் போன்ற நடை- உடை-பாவனை தான் அறிவுத்தனமானது; நாகரிகம் என்ற பார்வை பல மெட்ரிக்குலேசன் பள்ளிகளில் நிலவுகிறது. உதாரணமாக, தமிழகத்திலேயே மிக வறட்சியான பகுதிகளிலுள்ள பள்ளிகளில் கூட கோடை வெயிலிலும் ஆசிரியர்களும், மாணவர்களும் அவசியம் டைகட்டி, ஷீ,போட்டு இன் பண்ணி வரவேண்டுமென்று கடுமையான உத்தரவு போட்டிருக்கிறார்கள். ஒரு ஆசிரியர் மார்ச் மாதம் அவசரமாக டைகட்டி வரத் தவறிவிட்டார், அவரை அழைத்து கேள்வி மேல் கேள்வி கேட்டிருக்கிறார் “டை” பிரியரான முதல்வர்.

இதைவிட கொடுமை, ஒரு பள்ளியில் பெரும்பாலோர் ஒரே நகரத்தை சார்ந்த மாணவர்கள், ஏறத்தாழ ஒரே சமூகத்தையும் சார்ந்தவர்கள். அப்பள்ளியிலும், வீட்டிலும், தெருவில் விளையாடும் போதும் ஆங்கிலத்தில் தான் பேச வேண்டுமென்று உத்தரவு இருக்கிறது.

எத்தனை பெற்றோர்கள் ஆங்கிலம் பேசத் தெரிந்தவர்கள்? வெவ்வேறு மாநிலத்தை சார்ந்தவர்கள், வெவ்வேறு தாய்மொழியாக உள்ள மைய விடுதி பள்ளிகளில்தான் மாணவர்கள் எல்லா நேரங்களிலும் ஆங்கிலத்தை தொடர்பு மொழியாக பயன்படுத்த வேண்டிய அவசியம் உள்ளது. ஒரே ஊர், ஒரே தாய்மொழி எனில் அதற்கான அவசியம் இல்லை. அவர்களிடமும் ஆங்கிலத்திலேயே அவசியம் பேச வேண்டும் என்பது கண்மூடித்தனமான ஒன்று.

காசு கட்டிப் படிக்கும் பெரிய இடத்துக் கல்வி
இது தான் “ஆங்கிலமொழி தரமான மேற்கத்திய பாணி கல்வி முறை” காசு கட்டிப் படிக்கும் பெரிய இடத்துக் கல்வி.

பெற்றோர்களிடத்திலும், சக மாணவர்களிடமும் தன்னெழுச்சியான உணர்வுகளை ஒருவர் அவரது தாய்மொழியில்தான் வெளிப்படுத்துவார். அதை ஆங்கிலத்தில் செய் என்பது, அவர்களை செயற்கையாக சிந்திக்கச் செய்து, செயற்கையாக பேசி, விளையாட வைப்பதே. இதன் மூலம் மாணவன் உளவியல் ரீதியாகவும், உடல் ரீதியாகவும் பாதிப்புக்குள்ளாவன் என்பதே அறிவியலாளரின் கருத்து.

ஒரே தாய்மொழி, ஒரே ஊர்க்கார மாணவர்கள் அதிகம் உள்ள மெட்ரிக்குலேசன் பள்ளிகளில் அவசியமே இல்லாதபோது பள்ளி வளாகத்திற்குள் தப்பித் தவறி தமிழில் பேசி விட்டால் மறுநாள் காலை மாணவர் பேரவையில் (அசெம்பிளியில்) பலர் முன் ஆங்கிலத்தில் மன்னிப்பு கேட்க வைப்பது:

“இனிநான் தமிழில் பேச மாட்டேன், மன்னிக்கவும்; எப்போதும் ஆங்கிலத்தில் தான் பேசுவேன் என்று உறுதி கூறுகிறேன்.”

என்று தமிழில் பேசிய மாணவன் ஆங்கிலத்தில் மன்னிப்பு கேட்க வேண்டும். மாணவர்களிடையே மாணவ ஒற்றர்களை அமர்த்தி தமிழில் பேசுபவர்களை கண்டறிந்து அதற்கான தனி பதிவேடில் பதிவு செய்து ஒரு முறைக்கு மேல் எனில் ரூபாய் ஒன்று முதல் ஐந்து வரை அபராதம் வசூல் செய்கிற பள்ளிகளெல்லாம் தமிழகத்தில் இருக்கிறது.

இரண்டு எட்டாம் வகுப்பு மாணவர்கள் தெருவில் விளையாடிக் கொண்டிருக்கிறார்கள். அந்த வழியாக சென்ற ஆசிரியரிடம் “Sir, I toId him many time, but he is not asking sir” “அப்படி செய்யாதடான்னு பல முறை சொன்னேன்; ஆனா அவன் கேட்க மாட்டேன்ங்கிறான் சார்’’ என்பதைத்தான் அப்படியே மொழி மாற்றம் செய்து அவனின் இயல்பான உணர்ச்சி வெளிப்பாடு சிதைக்கப்படுகிறது. இதுபோன்று எத்தனையோ கொடுமைகள் பட்டியல் கூறமுடியாத அளவிற்கு உள்ளது.

தின்றதை வாந்தியெடுக்க வைக்கும் தேர்வுமுறை

ம.உ.பா.மை போராட்டம்
சிதம்பரம் காமராஜ் பள்ளி தாளாளர் லெட்சுமி காந்தனை கண்டித்து மனித உரிமை பாதுகாப்பு மையம் நடத்திய போராட்டம் (கோப்புப் படம்)

தேர்வு நோக்கத்தை மட்டுமே பிரதானமாகக் கொண்டு, ஒன்பது மற்றும் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு இரண்டாண்டு மாதிரி வினாத்தாளைக் கொண்டு படித்து எழுதி எழுதி பார்க்க பயிற்சித் தரப்படுகிறது. கற்றுத் தருவதை விட (coaching) பயிற்சிதான் பிரதானம் என்பதுதான் இன்றைய நவீன கல்வி என்று மெட்ரிக்குலேசன் பள்ளி தலைமை ஆசிரியர்கள் கூட்டத்தில் பலரும் ஒருமித்த கருத்து தெரிவித்தனர். அதையே பின்பற்ற வேண்டும் என்று ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது.

சிந்திப்பது, சுயமாக பிரச்சனைகளுக்குத் தீர்வு காண்பது, புரிந்து கொள்வது, ஒப்பிடுவது, காரண காரியங்களை ஆராய்வது என்பதைப் பற்றியெல்லாம் யோசிக்கவே தேவையில்லை. கண்ணை மூடிக்கிட்டு திங்கிறது. தின்னதை தேர்வு என்ற பெயரில் வாந்தி எடுப்பது. அதற்குத்தான் சிறந்த பயிற்சி தருகிறார்கள்.

கல்வி அழிப்பு
“கற்றுத் தருவதை விட (coaching) பயிற்சிதான் பிரதானம் என்பதுதான் இன்றைய நவீன கல்வி”

மெட்ரிக்குலேசன் பத்தாம் வகுப்பு செய்முறை தேர்வு எப்படி நடைபெறுகிறது? பெளதிகம், வேதியியல், உயிரியல், தாவரவியல் இந்த நான்கிலும் எவ்வளவு மோசமானவனும் நூற்றுக்கு நூறு எடுத்துவிட்டால் அவன் தேர்ச்சி பெற்றவனாகி விடுவான். முன்னூறுக்கு தேர்ச்சிக்குரிய மதிப்பெண் 105, செய்முறையில் நூறு எடுத்திடுறான், இதுக்கு பேரு “மேற்கத்திய பாணி, ஆங்கில வழி தரமான கல்வி” என்கிறார்கள். தேர்வுக்கு இரண்டு வருடத்திற்கு முன்பே மாணவனுக்குத் தெரிந்துவிடும்; கட்டாயம் அறிவியலில் அனைவரும் தேறிவிடுவோம் என்று . பிறகு எப்படி அவன் பொறுப்போடு படிப்பான், பணிந்து கடினமாக உழைப்பான் என்று எதிர்பார்க்க முடியும்?

செய்முறை, எழுத்துத் தேர்வு நடத்தும் தேர்வாளராகப் போகும் ஆசிரியர்களுக்கு என்ன சம்பளம் தருகிறார்கள்? மூன்று மணி நேர தேர்வாளராகப் போகும் கல்லூரி ஆசிரியர்களுக்கு ரூ 25 முதல் ரூ 50 சம்பளம்; அது தவிர பயணப்படி வேறு. ஆனால் மெட்ரிக்குலேசன் தேர்வாளர்களுக்குச் சம்பளம் ரூ 6 நிர்ணயிக்கப்படாத பயணப்படி; அதுவும் ஆறு மாதம் ஓராண்டு கழித்துத்தான் கிடைக்கும். பெரும்பாலும் ஆசிரியர்கள் இப்பணிக்குப் போக விரும்புவதில்லை. ஆனால் பள்ளி நிர்வாகமோ ‘அரசு நடத்தும் தேர்வு; பள்ளிகளுக்கு அரசின் தயவு தேவையுள்ளது. இதைப் புறக்கணிக்கக் கூடாது’ என்று மிரட்டி ஆசிரியர்களைத் தேர்வுப் பணியை மேற்கொள்ள நிர்பந்திக்கிறது. இதே நிலைமை தான் விடைத்தாள் மதிப்பிடுவதற்கும். மெட்ரிக்குலேசன் பள்ளிகளின் 30,000 ஆசிரியர்களுக்கு, சங்கமோ, தலைவரோ எவரும் கிடையாது. இந்தப் படித்த பட்டதாரிக் கொத்தடிமைகள் நிர்வாகம் பணித்த எந்த பணிகளையும் செய்தே ஆக வேண்டும். மறுத்தால் வேலை அவ்வளவுதான்.

விபரீதமான விடைத்தாள் மதிப்பீடு

மெட்ரிக்குலேசன் விடைத்தாள் மதிப்பீடு எப்படி நடைபெறுகிறது? மெட்ரிக்குலேசன் ஆசிரியர் யார் வேண்டுமானாலும், எந்த விடைத்தாளையும் மதிப்பிடலாம். இரசாயன பட்டதாரி கணிதம் கற்பித்தால், அவர் கணித விடைத்தாள் திருத்தலாம்; போதிய ஆசிரியர்கள் இல்லையெனில் அறிவியல் பட்டதாரி எவரும் திருத்தலாம். புவியியலை, புவியியல் எடுத்துவரும் ஆசிரியர் மட்டுமின்றி கணிதம், இரசாயனம், பெளதிகம், வரலாறு, ஆங்கில இலக்கியம் படித்த எவரும் திருத்தலாம்.

மாணவர்களின் கல்வி உரிமைக்கான பெற்றோர் சங்கம்
மாணவர்களின் கல்வி உரிமைக்கான பெற்றோர் சங்கம் 2013-ம் ஆண்டு கடலூரில் நடத்திய கல்வி உரிமைக்கான மாநாடு (கோப்புப் படம்)

+2 விடைத்தாள் திருத்த ஒரு தாளுக்கு ரூ 2.50 –எனில், மெட்ரிக்குலேசன் விடைத்தாளுக்கு ரூ 1.25 அதுவும் தமிழகம் முழுவதும் இரண்டே மையங்களில். வடக்கில் ஒன்று, தெற்கில் ஒன்று. தோராயமான பயணப்படி தரப்படும். உள்ளூர் ஆசிரியரைத் தவிர வெளியூர் ஆசிரியர்களுக்கு இது செலவானதாகவும் சிரமம் மிகுந்ததாகவும் இருக்கும். சிரமமாக இருந்தாலும் ஆசிரியர்கள் மறுக்க இயலாது. காரணம் தனியார் பள்ளி, சுயநிதி என்ற நிர்ப்பந்தம்.

ஒரு விடைத்தாள் திருத்த சாதாரணமாக அரைமணி எடுத்துக் கொள்ளக் கூடியதற்குப் பதிலாக, இங்கே காலை பத்து முதல் மாலை 3.30 க்குள் நாற்பது முதல் ஜம்பதைத் திருத்தி விட்டு வெளியூர்காரர்கள் பேருந்தை பிடிக்க அவசர அவசரமாக ஒடி ஊர் போய்ச் சேர வேண்டும்.

மெட்ரிக்குலேசன் மாணவர்கள் பணம் கட்டிப் படிக்கும் பெரும் புள்ளிகளின் பிள்ளைகள்; ஆசிரியர்களோ சுயநிதி நிறுவனத்தின் அடிமைகள். எனவே தேர்ச்சி விழுக்காடு அதிகம் காட்ட வேண்டும். கண்ணை மூடிக் கொண்டு பெரும்பாலும் அனைவரையும் தேர்ச்சி பெற வைக்க வேண்டும். குறைந்த நேரத்தில் அதிகப்படியான விடைத்தாளை திருத்திவிட்டு ஊருக்கு பேருந்து பிடிக்க வேண்டிய அவசரம் வேறு. விளைவு என்னவாகும்? சராசரி மாணவனும், திறன் மிகுந்த மாணவனும் ஏறத்தாழ சம மதிப்பெண் எடுப்பார்கள். எதுவுமே எழுதாதவனும் மதிப்பெண் போடவே இடமில்லா வெற்று விடைத்தாளைச் சமர்ப்பித்தவனுமே தோல்வியுற நேரிடும். இது தான் “ஆங்கிலமொழி தரமான மேற்கத்திய பாணி கல்வி முறை” காசு கட்டிப் படிக்கும் பெரிய இடத்துக் கல்வி.

மெட்ரிக்குலேசன் முறை உள்ள மேனிலைப் பள்ளிகளிலும், இதர மேனிலைப் பள்ளிகளிலும், +2 வில் இரண்டு மொழிப்பாடங்களில், தமிழை தாய்மொழியாகக் கொண்டவர்களும், அதிக மதிப்பெண் கிடைக்கிறது என்பதால், ஆங்கிலம், பிரெஞ்சு மொழிப் பாடங்களை எடுத்து கொண்டு தமிழைப் புறக்கணிக்கிற போக்கு அதிகரித்து வருகிறது.

கல்வி தனியார்மய ஒழிப்பு மாநாடு
புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி நடத்திய கல்வி தனியார்மய ஒழிப்பு மாநாடு (கோப்புப் படம்)

+2 அளவில் உள்ள பிரெஞ்சு எட்டாம் வகுப்பிற்குரிய தரத்தில் இருப்பதாலும், தாராளமாகத் திருத்துவதால் தமிழைவிட அதிகமாக மதிப்பெண் கிடைக்க வாய்ப்புள்ளதாலும் மொத்த மதிப்பெண் அதிகரிக்கும் வாய்ப்புள்ளது என்பது ஒரு காரணம். +2 தரத்திற்குத் திருத்தும் முறைகளில் நன்றாகப் படிப்பவனும் பத்து முதல் பதினைந்து மதிப்பெண் இழக்க வாய்ப்புள்ளது போன்ற காரணங்களினால் தமிழ் புறக்கணிக்கப்பட்டு வருகிறது.

இத்தகைய மெட்ரிக்குலேசன் பள்ளிகளை என்ன அந்நியனா, வெள்ளைக்காரனா வச்சு நடத்துகிறான், அல்லது வைத்து நடத்த வேண்டுமென்று இலண்டனிலிருந்து உத்தரவு போடுகிறானா?

தமிழகத்தில், தமிழனாய்ப் பிறந்தவர்கள்தான், சமூக, அரசியல் பொருளாதாரம் காரணங்களால் தமிங்கிலனாய் மாறி தமிழினத்தின் மொழி, அரசியல், பண்பாடு, பொருளாதாரம் போன்ற சகல துறைகளிலும் எதிராய் நிற்கிறான்.

1947- க்குப் பிறகு ஆட்சிக்கு வந்த அனைத்துக் கட்சிகளும், எதிர்கட்சிப் பிரமுகர்களும் அவர்களின் நெருங்கிய ஜமீன்கள், தொழில், வணிக கூட்டாளிகள்தான் இந்த ஆங்கில வழி, மெட்ரிக்குலேசன் பள்ளிகளுக்குப் பின்னால் நின்று இயக்கிக் கொண்டு இருக்கிறார்கள் என்பது அனைவரும் அறிந்த உண்மை

தேசிய இன, மொழி, அரசியல், பொருளாதார, பண்பாட்டு விடுதலைக்குக் குரல் கொடுக்கும் ஜனநாயக சக்திகள் ஒன்றுபட்டுப் போராடுவதன் மூலமே, இந்த இழிநிலையை அடியோடு நம் மண்ணிலிருந்து துடைத்தெறிய முடியும்.

புதிய ஜனநாயகம், ஜூலை 1997

 1. ஐயா ,

  சூடாமணி நிகண்டு படிக்க வையுங்கள். நன்னூல், படிக்க வையுங்கள்.
  அப்போ தானுங்க தமிழ் வாழும்.

  நம் தமிழ் மாணாக்கன் ஒவ்வொருவரும் நிகண்டினை மனப்பாடம் செய்தால் தான் அது தமிழுக்கு செய்யும் தொண்டு.

  தமிழிலே செய்யுள் இயற்ற இன்று யாருக்குத் தெரிகிறது.?

  வினவு உட்பட யாவரும் எழுதுவது கிறுக்கல் கவிதைகளே. முடியல …முடியல….

  நன்றி

 2. தமிழினம் என்பது சூத்திரன் என்ற கலப்பினமாக மாறி பார்ப்பனர் சொல்லுவதை கண்மூடி கொன்டு நம்புவதும் தமிழ் அறிவர் சொல்லுவதை ஏகடியம் செய்வதும்; இன்றயநடைமுறையாக தமிழ்நாட்டில் நிலவும் சூழல் ஆகும். சூத்திரனை வீழ்த்த ‘பிராமணன்’ எடுத்த ஆயுதம் “ஆங்கிலக்கல்வி’ சூத்திரன் வீட்டு குழந்தைகள் நவினமுறையில் காயடிக்கப்படுகிரார்கள். சூத்திரன் விழித்துக்கொள்லாமலிருக்க அவனிடம் சாதி வெறியை தூண்டி ஏழைகளிடம் மோத விட்டு வேடிக்கை பார்க்கிரது ‘அவாள்’ கூட்டம்.

 3. மிக சரியான பதிவு. தமிழ்நாட்டில் இருந்து தமிழை,தமிழ் கலாசாரத்தை வேரோடு பிடுங்கி எறியும் பணியை தமிழனின் பணத்தைக் கொண்டே செய்வதே இந்த கருங்காலிக் கூட்டத்தின் பணி.சரி,இவர்கள் ஆங்கிலமாவது ஒழுங்காக கற்றுத் தருகிறார்களா என்றால் அதுவும் கிடையாது. ஏதோ கிடைக்கும் சம்பளத்தில் வேலை பார்க்கக் கூடிய தரமற்ற அரைகுறைகளைக் கொண்டே அவர்கள் கற்பிக்கிறார்கள். தமிழும் தெரியாமல் ஆங்கிலமும் அறியாமல் ஒரு ரெண்டுங்கெட்டான் சமூகம் உருவாகி வருகிறது. பாமர பெற்றோர்களின் ரத்தமும் வியர்வையும் கல்வித் தந்தைகளின் கல்லாவை நிரப்புகின்றன. இரு திராவிட இயக்கங்களையும் நம்பும் தமிழ் சமூகமே, உனக்காக அழுவதை தவிர வேறொன்றும் தோன்றவில்லை.

 4. //மெட்ரிக்குலேசன் முறை உள்ள மேனிலைப் பள்ளிகளிலும், இதர மேனிலைப் பள்ளிகளிலும், +2 வில் இரண்டு மொழிப்பாடங்களில், தமிழை தாய்மொழியாகக் கொண்டவர்களும், அதிக மதிப்பெண் கிடைக்கிறது என்பதால், ஆங்கிலம், பிரெஞ்சு மொழிப் பாடங்களை எடுத்து கொண்டு தமிழைப் புறக்கணிக்கிற போக்கு அதிகரித்து வருகிறது.
  //

  ஏன் அதிக மதிப்பெண் கிடைகிறது ? தாய் மொழியில் ஏன் அதிக மதிபெண் பெற முடியவில்லை ?

  ஏனென்றால் செந்தமிழ் எனபது இன்னொரு மொழி கற்பது போன்றது. கடினமாகத்தான் உணர்கிறார்கள். செந்தமிழை படித்து வேலை வாய்ப்பிற்கு 0% பலன் என்பதுவும் , இந்தி படித்தால் ஒரு வேலை வாய்ப்பு கூடும் (அது 0.1 சத வாய்ப்பாக இருக்கலாம் ) என்று பெற்றோர் நினைப்பதாலும் அத்தகைய முடிவை எடுக்கிறார்கள் .

  செந்தமிழ் படித்தால் கலையார்வம் வரும்
  நினவாற்றல் அதிகரிக்கும்
  ஒழுக்கம் வரும்

  என்று கூறுபவர்கள்தான் இத்தகைய பெற்றோரை எப்படி கன்வின்ஸ் பண்ணுவீர்கள் என்று கேட்கிறேன்

Leave a Reply to adiyaar பதிலை ரத்து செய்க

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க