privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புமறுகாலனியாக்கம்தனியார்மயம் - தாராளமயம் - உலகமயம்ஈ.எஸ்.ஐ மருத்துவக் கல்லூரி மாணவர் போராட்டம் - நேரடி ரிப்போர்ட்

ஈ.எஸ்.ஐ மருத்துவக் கல்லூரி மாணவர் போராட்டம் – நேரடி ரிப்போர்ட்

-

டந்த ஒரு மாதத்திற்கும் மேலாக தொழிலாளர் காப்பீட்டு கழகத்தின் (ESIC-Employees State Insurance Corporation) கீழ் இயங்கி வரும் ஈ.எஸ்.ஐ மருத்துவக் கல்லூரி மாணவர்கள், தமது வாழ்வையே நிர்கதியாக்கியிருக்கும் இந்திய அரசை எதிர்த்து நாடு தழுவிய பல முனைப் போராட்டங்களை நடத்தி வருகிறார்கள்.

இஎஸ்ஐக் கல்லூரி மாணவர்களின் ஒரு நாள் அடையாள உள்ளிருப்பு உண்ணாவிரதப் போராட்டம்
இஎஸ்ஐக் கல்லூரி மாணவர்களின் ஒரு நாள் அடையாள உள்ளிருப்பு உண்ணாவிரதப் போராட்டம்

“இனி ஈ.எஸ்.ஐ மருத்துவமனைகள், மருத்துவம் சார்ந்த படிப்புகளை அளிப்பதில் இருந்தும் மருத்துவக் கல்லூரி நடத்துவதில் இருந்தும் விலகிக்கொள்ளும்” என தொழிலாளர் காப்பீட்டுக் கழகம் தனது திட்ட குழுவில் முடிவெடுத்து அறிவித்திருக்கிறது. இதனால் நாடெங்கிலும் உள்ள ஈ.எஸ்.ஐ மருத்துவக் கல்லூரிகள் இழுத்து மூடப்படும் அவசரகால நிலையில், அவற்றில் பயிலும் ஒட்டுமொத்த மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகியிருக்கிறது.

ஈ.எஸ்.ஐ மருத்துவமனைகள் என்பவை 1948 தொழிலாளர் காப்பீட்டு சட்டத்தின் கீழ் தொழிலாளர்களின் சமூக பாதுகாப்பை உறுதி செய்யும் விதத்தில் தொழிலாளிகளிடம் இருந்து பெறப்படும் பணத்தை வைத்தே நடத்தப்படுகின்றன. இத்தகைய மருத்துவமனைகளில் தொழிற்சாலைத் தொழிலாளிகளும், சிறுவணிகத் தொழிலாளிகளும் தங்களது சொந்த செலவில் மருத்துவவசதி பெற்று வருகின்றனர்.

இலாபம் ஒன்றையே குறிக்கோளாய் கொண்டிருக்கும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் படித்து வெளிவரும் மருத்துவர்களின் தரம் மோசமாக இருந்து வரும் சூழலில் மருத்துவர்களுக்கான பற்றாக்குறையை தீர்க்கவேண்டுமெனில் பொதுத் துறையின் உதவியோடு மருத்துவர்களின் எண்ணிக்கையை உயர்த்துவதுதான் இந்த அரசு முன் இருந்த குறைந்தபட்ச தற்காப்பு உத்தியாக இருந்தது.

ஈ.எஸ்.ஐ கொள்கை
ஈ.எஸ்.ஐ கொள்கை

ஆகையால், மருத்துவர்களின் பற்றாக்குறையை சமாளிக்கும் விதமாக ஈ.எஸ்.ஐ மருத்துவமனைகளிலேயே மருத்துவக் கல்லூரிகளை தொடங்குவதற்கான சட்டத் திருத்தம் 2010-ம் ஆண்டு ஈ.எஸ்.ஐ சட்டத்தில் கொண்டுவரப்பட்டது. மேலும், இச்சிறப்புச் சட்டத்தின் 59-வது உட்பிரிவு ‘பி’ன் படி, “ஈ.எஸ்.ஐ. மருத்துவக் கல்லூரிகளில் படிப்பை முடிக்கும் மாணவர்கள் ஈ.எஸ்.ஐ. மருத்துவமனைகளிலேயே ஐந்து ஆண்டு காலம் பணிபுரிய வேண்டும்”. இதனால் ஒரு ஈ.எஸ்.ஐ. மருத்துவமனையில் ஆண்டுக்கொன்று 100 மருத்துவர்களை உருவாக்கி பணியமர்த்திக்கொள்ள முடியும்.

தற்பொழுது நாட்டில் தொழிலாளர் காப்பீட்டுக் கழகத்தின் கீழ் 12 முதுகலை மருத்துவப்படிப்புகளுக்கான நிறுவனங்களும், 18 இளங்கலை மருத்துவப் படிப்புகளுக்கான கல்லூரிகளும் 9 பல் மருத்துவக் கல்லூரிகளும் செயல்பட்டு வருகின்றன.

இத்தகைய நிலையில் தான் ‘பொற்காலம் வந்துவிட்டது’ என்று கூவும் பா.ஜ.க அரசு, மாணவர்களின் தலையில் இடியை இறக்கும் விதமாக, “ஈ.எஸ்.ஐ மருத்துவமனைகளில் மருத்துவக் கல்லூரிகளை மேற்கொண்டு நடத்த முடியாது” என்றும், “மருத்துவக் கல்லூரிகள் நடத்துவது தொழிலாளர் காப்பீட்டுக் கழகத்தின் நலன்களுக்கு உகந்ததல்ல” என்றும் திமிராக அறிவித்து தனது பொறுப்பை கைகழுவி இருக்கிறது.

இஎஸ்ஐக் கல்லூரி மாணவர்களின் ஒரு நாள் அடையாள உள்ளிருப்பு உண்ணாவிரதப் போராட்டம்
இஎஸ்ஐக் கல்லூரி மாணவர்களின் ஒரு நாள் அடையாள உள்ளிருப்பு உண்ணாவிரதப் போராட்டம்

இவ்வறிவிப்பு வெளிவந்த 05-01-2015 முதலே நாடெங்கிலும் ஈ.எஸ்.ஐ மருத்துவக் கல்லூரி மாணவர்கள் போராடி வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக நமது சென்னை ஈ.எஸ்.ஐ மருத்துவக் கல்லூரி மாணவர்களும் பேரணி, வகுப்புகளை புறக்கணித்து போராட்டம், மனிதச் சங்கிலி, டில்லியில் நடைபெறும் போராட்டத்தில் பங்கெடுத்தல், மத்திய அமைச்சரிடம் மனு கொடுத்தல் என தமக்குத் தெரிந்த அனைத்து வழிகளிலும் போராடி வருகின்றனர்.

இதன் தொடர்ச்சியாக 24-02-2015 செவ்வாய்க் கிழமையன்று சென்னை ஈ.எஸ்.ஐ மருத்துவக் கல்லூரி மாணவர்கள் ஒரு நாள் அடையாள உள்ளிருப்பு உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்தினர். இப்போராட்டத்தை நடத்திய மருத்துவக் கல்லூரி மாணவர்கள் அவர்கள் எதிர்நோக்கும் பாதிப்புகளையும், அவர்களது கோரிக்கைகளையும் நம்மிடம் பகிர்ந்து கொண்டனர்.

சென்னை ஈ.எஸ்.ஐ. மருத்துவக் கல்லூரியில் இளங்கலை பட்டத்துக்கு (எம்.பி.பி.எஸ்) படிக்கும் 191 மாணவர்களும் முதுகலை (எம்.எஸ்.) பட்டத்துக்கு படிக்கும் 38 மருத்துவ மாணவர்களும் இருக்கின்றனர். இதில் முதுகலை படிப்பு நான்காண்டுகளுக்கு முன்பும் இளங்கலை படிப்பு இரண்டாண்டுகளுக்கு முன்பும் ஆரம்பிக்கப்பட்டன.

ஏற்கனவே தொழிலாளர் காப்பீட்டுக் கழக மருத்துவமனையில் முதுகலை படித்து முடித்த மாணவர்களின் பட்டங்களை இந்திய மருத்துவக் கவுன்சில் இன்னமும் அங்கீகரிக்கவில்லை. இந்திய மருத்துவக் கவுன்சிலின் அங்கீகாரம் இன்றி முதுகலை பட்டம் பெற்ற மாணவர்கள் தமிழ் நாட்டில் வேறு எந்த மருத்துவமனைகளிலும் பணிபுரிய இயலாது. ஏற்கனவே படித்து முடித்த மாணவர்களின் நிலை இவ்வாறிருக்க, முதுகலை படித்துக்கொண்டிருக்கிற மாணவர்கள் நிலை தற்போதைய அறிவிப்பால் என்னவாகும் என்பதை விளக்கித் தெரிய வேண்டியதில்லை.

தொழிலாளர் காப்பீட்டுக் கழகத்தின் மருத்துவக் கல்லூரிகளை கைவிடுவதற்கான சுற்றறிக்கை நகல்.
தொழிலாளர் காப்பீட்டுக் கழகத்தின் மருத்துவக் கல்லூரிகளை கைவிடுவதற்கான சுற்றறிக்கை நகல்.

இளங்கலையை பொறுத்தவரை ஒவ்வொரு ஆண்டும் வகுப்புகளை தொடர்வதற்கான அனுமதியை மட்டுமே இந்திய மருத்துவக் கவுன்சில் வழங்கியிருக்கிறது. ஐந்தரை ஆண்டு படிப்பை முடித்து முதல் அணி மாணவர்கள் வெளியேறிய பிறகுதான் இளங்கலைப் பட்டத்திற்கான அங்கீகாரம் மருத்துவக் கல்லூரிக்கு கிடைக்கும். ஆனால் தற்பொழுதோ இரண்டு ஆண்டுகள் முடிந்த நிலையிலேயே மருத்துவப் படிப்புகளை கைவிடுவதாக அறிவித்திருக்கிறது, அரசு. இதனால் இருதரப்பு மாணவர்களும் நிர்க்கதியாக நிற்கின்றனர்.

தீர்வு என்ற வகையில் முதல் கருத்தாக, “ஈ.எஸ்.ஐ. மருத்துவக் கல்லூரி மாணவர்கள் மாநிலங்களின் கீழ் இயங்கும் மருத்துவக் கல்லூரிகளுக்கு மாற்றப்படுவர்” எனவும், “இது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தப்படும்” எனவும் அறிவித்திருக்கிறது, மத்திய அரசு.

நாங்கள் சந்தித்த சென்னை ஈ.எஸ்.ஐ மருத்துவக் கல்லூரி மாணவர்கள், மாநில அரசுகளின் கீழ் இயங்கும் மருத்துவக் கல்லூரிகளில் இடமாற்றம் செய்வது பித்தலாட்டம் என்பதை நன்கு புரிந்து வைத்திருக்கின்றனர்.

சென்னை இஎஸ்ஐக் கல்லூரியில் நடைபெற்றுவரும் கட்டுமானப் பணிகள்
சென்னை இஎஸ்ஐக் கல்லூரியில் நடைபெற்றுவரும் கட்டுமானப் பணிகள்

இரண்டாண்டுகள் ஈ.எஸ்.ஐ மருத்துவக் கல்லூரிகளில் பயின்ற மாணவர்கள் வேறு கல்லூரிகளுக்கு மாற்றப்பட்டால் படிப்பை முதலில் இருந்து தொடங்க வேண்டும். இது மாணவர்களுக்கு இழைக்கின்ற அப்பட்டமான துரோகமாகும். ஒரு வேளை, அப்படி இடமாற்றம் செய்யப்பட்டாலும் கூட இம்மாணவர்களுக்கான இடங்கள் அடுத்தாண்டு பொதுப்பட்டியலில் சேரும் மாணவர்களைக் குறைப்பதன் மூலமே சாத்தியப்படுத்தப்படும். ஆக இடமாற்றம், மறுசேர்க்கை என்பதைப் பொறுத்தவரை ஒட்டுமொத்தமாக மாணவர்கள் பலிகடாவாக்கப்பட்டிருக்கிறார்கள் என்பது தெளிவாகிறது.

இரண்டாவதாக, “மாநில அரசே இஎஸ்ஐ மருத்துவக் கல்லூரிகளை ஏற்று நடத்த வேண்டுமென்கிற கோரிக்கை” வைக்கப்படுகிறது. இப்படி ஏற்றுநடத்தும் பட்சத்தில் ஆசிரியர் நியமனம், உள்கட்டமைப்பு வசதிகள், மருத்துவக் கல்லூரியின் மொத்த செலவுகளையும் மாநில அரசே ஏற்கவேண்டுமென ‘அச்சே தீன்’ மோடி மஸ்தான் அரசு மாணவர்களை கைகழுவி விட்டு விட்டு தரகுமுதலாளிகளுக்கு கால்கழுவிக் கொண்டிருக்கிறது.

இதுதொடர்பாக தற்பொழுது நடைபெற்று வரும் அனைத்து பேச்சுவார்த்தைக் கூத்துகளும் ஒரு உண்மையை திட்டமிட்டு மறைக்கின்றன. அதாவது இது ஏதோ மத்திய – மாநில அரசுகளுக்கிடையிலான சண்டை, ஒரு நிர்வாகப் பிரச்சினை அல்லது ஒரு நிர்வாக மாற்றம் என்றே உணரப்படுகிறது.  ஆனால் தொழிலாளர்களின் நலனுக்கான உருவாக்கப்பட்ட இந்த கட்டமைப்பை கலைக்கும் முகமாக செய்யப்பட்டிருக்கும் ஒரு முக்கிய நடவடிக்கை என்பதை அனைவரும் மறைக்கின்றனர். தொழிலாளர் உரிமைக்கும் போராட்டங்களுக்கும் பெயர் போன மேற்கு வங்கத்தில் இதை உணர்ந்து ஓரளவு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.

கொல்கொத்தாவில் நடந்த போராட்டத்தில் “தீதி” (மமதா பானர்ஜி) அரசு, தொழிலாளர் காப்பீட்டுக் கழகத்தின் கோரிக்கையை ஏற்றுக்கொள்ளவில்லை. அம்மாநிலத்தில் மாணவர்களின் வீச்சான போராட்டங்களைச் சமாளிக்கும் பொருட்டு அம்மாநில தொழிலாளர் நலத்துறை அமைச்சர் மோலாய் கட்டக், ஜோட்காவில் உள்ள ஈ.எஸ்.ஐ மருத்துவக் கல்லூரி மாணவர்களை நேரில் சந்தித்திருக்கிறார். தமிழ் நாட்டில் அப்படி எல்லாம் நடக்கும் வாய்ப்பில்லை; அ.தி.மு.க அடிமைகள் அம்மாவின் பிறந்தநாள் உற்சவ பரவசத்தில் இருப்பது ஒருபக்கம் என்றாலும் தமிழ் நாட்டின் தொழிலாளர் நலத்துறை அமைச்சர் யார் என்பது அ.தி.மு.க காரனுக்கே தெரியாது!

“மேற்கு வங்கத்தில் தனியார்-பொதுத்துறை கூட்டின் மூலமாக பத்துக்கும் மேற்பட்ட பல்நோக்கு சிறப்பு மருத்துவமனைகள் அமைக்கப்படும்” என தரகுமுதலாளிகளுக்கு ஆதரவு அளிப்பதில் முனைப்பாக இருக்கும் “தீதி” அரசு ஈ.எஸ்.ஐ மருத்துவமனைப் பிரச்சனையை பீ துடைத்த குச்சியாகவே கருதுகிறது. எனினும் எப்படியாவது மாணவர்களின் போராட்ட உணர்வைத் தணித்து நிலைமையை சுமூகமாகவே முடிக்க “தீதி” அரசும் முயல்கிறது. அம்மா அரசுக்கு அந்த முயற்சி கூட தேவையில்லை.

“தேவைப்பட்டா நீ நடத்து” என்பதாக மத்திய அரசு பிரச்சனையில் இருந்து ஒதுங்கி ஒன்றரை மாதங்களாகிறது. இன்னும் 11-க்கும் மேற்பட்ட கல்லூரிகளில் உள்கட்டமைப்பு வசதிகள் நிறைவேற்றப்படவில்லை.

நாங்கள் சந்தித்த சென்னை ஈ.எஸ்.ஐ. மருத்துவக் கல்லூரியில் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருவதை மாணவர்கள் சுட்டிக்காட்டினர். தற்பொழுது ஒவ்வொரு ஆண்டும் படிப்பிற்கு மட்டும் அனுமதி அளித்துவரும் இந்திய மருத்துவக் கவுன்சில், முந்தைய ஆண்டுக்கான பரிந்துரைகளின்படி உள்கட்டமைப்பு வசதிகள், ஆய்வகங்கள், நிறைவேற்றப்பட்ட பிறகே அடுத்த ஆண்டுக்கான அங்கீகாரத்தை வழங்கும். ஒருவேளை இதுவே தனியார் கல்லூரிகளாக இருந்தால் ககன் தேசாய் போன்ற ஆட்களுக்கு படியளந்தால் போதுமானது என்கிற மாற்று உலகத்தையும் நாம் மறந்துவிடக் கூடாது.

மாநில அரசுகளைப் பொறுத்தவரை மருத்துவர்களின் பற்றாக்குறையை போக்குவதற்கு ஈ.எஸ்.ஐ மருத்துவக் கல்லூரிகளை ஏற்று நடத்துவது ஒரு வாய்ப்பு என்றாலும் தொழிலாளர் காப்பீட்டு கழகம் மருத்துவக் கல்லூரியை மட்டுமே மாநிலங்களின் வசம் தள்ளிவிடுகிறது. மருத்துவமனை தொழிலாளர் காப்பீட்டுக் கழகத்தின் வசமே இருக்கும் என்பதை அறிவித்திருக்கிறார்கள்.

ஆனால் இந்திய மருத்துவக் கவுன்சிலின் விதிகளின் படி மருத்துவமனையும் மருத்துவக் கல்லூரியும் அருகாமையில் 10 கிலோ மீட்டருக்குள் இருக்க வேண்டும். ஏற்கனவே உள்கட்டமைப்பு கட்டுமான பணிகள் பாதியில் நிற்கிற பொழுது கட்டுமான பணிகளை மேற்கொண்டு தொடர மைய அரசோ மாநில அரசோ தயாராக இல்லை. இரண்டுமே நிதிப் பற்றாக்குறை என்பதைக் காரணம் காட்டி மருத்துவக் கல்லூரிகளை குளிப்பாட்டி இளநீர் கொடுத்து சாகடிக்க தயாராகிவிட்டன.

தமிழ் நாட்டைப்பொறுத்தவரை ஓமந்தூரார் வளாகத்தில் இருக்கும் பல்நோக்கு சிறப்பு மருத்துவமனையோடு மருத்துவக் கல்லூரி ஒன்றை கொண்டு வருவது கருத்துரு அளவில் இருப்பதாக போராட்ட மாணவர்கள் தெரிவித்தனர். இந்நிலையில் தமிழக அரசு ஈ.எ.ஸ்ஐ மருத்துவக் கல்லூரியை ஏற்று நடத்துவதற்கான பேச்சுவார்த்தையை தொழிலாளர் காப்பீட்டுக் கழகம் மேற்கொண்டிருப்பதாக அதன் இயக்குநரக தலைவர் (Director general) தெரிவித்திருக்கிறார்.

என்.டி.டிவி வெளியிட்ட செய்திக் குறிப்பு மைய-மாநில அரசுகளிடம் நடைபெற்றுவரும் பேரத்தை கோடிட்டு காட்டி, பேரம் படிவது மாணவர்களிடையே கவலை உருவாக்கியிருப்பதாக பிரச்சனையை தெரிந்தே பூசி மொழுகுகிறது. உதாரணமாக, “தொழிலாளர் நல அமைச்சகம் தமிழக அரசிடம் ஈ.எஸ்.ஐ. மருத்துவக் கல்லூரியை ஏற்று நடத்துவதற்கும் உபகரணங்கள் வாங்குவதற்கும் ரூ 376 கோடி தேவைப்படும் “என்று கூறியிருப்பதாகவும் “அ.தி.மு.க அரசு இதுகுறித்த தனது நிலைப்பாட்டை தெரிவிக்கவில்லை” எனவும் கூறியுள்ளது. ஏற்கனவே, “புதிய மருத்துவக் கல்லூரியை கட்டுவதற்கு 186 கோடி ரூபாயை தமிழக அரசு ஒதுக்குவதற்கு தயாராக இருப்பதாகவும் மேற்கொண்டு இழுபறியான பேரங்கள் நடைபெறலாம்” என்று இரு அரசுகளும் துண்டு போட்டு கைகுலுக்கி இருப்பதைப் படம்பிடித்திருக்கிறது!

மாணவர்களே இப்பிரச்சனையை பொது அரங்கில் கணிசமாக அம்பலப்படுத்தியிருக்கின்றனர். சான்றாக, அனைத்திந்திய மாணவர் கூட்டமைப்பு, “அரசுக் கட்டமைப்புகளை ஒழித்துக்கட்டுவதன் நோக்கமே ஈ.எஸ்.ஐ. மருத்துவக் கல்லூரிகளை கைவிடுவதற்கான நோக்கம்” என்பதை தன் கண்டன அறிக்கையில் பதிவு செய்திருக்கிறது.

“ஈ.எஸ்.ஐ. கழகம் மருத்துவக் கல்லூரிகளை ஆரம்பிப்பது என்ற முடிவெடுத்த பொழுதே அதற்காக 12,000 கோடி ரூபாயை ஒதுக்கியிருக்கிறது. மேலும் ஈ.எஸ்.ஐ யின் உபரி கையிருப்பு 34,000 கோடியாகும். இவையனைத்தும் தொழிலாளர்களின் பணமாகும். மேலும் ஆண்டொன்றுக்கு தொழிலாளிகளிடம் இருந்து பெறப்படும் காப்பீடு தொகை 14,000 கோடியாக இருக்கிறது. இது இனி வரும் ஆண்டுகளில் அதிகரிக்கும்” என்கிறது அகில இந்திய மாணவர் கூட்டமைப்பின் கண்டன அறிக்கை.

நிலைமை இப்படியிருக்க, குறிப்பாக 2014-2015 பட்ஜெட்டில் பொற்கால மோடி அரசு, சுகாதாரத்துறைக்கான பட்ஜெட்டை 20% சதவீதம் வெட்டிச் சரித்திருக்கிறது. இது கிட்டத்தட்ட 6,000 கோடி ரூபாயாகும். மேற்கொண்டு பல்வேறு தொழிலாளர் நலச்சட்டங்களை கார்ப்பரேட் கொள்ளைக்கு அடகுவைத்திருக்கிறது. இந்நிலையில், ஈ.எஸ்.ஐ. மருத்துவக் கல்லூரிகள் இயங்குவதற்கு நிதிப்பற்றாக்குறை காரணம் என்பது கடைந்தெடுத்த பித்தலாட்டமின்றி வேறென்ன?

மொத்த ஈ.எஸ்.ஐ நிதியில் 1/8 பங்கைத் தவிர நயா பைசா கூட மைய அரசு, தொழிலாளர்களுக்காக ஈ.எஸ்.ஐ விசயத்தில் கிள்ளிப்போடவில்லை என்பதுதான் நிதர்சனம். ஆனால் தொழிலாளர் காப்பீட்டு கழகத்தின் 163 குழுக்கூட்டத்தின் அறிக்கையோ மருத்துவக் கல்லூரியின் பல்வேறு செலவுகளை (capital cost, recurring cost and revenue cost ) சமாளிக்க முடியாது என்று புளுகியிருக்கிறது. தொழிலாளர்களின் பணத்தை தொழிலாளர்களுக்கு அல்லாமல் வேறு எதற்கு மடைமாற்றுகின்றனர் என்ற கேள்வியும் இங்கு இயல்பாகவே எழுகிறது.

தொழிலாளர் அமைச்சகத்தால் ஈ.எஸ்.ஐ. மருத்துவக் கல்லூரிகளை நடத்த முடியவில்லையென்றால் சுகாதார அமைச்சகமே இக்கல்லூரிகளை ஏற்று நடத்த வேண்டுமென டெல்லி மாணவர்கள் குழு கோரிக்கை வைத்திருக்கிறது. இதுவரை உள்கட்டமைப்பிற்காக செலவழிக்கப்பட்ட 5,000 கோடி ரூபாய், மக்களின் பணம் என்பதையும் அடிக்கோடிட்டு காட்டியிருக்கிறது.

உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்தியிருக்கிற சென்னை ஈ.எஸ்.ஐ கல்லூரி மாணவர்கள் அரசின் நிலைப்பாட்டைக் கொண்டு மேற்கொண்டு நடவடிக்கைகள் எடுக்கப்போவதாக தெரிவித்திருக்கிறார்கள். இதற்கிடையில் முதுகலை மற்றும் இளங்கலை மாணவர்களை பிரித்தாளும் சூழ்ச்சியும் நடைபெற்று வருவதை கவனிக்க முடிந்தது.

“இளங்கலை மாணவர்களின் மாற்று இடத்திற்கும் எதிர்காலத்திற்கும் ஈ.எஸ்.ஐ. நிர்வாகம் வழிவகை செய்யும்” என்றும், “தேவைப்பட்டால் நீதிமன்றங்களை நாடலாம்” என்றும், “அதுவரை வகுப்பைப் புறக்கணிக்க வேண்டாம்” என்றும் இளங்கலை மாணவர்களின் பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை வலியுறுத்துவதாக தற்போதைய களச் செய்திகள் தெரிவிக்கின்றன. பெற்றோர்களின் இத்தகைய நிலைப்பாட்டை முதுகலை மாணவர்கள் முற்றாக நிராகரித்திருக்கின்றனர்.

கர்நாடகாவைப் பொறுத்தவரை மாணவர்கள் ஏதாவது ஒரு அரசு ஏற்று நடத்தினால் போதுமானது என்ற அளவில் போராட்டத்தை சுருக்கியிருக்கின்றனர். மேற்குவங்கத்தில் மாணவர்கள் ரிட் மனு தாக்கல் செய்திருக்கின்றனர்.

டெல்லியின் கள சூழ்நிலை ஐந்து அம்ச கோரிக்கைகளை முன்வைத்திருக்கிறது.

  • மருத்துவக் கல்லூரிகளை கைவிடுகிற ஈ.எஸ்.ஐ யின் 163 குழுக்கூட்டத்தின் முடிவை இரத்து செய்!
  • மருத்துவக் கல்லூரிகளை மைய அரசே ஏற்று நடத்தும் என சுற்றறிக்கை அனுப்பு!
  • உள்கட்டமைப்பு வசதிகள், ஆசிரியர் நியமனம், இந்திய மருத்துவக் கவுன்சிலின் அங்கீகாரங்களைப் புதுப்பிக்கிற பணிகளை தொடர்ந்து நடத்து!
  • ஒரு வேளை ஈ.எஸ்.ஐ கழகம் மருத்துவமனைகளை ஏற்று நடத்த முடியாவிட்டால் சுகாதார அமைச்சகத்தின் கீழ் மருத்துவக் கல்லூரிகளை ஏற்று நடத்து! தனியார்மய முயற்சிகளைக் கைவிடு!
  • கற்றுத் தரும் மருத்துவப் பேராசியர்களை கல்விஅல்லாத பணிக்கு மாற்றுவதை கைவிடு! ஏற்கனவே வணிகமயமாக்கப்பட்டிருக்கும் சுகாதாரத்துறையை மேலும் நீர்த்துப்போகும் பொருட்டு மருத்துவக் கல்லூரியின் அறிவு வளங்களைச் சூறையாடாதே!
  • மாணவர்களின் மேற்கண்ட ஐந்து அம்ச கோரிக்கைகளை ஆதரிக்கிற நேரத்தில் பிரச்சனையின் மைய அரசியலையையும் நாம் தொட்டுச் செல்ல வேண்டியது அவசியமாகும்.

மருத்துவக் கல்லூரியை கைவிடுகிற மைய அரசின் செயல்பாட்டில் மாணவர்களுக்கான பாதிப்பு மட்டும் இல்லை என்பதை போராட்டக் குழுவோடு நாமும் உணரவேண்டியது அவசியமாகும். தொழிலாளர் உழைப்பால் உருவாக்கப்பட்டிருக்கிற ஈ.எஸ்.ஐ மருத்துவக் கல்லூரிகள் கைவிடப்படுவது தொழிலாளர் நலன்களை கழுவி ஊற்றுகிற தனியார்மய கார்ப்பரேட் கொள்ளையேயன்றி வேறல்ல! ஏற்கனவே தொழிலாளர் நலச்சட்டங்கள் காயடிக்கப்பட்டதன் தொடர்ச்சியாகவே மோடி அரசு ஈ.எஸ்.ஐ மருத்துவமனைகளில் இருந்து கல்லூரிகளை அப்புறப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை எடுத்திருக்கிறது.

தொழிலாளர்களின் உரிமைகளை கேள்வி கேட்பாரின்றி ஆணையங்கள், கழகங்கள் என்பதன் பெயரில் ஒரே ஒரு சுற்றறிக்கை மூலம் நிர்மூலமாக்குவதும் மாணவர்கள் இன்று நடுத்தெருவில் நிற்பதும் மைய மாநில அரசுகள் கேள்விக்கு அப்பாற்பட்டவையாக அதிகார துஷ்பிரோயகத்தின் உச்சாணிக்கொம்பில் அம்மணமாக அமர்ந்திருப்பதையும் குறிப்பாக அரசின் ஒட்டுமொத்த தோல்வியையுமே இம்மாணவர்களின் போராட்டங்கள் சுட்டிக்காட்டுகின்றன.

ஒட்டு மொத்த நாட்டையும் பாதிக்க கூடிய பிரச்சினைகளுக்கு, தொழிலாளிகளுடன் இணைந்து போராட வேண்டிய தேவையை மருத்துவக் கல்லூரி மாணவர்களின் போராட்டங்கள் பொது வெளிக்கு கொண்டு வந்திருக்கின்றன.

கடைசியாக, நாங்கள் போராட்ட வளாகத்தைவிட்டு வெளியே வரும் போது, ஈ.எஸ்.ஐ. மருத்துவக் கல்லூரி மாணவர்கள் சிகிச்சைக்கு வந்த தொழிலாளிகள் மற்றும் அவர்தம் குடும்பங்களிடம் தங்களது போராட்டத்திற்கு ஆதரவு கேட்டு கையெழுத்து இயக்கம் நடத்திக்கொண்டிருந்தனர். தனியார்மய முதலாளித்துவ சீரழிவில் சிதறிப்போயிருக்கும் அறிவுத்துறையினர் தற்பொழுது பாட்டாளிவர்க்கத்திடம் கையெழுத்துக்காக நிற்பதை ஓர் கனிந்த சூழல் என்றே கருதுகிறோம்.

இந்த கனிந்த சூழல் கனலாய் எழுந்து நாட்டை விற்று வரும் அரசையும், அந்த அரசை நடத்தி வரும் மோடி கும்பலையும், வீழ்த்தட்டும்!

செய்தி, புகைப்படங்கள் – சென்னை செய்தியாளர்கள்

இது தொடர்பான செய்திகள்