Wednesday, September 28, 2022
முகப்பு போலி ஜனநாயகம் அதிகார வர்க்கம் கடியப்பட்டணம் : கன்னியாகுமரியில் ஒரு அத்திப்பட்டு - நேரடி ரிப்போர்ட்

கடியப்பட்டணம் : கன்னியாகுமரியில் ஒரு அத்திப்பட்டு – நேரடி ரிப்போர்ட்

-

டியப்பட்டணம் மீனவர் கிராமத்தில் ஊரில் குடிக்க தண்ணீர் கேட்டால் கொஞ்சம் யோசிக்கும் நிலைதான் இருக்கிறது. நாள் முழுவதும், நாள்தோறும் கடல் பொங்கும் தண்ணீரை பார்த்துக் கொண்டு, அலைச் சத்தத்துக்கு மத்தியில் வாழும் அந்தக் கடற்கரை கிராமத்து மக்கள் நன்னீருக்குக் கொடுக்கும் விலை அதிகம்.

கடியப்பட்டணம் கடற்கரை
நாகர்கோவிலுக்கு தென் மேற்கே அரபிக் கடலோரம் அமைந்திருக்கிறது கடியப்பட்டணம்

கன்னியாகுமரி மாவட்டத்தில் நாகர்கோவிலுக்கு தென் மேற்கே அரபிக் கடலோரம் அமைந்திருக்கிறது கடியப்பட்டணம். மொத்தம் 2,200-க்கும் அதிகமான குடும்பங்கள் இங்கு வசிக்கின்றன; மக்கள் தொகை 10,000-ஐ எட்டுகிறது.

கடியப்பட்டணம்
“கீழே எல்லாம் பாறை, உடைத்து கிணறு தோண்ட முடியாது”

கடலோர கிராமமான இங்கு கிணறு தோண்டினால் நன்னீர் கிடைப்பது சாத்தியமில்லை. 3,000 ரூபாய் கட்டணத்தில் நீரூற்று எங்கு இருக்கிறது என்று பார்த்துச் சொல்லுபவர்கள், “கீழே எல்லாம் பாறை, உடைத்து கிணறு தோண்ட முடியாது” என்று சொல்லி விட்டார்கள்.

கடியபட்டணம் ஊருக்காக தனியாக போடப்பட்ட குடிநீர் திட்டத்தின் கீழ் குருந்தன்கோடு ஊராட்சியில் இருந்து குடிநீர் இணைப்பு கொடுக்கப்பட்டது. அடுத்தடுத்து தேவைக்கேற்ப பக்கத்து ஊர்களில் நிலம் வாங்கி அல்லது புறம்போக்கு நிலத்தில் ஆழ்துளை கிணறு அமைத்து ஊரின் நன்னீர் தேவையை நிறைவு செய்து வந்தனர்.

கடியப்பட்டணம் குடிநீர்த் திட்டம்
பயன்றறு போகும் குடிநீர்த் திட்டம்

அந்த கிணறுகள் வறண்டு விடவோ, உப்பு நீர் புகுந்து விடவோ, சேறு கலந்த நீராக மாறி விடவோ செய்ய தண்ணீர் வாரத்துக்கு ஒரு நாள்தான் வருகிறது. அதுவும், கருப்பு தேநீர் நிறத்தில வருகிறது. அதை குடிக்கவோ, சமைக்கவோ, குளிக்கவோ, துணி துவைக்கவோ பயன்படுத்த முடியாது.

கடியப்பட்டணம் நீர்
குடிக்கவோ, சமைக்கவோ, குளிக்கவோ, துணி துவைக்கவோ பயன்படுத்த முடியாது.

அந்த ஊர் மக்கள் தினமும் கடலோடு போராடித்தான் தமது வாழ்க்கையை ஈட்டிக் கொள்கிறார்கள். கட்டு மரத்தில் போய் தூண்டில் மீன் பிடிப்பவர்களும் சரி, படகில் போய் வலை வீசுபவர்களும் சரி, மீன்பாடு குறைந்து வருவதால் வெளியூர்களுக்கோ ஏன் வெளிநாடுகளுக்கோ போய் பெரிய படகுகளில் வேலை செய்பவர்களும் சரி, ரத்தத்தை வியர்வையாகச் சிந்தி, கடலோடு போராடித்தான் சம்பாதிக்கிறார்கள். அடுத்த தலைமுறையாவது படித்து வேலைக்குப் போகட்டும் என்று லட்சங்கள் செலவழித்து பொறியியல் படிப்பு படிக்க வைத்த இளைஞர்களும் வேலை கிடைக்காமல் கடல் தொழிலுக்கே போக ஆரம்பித்திருக்கிறார்கள்.

கடியப்பட்டணம் மீனவர்கள்
தினமும் கடலோடு போராடித்தான் வாழ்க்கை

இந்நிலையில் தண்ணீர் வேண்டுமென்றால் வசதியைப் பொறுத்து குடிப்பதற்கு 35 ரூபாய் கொடுத்து 20 லிட்டர் பாட்டில் வாங்கிக் கொள்ளலாம். சமைக்க, குளிக்க, துவைக்க 450 ரூபாய் கொடுத்து 2,000 லிட்டர் வண்டி தண்ணீர் தருவித்து தொட்டிகளில் நிறைத்துக் கொள்ளலாம்.

கடியப்பட்டணம் வள்ளியாறு
20 ஆண்டுகளுக்கு முன்பு வரை கூட ஊரை ஒட்டி கடலில் கலக்கும் வள்ளியாற்றுத் தண்ணீர் குடிநீராகவும், துணி துவைக்கவும், குளிக்கவும் பயன்பட்டது.

இந்த ஊருக்கு குறைந்தது 1,000 வருட வரலாறு உண்டு என்பதாக கிராமத்து திருச்சபை மற்றும் ஊர் மக்கள் ஒரு நூலையே வெளியிட்டிருக்கிறார்கள். “1,000 ஆண்டுகளாக விலை கொடுத்தா தண்ணீர் வாங்கிக் கொண்டு இருந்தார்கள்” என்று நீங்கள் கேட்கலாம். 20 ஆண்டுகளுக்கு முன்பு வரை கூட ஊரை ஒட்டி கடலில் கலக்கும் வள்ளியாற்றுத் தண்ணீர் குடிநீராகவும், துணி துவைக்கவும், குளிக்கவும் பயன்பட்டது. வேனிற்காலத்தில் கூட ஊற்றுநீரால் மக்களின் தாகம் தணித்தது.

வள்ளியாறு
நோய்களின் ஊற்றுக்கண்ணாக வள்ளியாற்று நீர்

அந்த ஆற்று நீர் சிறிது சிறிதாக மாசடைந்து இப்போது நோய்களின் ஊற்றுக்கண்ணாகி விட்டிருக்கிறது. ஆற்றின் மேல்மடை கிராமங்களின் சாக்கடை நீரை முறையாக மடை கட்டி ஆற்றில் கொண்டு விட்டிருக்கிறார்கள். மீன் சந்தைகளின் கழிவுகளை உள்ளே கொட்டுகிறார்கள். இதை செய்ய வேண்டிய பஞ்சாயத்து மற்றும் மாவட்ட நிர்வாக அமைப்புகள் எல்லாம் எதிர்மறையில் செயல்படுகின்றன.

மணல் ஆலை கழிவுகள்
மணல் ஆலையின் கழிவு மணலை ஆற்றிற்கு அருகில் கொட்டி வைத்திருக்கிறார்கள்.

மணவாளக்குறிச்சியில் உள்ள மணல் ஆலையின் கழிவு மணலை ஆற்றிற்கு அருகில் கொட்டி வைத்திருக்கிறார்கள். “மணல் ஆலையினர் ராட்சத குழாய் ஒன்றை ஆற்றுப் படுகையில் புதைத்திருக்கின்றனர், அது தண்ணீரை உறிஞ்சுகிறதா கழிவை கொட்டுகிறதா என்று தெரியவில்லை” என்கிறார் கடியப்பட்டணத்தின் ஜார்ஜ் என்ற மீனவர்.

கடியப்பட்டணம் மீனவர்
“ஓடுற தண்ணியில முங்கிக் குளிக்க யாருக்காவது புடிக்காம இருக்குமா?”

“ஓடுற தண்ணியில முங்கிக் குளிக்க யாருக்காவது புடிக்காம இருக்குமா? ஆனா, எங்க வீட்டுக்கு பின்னால இருக்கிற ஆத்துல நான் முங்கிக் குளிச்சி 10 வருசமாச்சு” என்கிறார் அவர். வசதி குறைவான பெரும்பான்மையான மற்றவர்கள் தண்ணீர் ஓடும் நாட்களில் இந்த ஆற்றில்தான் குளிக்கவும், துணி துவைக்கவும் செய்கிறார்கள். ஆற்றுத் தண்ணீர் ஓட்டம் நின்று தேங்கி விட்டால், இரண்டே நாட்களில் துர்நாற்றம் வீச ஆரம்பிப்பதாகவும், அதில் குளிப்பது சாத்தியமில்லை என்றும் கூறுகின்றனர், மக்கள்.

ஆற்றில் குளித்தால் புற்றுநோய் உட்பட தோல் சம்பந்தமான நோய்கள் வருவதாகச் சொல்கிறார்கள் ஊர்மக்கள். அந்த ஊரில் 110 பேர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். 100-க்கு 60 பேருக்கு புற்று நோய் வரும அபாயம் இருக்கிறது என்று ஒரு மருத்துவக் குழு ஆய்வு செய்து தெரிவித்திருக்கிறது.

கடியப்பட்டணம் தண்ணீர் பஞ்சம்
சுனாமியின் அழிவுகளிலிருந்து மீண்டெழுந்து வாழ்க்கையை கட்டமைத்துக் கொண்டனர் இம்மக்கள். ஆனால், ஆளும் வர்க்க மனிதர்கள் தோற்றுவித்த நன்னீர் பஞ்சம் அவர்களை மீளமுடியாதபடி அலைக்கழிக்கிறது

2004 சுனாமியில் இதே வள்ளியாற்றில் குளித்துக் கொண்டு இருந்த 32 பேர் ஆழிப்பேரலைகளால் அடித்துச் செல்லப்பட்டு கொல்லப்பட்டனர். இயற்கைப் பேரழிவான சுனாமியின் அழிவுகளிலிருந்து மீண்டெழுந்து வாழ்க்கையை கட்டமைத்துக் கொண்டனர் இம்மக்கள். ஆனால், ஆளும் வர்க்க மனிதர்கள் தோற்றுவித்த நன்னீர் பஞ்சம் அவர்களை மீளமுடியாதபடி அலைக்கழிக்கிறது.

ஜான் பாஸ்கோ
72 வயதிலும் கடலுக்கு போனால்தான் அவருக்கும், அவரது வீட்டுக்காரம்மாவுக்கும் சோறு

ஜான் பாஸ்கோ தாத்தாவுக்கு 72 வயதாகிறது. 5 பெண்கள், 1 பையன். எல்லோருக்கும் திருமணமாகி தனியே வசிக்கிறார்கள். இன்றும், இந்த வயதிலும் அவர் கடலுக்கு போனால்தான் அவருக்கும், அவரது வீட்டுக்காரம்மாவுக்கும் சோறு. வள்ளியாற்றில் தண்ணீர் ஓட்டம் நின்று விட்ட காலங்களில், அதில் குளிக்க முடியாமல் போன நாட்களில், சாப்பிட வைத்திருக்கும் பணத்தை தண்ணீருக்கு திருப்பிவிட வேண்டியிருக்கும். இல்லையென்றால், செங்குழி ஓடைக்கும், பெரியகுளம், வெள்ளிச்சந்தை பகுதிகளுக்கும் கால்நடையாகவும், பேருந்துகளிலும் குளிப்பதற்குச் செல்ல வேண்டும்.

கடியப்பட்டணம்
“மக்களுக்காக யாரும் இல்லை”

ஒரு தொலைபேசியில் அழைத்தால் 450 ரூபாய்க்கு வண்டியில் தண்ணீர் கொண்டு இறக்குவதற்கு ஆட்கள் தயாராக இருக்கிறார்கள். அதிகமில்லை, ஒரு கிலோமீட்டர் தூரத்துக்குள்ளாக இருந்தே நன்னீரை பிடித்துக் கொண்டு வருகிறார்கள்.

“ஊர்மக்கள் எல்லோரும் சேர்ந்து ஏதாவது முயற்சி செய்து அங்கிருந்து நல்ல தண்ணீர் கொண்டு வர நிரந்தர ஏற்பாடு செய்யக்கூடாதா” என்று உங்களுக்குத் தோன்றலாம்.

அதையும் செய்திருக்கிறார்கள். 45 லட்ச ரூபாய் செலவழித்து, ஆற்றங்கரையின் வடக்கு பகுதியில் ஊற்று நிலம் வாங்கியிருக்கின்றனர் இவ்வூர் மக்கள். அதில் நல்ல தண்ணீர் கிடைக்கிறது. அதைப் பயன்படுத்தி ஊர்மக்கள் எல்லோருக்கும் நல்ல தண்ணீர் கொண்டு வருவதற்கான மாவட்ட ஆட்சித் தலைவர் ஆணையும் பெறப்பட்டது. ஏற்கனவே கடியபட்டணத்துக்கு தண்ணீர் கொண்டு வரும் குழாய் சாலை வழியாக போடப்பட்டுள்ளது. ஆனால், ஊர்மக்கள் வாங்கிப் போட்டிருக்கும் நிலத்திலிருந்து சாலைக்கு குழாய் கொண்டு வர அனுமதிக்க மறுத்து தகராறு செய்கிறார்கள், பக்கத்து ஊர் ஆண்டைகள்.

கடியப்பட்டணம் தண்ணீர் பஞ்சம்
மக்கள் வாழ்க்கையோ தண்ணீர் வியாபாரிகளின் கொடூர பிடிக்குள் சிக்கியிருக்கிறது.

“எங்க ஊருக்குத் தண்ணி இல்லாம போயிடும்” என்று சொல்லி அதை தடுத்து நிறுத்தி விடவே, இப்போது தண்ணீர் பிரச்சனை நீதிமன்ற வாய்தாக்களில் சிக்கிக் கொண்டிருக்கிறது. மக்கள் வாழ்க்கையோ தண்ணீர் வியாபாரிகளின் கொடூர பிடிக்குள் சிக்கியிருக்கிறது. பெப்சிக்கும், கோக்கிற்கும், பெரும் தொழில் நிறுவனங்களுக்கும், இல்லை வணிக நோக்கில் தண்ணீரை விற்கும் நாட்டில் ஒரு கிராமத்து மக்களுக்கு தண்ணீர் கிடைப்பதற்கு மட்டும் ஆயிரம் தடைகள்.

இதில் தலையிட்டு சரி செய்ய வேண்டிய அரசியல்வாதிகள்தான் தூண்டி விடும் வேலையைச் செய்கின்றனர். “மீனவ கிறிஸ்தவர்களுக்கு ஏன் இந்து நாடார் தண்ணீர் தர வேண்டும். அவங்க எல்லாம் நமக்கா ஓட்டு போடுவாங்க” என்று பா.ஜ.க அந்த ஊரில் அரசியல் செய்கிறது. “குடிக்கத் தண்ணி கூட தர மாட்டேன்னு சொல்ற கல் நெஞ்சு வேறு எங்கிருந்து வரும்” என்று கேட்கிறார்கள் கடியப்பட்டணம் மக்கள். அந்த கல்நெஞ்சு பாரதிய ஜனதாவுக்கு நிறையவே இருக்கிறது. அதனால்தான் பொன் இராதா கிருஷ்ணன் இங்கே எம்பியாகி மந்திரியாகவும் இருக்கிறார்.

“தஞ்சாவூர் விவசாயத்துக்கு தண்ணி விடச் சொன்னா கர்நாடகாகாரனும் இதையேதான் சொல்றான். வேற மாநிலம், வேற மொழி பேசக் கூடியவனுக்கே நியாயம் சொல்றோம் நாம. ஆனா, இங்க பக்கத்து ஊர்க்காரனுக்கு தவிச்ச வாய்க்கு தண்ணி கொடுக்க மாட்டேங்கிறான்.” என்கிறார் ஜார்ஜ்.

கடியப்பட்டணம் பெண்கள்
“தஞ்சாவூர் விவசாயத்துக்கு தண்ணி விடச் சொன்னா கர்நாடகாகாரனும் இதையேதான் சொல்றான். வேற மாநிலம், வேற மொழி பேசக் கூடியவனுக்கே நியாயம் சொல்றோம் நாம. ஆனா, இங்க பக்கத்து ஊர்க்காரனுக்கு தவிச்ச வாய்க்கு தண்ணி கொடுக்க மாட்டேங்கிறான்.”

மாவட்ட நிர்வாகம் நினைத்தால் ஒரே இரவில் தனது ஆணையை அமல்படுத்தி, இந்த பிரச்சனையை சரி செய்து விடலாம். ஆனால், ஊருக்கு வந்து மனுக்கள் வாங்கிச் செல்வதோடு அதிகாரிகளின் பணி முடிந்து விடுகிறது. கேரளாவுக்குள் அணை கட்டி தண்ணியைத் திருப்பி தமிழ்நாட்டு விவசாயத்துக்கு உதவும்படி நிர்வாக ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கின்றன. “அந்த வகையில கேரளாக்காரங்கள கோயில் கட்டி கும்பிடணும். இங்க சாதி, மதம்னு பேசிகிட்டு அரசியல் பண்றானுங்க. அதிகாரிங்க ஏ.சி ரூமுக்குள்ள உக்காந்து கிட்டு சம்பளம் வாங்கிட்டு போறானுங்க. மக்களுக்காக யாரும் இல்ல” என்கிறார் ஜார்ஜ்.

கடியப்பட்டணம் மக்கள்
“அதிகாரிங்க ஏ.சி ரூமுக்குள்ள உக்காந்து கிட்டு சம்பளம் வாங்கிட்டு போறானுங்க.”

ஊருக்கு பொதுவாக தண்ணீர் திட்டம் நிறைவேற்றுவதற்கு முட்டுக்கட்டை போடும் பா.ஜ.கவினர். 450 ரூபாய்க்கு ஒரு வண்டி என்று தண்ணீரை விலைக்கு விற்பதை எதிர்ப்பதில்லை.

போராட்டமே வழி
பா.ஜ.கவை தனிமைப்படுத்தி, மாவட்ட நிர்வாகத்தை உதைத்து எழுப்பும் வகையில் போராடுவதுதான் ஒரே வழி.

தங்களது அடிப்படை தேவையான குடிநீரை பெறுவதற்கு கடியப்பட்டணம் மக்கள் அனைவரும் இணைந்து, மற்ற மக்களிடம் நியாயத்தை எடுத்துச் சொல்லி பா.ஜ.கவை தனிமைப்படுத்தி, மாவட்ட நிர்வாகத்தை உதைத்து எழுப்பும் வகையில் போராடுவதுதான் ஒரே வழி.

வினவு செய்தியாளர்,
புகைப்படங்கள் மற்றும் கள ஆய்வில் உதவி: ஜவஹர்ஜி,
நன்றி: கடியப்பட்டணம் மக்கள்.

  1. குடி தண்ணீரை பாகிஸ்தானிடம் கேட்கலாமா?
    கன்னியாகுமரி மாவட்டம், கடியப்பட்டணம் மீனவ கிராம மக்களுக்கு எதிராக அரசியல் லாபத்திற்காக பா.ஜ.க. இந்து நாடார்களுடன் இணைந்து கொண்டு குடிநீர் வழங்க மறுத்த நிலையிலும் அவர்கள் வெற்றி பெற்றால் நமக்கு குடிநீர் கிடைக்க உதவிகரமாக இருப்பார்கள் என நம்பிய நிலையில் தெற்கு எழுத்தாளர் இயக்கம் பா.ஜ.க.வுக்காக தேர்தல் பிரச்சாரமும் விளம்பரமும் செய்ததது. 16.04.2014 அன்று டில்லி பா.ஜ.க. தேசிய செயற்குழு உறுப்பினர் ராமகிருஷ்ண அய்யங்கார், ஸ்ரீபிரியா அய்யர் ஆகியோருடன் ஜோ. தமிழ்ச்செல்வன், கடியப்பட்டனத்தில் பா.ஜ.க.விற்காக தேர்தல் பணியாற்றியது. பொன்னார் வெற்றி பெற்ற பிறகும் மாற்றம் இல்லை. அது எப்போதும் இல்லை என்பது உறுதியாகி இருக்கிறது. குடி தண்ணீரை இனி பாகிஸ்தானிடமா கேட்க முடியும்?

  2. இப்படிதான் பாஜாகவின் மலிவான அரசியலால் இராஜாக்கமங்கலம் துறையில் வர இருந்த மக்களால் மக்களுக்காக கட்டப்பட இருந்த மீன்பிடி துறைமுகமும் வர இயலாமல் உள்ளது… அவர்களை அரசியல் அனாதைகள் ஆக்க மீனவர்கள் ஒன்று திரண்டு நமக்கென தனி தொகுதியும் நமக்கென தனி சட்டமன்ற உறுப்பினரையும் பெற்றாக வேண்டும்…

  3. நான்கு வருடங்கள் ஆகி விட்டது 2019-ல் இன்னும் அதே நிலைமைதான். தண்ணி லாரி 650-க்கு கிடைக்கும் வசதி படைத்தவர்கள் வாங்குவார்கள் ஏழை மக்கள் என்ன செய்வார்கள்.
    கூட்டு குடிநீர் திட்டத்தின் குடிநீரும் ஒழுங்காக கிடைப்பதில்லை.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க