privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புஅரசியல்ஊடகம்டயானா – தெரசா : ஏகாதிபத்திய நரகத்தின் இரு தேவதைகள்

டயானா – தெரசா : ஏகாதிபத்திய நரகத்தின் இரு தேவதைகள்

-

(1997-ம் ஆண்டு இந்தியாவில் கொல்கத்தாவை மையமாகக் கொண்டு ‘சமூக சேவை’ செய்து கொண்டிருந்த ‘அன்னை’ தெரசாவும், இங்கிலாந்தை மையமாகக் கொண்டு ‘சமூக சேவை’ செய்து கொண்டிருந்த இளவரசி டயானாவும் ஒரு வார கால இடைவெளிக்குள் தனித்தனி சம்பவங்களில் உயிரிழந்தார்கள். அதைத் தொடர்ந்து, ஏகாதிபத்திய அரசுகளாலும், நிறுவனங்களாலும், ஊடகங்களாலும் கட்டியமைக்கப்படும் சமூக சேவை என்ற பிம்பங்கள் குறித்து 1997 அக்டோபர் மாதம் புதிய ஜனநாயகம் இதழில் வெளியான கட்டுரை இது.)

இளவரசி டயானா, 'அன்னை' தெரசா
டயானாவும், டயானாவின் ஆதர்ச கன்னியாஸ்திரீயான ‘அன்னை தெரசாவும் அடுத்தடுத்து மாண்டு போய் விட்டார்கள்

காதிபத்திய உலகின் தொண்டுள்ளம் கொண்ட கனவுக் கன்னியாகக் காட்டப்பட்ட டயானாவும், டயானாவின் ஆதர்ச கன்னியாஸ்திரீயான ‘அன்னை’ தெரசாவும் அடுத்தடுத்து மாண்டு போய் விட்டார்கள். “அவர்கள் நாம் வாழும் காலத்தின் இரு தேவதைகள்” என்று ஏகாதிபத்திய உலகம் அஞ்சலி செலுத்தி அரற்றுகிறது.

டயானா – அரண்மனை ஆடம்பர வாழ்வும் களிவெறியாட்டமும் கொண்டிருந்த இளவரசி. கணவர் வேல்ஸ் இளவரசருடன் ஏற்பட்ட மணமுறிவைத் தொடர்ந்து, பழமைவாத சலிப்பூட்டும் அரண்மனை வாழ்விலிருந்து வெளியே வந்து, ஆடம்பர விளம்பரத்துடன் சமூக நலனில் அக்கறை உள்ளவராகத் தன்னைக் காட்டிக் கொண்டார், டயானா.  “எய்ட்ஸ் நோயாளிகள், கண்ணி வெடிகளை அகற்றுதல் முதலானவற்றுக்காக தனது விலை மதிப்பற்ற ஆடைகளை ஏலம் விட்டு நிதி திரட்டினார்; பாதிக்கப்பட்டோரை நேரில் சென்று சந்தித்து ஆறுதல் கூறினார்” என்று அவரது சமூகத் தொண்டுகளைப் பட்டியலிட்டு “மக்களின் இதயங்களில் வாழ்ந்த இளவரசி” என்று பத்திரிகை உலகம் பாராட்டுகிறது.

மேட்டுக்குடிப் பெண்களுக்கு ‘சமூக சேவை’ என்பதும் ஒரு பொழுது போக்கு. சினிமா நடிகைகள்கூடச் சேரிகளுக்கும், அனாதை இல்லங்குளுக்கும் சென்று சேவை செய்வதும், நகரங்களில் எக்ஸ்னோரா அமைப்புகளில் தொண்டாற்றுவதுமாக காலம் மாறிவிட்டது. உலக அழகி ஜஸ்வர்யாராய் கண்தானம் பற்றி தொலைக்காட்சி துண்டுப் படத்தில் அறிவுறுத்துவதோடு, தனது கண்களையும் தானமாகத் தருவதற்கும் ஏற்பாடு செய்துள்ளார். இதே போலத்தான் டாயானாவும் ‘சமூகத் தொண்டாற்றினார்’. அரச குடும்பத்தைச் சேர்ந்த, அழகும் கவர்ச்சியும் கொண்ட செல்வச் சீமாட்டியான டயானா ‘சமூக சேவை’ செய்ததும் ,அது பிரபலமாகி, அவரது தலைக்குப் பின்னே பத்திரிகைகள் ஒர் ஒளிவட்டத்தை உருவாக்கின.

டயானா
எய்ட்ஸ், கண்ணி வெடிகளுக்கு எதிராக ‘சமூக சேவை’ செய்த டயானா இவற்றுக்குக் காரணமான ஏகாதிபத்தியவாதிகள், யுத்த வெறியர்களை எதிர்க்கவில்லை.

எய்ட்ஸ், கண்ணி வெடிகளுக்கு எதிராக ‘சமூக சேவை’ செய்த அவர், அதற்கென திட்டமோ, அமைப்போ கொண்டிருக்கவில்லை. இவற்றுக்குக் காரணமான ஏகாதிபத்தியவாதிகள், யுத்த வெறியர்களை எதிர்க்கவுமில்லை, இன்னும் சொல்லப் போனால், இத்தகைய ஏகாதிபத்திய கனதனவான்களிடமிருந்துதான் தனது ‘சமூக சேவை’க்கு நன்கொடை திரட்டினார்.

கோடீஸ்வர புதுக்காதலன் டோடியுடன் உல்லாசப் பயணம் சென்று திரும்பும் போது கார் விபத்தில் டயானா பாரீசு நகரில் பலியாகிப் போனார். பத்திரிகை புகைப்படக்காரர்கள் அவரை விடாமல் துரத்தியத்தால் தான் இந்த விபத்து ஏற்பட்டது என்று சிலர் குற்றம் சாட்டுகிறார்கள். ஆனால், அதே கிசுகிசு பத்திரிகைகள்தான் டயானாவின் ஒவ்வொரு அசைவையும் செய்தியாக வெளியிட்டு பரபரப்பூட்டி அவரைப் பிரபலப்படுத்தின. சமூகப் பிரச்சினைகளைப் பின்னுக்குத் தள்ளிவிட்டு, மக்களின் கீழ்த்தரமான ரசனைக்குத் தீனிபோடும் கிசுகிசு பரபரப்பு செய்திகளை வெளியிட்டு கொழுத்த லாபம் கண்ட இம்மஞ்சள் பத்திரிகைகளை அன்று யாரும் எதிர்க்கவில்லை; இன்றும் இத்தகைய பத்திரிகைகளைத் தடைசெய்யக் கோரவுமில்லை.

***

‘அன்னை’ தெரசா – அல்பேனியாவிலிருந்து சமூக சேவை செய்ய, கத்தோலிக்க திருச்சபையின் கன்னியாஸ்திரீயாக கல்கத்தாவுக்கு வந்தவர். பெரு நோயாளிகள், நிராதரவான முதியோர், அனாதைக் குழந்தைகளுக்காக ஒர் இல்லத்தைத் தொடங்கி நடத்தி, ‘தன்னலமற்ற சமூக சேவைக்காக’ நோபல் பரிசு பெற்றவர். ஏழை நாடுகளின் ஏழைகளுக்கு இளைப்பாறுதல் தருவதற்காகவே பிறப்பெடுத்ததாகக் கூறும் இம்மூதாட்டி மரணமடைந்ததும், உலக நாடுகள் அவரது தொண்டுள்ளத்துக்குத் தலைவணங்கி அஞ்சலி செலுத்துகின்றன.

ஆனால் ரோமன் கத்தோலிக்க திருச்சபை தனது அரசியல் நோக்கங்களை ஈடேற்றிக் கொள்வதற்கான ஆயுதமாகச் செயல்பட்டவர்தான் ‘அன்னை’ தெரசா. ஏழை நாடுகளைச் சூறையாடும் ஏகாதிபத்தியங்களின் குற்றவுணர்வுகளுக்கு ஏற்படுத்தியிருக்கும் வடிகால்தான் ’அன்னை’ தெரசா. நிலவுகின்ற சுரண்டல் அமைப்பை பாதுகாப்பதே தெரசாவின் கொள்கை. அதற்கு ஆபத்து ஏற்படும் போது, கடைந்தெடுத்த பாசிச பிற்போக்குவாதிகளையும் ஆதரிக்க தெரசா தயங்கியதில்லை. இந்த உண்மைகளை கிறிஸ்டோபர் ஹிட்சென்ஸ் என்ற பிரிட்டிஷ் பத்திரிகையாளரும், பிரிட்டனில் குடியேறிய பாகிஸ்தானிய பத்திரிகையாளரான தாரிக் அலியும், “நரகத்தின் தேவதை” என்ற தமது தொலைக்காட்சி குறும்படத்தின் மூலம் ஏற்கனவே அம்பலப்படுத்தியுள்ளனர். பிரிட்டிஷ் தொலைக்காட்சியிலேயே இக்குறும்படம் ஒளிபரப்பப்பட்டது.

ரொனால்ட் ரீகன்
தன்னுடைய கைகளால் சுதந்திரத்தின் பதக்கத்தை தெரசாவுக்கு அணிவித்தார், அன்றைய அமெரிக்க அதிபரும் போர்வெறியனுமாகிய ரீகன்

உலகின் மிகக் கொடிய சர்வாதிகாரியும், கொள்ளையனுமாகிய ஹெய்தி நாட்டின் அதிபர் டுவாலியரிடமிருந்து 1980-ல் தெரசா ஒர் உயரிய விருதைப் பெற்றார். “ஏழை குடிமக்கள் தங்கள் நாட்டு அதிபருடன் சகஜமாகப் பழகுவதை இங்குதான் பார்க்கிறேன்” என்று தெரசா அவனுக்குப் புகழ்மாலை சூட்டினார். அடுத்த சில ஆண்டுகளிலேயே மக்களின் பெரும் போராட்டத்தால் உயிருக்கு அஞ்சி, கொள்ளையடித்த பணத்தோடு பிரான்சில் தஞ்சம் புகுந்தன், ‘அன்னை’ தெரசாவின் நற்சான்றிதழ் பெற்ற இச்சர்வாதிகாரி.

தன்னுடைய கைகளால் சுதந்திரத்தின் பதக்கத்தை தெரசாவுக்கு அணிவித்தார், அன்றைய அமெரிக்க அதிபரும் போர்வெறியனுமாகிய ரீகன். ரீகன் –புஷ்ஷின் கைகள்தான் மத்திய அமெரிக்காவிலும், ஈராக்கிலும் படுகொலைப் பயங்கரங்களை நடத்தின என்பதை தெரசா அறியாமல் இல்லை. அமெரிக்கக் கூலிப்படைகளின் பயங்கரவாதத் தாக்குதலால் கொலைக்களமாகிக் கிடந்த எல்சால்வடாருக்கு தெரசா சென்றார். குவாதிமாலாவுக்குச் சென்றார். அங்கெல்லாம் அமெரிக்காவின் முயற்சியால் ‘அமைதி’ நிலவுவதாக அறிக்கை விட்டார்.

ஏகாதிபத்தியங்களுக்கும் இராணுவ சர்வாதிகாரிகளுக்கும் மட்டுமல்ல; கத்தோலிக்க தலைமைக் குருபீடமான வாடிகனுக்கும் கூட தெரசா உண்மையான பிரதிநியாகச் செயல்பட்டார். கருத்தடை, கருச்சிதைவு, பெண்ணுரிமை ஆகியவற்றுக்கு எதிராக கத்தோலிக்க மதபீடம் கொண்டிருந்த பிற்போக்குக் கொள்கைகளையே தெரசா நியாயப்படுத்தினார். வீடற்ற மக்களின் பிரதிநியாக தன்னைக் காட்டிக் கொண்டு பிரிட்டனுக்கு வந்து தெரசா அப்பிரச்சினையை விடுத்து, கருச்சிதைவை எதிர்க்கும் மசோதாவுக்கு ஆரதவைத் தேடி அன்றைய பிரிட்டிஷ் பிரதமர் தாட்சரிடம் தூது சென்றார். நிகரகுவாவில் கம்யூனிஸ்டுகள் தலைமையிலான ஏகாதிபத்திய எதிர்ப்பு கூட்டணி ஆட்சிக்கு எதிராக நின்ற கத்தோலிக்க மதவெறி பயங்கரவாதிகளுக்கு ஆதரவாக, அந்நாட்டுக்குச் சென்றார் தெரசா. சோவியத் ஒன்றியத்தில் போலி சோசலிசத்தை வீழ்த்தி, திருச்சபைகளை உயிர்ப்பிக்க வாடிகனின் தூதராக அவர் ஆர்மேனியா சென்று வந்தார். அமெரிக்க மக்களின் சேமிப்புப் பணத்தை கோடிக்கணக்கில் சூறையாடி, நிதிமோசடிக் குற்றம் நிரூபிக்கப்பட்டு சிறையிடப்பட்ட கீட்டிங் என்பவனது விமானத்தையே தெரசா தனது வெளிநாட்டுப் பயணங்களில் அதிகம் பயன்படுத்தினார். காரணம், கீட்டிங் ஒரு கத்தோலிக்க மதவெறியன்!

தெரசா இறுதி சடங்குகள்
அரசு மரியாதைகளுடன் இறுதி சடங்குகள்

அதே சமயம், தாழ்த்தப்பட்ட கிறித்துவர்களைப் பொருத்தவரை அவரது அணுகுமுறை வேறாக இருந்தது. ஈராண்டுகளுக்கு முன்பு தாழ்த்தப்பட்ட கிறித்துவர்களுக்கு இட ஒதுக்கீடு கோரி போட்டங்கள் பெருகியபோது, போப்பாண்டவரின் பிரதிநியாக பாதிரியார் லூர்துசாமி, இது பற்றி விவாதிக்க ‘அன்னை’ தெரசாவுக்கு அழைப்பு விடுத்தார். இதற்கு உடன்பட்ட தெரசா, பிறகு பின்வாங்கி இப்பிரச்சினையிலிருந்து ஒதுங்கிக் கொண்டார். தமக்கு ஆதரவாக நிற்பார் என்று தெரசா மீது நம்பிக்கை வைத்திருந்த தலித் கிறித்துவர்கள் இதனால் ஏமாற்றமும் எரிச்சலும் அடைந்தனர். சில தலித்துகள் அவரது ‘கருணை’ இல்லத்திலிருந்து வெளியேறி, தமது அதிருப்தியை வெளிப்படுத்தினர்.

தெரசாவுக்குக் கிடைத்த நன்கொடைகளைக் கொண்டு அவர் ஒர் ஐந்து நட்சத்திர மருத்துவமனையை ஏழைகளுக்காக கட்டியிருக்க முடியும். ஆனால் அதற்கு அவர் ஒரு போதும் முயற்சித்ததில்லை .’பாவப்பட்ட’ நோயாளிகள் ஆண்டவனுக்குப் பதிலாக விஞ்ஞானிகள் மீது நம்பிக்கை வைத்துவிடுவார்கள் என்ற அச்சம்தான் காரணம். அதனால்தான், இன்னும் மருந்து கண்டறியப்படாத எய்ட்ஸ் நோயாளிகளுக்கு அண்மைக் காலமாக கூடுதலாக அடைக்கலம் அளித்தார்.

கிறிஸ்டோபர் ஹிட்சென்ஸ்.
“நரகத்தின் தேவதை” தொலைக்காட்சி குறும்படத்தின் மூலம் தெரசாவை அம்பலப்படுத்திய கிறிஸ்டோபர் ஹிட்சென்ஸ்.

“நீங்கள் ஏன் எயிட்ஸ் நோயாளிகளுக்கு அடைக்கலம் தருகிறீர்கள்?” என்று இங்கிலாந்து வந்த தெரசாவிடம் பத்திரிகையாளர்கள் கேட்ட போது. “எயிட்ஸ்-க்கு மருந்தில்லை. இருப்பினும் எயிட்ஸ் நோயாளிகளை எங்களுடன் வைத்துக் கொள்கிறோம். எங்களால் எவ்வளவு முடியுமோ அவ்வளவு அன்பைச் செலுத்துகிறோம். அவர்கள் மிக அழகாக மரணமடைவார்கள்” என்று பதிலுரைத்தார் தெரசா .

‘அழகான’ சாவுக்கு அடைக்கலம் தருவதும். நோயாளிகளைப் பரமண்டலத்துக்கு விரைவாக அனுப்பி வைப்பதும்தான் அவரது சமூக சேவையின் நோக்கம் என்பதை இது மெய்ப்பித்துக் காட்டுகிறது. இதை, சில ஆண்டுகளுக்கு முன்பாகவே பிரிட்டிஷ் மருத்துவப் பத்திரிகையான “லான்சர்” அம்பலப்படுத்திக் காட்டியது. கழுவப்படாத ஊசிக்குழல்களும் ஊசிகளும் தெரதாவின் கருணை இல்லத்தில் பயன்படுத்தப் படுவதையும், சுகாதாரமற்ற சூழ்நிலையும், பயிற்சிபெறாத தாதிகளும் உள்ளதை அது விமர்சித்துச் சாடியது. அறுவை சிகிச்சை செய்யப்பட வேண்டிய நிலையில் உள்ள நோயாளிகளுக்கு ஆத்ம சரீர சுகம் அளிக்கும் பிரார்த்தனையே மருந்தாக உள்ளதை அது குற்றம் சாட்டியது.

இதையே, தனது வேலையை உதறிவிட்டு தெரசாவிடம் சமூகசேவை செய்த பீட்டர் டெய்லர் என்ற பிரிட்டிஷ் விமானியும் உறுதிப்படுத்துகிறார். பம்பாயிலுள்ள தெரசாவின் “ஆஷாதான்” எனும் அனாதைக் குழந்தைகள் இல்லத்தில் பணியாற்றிய அவர். சிறிது காலத்திலேயே வெறுப்புற்று வெளியேறி, பிரபல பிரிட்டிஷ் நாளேடான “கார்டியன்”ல் இக்கருணை இல்லங்களின் யோக்கியதையை அம்பலப்படுத்தித் தொடர் கட்டுரைகளை எழுதினார்.

தெரசா
சேவை செய்வதை வாழ்க்கைத் தொழிலாகக் கொள்ளக்கூடாது; பிராத்தனையே நமது வாழ்க்கைத் தொழில்.

இவ்வில்லங்களில் குழந்தைகள் சரிவர கவனிக்கப்படாத்தையும், குழந்தைகளைத் தாதியர்கள் அடிப்பதையும் வேதனையுடன் குறிப்பிடும் அவர், பிரார்த்தனைக்கான மணி அடித்ததும் அனைவரும் குழந்தைகளை விட்டுவிட்டு ஒடி விடுவதைக் கண்டு வெறுப்படைந்தார். “குழந்தைகளும் நோயாளிகளும் வேதனையால் துடிக்கும் போது, அவர்களைத் தவிக்கவிட்டு பிராத்தனை செய்வதை என்னால் சகிக்க முடியவில்லை. ‘இங்கு, சேவை செய்வதை வாழ்க்கைத் தொழிலாகக் கொள்ளக்கூடாது; பிராத்தனையே நமது வாழ்க்கைத் தொழில்” என்று அன்னை தெரசாவே என்னிடம் கூறியபோது நான் மனமுடைந்து போனேன்” என்கிறார் அவர்.

***

தொழுநோயாளிகளுக்கு கருணையும் உதவியும்; தொழுநோய் பிடித்த சுரண்டல் சமூகத்துக்கும் கருணையும் உதவியும்

சாவு வியாபாரிகளிடமும் சர்வாதிகாரிகளிடமும் நன்கொடை வசூல்; கொள்ளையர்களிடம் வசூலித்த பணத்தில், பறிகொடுத்த மக்களுக்கு பிரார்த்தனை, நல்லொழுக்க போதனை என்று ‘சமூகத் தொண்டாற்றிய’ தெரசாவின் மறுபக்கத்தை வசதியாக மறைத்துவிட்டு, “தொண்டு செய்து பழுத்தபழம்” என்று பத்திரிகைகள் துதிபாடுகின்றன. வறுமை நிறைந்த சமுதாயத்தில் தொண்டு செய்யும் மனமும், பொதுவாழ்வுப் பணியும் தான் மனித வாழ்வின் அடையாளங்கள் என்பதை டயானா, தெரசாவின் மரணங்கள் மெய்ப்பித்துள்ளதாக ஈரவணக்கம் செலுத்துகின்றன.

தெரசா - ஜெயலலிதா
இந்தியச் சமுதாயம் தெரசாவை மட்டுமல்ல; பாசிச எம்.ஜி. ஆரைக் கூட வள்ளலாகப் போற்றுகிறது. பாசிச இந்திராவை அன்னையாக்குகிறது. பாசிச ஜெயாவை அம்மாவாக்கித் துதிக்கின்றது

அடிப்படை மாற்றங்கள் ஏற்படாத ஏழ்மை நிறைந்த இந்திய சமூதாயத்தில் புண்ணுக்குப் புனுகு தடவும் தெரசாக்கள் ஆளும் வர்க்கங்களுக்குத் தேவைப்படுகிறார்கள். குமுறிக் கொண்டிருக்கும் ஒடுக்கப்பட்ட மக்கள் தமது எதிரியை இனங் காண்பதற்குள், இவர்கள் வடிகாலாகச் செயல்பட்டு சீற்றத்தைத் தணிக்கிறார்கள். எனவேதான் சுரண்டும் வர்க்கங்களும் அவர்களின் அரசும் இவர்களைப் போற்றி ஆராதிக்கின்றன.

மனித உறவுகளை முதலாளித்துவம் வெறும் பண உறவாக மாற்றிவிட்ட பிறகு. அரசுகள் சமூகப் பொறுப்பற்று, மேலும் மேலும் மக்களிடமிருந்து அந்நியப்பட்டு போன பிறகு, அன்பு –சகோதரத்துவம் – பாசத்திற்காக சமுதாயம் ஏங்கித் தவிக்கிறது. பற்றுக்கோடாக தெரசாக்களைக் காணும் போது சமுதாயம் தெய்வமாக வழிபடுகிறது. தனக்கென ஒரு சித்தாந்தத்தை வகுத்துக் கொள்ள இயலாத விவசாயிகள் நிறைந்த பின்தங்கிய இந்தியச் சமுதாயம் தெரசாவை மட்டுமல்ல; பாசிச எம்.ஜி. ஆரைக் கூட வள்ளலாகப் போற்றுகிறது. பாசிச இந்திராவை அன்னையாக்குகிறது. பாசிச ஜெயாவை அம்மாவாக்கித் துதிக்கின்றது.

வறுமையும் ஏற்றத்தாழ்வுகளும் ஒழித்துக் கட்டப்பட்ட சமுதாயத்தில், வறுமைப் புண்களைத் தோற்றுவிக்கும் கிருமிகளை ஒழித்துக்கட்டும் ஆரோக்கியமான சமுதாயத்தில் தெரசாக்கள் தேவையில்லாமல் போய்விடுவார்கள். எனவேதான் “ஏழ்மை என்பது இறைவன் எங்களுக்குக் கொடுத்த வரம்; ஏழ்மை ஒழிக்கப்பட்டுவிட்டால் எங்களுக்கு வேலையில்லாமல் போய் விடும்: என்று தெரசா மரணத்துக்குப் பிறகு, அவரது சமூக சேவை அமைப்புக்குப் பொறுப்பேற்றுள்ள நிர்மலா வெளிப்படையாகவே கூறுகிறார்,

நாளும் அவதாரமெடுக்கும் கருணா மூர்த்திகளுக்கு ஏழ்மைதான் மூலதனம். அது ஒழிக்கப்படும்போது இத்தகைய தேவதைகளுக்கு புனுகு தடவும் தெரசாக்களைவிட, புண்ணைத் தோற்றுவிக்கும் கிருமிகளை ஒழித்துக் கட்டும் சமுதாய மருத்துவர்கள் தான் உண்மையான சமூக சேவர்கள் என்பது மெய்யாகும்.

அதனால்தான், அன்று ரஷியாவின் “கருணைமிகு பேரரசரான பீட்டர் சிறுதுளி என்றால், புரட்சியாளர் லெனின் பெரு வெள்ளம்” என்று சக்கரவர்த்தி பீட்டரின் வாழ்க்கையை நாவலாக எழுதிய அலெக்சி டால்ஸ்டாய் குறிப்பிடுகிறார்.

புரட்சியாளர் லெனின்
புரட்சியாளர் லெனின் ஒரு பெருவெள்ளம்

இந்தியாவிலும் அத்தகைய புரட்சி வெள்ளம் பெருகும்; அதன் சீற்றத்தில் ‘தேவதைகள்’ அடித்துச் செல்லப்படுவார்கள!

– குமார்

புதிய ஜனநாயகம், அக்டோபர் 1997