privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புகட்சிகள்அ.தி.மு.க66 ஏ போனால் என்ன அவர்களுக்கு ஆயிரம் பிரிவுகள் உண்டு

66 ஏ போனால் என்ன அவர்களுக்கு ஆயிரம் பிரிவுகள் உண்டு

-

மூக வலைத்தளங்களில் வெளியிடப்படும் கருத்துக்களின் அடிப்படையில் காவல் துறைக்கு கைது செய்ய அதிகாரமளிக்கும்  தகவல் தொழில் நுட்ப சட்டப் பிரிவு 66 ஏ-வை ரத்து செய்து உச்சநீதிமன்றம் 24.3.2015 அன்று தீர்ப்பளித்துள்ளது. 2000-ம் ஆண்டில் கொண்டு வரப்பட்ட இச்சட்டப் பிரிவில் சில திருத்தங்கள் 2009-ம் ஆண்டில் சேர்க்கப்பட்டன.

66A - ஐ.டி சட்டம்
பிறரை புண்படுத்தினார், பகை உணர்வை தூண்டினார் என்று யாரையும் கைது செய்து சிறையில் அடைக்கலாம்.

இதன்படி பிறரை புண்படுத்தினார், பகை உணர்வை தூண்டினார் என்று யாரையும் கைது செய்து சிறையில் அடைக்கலாம். அப்படி அடைத்தும் இருக்கிறார்கள்.

2012 செப்டம்பரில் இந்திய பாராளுமன்றத்தை கழிப்பிடமாகவும், தேசியச் சின்னமான சாரநாத் சிங்கங்களை ஓநாய்களாகவும் வரைந்த கார்டூனிஸ்ட் திரிவேதி கைது செய்யப்பட்டார். இதற்காக மும்பை போலீசு அவர் மீது தேச துரோக வழக்கு 124 ஏ (அவதூறு), தகவல் தொழில்நுட்ப சட்டம் 66 ஏ பிரிவு, 1971-ம் ஆண்டு தேசிய சின்ன அவமதிப்பு தடுப்புச் சட்டம் ஆகிய பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தது.

2012 நவம்பரில், சிவசேனா தலைவர் பால் தாக்கரே மரணமடைந்த போது, ‘இதற்காக ஒரு பந்த் தேவையா’ என முகநூலில் எழுதியதற்காகவும், அதனை ‘லைக்’ செய்ததற்காகவும் மும்பையை சேர்ந்த ஷாகின் தாதா மற்றும் ரேணு என்ற இரு இளம் பெண்களின் மீது 66A பிரிவின் படி வழக்குப் பதிவு செய்து சிறையில் அடைத்தார்கள். மேலும் ஷாகினின் உறவினருக்கு சொந்தமான மருத்துவமனை ஒன்றும் சிவசேனா கும்பலால் அடித்து நொறுக்கப்பட்டது.

மோடி பதவியேற்கும் வைபவத்திற்கு முன்னதாகவே கோவா மாநிலத்தில் ஒருவர் மீதும், பெங்களூருவில் ஒருவர் மீதும் தகவல் தொழில் நுட்ப சட்டம் 66A பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். காரணம் அவர்கள் மோடியை எதிர்த்தார்கள் என்பது மட்டுமே.

ஏர் இந்தியா ஊழியர்கள் போராட்டத்தின் போது பிரதமர் அலுவலகத்தை விமரிசித்தார்கள் என்று வழக்கு பதிவு செய்திருக்கிறார்கள். பா.ஜ.க, காங்கிரசு அரசுகள் மட்டுமல்ல, பல்வேறு மாநிலங்களிலும் இந்த பிரிவின் படி கைது செய்திருக்கிறார்கள்.

66A ஐ.டி சட்டம்
மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியின் கேலிச்சித்திரத்தை வெளியிட்ட பேராசிரியர் அம்பிகேஷ் மகாபத்ரா

மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியின் கேலிச்சித்திரத்தை வெளியிட்டார் என பல்கலை பேராசிரியர் அம்பிகேஷ் மகாபத்ரா, ப.சிதம்பரத்தின் வாரிசு கார்த்தி சிதம்பரத்தின் சொத்து குறித்து கருத்து வெளியிட்ட ரவி ஸ்ரீனிவாசன் என்று இந்த பட்டியல் நீள்கிறது.

“அப்போது இரண்டு மாதத்திற்குள் நான்கு பேர் கைது செய்யப்பட்டார்கள். புதுச்சேரியிலிருந்து ஒரு தொழிலதிபர், ஒரு கார்ட்டூனிஸ்ட் மகாராஷ்டிராவில் இரு மாணவிகள்,….. அதில் ஒருவர் ஃபேஸ்புக்கில் லைக் செய்திருந்தார்…. நான் அதிர்ச்சியடைந்தேன். இணையத்தில் கருத்து தெரிவித்தார்கள் என்பதற்காகவே இப்படி கைது செய்கிறார்கள் என்பதாலேயே உடன் வழக்கு போட முயற்சி செய்தேன்.” என்கிறார் ஷ்ரேயா ஷிங்கால்.

டெல்லி பல்கலைக்கழகத்தில் சட்டம் படிக்கும் இம்மாணவி 2012-ல் இப்பிரிவை ரத்து செய்யுமாறு பொதுநல வழக்கு தொடுத்திருந்தார். இது போல பலரும் தாக்கல் செய்திருந்தனர். இவற்றை விசாரித்த் உச்சநீதிமன்ற நீதிபதிகள் செலமேஸ்வர், ரோஹின்டன் ஃபாலி நரிமன் அடங்கிய அமர்வு மேற்கண்ட பிரிவு 66 ஏ-வை ரத்து செய்து தற்போது தீர்ப்பளித்திருக்கிறது.

அசீம் திரிவேதி
அசீம் திரிவேதி

இந்த வழக்கை விசாரித்து வந்த காலத்தில் 2013-ல் “போலிஸ் உயரதிகாரிகள் டி.ஜி.பி, ஐ.ஜி போன்றோரின் உத்தரவு இன்றி 66 ஏ பிரிவின் கீழ் யாரையும் கைது செய்யக்கூடாது” என்று உச்சநீதிமன்றம் ஏற்கனவே உத்தரவிட்டது. இதன் தொடர்ச்சியாகவே இப்போது தீர்ப்பு வந்துள்ளது.

“அரசியல் அமைப்புச் சட்டத்தின் 19(1) ஏ பிரிவு வழங்கியுள்ள கருத்துரிமை சுதந்திரத்தை தகவல் தொழில் நுட்ப சட்டத்தின் 66 ஏ பிரிவு பறிக்கிறது; அதை அனுமதிக்க முடியாது” என்று நீதிமன்றம் கூறியிருக்கிறது. அதே நேரம் மோடி அரசு கோவித்துக் கொள்ளக் கூடாது என்று, “ இப்போதைய அரசு இந்த பிரிவை பயன்படுத்தாமல் இருந்தாலும், அடுத்து வரும் அரசு பயன்படுத்தவே செய்யும். எனவே சர்ச்சைக்குரிய பிரிவு ரத்து செய்ப்படுகிறது” என்றும் கூறியிருக்கிறது.

உண்மையில் காங்கிரசு அரசு இச்சட்டப்பிரிவை கொண்டு வந்தாலும், அதை எதிர்த்து நடந்த வழக்கில் கடந்த இரு ஆண்டுகளாக பா.ஜ.க அரசு சட்டத்தை ஆதரித்தே பேசி வந்தது. அதன் பொருட்டுத்தான் அந்த சட்டத்தை கேடாக பயன்படுத்த மாட்டோம் என்ற வாக்குறுதி. இவர்கள் எந்த சட்டத்தை கேடாக பயன்படுத்தவில்லை. இல்லை எந்த சட்டம்தான் இவர்கள் கேடாக பயன்படுத்துவதற்கு வசதி இல்லாமல் இருக்கிறது?

66A ஐ.டி சட்டம்
மகாராஷ்டிராவில் பேஸ்புக் கமென்டுக்காக கைது செய்யப்பட்ட பெண்கள்.

ஊடகங்கள் அனைத்தும் கருத்துரிமைக்கு கிடைத்த மாபெரும் வெற்றி என்று கொண்டாடி வரும் நிலையில் காங் மற்றும் பா.ஜ.க கட்சிகள் இஞ்சி தின்ற குரங்காய் திணறுகின்றன. மட்டுமல்ல இதர சமூகநீதிக் கட்சிகளும் இந்த தீர்ப்பினை விரும்பவில்லை.

“இந்த 66 ஏ பிரிவு சரியாக வரையறுக்கப்படவில்லை என்பதை ஒப்புக் கொள்கிறேன். உச்சநீதிமன்ற உத்திரவை வரவேற்கிறேன்” என்று முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கூறியிருக்கிறார். இந்த ஒழுக்கவாத முழக்கத்தை அன்றே சொல்ல என்ன தடை? மட்டுமல்ல இந்த சட்டப்பிரிவை வைத்தே இவரது வாரிசு கார்த்தி சிதம்பரம், புகார் அளித்து புதுச்சேரியில் ஒருவரை உள்ளே தள்ளினார். அப்போதே கூப்பிட்டு மவனே இது சரியில்லை என்று மனுநீதி சோழன் போல அடித்திருக்கலாம் அல்லவா?

66A ஐ.டி சட்டம்
இந்த தீர்ப்பை புரிந்து கொள்வதற்கு ஒட்டு மொத்தமாக போராடும் மக்களை இந்த நாட்டின் அரசு எப்படி நடத்துகிறது என்பதோடு சேர்த்து பார்க்க வேண்டும்.

“இந்த விவகாரத்தில் முந்தைய மன்மோகன் சிங் அரசுக்கும், எங்கள் அரசுக்கும் ஒரே மாதிரியான கருத்து இல்லை. கருத்து சுதந்திரத்தை அடக்கும் காங்கிரசு அரசின் செயலில் எங்களுக்கு உடன்பாடில்லை” என்று முழுப்பூசணிக்காயை காற்றில் மறைக்கிறார் பா.ஜ.க –வின் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் ரவி சங்கர் பிரசாத். சொல்லப் போனால் பா.ஜ.க கோஷ்டிகளை அம்பலப்படுத்தியதாலேயே நாடெங்கும் பலர் இச்சட்டப்படி கைது செய்யப்பட்டனர். கர்நாடகாவில் மோடியின் இமேஜுக்கு பங்கம் வரக்கூடாது என்று அந்த கைது நடவடிக்கையை காங்கிரசு அரசே செய்தது.

எனவே, இந்த தீர்ப்பை புரிந்து கொள்வதற்கு ஒட்டு மொத்தமாக  போராடும் மக்களை இந்த நாட்டின் அரசு எப்படி நடத்துகிறது என்பதோடு சேர்த்து பார்க்க வேண்டும்.

ஏனெனில் பிரிவு 66 ஏ போனாலும் அதே கைது மற்றும் தண்டனையை தரவல்ல ஏனைய பிரிவுகள் இன்னும் அப்படியே உள்ளன. ஏற்கனவே உள்ள ஐ.பி.சி பிரிவுகள் 500, 505, 506, 507, 509, 124 ஏ, 295 ஏ போன்றவற்றின் மூலம் இணையத்தில் கருத்து தெரிவிக்கும் எவரையும் பிணையில்லாமல் சில பல ஆண்டுகள் சிறையில் அடைக்க முடியும்.

இதை இப்போதைய தீர்ப்பிலும் உச்சநீதிமன்றம் வேறு வார்த்தைகளில் தெரிவித்திருக்கிறது.

தகவல் தொழில்நுட்ப பிரிவு 69பி-ன்படி மத உணர்வுகளை தூண்டுதல், நாட்டின் அமைதிக்கு குந்தகம் விளைவித்தல், வெளிநாட்டு உறவுக்கு பாதிப்பு ஏற்படுத்துதல் போன்ற செயல்களில் ஈடுபடும் இணைய தளங்களை முடக்கும் மத்திய அரசின் அதிகாரத்தை அனுமதிப்பதாக நீதிபதிகள் கூறியிருக்கின்றனர்.

66A ஐ.டி சட்டம்
ஒரு சட்டப்பிரிவு போனால் என்ன வேறு இருக்கின்றன அல்லது பழைய பிரிவுகள் இருக்கின்றன.

ஒரு சட்டப்பிரிவு போனால் என்ன வேறு இருக்கின்றன அல்லது பழைய பிரிவுகள் இருக்கின்றன என்று மோடிகளும், சோனியாக்களும், அம்பானிகளும் ஆறுதல் அடைவர். இது கருத்துரிமை போருக்கு கிடைத்திருக்கும் மிகப்பெரும் வெற்றி என்று நாம் கொண்டாட முடியுமா?

இந்த தீர்ப்பை மாபெரும் ஜனநாயகப் போராக, வெற்றியாக கொண்டாடும் தி ஹிந்து, டைம்ஸ் ஆஃப் இந்தியா போன்ற நாளேடுகள் தமிழகத்தில் ஜெயலலிதாவைப் பற்றி ஏதும் மயிலிறகு விமரிசனங்களைக் கூட எழுதாது. அப்படி எழுதினால், பேசினால் உடன் அரசு வழக்கறிஞர்கள் மின்னலாய் வழக்கு போட்டு குடைச்சல் குடுப்பார்கள். அப்படித்தான் கருப்பு எம்.ஜி.ஆர் விஜயகாந்த், வெள்ளை எம்.ஜி.ஆர் கட்சி தலைவியால் தமிழகம் முழுக்க அனைத்து நீதிமன்றங்களுக்கும் அமாவாசை, பௌர்ணமி அன்று வாய்தா யாத்திரை சென்று வருகிறார். இது தி.மு.க உட்பட வேறு கட்சிகளுக்கும், நக்கீரன் – ஜூ.வி போன்ற ஊடகங்களுக்கும் பொருந்தும்.

மேலும் குண்டர்கள் சட்டத்திலேயே இணையக் குற்றங்களை சேர்க்கும் விசயத்தை ஜெயா அரசு செய்திருக்கிறது.

பா.ஜ.க.வின் இளைய பங்காளியான ஜெயா அரசே இப்படி என்றால் பா.ஜ.க, மோடி அரசு குறித்து தனியாக விளக்க வேண்டியதில்லை. கடந்த காலத்தில் அருந்ததிராய் ஒரு நாள் நீதிமன்றத்தில் சிறை வைக்கப்பட்டதும், பினாயக் சென் இரு ஆண்டுகள் சிறையில் முடக்கப்பட்டதும் என கருத்துரிமைக்கு எதிரான அடக்குமுறைகளின் பட்டியல் மீக நீண்டது.

தமிழகத்தில் தமிழுரிமை அமைப்புகள் மற்றும் நக்சல்பாரி அமைப்புகளும் இப்படி பல்வேறு அடக்குமுறைகளை சந்தித்திருக்கின்றன. இன்றைக்கும் ம.க.இக மற்றும் அதன் தோழமை அமைப்புகளின் பிரசுரங்கள், சுவரெழுத்துக்கள், வெளியீடுகள், கூட்டங்கள் அனைத்தும் பல்வேறு தருணங்களில், பல்வேறு இடங்களில் மறுக்கப்பட்டே வந்திருக்கின்றன. ஒபாமாவை கண்டிக்க தமிழகத்தில் அனுமதி இல்லை, கலாமை கிண்டல் செய்தார்கள் என்று ஒரு வழக்கு, கைது, கோக் நிறுவனத்தை எதிர்த்து பிரச்சாரம் செய்தார்கள் என்று பல தோழர்களுக்கு சிறை, சங்கராச்சாரிக்கு கருப்பு கொடி காண்பித்த ‘குற்ற’த்திற்கு மூன்று மாதம் சிறை, என்று இதற்கு ஏராளமான சான்றுகளை பட்டியிலிட முடியும்.

எனவே இத்தீர்ப்பினால் ஏதும் பயனில்லையா? அப்படி இல்லை. இந்த தீர்ப்பும் கூட பொதுவில் நாடு முழுவும் எழுந்த பல்வேறு போராட்டங்கள், எதிர்ப்புகள், பொது நல வழக்குகள் காரணமாகவே வந்திருக்கிறது.

இறுதியில் கருத்துரிமைக்கான பாதுகாப்பு சட்டங்களில் இல்லை, மக்கள் போராட்டங்களிலேயே மலருகிறது என்பதை புரிந்து கொண்டோமானால் நாம் கொண்டாட்டத்தை முடித்து விட்டு போராட்டக் களத்திற்கு உடன் செல்வோம்.