privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புகட்சிகள்இதர கட்சிகள்அகிலேஷ் யாதவை ஃபேஸ்புக்கில் எதிர்த்தாலும் சிறை !

அகிலேஷ் யாதவை ஃபேஸ்புக்கில் எதிர்த்தாலும் சிறை !

-

டந்த ஜூலை மாதம் உத்திர பிரதேச மாநிலத்தின் கௌதம புத்தா நகருக்கருகில் உள்ள மசூதியில் உரிய அனுமதி பெறாமல் கட்டப்பட்டிருந்த சுற்றுச் சுவரை இடிக்க உத்திரவிட்டார் மாவட்ட உதவி ஆட்சியர் சக்தி துர்கா நாக்பால். இதன் மூலம் சமூக நல்லிணக்கத்துக்கு ஊறு விளைவித்தாரென சொல்லி அவரை ஜூலை 28 அன்று பணியிடை நீக்கம் செய்தார் முதல்வர் அகிலேஷ் யாதவ்.

சக்தி துர்கா நாக்பால்
சக்தி துர்கா நாக்பால்.

சக்தி துர்காவுக்கு ஆதரவாக பல்வேறு தரப்பிலிருந்தும் குரல்கள் எழுந்த போதும் சமாஜ்வாதி கட்சியினர் அதைக் கண்டுகொள்ளவில்லை. மத்திய அரசு விரும்பினால் ஐஏஎஸ் ஆபீசர்களை திரும்ப அழைத்துக் கொள்ளலாம் என்றும், தங்களால் நிர்வாகத்தை செம்மையாக நடத்த முடியும் என்றும் அகிலேஷ் தடாலடியாக மாநில சுயாட்சி பேசத் துவங்கினார்.

சக்தி துர்காவுக்கு ஆதரவாக பேசியவர்களில் ஒருவர் புகழ்பெற்ற இந்தி கவிஞரும், தலித் அரசியில் செயல்பாட்டாளருமான கன்வால் பார்தி. தனது ஃபேஸ்புக் பக்கத்தில் இது பற்றி எழுதிய பார்தி, அகிலேஷ் யாதவின் ஆட்சியை விமரிசனம் செய்ததுடன், மூத்த அமைச்சரும் ராம்பூர் எம்.எல்.ஏ-வுமான ஆசம்கானின் ஏதேச்சதிகாரத்தையும், அடாவடித்தனத்தையும் விமரிசனம் செய்திருந்தார்.

உடனே பார்தியை கைது செய்ய வேண்டுமென்ற கோரிக்கையை சமாஜ்வாதி  கட்சியினர் எழுப்பத் துவங்கினர். ஆசம்கானின் மக்கள் தொடர்பு அதிகாரியே நேரில் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகம் சென்று கன்வால் பார்தி மீது புகார் கொடுத்தார். பார்தியை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என்றும் அம்மனுவில் கோரியிருந்தார். இசுலாமிய உலூமாக்களும் ஒன்று சேர்ந்து போய் சமூக நல்லிணக்கத்தை கன்வால் பார்தி சீர்குலைப்பதாக எஸ்பி-யிடம் புகார் கொடுத்தனர். இந்நிலையில் கடந்த மாதம் 6-ம் தேதி காலை 8 மணிக்கு கைது செய்யப்பட்ட பார்தி மாலையில் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார்.

நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படும் வரை அவர் மீதான குற்றச்சாட்டு என்ன என்பது பற்றி அவரிடம் தெரிவிக்கப்படவே இல்லை. அவர் மீது  குற்றவியல் சட்டம் 153 மற்றும் 295 ஏ-ன் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்தப் பிரிவுகளின் கீழ் அதிகபட்சம் 3 ஆண்டுகள் வரைதான் தண்டனை தர இயலும். 7 ஆண்டுகளுக்கு குறைவாக தண்டனை தரத்தக்க பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டிருந்தால் கைது செய்யத் தேவையில்லை என்றும், ஃபேஸ்புக் இடுகைகள் மற்றும் கருத்துக்களுக்காக ஒருவரை கைது செய்ய வேண்டுமாயின் குறைந்தது எஸ்பி மட்டத்தில் உள்ள அதிகாரிகளிடமாவது காவல்துறையினர் முன் அனுமதி பெற்றிருக்க வேண்டும் என்றும் முன்னரே உச்சநீதி மன்றம் வழிகாட்டியிருந்தது.

கன்வால் பார்தி
கன்வால் பார்தி.

கன்வால் பார்தி-ன் கைது பற்றி பலரும் தேசிய மனித உரிமை ஆணையத்திடம் முறையிட்டனர். இதற்கிடையில் கடந்த ஜூன் 16 அன்று தனது வழிகாட்டலை ஏன் பின்பற்றவில்லை என விளக்கம் கேட்டு அதற்கு 4 வாரங்களுக்குள் பதிலளிக்குமாறு மாநில அரசுக்கு உச்சநீதி மன்றம் நோட்டீசு அனுப்பியது.

இதற்கிடையில் கீழ் நீதிமன்றம் வழங்கிய ஜாமீனை ஏன் ரத்து செய்யக் கூடாது என விளக்கம் கேட்டு, வரும் 16-ம் தேதிக்குள் பதிலளிக்குமாறு வடக்கு ராம்பூர் மாவட்ட நீதிமன்றம் கன்வால் பார்திக்கு கடிதம் அனுப்பியுள்ளது. சமாஜ்வாதி கட்சியினரின் அழுத்தம் காரணமாகவே போலீசார் இப்படி ஜாமீனை ரத்து செய்யக் கோரி நீதிமன்றத்தை அணுகியுள்ளதாக கன்வால் பார்தி குற்றம் சாட்டியுள்ளார்.

“மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு பெருமளவு திரண்டு சென்ற சமாஜ்வாதி கட்சியினர், என் மீது ஏன் இன்னமும் முறையான நடவடிக்கையை ஏன் எடுக்கவில்லை எனக் கேட்டுள்ளனர். நான் கைதானது மட்டும் அவர்களுக்கு போதாது. விசாரிக்காமலேயே எனக்கு கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும் என்பதுதான் அவர்களது விருப்பம். எனது ஃபேஸ்புக் விமரிசனத்தால் ராம்பூர் மாவட்டம் முழுக்க வகுப்புவாத பதற்றம் நிலவுவதால் நான் கைது செய்யப்பட்டுள்ளேன் இல்லையா.. இப்போது அவர்கள் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள்” எனக் கிண்டலாக கேட்கிறார்.

ராம்பூரில் ஆசம்கானின் அதிகாரத்தை கேள்வி கேட்பவராக கன்வால் பார்தி மாறி உள்ளது சமாஜ்வாதி கட்சியினருக்கு எரிச்சலை ஏற்படுத்தியுள்ளது. மாவட்ட அளவில் ஆசம்கானின் ஏதேச்சதிகாரத்தை பார்தி கேள்விக்குள்ளாக்கவே மிகவும் தரம் தாழ்ந்த முறையில், அநீதியாக பல்வேறு வழிமுறைகளில் அழுத்தங்கள் அவர் மீது செலுத்தப்படுகிறது.

“அவர்கள் விரும்பியபடி என்னைக் கைது செய்து கொள்ளட்டும். அதிகாரத்தை எதிர்த்து தனியொருவர் என்ன செய்ய முடியும்? அதற்காக இவர்களைப் பார்த்து நான் பயந்துவிடவில்லை” என்று கூறியுள்ள கன்வால் பார்தி, அலகாபாத் உயர்நீதி மன்றத்தில் தன் மீது பதிவான முதல் தகவல் அறிக்கையை ரத்து செய்யக் கோரியும், அரசிடமிருந்து தனக்கு நிவாரணம் கேட்டும் மனுத் தாக்கல் செய்துள்ளார். அம்மனுவில் அவரது கருத்து சுதந்திரத்தை பறிப்பது மற்றும் அவரை கைது செய்தது போன்றவற்றில் வேண்டுமென்றே, தவறான உள்நோக்கம் இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

கைதான பார்தியிடமிருந்து ஒரு கணிணியை கைப்பற்றியுள்ள போலீசார் இதுவரை அதைத் திருப்பித் தரவில்லை. பல்கலைக் கழகங்களில் பாடமாக உள்ள அவரது மானுடவியல் ஆய்வு நூல்களையும், 15 பிரசுரமாகாத ஆய்வுப் புத்தகங்களையும் கைப்பற்றியுள்ள போலீசார் அதனை இன்னும் அவரிடம் ஒப்படைக்கவில்லை.

புதிதாக கட்டப்பட்டுள்ள மசூதியினுடைய சுற்றுச்சுவரை இடிக்க உத்திரவிட்ட துர்கா சக்தி நாக்பாலை பணியிடை நீக்கம் செய்யும் நிர்வாகம், அதே ராம்பூரில் உள்ள 200 ஆண்டு பழமையான மதராசாவை இடிக்க உத்திரவிட்டது ஏன் ? எனக் கேள்வி எழுப்புகிறார் பார்தி. ஈத் திருநாளன்று அவரது வீட்டுக்கு வந்திருந்த நூற்றுக்கணக்கான இசுலாமியர்கள் தங்களது தார்மீக ஆதரவை பார்திக்கு தெரிவித்தனர்.

அகிலேஷ்-முலாயம் சிங்
சமூக நீதிக் கட்சிகள் என்று போற்றப்பட்டவர்களின் யோக்கியதை (அகிலேஷ் யாதவும் தந்தை முலாயம் சிங் யாதவும்)

பிரகதீடில் லேகா சங் மற்றும் தலித் லேகா சங் போன்ற முற்போக்கு கலைஞர்கள் அமைப்புகள் ஜந்தர் மந்தரில் இவருக்கு ஆதரவாக ஒரு நாள் தர்ணா மேற்கொண்டன. பாட்னா மற்றும் அமிர்தரசிலிருந்தும் பல்வேறு முற்போக்கு அமைப்புகளின் ஆதரவும் பார்திக்கு கிடைத்துள்ளது. பாஜக-ன் ஆதரவை நிராகரித்துள்ள இவர், சமாஜவாதி கட்சியையும், பகுஜன் சமாஜ கட்சியையும் ஜனநாயக விரோத கட்சிகளாகவே பார்க்கிறார். பிஎஸ்பி-ல் ஒரு அதிகார மையம் என்றால் சமாஜ்வாதியில் பல்வேறு அதிகார மையங்கள், அவ்வளவுதான் விததியாசம் என்கிறார். தலித்துகளை தனியார்மயம் கடுமையாக சுரண்டுவதாகவும், பார்ப்பனீயமும், முதலாளியமும் தலித் மக்களின் முதல் எதிரிகள் என்று அம்பேத்கரை மேற்கோளிட்டும் தனது பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.

அவர்கள் என்னை பொய்க்குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யலாம், என்னுடைய வீட்டை இடித்து தரைமட்டமாக்கலாம் அல்லது என்னை கொலை செய்யக் கூட செய்யலாம். இதற்காக எல்லாம் நான் அஞ்சி சும்மா இருக்கப் போவதில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார். இந்தி வார இதழ் ஒன்றுக்கு பத்தி எழுதும் இவரது எழுத்தை அப்பத்திரிக்கை இப்பிரச்சினைக்கு பிறகு கொஞ்சம் எடிட் செய்தே வெளியிட்டது. இதனை கடுமையாக கண்டித்துள்ளார் பார்தி.

கடந்த 2012 மே மாதம் மம்தா பானர்ஜி பற்றிய கேலிச் சித்திரத்தை இணையத்தில் பகிர்ந்து கொண்ட காரணத்துக்காக ஜாதாப்பூர் பல்கலைக் கழக பேராசிரியர்கள் இருவர் கைது செய்யப்பட்டனர். அதே ஆண்டு செப்டம்பரில் அசீம் திரிவேதி என்ற கார்ட்டூனிஸ்ட் தனது இணைய பக்கத்தில் நாடாளுமன்றத்தை கழிப்பறையாக வரைந்த கேலிச்சித்திரத்துக்காக கைது செய்யப்பட்டார். நவம்பரில் பால் தாக்கரே-ன் இறுதி ஊர்வலம் பற்றி ஃபேஸ்புக்கில் எழுதிய இளம்பெண்கள் இருவர் மும்பையில் கைது செய்ய்ப்பட்டனர். இப்போது தலித் எழுத்தாளர் பார்தி ஃபேஸ்புக்கில் எழுதியதற்காக சமூக நல்லிணக்கத்திற்கு ஊறு விளைவித்ததாக வழக்கு பதிவு செய்யப்படுகிறது.

சமூக நீதிக் கட்சிகள் என்று போற்றப்பட்டவர்களின் யோக்கியதை இதுவாகத்தானிருக்கிறது. தமிழகத்து ஜெயா, வங்கத்து மம்தா துவங்கி, உபியின் அகிலேஷ் யாதவ் வரை விமரிசனங்களை ஒழிக்கப் பார்க்கிறார்கள். மறுத்தால் அவதூறு வழக்கு போட்டு சிறையில் தள்ளுகிறார்கள். மறுகாலனியாக்க சூழலில் அரசு பாசிசமயமாகி வருவதன் ஒரு அங்கம்தான் இத்தகைய கருத்து சுதந்திரத்தின் மீதான தாக்குதல்கள்.