Monday, August 2, 2021
முகப்பு போலி ஜனநாயகம் அதிகார வர்க்கம் அரசு அதிகாரி டி.கே.ரவி மர்மச் சாவு : நேர்மைக்கு இடமில்லை !

அரசு அதிகாரி டி.கே.ரவி மர்மச் சாவு : நேர்மைக்கு இடமில்லை !

-

ர்நாடகா, பெங்களூரு வணிகவரி (அமலாக்கத் துறை) கூடுதல் ஆணையர் “டி.கே.ரவி- மாதாரி ஐ.ஏ.எஸ். அதிகாரி” என்ற 36 வயதேயான நேர்மையான, துணிச்சலான, மூத்த, இளம் அரசு நிர்வாகப் பணி அதிகாரி, புறநகர் கொரமங்களாவிலுள்ள அவரது அடுக்குமாடிக் குடியிருப்பில் கடந்த மார்ச் 16-ம் தேதி மர்மமான முறையில் மாண்டுபோனார்.

அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்பதற்கான பல பின்னணி அடிப்படை ஆதாரங்கள் உள்ளன. என்றாலும், உடல்கூறு ஆய்வு செய்யும்முன்னரே, அவரது உடல் மண்ணில் புதைக்கப்படும் முன்னரே அவரது மரணம் குறித்த உண்மைகள் அவசர அவசரமாகப் புதைக்கப்பட்டுவிட்டன.

அவரது உடல் மின்விசிறியில் தரைதட்டிய நிலையில் தொங்கிக் கொண்டிருந்தது என்பதைத் தவிர, வேறு எந்தத் தடய ஆதாரமுமின்றி, அடுத்த சில மணிகளில் சம்பவம் நிகழ்ந்த இடத்திற்கு விரைந்த பெங்களூரு நகரப் போலீசு ஆணையர் எம்.என். ரெட்டி, “இது தற்கொலைதான் என்று முதல்பார்வையிலேயே தெரிகிறது. வேறு தில்லுமுல்லுவையும் நாங்கள் காணவில்லை” என்று உறுதிபட அறிவிக்கிறார். அங்கு வந்த மாநில போலீசு மந்திரி ஜார்ஜ், “நடந்தது தற்கொலைதான். எனக்குத் தெரிய இரகசிய உலக, நில அபகரிப்புக் குற்றக் கும்பல் மிரட்டல்கள் எதுவும் அவருக்குக் கிடையாது” என்று பச்சையாகப் புளுகினார்.

டி.கே.ரவி மரணம்
ஐ.ஏ.எஸ் அதிகாரி டி.கே.ரவியின் மர்மச் சாவு குறித்த விசாரணையை சி.பி.ஐ அமைப்பிடம் ஒப்படைக்கக் கோரி பெங்களூருவில் நடந்த ஆர்ப்பாட்டம்.

ஆனால், கர்நாடகா மக்கள் அனைவரும் அறிந்த பின்வரும் உண்மையோ இரகசியமாக இருக்கவில்லை.

  • சாதிய ஒடுக்கு முறைகளும், நில அபகரிப்புகளும் வீடு மற்றும் வீட்டுமனை மோசடிகளும் நிரம்பிவழியும் பெங்களூருவை அடுத்த கோலார் மாவட்டத்தின் துணை ஆணையராக 2013-2014 ஆண்டுகளில் 14 மாதங்கள் அரசு நிர்வாகப் பணியாற்றிய டி.கே.ரவி அந்த இரகசிய உலக, அரசியல் – கிரிமினல் குற்றக் கும்பல்களின் சமூகவிரோதச் செயல்களுக்கு எதிராகக் கடும் நடவடிக்கைகள் எடுத்தார்.
  • அதனாலேயே இந்த எதிரிகளின் அரசியல் நிர்ப்பந்தம் காரணமாக கடந்த ஆண்டு பெங்களூரு வணிகவரி (அமலாக்கத் துறை) கூடுதல் ஆணையராக டி.கே.ரவி மாற்றபட்டபோது, அதற்கு எதிராக கோலார் மாவட்ட மக்கள் தன்னெழுச்சியாகப் போராடினர்.
  • பெங்களூருவில் பணியாற்றிய சில மாதங்களில் 400 கோடி ரூபாய் அளவுக்கு வீடுகள்-சொசைட்டிகளின் மோசடிகளைக் கண்டுபிடித்து வசூலித்துள்ளார்; இன்னும் பல பெரும் வணிகமுதலைகளின் வரி மோசடிகளைக் கண்டுபிடித்து நடவடிக்கைகள் மேற்கொண்டார்.

இதனால், அம்மாநில மக்கள் தமது ஆதரவைப் பெருமளவு பெற்றிருந்த ரவியின் மரணம் கொலைதான் என்று நம்புகின்றனர்; நீதி நிலைநாட்டப்படவேண்டுமெனப் போராடுகின்றனர்.

ஆனால், சமூவிரோத, இரகசிய உலக, அரசியல்-கிரிமினல் குற்றக் கும்பல்களின் கைப்பாவையாகவுள்ள அரசோ, ரவியின் மரணத்தில் உண்மையை மூடிமறைக்கவும் மக்கள் கவனத்தைத் திசைதிருப்பவும் பல்வேறு தகிடுதத்தங்களில் இறங்கியுள்ளது.

  • போலீசு அதிகாரிகள் ரவியின் மரணத்தின் தடயங்களை அழிக்கும் வேலையில் ஈடுபட்டுள்ள அதேசமயம், போலீசு விசாரணைகள் நடக்கும்போதே அதன் விவரங்களில் சிலவற்றை மட்டும் தெரிந்தெடுத்து முதலமைச்சரும் போலீசு அமைச்சரும் சட்டமன்றத்திலும் பத்திரிகைகளிடமும் பரப்பும், விசாரணையைச் சீர்குலைக்கும் வேலைகளைச் செய்கிறார்கள்.
  • ரவியின் மரணம் குறித்து சி.பி.ஐ. விசாரணையை எதிர்த்தும் தாமதப்படுத்தியும், மாநிலக் குற்றப்பிரிவு, விசாரணை என்ற பெயரில் ரவி மரணமடைந்த தருணத்தில் அவரது குடியிருப்புக்கு வந்து சென்றவர்களின் பதிவையும் சி.சி.டி.வி. ஒளிப்பதிவையும் கைப்பற்றிக்கொண்டது.
  • ரவியின் உடற்கூறு ஆய்வு நடக்கும்போதே அங்கு மாநில முதலமைச்சரும் போலீசு அமைச்சரும் போய் போலீசுக்கு அறிவுறுத்தல்கள் கொடுத்துள்ளனர்.
  • ரவி மரணம் குறித்து விசாரணையைத் தொடங்கிய பிறகு மாநிலக் குற்றப்பிரிவு தலைமைப் போலீசு அதிகாரி பிரனோப் மொகந்தி இடத்தில் பிரதாப் ரெட்டி என்பவர் நியமிக்கப்பட்டார்.

டி.கே. ரவி
டி.கே. ரவி

எல்லாவற்றுக்கும் மேலாக, குற்றங்களை மூடிமறைக்க வழக்கமாக அரசியல் – போலீசு கிரிமினல்கள்மேற்கொள்ளும் தந்திரமொன்றை கர்நாடகா அரசும் மேற்கொண்டது. பாலியல் வன்கொடுமைக் குற்றமிழைக்கும் அவர்கள், அதற்குப் பலியாகும் பெண்ணை விபச்சாரி என்று குற்றஞ்சுமத்தி தப்பித்துக்கொள்வார்கள். அவர்களின் குற்றங்களுக்குப் பலியானவர்கள் ஆண்களானால், காதல் தோல்வி அல்லது கள்ளத் தொடர்பு காரணமாகத் தற்கொலை என்று கதைகட்டித் தப்பித்துகொள்வார்கள்.

இதே தந்திரத்தைக் கையிலெடுத்த கர்நாடகா முதலமைச்சர், “ரவி தற்கொலை செய்துகொண்ட அன்று அவரது சக அரசு நிர்வாகப்பணி பெண் அதிகாரியோடு ஒருமணிநேரத்தில் 44 தடவை அழைத்துப் பேசியுள்ளார். ஆகவே, அவரது தற்கொலைக்குத் தனிப்பட்ட சொந்தக் காரணம்தான் அடிப்படையாக உள்ளது” என்று அழைப்பு பதிவேடுகளைக் காட்டிப் பத்திரிகைகளுக்குச் செய்தியளித்துள்ளார்.

  • டி.கே.ரவி ரோஹிணி சிந்தூரி தாசரி என்ற தனது சக அரசு நிர்வாகப் பணி பெண் அதிகாரியோடு ஒருதலைக் காதலில் இருந்ததாகவும், அவருக்குப் பாலியல் தொல்லை கொடுத்ததாகவும், மைசூரு விடுதியில் தன்னோடு தங்கும்படி நிர்ப்பந்தித்ததாகவும், அவரது கணவரை விவாகரத்து செய்யாவிட்டால் தற்கொலை செய்துகொள்ளப்போவதாக மிரட்டியதாகவும் செய்தி வெளியிடும்படி கர்நாடகா போலீசு அதிகாரிகள் கன்னட செய்தியாளர்களை அவசரமாக அழைத்து வற்புறுத்தியுள்ளனர்.
  • இரண்டு மாதங்களுக்கு முன்பே ரோஹிணி சிந்தூரி தாசரி ஆந்திர முதல்வரின் நெருங்கிய ஆலோசகரிடம் புகார் செய்ததாகவும், அவரது ஆலோசனைப்படி கர்நாடகா மாநிலத் தலைமைச் செயலருக்குப் புகார்க் கடிதம் எழுதியதாகவும் காணாமல் போன அக்கடிதத்தைத் தேடிவருவதாகவும் போலீசார் கூறியுள்ளனர்.
  • டி.கே.ரவி மரணத்திற்குப் பிறகு கர்நாடகத் தலைமைச் செயலரையும். குற்றப்பிரிவு போலீசையும் சந்தித்த சிந்தூரி, ரவி தனக்கு அனுப்பிய குறுஞ்செய்திகளையும் மின் கடிதங்களையும் அழைப்புகளையும் கையளித்ததாகக் கூறப்படுகிறது.

டி.கே.ரவி போன்ற ஒரு நேர்மையான அதிகாரி தவறான பாலியல் பண்புகளைக் கொண்டவராகவும் இருக்கலாம்; அவர் மர்மமான முறையில் இறந்த பிறகு, சிந்தூரியேகூட தனது எதிர்காலம் கருதி வேறு சிக்கல்களில் சிக்கிக் கொள்வதைத் தவிர்க்க முயலலாம்.

ஆனால், நாடே ஒரு சமூக ஜனநாயக அடிப்படையைக் கொண்டதாக இல்லாமல், ஆணாதிக்க நிலவுடைமைச் சமூகத்தைக் கொண்டதாகவும் அதன் வெட்கக்கேடான, கீழ்த்தரமான பிற்போக்கு சமூக விழுமியங்களையும் கொண்டிருக்கிறது; இதை அடிப்படையாகப் பயன்படுத்திக் கொண்டு அரசியல் – கிரிமினல் குற்றக் கும்பல்கள் சமூகவிரோதச் செயல்களில் துணிச்சலாக ஈடுபடமுடிகிறது என்று கருதவே இடமுள்ளது.

ஆனால், டி.கே.ரவி போன்ற நேர்மையான, துணிச்சலான அதிகாரிகளுக்கான இடம் விரைவாக அருகி வருகிறது. சமூகவிரோதத் தொழில் மற்றும் அரசியல் – கிரிமினல் குற்றக் கும்பல்களின் பேராசைகள் வெறியாக மாறிவிட்டன. அதன் காரணமாக, அவர்களின் சமூகவிரோதக் குற்றங்களுக்கு உடந்தையாகச் செயல்படும்படி அரசு நிர்வாகப் பணி அதிகாரிகள், போலீசு அதிகாரிகள் மீதான நெருக்குதல்கள் பன்மடங்கு அதிகரிக்கின்றன. இதன் விளைவாக, மக்களுக்கு எதிரான அவர்களின் பாய்ச்சல்கள் இன்னும் கடுமையாகி வருகின்றன.

டி.கே.ரவிக்காக வாரக் கணக்கில் கொதித்துப்போகும் தேசிய ஊடகங்கள் தமிழ்நாட்டில் நிகழ்ந்த முத்துக்குமாரசாமி, தியாகராஜன் போன்ற அதிகாரிகளின் தற்கொலைகள் பற்றி கண்டுகொள்ளாதபோது, இந்நிலைமை குறித்துத் தமிழக மக்களாகிய நாம் கூடுதலான அரசியல் அக்கறை கொள்ளவேண்டும்.
___________________________
புதிய ஜனநாயகம், ஏப்ரல் 2015
___________________________

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க