Saturday, May 30, 2020
முகப்பு கட்சிகள் அ.தி.மு.க குடந்தை மணல் கொள்ளை - மக்கள் நேரடி நடவடிக்கை !

குடந்தை மணல் கொள்ளை – மக்கள் நேரடி நடவடிக்கை !

-

ணல் கொள்ளையை வேடிக்கை பார்த்தால் கொள்ளிடம் ஆறு கூண்டோடு அழிந்து விடும்

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது சொடுக்கவும்]

ஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகில் கொள்ளிடம் ஆற்றில் அரியலுர் மாவட்டம் உடையார் பாளையம் தாலுக்காவிலுள்ள மதனத்தூர் முதல் அடிக்காமலை வரை மணல்குவாரி செயல்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதி தஞ்சை மவட்டத்திலும் மற்றொரு பகுதி அரியலுர் மாவட்டத்திலும் உள்ளது. இப்பகுதியில் நடைபெறும் மணல் கொள்ளையின் காரணமாக நிலத்தடி நீர் குறைந்து விவசாயம் பாதிக்கப்படுகிறது.

இவையன்றி இப்பகுதியில் ஆழ்குழாய் கிணறு மூலம் நாகை, திருவாரூர் மாவட்டங்களுக்கு குடிநீர் எடுத்து செல்லப்படுகிறது. இந்த மணற்கொள்ளையின் காரணமாக இந்த குடிநீர் திட்டங்களும் இந்த பகுதி குடிநீர் ஆதாரங்களும் பாதிக்கப்பட்டுள்ளன. இதற்கு எதிராக போராடக்கூடிய நபர்களை தனிப்பட்ட முறையில் மிரட்டுவதும் அல்லது பணத்தை கொடுத்து சரிகட்டுவது என நடைபெற்று வருகிறது.

இந்த மணற்கொள்ளை பற்றி தெரிந்த உடன் இதற்கு எதிராக போராடுவது என்று மக்கள் உரிமை பாதுகாப்பு மையம் சார்பாக முடிவு செய்து பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது. முதற்கட்டமாக நீலத்தநல்லூர், அத்தியூர், மகாராஜபுரம் பஞ்சாயத்தை சுற்றியுள்ள கிராமங்களில் நோட்டீஸ் வினியோகம் செய்யப்பட்டது.

ராமலிங்கம் என்ற விவசாயி நம்முடன் தொடர்புகொண்டு, “மணற்கொள்ளையால் நாங்கள் ரொம்பவும் பாதிக்கப்பட்டிருக்கோம். மோட்டர் போட்டா போர்செட்டில் தண்ணி வரமாட்டேங்குது. நாங்க எல்லாம் எப்படி விவசாயம் செய்வது என்று தெரியவில்லை” என்று தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியது மட்டுமல்லாமல் நம்முடன் சேர்ந்து கிராமம் கிராமமாக பிரச்சாரத்தை மேற்கொண்டார்.

பிரச்சாரத்தின் முதல்நாளே மணற்குவரி மேனேஜர் சந்தித்து, “என்ன செய்யப் போறீங்க” என்று கேட்டார்.

விவசாயி ராமலிங்கம், “குவாரி மூடினால் தான் நாங்கள் விவசாயம் செய்யமுடியும்” என்றார்.

மேனேஜர், “டூவிலர் ஓட்டுபவர்கள் எல்லாம் ஹெல்மெட் போடுனுன்னு சட்டம் இருக்கு அதை யார் பாலொ பண்ணுறா” என்றார்.

விவசாயி ராமலிங்கம், “அதற்குத்தான் போலீஸ் பைன் போடுது” என்றார்.

மேனேஜர், “அத உடுங்க. எவ்வளவு வேண்டுமானாலும் பணம் வாங்கிக்குங்க. நீங்க எதுவும் தலையிடாதிங்க” என்று சொல்ல,

“நீ கொடுக்கும் காசை நம்பி வயல்களை இழக்கத் தயாராக இல்லை” என்று கூறி மறுத்து விட்டார்.

மீண்டும் ராமலிங்கத்தை தொடர்பு கொண்டு, “பல்வேறு அதிகாரிகள் தொடங்கி முதலமைச்சர் பன்னீர்செல்வம் வரை இதில் தலையிட்டு நடத்துகின்றனர். அதனால் வீணாகபகையை வளர்த்துக் கொள்ளாதீங்க” என்று மிரட்டல் பாணியில் பேசியிருக்கின்றனர்.

“யார் செய்தால் என்னங்க? தப்பு தப்பு தானே! இதை பார்த்துகிட்டு எப்படி சும்மா இருக்க முடியும். இதற்கு எதிராக எங்களால் முடிந்ததை செஞ்சிக்கிட்டு இருக்கோம்” என்று பதில் கூறி அனுப்பியுள்ளார்.

வழக்கமாக மிரட்டுவதன் மூலமாகவும், பணம் கொடுப்பதன் மூலமாகவும் காரியம் சாதிக்கும் இந்த கும்பலுக்கு ஒரு புது அனுபவம் கொடுக்கப்பட்டது.

இதனிடையே அய்யாநல்லூர் இளைஞர்களை கூட்டி இது சம்பந்தமாக விளக்கப்பட்டது. அடுத்த நாள் காலை 10 மணிக்கு நம்மை தொடர்புகொண்ட இளைஞர்கள், “உடனடியாக உங்களை சந்திக்க வேண்டும்” என்று சொன்னார்கள். அதன்படி, மக்கள் உரிமை பாதுகாப்பு மையத்தை சார்ந்த தோழர் நேரில் சென்று அவர்களை சந்தித்தார்.

சுமார் 30 இளைஞர்கள் அங்கு கூடியிருந்தனர். “நீங்க பேசினதை கேட்டு ராத்திரி முழுக்க தூக்கமே வரலங்க. நாம இதுக்கு எதாவது செய்யணும்” என்று கூறி விறுவிறுவென ஆற்றில் இறங்கி நடக்கத் தொடங்கினர். இளைஞர்களின் உணர்வுகளை அங்கீகரித்து நாமும் உடன் சென்றோம். ஆறு சின்னாபின்ன படுத்தப்பட்டு இருப்பதை பார்த்த இளைஞர்கள் ஆத்திரப்பட்டு கிட்டாச்சி இயந்திரங்களை  நிறுத்தச் சொல்லி சத்தமிட்டனர். அங்கு செயல்பட்ட 9 கிட்டாச்சி எந்திரங்களும் நிறுத்தப்பட்டன.

கொள்ளிடம் ஆற்றுமணல் கொள்ளையர்
“எங்களுக்கு என்ன செய்யணும்? நீங்க ஆத்தவிட்டு வெளியே போகணும்”

உடனே ஓடிவந்த சூப்பர்வைசர், “என்ன விசயம்” என்று கேட்டார்.

“எங்க ஆத்தை வெட்டி கொள்ளை அடிக்கிறிங்க. அதை நிறுத்துவதற்கு வந்து இருக்கோம்” என்றதும் உடனடியாக மேனேஜருக்கு போன் செய்து இளைஞரிடம் போனை கொடுத்தார்.

மேனேஜரும், “சொல்லுங்க, நாங்க உங்களுக்கு என்ன செய்யணும்” என்ற வார்தைகளுடனே பேசதொடங்கினார்.

“எங்களுக்கு என்ன செய்யணும்? நீங்க ஆத்தவிட்டு வெளியே போகணும்” என்று பதில் கொடுத்தனர்.

அதற்கு மேனேஜரோ, கீறல் விழுந்த ரெக்காடு போல மீண்டும், மீண்டும், “உங்களுக்கு என்ன செய்யணும்” என்று சொன்னதையே திரும்பத் திரும்பக் கூறினார்.

கொள்ளிடம் ஆற்றுமணல் கொள்ளையர்
காசுக்கு ஆசைபடாமல் மண்ணை காக்க போராடியவர்களை இதுவரை பார்த்ததில்லை.

காசுக்கு ஆசைபடாமல் மண்ணை காக்க போராடியவர்களை இதுவரை பார்த்ததில்லை என்பதாலேயே அவரால் இதை புரிந்து கொள்ள முடியவில்லை.

ஒரு கட்டத்தில் ஆத்திரமடைந்த இளைஞர்கள், “என்ன சொன்னதையே திரும்பத் திரும்ப பேசிகிட்டு இருக்கிங்க. உங்களிடம் கொடுக்கப்பட்ட அனுமதியை எடுத்துகிட்டு நேரில் வாங்க, நாம பேசலாம்” என்றதும்,

“நான் வெளியூரில் இருக்கேன் தம்பி, என்னால் உடனே வரமுடியாது” என்றார்.

கொள்ளிடம் ஆற்றுமணல் கொள்ளையர்
‘உங்களுக்கு கீழ் உள்ள நபர்களை பேச அனுப்பவும் என்று மணற்குவாரி கும்பலிடம் நாம் கூறியதை அவர்கள் சரியாக புரிந்து கொண்டுள்ளனர்’

“அப்போ உங்களுக்கு கீழ் உள்ளவங்களை அனுப்பி வையுங்கள்” என்றதும் அடுத்த 5 நிமிடத்தில் நம்மை நோக்கி ஓடிவந்தார் ஒருவர்.

மணல் கொள்ளை அடிக்கும் கும்பலின் கீழ் செயல்படும் நபர் என்று நினைத்து பேசதுவங்கியவுடன் தான் தெரிந்தது அவர் பொதுபணித்துறை அதிகாரி என்று. ‘உங்களுக்கு கீழ் உள்ள நபர்களை பேச அனுப்பவும் என்று மணற்குவாரி கும்பலிடம் நாம் கூறியதை அவர்கள் சரியாக புரிந்து கொண்டுள்ளனர்’ என்று உணர்ந்தபடி பேச தொடங்கினோம்.

எடுத்த எடுப்பிலேயே, “தம்பி இங்கே எல்லாம் சரியா நடந்துக்கிட்டு இருக்குது. சட்டப்படிதான் எல்லாம் செய்கிறோம். எதுக்கு எல்லாத்தையும் தடுத்து நிறுத்தினீங்க?” என்றார்.

“மொத்தம் எத்தனை அடி ஆழம் வெட்ட அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது” என்று கேட்டதும், “6 அடி கொடுக்கப்பட்டுள்ளது” என்று கூறினார்.

15 அடிக்கு மேல் வெட்டிய பள்ளத்தில் தேங்கியிருக்கும் நீர்

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது சொடுக்கவும்]

உடனடியாக, அவரை கையோடு அழைத்துக் கொண்டு, 15 அடிக்கும் மேல் வெட்டப்பட்டு நீர் தேங்கியுள்ள ஒரு குழியில் இளைஞர்களை இறக்கி, “இதற்கு என்ன சொல்லுறீங்க” என்று கேட்டதும் திருதிருவென விழித்தார்.

இதற்கிடையே வாங்கிய காசுக்கு பொறுப்பாக பணியாற்ற காவல்துறை அங்கு விரைந்து வந்தது. இதைப் பார்த்த இளைஞர் ஒருவர், “நாம தண்ணி வேணும், ரோடு வேணும்னு போராட உட்கர்ந்தா ஒரு பயலும் வரமாட்டங்குறான். இப்பமட்டும் எவ்வளவு வேகமா வர்றாங்க. பார்றா” என்று கிண்டலடித்தார்.

கொள்ளிடம் ஆற்றுமணல் கொள்ளையர்
“நாம தண்ணி வேணும், ரோடு வேணும்னு போராட உட்கர்ந்தா ஒரு பயலும் வரமாட்டங்குறான். இப்பமட்டும் எவ்வளவு வேகமாவர்றாங்க. பார்றா”

இங்கு ‘சட்டம் ஒழுங்கு சீர் கெட்டு’ இருப்பதைப் பார்த்து பதறிய காவல்துறை ஆய்வாளர், “தம்பி, எல்லாம் சட்டபடி நடந்து கொள்ளுங்க. நீங்க கலெக்டர் கிட்ட மனுகொடுங்க, இல்லை என்றால் படமெடுத்து வாட்சப் அல்லது பேஸ்புக்கில் கலெக்டருக்கு அனுப்புங்க” என்றார்.

“அது எல்லாம் சரிதாங்க உங்க வீட்டுக்கு திருட வந்தா திருடனை பிடித்து கட்டி போடுவீங்களா, இல்லாட்டி கம்ப்ளெய்ண்ட் கொடுக்கப் போவீங்களா” என்றதும்,

“நாம் எதற்கு இதை கேட்கிறோம்” என்று புரிந்து கொள்ளாமலேயே, “கட்டிபோட்டு பிடித்து கொடுப்பது சரி தான்” என்றார்.

“அதைத்தான் நாங்க இப்ப செய்யுறோம். மணல் கொள்ளை போவுது வந்து புடிங்க” என்றதும் ‘நம்முடைய வேலைக்கே வம்பாபோவுது’ என்று உணர்ந்தவர்,

“நீங்க அவங்க கிட்ட பேசிக்கிங்க” என்று பொதுபபணித்துறை அதிகாரியை கைகாட்டினார்.

கொள்ளிடம் ஆற்றுமணல் கொள்ளையர்
“எத்தனை இயந்திரத்திற்கு அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது”.

பொதுப்பணித்துறை அதிகாரியிடம், “உச்சநீதிமன்ற வழிகாட்டுதல்படி நீர் இருக்கும் பகுதியில் மணல் அள்ளக்கூடாது என்ற உத்தரவு உள்ளது. ஆனால் நீரிலேயே இறங்கி கிட்டாச்சி மூலம் மணல் அள்ளுகிறார்கள்” என்று காட்டினோம்.

மேலும் 9 கிட்டாச்சி இருப்பதை காட்டி, “எத்தனை இயந்திரத்திற்கு அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது?” என்று கேட்டோம்.

“3 தான் அனுமதி” என்று கூறி நம் கையை இறுக்கமாக பற்றிக் கொண்டு, “சார் இது எல்லாம் ஓ.பி.எஸ் அவருடைய தம்பி நேரடி கண்ட்ரோல்ல நடக்குதுங்க சார். நீங்க சொல்லுறபடி செய்யுறதுக்கு எனக்கு அதிகாரம் இல்லை” என்றார்.

அதிகாரிகள் நம்மிடம் கையை பிடித்து கெஞ்சுவதை பார்த்து சகிக்க முடியாத காவல்துறை வேகமாக நம்மிடம் வந்து, “சார், உங்களுக்கு என்ன தான் பிரச்சனை” என்று கேட்டார்.

கொள்ளிடம் ஆற்றுமணல் கொள்ளையர்
“குடிமக்கள் எங்களோட பிரச்சனையை அதிகாரியிடம் பேசிக் கொண்டிருக்கிறோம். இதுல உங்களுக்கென்ன பிரச்சனை”

“குடிமக்கள் எங்களோட பிரச்சனையை அதிகாரியிடம் பேசிக் கொண்டிருக்கிறோம். இதுல உங்களுக்கென்ன பிரச்சனை” என்று கேட்டதும் என்ன சொல்வதென்று தெரியவில்லை விலகி நின்றார்.

இதற்கிடையே இளைஞர்கள், “இதுக்கு மேல இவங்க கிட்ட பேசி புரியோஜனம் இல்லை. நாம ஊர் மக்களிடம் பேசி அடுத்த கட்டமாக நாம என்ன செய்யலாம் என்று முடிவு செய்யலாம்” என்றனர்.

அதை அங்கீகரித்து இதை அதிகாரிகளிடம் அறிவித்துவிட்டு அங்கிருந்து புறப்பட்டு வந்தோம்

நம்முடன் வந்த இளைஞர்களோ, “ஒரு 30 பேர் திரண்டு 2 மணி நேரம் குவாரியை முடக்கி வைக்கமுடியும் என்று நாங்கள் எதிர்பார்க்கவில்லை. ஏதோ ஆத்திரத்தில் புரப்பட்டு வந்தோம். ஆனால் இங்கு வந்த பிறகு மணல் குவாரிக்கு பின்னாடி யார், யார் இருக்காங்க. அதிகாரிகள் எப்படி எல்லாம் துணைபோறாங்க என தெரிந்து கொண்டோம்” என்றனர்.

கொள்ளிடம் ஆற்றுமணல் கொள்ளையர்
அதிகார வர்க்கம் உணரும்படி போராட்டங்களை நாம் முன்னெடுத்துச் செல்வோம்.

நாம் குவாரியை விட்டு வெளியேறியபோது நம்மை நோக்கி வந்த காவல்துறை அதிகாரி ஒருவர்,  “தம்பி, நானும் இந்த தண்ணியை குடிச்சிதான் வாழுறன். உங்கபக்கம் ஞாயம் இருக்கு. நாங்க அரசாங்க சம்பளத்தை நம்பி வாழுறோம். அதனால் அரசாங்கம் சொல்லுறததான் கேட்கமுடியும். அதனால நீங்க எங்களை சட்டை செய்யாமல் போராடுங்க” என்றார்.

அந்த காவல்துறை அதிகாரி, “அரசாங்கம் என்றால் மக்கள்தான். தான் வாங்கும் சம்பளம் மக்கள் தரும் சம்பளம்” என்பதை உணர்வில்லை.

இந்த அதிகார வர்க்கம் அதை உணரும்படி போராட்டங்களை நாம் முன்னெடுத்துச் செல்வோம்.

தகவல்
மக்கள் உரிமை பாதுகாப்பு மையம்,
குடந்தை

சந்தா செலுத்துங்கள்

இணையத்தில் உழைக்கும் மக்களின் குரலாக பதினோரு ஆண்டுகளாக போராடும் வினவுடன் கை கோருங்கள். ஆதரியுங்கள்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க