privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புமறுகாலனியாக்கம்தனியார்மயம் - தாராளமயம் - உலகமயம்மக்களுக்கு பொறுப்பானவர்களே மருத்துவர்கள் - Dr அரவிந்தன் சிவக்குமார்

மக்களுக்கு பொறுப்பானவர்களே மருத்துவர்கள் – Dr அரவிந்தன் சிவக்குமார்

-

hippocratic-oath‘நோயாளிகளின் உறவினர்கள் மருத்துவர்களை தாக்குவது, மருத்துவமனை சொத்துக்களை சேதப்படுத்துவது ஆகியவற்றுக்கு எதிராக அரசு நடவடிக்கை எடுப்பதில்லை’, ‘மிகச்சிறந்த சிகிச்சை வழங்கியபிறகும் நோயாளிகள் உயிரிழந்தால் அதற்கு மருத்துவர்களும், மருத்துவமனைகளும் பொறுப்பு இல்லை’, ‘மருத்துவமனைகளும், மருத்துவ சிகிச்சை பகுதிகளும் பாதுகாக்கப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட வேண்டும்’ ஆகிய கோரிக்கைகளை முன்வைத்து மே 2-ம் தேதி தனியார் மருத்துவமனைகளை மூடப் போவதாக இந்திய மருத்துவ சங்கம், தமிழ்நாடு கிளை அறிவித்திருக்கிறது.

திருச்சி ஜோசப் கண் மருத்துவமனை நடத்திய கண் புரை அறுவை சிகிச்சை முகாமில் 66 முதியவர்களின் கண்பார்வை பறிபோனது தொடர்பாக மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம் எட்டாண்டுகளாக போராடிய வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டதை ஒட்டி தனியார் மருத்துவமனைகள் இந்த நடவடிக்கையை அறிவித்திருக்கின்றன. தமது லாபவேட்டை நடவடிக்கைகளுக்கு எதிரான மக்கள் போராட்டங்களை சட்டரீதியாக முடக்குவது இதன் நோக்கம்.

ஜோசப் கண் மருத்துவமனை தீர்ப்பு
திருச்சி ஜோசப் கண் மருத்துவமனை நடத்திய கண் புரை அறுவை சிகிச்சை முகாமில் 66 முதியவர்களின் கண்பார்வை பறிபோனது தொடர்பான வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டதை ஒட்டி தனியார் மருத்துவமனைகள் இந்த நடவடிக்கையை அறிவித்திருக்கின்றன. (கோப்புப் படம்)

இது குறித்து சென்னையைச் சேர்ந்த உளவியல் மருத்துவர் டாக்டர் அரவிந்தன் சிவகுமார் பேஸ்புக்கில் வெளியிட்ட கருத்துக்களை தொகுத்து தமிழில் மொழிபெயர்த்து தருகிறோம்.

கூட்டு கண் அறுவை சிகிச்சைகள் மக்கள் வாழ்வில் கொண்டு வந்த இருள் மருத்துவ சேவையை விற்பனை சரக்காக்கியதன் விளைவு

ஜோசப் கண் மருத்துவமனை நடத்திய அறுவை சிகிச்சையில் 66 பேர் கண்பார்வை பறிபோனது தொடர்பான வழக்கில் சமீபத்தில் வெளியான தீர்ப்பு பல விவாதங்களை எழுப்பியிருக்கிறது.

7 ஆண்டு இருளுக்குப் பிறகு அந்த 70 வயது முதியவர்கள் தீர்ப்பு பெற்றுள்ளார்கள். நீதிபதி 1923-ம் ஆண்டு பணியாளர்கள் நிவாரணச் சட்டத்தின் அடிப்படையில் அவர்களுக்கு நிவாரணம் கொடுக்க வேண்டும் என்று கூறியிருக்கிறார். அது எப்படி என்று எனக்குப் புரியவில்லை. சட்ட நிபுணர்கள்தான் விளக்க வேண்டும்.

அறுவை சிகிச்சை செய்த மருத்துவர்கள் குற்றமற்றவர்களாக விடுவிக்கப்பட்டார்கள்.

ஜோசப் கண் மருத்துவமனை வழக்கு
“இனிமேல் ஏழைகளுக்கு இலவச அறுவை சிகிச்சை செய்யக் கூடாது”

ஒரு கண் மருத்துவர், “இந்த வழக்கில் மருத்துவர்கள் மீது பொய்யாகக் குற்றம் சுமத்தப்பட்டிருக்கிறது. சிறைக்கு போக விரும்பாத மருத்துவர்கள், இனிமேல் ஏழைகளுக்கு இலவச அறுவை சிகிச்சை செய்யக் கூடாது” என்று தனது கோபத்தைக் கொட்டியிருக்கிறார். அந்த மருத்துவரின் கோபம் பேஸ்புக்கில் பரவலாக பகிரப்பட்டது.

தொண்டு நிறுவனங்கள் மூலம் நடத்தப்படும் இத்தகைய முகாம்கள் மருத்துவ சேவை விற்பனைச் சரக்காவதை காட்டுகின்றன. முகாம் மருத்துவமனைகளில் நூற்றுக்கணக்கான பேருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டால், கருவிகளை கிருமிநீக்கம் செய்வதிலும், நோயாளிகளை அறுவை சிகிச்சைக்கு தயாரிப்பதிலும், அறுவை சிகிச்சைக்குப் பிந்தைய பராமரிப்பிலும் அலட்சியம் இருக்கும்.

  • ஜோசப் வழக்கில் சராசரியாக 7-வது நாள் பாதிக்கப்பட்டவர்களுக்கு கண்ணில் நோய் தொற்று (Endophthalmitis) ஏற்பட்டிருக்கிறது. அறுவை சிகிச்சைக்கு பிந்தைய மருத்துவமனை பராமரிப்பு என்னவானது?
  • முகாமில் அறுவை சிகிச்சைகள் நடத்தப்படும் முறை குறித்து ஏன் எந்த கண் மருத்துவரும் தனது குரலை எழுப்பவில்லை?
  • மனித உயிர்களும் உறுப்புகளும் இலக்குகளாகவும், புள்ளிவிபரங்களாகவும், பொருளாதார எண்ணிக்கையாகவும் சுருக்கப்படும், மருத்துவச் சேவையை விற்பனைச் சரக்காக்கும் போக்கு குறித்து ஏன் யாரும் குரல் எழுப்புவதில்லை?
  • சகிக்க முடியாத சூழலில் உட்கார்ந்து நோயாளியின் கண்ணை பரிசோதிக்கும் கண் மருத்துவர் அது குறித்து மவுனம் சாதிப்பது ஏன்?
ஜோசப் கண் மருத்துவமனை வழக்கு
7 ஆண்டு இருளுக்குப் பிறகு அந்த 70 வயது முதியவர்கள் தீர்ப்பு பெற்றுள்ளார்கள்.

11-வது ஐந்தாண்டு திட்டத்தில் மருத்துவ சேவையை தனியார்மயமாக்கும் இந்திய அரசின் நேரடி நடவடிக்கையாக தனியார்-பொதுத்துறை கூட்டு என்ற வடிவத்தில் தேசிய ஊரக சுகாதார இயக்கம் முதல் பல தொண்டு நிறுவனங்கள் நடத்தும் மாவட்ட பார்வைக் குறைபாடு கட்டுப்பாடு திட்டம் (DBCP), தேசிய மனநல திட்டம் (NMHP) முதலியன தொடங்கப்பட்டன.

இத்தகைய திட்டங்களை நடத்தும் எந்த ஒரு அமைப்புக்கும் (தொண்டு நிறுவனம்) 3 ஆண்டுகளில் 25 லட்சம் ரூபாய்க்கு அதிகமான பணப்புழக்கம் இருக்க வேண்டும் என்பதுதான் முன் நிபந்தனை.

அரசு மருத்துவமனையா - மரண வாசலாமாவட்ட பார்வைக் குறைபாடு கட்டுப்பாட்டு திட்டத்தின் கீழ், தொண்டு நிறுவனங்களும், தனியார் மருத்துவக் கல்லூரிகளும் ஈடுபடுத்தப்பட்டு, கிராமம் கிராமமாக பரிசோதனை நடத்தப்பட்டு, மக்கள் கொண்டு வரப்பட்டு, அறுக்கப்பட்டு, பொருத்தப்பட்டு அனுப்பப்படுகின்றனர். பரிசோதனை செய்வது முதல் அறுவை சிகிச்சை செய்வது, கண்விழிகளை எடுப்பது வரை இலக்குகள் நிர்ணயிக்கப்படுகின்றன. மனித உயிர்களை பலி கொடுக்கும்படியான நடவடிக்கைகளுக்கு தனது அற உணர்வுகளை உதிர்த்துக் கொண்டு மருத்துவர் ஏன் வேலை செய்ய வேண்டும்?

இந்த அறுவை சிகிச்சைகள் இலவசம் இல்லை என்று தெரிந்து கொள்ள வேண்டும். இவற்றை ஏற்பாடு செய்து நடத்தும் தொண்டு நிறுவனங்களுக்கு லட்சக்கணக்கான ரூபாய் அரசு மானியம் வழங்கப்படுகிறது. ரூ 60 லட்சம் முதல் ரூ 1 கோடி வரையில் இந்திய அரசு நிதி ஒதுக்குகிறது.

ஒவ்வொரு கண்புரை அறுவை சிகிச்சைக்கும் தொண்டு நிறுவனத்துக்கு ரூ 750 வழங்கப்படுகிறது, அதிலிருந்து ரூ 100 மருத்துவருக்கு கொடுக்கப்படுகிறது. ஒரு நாளைக்கு ஒரு கண் மருத்துவர் 30 நோயாளிகளுக்கு மேல் அறுவை சிகிச்சை செய்யக் கூடாது. ஆனால், கண்கள் விற்பனைச் சரக்காக மாறி, அவற்றுக்கு ஒரு விலை வைக்கப்பட்டிருக்கும் நிலையில், ஒரு மருத்துவர் ஒரு நாளைக்குச் செய்யப்படும் அறுவை சிகிச்சைகளின் எண்ணிக்கையும் அதிகரிக்கிறது.

பீகார் சிறப்பு முகாம்
பீகார் மாநிலத்தின் நேபாள எல்லையை ஒட்டியுள்ள கிராமத்தில் 2003-ல் நடந்த கருத்தடை சிறப்பு முகாமின் கோரக் காட்சி (கோப்புப் படம்).

பெரும் எண்ணிக்கையில் அறுவை சிகிச்சைகள் செய்யப்படும் முகாம்களில் இலக்குகள் துரத்தப்படுகின்றன, அங்கு எண்ணிக்கைதான் நோக்கம், உயிர்கள் விற்பனை சரக்காக்கப்படுகின்றன. மருத்துவர்கள் ஏன் அத்தகைய நடைமுறைக்கு மறுப்பு தெரிவிக்கவில்லை. சிகிச்சை நடத்தப்படும் முறை, அது நடத்தப்படும் இடம், இவற்றைப் பற்றி அவர்கள் ஏன் கேள்வி எழுப்பவில்லை? ஒரு மருத்துவரைச் சுற்றி இலக்குகள், புள்ளிவிபரங்கள், லாபம் பற்றி கவலைப்படும் வணிக ஆட்கள் நிரம்பியிருக்கின்றனர். பல விஷயங்கள் சமரசம் செய்யப்பட்டு, புதைக்கப்பட்டு, மூடப்பட்டு விடுகின்றன..

2008-ல் திருச்சி ஜோசப் மருத்துவமனை, 2008-ல் மத்திய பிரதேசம் மண்டாலாவில் யோகிராஜ் மருத்துவமனை, 2010-ல் மத்திய பிரதேசம் இந்தூரில், 2011-ல் சத்தீஸ்கரில், 2014-ல் பஞ்சாப் அம்ருத்சரில் என்று ஒவ்வொரு கூட்டு அறுவை சிகிச்சை விபரீதங்களும் பாதிக்கப்பட்டவர்களின் வாழ்க்கையை இருளடையச் செய்தன.

தொண்டு நிறுவன எந்திரத்தின் லாபத்துக்கான இந்த மாபெரும் சக்கரத்தில் முக்கியமான பற்களாக செயல்படும் மருத்துவர்கள் கேள்விகளுக்கு பதிலளிக்க வேண்டியிருக்கிறது.

பல்வேறு சிறப்புத் துறைகளில் கண் சிகிச்சைத் துறைதான் அதிகமாக கார்ப்பரேட் மயமாக்கப்பட்டுள்ளது. ஆனால், எந்த கண் மருத்துவரும் தனியார் மருத்துவமனைகளில் எந்திரங்களுக்கு இரை போட்டு, இலக்குகளை எட்டும் நோக்கில் வேலை செய்வதைப் பற்றி பேசுவதேயில்லை.

மருத்துவம் தனியார்மயம்
தனியார் மருத்துவமனைகளில் எந்திரங்களுக்கு இரை போட்டு, இலக்குகளை எட்டும் நோக்கில் வேலை.

நமக்கு இலக்குகள் வைக்கப்படுகின்றன. இலக்குகளை அடையும்படி மேல் அதிகாரிகள் உத்தரவிடுகின்றனர்.

  • மனநல மருத்துவமனையில் முறையான அங்கீகாரம் இல்லாம் நோயாளிகளை (MHA) அனுமதிக்கும்படி சொல்லப்படுகிறோம்.
  • முறையான கிருமி அகற்றும் முறைகள் பின்பற்றப்படாத சூழலில் அறுவை சிகிச்சைகள் செய்ய சொல்லப்படுகிறோம்.
  • மருந்துகள் இல்லாத நிலையில் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க வைக்கப்படுகிறோம்.
  • நோயாளிகளை டிஸ்சார்ஜ் செய்து தொண்டு நிறுவனங்கள் நிதியில் நடக்கும் தனியார் இல்லங்களுக்கு அனுப்பி வைக்கிறோம்

நாம் உத்தரவுகளுக்கு கண்மூடித்தனமாக கீழ்ப்படிகிறோம்.

ஒரு மருத்துவருக்கு கடமையும், பொறுப்பும் இருக்கிறது. தனக்கு மேலே இருக்கும் அரசு அதிகாரியோ, அல்லது தான் வேலை செய்யும் தொண்டு நிறுவனமோ இடும் உத்தரவுகளை கண்ணை மூடிக் கொண்டு அவர் பின்பற்ற முடியாது.

ஒரு மருத்துவர் தனது உயர் அதிகாரியின் உத்தரவை கண்மூடித்தனமாக பின்பற்றி மருத்துவ அறங்கள் ஆதரிக்கப்படாத, ஊக்குவிக்கப்படாத சூழலில் பணி புரிய முடியுமா? அதன் மூலம், ஒரு மருத்துவராக இருப்பதன் அடிப்படை சாராம்சத்தை அவர் தியாகம் செய்யவில்லையா? அவர் சிகிச்சை அளிக்கும் உயிர்களின் வாழ்வையும், உரிமைகளையும் பாதுகாக்க அவருக்கு உள்ள தார்மீக கடமையை அவர் புறக்கணிக்கவில்லையா?

மருத்துவ அறம்
சிகிச்சை அளிக்கும் உயிர்களின் வாழ்வையும், உரிமைகளையும் பாதுகாக்கும் தார்மீக கடமை.

“நான் தீங்கு செய்ய நினைக்கவில்லை, எனது நோக்கம் சிகிச்சை அளித்து குணப்படுத்துவதுதான்” என்று ஒரு மருத்துவர் சொல்லலாம். ஆனால், “சிகிச்சை என்ற பெயரில் உரிமைகள் அப்பட்டமாக மீறப்படுகின்றன, நோயாளியின் பாதுகாப்பு மீறப்படுகிறது, அந்த இடமும் அவர் செய்யும் சிகிச்சையும் நோயாளியின் உடல்நலத்துக்கு தீங்கு விளைவிப்பது” என்று அந்த மருத்துவருக்கு தெரிந்திருக்கிறது.

“actus reus non facit reum nisi mens sit rea” – “மனத்தில் குற்ற நோக்கம் இல்லா விட்டால் செயலில் குற்றம் இல்லை” என்று இங்கு நாம் சொல்ல முடியுமா? இந்த விஷயத்தில் மனம் குற்றமிழைக்கவில்லையா?

A Few Good Men திரைப்படத்தின் இறுதிக் காட்சியில், Code Red நடவடிக்கையை தான்தான் கட்டளையிட்டதாக பெருமளவு பெருமிதத்துடனும் ஆணவத்துடனும் ஒத்துக் கொள்வார், கர்னலாக நடிக்கும் ஜேக் நிக்கல்சன். கர்னலின் உத்தரவுகளை நிறைவேற்றி Code Red-ஐ அமல்படுத்திய இரண்டு படைவீரர்களும் தண்டிக்கப்படுவார்கள். ராணுவ நீதி விசாரணை நடத்தி, அவர்களது சீருடை பறிக்கப்படும். ஒரு படைவீரர் இன்னொருவரிடம், “உத்தரவுக்குத்தானே அடிபணிந்தோம், நாம் ஏன் தண்டிக்கப்படுகிறோம்” என்று அழுது கொண்டே கேட்பார். மற்றவர், “பலவீனமானவர்கள், அதிகாரம் இல்லாதவர்களுக்காக நாம் நின்றிருக்க வேண்டும்” என்று பதில் சொல்வார்.

மருத்துவர்களுக்கான ஒரிஜினல் ஹிப்போக்ரடிக் உறுதிமொழி
மருத்துவர்களுக்கான ஒரிஜினல் ஹிப்போக்ரடிக் உறுதிமொழி

தீங்கு செய்யாதே என்பதை இன்றைய புதிய தாராளவாத கொள்கை காலகட்டத்தில், கண்மூடித்தனமாக உத்தரவுகளை பின்பற்றாதே என்று விளக்கிக் கூறலாம். பார்க்காதவர்களாக, கேட்காதவர்களாக, பேசாதவர்களாக, எந்தக் கருவிகளும், வசதிகளும், மருந்துகளும் இல்லாத இடங்களில், லாபமீட்டும் கார்ப்பரேட்டுகள் அல்லது தொண்டு நிறுவனங்கள் லாப வெறியில் மருத்துவ அறங்களை அறுத்துப் போடும் இடங்களில் பணி புரியாதீர்கள்.

அரசு மருத்துவமனை
மக்களுக்கு விடை வேண்டும். அவர்களிடம் விடை இல்லாத கேள்விகள் இருக்கின்றன. (கோப்புப் படம்)

மக்களுக்கு விடை வேண்டும். அவர்களிடம் விடை இல்லாத கேள்விகள் இருக்கின்றன. அவர்களது சொந்த பந்தங்களின் இறப்புக்கான உண்மையான காரணம், மருத்துவ சிகிச்சை கிடைக்காமல் போவது, கைக்காசை செலவழிக்க வேண்டிய நிலைமை, மருத்துவ காப்பீட்டு திட்டங்கள், புதிய மருந்து கொள்கை, அவர்களது உரிமைகள். வாழ்வதற்கான அவர்களது உரிமை, உடல்நலத்துக்கான அவர்களது உரிமை தொடர்பான கேள்விகள் இருக்கின்றன.

மக்களை தினமும் எதிர்கொள்ளும் மருத்துவர்களுக்கு, உண்மை தெரியும். ஆனால், தெளிவான ஒரு மவுனம் நிலவுகிறது, காதடைக்க வைக்கச் செய்யும் மவுனம். மக்களையும், அவர்களது உரிமைகளையும் கொன்று கொண்டிருக்கும் மவுனம்.

எந்த எல்லை வரை நாம் சமரசம் செய்து கொள்வோம். எவ்வளவு நாள் நாம் அமைதியாக இருப்போம்? குடி உரிமைகளுக்காக, சமூக நீதிக்காக, கல்வித்துறையில் இட ஒதுக்கீட்டுக்காக போராடிய மக்கள், மருத்துவக் கல்வி கட்டண மானியத்துக்கு வரிப்பணம் செலுத்தி, நம்மை மருத்துவர்கள் ஆக்கிய மக்களுக்கு இதுதான் நமது கைம்மாறா? சிந்தியுங்கள் மருத்துவர்களே, உணர்ச்சிவசப்படுவது நமது அறிவை மறைக்கிறது. சிந்தியுங்கள்.

உலக மருத்துவர்கள் சங்கம் (WMA) முன்வைத்த தார்மீக கோட்பாடுகளுக்கு இந்திய மருத்துவ சங்கம் (IMA) கட்டுப்பட்டது. அதன் தமிழ்நாடு கிளை பொறுப்பில் இருப்பவர்கள் எந்த விதமான தார்மீக கோட்பாடுகளும், அறங்களும் இல்லால் பேசுகிறார்கள். ஐ.எம்.ஏ தமிழ்நாடு கிளையின் உண்மை முகம் அம்பலமாகியிருக்கிறது. – மக்களுக்கு எதிரான, தலித்துகளுக்கு எதிரான, நோயாளிகளுக்கு எதிரான முகம். அதன் சாதிய நிலைப்பாடு அம்பலமாகியிருக்கிறது.

நாம் போராடுவோம் மருத்துவர்களே, ஆனால் மக்களுக்கு எதிராக அல்ல, மக்களுடன் சேர்ந்து போராடுவோம். மே 2 அன்று ஐ.எம்.ஏ-ன் சாதீய நிலைப்பாட்டுக்கு எதிராக, நோயாளிகளுக்கு எதிரான நிலைப்பாட்டுக்கு எதிராக, போராடுவோம். அவர்களது நோக்கம் அலட்சியமான, கார்ப்பரேட் மயமான, பணம் உறிஞ்சும் மருத்துவமனைகளையும், மருத்துவர்களையும் பாதுகாப்பதே.

கருப்புப் பட்டை அணிந்து மக்களுடன், மக்கள் உரிமைகளை பாதுகாக்க போராடுவோம். நோயாளிகள், உறவினர்களை வர்க்கம், சாதி அடிப்படையில் பாகுபடுத்துவதை கண்டிப்போம்.

  • நாம் ஒன்றிணைவோம்.
  • இந்திய மருத்துவ சங்கம் (IMA), தமிழ்நாடு கண்மருத்துவர்கள் சங்கம் (TNOA) நிலைப்பாட்டை எதிர்ப்போம்.
  • மருத்துவர்கள் மக்களுக்கும், சமூகத்துக்கும் பொறுப்பானவர்கள்.
மருத்துவ அறம்
மருத்துவர்கள் மக்களுக்காக நிற்க வேண்டும்; மக்களின் குரலாக திகழ வேண்டும். (கோப்புப் படம்)

புதிய தாராளவாத கொள்கைக்கான இந்த காலகட்டத்தில் ஊமைகளாகவும், செவிடர்களாகவும், குருடர்களாகவும் இருப்பது ஒரு தீவிரமான, கொடூரமான குற்றம். நாம் ஒன்றிணைவோம்.

மருத்துவர்கள் ஒன்று சேர்ந்து, தொடர்ந்து தனியார்மயப்படுத்தப்பட்டு வரும் மருத்துவத் துறையின் பல்வேறு கொள்கைகளையும் திட்டங்களையும் எதிர்த்து குரல் எழுப்ப முன் வர வேண்டும். நடைமுறை சாத்தியமற்ற இலக்குகளை வைத்து மருத்துவ அறங்கள் புறக்கணிக்கப்பட்டால் அதை எதிர்த்து குரல் கொடுக்க வேண்டும். மருத்துவர்கள் மக்களுக்காக நிற்க வேண்டும்; மக்களின் குரலாக திகழ வேண்டும். லாப வேட்டைக்கான அந்த மாபெரும் சக்கரம், அதன் பற்களான மருத்துவர்களின் குரலை நசுக்கும் போது அதை எதிர்த்து பேசி தமது அறங்களை காத்துக் கொள்ள வேண்டும்.

மக்களுக்கான, நோயாளிகளின் உரிமைக்கான, மருத்துவ அறங்களை கடைப்பிடிப்பதற்கான சங்கம் ஒன்று அமைக்கப்பட வேண்டும்.

மருத்துவ அறங்கள் மருத்துவப் பாடத்திட்டத்தில் சேர்க்கப்பட வேண்டும். உடல்நலத்தை தீர்மானிக்கும் சமூகக் காரணிகள் என்ற கண்ணோட்டம், மருத்துவக் கொள்கைகள் மீது உலகவங்கி கட்டவிழ்த்திருக்கும் கட்டமைப்பு வன்முறை பற்றி மருத்துவ பாடத்திட்டத்தில் பயிற்றுவிக்கப்பட வேண்டும். கொச்சையான உயிரியல் எளிமைப்படுத்தும் கண்ணோட்டத்தையும், உள்நாட்டு மருத்துவ முறைகள் மீதான கண்மூடித்தனமான தாக்குதலையும் புறக்கணிக்க வேண்டும்.

மக்களின் குரல் ஆவணப்படுத்தப்பட்டு, பதில் சொல்லப்பட வேண்டும். தேவைப்பட்டால் ஒரு சட்டப் பிரிவு அமைக்கப்பட வேண்டும்.

மருத்துவர்கள் பொறுப்புள்ள நபர்கள், சமூகம் அவர்களுக்கு நிறைய சலுகைகளை கொடுத்துள்ளது. அவர்கள் சமூகத்துக்கு பொறுப்பானவர்கள், அவர்களுக்கு சிறப்பு சட்ட பாதுகாப்பும், சலுகையும் தேவையா?

25 ஆண்டுகளுக்கு முன்பு கேட்டிராத, மருத்துவ ஊழியர்களுக்கும், மருத்துவமனைகளுக்கும் எதிரான வன்முறை குறித்து சமூக பொருளாதார மற்றும் அரசியல் மாற்றங்களின் அடிப்படையில் அறிவியல்பூர்வமாக ஆய்வு செய்ய வேண்டும். மருத்துவமனைகளுக்கு எதிரான வன்முறை, மக்கள் மீது மருத்துவ அமைப்பு செலுத்தும் வன்முறைக்கான எதிர் வன்முறைதான். வன்முறை, எதிர்வன்முறையை தோற்றுவிக்கிறது. சீனாவில் மருத்துவ ஊழியர்களுக்கு எதிரான வன்முறை பற்றிய சமீபத்திய லான்செட் கட்டுரை நமக்கெல்லாம் ஒரு பாடம்.

புதிய தாராளவாத கொள்கைகள் அவிழ்த்து விட்டிருக்கும் வன்முறையிலிருந்து நோயாளிகள் பாதுகாக்கப்பட வேண்டும். திட்டமிட்ட வன்முறை, இலக்கு நிர்ணயித்த திட்டங்கள், இவற்றிலிருந்தும், தமது பகட்டில் தாமே மயங்கியிருக்கும் கார்ப்பரேட் மருத்துவமனைகளும், மருத்துவர்களும் அவிழ்த்து விட்டிருக்கும் தாக்குதலிலிருந்து பாதுகாப்போம்.

பட்ட மேற்படிப்பு, உறைவிட பயிற்சி மருத்துவர்கள், அரசு மருத்துவமனை மருத்துவர்கள் போன்ற உறவினர்களின் சீற்றத்தை எதிர் கொள்ளும் முனையில் இருப்பவர்கள் பாதுகாக்கப்பட வேண்டும். மக்களின் உணர்ச்சி குமுறல்களுக்கான காரணங்கள் ஆராயப்பட வேண்டும். மருத்துவமனை கட்டமைப்பில் குறைபாடுகள், போதாமைகள் அல்லது அரசு கொள்கைகள் அல்லது ஆரம்ப கட்டத்தில் அடையாளம் காணும் (வருமுன் தடுக்கும்) முறைகளின் தோல்வி, தேவைப்படும் தலையீடு இவை குறித்து மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும்.

மருத்துவர்களே நாம் ஒன்றுபடுவோம், நமக்கு மத்தியில் இருக்கும் எதிரி தன்னைத்தானே வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறான்.

மக்களோடு ஒன்றுபட்டு, மக்கள் மருத்துவத்தை கட்டியமைப்போம். அனைவருக்கும் மருத்துவ வசதி என்ற கனவை நனவாக்குவோம்.

DR.ARAVINDAN SIVAKUMAR, PSYCHIATRIST CHENNAI.
(டாக்டர் அரவிந்தன் சிவகுமார், மனநல மருத்துவர், சென்னை)