Monday, December 6, 2021
முகப்பு சமூகம் சாதி – மதம் பார்ப்பனியத்தை எதிர்த்து பவன் மால்வியாவின் குதிரைச் சண்டை

பார்ப்பனியத்தை எதிர்த்து பவன் மால்வியாவின் குதிரைச் சண்டை

-

வாளேந்திக் களம் புகும் குதிரை வீரர்கள் எதிரிகளிடமிருந்து தாய் நாட்டைக் காக்க ஆவேசத்தோடு போரிடும் காட்சிகளை நாம் நாவல்களில் வாசித்திருப்போம். அதே போன்று மத்திய பிரதேசத்தின் ரத்லாம் மாவட்டத்தைச் சேர்ந்த பவன் மால்வியாவும் வாளேந்திக் குதிரையில் ஏறி வருகிறார். ஆனால் இது நாவல் இல்லை.

பவன் மால்வியா
கற்களிலிருந்து பாதுகாத்துக் கொள்ள பவன் ஹெல்மெட் அணிந்து குதிரையில் ஊர்வலமாக வந்துள்ளார்.

இந்த குதிரை வீரர் சண்டை போடும் எதிரி சாதாரண நபர் அல்ல. பல நூற்றாண்டுகளாக இந்தியத் தீபகற்பத்தை உடும்புப் பிடியாக பிடித்துக் கொண்டிருக்கும் பார்ப்பனியத்தின் சாதிய கட்டுமானம் தான் பவன் மால்வியா எதிர்க்கத் துணிந்த அந்த எதிரி.

இம்மாதத் துவக்கத்தில் பவன் மால்வியாவுக்குத் திருமணம். வடநாட்டு இந்துத் திருமண சடங்குகளின் ஒரு பகுதியாக மணமகன், மணமகள் வீட்டிற்கு வாளேந்திய வண்ணம் குதிரையில் வர வேண்டும். பவனும் அப்படி விரும்பியுள்ளார். ஆனால் திருமண ஊர்வலத்திற்காக அழைத்து வரப்பட்ட குதிரையை அதே கிராமத்தைச் சேர்ந்த சக “இந்துக்கள்” திருடிச் சென்று விட்டனர்.

தனது தீர்மானத்தில் உறுதியாக இருந்த பவன், காவல் துறையில் புகாரளித்து, போலீசு பாதுகாப்போடு இன்னொரு குதிரையில் ஊர்வலம் சென்றுள்ளார். அவ்வாறு பவன் குதிரையில் செல்லும் போது சக இந்துக்கள் அவர் மேல் கற்களை எரிந்து தாக்கியுள்ளனர். சக இந்துக் குடும்பங்களைச் சேர்ந்த 15 பெண்கள் திரண்டு ஊர்வலத்தில் வந்தவர்களை கட்டைகளால் தாக்கியுள்ளனர். கற்களிலிருந்து பாதுகாத்துக் கொள்ள பவன் ஹெல்மெட் அணிந்து குதிரையில் ஊர்வலமாக வந்துள்ளார்.

(ஆஜ் தக் – தொலைக்காட்சி வீடியோ – இந்தியில்)

இவ்வளவும் காவலுக்கு இருந்த போலீசை சாட்சியாக வைத்து நடந்த சம்பவங்கள். திருமணம் முடிந்ததும் தங்கள் எதிர்ப்பை மீறி பவன் குதிரை ஊர்வலத்தில் வந்ததை தாங்கிக் கொள்ள முடியாத ‘சக இந்துக்கள்’ அக்கிராமத்தில் பவனின் உறவினர்கள் பயன்படுத்திய குடிநீர் கிணற்றில் விஷத்தைக் கலந்துள்ளனர். மறுநாள் அந்தத் தண்ணீரைக் குடித்தவர்கள் மயங்கிச் சரியவே, மீண்டும் பவனின் உறவினர்கள் காவல் துறையில் புகாரளித்துள்ளனர். போலீசும் கண்துடைப்பிற்காக ஒரு சிலரை மாத்திரம் கைது செய்துள்ளது.

இவ்வளவும் நடக்க காரணம், பவன் தலித் சமூகத்தைச் சேர்ந்தவர் என்பது மட்டும் தான். சக இந்துக்கள் அனைவரும் ‘உயர்’ சாதியினர்.

ஒரே பரமாத்மாவிலிருந்து சிதறிய துளிகளான ஜீவாத்மாக்களிடையே வேறுபாடு எதையும் இந்து சனாதன தர்மம் பார்ப்பதில்லை என்று வாய்கிழிய பசப்பும் இந்துத்துவ கும்பல் எந்தளவுக்குப் பொய்யர்கள் என்பதற்கு இந்தக் குதிரை ஊர்வலம் ஒரு சாட்சி.

தலித்துகள் திருமணம் செய்து கொள்வதென்றால் மணமகனை கிராமத்துக்குள் கால் நடையாக நடத்தியே அழைத்து வர வேண்டும். ஒரு வேளை வசதி படைத்த தலித்தாக இருந்தால், காரில் வரலாம் – கார் பிரச்சினையில்லை, குதிரை தான் பிரச்சினை. ஏனெனில், வட மாநிலத் திருமணச் சடங்குகளில் மணமகன் குதிரையில் வருவது வெறும் சடங்கு மாத்திரமல்ல, அது ஆதிக்க சாதித் திமிரின் அடையாளம்.

ராமதாஸ்
தலித் இளைஞர்கள், ஜீன்ஸ் பேண்ட், கூலிங் கிளாஸ் போடுவது பா.ம.க சாதிவெறியர்களுக்கு பிடிக்காது.

நமது ஊரில் தலித் இளைஞர்கள், ஜீன்ஸ் பேண்ட், கூலிங் கிளாஸ் போடுவது பா.ம.க சாதிவெறியர்களுக்கு பிடிக்காது. ஆதிக்க சாதி வாழ்வில் இருக்கும் வசதிகள் மட்டுமல்ல, சடங்குகளும் கூட தாழ்த்தப்பட்ட சாதிகளுக்கு சொந்தமில்லை என்பதே பார்ப்பனியத்தின் புனிதம். இந்த புனிதம் கேள்விக்குள்ளாக்கப்படும் போது அங்கே மிகப்பெரும் கலவரம் நடக்கிறது.

மத்திய பிரேதசத்தின் பக்கத்து மாநிலமான ராஜஸ்தானில், கடந்த 15 நாட்களில் மாத்திரம் குதிரையில் வந்த தலித் மணமகனை சாதி இந்துக்கள் தாக்கியதாக 20 புகார்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன என்கிறார் ராஜஸ்தான் மாநில தலித் உரிமைகளுக்கான மையத்தின் இயக்குனர் சதீஷ் குமார். பதிவு செய்யப்பட்ட புகார்களே 15 என்றால், சமூக ஒடுக்குமுறைக்கு அஞ்சி பதியாமல் விடுபட்ட சம்பவங்கள் நிச்சயம் அதிகமாகவே இருக்கும்.

இச்சம்பவம் குறித்து டைம்ஸ் ஆப் இந்தியா பத்திரிகையிடம் தனது கருத்தை தெரிவித்த தலித் செயல்பாட்டாளரான சந்திர பான் பிரசாத் (தலித் மில்லியனர்கள் நூலின் ஆசிரியர்), “பல தலித் குடும்பங்கள் தமது அத்தியாவசிய அடிப்படை தேவைகளை தற்போது நிறைவேற்றிக் கொண்டு விட்டதால், சுய மரியாதைக்கான போராட்டங்களை முன்னெடுத்திருப்பதையே இந்தச் சம்பவம் மெய்ப்பிக்கிறது. நாம் இப்போது சாதி அமைப்புக்கு எதிரான போராட்டத்தின் இரண்டாம் கட்டத்திற்கு வந்துள்ளோம். இது உண்மையிலேயே மகிழ்ச்சிக்குரியதாகும்” என்று தெரிவித்துள்ளார்.

புதிய பொருளாதாரக் கொள்கைகள் அமலாக்கப்பட்ட பின், கிராமப்புற விவசாயப் பொருளாதார கட்டுமானம் தளர்ந்து போயுள்ளது. கூட்டம் கூட்டமாக கிராமப்புறங்களில் இருந்து நகரங்களுக்கு வந்து விழும் மக்களில் கணிசமானவர்களாக நிலமற்ற விவசாயக் கூலிகளான தலித்துகள் உள்ளனர். இது சாதிய மலைப்பாம்பின் இறுக்கத்தை ஏதோ ஒரு வகையில் அவர்கள் எதிர்த்து போராடுவதற்கு தூண்டுகிறது.

சாதிய வன்கொடுமை
இரண்டு பத்தாண்டுகளுக்கு முன்பு சாதிய வன்கொடுமைகளை எதிர்த்து நிற்பதோ, குரல் கொடுப்பதோ கிராமப்புறங்களைச் சேர்ந்த தலித் மக்களின் கற்பனைகளுக்கு அப்பாற்பட்டது.

ஆசிய பாணி சொத்துடைமை வடிவத்தை அடிப்படையாகக் கொண்ட, முற்றிலும் சுயசார்பான கிராம பொருளாதார உற்பத்தி முறையில் பன்னெடுங்காலமாக உறைந்து போயிருந்த இந்திய சமூகத்தில் கிழக்கிந்திய கம்பேனியின் வருகையும் அதைத் தொடர்ந்த வெள்ளைப் பேரரசின் ஆட்சியும் ஏற்படுத்திய சலனத்திற்குப் பின், புதிய பொருளாதாரக் கொள்கை ஏற்படுத்தியிருக்கும் தாக்கம் கவனத்திற்குரியது என்பதில் சந்தேகமில்லை.

முன்பு தங்களது வாழ்வுக்கும், பிழைப்புக்கும் உள்ளூர் ஆதிக்க சாதி ஆண்டைகளைச் சார்ந்திருந்த நிலமற்ற தலித் மக்கள், தற்போது அந்தப் பொருளாதாரச் சார்பு நிலையிலிருந்து ஓரளவுக்கு விடுவிக்கப்பட்டுள்ளனர். இரண்டு பத்தாண்டுகளுக்கு முன்பு சாதிய வன்கொடுமைகளை எதிர்த்து நிற்பதோ, குரல் கொடுப்பதோ கிராமப்புறங்களைச் சேர்ந்த தலித் மக்களின் கற்பனைகளுக்கு அப்பாற்பட்டது.

அப்படி ஆதிக்க சாதித் திமிரின் முன் மண்டியிட மறுப்பவரை ஊர்விலக்கம் செய்தால் அது ஏறக்குறைய பட்டினி போட்டு கொஞ்சம் கொஞ்சமாக கொல்லும் தண்டனையாகவே இருக்கும். தற்போதோ நகரங்களில் கிடைக்கும் கூலி வேலைகள், ஒரு வேளை கஞ்சிக்காவது உத்திரவாதமளிக்கின்றன. இதுவே இத்தகைய தீண்டாமை எதிர்ப்பு போராட்டங்களின் அடிப்படையாக இருக்கிறது.

அதே நேரம் இதன் வரம்பைத் தாண்டி போராட்டங்கள் வளர்வதில்லை.

புலம்பெயர் தொழிலாளர்கள்
கூலிகளாக வந்து விழும் இம்மக்கள் புதிய சூழ்நிலையில் கிள்ளுக்கீரைகளாகவே பயன்படுத்தப்படுகிறார்கள்.

ஒரு தலித் தனது திருமண ஊர்வலத்திற்கு விரும்பியபடி குதிரையில் வர ’சுதந்திரம்’ கிடைத்த பின்னும் அறுபது ஆண்டுகள் ஆகியுள்ளது என்பது ஒரு பக்கம் இருக்கட்டும். கடந்த இருபதாண்டுகளில் நடந்துள்ள பொருளாதார மாற்றங்கள் தலித்துகளுக்கு புதிதாக எதையும் வழங்கி விடவில்லை.

கிராமங்களில் இருந்து விசிறியடிக்கப்பட்டு நகரங்களுக்கும் பெருநகரங்களுக்கும் கூலிகளாக வந்து விழும் இம்மக்கள் புதிய சூழ்நிலையில் கிள்ளுக்கீரைகளாகவே பயன்படுத்தப்படுகிறார்கள். நகர்ப்புற சேரிகளிலோ நடைபாதைகளிலோ ஒண்டிக் கொள்ளும் இவர்களின் உழைப்பை மொத்தமாகச் சுரண்டிக் கொள்ளும் நகரம், தேவையில்லாத போது இவர்களைத் தூக்கியெறியத் தயங்குவதில்லை.

தர்மபுரி நத்தம் காலனியில் இருந்து கூலிகளாக பெங்களூருவுக்குச் சென்று சம்பாதித்த பணத்தில், அவர்கள் பெங்களூருவில் வீடுகள் கட்டுவதில்லை – தங்கள் சொந்த கிராமத்திலேயே கட்டுகிறார்கள். பீகார், உத்தரபிரதேசம், ராஜஸ்தான், மத்திய பிரதேசம், ஒரிசா, மேற்கு வங்கம், சத்தீஸ்கர் மற்றும் வட கிழக்கு மாநிலங்களில் இருந்து இந்தியாவின் குறுக்கும் நெடுக்குமாக நடக்கும் மக்களின் இடப்பெயர்வு உண்மையில் மகிழ்ச்சிக்குரிய நடவடிக்கைகளாக இல்லை.

அந்த மக்கள் இன்னமும் தமது வேர்களைத் தங்கள் சொந்த கிராமத்திலேயே விட்டு வைத்துள்ளனர். நகரம் என்பது அவர்களைப் பொருத்தவரை கால் வயிற்றுக் கஞ்சிக்கு மட்டுமே – அதுவும் தற்காலிகமாக – வழியேற்படுத்திக் கொடுத்துள்ளது. அமைப்பு சாராத் துறைகளில், நிரந்தரமற்ற வேலைகளில் (வாட்சுமேன்களாக, சுகாதாரப் பணியாளர்களாக, ஓட்டுனர்களாக, கட்டுமானத் துறை கூலிகளாக) உதிரிப் பாட்டாளிகளாக இம்மக்களின் உழைப்பை சுரண்டிக் கொள்ளும் நகரம், பின்னர் இவர்களைத் தூக்கி வெளியே எரிகிறது.

சாதிய ஒடுக்குமுறை
தனது கலாச்சாரத்தை உயர்த்திப் பிடிப்பதற்கோ, தனது பாரம்பரியமான நடைமுறைகளைப் பின்பற்றுவதற்கோ வாய்ப்பில்லை.

இடப்பெயர்வு என்பது பொதுவில் வலி மிக்கதென்றாலும் குறிப்பாக தலித்துகளைப் பொருத்தவரை அது பெரும் துன்ப துயரத்தை ஏற்படுத்துவதாகவே உள்ளது. நாட்டுப்புறத்தில் சாதிப்படிநிலையில் மேலான நிலையில் உள்ள ஒருவர் நகரத்திற்கு கூலியாக வந்தாலும், தனது அடுத்த தலைமுறையை நகரமயத்திற்கு ஏதுவானவர்களாக தயாரிப்பதற்கு சொந்த ஊரில் இயல்பான ஒரு அடிப்படை உள்ளது. ஆதிக்க சாதியிலிருந்து நகரங்களுக்கு வரும் சிறு விவசாயிகள் அரசு, அரசியல் மட்டங்களில் சொந்த சாதித் தொடர்புகள் உள்ளவர்களாக இருக்கிறார்கள். ஏழைகள் என்பதைத் தவிர சமூக ரீதியிலான தீண்டாமையை அவர்கள் சந்திப்பதில்லை.

தலித்துகளைப் பொறுத்தவரை அவர்கள் இவ்விரண்டு உலகங்களிலும் வேண்டாதவர்களாகவே நீடிக்க வேண்டியுள்ளது. கொதிக்கும் எண்ணெய்க் கொப்பறைக்குத் தப்பி, எரியும் அடுப்பில் விழும் நிலை. இரண்டு உலகத்தின் வளங்களின் மேலும் அவர்களுக்கு உரிமை கிடையாது.

அடுத்து, நகரமயத்திற்குப் பின் பார்ப்பனிய சாதிய கொடுங்கோன்மை முந்தைய காலங்களைப் போல் கச்சாவாக இல்லாமல், மேலும் நுணுக்கமான தளங்களுக்குச் சென்றுள்ளது.

எப்படியோ முட்டி மோதி, தலையை அடமானம் வைத்தாவது தனது பிள்ளையை படிக்க வைக்கும் பாக்கியம் ஆயிரத்தில் ஒரு தலித்துக்கு வாய்க்கலாம். நகரத்தில் வேலைக்கு வருபவர், தனது சாதி அடையாளத்தை மறைத்துக் கொள்ள வேண்டிய நிலை தான் உள்ளது. தனது கலாச்சாரத்தை உயர்த்திப் பிடிப்பதற்கோ, தனது பாரம்பரியமான நடைமுறைகளைப் பின்பற்றுவதற்கோ வாய்ப்பில்லை. ஏன், ஒரு தனியார் நிறுவனத்தின் உணவுக் கூடத்தில் நிம்மதியாக உட்கார்ந்து மாட்டுக்கறி பிரியாணியையோ நல்ல கருவாட்டையோ கூட தின்ன முடியாது. ஒன்றரையணா கருவாடு தனது அருமையான மணத்தோடு சேர்த்து ஆயிரம் குத்தல் பார்வைகளையும், ஒதுக்குதல்களையும் கூட்டி வந்து தலையில் சுமத்தி விடும்.

ஐ.டி நிறுவன சாதி
‘இவன் வேறு – நாம் வேறு’ என்பது போன்ற ஒரு படிமத்தை உண்டாக்கியுள்ளனர்.

பெங்களூருவில் ஐடி நிறுவனம் ஒன்றில் பணிபுரியும் இளைஞன், பிறப்பால் தலித். அவனது அலுவலகத்தில் உடன் பணிபுரிபவர்கள் நீண்ட முயற்சிகளுக்குப் பின் அவனது சாதி இன்னதென்று கண்டுபிடித்து விட்டார்கள். அதன் பின் அவர்களின் நடவடிக்கைகளில் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. முன்பு ஒரே மேசையில் அமர்ந்து சாப்பிடும் போது, இவனது டப்பாவில் உரிமையோடு  கையை விட்டு சாப்பாட்டை எடுப்பது, இவனை அவ்வாறு எடுக்க அனுமதிப்பது என்று இருந்தவர்கள் மாறியுள்ளனர்.

குழு விவாதங்களில், முரண்பாடான சிக்கலான நிலைமைகளில், இவன் ஏதாவது ஒரு தீர்வைச் சொன்னால் அதை அந்தத் தளத்தில் வைத்து எதிர்கொள்ளாமல் ஏளனமாக பார்ப்பது, எல்லோரும் கூடி இருக்கும் போது சம்பந்தமில்லாமல் கிராமத்தில் உனது பெற்றோர்கள் என்ன செய்கிறார்கள் என்று விசாரித்து, இவன் சொல்லத் தயங்குவதைப் பார்த்து இரசிப்பது என்று கண்ணுக்குத் தெரியாத ஒதுக்குதல்கள் ஆரம்பித்தன. மெல்ல மெல்ல தனிமைப்பட்டு குறுகிப் போயிருக்கிறான். வேலை செய்பவர்கள் உணவகத்தில் ஓய்வாகக் கூடி வேடிக்கையாக பேசும் போது கூட, “ஏன் மச்சி.. உங்காளுங்க ஈசல் பூனையெல்லாம் திம்பாங்களாமே.. நீ சாப்ட்ருக்கியாடா?” என்பது போல் விளையாட்டாக கலாய்ப்பதைப் போல் கேட்டு ‘இவன் வேறு – நாம் வேறு’ என்பது போன்ற ஒரு படிமத்தை உண்டாக்கியுள்ளனர்.

ஒன்று, பார்ப்பனப் பொதுக் கலாச்சாரத்தைப் போலியாக பின்பற்றி முடிந்தவரை நதிமூலம் ரிஷிமூலத்தை மறைத்துக் கொள்ள வேண்டும் – அல்லது, கூட்டத்தின் மத்தியில் கோமாளியாக நின்று, மிக நுட்பமான ஒதுக்குதல்களை எதிர்கொள்ள வேண்டும். ஒரு மனிதனின் தன்மானத்தின் மீது சாணி கரைத்து ஊற்றுவதைப் போன்ற இந்த நுண்மையான ஒதுக்குதல்கள் சாதி வன்கொடுமைச் சட்டப் பிரிவுகளுக்குள் அடக்க முடியாதவை. கிராமத்து ஆண்டைகள் செய்யும் ஒடுக்குமுறை அப்பட்டமாக இருப்பதால் அவை வழக்கு போடுவதற்கான அடிப்படைகளைக் கொண்டுள்ளன – நகரத்து ஆண்டைகளின் ஒதுக்குதல்களைப் புரிந்து கொள்ளும் அளவுக்கு இந்தியச் சட்டங்கள் இன்னும் ஜனநாயகமயமாக இல்லை.

பெரியார்
தென்னிந்தியாவைப் போலன்றி வட இந்தியாவில் சாதி ஆதிக்கம் – தீண்டாமையை எதிர்த்த போராட்டங்கள் – தலைவர்கள் குறைவு

என்றாலும், நகர்ப்புறங்களுக்கும் கிராமப்புறங்களுக்கும் இடையே அலைக்கழிக்கப்படும் இந்த நிலை தலித் மக்களுக்கு இன்னொரு உலகத்தையும், கொஞ்சம் சுயமரியாதையான ஜனநாயகத்தையும் அறிமுகம் செய்துள்ளது. அதனடிப்படையிலிருந்தே அங்கொன்றும் இங்கொன்றுமாக கலகக்குரல்கள் ஒலிக்கத் துவங்கியுள்ளன.

தென்னிந்தியாவைப் போலன்றி வட இந்தியாவில் சாதி ஆதிக்கம் – தீண்டாமையை எதிர்த்த போராட்டங்கள் – தலைவர்கள் குறைவு. இதுவே இந்துமதவெறியரின் பலமும் கூட. இந்தியாவின் அனைத்து பிற்போக்குத்தனங்களுக்கும் இந்த வட இந்திய மாநிலங்கள்தான் கோட்டையாகத் திகழ்கின்றன.

அந்த வகையில் பவன் மால்வியாவின் குதிரை ஊர்வலம், நாம் படித்த நாவல்கள், கௌபாய் படங்களை விட முக்கியமானது.

–    தமிழரசன்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க