privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புமறுகாலனியாக்கம்தொழிலாளர்கள்கோவை: போராட்டக் களத்தில் நக்சல்பாரி எழுச்சி நாள்

கோவை: போராட்டக் களத்தில் நக்சல்பாரி எழுச்சி நாள்

-

எம்பெஸ்ட் தொழிலாளர்கள் கைது..!

சுமார் இரண்டு மாதங்களாக தொடர்ந்து கொண்டிருக்கிறது எம்பெஸ்ட் கம்பெனி தொழிலாளர்களின் போராட்டம். நிரந்தரமாக்குதல், போனசு, மாதச் சம்பளம் போன்ற மிக மிக அடிப்படையான உரிமைகளுக்காகக் கூட கடுமையான போராட்டங்களை சந்திக்க வேண்டிய நிலை.

பெஸ்ட் பம்ப்ஸ் முதலாளி ஸ்ரீப்ரியா வீட்டின் முன்பு குழந்தைகள் மனைவிகளுடன் குடும்பமாக வாரக்கணக்கில் அமர்ந்திருக்கிறார்கள் தொழிலாளிகள். தினசரி ஒரு அற்பப் பார்வையை வீசியபடி கடந்து போய்க் கொண்டும் வந்து கொண்டேயிருந்தார் ஸ்ரீப்ரியா. ஜூன் 1-ம் தேதி அவரை வெளியே போக விடாமல், “எங்களுக்கு பதில் சொல்லிவிட்டு போங்க..” என வழியை மறிக்க

கோவை பெஸ்ட் தொழிலாளர் கைது
சி‌.ஆர்‌.ஐ போன்ற கார்பரேட் முதலாளியை அல்லது பெஸ்ட் பம்ப்ஸ் போன்ற முதலாளித்துவ கொடுங்கோன்மைக்கோ எதிராக பயன்படுத்த ஒரே ஆயுதம் பாட்டாளி வர்க்கத்தின் முன்னணிப் படையான நக்சல்பாரிக் கட்சிதான்.

இத்துணை வாரமாக, “என்னடா இவங்க., ஒரு முடிவும் எடுக்க மாட்டேங்குறாங்க, இவங்க ஏதாவது முடிவெடுத்தா தானே நாம ஏதாவது ஒரு முடிவு எடுக்க முடியும்” என்று எண்ணியவாறு தேவுடு காத்திருந்த காவல் துறை “கெடச்சுதுடா சான்ஸ்: என்று எண்ணியவாறு வழக்கம் போல தனது ஒருதலைப் பட்சமான வழியில் சட்டம் ஒழுங்கை நிலை நாட்டியது.

  • முறையாக தொழிலாளர் நலக் கோர்ட்டில் கேஸ் போட்டு, “ஏ‌.சி‌.எல் க்கு வா, டி‌.சி‌.எல்.க்கு வா” எனக் கூப்பிட்டு கூப்பிட்டு ஓய்ந்தும் வராமல் இருப்பது சட்ட விரோதம் இல்லை.
  • கலெக்டரிடம் மனு கொடுத்து பேச்சு வார்த்தைக்கு அழைத்தும் வராமல் இருப்பது சட்ட விரோதம் இல்லை.
  • 20 வருடங்களாக தினக்கூலியாகவே வைத்திருந்து இ‌.எஸ்‌.ஐ, பி‌.எஃப் என எந்த உரிமையும் கொடுக்காமல் சட்டத்தையும் நியாயத்தையும் தனது உரோமத்துக்கு சமானமாக அலட்சியப்படுத்தியது சட்ட விரோதம் இல்லை.

ஆனால், இவ்வளவு சுமையையும் பொறுத்துக் கொண்டு சுமார் இரண்டு மாதங்களாக குடும்பமாக போராடியதையும் இந்த நொடி வரை போராடிக் கொண்டிருப்பதையும் அரசமைப்பின் அனைத்து உறுப்புகளும் அவாளுக்கு ஆதரவாக நிற்பதை பார்த்துக் கொண்டிருந்து விட்டு இப்போது இப்படி மறித்து, “எங்களுக்கு ஒரு நியாயஞ் சொல்லிட்டு போ..” என்று கேட்டது சட்ட விரோதமாம்.

குழந்தைகள் பெண்களோடு சேர்த்து சுமார் 90 பேர் கைதாகினர். அதில் பெண்கள் குழந்தைகளை தவிர்த்து விட்டு சுமார் 33 பேரை மாஜிஸ்திரேட் முன்னால் ஆஜர்படுத்தி அதில் முன்னணியாளர்களான தோழர்கள் சரவணன், மகேந்திரன், சுரேஷ் மற்றும் நந்தகுமார் ஆகிய நான்கு பேர் மீது வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்திருக்கிறது போலீசு.

பல முறை கூறினாலும் இது மறுக்க முடியாத தவிர்க்க முடியாத உண்மை : இது போன்ற தொடர் போராட்டங்களை பாரம்பரியமான சங்கங்களை வைத்துள்ள தேசியக் கட்சிகளோ அல்லது இன்ன பிற எந்த அரசியல் கட்சியோ நடத்த முடியாதது.

சி‌.ஆர்‌.ஐ போன்ற கார்பரேட் முதலாளியை எதிர்ப்பதற்கோ அல்லது பெஸ்ட் பம்ப்ஸ் போன்ற மிக தீவிரமான முதலாளித்துவ கொடுங்கோன்மைக்கோ எதிராக பயன்படுத்த ஒரே ஆயுதம்தான் இருக்கிறது. அது, பாட்டாளி வர்க்கத்தின் முன்னணிப் படையான நக்சல்பாரிக் கட்சிதான்.

தமிழ்நாட்டில் மட்டுமே இயங்கக் கூடிய அதிலும் போலிக் கம்யூனிஸ்டுகளை போல மூலைக்கு மூலை கிளை இல்லாத இந்த புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் அடியை சமாளிக்க முடியாமல் எஸ்‌.ஆர்‌.ஐ கம்பெனியில் தனது சங்கத்தை கலைக்க தயாராகி விட்டது சி‌.ஐ‌.டி‌.யு.

“அவங்கள மாதிரியே ஒப்பந்தம் போடணும்னா அவங்க சங்கத்துக்கே போய்க்கங்க..!” என பொதுக் குழுவிலேயே அறிவித்தும் விட்டார்கள். நமது சங்கத்தின் உறுப்பினர் எண்ணிக்கையும் உயர்ந்து கொண்டிருக்கிறது.

இது எப்படி சாத்தியமாகிறது? சி‌.ஆர்‌.ஐ மற்றும் பெஸ்ட் பம்ப்ஸ் மாதிரியான தொடர் போராட்டங்கள் எப்படி சாத்தியம். எப்படியெனில், இது நக்சல்பாரிப் படை.

ரசியப் புரட்சியை நடத்தி முடித்த லெனினியத்தின் வேலை நடை ரசியப் புரட்சிகர வீச்சு என்றால்., இங்கு புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணி யின் ரத்த ஓட்டமாக இயங்குவது நக்சல்பாரிப் புரட்சித் துடிப்பு. அதே நக்சல்பாரிப் புரட்சித் துடிப்பு தான் இந்து மதவெறியின் கழுத்தை நெறித்தவாறே முதலாளித்துவத்தின் நெற்றியில் துவக்கை நிறுத்துகிறது.

இப்போது இது சிறுபான்மையாக இருக்கலாம். ஆனால் இந்த நாட்டில் புரட்சியின் அடிநாதம் நக்சல்பாரிப் புரட்சித் துடிப்பே. இங்கு இன்னும் ஏராளமான வெற்றிகளை ஈட்டக் காத்திருக்கும் பாட்டாளி வர்க்கத்தின் முன்னணிப் படையே இந்த கட்சி. இந்த நாட்டின் தேசபக்தர்களுக்கும் தொழிலாளி வர்க்கத்துக்கும் உணர்வும் உற்சாகமும் ஊட்டிக் கொண்டிருக்கும் ஒரே சொல் நக்சல்பாரி. இந்த போராட்டத்தின் உள்ளுணர்வு நக்சல்பாரி.

தகவல்

புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி,
கோவை

மே 25 நக்சல்பாரி பேரெழுச்சி நாள்

குமாரவேல்
நக்சல்பாரி பாதைதான் கோவைத் தொழிலாளி வர்க்கத்துக்கு ஏற்ற பாதை.

தவடைப்புக்கு எதிராக கடந்த 60 நாட்களுக்கு மேலாக போராடிக் கொண்டிருக்கும் சி‌.ஆர்‌.ஐ கம்பெனி நுழைவாயில் முன் 25-05-2015 அன்று மாலை 5 மணிக்கு நக்சல்பாரி பேரெழுச்சி நாள் கூட்டம் புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி கோவைக் கிளையால் நடத்தப்பட்டது. நிகழ்வன்று காலை 10 மணிக்கு கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சி‌.ஆர்‌.ஐ மற்றும் பெஸ்ட் நிறுவன தோழர்கள் சுமார் 250 பேர் திரண்டு சென்று மனு நீதி நாளை போராட்டமாக மாற்றி மாவட்ட ஆட்சித் தலைவரை தூங்க விடாமல் தட்டி எழுப்பி விட்டு வந்தனர்.

நிகழ்ச்சிக்கு மாவட்டத் தலைவர் தோழர் குமார வேல் தலைமை தாங்கினார். “நக்சல்பாரி சங்கமான பு.ஜ.தொ.மு வில் இணைந்த காரணத்தால் நாங்கள் சுயமரியாதை பெற்றோம். எங்கள் வாழ்நாளிலேயே கிடைக்காத உணர்வுகளை எல்லாம் பெற்றோம். பு.ஜ.தொ.மு வில் இணையாமல் இருந்தால் சி‌.ஆர்‌.ஐ முதலாளியால் சூறையாடப்பட்டிருப்போம். நக்சல்பாரி பாதைதான் கோவைத் தொழிலாளி வர்க்கத்துக்கு ஏற்ற பாதை” என்று முழங்கினார்.

பு.ஜ.தொ.மு மாநில துணைத் தலைவர் விளவை இராமசாமி தனது சிறப்புரையில் நக்சல்பாரியின் மாண்புகளை பட்டியலிட்டு பேசினார்.

“சில ராகங்கள் பாடும் போது தான் இனிமையாக இருக்கும். ஆனால் பெயரை கேட்டாலே இனிக்கும் ராகம், உச்சரித்தாலே உற்சாகம் தரும் ராகம் நக்சல்பாரி.

இமயத்தின் அடிவாரத்தில் இந்தியாவின் இதயத்தின் இடது மூலையில் மேற்கு வங்க மாநிலத்தில் டார்ஜிலிங் மாவட்டத்தில் சிலிகுரி வட்டத்தில் சுமார் 300 சதுர மைல் பரப்பளவில் நக்சல்பாரி மற்றும் அதை சுற்றியுள்ள கிராமங்களில் இந்த ராகம் 1967 மே 25-ல் இசைக்கப்பட்டது. வில் அம்பு போன்ற கருவிகள் துணையுடன் ஆளும் வர்க்கங்களான ஜோதிதார் எனப்படும் நிலப்பண்ணைகளுக்கு எதிராகவும் அவர்களின் வேட்டை நாய்களான போலீசுக்கும் ராணுவத்துக்கும் எதிராக முழங்கியது நக்சல்பாரி.

இதன் இசை கேட்ட தோழர் மாவோ இந்தியப் புரட்சி என்னும் வசந்தத்தின் இடி முழக்கம் என்று வரவேற்றார்.

உழுபவனுக்கு நிலம்” “உழைப்பவனுக்கே அரசியலதிகாரம்” என்கிற நக்சல்பாரியின் பாடல் கடந்த 40 ஆண்டுகளாக இந்திய ஆளும் வர்க்கத்தை அச்சுறுத்திக் கொண்டிருக்கிறது.

கடந்த 10 ஆண்டு காலமாக உலக வங்கியின் கைக்கூலி மன்மோகன் சிங், ‘உள்நாட்டு பாதுகாப்புக்கு மிகவும் அச்சுறுத்தலாக இருப்பவர்கள் நக்சல்கள்’ என ஓயாமல் ஒப்பாரி வைத்தார்.

சத்தீஸ்கரில் நடந்த பொதுக் கூட்டத்தில் பேசிய பாசிச மோடி, ‘மாவோயிஸ்டுகள் துப்பாக்கிகளை கீழே போட்டுவிட்டு ஏர்க்கலப்பையை தூக்க வேண்டும்’ எனப் பேசியிருக்கிறார்.

ஏர்க்கலப்பையை தூக்கி விவசாயம் செய்துவிட்டு விளைந்த பொருளுக்கு விலை கிடைக்காமல் தூக்கில் தொங்க வேண்டும் என்பதுதான் மோ(ச)டியின் அறிவிப்பு.

1967-ம் ஆண்டு மே மாதம் 25-ம் தேதி நடந்த ஆயுதந் தாங்கிய பேரெழுச்சியின் முக்கியச் செய்தியே அரசியல் அதிகாரத்தை கைப்பற்றுவதற்கான போர்ப்பிரகடனமாக இருந்த காரணத்தால்தான் ஆளும்வர்க்கங்கள் இன்று வரை அஞ்சி நடுங்கிக் கொண்டுள்ளனர்.

இந்த போர்ப் பிரகடனத்தின் சிறப்பு என்னவென்றால்

  • இது ஒரு ஆயுதம் தாங்கிய பேரெழுச்சியை குறிக்கிறது.
விளவை ராமசாமி
“ஏர்க்கலப்பையை தூக்கி விவசாயம் செய்துவிட்டு விளைந்த பொருளுக்கு விலை கிடைக்காமல் தூக்கில் தொங்க வேண்டும் என்பதுதான் மோ(ச)டியின் அறிவிப்பு.”
  • நாடாளுமன்ற போலி ஜனநாயகத்திற்கு வெளியே உழைக்கும் மக்களை அரசியல் அதிகாரத்தை வென்றெடுக்கின்ற போராட்டத்திற்கு அணிதிரட்டும் மையமாக விளங்குகிறது.
  • நாடாளுமன்ற பன்றித் தொழுவத்தில் விழுந்து புரளும் ஒட்டுக் கட்சிகளை காரி உமிழ்ந்தது.
  • எல்லாவற்றுக்கும் மேலாக அதிகார வர்க்க ராணுவ அரசமைப்பை தாக்கித் தகர்ப்பதற்கான பேராயுதமாக விளங்கியது.
  • உழைக்கும் மக்களை நேரடியாக அதிகாரத்தை கைப்பற்றுவதற்கான ஒரே பாதையை காட்டியது.

நக்சல்பாரி பேரெழுச்சியின் போர்ப்பிரகடனத்தை தோழர் மாவோ தலைமையிலான அரசால் வழிநடத்தப்பட்ட சீனாவின் பீகிங் வானொலி சீரிவரும் இந்தியப் புரட்சி சிறுத்தையின் முன்பாதம் எனவும், போலி மார்க்சிஸ்டுகளை “மக்களை ஏய்க்கும் எதிர் புரட்சியாளர்களின் கருவி” என அம்பலப்படுத்தியது.

நக்சல்பாரியில் எழுந்த இந்த பேரெழுச்சி, உழைக்கும் மக்களுக்கு உண்மையான கட்சியாக யார் இருக்க முடியும் என்பதை பறைசாற்றியது. அந்த வகையில் இப்பேரெழுச்சி ஓர் உண்மையான புரட்சிகரமான கம்யூனிச கட்சிக்கு அடித்தளமிட்டது. இதன் தாக்கம் நாடு முழுவதும் இருந்தது.

பல்லாயிரக்கணக்கான விவசாயிகளும் மாணவர்களும் சொந்த வாழ்க்கை மீதான பிடிப்பினைத் துறந்து புரட்சிகர இயக்கத்தில் இணைந்தனர்.

கோவையில் தோழர் எல்.அப்பு தலைமையில் சி‌.எஸ்‌.டபில்யு, காளீஸ்வரா சோமசுந்தரா மில் தொழிலாளர்கள் 1500 பேர் ஊர்வலமாகச் சென்று டவுன் ஹாலில் கூட்டம் நடத்தி நக்சல்பாரி போராட்டத்துக்கு தங்கள் ஆதரவை தெரிவித்தனர்.

இவர்களை நக்சல்பாரிகள் என்றும் நக்சலைட்டுகள் என்றும், தீவிர கம்யூனிஸ்டுகள் என்று ஆளும் வர்க்கம் முத்திரை குத்தி வேட்டையாடத் துவங்கியது. நக்சல்பாரிகளின் கட்சியாகிய இந்தியப் பொதுவுடைமைக் கட்சி (மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட்) 1969-ம் ஆண்டு ஆசான் லெனினின் 100-வது பிறந்த நாளான ஏப்ரல் 22-ல் உதயமானது.

விளவை ராமசாமி
“நக்சல்பாரியில் எழுந்த இந்த பேரெழுச்சி, உழைக்கும் மக்களுக்கு உண்மையான கட்சியாக யார் இருக்க முடியும் என்பதை பறைசாற்றியது. “

நக்சல்பாரியின் சிறப்பே புதிய பாதையை உருவாக்கி சாதனை படைத்தது ஆகும். போலி பாராளுமன்றப் பாதையை திரை கிழித்தது நக்சல்பாரி. சுரண்டல் ஒடுக்குமுறைகளை எதிர்க்க தன்னை தவிர வேறு மார்க்கம் இந்தியாவில் இல்லை என ஒளிச் சுடராக எழுந்து நின்றது, நிற்கிறது நக்சல்பாரி.

நக்சல்பாரியின் பின்னடைவுகள் எல்லாம், அதன் தோல்விகள் எல்லாம் நடை பழகும் குழந்தை தடுமாறி கீழே விழுவதை போன்ற அழகுதான். மாபெரும் தியாகங்களை நிகழ்த்திய, கோரிய நக்சல்பாரிதான் புரட்சிகர ஆற்றல் முன்பு தோல்வியும் அழகுதான்.

இன்று ஆளும் வர்க்கத்தின் அரசுக் கட்டமைப்பு தோற்றுப் போய் திவாலாகி எதிர்நிலை சக்திகளாக மாறி ஆளும் அருகதையற்று விட்டது. அதன் பாதிப்பால் தொழிலாளர்களான நாம் தெருவில் நிற்கிறோம்.

  • கதவடைப்பு செய்ய வேண்டுமானால் அரசிடம் அனுமதி வாங்க வேண்டும் என சட்டம் உள்ளது. சட்டத்தை மதிக்காமல் அனுமதி வாங்காமல் கதவடைப்பு செய்கிறான் முதலாளி. அரசின் கட்டுமான உறுப்புகள் முதலாளியை எதிர்த்து முனகக் கூட முடியவில்லை.
  • 480 நாட்கள் வேலை செய்தால் நிரந்தரம் செய்ய வேண்டும் என அரசின் ஒரு அங்கமான தொழிலாளர் துறை உத்தரவே போடுகிறது. ஒரு அரசு அதிகாரியின் உத்தரவுக்கு நீதித் துறை ஒரு காரணமும் கூறாமல் தடை போடுகிறது. பெஸ்ட் தொழிலாளர்களுக்கு கடந்த 20 ஆண்டுகளாக பி‌எஃப், இ‌எஸ்‌ஐ கூட பிடித்தம் செய்யாமல் அரசை ஏமாற்றுகிறார் முதலாளி.
  • அரசு கட்டமைப்பான தொழிலாளர் துறை; இ‌எஸ்‌ஐ கார்ப்பரேசன் வருங்கால வைப்பு நிதி நிறுவனம், மாவட்ட ஆட்சித் தலைவர் என எங்கு புகார் கொடுத்தாலும் எந்தவித நடவடிக்கையும் இல்லை.

முதலாளியின் முன் அரசு கட்டமைப்பு செயலிழந்து நிற்கிறது. ஆளும் தகுதியிழந்து விட்டது. இதனை அடித்து நொறுக்கினால்தான் தீர்வு என வெளிப்படையாகத் தெரிகிறது. நமது வாழ்வின் ஒவ்வொரு செயலிலும் கட்டமைப்பு நெருக்கடி தெரிகிறது. இதனை எதிர்த்து போராடக் கூட யாருக்கும் துப்பில்லை.

ஆனால், நக்சல்பாரிகளான நமக்கு இதனை எதிர்த்து போராடும் புரட்சிகர ஆற்றல் உள்ளது. போராடுவது மட்டுமல்ல மாற்று மக்கள் அதிகார அமைப்புகளை நிறுவும் ஆற்றலும் உள்ளது. எனவே, நாம் நமது குடும்பம், நமது வீதி, நமது ஊர் என எங்கும் நாங்கள் நக்சல்பாரிகள் என்று முழங்குவோம், இந்த நாட்டின் உண்மையான புதல்வர்கள், நக்சல்பாரிகள்தான்” என அறைகூவல் விடுப்போம் என முடித்தார்.

நக்சல்பாரி எழுச்சி நாள்
நக்சல்பாரி எழுச்சி நாள் கூட்டத்தில் ஆர்வத்துடன் தொழிலாளிகள்

நக்சல்பாரியின் வரலாற்றை முதன் முதலில் செவி மடுத்த தொழிலாளர்கள் பல்வேறு கேள்விகள் கேட்டனர். பொருத்தமான விடைகள் சொல்லப்பட்டன. இரண்டு மணி நேரம் நடந்த கூட்டம் தொழிலாளர்கள் மத்தியில் தேடலுக்கான புதிய திசைகள் திறந்து விட்டுள்ளன.

தகவல்
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி,
கோவை