Monday, March 30, 2020
முகப்பு மறுகாலனியாக்கம் தொழிலாளர்கள் தொழிலாளிகள் மீது ரவுடிகளை ஏவிய EMPKEE கொலைகார முதலாளி பெரியசாமி

தொழிலாளிகள் மீது ரவுடிகளை ஏவிய EMPKEE கொலைகார முதலாளி பெரியசாமி

-

போராடிய தொழிலாளிகள் மீது ரவுடிகளை ஏவி கொலைவெறியாட்டம் நடத்திய EMPKEE ஆலை முதலாளி ஓ.எம் பெரியசாமி

ம்பத்தூர் அருகே வானகரத்தில் அமைந்துள்ளது EMPKEE ஆலை. காற்றாலைக்கு உதிரி பாகங்கள் தயாரித்துக் கொடுக்கும் இவ்வாலையில் 48 நிரந்தரத் தொழிலாளர்களும் 100-க்கும் மேற்பட்ட ஒப்பந்தத் தொழிலாளர்களும் பணிபுரிகின்றனர். 4 யூனிட்களில், பல ஆண்டுகளாக உழைத்துக் கொடுக்கும் தொழிலாளிகள் பணிநிரந்தப்படுத்தாமல், கட்டற்ற சுரண்டலையும், உரிமை பறிப்பையும் நிரந்தரமாக செய்து வந்தார் ஓ.எம் பெரியசாமி. வெறும் ரூ 7,000-9,000 ஊதியத்தில் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த கொடுமையை அனுபவித்து வந்த தொழிலாளர்கள், இனியும் பொறுக்க முடியாதென புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியில் தங்களை இணைத்துக் கொண்டனர்.

‘தொழிற்சங்க ஜாம்பவான்கள்’ என்று சொல்லிக்கொள்ளும் தலைவர்களிடம், தொழிலாளர்கள் சென்று தஞ்சமடைந்திருந்தால் கிஞ்சித்தும் அச்சமடைந்திருக்க மாட்டார் திருவாளர் பெரியசாமி. சேர்ந்த இடம் நக்சல்பாரி சங்கம் என்பதால் கதி கலங்கி நின்றார் பெரியசாமி. உள்ளுக்குள் வயிறு கலங்கினாலும், “உட்றா, உட்றா சூனா பானா, உட்றா” என்று ஒன்றுமே நடக்காததைப் போல பாவனை செய்தார்.

15 வருடமாக உழைத்துக் கொடுத்த தொழிலாளிகளுக்கும் கூட ESI, PF போன்ற உரிமைகள் மறுக்கப்பட்டு, அடிமைகளைப் போல நடத்தப்பட்டு வந்ததை எதிர்த்து சட்ட பூர்வமான நடவடிக்கைகளை மேற்கொண்டது பு.ஜ.தொ.மு. தினந்தினம் ஏறி வரும் விலைவாசி உயர்வு, அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வு என தொடுக்கப்படும் தாக்குதலை எதிர்கொள்ள வேண்டுமென்றால், குறைந்தபட்ச ஊதியம் இல்லாது குடும்பம் நடத்த இயலாது. உயிர் வாழவே ஊதிய உயர்வு தேவை என்றாகிவிட்ட நிலையில் ஊதிய உயர்வு கோரி தொழிலாளர் உதவி ஆணையரிடம் கடந்த நவம்பர் மாதம் தொழிற்தாவா எழுப்பப்பட்டது.

தொழிலாளர் துறையை மயிரளவுக்கும் மதிக்காத எல்லா முதலாளிகளையும் போலவே பெரியசாமியும் மதிக்கவில்லை. “என் பொண்டாட்டி புள்ளலாம் சோத்துக்கே வழியில்லாம நடுத்தெருவுல நிக்குது சார்” என்ற வார்த்தையை மட்டும் சொல்லாமல் மற்ற எல்லா வகையிலும் ஆலை நட்டத்தில் இயங்குகிறது என்பதற்கு போலி ஆவணங்களைத் தயாரித்து கொடுத்து விட்டார் பெரியசாமி. ஆனால் உண்மையில் மூன்று ஷிஃப்ட்களிலும் தொடர்ச்சியாக உற்பத்தி செய்யப்பட்டு பல கோடி ரூபாயை சுருட்டி வருகிறார் பெரியசாமி. தொழிற்தாவாவில் சமரச முறிவறிக்கை கொடுத்து தனது கடமையை நிறைவு செய்து கொண்டார் உதவி ஆணையர்.

தொழிலாளர் போராட்டம்
தொழிலாளியை வேலைக்கு அனுமதிக்காததாலும், மின்சாரத்தை துண்டித்து அனைத்து தொழிலாளிகளுக்கும் வேலை தர மறுக்கும் நிர்வாகத்தை கண்டித்தும், உள்ளிருப்புப் போராட்டத்தினை துவங்கினர் தொழிலாளர்கள்.

இந்நிலையில் கடந்த மே மாதம் ESI உரிமை மறுக்கப்பட்ட நிலையில், கார்த்திக் என்கிற சங்கத்தின் செயற்குழு உறுப்பினர் மருத்துவ விடுப்பு எடுத்துள்ளார். விடுப்பு முடிந்து வேலைக்கு வந்த தொழிலாளியை ஒரு வாரம் கழித்து வருமாறும், மீண்டும் 10 நாட்கள் கழித்து வருமாறும் கூறி அலைக்கழித்துள்ளனர். கடைசியில் 25-ம் தேதியன்று வாய்மொழி உத்தரவாக வேலைக்கு அனுமதித்துள்ளனர்.

இதை ஏற்காத தொழிலாளர்கள் நேராக சென்று மேனேஜரை சந்தித்துள்ளனர். என்ன பிரச்சனை என்றே கேட்காமல் தொழிலாளர்களை மிரட்டி, ஆபாச வார்த்தைகளால் திட்டியுள்ளார் மேனேஜர். சுயமரியாதை உள்ள எவருமே செய்வதைப் போல, மேனேஜரை சிறைபிடித்து செய்த தவறுக்கு மன்னிப்பு கேட்கச் சொல்லியுள்ளனர் தொழிலாளர்கள். முதலாளிகளின் கொழுப்பால் ஊட்டி வளர்க்கப்பட்ட மேனேஜர், வழக்கம் போல எதுவும் உறைக்காமல் ஜந்துவைப் போலவே அமைதியாக நின்றுள்ளார். தொழிலாளியை வேலைக்கு அனுமதிக்காததாலும், மின்சாரத்தை துண்டித்து அனைத்து தொழிலாளிகளுக்கும் வேலை தர மறுக்கும் நிர்வாகத்தை கண்டித்தும், உள்ளிருப்புப் போராட்டத்தினை துவங்கினர் தொழிலாளர்கள்.

நிர்வாகத்தின் இந்த சட்டவிரோத நடவடிக்கையையும், தொழிலாளர் விரோதப் போக்கையும் கண்டித்து தொழிலாளர் துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஒரு சுமூகமான சூழலை உண்டாக்கும் பொருட்டு, தொழிலாளர் உதவி ஆணையர் 01-06-2015 அன்று பேச்சு வார்த்தைக்கு உத்தரவிட்டார்.

பேச்சுவார்த்தை தேதியை நோக்கி காத்திருந்த நேரத்தில் கடந்த 31-ம் தேதி இரவு 40 ரவுடிகள் ஆலையினுள்ளே புகுந்து தொழிலாளிகளை தாக்கியுள்ளனர். வானகரத்தில் பாண்டியன் ஹோட்டல் நடத்தி வரும் பெரியசாமியின் தம்பி முத்து, அ.தி.மு.க கவுன்சிலர் ஜி.எஸ். மணி தலைமையில் 40-க்கும் மேற்பட்ட கூலிப்படை ரவுடிகள் ஆலையில் நுழைந்தனர்.

ஸ்ரீபெரும்புதூர் ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவர் குட்டி என்ற வெங்கடேசன் தொழிலாளிகளின் போராட்டங்களை நசுக்க ரவுடிகளை ஏவுவதும், மிரட்டுவதும் செய்துவந்தார். இண்டெக்ரா என்கிற நமது சங்கத்தில் நடந்த உள்ளிருப்புப் போராட்டத்திலும் இதையே கையாள முயற்சி செய்து தோற்றுப் போய் அம்பலப்பட்டு, அ.தி.மு.க-வின் அடிப்படை உறுப்பினர் தகுதியே பறிக்கப்பட்டு இன்று பரிதாபகரமான நிலையில் உள்ளார். இதை அறியாமல் எப்படியும் ‘கெத்து’ காட்டி வட்டச் செயலாளர் பதவியை வாங்கிவிடலாம் என்ற போதையில் ரவுடிகள் போதையேற்றி அனுப்பியுள்ளார்.

ரவுடிகள் சுவரேறி குதித்து ஆலையினுள்ளே நுழைவதைக் கண்டதும் யுனிட் 1 -ல் இருந்த தொழிலாளிகள் சுதாரித்துக் கொண்டு 100-க்கு அழைத்து போலிசுக்கு தகவல் சொல்லியுள்ளனர். போலிசு வருவதை பார்த்த ரவுடிகள் அங்கிருந்த முன்னாள் செக்யூரிட்டியின் உதவியோடு, யூனிட் -4 க்கு சென்று தொழிலாளிகள் மீது கொலைவெறியாட்டம் நடத்தியுள்ளனர். போலிசிடம் இந்தத் தகவலை சொன்ன போதும், “யுனிட் -1 ல் பிரச்சனைனு தான் சொன்னாங்க இங்கதான் இருப்போம், நீ சொல்றதலாம் கேக்க முடியாது” என ‘காவல்துறை உங்கள் நண்பன்’ என்று எழுதப்பட்ட வேனின் அருகில் நின்று சொன்னார் உதவி ஆய்வாளர் கோபிநாத்.

தகவல் அறிந்ததும் பு.ஜ.தொ.மு மேற்கு மாவட்ட நிர்வாகிகளும், மாநிலப் பொருளாளர் தோழர் விஜயகுமாரும் ஆலைக்கு விரைந்துள்ளனர். காயமடைந்த தொழிலாளர்களை சென்னை KMC-யில் அனுமதித்துவிட்டு, சம்பவ இடத்தை ஆய்வு செய்தனர்.

உதவி ஆய்வாளர் கோபிநாத்திடம் சம்பவத்தை கூறிக்கொண்டிருக்கும் போதே, “நீங்களெல்லாம் ரவுடிகளா” என்று தோழர்களைப் பார்த்து கேட்டதோடு, மிக மோசமான முறையில் நடந்து கொண்டுள்ளார்.

“நீங்கள் தவறாக அணுகுகிறீர்கள்” என்று சுட்டிக்காட்டியபோதும் கேட்கவில்லை.

அப்போதே, வட்டச் செயலர் கனவில் வலம் வரும் கவுன்சிலர் ஜி.எஸ். மணியும், ரவுடிகளுக்கு வழிகாட்டிய முன்னாள் செக்யூரிட்டியும் வந்தனர். தொழிலாளிகள் இவர்கள் இருவரையும் அடையாளம் காட்டியும், எஸ்.ஐ கோபிநாத் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் “எங்களுக்கு எல்லாம் தெரியும்” என்றார். இதனால் எஸ்.ஐ கோபிநாத்தின் மீது சந்தேகம் ஏற்பட்டது. முதலாளி பெரியசாமி எஸ்.ஐ கோபிநாத்துக்கு படியளக்கும் ’பெரிய சாமியாக’ இருப்பாரோ என்று நாம் நினைப்பதற்குள், “ஆமாம், நான் முதலாளியோட கைக்கூலிதான்” என தன்னை அம்பலப்படுத்திக்கொண்டார் கோபிநாத்.

“இந்த சங்க செயலாளர் பேரு ரஜினிகாந்த் தானே? வேணும் அந்தாளுக்கு இப்படிதான் நடக்கும்” என்றார் கோபிநாத். நாம் இன்னும் புகார் கொடுக்காத நிலையில் சங்கச் செயலாளர் பெயரைச் சொல்லி, அவர் ரவுடிகளால் அடிபட வேண்டுமென எஸ்.ஐ கோபிநாத் விரும்புகிறார். பெரியசாமியின் விருப்பமும் அதுவே. ஆகவே இது திட்டமிட்டு நடத்தப்பட்ட கொலைவெறித் தாக்குதல் என தெளிவானது.

பு.ஜ.தொ.மு-வின் சட்ட ஆலோசகர் தோழர் பார்த்தசாரதி உடனடியாக காவல் உதவி ஆணையருக்கு தகவல் சொன்னதன் பேரில் அவர் வந்த விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டதன் பேரில், ஜி.எஸ் மணி மீதும், முதலாளியின் பெரியசாமியின் தம்பி முத்துவின் மீதும் புகார் பெறப்பட்டது.

தொழிலாளர்களின் நியாயமான கோரிக்கைகளும், உரிமைகளும் முதலாளிகளால் மறுக்கப்படுகிறது. தொழிற்தாவா எழுப்பினால் முதலாளிகள் தொழிலாளர் நலத்துறையை மதிப்பதில்லை. உரிமைகளை மறுப்பதோடு அதைக் கேட்கும் தொழிலாளர்களை பணியிடைநீக்கம், பணிநீக்கம், ரவுடிகளை வைத்து மிரட்டுவது என தொழிலாளர்களின் வாழ்க்கையை நாசப்படுத்துகின்றனர்.

மறுபுறம், தொழிலாளர் நலச் சட்டங்கள் இருந்தால் தானே அங்கே போவீர்கள் என்று, தொழிலாளர் நலச் சட்டங்களை முதலாளிகளுக்குச் சாதகமாக திருத்தச் சொல்கிறார்கள் முதலாளிகள். அரசோ அதையே முதல் வேலையாக செய்கிறது. 700 கோடி ரூபாய் நமது பணத்தில் 18 நாடுகளுக்குச் சென்று முதலாளிகளுக்கு அழைப்பு விடுக்கிறார் மோடி.

தொழிலாளர்களின் வாழ்க்கையோ படுபாதாள நிலையை நோக்கிச் சென்றுக் கொண்டிருக்கிறது. வேலையை தக்கவைத்துக் கொள்வதற்கான போராட்டம் என்பது போய் இன்று உயிரை காத்துக் கொள்ளவே போராட வேண்டிய நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளனர் தொழிலாளர்கள். முன்பு ஆசியாவிலேயே மிகப்பெரிய தொழிற்பேட்டை என்று பெயரெடுத்த அம்பத்தூர் தொழிற்பேட்டையில் இன்று நியாயமான உரிமைக்காக போராடினால் கூட வேலைநீக்கம், ரவுடிகளை வைத்துத் தாக்குவது என்ற அவல நிலையை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது.

சிறப்புப் பொருளாதார மண்டலங்களில் துவங்கிய இந்த ‘ரவுடிக் கலாச்சாரம்’ மெல்ல மெல்ல எல்லா முதலாளிகளாலும் கையாளப்படுகிறது. இதனாலெல்லாம் துவண்டு விடுமா தொழிலாளி வர்க்கம்?

நாட்டையே இயங்க வைத்துக்கொண்டிருக்கும் தொழிலாளி வர்க்கம் அதன் பலத்தை உணரவில்லை. அதன் பலத்தை தொழிலாளி வர்க்கத்துக்கு உணர்த்தும் வேலையைத்தான் புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி செய்து வருகிறது.

தோற்க பிறந்ததல்ல தொழிலாளி வர்க்கம், ஆளத் தகுதி வாய்ந்தது.

பலமான அமைப்பாக திரண்டு அடிமை விலங்கொடித்து உலகை ஆளும். அப்போது, பெரியசாமி உள்ளிட்ட அனைத்து சாமிகளும் துடைத்தெறியப்படுவார்கள்.

தகவல்
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி,
திருவள்ளூர்

சந்தா செலுத்துங்கள்

இணையத்தில் உழைக்கும் மக்களின் குரலாக பதினோரு ஆண்டுகளாக போராடும் வினவுடன் கை கோருங்கள். ஆதரியுங்கள்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க