Saturday, December 4, 2021
முகப்பு கட்சிகள் அ.தி.மு.க காக்கா முட்டைக்கு கலங்கியவர்கள் அறியாத சத்துணவின் கதை

காக்கா முட்டைக்கு கலங்கியவர்கள் அறியாத சத்துணவின் கதை

-

காக்கா முட்டை படத்தில், கோழி முட்டை வாங்க முடியாத வறுமை திரைமொழியில் உணர்ச்சிகரமாக சித்தரிக்கப்படுவதாக பலரும் கருதுகின்றனர். உண்மை என்னவெனில் வறுமையையும் அதன் பிரச்சினைகளையும் நேரிட்டு நோக்கும் போது மனம் ஒன்றுவது கடினம். காரணம், வறுமையின் பிரச்சினைகளுக்கு உடனடியான தீர்வு ஏதுமில்லை என்பதோடு தமது மனிதாபிமானத்தை உடன் காட்டுவதற்கு வழியற்ற சோகங்களை பலரும் காது கொடுத்து கேட்பதில்லை.

ஒரு சினிமா வழியில் மனிதாபிமானத்தை வெளிப்படுத்துவதற்கும், களத்தில் நேரடியாக செய்வதற்கும் பாரிய வேறுபாடு உண்டு. வறுமை குறித்த உண்மையை பிரச்சாரம் இல்லாமல் படம் பேசுகிறது என்பவர்கள் வறுமை குறித்த நேரடி அரசியல் நடவடிக்கைகளை தவிர்க்கவே செய்வார்கள்.

சத்துணவுத் திட்டம் சுரண்டல்
வறுமையின் பிரச்சினைகளுக்கு உடனடியான தீர்வு ஏதுமில்லை.

தமிழகத்தில் பெரும்பாலான அரசு மாணவர்களுக்கு சத்துணவு போடப்படுகிறது. அதில் புரதச்சத்து நிறைந்த பருப்பு வகைகள் தற்போது வாரம் ஒரு முறை ஆக்கிவிட்டார்கள். பா.ஜ.க மாநிலங்களிலோ முட்டையை தடை செய்துவிட்டார்கள். குறிப்பாக சத்துணவு ஊழியர்களை அரசு கடுகளவு கூட மதிப்பதில்லை. முப்பது வருடங்களாக பணிபுரிந்தாலும் தொகுப்பூதியம்தான். வேறு எந்த உரிமையும் அற்ற இந்த வேலைகளை அந்த மனிதர்கள் எத்தனை நெஞ்சுரத்துடன் செய்து வருகிறார்கள் என்பதறிய நீங்கள் நேரில் சென்று ஒரு சத்துணவு மையத்தில் பார்க்க வேண்டும்.

ஓய்வு பெற்ற பிறகும், புதிய ஆள் வரவில்லை என்பதால் ஊதியமின்றி (ஊதியமென்ன ஓரிரு ஆயிரங்கள்தான்) சமையல் செய்யும் பெண்கள், வீட்டு, உடல் பிரச்சினைகளை காரணம் காட்டி விடுமுறை எடுக்காமல் பிள்ளைகளுக்கு சமையல் செய்வதை அனிச்சை செயலாக மாற்றிக் கொண்ட ஊழியர்கள், முப்பது ஆண்டுகளாக அரசை எதிர்த்து எத்தனை எத்தனை போராட்டங்கள்…….

சத்துணவு நசிந்து போன கதைகளுக்கு முடிவில்லை.

காக்கா முட்டை பார்த்ததையே செல்ஃபி எடுத்து, ரெஸ்ட்ராண்டில் விருந்து சாப்பிட்டு அதுவும் பெப்சி-கோக்கோடு கொண்டாடியவர்கள் தமது மனிதாபிமானத்தின் தகுதி என்ன என்பதறிவதற்கு இந்த கட்டுரை உதவும்.

–    வினவு
______________________________

கடந்த ஏப்ரல் மாதம் (2015) சத்துணவு ஊழியர்கள் நடத்திய மாநிலம் தழுவிய போராட்டம் குறித்து தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தின் மாநிலத் தலைவர் திரு.பழனிச்சாமி, சத்துணவு அமைப்பாளர்கள், சமையல் ஊழியர்கள் ஆகியோரைச் சந்தித்து பேசினோம்.

திரு பழனிச்சாமியிடம் நடத்திய நேர்காணல்

சத்துணவு ஊழியர்கள் எதிர்கொள்ளும் பிரச்சனையின் தோற்றம், வளர்ச்சி பற்றி கூற முடியுமா?

எம்.ஜி.ஆர் 1982-ல் தமிழ்நாடு முழுவதும் பள்ளிக்குழந்தைகளுக்கு சத்துணவு என்ற திட்டத்தை ஆரம்பித்தார்.

சத்துணவு திட்டம் சுரண்டல்கள்
“சத்துணவு ஊழியர்களுக்கு தொகுப்பூதியம் என்பது ஆபத்தான ஒன்று மேலும் இந்த முறை எல்லாத் துறைகளுக்கும் பரவக்கூடிய அபாயம் உண்டு”

ஆரம்பத்தில் பள்ளியின் தலைமையாசிரியர்களே இந்த வேலையில் பொறுப்பாளர்களாக அமர்த்தப்பட்டனர். கூடுதல் பணிச்சுமையினால் இந்தப் பணியை அவர்களால் சரிவர நிறைவேற்ற முடியவில்லை. இதனால் ஆசிரியர் பணி பாதிப்புக்குள்ளானது. எனவே அனைத்து ஆசிரியர் சங்கங்களும் 1983-ல் ஒருங்கிணைந்து அரசுக்கெதிராகப் இருவாரமாக போராட்டம் நடத்தின. அவர்களின் முக்கியமான கோரிக்கையே ஆசிரியர்கள் கற்றுக் கொடுக்கும் பணியை மட்டுமே செய்யமுடியும்; வேறு எந்த வேலைகளிலும் ஈடுபட முடியாது என்று போராடினார். இதன் விளைவாக 1983 ஜூன் மாதத்தில் சத்துணவு அமைப்பாளர்கள் நியமனம் செய்யப்பட்டனர்.

1980-களில் வேலை இல்லாத் திண்டாட்டத்தின் தாக்கம் கடுமையாக இருந்தது. என்னைப் போன்ற படித்த இளைஞர்களுக்கு அரசு வேலை என்பது எட்டாக் கனியாக இருந்தது. இப்படியாக அரசு வேலை என்ற அங்கீகாரம், மற்றும் வேலை நிரந்தரம் என்பதால் நாங்களும் மிகவும் நம்பிக்கையோடு சத்துணவு வேலையில் சேர்ந்தோம்.

சத்துணவுத் திட்டம் சுரண்டல்
90% ஊழியர்களுக்கு சொந்த வீடே கிடையாது, நிறைய பேர் பெண்கள், அதிலும் விதவைப் பெண்கள், தாழ்த்தப்பட்டவர்கள், கணவனால் கைவிடப்பட்டவர்கள் மற்றும் கல்வியறிவில் பின் தங்கிய நிலையில் உள்ளனர்.

அந்த வேலைக்கு தொகுப்பூதியம் தருவது என்று அரசு முடிவு செய்தது. அப்போதே அரசு ஊழியர் சங்கத்தின் ஸ்தாபகர் எம்.ஆர்.அப்பன் அவர்கள், “சத்துணவு ஊழியர்களுக்கு தொகுப்பூதியம் என்பது ஆபத்தான ஒன்று மேலும் இந்த முறை எல்லாத் துறைகளுக்கும் பரவக்கூடிய அபாயம் உண்டு” என்று எச்சரித்தார். இன்றைய நிலை என்னவென்றால், அரசுத்துறையில் நிறைய பணியாளர்கள் தொகுப்பூதியம் தான் பெறுகின்றனர். 32 வருடங்களாக எங்களுடைய நிலையும் அதுதான்.

ஆரம்பத்தில் அமைப்பாளர்களுக்கு மாதம் ரூ 150, சமையலர்களுக்கு ரூ 60, உதவியாளர்களுக்கு ரூ 30 என்று சம்பளம் நிர்ணயிக்கப்பட்டது. தமிழ்நாடு முழுவதும் 1,25,000 பேர் இதனடிப்படையில் பணி நியமனம் செய்யப்பட்டனர்.

குறைந்த ஊதியம் தொடர்பாகவும் பிற வகைகளிலும் சத்துணவு ஊழியர்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் என்னென்ன?

90% ஊழியர்களுக்கு சொந்த வீடே கிடையாது, நிறைய பேர் பெண்கள், அதிலும் விதவைப் பெண்கள், தாழ்த்தப்பட்டவர்கள், கணவனால் கைவிடப்பட்டவர்கள் மற்றும் கல்வியறிவில் பின் தங்கிய நிலையில் உள்ளனர்.

சத்துணவுத் திட்டம் சுரண்டல்
மிகக் குறைந்த சம்பளம், ஓய்வூதியம் போன்றவை கடுமையான சிக்கல்களை உருவாக்குகின்றன

வறுமை காரணமாக யாராவது ஒரு படி அரிசி வீட்டிற்கு எடுத்துச்  சென்று விட்டால், எல்லா செய்திகளிலும் சத்துணவு ஊழியர்கள் எல்லாரும் திருடர்கள் என்ற எழுதுகின்றனர். மிகக் குறைந்த சம்பளம், ஓய்வூதியம் போன்றவை கடுமையான சிக்கல்களை உருவாக்குகின்றன. இதில் அரசை எதிர்த்து போராட்டம் நடத்தி பணிநீக்கம் செய்யப்பட்டால் வாழ்க்கையே இருளில் மூழ்கிவிடுகிறது.

மேலும் அரசு வேலை வாங்கித்தருகிறேன் என்று சொல்லி அரசியல்வாதிகள் ரூ 2 லட்சம் முதல் ரூ 1.5 லட்சம் வரை லஞ்சம் பெறுகின்றனர். திட்டம் ஆரம்பிக்கப்பட்ட போது அரசுப்பணியில் இல்லாதவர்களுக்குத் தான் இந்த வேலை என்று முடிவு செய்யப்பட்டது. ஆனால், இன்றோ போலிசுக்காரன் பொண்டாட்டி, டெப்யூட்டி தாசில்தார் பொண்டாட்டி என்று எல்லோரும் அமைப்பாளர்களாக உள்ளே நுழைந்து விட்டனர்.

ஆரம்ப காலத்தில் ஆளுங்கட்சியின் அராஜகம் கொஞ்ச நஞ்சமல்ல. அமைச்சர், வட்டம், கால் வட்டம், அரை வட்டம் என்று அவர்களின் தலையீடுகள் சத்துணவு ஊழியர்களுக்கு பெரும் குடைச்சலாக இருந்தது. யார் வேண்டுமானாலும் சமையலறைக்குள் வரலாம் என்ற நிலை இருந்தது. குறிப்பாக சமையல் வேலையில் ஈடுபட்ட இளம்பெண்களுக்கெதிராக பாலியல் வன்கொடுமைகள் நடந்தன. கோவை மாவட்டம் பெரியநாயக்கன் பாளையத்தில் நான் வேலை பார்த்த இடத்தில் இருந்த சத்துணவு உதவியாளர் ஒருவர் அ.தி.மு.க பிரமுகர் ஒருவரால் பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கப்பட்டார். இரவோடு இரவோடு சத்துணவு ஊழியர்கள் அனைவரும் மற்றும் அரசு ஊழியர் சங்கத்திலிருந்து கே.ஆர்.சங்கரனும் எங்களுடன் விடிய விடிய போராட்டத்தில் ஈடுபட்டு அந்த அ.தி.மு.க காலியை கைது செய்ய வைத்தோம்.

சத்துணவு ஊழியர் சங்கம் எப்போது ஆரம்பிக்கப்பட்டது?

சத்துணவுத் திட்டம் சுரண்டல்
சத்துணவு ஊழியர் சங்கத் தலைவர் பழனிச்சாமி

சவால்கள் நிறைந்த சூழல்களுக்கு மத்தியில், சத்துணவு ஊழியர்களின் பாதுகாப்பு, கோரிக்கைகள் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு அரசு ஊழியர்களின் சங்கத்தின் முயற்சியால் 19-05-1985-ல் தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம் புதுக்கோட்டையில் உதயமானது. முதல் மாநாடு 1985 ஜூன் 25-ல் கோவையில் நடைபெற்றது. எங்களுடைய பிரதான கோரிக்கை என்னவெனில் “அரசு ஊழியராக்கப்பட வேண்டும், வரையறுக்கப்பட்ட ஊதியத்தைத் தரவேண்டும்”, நாங்கள் அன்று விடுத்த கோரிக்கை இன்றுவரை எந்த அரசாலும் நிறைவேற்றப்படவில்லை.

சங்கத்தின் மூலம் ஊழியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற முடிந்ததா?

எங்களுக்கு கொடுக்கப்பட்ட ஒரு சில சலுகைகள் நீண்ட போராட்டத்திற்குப் பிறகுதான் தரப்பட்டதேயொழிய எந்த அரசாங்கமும் போராடாமல் தரவில்லை.

போராட்டத்தை ஒருங்கிணைத்து நடத்துவது நாங்கள், ஆனால் சலுகைகள் அறிவிக்கப்படுவதோ வேறொரு சங்கத்தின் வழியாக, அதாவது தி.மு.க, அ.தி.மு.க இரண்டு கட்சிகளுக்கும் ஆதரவான சத்துணவு சங்கங்கள் சில உண்டு, அவை போராட்டத்திலும் ஈடுபடுவதில்லை, ஊழியர்கள் நலனுக்கென்று எந்தக் கூட்டமும் நடத்துவதில்லை, ஆனால், நாங்கள் அரசுக்கெதிராகக் கடுமையான போராட்டத்தில் ஈடுபடும் போதோ, அரசு எங்களை அழைத்துப் பேசாமல் இவர்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி பயன்படாத சில கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக அறிவிப்பார்கள். இது நிறைய நேரத்தில் ஊழியர்களின் மன உறுதியைக் குலைத்திருக்கிறது.

கடந்த ஏப்ரலில் நடந்த போராட்டத்தில் இது மாதிரியான 9 லெட்டர் பேடு சங்கங்கள் முழுவதும் அம்பலப்பட்டு விட்டனர்.

2015 ஏப்ரல் மாதம் நடந்த போராட்டம் பற்றி சொல்லுங்கள்.

1991-96-ல் வேலூரில் நடந்த மாநாட்டில், “சத்துணவு ஊழியர்களின் மொத்த சம்பளம் 450-ஐ மாற்றி அதை அடிப்படைச் சம்பளமாக மாற்றித் தர வேண்டும்” என்று கோரிக்கை வைத்தோம். அந்த நேரத்தில் அலுவலக உதவியாளர்களுக்கான அடிப்படைச் சம்பளம் ரூ 610-ஆக இருந்தது. இன்று அவர்களது சம்பளம் ஏறக்குறைய ரூ 15,000 முதல் ரூ 20,000 வரை ஆகும். எங்களுக்கும் ரூ 450 அடிப்படை சம்பளம் என்று நிர்ணயிக்கப்பட்டிருந்தால் இந்நேரம் ரூ 12,000 முதல் ரூ 15,000 வரை வாங்கியிருந்திருப்போம்.

ஆனால் இப்போது கிடைக்கும் ஊதியம் சாப்பாட்டுக்கே போதாத நிலைதான் உள்ளது.

  1. அமைப்பாளர் 30 ஆண்டு பணி முடித்தவர்
  2. அமைப்பாளர் 30 ஆண்டு பணி முடித்தவர்
  3. அமைப்பாளர் 30 ஆண்டு பணி முடித்தவர்
  4. சமையலர் 30 ஆண்டு பணி முடித்தவர்
  5. சமையலர் 30 ஆண்டு பணி முடித்தவர்
  6. சமையல் உதவியாளர் 20 ஆண்டு பணி முடித்தவர்
  7. சமையல் உதவியாளர் 20 ஆண்டு பணி முடித்தவர்
விவரம் 1 2 3 4 5 6 7
1 ஊதியம் 3710 3580 3460 1520 1520 1110 1110
2 தர- ஊதியம் 500 500 500 300 300 200 200
3 ஆண்டு ஊதிய- உயர்வு 130 130 120 120 60 80 40
4 அகவிலைப்படி(113%) 4904 4757 4610 2192 2124 1571 1526
5 மொத்தம் 9244 8967 8690 4132 4004 2901 2876
6 ’வீட்டுவாடகைப்படி
7 ”நகர ஈட்டுப்படி
8 மருத்துவப்படி
9 மொத்தம்

பணி நிரந்தரம், 3,500 ரூபாய் ஓய்வூதியம் உட்பட 34 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஏப்ரலில் போராட்டம் நடத்தினோம். தமிழகம் முழுவதும் 32 மாவட்டங்களிலும் அரசே எதிர்பாராத வகையில் இந்தப் போராட்டத்தை நடத்தியுள்ளோம்; 3,2000 மையங்கள் மூடப்பட்டன, மொத்தம் 35,000 ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தின் வெளியீட்டிலிருந்து

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]

ஆளுங்கட்சியினரும், காவல்துறையும் எங்களைப் பல்வேறு வகையில் ஒடுக்கினர். நூறு நாள் வேலைத்திட்டத்தில் வேலை செய்தவர்களை சமைக்க வைத்தது, ஆளுங்கட்சி ரவுடிகளின் மிரட்டல்கள், பூட்டை உடைத்து சமைக்க வைத்தது, செல்பேசியில் மிரட்டியது, தகாத வார்த்தைகளால் திட்டியது என சவால்கள் ஏராளம்.

தி.மு.க, அ.தி.மு.க கட்சிகள் உங்கள் கோரிக்கைகளை ஆதரிக்கிறார்களா?

சத்துணவுத் திட்டம் சுரண்டல்
ஜெயலலிதா இம்முறை ஆட்சிக்கு வந்த போது, அம்மா உணவகத்திற்காக துவரம் பருப்பை திருப்பி விட்டதால், வாரம் முழுவதும் மாணவர்களுக்கு பருப்பு கிடைத்த நிலை மாறி வாரம் ஒரு நாள் என்று மாறிவிட்டது.

எங்களைப் பொறுத்த வரையில் இரண்டு கட்சிகளும் எங்களுக்கு அநீதி தான் இழைத்து வந்திருக்கின்றன, எங்களுடைய அடிப்படை கோரிக்கைகளை நிறைவேற்ற இந்த இரண்டு கட்சிகளும் எந்த முயற்சியும் எடுக்கவில்லை. மாறாக, ஆட்சியில் இல்லாத போது ஒரு பேச்சு, ஆட்சிக்கு வந்ததும் ஏமாற்று என்று இரட்டை வேடம்தான் போட்டுக் கொண்டிருந்தனர்.

1991-96 அ.தி.மு.க ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருந்த நேரத்தில், நாங்கள் அடிப்படைச் சம்பளத்தை உயர்த்தித் தரக்கோரி வேலூரில் மாநாடு நடத்தினோம். மேலும் பல கட்ட போராட்டங்களும் நடத்தினோம். அந்த நேரத்தில் எதிர்க்கட்சித் தலைவராக இருந்த கருணாநிதி எங்கள் மேல் மிகுந்த கருணை காட்டும் உள்ளத்தோடு ஒரு அறிக்கை விட்டு ஒரு திருக்குறளையும் சொன்னார்.

”சத்துணவு ஊழியர்கள் தங்கள் கோரிக்கைகள் எதுவும் நிறைவேறாமல் கண்ணீரும் கம்பலையுமாக வீடு திரும்புகின்றனர்.

அல்லல்பட்டு ஆற்றாது அழுதகண்ணீர் அன்றே
செல்வத்தைத் தேய்க்கும் படை

என்பதை ஆளும் அ.தி.மு.க நினைவிற்கொள்ள வேண்டும். நாங்கள் ஆட்சிக்கு வந்தால் இதற்கு சரியான தீர்வு வழங்கப்படும்” என்று கூறியிருந்தார்.

ஆனால், அதே கலைஞர் தான் 2011-ல் கோட்டை முற்றுகைப் போராட்டத்தின் போது எங்களைக் கடுமையாக ஒடுக்கினார். எங்களை மாவோயிஸ்டுகள் என்றெல்லாம் வர்ணித்துப் பேசினார்.

1988-ல் மூன்றாவது மாநில  மாநாடு நடந்தது. அதிமுக ஆளுங்கட்சியில் கொ.ப.செ-வாக இருந்த ஜெயலலிதா, சத்துணவு அமைப்பிற்கான உயர்மட்டக்குழுவின் தலைவர் பதவியிலும்  நியமிக்கப்பட்டிருந்தார். அப்போது மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும் போது, “நீங்கள் குறைந்த சம்பளத்திற்கு மகத்தான சமையல் வேலையைச் செய்வதால் உங்களை சத்துணவு ஊழியர்கள் என்று அழைப்பதை விட “தேவதூதர்கள்” என்றே இனிமேல் அழைக்க வேண்டும்” என்றார். மேலும் “உரிய நேரத்தில் உரிய முறையில் எம்.ஜி.ஆரிடம் உங்களது கோரிக்கைகளைச் சொல்லி அவற்றை நிறைவேற்றித் தருகிறேன் ”என்று சொன்னார்.

இன்று 5-வது முறையாக முதல்வர் பதவியும் ஏற்று விட்டார், ஆனால் ஒன்றும் நடந்த பாடில்லை. ஜெயலலிதா மக்கள் முதல்வராக இருந்த போதும், தமிழக முதல்வராக இருந்த போதும் இதே விதமான ஒடுக்கு முறைகள் தான்.

குழந்தைகளுக்கு வழங்கப்படும் சத்துணவு 30 ஆண்டுகளில் மேம்பட்டிருக்கிறதா?

சத்துணவுத் திட்டம் சுரண்டல்
ஊட்டச் சத்து குன்றியிருக்கும் ஏழை மாணவர்களுக்கு இது ஒரு வரப்பிரசாதம் தான்.

ஊட்டச் சத்து குன்றியிருக்கும் ஏழை மாணவர்களுக்கு இது ஒரு வரப்பிரசாதம் தான். ஆனால் இன்றைய நிலையில் அரசாங்கம் இதை ஒரு பொருட்டாக மதிப்பதில்லை.  புரதச்சத்து என்பது குழந்தைகளுக்கு, குறிப்பாக ஏழைக் குழந்தைகளுக்கு மிகவும் அவசியமான ஒன்று; ஆனால் ஜெயலலிதா இம்முறை ஆட்சிக்கு வந்த போது, அம்மா உணவகத்திற்காக துவரம் பருப்பை திருப்பி விட்டதால், வாரம் முழுவதும் மாணவர்களுக்கு பருப்பு கிடைத்த நிலை மாறி வாரம் ஒரு நாள் என்று மாறிவிட்டது. 13 வகையான  உணவு என்ற பெயரில் சத்தான சாப்பாட்டுக்கு தடை போடப்பட்டுள்ளது.

இது மட்டுமல்லாமல் Central Canteen என்ற ஒரு திட்டம் கர்நாடகாவில் 25,000 குழந்தைகளுக்கு உணவு தயாரிப்பதற்காகத் தனியாருக்கு டெண்டர் விடப்பட்டுள்ளது. தமிழ்நாட்டிலும் இதை நடைமுறைப்படுத்த மத்திய அரசின் ஆதரவு பெற்ற ஹரே ராமா ஹரே கிருஷ்ணா என்ற நிறுவனம் முனைப்பு காட்டி வருகிறது. ஆளும் அதிமுக கட்சியும் இவர்களுடன் சத்தமின்றி பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.

த்துணவு அமைப்பாளர்கள் சிலரிடம் பேசினோம்

சத்துணவுத் திட்டம் சுரண்டல்
“அரசாங்கத்த நடத்துறவங்களுக்கு புத்தியே கிடையாது, கொஞ்சம் கூட அடிப்படை அறிவும் கிடையாதுங்க!”

“சங்கத்தில் இருக்கிறீர்களா”

“இருக்கிறேன், எந்த சங்கம் என்ற போது அதெல்லாம் தெரியாது சார்! மாச மாசம் பணம் கட்டுவோம் அவ்ளோ தான், எங்களுக்குத் தெரிஞ்சதெல்லாம் பாண்டியன் சார் தான்!..”

“போராட்டத்திலே கலந்து கொண்டீர்களா”

“இல்ல, ஒன்றியத்துல உத்தரவு போட்டுட்டாங்க அதனால கலந்துக்கல”

இன்னொரு அமைப்பாளர்

“பழனிச்சாமி தலைவராக இருக்குற சங்கத்துல இருக்கேன், நிறைய போராட்டங்கள்ல கைதாயிருக்கேன்! ஆனா இந்த அரசாங்கத்துல எனக்கு நம்பிக்கையில்ல.

நான் இங்க இருக்கேன், என் பொண்டாட்டி புள்ளங்கல்லாம்  என் சொந்த ஊருல இருக்காங்க! டிரான்ஸ்பர் கேட்டு பல வருசமாச்சு ஒருத்தனும் குடுக்க மாட்டேங்குறான்! ஊர்ல விவசாய நிலமெல்லாம் இருக்கு ஆனா தண்ணியில்ல! அதனால தான் நான் இங்கயே இருக்கேன்.

மூணு புள்ளங்க இருக்கு, பொம்பளப் புள்ளய இப்பத்தான் கட்டி கொடுத்திருக்கேன்!  ரெண்டு பசங்கள படிக்க வைக்கணும், என்னோட நெலம எம்புள்ளங்களுக்கு வந்துறக்கூடாதுன்னு நெனச்சேன்! அதுக்கு இந்த சம்பளத்த வச்சு ஒண்ணும் செய்ய முடியாது அதனால தான் நைட்ல செக்யூரிட்டி வேலைக்கும் போறேன்!”

“உங்களுக்கே சம்பளம் கம்மின்னு சொல்லுறீங்க, அப்படின்னா சமையலர், உதவியாளர் நிலையெல்லாம் எப்படி”

“அவுங்க நெலமையெல்லாம் வெளில சொல்ல முடியாது, அவுங்களுக்கு எந்த பாதுகாப்பும் இல்லங்க, மாசம் 3,000 ரூபா சம்பளத்த வெச்சுகிட்டு என்ன சார் பண்ணுவாங்க! வீட்டுக்கும் வேல பாக்குற இடத்துக்கும் 20, 30 கி.மீ தூரம் இருக்கும், இத வெச்சுகிட்டு அவுங்களால பஸ் செலவுக்குக் கூட சமாளிக்க முடியாது. அரசாங்கத்த நடத்துறவங்களுக்கு புத்தியே கிடையாது, கொஞ்சம் கூட அடிப்படை அறிவும் கிடையாதுங்க!

போன ஆட்சியில பென்சன் 700 ரூவா தான் கொடுத்தாங்க, அதுக்கு ஒரு போராட்டம் நடத்துனோம்! அப்பறம் தான் 1,000 ரூபா பென்சனா உயர்த்துனாரு கலைஞரு! எங்க போராட்டத்த நசுக்குனதுல கலைஞருக்கு முக்கியமான பங்கு இருக்கு, அவரு நெனச்சுருந்தா அப்பவே Pay Commission-ல சொன்னது மாதிரி பென்சன உயர்த்திக் கொடுத்திருக்கலாம், ஆனா ஒன்னுமே செய்யலிங்க!..”

சத்துணவுத் திட்டம் சுரண்டல்
சரசுவதி அம்மாள் (நடுவில்), அவர் மருமகள் (இடது), மல்லிகா (வலது).

சென்னைப் புற நகர் பகுதியில் உள்ள ஒரு கிராமத்தில் மல்லிகாவின் வீட்டிற்குச் சென்றபோது, பள்ளிக்குச் சென்று வேலைகளை முடித்து விட்டு தலைவலியோடு வந்திருந்த அவர், இருந்தாலும் எங்கள் கேள்விகளுக்குப் பதிலளித்தார். சத்துணவு ஊழியர்களின் போராட்டம் குறித்து கேட்டபோது, தான் பாலர் பள்ளியில் சமையல் வேலை செய்வதாகவும், நடுநிலைப்பள்ளியில் வேலை செய்து ஓய்வு பெற்ற ஒருவரிடம் செல்வோம் என்று அழைத்துச் சென்றார்.

60 வயதைத் தொட்ட சரசுவதி அம்மாள் 30 வருடங்களுக்கு முன்னர் 60 ரூபாய் சம்பளத்திற்கு வேலை பார்க்க ஆரம்பித்தவர் இறுதியாகப் பணி ஓய்வு பெறும்போது பெற்ற சம்பளம் ரூ 3,250. ஓய்வுபெற்ற பின் முதல் வருடத்தில் பி.எப் பணம் என்பதாக 20,000 ரூபாயும், சென்ற வருடம் 8,000 ரூபாய் பென்சன் என்ற பெயரில் கொடுத்திருக்கின்றார்கள்.

சில நாட்களுக்கு முன்பு, 1,000 ரூபாய் பென்சன் பணம் வரும் என்று பள்ளியில் சொன்னதாகவும், மேலும் எப்போது வருமென்பது பற்றி எதுவும் தெரியாது என்பதாகவும் சொல்லிவிட்டு “சார்! முதியோர் பென்சனும் 1,000 ரூவா தான், ரிடேர்மெண்ட் பென்சனும் 1,000 ரூவா தான், இத வாங்குறத வுட்டுட்டு அதையாவது வாங்கலாமான்னு கூட தோனுது சார்! கஷ்டப்பட்டு ஒழச்சாலும் அதே காசு தான், சும்மா இருந்தாலும் அதே காசு தான்னா, மனசுக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு சார்! இதெல்லாம் யாரு கேப்பா?? ” என்று மிகவும் விரக்தியாக பதிலளித்தார்

“இப்ப என்னம்மா பண்ணிகிட்டு இருக்கீங்க”

”நான் வேலையிலிருந்து ரிட்டயர் ஆன பிறகு, இன்னும் யாரையும் வேலைக்கு எடுக்கல! ஆனாலும் ஆறு மாசமா வேலைக்குப் போனேன்”

சத்துணவுத் திட்டம் - சுரண்டல்
“மழை பெஞ்சுச்சுன்னா, அடுப்ப ஊதி ஊதி சமைச்சு முடிக்குறதுக்குள்ள எத்தன செரமம் தெரியுமா?” – சத்துணவு சமைக்கும் இடம் (கிராமத்து பள்ளி ஒன்றில்)

“சரிம்மா! சம்பளம் எதும் கொடுத்தாங்களா?”

“அதெல்லாம் ஒன்னும் இல்ல சார், நானா வேலைக்குப் போனேன், பாவம்! புள்ளங்களுக்கு சமச்சுப் போட யாரும் இல்லன்னு நெலம வந்துறக்கூடாதுல்ல!

காலியான அந்த இடத்துல என்னோட மருமகளுக்கு இடம் தரேன்னு, ஸ்கூலுல சொல்லிருக்காங்க, புள்ளயும் எங்கேயும் வெளியில வேலைக்குப் போனதுல்ல, அதனால மருமகள சத்துணவு சமையல் வேலைக்கு அனுப்பிட்டு, நான் வீட்டு வேலைக்கு போய்ட்டு வரேங்க”

“ஏனம்மா, இப்படி நீங்க கஷ்டப்படனும்”

“சார், எம் பையன்,  ஒரு கியரு கம்பெனில வேல பாக்குறான். லோனு போட்டு வீட்ட கட்டிபுட்டான், இப்போ கடனு மேல கடனாகிப்போச்சு. அதுனால OT  பாத்தா தான் கொஞ்க காசு கூட கெடைக்கும்னு வெலையே கதின்னு கெடக்குறான். அதனால தான் நானும் என் பங்குக்கு எதாவது வேலைக்கு போனா கொஞ்கம் ஒத்தாசையா இருக்கும்ல”

“சரிங்கம்மா! சமையல் தேவைக்கான பொருளெல்லாம் யார் பொறுப்பு”

“அதெல்லாம், டீச்சர் வாங்கித் தந்துருவாங்க சார், எங்க வேல சமச்சுப்போடுறது மட்டும் தான் சார், டீச்சர் வேற ஊருலேந்து வர்றாங்க, அவுங்களுக்கு எல்லாமே தெரியும் சார்.”

சத்துணவுத் திட்டம் சுரண்டல்
முன்னடியேல்லாம் நாங்க சோத்த தனியா வடிச்சு, சாம்பார் தனியா வச்சு கொடுப்போம். இப்பெல்லாம் இந்த அம்மா வந்ததுலேர்ந்து பருப்பு ஒரு நாளு மட்டும் தான் போடச்சொல்லி உத்தரவு”

“சத்துணவு ஊழியர்கள் நிறைய பொருட்களை எடுத்துச் சென்று விற்று விடுகிறார்கள் என்ற ஒரு குற்றச்சாட்டு இருக்கிறதே”

“ஸ்கூலுல 45 நாட்களுக்குத் தேவையான அரிசி, பருப்பு, பாமாயில் எண்ணெய் எல்லாம் இருக்கும். டீச்சர் வந்து தான் எங்களுக்கு எடுத்துக் கொடுப்பாங்க! மத்தபடி 10 முட்டை மிஞ்சுனுச்சுனா கூட, அத அடுத்த நாள் கணக்குல ஏத்திடுவாங்க. இதுல எங்களுக்கு எந்த வேலயுமேயில்ல சார்! சோறு மீந்து போற மாதிரி இருந்தா அத வீட்டுக்கு எடுத்துட்டு வந்து ராத்திரிக்கு சாப்டுக்குவோம், அவ்ளோ தான் சார்!”

“சத்துணவு வேலையெல்லாம் ஒரு வேலையாகவே கருதக்கூடாது, அது என்ன ஒரு பாதி நாள்(பகுதி) வேலை மட்டும் தானே, இதுக்கு எந்தக் கல்வித் தகுதியும் தேவையில்லை தானே! என்கிறார்களே”

“சார்! அதேப்படி அது வேலையே இல்லன்னு சொல்ல முடியும், அப்போதெல்லாம் வெறும் கூரைக் கொட்டாய் தான்! மழை பெஞ்சுச்சுன்னா, அடுப்ப ஊதி ஊதி சமைச்சு முடிக்குறதுக்குள்ள எத்தன செரமம் தெரியுமா? கூரைய பொத்துகிட்டு மழை வேர சொர்ருன்னு ஊத்தி நாங்க நனைஞ்சே  போயிருவோம்! அடுப்பு வேற அணையாம பாத்துக்கணும், அப்பப்ப ஊதி விட்டுட்டு தண்ணி ஊத்தாத எடத்துல போயி நின்னுக்குவோம், இப்ப மட்டும் என்ன அதே வெறக வச்சுத்தான் சமைக்கிறோம், என்ன கட்டடத்துக்குள்ளே சமைக்கிறோம், அவ்ளோ தான்….ஆனா பாருங்க அடுப்பு புகையில நின்னு நின்னு என்னோட கண் பார்வையே மங்கிபோயி, இப்ப தான் கண் ஆபரேசன் பண்ணிருக்கோம், ஆனாலும் பழைய மாதிரி பார்வை இல்லங்க”.

சத்துணவுத் திட்டம் சுரண்டல்
“ஒன்பது மணிக்கு ஸ்கூலுக்குல்ல போனா, அரிசிய கழுவி சுத்தம் செஞ்சு, பிறகு தண்ணி நெரப்பி அரிசிய ஊற போட்டுட்டு, மத்த வேலையெல்லாம் செஞ்சு முடிச்சுட்டு, சரியான நேரத்துக்கு சாப்பாடு போட்டுட்டு, பாத்திரமெல்லாம் கழுவி முடிக்க மத்தியானம் 2.30 மணியாகிடும்.”

“என்ன மாதிரியான சமையல் செஞ்சு போடுவீங்க”

“புளி, எலுமிச்சை, தக்காளி, பிரிஞ்சி சாதம், நான்கு நாட்களும், வெள்ளியன்று பருப்பு சாம்பார், முட்டை தொக்கு செய்து கொடுப்போம்”

“அது சரி தெனமும் பருப்பு சேக்குறதில்லையா?”

“சார்! முன்னடியேல்லாம் நாங்க சோத்த தனியா வடிச்சு, சாம்பார் தனியா வச்சு, ரெண்டு வரிசையில புள்ளங்கல வரச்சொல்லி ஒருத்தர் சோறு, ஒருத்தர் சாம்பாருன்னு கொடுப்போம். புள்ளங்க ரெண்டு மூனு மொற கேட்டு வாங்கி சாப்புடுங்க! இப்பெல்லாம் இந்த அம்மா வந்ததுலேர்ந்து பருப்பு ஒரு நாளு மட்டும் தான் போடச்சொல்லி உத்தரவு” என்று கவலையுடன் பதிலளித்தார்.

“சத்துணவு வேலையையும் பார்த்துகிட்டு வேற வேலைக்கு போனதுண்டா?”

“ஒன்பது மணிக்கு ஸ்கூலுக்குல்ல போனா, அரிசிய கழுவி சுத்தம் செஞ்சு, பிறகு தண்ணி நெரப்பி அரிசிய ஊற போட்டுட்டு, மத்த வேலையெல்லாம் செஞ்சு முடிச்சுட்டு, சரியான நேரத்துக்கு சாப்பாடு போட்டுட்டு, பாத்திரமெல்லாம் கழுவி முடிக்க மத்தியானம் 2.30 மணியாகிடும். அப்பறம் எங்க சார் வேற வேலைக்கெல்லாம் போக முடியும்”

லட்சுமி, கீதா என்ற இரு சத்துணவு சமையலர்களை சந்தித்தோம். லட்சுமி மிகவும் வெளிப்படையாக, தயக்கமின்றி பேசினார்.

“ஏன் போராட்டத்தில் கலந்து கொள்ளவில்லை”

சத்துணவுத் திட்டம் சுரண்டல்
லட்சுமி, கீதா

“சார்! நாங்க இன்னா சார் பண்றது, HM கூப்புட்டு சாப்பாடு கரெக்டான டைமுக்கு ரெடியா இருக்கனும், இல்லாவிட்டால் கலெக்டர் ஆபிசுக்கு போன் போட்ருவோம்-னு மெரட்டுராரு, அப்பால டீச்சருக எல்லாம் கலந்து பேசி போயிட்டு வாங்கன்னா, சந்தோசமா போய்ட்டு வருவோம்..ஆனா யாரும் எதுவுமே சொல்லல… நாங்க இன்னா சார் பண்றது, சமச்சுப் போடுன்னா அத செய்யனும், புள்ளங்களும் பாவம்ல….”

“முட்டையெல்லாம் பதுக்கி வெக்கிரீங்கன்னு எல்லாரும் சொல்லுராங்களே”

“சார், எங்கள நீங்க ஒண்ணும் நம்ப வேணாம்,  நாங்க தப்பு பண்ணுனா கூட மறைக்கத்தான் பார்ப்போம், நேரா இங்க உள்ள புள்ளங்ககிட்ட போயி கேளுங்க, அதுங்க பொய் சொல்லாதுங்க….ஒவ்வொரு புள்ளங்களுக்கும் முட்டை கொடுக்குறப்ப சில புள்ளங்க வேணாம்னு சொல்லும், அப்ப நான் அவுங்ககிட்ட அதெல்லாம் முடியாது சாப்புட்டு தான் ஆகணும், அப்படியும் முடியலன்னா, இத வாங்கிக்கிட்டு வேற எதாவது பண்ணிக்கோ..என்று தான் சொல்வேனே தவிர, ஒரு புள்ளக்கி ஒரு முட்ட சேர்ந்தே ஆகணும்” என்றார்.

சத்துணவுத் திட்டம் சுரண்டல்
“சத்துணவு எல்லா நாளும் சாப்பிடுவேன், தேர்வு நேரங்களில் மதியம் செல்வதால் சத்துணவு காலியாகிவிடும்” – சூரியா, பிரஜீத்

சூர்யா என்ற மாணவர் அரசு உதவி பெறும் பள்ளியில் 10ம் வகுப்பு படிக்கிறார். 8 வயதில் தந்தையை இழந்தவர், தங்கை, தாய் மற்றும் பாட்டியுடன் வாழ்ந்து வருகின்றார்.”சத்துணவு எல்லா நாளும் சாப்பிடுவேன், தேர்வு நேரங்களில் மதியம் செல்வதால் சத்துணவு காலியாகிவிடும் எனவே வீட்டில் இருப்பதை சாப்பிட்டு விட்ட போவேன். வீட்டுச் சாப்பாட்டை விட சத்துணவு நன்றாக இருக்கும்” என்றார்.

அதே பள்ளியில் படிக்கின்ற இன்னொரு மாணவன் பிரஜீத் “தந்தை வேறு ஒருவருடன் சென்று விட்டதாகவும், அம்மா வீட்டு வேலை செய்து தன்னையும், தன் தங்கையையும் பார்த்துக் கொள்கிறார். சத்துணவு சாப்பாடு தினமும் சாப்பிடுவதாகவும், வேண்டுமளவு சாப்பாடு தருவார்கள், சாப்பாடும் நன்றாக இருக்கும்” என்று கூறினார்.

இவரைப் போன்ற மாணவர்களுக்கு இப்போதைக்கிருக்கும் ஒரே ஆரோக்கியமான ஊட்டச்சத்து வழி இந்த சத்துணவுக் கூடங்கள்தான். குடியால் வருமானத்தையும் நிம்மதியையும் இழக்கும் குடும்பத் தலைவர்கள், வேறு வழியின்றி அல்லாடும் குடும்பத் தலைவிகள், இடையில், தானே வளரும் குழந்தைகள்…. இத்தகைய சூழ்நிலையில் வருங்காலத் தலைமுறையின் ஆரோக்கியத்தை கொஞ்சமாவது வழங்குகிறது இந்த அரசுத் திட்டம். ஆனால் அந்த திட்டத்தின் இதயமான சத்துணவு ஊழியர்களை இதே அரசு எப்படி கொடூரமாக நடத்துகிறது என்பதை புரிந்து கொண்டால் ஒரு கேள்வி எழுகிறது.

சத்துணவு, ஆரோக்கியம், ஊட்டச்சத்து போன்றவை குறித்து ஐ.நா முதல் இந்திய அரசு, தன்னார்வக் குழுக்கள் முதல் காக்கா முட்டை படம் வரை பேசுகிறார்கள். எனில் குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து கிடைக்கச் செய்யாமல் பறிக்கும் அந்த வில்லன்கள் யார்?

– வினவு செய்தியாளர்கள்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க