புதுவை துணை வேந்தராக இருக்கும் சந்திரா கிருஷ்ணமூர்த்தி தனது கைக்கூலிகளின் துணையோடு, நிர்வாகச் சீர்கேடு – ஊழல் முறைகேடு சகிதம் காட்டு தர்பாரை நடத்தி வருகிறார்.
ராதா கிருஷ்ணன் என்ற தமிழ் முதுகலை படித்த மாணவர் தாக்கப்பட்டது, அதனைச் செய்த ஹரிஹரன் என்ற பார்ப்பன ஊழல் பெருச்சாளிக்கு இவர் துணை நின்றது, உயர் கல்வித் துறையில் உதவிப் பேராசிரியராக இருக்கும் பிரவீன் என்ற கைக்கூலி மாணவிகளை ஆபாசமாகப் பேசித் துன்புறுத்தியது, பின்னர் அந்தக் கைக்கூலியைப் பாதுகாக்க பாதிக்கப்பட்ட மாணவிகளை துணைவேந்தர் இடைநீக்கம் செய்தது, சென்னை உயர் நீதிமன்றம் துணைவேந்தரின் இந்த உத்தரவு செல்லாது என்று அறிவித்து பாதிக்கப்பட்ட மாணவிகளுக்கு இழப்பீடு வழங்க உத்தரவிட்டது, தொடர்ந்து பெருகிவரும் நிர்வாகச் சீர்கேடுகள் என இவரது பதவிக்காலம் பல்கலைக்கழகத்தின் மிக மோசமான இருண்ட காலமாக இருந்து வருகிறது.
புதிய கல்வியாண்டு தொடங்கியுள்ள நிலையில் தற்போது துணை வேந்தரை எதிர்த்து கேரள மாணவர்கள் உறுதியுடன் போராடுகின்றனர். அவர்களை தடுக்கும் நோக்கத்துடன் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டனர் துணைவேந்தரும் அவரை அண்டிப் பிழைப்பவர்களும். முதல் கட்டமாக கேரளாவில் நுழைவுத் தேர்வு நடத்தப்படும் எல்லா மையங்களையும் ரத்துசெய்தார்கள். அதையும் மீறி தேர்வெழுதி சேர்க்கை பெற்றவர்களுக்கு விடுதியில் இடம் வழங்காமல் அலைக்கழித்து வருகின்றனர்.
அவ்வாறு விடுதியில் இடம் வழங்காமல் இருக்க மொத்த விடுதி இடங்களை வேண்டுமென்றே குறைத்து, 100 மாணவர்களில் 30-40 பேருக்குத்தான் விடுதியில் இடம் கிடைக்கும் என்ற நிலையை உருவாக்கியுள்ளது நிர்வாகம். இதனால் விடுதியில்லாமல் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளது கேரள மாணவர்கள் மட்டுமல்ல, தமிழக மாணவர்கள்தான்.
எனவே, தகுதியற்ற துணைவேந்தர் சந்திரா கிருஷ்ணமூர்த்தியை நீக்கக்கோரி மாணவர்கள், ஆசிரியர்கள், ஊழியர்கள் என எல்லாத் தரப்பினரும் போராடி வருகின்றனர். காவி டவுசர் அம்பிகளில் எவனோ ஒருவன் அனுப்பிய மொட்டைக் கடுதாசியைப் பார்த்து ஒரே வாரத்தில் சென்னை ஐஐடியில் அம்பேத்கர் பெரியார் வாசகர் வட்டத்தைத் தடைசெய்த மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகம், இங்கு கடந்த இரண்டு ஆண்டுகளாக தொடர்ந்து நடந்துவரும் போராட்டங்களையும் விடுக்கப்படும் கோரிக்கைகளையும் இம்மியளவும் சட்டை செய்யவில்லை.
பொறுமையிழந்த மாணவர்கள் கடந்த திங்கள் (27 ஜூலைல 2015), புதன் மற்றும் வெள்ளிக்கிழமை அன்று இரண்டு நுழைவாயில்களையும் மூடி முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர். துணைவேந்தர் தனது அடிவருடிகளை வைத்து மாணவர்களைத் தாக்குவது காவல்துறையை ஏவி மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தச் செய்வது என தனது ரவுடிச் செயல்களைத் தொடர்கிறார்.
இந்நிலையில் கடந்த வெள்ளியன்று அமைதியான முறையில் போராட்டம் நடத்திய மாணவர்கள் மீது காவல்துறை காட்டுமிராண்டித்தனமாகத் தாக்குதல் நடத்தியுள்ளது. சுமார் 30 மாணவர்கள் சில பேராசிரியர்கள் மீது பொய் வழக்கும் போட்டுள்ளது. எட்டுக்கும் மேற்பட்ட மாணவர்கள் காவல் துறை தடியடியில் கடுமையாகக் காயமடைந்துள்ளனர். இரண்டு பெண்களும் மோசமாகத் தாக்கப்பட்டுள்ளனர்.
தனது ஏவல் நாய்களைக் கொண்டு போராடும் மாணவர்களை ஒடுக்க நினைக்கும் துணைவேந்தர் சந்திரா கிருஷ்ணமூர்த்தியையும், தொடர்ந்து இந்தத் துணைவேந்தரின் காட்டு தர்பாரை வேடிக்கை பார்க்கும் மனிதவள அமைச்சகத்தையும், மாணவர்களைத் தாக்கி தனது ஆளும் வர்க்க விசுவாசத்தைக் காட்டிய காவல் துறையையும் புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி (RSYF) வன்மையாகக் கண்டிக்கிறது.
பு.மா.இ.மு. சார்பில் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் வளாகத்தினுள்ளும் புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி (NDLF) சார்பில் புதுவை நகரெங்கிலும் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. மாணவர்கள், தமது போராட்டத்தைத் இந்த வாரமும் தொடர்வது என முடிவு செய்துள்ள நிலையில் போராடும் மாணவர்களுக்கு ஆதரவளிக்க வேண்டியது நமது கடமை.
சுவரொட்டி முழக்கங்கள்:
தகுதியற்ற துணைவேந்தரை நீக்கக் கோரிப் போராடிவரும் புதுவை பல்கலை மாணவர்கள் மீது தடியடி! பொய்வழக்கு!
மத்திய அரசே,
- மோசடி செய்து பதவிக்கு வந்து ரௌடி ராஜ்ஜியம் நடத்தும் துணைவேந்தர் சந்திரா கிருஷ்ணமூர்த்தியை உடனே பதவிநீக்கம் செய்! சிறையிலடை!
- மாணவர்களின் கோரிக்கையை நிறைவேற்ற, துணைவேந்தர் மீது நடவடிக்கை எடுக்க துப்பில்லைஎனில் நிர்வாகத்திலிருந்து விலகிக் கொள்! நிர்வாகத்தை ஆசிரியர்-மாணவர்களிடம் ஒப்படை!
மாணவர்களே, உழைக்கும் மக்களே,
- போராடும் புதுவை பல்கலை மாணவர்களுக்குத் துணை நிற்போம்!
- முறையாக பல்கலைக்கழகத்தை நடத்த முடியாத நிர்வாகத்தினைத் தூக்கியெறிவோம்! பல்கலைக்கழக நிர்வாகத்தினை மக்கள் அதிகாரத்தின் கீழ் கொண்டு வருவோம்!
புரட்சிகர மாணவர் இளைஞர் முன்ன்னணி (RSYF)
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி (NDLF) புதுச்சேரி
புகைப்படங்கள்:
______________________________________________________
தகவல்: பு.மா.இ.மு, புதுவை அமைப்புக்குழு..
மின்னஞ்சல்: rsyfront.pu@gmail.com
______________________________________________________