Friday, June 2, 2023
முகப்புஉலகம்அமெரிக்காஐ.பி.எம்-இன் புது விளம்பரம் - தாய்ப்பால் கருணை !

ஐ.பி.எம்-இன் புது விளம்பரம் – தாய்ப்பால் கருணை !

-

motherந்தியாவில் சுமார் ஒரு லட்சம் ஐ.டி துறை ஊழியர்களை வேலையில் அமர்த்தியிருக்கிறது அமெரிக்க நிறுவனமான ஐ.பி.எம்(IBM). பெண் ஊழியர்களின் குழந்தைகளுக்கு தாய்ப்பாலை வினியோகம் செய்யும் திட்டமொன்றை வரும் செப்டம்பர் முதல் அறிமுகம் செய்யப் போவதாக அறிவித்திருக்கிறது ஐ.பி.எம்.

“பணி நிமித்தமாக வெளியூர் செல்லும் பெண்கள் தங்கள் குழந்தைகளுக்குத் தாய்ப்பால் கொடுக்க முடியவில்லையே என்ற கவலை இனி வேண்டாம்; அதற்கு நாங்களே பொறுப்பெடுத்துக் கொள்கிறோம்; மேலும் இதற்கான செலவீனத்தையும் நிறுவனமே ஏற்றுக்கொள்ளும்” என்று ஐபிஎம் நிறுவனம் தெரிவித்துள்ளது. வரும் செப்டம்பர் 2015-ல் அமெரிக்க அலுவலகங்களில் மேலாண்மைத் துறையில் வேலை பார்க்கும் பெண்கள் மத்தியில் இத்திட்டம் முதலில் நடைமுறைப்படுத்தப்பட்டு பிறகு வெளிநாடுகளிலும் அமல்படுத்தப்படும். உலகிலேயே உள்ள ஐ.டி கம்பெனிகளில் தாங்கள் தான் இந்த   நலத்திட்டத்தை முதன்முதலாக செயல்படுத்துகிறோம் என்று கூறுகிறார் ஐ.பி.எம் நிறுவனத்தின் மனித வள நலத்துறையின் துணைத் தலைவரான பார்பரா பிரிக்மெயர்.

சில மாதங்களுக்கு முன்னர் தான், ஊடகத் துறையில் கருவுற்றிருப்பதனால் வேலையை விட்டு பெண்கள் நீக்கப்படும் அவல நிலை குறித்து வினவில் பார்த்தோம். அதே நேரம் அந்தப்பிரச்சினையில் மறுபாதிதான் இந்த தாய்ப்பால் உதவிக் கருணை. ஊடகங்களின் கவலை அழகு என்றால், ஐ.டி துறைக்கோ எப்பாடுபட்டாவது வேலை வாங்கிவிட வேண்டும்; வேலைத்திறன் குறையவே கூடாது, விடுப்பும் எடுக்கக் கூடாது. அதே நேரம் அமெரிக்காவில் குழந்தைகள் பெறுவதும், தாய்ப்பால் புகட்டுவதும் நம்மூர் போல அதிகம் நடப்பதில்லை. ஆதலால் ஐ.பி.எம்மின் இக்கருணை முகத்திற்கு விளம்பர மதிப்பு மட்டுமே அதிகமிருக்க வாய்ப்புண்டு.

ஆட்குறைப்பு, வேலை நேரம் அதிகரிப்பு, போனஸ் வெ(வே)ட்டு, பணி நிரந்தரமின்மை, பாதுகாப்பின்மை இப்படி நெருக்கடியான சூழ்நிலையில் பரிதவித்து வரும் ஐ.டி துறையினருக்கு இந்தச் செய்தி ஒன்றும் காதில் தேன் வார்க்கப் போவதில்லை என்பது நிச்சயம் ஆனால் ஐ.பி.எம்-ன் உண்மையான நோக்கம் என்ன?

feedingவேலை-வாழ்க்கை சமன்பாட்டு நிலையை (Work-Life Balance) ஊக்குவிக்கும் விதமாகவும் பெண் ஊழியர்கள் குழந்தைகளை வீட்டில் விட்டுவிட்டு கவலையின்றி வெளியூருக்குச் செல்வதற்காகவும் தான் இத்திட்டத்தை அமல்படுத்துவதாகத் தெரிவித்துள்ளது ஐ.பி.எம் நிறுவனம். இந்நிறுவனத்தில் 29% பெண்கள் வேலை பார்க்கின்றனர். இவர்களில் மேலாண்மைத்துறையில் 25% பெண்கள் உள்ளனர். கருத்தரிக்கும் நேரங்களில் வேலைச் சுமையைக் குறைத்து சிறிது உதவிகள் செய்ய வசதிகள் இருக்கின்றதா என்றாலும் இல்லை. சரி பேறு கால விடுப்பு நாட்களின் அளவு அதிகரிக்கப்பட்டதா என்றால் அதுவும் இல்லை; 3 மாதத்திற்கு மேலாகக் கூடுதலாக விடுப்பு எடுக்கும் ஒவ்வொரு நாளுக்கும் சம்பளம் தர மாட்டார்கள்.

உலகளவில் குறிப்பாக இந்தியாவில் ஐ.டி துறை முழுமையாக நம்பியிருப்பது அமெரிக்க மற்றும் ஐரோப்பிய நாடுகளின் முதலீடுகளை வைத்துத் தான்; ஆனால் உலக சந்தைப் பொருளாதாரமோ விழுந்த நாளிலிருந்து எழ முடியாமல் தவித்துக் கொண்டிருக்கும் இந்த நேரத்தில் தட்டுத் தடுமாறிக் கொண்டிருக்கும் ஐ.டி துறையில் இது போன்ற திட்டங்கள் அமல்படுத்துவதை, மோடி அமலாக்கிய மேக் இன் இந்தியா, க்ளீன் இந்தியா போன்ற நிகழ்வுகளோடோ அல்லது ஏழைப் பெண்களின் திருமணத்திற்கு தாலி தரும் அரசின் திட்டம், மடிக்கணிணி போன்ற இலவசங்களோடோ ஒப்பீடு செய்துகொள்ளலாம்!

சில வருடங்களுக்கு முன்வரை அனுபவம் வாய்ந்த திறமைசாலிகள் என்று அழைக்கப்பட்டவர்களுக்கு கூடுதல் சம்பளம் கொடுத்து பணிக்கு எடுத்துக் கொண்ட நிறுவனங்கள் இன்றோ அதிக அனுபவம் உள்ளவர்களை எடுக்கவே தயங்குகின்றன; இதற்குப் பதிலாக சந்தையில் குவிந்திருக்கும் ப்ரஷர்ஸ் எனப்படும் வேலையில்லா பட்டதாரிகளை குறைந்த சம்பளம் அதிக வேலைப்பளு என்பதன் அடிப்படையில் வேலைக்கு எடுத்துக் கொள்கின்றனர்.

13 ஆண்டுகளாக நஷ்டக் கணக்கைக் காட்டிவரும் ஐ.பி.எம், இதையே முதன்மைக் காரணமாக வைத்து ஊழியர்களை வேலையை விட்டு நீக்கி ஆட்குறைப்பு நடவடிக்கைகளில் கடந்த சில வருடங்களாகவே ஈடுபட்டுள்ளது. இந்நிறுவனத்தின் தலைமையகமான அமெரிக்காவில் உள்ள அலுவலகங்களில் 25 வருடங்களுக்கு மேலாக வேலை பார்த்து வந்த ஊழியர்களை ஆண் என்றும் பெண் என்றும் பாராமல் விருப்ப ஓய்வு பெறச் செய்த நிறுவனம் தான் ஐ.பி.எம். இப்போது தாய்ப்பாலை வினியோகம் செய்கின்றேன் என்று கூறும்போது இதை ஒரு நல்லெண்ண சேவையாக எப்படிக் கருத முடியும்?

’பால் பவுடர் புகழ்’ ’குழந்தைக் கொலையாளி’ நெஸ்லேவின் ஐ.டி துறை பராமரிப்புக்காக முதன்மையான சேவை ஒப்பந்தம் பெற்றிருப்பதும் ஐபிஎம் தான். இந்த நெஸ்லே தான் தாய்ப்பால் வேண்டாம் என்று கூறி பால்பவுடரை விற்பதற்கென்றே ஒரு பிரத்தியேக பிரச்சாரம் மேற்கொண்டது. கூடுதல் தகவலுக்கு கீழே உள்ள வலைப்பதிவுகளைக் காணலாம்.

ibm adஐ.பி.எம் போன்றே தரவரிசையில் முதலில் உள்ள நிறுவனங்களும் அவ்வப்போது இது போன்ற சில வசதிகளை அறிமுகப்படுத்தி மிகப்பெரிய அளவில் சுயவிளம்பரம் செய்துகொள்கின்றன. உதாரணமாக ஆப்பிள், ஃபேஸ்புக் போன்ற நிறுவனங்கள் கருமுட்டைகளை குளிரூட்டியில் வைத்திருக்கும் சேவையைப் பெண்களுக்கென்று அறிமுகப்படுத்தியுள்ளன. இதன் உள்நோக்கம் பெண்கள் கருத்தரிப்பதை சில காலத்திற்கு தள்ளிவைக்கலாம்; பெண் ஊழியர்கள் குழந்தைப் பிறப்பைக் காரணம் காட்டி விடுப்பு எடுக்கக் கூடாதென்பது தான் ஐ.பி.எம்-ன் முதன்மையான நோக்கமே தவிர இதில் தாய்ப்பாலை வினியோகம் செய்வது என்பது இரண்டாம் பட்சமானது தான். மேலும் தங்களுடைய ஊழியர்கள், தங்களுக்குத் தரப்படும் வேலைகளுக்கே அதிக முக்கியத்துவம் தரவேண்டும் என்பதும் இதில் மறைமுகமாகத் திணிக்கப்படும் ஒன்று..

– மணிவண்ணன்

மேலும் படிக்க:

IBM to launch first-ever breast milk shipping service for employees

IBM to launch breast milk shipping service for employees

IBM to launch breast milk shipping service for employees

 1. “” பணி நிமித்தமாக வெளியூர் செல்லும் பெண்கள் கணவரோடு கூட
  முடியவில்லையே என்று கவலைப்பட வேண்டாம்.எங்கள் செலவில்
  உங்கள் கணவரை அல்லது நீங்கள் விரும்பும் ஒருவரை நீங்கள் தங்கியிருக்கும்
  ஹோட்டலுக்கே அழைத்து வந்து விடுகிறோம். “”
  **MARK MY WORD** கூடிய விரைவில் இதையும் செய்வார்கள்.

 2. ** பணி நிமித்தமாக வெளியூர் செல்லும் பெண்கள் கூட முடியவில்லையே
  என்ற கவலை வேண்டாம்.உங்கள் கணவரையோ அல்லது நீங்கள் விரும்பும்
  ஒருவரையோ நீங்கள் தங்கியிருக்கும் ஹோட்டல் அறைக்கே எங்கள்
  செலவில் அழைத்து வந்து விடுகிறோம். **
  குறித்து வைத்து கொள்ளுங்கள்!
  கூடிய விரைவில் அவர்கள் இதையும் செய்வார்கள்.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க