
தமிழகத்தில் ஆவின் நிறுவனங்கள் நஷ்டத்தில் இயங்குவதாக கூறி 2011-ல் ஜெயா அரசு தமிழகத்தின் ஆட்சிப் பொறுப்பை ஏற்றவுடனே அதிரடியாக பால் விலையை உயர்த்தியது. இதைத் தொடர்ந்து ஆரோக்கியா, ஹட்சன், ரிலையன்ஸ் போன்ற கார்ப்பரேட் பால் நிறுவனங்களும் பல மடங்கு விலையை உயர்த்தி கொள்ளை இலாபமடித்தனர். ஆனால், பால் உற்பத்தியாளர்களுக்கு ரூ.2 மட்டுமே உயர்த்தி கொடுத்தனர். அந்த பாலை பயன்படுத்தும் பொதுமக்கள் மீது ரூ.6.25 விலை உயர்வு திணிக்கப்பட்டது.
பால் உற்பத்தியாளர்களைக் காப்பாற்ற தமிழக அரசு அறிவித்தபடி 1 கோடி லிட்டர் பால் கொள்முதல் செய்திருக்க வேண்டும். ஆனால், அதை கைவிட்டு 25% பால் மட்டுமே கொள்முதல் செய்து வருகிறது. மீதி 75% பாலை கார்ப்பரேட் பால் நிறுவனங்கள் மற்றும் தனியார் பால் நிறுவனங்கள் கொள்முதல் செய்து வருகின்றன.
இந்த கார்ப்பரேட் பால் உற்பத்தி நிறுவனங்கள், திடீரென பாலை வாங்க மறுப்பது, குறைந்த விலைக்கு கேட்பது, வாரத்திற்கு 1, 2 நாள் விடுமுறை என்று பால் உற்பத்தியாளர்களை அலைய விடுவது, என்று பால் உற்பத்தியாளர்களை கடுமையான நெருக்கடிக்கு ஆளாக்கி வருகின்றனர்.
கிரானைட், மணல், தண்ணீர், கல்வி என எல்லாத் துறைகளிலும் தனியார்மயத்தைப் புகுத்தி, கார்ப்பரேட் கம்பெனிகள் கொள்ளையடிக்க அனுமதித்தது போல, பாலிலும் கார்ப்பரேட் கம்பெனிகளின் ஆதிக்கத்தை நிலைநிறுத்த ஜெயா அரசு துடித்து வருகிறது. அதனால், தற்போது அரசு கொள்முதல் செய்துவரும் ஆவின் பாலையும் (அதாவது 25 லட்சம் லிட்டரையும்) நிறுத்திவிடத் துடிக்கிறது. மத்தளத்திற்கு இரண்டு பக்கமும் அடி என்பதுபோல கார்ப்பரேட் நிறுவனங்களும் அரசும் சேர்ந்து பால் உற்பத்தியாளர்களை முற்றிலும் ஒழித்துக்கட்ட தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர்.

பால் உற்பத்தியை முற்றிலும் ஒழித்துக் கட்டும் அரசின் முயற்சிக்கும் உணவுத் தற்சார்பை ஒழித்து முற்றிலும் கார்ப்பரேட் ஆதிக்கத்தை உருவாக்குவதோடு, குறைந்தப் பட்ச சத்துணவான பாலையும் பறிக்கும் வகையில் அரசு நடவடிக்கைகள் அமைந்துள்ளது. பால் கொள்முதல் விலை குறைப்பு, பால் வாங்க மறுப்பு, பால் வாங்குவதற்கு விடுமுறை ……இவற்றினை எதிர்த்து தமிழகம் முழுவதும் பால் உற்பத்தியாளர்கள் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
பென்னாகரம் விவசாயிகள் சிலரின் அனுபவம்:
பென்னாகரத்தில் உள்ள தாசம்பட்டி கிராமம், ஒரு காலத்தில் பார்ப்பதற்கு பசுமையாக தோற்றமளித்த இந்த பகுதி பருவ மழையின்மையால் விவசாயம் பொய்த்து போய் இன்று களையிழந்து இருக்கிறது. இதனால், விவாசாயத்தை விட்டு விட்டு கர்நாடகா, கோவை என கட்டிட வேலைக்கு சென்று எப்படியாவது குடும்பத்தை நடத்தி விடலாம் என்று போனால் அங்கேயும் 10,15 நாள் மட்டுமே வேலை இருக்கிறது, அதன் பிறகு வேலை கிடைப்பதில்லை. இந்நிலையில் தான் பால் மாடு வாங்கியாவது, வளர்த்தால் குடும்பத்தை ஓட்டிவிடலாம் என்று வளர்த்து வந்தவர்களின் எண்ணத்தில் இடியாய் இறக்குயிருக்கிறது இந்த பால் கொள்முதல் விலை குறைப்பு.
தனலட்சுமி கூறும் போது, காலையில் 4 மணிக்கு எழுந்து 6 மணிக்குள் குடும்ப வேலைகளை முடித்து, பிறகு 7 மணிக்குள் பாலை கறந்து சொசைட்டிக்கு போய் ஊற்றிய பிறகு, குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பி விட்டு அதன் பிறகு, மாட்டுக்கு புல் அறுத்து வரவேண்டும், தீவனம் வைக்க வேண்டும், வெயில் படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். இப்படி, அடுத்தடுத்து இரவு 10 மணி வரைக்கும் உழைத்து அன்றாடம் பாலை ஆரோக்கியாவுக்கு ஊற்றி வரும் தனலட்சுமி, அவருடைய ஆரோக்கியத்தை இழந்து நிற்கிறார்.

மேலும் அவர் கூறும் போது, பாலுக்கு ஏற்ற விலை இல்லை, 4 வகையான தீவனம் இருக்கிறது. இதில் மாங்காய் தீவனம் போட்டால் தான் பால் கெட்டியாக, கொழுப்பும் கிடைக்கிறது. இந்த தீவணத்தை ரூ.1400க்கு வாங்கி போடுகிறேன். இதுவும் 1 மாதம் கூட வருவதில்லை. என்ன செய்வது, வேற வழியில்லாமல் இந்தத் தொழிலை செய்ய வேண்டியதாக இருக்கிறது. ஏதாவது வாரச் செலவு, கடனுக்கு சரிகட்ட முடியும் என்றுதான் வளர்த்து வருகிறேன். இதிலும் மண்ணை அள்ளி போட்டுட்டாங்க.
வறட்சியின் பிடியால் நீரில்லாமல் விவசாயம் செய்ய முடியால் நகரத்திற்கு ஓடுவது, அங்கேயும் வேலை இல்லாமல் போனதால் பால் மாட்டை வாங்கியாவது பிழைப்பை நடத்தலாம் என்று நினைத்தாலும் போதிய தீவனம் இல்லை. முதலாளித்துவ நிறுவனங்கள் தீவனங்களின் விலையை, பல மடங்கு உயர்த்தி விட்டதால் அநியாய விலைக்கு வாங்கி மாடுகளை பாராமரிக்க வசதியில்லை, தீவனத்தை குறைத்தால் பாலும் குறைகிறது. ஏற்கனவே கடன் சுமையால் திக்குமுக்காடும் விவசாயிகள் ரூ.40,000க்கு வாங்கிய மாட்டை தற்போதுரூ.10,000, 8,000 என நஷ்டத்துக்கு விற்று விட்டு, கல்லுமலைக்கும், மீண்டும் நகரத்தை நோக்கி ஓடுவது என்ற நிலையில், இனி வாழவே முடியாது என்கிற நிலைமையை உருவாக்கி ஒட்டு மொத்தமாக விவசாயிகளையே, நாடோடிகளாக மாற்றி விட்டார்கள்.
பால்கோவா உற்பத்தியாளரின் அவலம்!
பென்னாகரத்தை ஒட்டி பால்கோவா தயாரிக்கும் கம்பெனிகள் இரண்டு செயல்பட்டுகின்றன. இதில் கே.எம்.எம். பால்கோவா தொழில் செய்பவர் கூறும் போது, “நாங்கள் 35 ஆண்டுகளாக இத்தொழிலை செய்து வருகிறோம். ஆனால் இந்த ஓர் ஆண்டில் மட்டும் நிறைய நஷ்டங்களை சந்தித்து விட்டோம். குறிப்பாக 20 லட்சம் வரை இழப்பு ஏற்பட்டுயிருக்கிறது. 2, 3 வருடத்திற்கு முன்பு 15 பேர் வேலைக்கு அமர்த்தி, வேலை செய்தோம். பால் கோவாவும் நிறைய ஆர்டர் கிடைக்கும். இங்கு இருக்கும் சுற்று வட்டார மக்கள் எங்களிடம் தான் பால் எடுத்து வருவார்கள், எந்த பிரச்சனையும் இல்லாமல் இருந்தது.

என்றைக்கு ஆரோக்கியாவும், ஹட்சனும் வந்ததோ அன்றையிலிருந்து பால் உற்பத்தியாளர்கள் அங்கு போக ஆரம்பித்து விட்டார்கள். ஏனென்றால் அவர்கள் விலையை உயர்த்தி கொடுக்கிறார்கள். அதனால் இங்கு பால் எடுத்து வந்தவர்களும் அங்கு போய்விட்டார்கள். இதனால் எங்களிடம் ஏற்கனவே பழக்கமானவர்கள் தான் பால் ஊற்றி வருகிறார்கள். இந்நிலையில் ஆரோக்கியாவும், ஹட்சனும், பால் கொள்முதல் செய்ய மறுத்தாலும், குறைந்த விலைக்கு கேட்பதாலும், அதிக விலைக்கு தீவனம் போட்டு குறைந்த விலைக்கு பால்கொள்முதல் செய்வதால் அவர்களிலும் பல பேர் கட்டுபடியாகமல் மாட்டையே விற்றுவிட்டு வேற வேலைக்கு சென்று விட்டதாக கூறினார்.
அதிக விலை கொடுத்து பால் வாங்கி பால்கோவா செய்தாலும், குறைந்த விலைக்கே கேட்கிறார்கள். இதனால் தயாரித்த பால்கோவா வை ஐசிலே வைத்து பாதுகாத்து கொஞ்சம், கொஞ்சமாக விற்று வருகிறோம். என்ன செய்யறது, இவ்வளவு நாளா செய்து வந்துட்டோம். அதனால விடவும் முடியாமல், தொழிலை செய்யவும் முடியாமல், தவிக்கிறோம் என்று வேதனையோடு கூறினார்.
ஒட்டுமொத்தமாக பால்கோவா செய்பவர்களுக்கு தொழில் இனிப்பாக இல்லை, பாலை உற்பத்தி செய்பவர்கள் ஆரோக்கியமாக இல்லை. சொந்த மக்களையே நாடோடிகளாக்கி அலைய விடும் இந்த அரசமைப்பை மாற்றி மக்கள் அதிகாரத்தை கையிலெடுக்கும் வரை மக்கள் தமது நிம்மதியை பெற முடியாது.
- புஜ செய்தியாளர், பென்னாகரம்.
Create the Society and distribute the Milk to the Public. People will ready to support co-operative Society and Government milk. This is the Good opportunity to prove your Unity and improve your growth.