Sunday, January 24, 2021
முகப்பு கட்சிகள் அ.தி.மு.க சென்னை கே.கே.நகர் டாஸ்மாக் போராட்டம் – பெண் தோழர்கள் கைது !

சென்னை கே.கே.நகர் டாஸ்மாக் போராட்டம் – பெண் தோழர்கள் கைது !

-

chennai kk nagar (1)ழைக்கும் மக்கள் பெருவாரியாக வசிக்கும் சென்னை கே.கே நகர் இ.எஸ்.ஐ மருத்துவமனைக்கு பின்புறமாக அமைந்துள்ள அம்பேத்கர் நகரில் 10-08-2015 அன்று பெண்கள் விடுதலை முன்னணியினர் டாஸ்மாக்கை இழுத்து மூடுமாறு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

சென்னை மாம்பலம் வட்டாட்சியர் அலுவலகத்தின் பின்புறமாக உள்ளது அம்பேத்கர் நகர். உதயம் திரையரங்கிற்கு வளையும் இடத்தில் உள்ள இந்த பகுதியை சென்னைவாசிகள் பலர் பார்த்திருக்கலாம். சுற்றிலும் பெரிய கட்டிடங்கள் இருந்தாலும் இங்கு குடிசைகளில் உழைக்கும் அடித்தட்டு மக்கள் சுமார் ஐநூறு குடும்பங்களாக வசித்து வருகின்றனர். எந்தவொரு அடிப்படை வசதிகள் இன்றியும், கிடைக்கும் கூலி வேலைகளை செய்து கொண்டு வாழ்க்கையை ஓட்டிக்கொண்டு இருக்கின்றனர். ஒரு நாளைக்கு நூறு, இருநூறு கிடைப்பதே அதிகம். ஆனால் இப்பகுதிக்கு மிக அருகிலேயே டாஸ்மாக் கடைகள் அமைந்திருப்பதால் வேலைக்கு செல்லும் ஆண்கள் கிடைக்கும் பணத்தை குடித்தே அழித்துவிடுகின்றனர். நிம்மதியாக பெண்களால் குடும்பம் நடத்த முடியவில்லை.

நேற்று மாலை 3 மணி அளவில் அப்பகுதியில் பெண்கள் விடுதலை முன்னணி அமைப்பை சேர்ந்த தோழர்கள் பகுதி பிரச்சாரத்தை மேற்கொண்டனர். அப்போது ஒவ்வொரு வீடுகளிலும் பெண்கள் தங்கள் கஷ்டங்களை கூறி கண்ணீர் விட்டனர். இந்த சாராயக்கடைகளால் குடும்பம் மோசமாக சீரழிவதைப் பகிர்ந்து கொண்டு டாஸ்மாக் கடைகளை இழுத்து மூட வேண்டுமென தெரிவித்தனர். மேலும், டாஸ்மாக் கடைக்கெதிராக் போராடி சிறை சென்றுள்ள பச்சையப்பன் கல்லூரி மாணவர்களை நிபந்தனை இன்றி விடுவிக்க வேண்டுமெனவும், டாஸ்மாக் கடைகளுக்கெதிரான மக்களின் கோபத்தை வெளிப்படுத்தும் வகையிலும் நேற்று மாலை ஐந்து மணி அளவில் ஜவகர்லால் நேரு சாலை ஓரமாக பெண்கள் விடுதலை முன்னணி சார்பில் அப்பகுதி பெண்கள், குழந்தைகள் உட்பட சுமார் நூறு பேர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

ஆர்ப்பாட்டம் துவங்கியபோது அப்பகுதியில் தண்ணீர் பிடிக்க வேண்டிய நேரமாதலால் பெ.வி.மு தோழர்கள் மற்றும் சில பகுதி பெண்கள் மட்டும் முதலில் முழக்கங்களை எழுப்பினர். எனவே போலிசார் யாரும் வரவில்லை. ஆனால் சிறிது நேரங்கழித்து பெண்கள் ஒவ்வொருவராக வந்திணைய முழக்கங்கள் பெருங்குரலெடுத்து அவ்வழியே சாலையில் செல்வோரிடம் பிரச்சாரமாக அமைந்தது. பெண்களின் எண்ணிக்கை அதிகமான நிலையில் முதலில் இரண்டு போலிசார் இரு சக்கர வண்டியில் வந்திறங்கி ஆர்ப்பாட்டத்திற்கு தலைமை தாங்கிய பெ.வி.மு தோழர் அமிர்தாவிடம் கலைந்து போகுமாறு கூறினார். தோழர்கள் முடியாது என மறுக்கவே, உடனடியாக மற்ற போலிசுக்கு தகவல் கொடுத்து விட்டனர்.

சிறிது நேரத்தில் உளவுப்பிரிவு போலிசார் நால்வர், சீருடை அணிந்த போலிசார் பத்து பேர் மற்றும் நான்கு பெண் போலிசு என போலிசு படையே குவிந்து பரபரப்பை ஏற்படுத்தினார்கள். தங்கள் பகுதிக்காக போராடிக் கொண்டிருப்பவர்களிடையே போலிசு வந்ததை கண்ட அப்பகுதி இளைஞர்களும், ஆண்களும் திரண்டுவிட்டனர். இதனால் கூட்டம் பெருங்கூட்டமாக மாறிவிட்டது.

இதைக் கண்டு அச்சமைடைந்த போலிசார் எப்படியாவது கூட்டத்தை கலைக்க வேண்டுமென பகுதி இளைஞர்களை மீது தடியடி நடத்தப் போவதாக மிரட்டியது. சிறுவர்களிடம் சென்று பயங்காட்டி பூச்சாண்டி வேலை பார்த்தது. பெவிமு தோழர்களை பேசவிடாமல் இடையூறு செய்து கொண்டே இருந்தது. ஆனாலும் இறுதிவரை தோழர்களும், பொதுமக்களும் உறுதியாக முழக்கமிட்டுக் கொண்டே அரசை அம்பலப்படுத்தினர். எப்படி கூட்டத்தை கலைப்பது என்று தெரியாமல் போலிசார் விழிக்கத் துவங்கி விட்டனர்.

கூடி நிற்கும் ஆண்களை துரத்தலாம் என காற்றிலே கையை வீசி மிரட்டினால் ஒரு பக்கமாக் சென்றுவிட்டு மீண்டும் கூடிவிடுகின்றனர். சரி, பெண்களை அனுப்பலாம் என பேசப் போனால் முழக்கங்கள் மூலமாகவே பதில் சொல்லுகின்றனர். அதனால் ஒரு கட்டத்தில், குழந்தைகள் போராடக் கூடாது அதை நாங்கள் அனுமதிக்கமாட்டோம் என கூட்டத்தை கலைக்கும் ‘உத்தி’யை கண்டறிந்தனர். அதற்கு பெண்களோ ‘நாங்கலெல்லாம் போராட வந்துவிட்டால் குழந்தைகள் எங்கே போவர்கள்? டாஸ்மாக்கால் குடும்பங்கள் சீரழியும்போது குழந்தைகள் பாதிக்கப்படவில்லையா?’ என திருப்பி கேட்டவுடன், சிறிது நேரம் அமைதியாகி பின்னர் மீண்டும் புது வழிமுறையில் கூட்டத்தை கலக்க முயன்றனர்.

‘இங்க வந்து ஏம்மா சத்தம் போடுறீங்க? நிறுத்துங்கம்மா? குடிக்கிறவன் எல்லாம் அவனா திருந்தனும்‘ என சமாதானம் பேசியது போலிசு. அதற்கு தோழர்களோ, ‘எங்கள நிறுத்த சொல்லாதே, மொதல்ல கவர்மெண்ட டாஸ்மாக்க நிறுத்த சொல்லு’ என பதிலடி கொடுத்தனர். மேலும் பகுதி உழைக்கும் மக்கள் ஆர்ப்பாட்டத்திற்கு இடையூறாக போலிசு வந்திருப்பதை கண்டு பொறுக்க முடியாமல் போலிசுக்கெதிராக திட்டி தீர்த்தனர்.

பெ.வி.மு தோழர் அமிர்தா பேசுகையில், ‘நம்ம குடும்பம் அழியுதுனு சொல்லி டாஸ்மாக் கடையை மூடுனும்னு போராட்டம் நடத்துனா போலிசு வந்து மிரட்டுது. நம்ம பிரச்சனைக்கு போராடும்போது தடுக்கறதுக்கு போலிசு யாரு? அதனால் இந்த போராட்டத்தை இதோட விடாம நாளைக்கும், அதற்கு அடுத்த நாளும் தொடருவோம். அதுலயும் பெண்கள் பெருந்திரளா கலந்துக்கணும்’ என்றார். முன்னதாக பத்திரிக்கையாளர்களுக்கு பேட்டி அளிக்கையில், ‘டாஸ்மாக் கடைக்கெதிராக போராடி சிறை சென்றுள்ள பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் மற்றும் புமாஇமு தோழர்களை உடனடியாக நிபந்தனையின்றி விடுவிக்க வேண்டும். மேலும் தமிழகத்தில் டாஸ்மாக்கை இந்த அரசே இழுத்து மூடாது. மக்கள் நாமே இழுத்துமூட வேண்டும் என்பதை வலியுறுத்தியும் ஆர்ப்பாட்டம் நடைபெறுவதாக’ பேசினார்.

டாஸ்மாக் கடைக்கெதிரான மக்கள் போராட்டங்களை கண்டு அஞ்சி நடுங்குகிறது இந்த ஜெயா அரசு. அதனால்தான், சாதாரணமாக துவங்கும் போராட்டங்களின் மீது கூட அடக்குமுறையை கட்டவிழ்த்து விடுகிறது. ஆனால் அந்த அடக்குமுறையே மக்கள் போராட உந்து சக்தியாக மாறி போராட்டத்தினை வீரியமாக்குகிறது.

இதனிடையே புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணியைச் சேர்ந்த கல்லூரி மாணவர்கள் இருவர் டாஸ்மாக்கை மூட வலியுறுத்தியும் கைது செய்யப்பட்டவர்களை விடுவிக்கக் கோரியும் சுவரொட்டிகளை ஒட்டிக்கொண்டு இருந்தனர். அவர்களை கைது செய்து டாஸ்மாக் கடைக்கு பாதுகாவலன்தான் நான் என்பதை நிரூபித்த போலீசு, மதுரவாயில் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையை முற்றுகையிடுவோம் என்று அறிவித்து இருந்த பெண்கள் விடுதலை முன்னணி அமைப்பை சேர்ந்த 10 பெண்களை கைது செய்துள்ளது.

  • வினவு செய்தியாளர், சென்னை.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க