Sunday, January 16, 2022
முகப்பு அரசியல் ஊடகம் அவசரநிலை ஆட்சிக்குத் தயாரிப்பு

அவசரநிலை ஆட்சிக்குத் தயாரிப்பு

-

நாடாளுமன்றத்தின் இரு அவைகளையும் தொடர்ந்து பல நாட்கள் கூச்சல், குழப்பம், அமளியில் மூழ்கடித்து முடக்கி வைப்பது என்ற ஆர்.எஸ்.எஸ். – பா.ஜ.க. கும்பலின் அதே அரசியல் உத்தியை இப்போது காங்கிரசுக் கட்சி கையிலெடுத்துக் கொண்டுள்ளது. மற்ற பிற எதிர்க்கட்சிகளோ இரண்டு தரப்புகளுக்கும் மாறிமாறி ஒத்தூதிக் கொண்டிருக்கின்றன. இதனால் ஓட்டுக்கட்சிகளின் அரசியல் மேலும் சீரழிந்து போயுள்ளதோடு, நீண்டகாலமாகவே நெருக்கடியையும் தேக்க நிலையையும் எட்டிவிட்டது. மோடி தலைமையில் பெரும்பான்மை பலத்தோடு ஆட்சி அமைந்தபோதும் இந்தநிலைக்கு விடிவொன்றும் ஏற்பட்டுவிடவில்லை. உலகின் மிகச் சிறந்த அரசியல் அமைப்புமுறையாகச் சொல்லப்படும் நாடாளுமன்ற ஜனநாயகத்துக்கு ஏற்பட்டுள்ள தோல்விதான் என்று சொல்ல வேண்டும்.

மோடி அமைச்சரவைக் கூட்டம்
இது அமைச்சரவைக் கூட்டமா? அல்லது விசாரணைக் கூடமா? (கோப்புப் படம்)

உறங்கிக் கொண்டிருந்த கிழட்டுச் சிங்கமான பா.ஜ.க.வின் அத்வானி, யாரோ தன்னை இடறி விட்டது போலத் திடீரென்று தனது ஓரக்கண்ணைத் திறந்து ஒருமுறை உறுமிவிட்டு, மீண்டும் கண்ணை மூடிக்கொண்டது. “நாட்டில் அவசரநிலை போன்ற சூழ்நிலை மீண்டும் வராது என்ற நம்பிக்கை எனக்கில்லை. இன்றைய இந்திய அரசியலில் தலைசிறந்த தலைமைக்குரிய பண்புக்கான அறிகுறிகள் எதையும் என்னால் காணமுடியவில்லை. அரசியல் தலைமை முதிர்ச்சி அடைந்ததாக இல்லை என்று சொல்லவில்லை. ஆனால், அதன் பலவீனங்கள் காரணமாக அதன் மீது எனக்கு நம்பிக்கையில்லை” என்று கடந்த மாதம் ஒரு நேர்காணலின்போது அத்வானி கூறியுள்ளார். அவர், 1975-1977 ஆண்டுகளில் இந்திரா காந்தியின் அவசரகாலப் பாசிச ஆட்சியின் விளைவுகளை நேரில் அனுபவித்த முதன்மைப் பிரமுகர்களில் ஒருவர். அத்வானியின் மேற்கண்ட கருத்து மோடி தலைமையிலான பா.ஜ.க. ஆட்சியில் நாடு எதிர்கொண்டுள்ள அவசரநிலைப் பிரகடன ஆபத்து குறித்ததா, இல்லையா – என செய்தி மற்றும் சமூக ஊடகங்கள் காரசாரமாக விவாதித்தன.

பா.ஜ.க.வின் மோடி தலைமையால் அவசரநிலைப் பிரகடன ஆபத்து குறித்து அத்வானி அப்படிக் கூறவில்லை; எதிர்த்தரப்பினரால்தான் அவ்வாறான ஆபத்து வளர்ந்துள்ளதாக அத்வானி பேசியதாக பா.ஜ.க.வினர் அபத்தமாகப் புளுகித் தள்ளினர்; மறுபுறம், கட்சியில் தான் தனிமைப்பட்டுவிடும் பயபீதியிலும் அடுத்த குடியரசுத் தலைவர் பதவியும் கைவிட்டுப் போய்விடுமோ என்ற அச்சத்திலும் அத்வானியே தான் முதலில் பேசியதை மழுப்பித் திரித்து விளக்கமளித்தார். இவையெல்லாம் ஒருபுறமிருந்தாலும், மோடி தலைமையிலான ஆர்.எஸ்.எஸ்.- பா.ஜ.க. கும்பலின் அரசு அனைத்தும் தழுவிய தோல்வியை அடைந்து வருகின்றது. அக்கும்பல் தனது அதிகாரத்தைத் தக்கவைத்து கொள்ள ஒரு அவசரநிலைப் பிரகடனம் மூலமாகவோ, வேறுவகையிலோ இந்துத்துவா பார்ப்பன பாசிசத் தாக்குதலைக் கட்டவிழ்த்துவிடும் ஆபத்து நெருங்கிக் கொண்டிருப்பதையே அதன் எத்தணிப்புகள் காட்டுகின்றன.

பொருளாதாரச் சீர்திருத்தங்களை விரைவுபடுத்துவது, அந்நிய முதலீடுகளை ஈர்ப்பது என்ற பெயரில் மோடி அரசு மேற்கொண்ட கண்துடைப்பு நடவடிக்கைகள் எதுவும் ஒரு சிறுஅளவு கூடப் பலன் அளிக்கவில்லை. புள்ளிவிவரங்களில் தில்லுமுல்லுகள் செய்து, நாட்டின் தொழில் வளர்ச்சியும் மொத்த/நிகர உள்நாட்டு உற்பத்தியும் முன்னேற்றமடையத் தொடங்கி விட்டதாக புளுகித் தள்ளியது. வெளிநாடுகளில் சுற்றித்திரிந்து கூவிக்கூவி விற்க முயன்ற ‘மேக்-இன் இந்தியா’ என்ற சரக்கு விலை போகவில்லை. நான்குமுறை முயன்றும் நிலம் கையகப்படுத்தும் சட்டத்தை நிறைவேற்ற முடியவில்லை. நீதிமன்றங்களில் தனது எடுபிடிகளை நீதிபதிகளாக நிரப்புவதற்காகக் கொண்டுவரப்பட்ட சட்டம் உச்சநீதி மன்றத்தில் தடைகோரும் வழக்கில் சிக்கித் தொங்கலில் கிடக்கிறது. அந்த வழக்கில் வாதாடிய அரசுத் தலைமை வழக்கறிஞர் முகுல் ரோத்தகி “தனிமனித அந்தரங்கம் ஒரு அடிப்படை உரிமை கிடையாது; அதை யாரும் அரசியல் சட்ட அடிப்படை உரிமையாகக் கோர முடியாது” என்று வாதாடி மோடி – அமித் ஷா கும்பலின் மனப்போக்கை அப்பட்டமாகவே அறிவித்தார்.

ரிசர்வ் வங்கி ஆளுநரின் “வீட்டோ” அதிகாரத்தைப் பறித்து ஒரு குழுவிடம் கொடுக்கவுள்ளது, மோடி அரசு. அதற்குக் காரணம் நாட்டின் வளர்ச்சியில் நான்குகால் பாய்ச்சலை ஏற்படுத்திவிடும் என்ற மோடி வெறுமனே ஊதிப்பெருக்கிய மேக்-இன் இந்தியா பலூனை பஞ்சர் செய்துவிட்டார், ரிசர்வ் வங்கி ஆளுநர் ரகுராம் ராஜன். தான் நியமித்துள்ள அரசின் செய்தித்தொடர்பு உயர் அதிகாரி தவிர, வேறு அரசு அதிகாரிகள் யாரும் செய்தியாளர்களிடம் பேசக்கூடாது தடைவிதித்துள்ளது மோடி அரசு. அரசின் இரகசியங்களை மக்களும் ஊடகங்களும் தெரிந்துகொள்ளக்கூடாது என்பதற்காக இந்த ஏற்பாடு. மோடி கும்பல் தனது ஆட்சியின் ஓராண்டு நிறைவு நாளில் ஊழலற்ற அரசு நடத்தியதாகப் பீற்றிக்கொண்டது. இந்த அண்டப் புளுகை அம்பலப்படுத்தும் விதமாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா, இராஜஸ்தான் முதல்வர் வசுந்திரா, ம.பி. முதல்வர் சிவராஜ் சௌகான் ஆகியோர் சிக்கிய ஊழல்-அதிகாரமுறைகேடுகளில் அடுத்தடுத்து வெளிவந்து நாடே நாறுகிறது. இவற்றில் ம.பி.யில் நடந்துள்ள வியாபம் முறைகேடுகளில் ஆர்.எஸ்.எஸ். – பா.ஜ.க. கும்பல் நேரடியாக முன்னின்று நடத்தியுள்ளது. அளவிலும் தன்மையிலும் மிகப்பெரிய இம்முறைகேடுகள் நாட்டின் அரசியல் அடித்தளத்தையே உலுக்கியுள்ளன.

நிருபேந்திர மிஸ்ரா, பிரமோத் குமார் மிஷ்ரா, அஜித் குமார் தோவல்.
மோடியின் ஆட்சியில் சர்வ வல்லமை பொருந்தியதாக மாற்றப்பட்டுள்ள பிரதமர் அலுவலகத்தைச் சேர்ந்த அதிகாரிகள் (இடமிருந்து) நிருபேந்திர மிஸ்ரா, பிரமோத் குமார் மிஷ்ரா, அஜித் குமார் தோவல்.

நாட்டின் விளையாட்டு, சினிமா-தொலைக்காட்சி, கல்வி, கலாச்சாரம், அறிவியல், வரலாற்று ஆய்வு அமைப்புகள் முதல் உச்சநீதி மன்றம் வரை அனைத்து நிறுவனங்களிலும் ஆர்.எஸ்.எஸ்.-பா.ஜ.க. கும்பலின் எடுபிடிகளைத் திணித்து வருகிறார்கள். இவை மட்டும் போதாதென்று சி.பி.ஐ., பிரதமர் அலுவலகம் ஆகிய உயர்ந்த அதிகார அமைப்புகளில் அதன் விசுவாசிகளை நியமித்துக்கொண்டுள்ளனர். வெவ்வேறு துறைக்கான அமைச்சகங்கள், அவற்றின் கூட்டுப் பொறுப்பாகவுள்ள அமைச்சகம் மற்றும் நாடாளுமன்ற அமைப்புகளின் தலைமையைத் தாண்டி, கோப்புகளை அனுப்பிப் பிரதமரும் அவரது அலுவலகமும் முடிவுகள் எடுக்கும் வகையில் அதிகாரம் குவிக்கப்படுகிறது. 1975-1977-ம் ஆண்டு அவசரநிலை பாசிச ஆட்சிக்குத் தலைமை தாங்கியதே பிரதமர் அலுவலகம் என்ற அரசியல் சட்டத்துக்குப் புறம்பான ஒரு அதிகார மையம்தான். அதன் மூலம் அதிகாரத்தை முழுமையாகக் குவித்துக்கொண்ட பிரதமர் இந்திரா காந்தி பாசிச ஆட்சியை நடத்தினார்.

மீளமுடியாத அரசியல் – பொருளாதார நெருக்கடியிலும், தப்பிக்க முடியாத இலஞ்ச-ஊழல் முறைகேடு குற்றசாட்டுகளிலும் சிக்கி, அனைத்தும் தழுவிய தோல்வியிலும் சிக்கிகொண்டுள்ள மோடி அரசும் அவ்வாறான ஏற்பாட்டை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது.

– தலையங்கம்
_________________________________
புதிய ஜனநாயகம், ஆகஸ்ட் 2015
_________________________________

  1. அத்வானி என்ற கிழட்டு சிங்கம் ஜனாதிபதி பதவியை பெரும் பொருட்டு நேர்காணலின் போது சின்ன அளவில் அரசியல் சதுரங்க காய் நகர்த்தலை ஆடியுள்ளது. அதற்கு வேண்டியது கிடைக்குமாயின் அவசர நிலையெல்லாம் அதற்கு ஒரு பொருட்டே அல்ல . அது அதே சட்டத்தில் இன்னும் 3 ஆண்டுகள் கழித்து ஜனாதிபதி பதவியை பெற்று அடைந்த பின்னர் கையப்பம் இட்டு மோடிக்கு அவசர நிலை சட்டத்துக்கு ஆதரவாக சேவகம் செய்ய கூட தயங்காது என்பதை காணத்தானே போகின்றோம். அல்லது அத்வானி தொடர்புடைய பாபர் மசூதி இடிப்பு வழக்கில் இன்னும் தீர்ப்பு வராத நிலையிலும் அவர் ஜனாதிபதி பதவியை பெற முனையும் தருணத்தில் அவருக்கு எதிராக அவரின் சங்கபரிவார் எதிர்பாளர்கள் “மோடி மஸ்தான்” வேளையில் ஈடுபட்டு அந்த வழக்கின் மூலம் அத்வானி என்ற கிழட்டு சிங்கத்துக்கு வயதான காலத்தில் நெருக்கடியை கொடுக்க முனைவார்கள் அதன் மூலம் கிழட்டு சிங்கத்தை ஓரம் கட்டிவிடுவார்கள் என்பதிலும் உண்மை இல்லாமல் இல்லை.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க