privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புசெய்திடாஸ்மாக்கை இழுத்து மூடு - தொடரும் போராட்டங்கள்

டாஸ்மாக்கை இழுத்து மூடு – தொடரும் போராட்டங்கள்

-

1. தருமபுரி

டாஸ்மாக்குக்கு எதிராக போராடிய புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி,  பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் தாக்கப்பட்டு, கைது செய்யப்பட்டதை கண்டித்தும், டாஸ்மாக்கை மூடக் கோரியும், பென்னாகரம் அரசு பள்ளி பு.மா.இ.மு மாணவர்கள் சாலை மறியல்

தருமபுரி மாவட்ட பு.மா.இ.மு ஒரு வாரமாக மாணவர்கள் மத்தில் பிரச்சாரத்தை மேற்கொண்டது. அதனடிப்படையில் 12.8.2015 அன்று மாலை 4.30 மணியளவில் 200-க்கும் மேற்ப்பட்ட அரசுப்பள்ளி மாணவ, மாணவிகளை ஒருங்கிணைத்து பேருந்து நிலைய நுழைவாயிலில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுப்பட்டனர். அப்போது மாணவர்கள் விண்ணதிரும் முழக்கமிட சுற்றியிருந்த 500-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் குவிந்தனர்.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]

உடனே விரைந்து வந்த காவல் துறையினர் மாணவர்களின் போராட்டத்தைக் கண்டு, மறியலில் ஈடுப்பட்ட மாணவர்களிடம், “யாரைக்கேட்டு இப்படி செய்றீங்க, நீங்களே அதிகாரத்தை கையிலெடுத்துக்காதிங்க, இந்த மாதிரி செஞ்சா உங்க ஸ்கூல் ஹெட்மாஸ்டரிடம் சொல்லி உங்கள டிஸ்மிஸ் பண்ணிருவேன். கைது செய்து கேஸ் போட்டு உங்க லைஃப ஸ்பாயில் பண்ணிடுவேன். எதுக்குடா இதை செய்யிறீங்க” என்று அச்சுறுத்தியது.

tasmac-protest-dharmapuri-students-3“பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் தாக்கப்பட்டு கை, கால், இடுப்பு உடைத்து சிறையில் தள்ளப்பட்டதை கண்டித்தும், அவர்களை உடனடியாக விடுதலை செய்ய கோரியும், மாணவர்களை சீரழிக்கும் டாஸ்மாக்கை உடனடியாக மூடக்கோரியும் எங்களுடைய உரிமைக்காக போராடுகிறோம்” என்று உறுதியோடு மாணவர்கள் பேசியதை பொறுத்துக்கொள்ளாத காவல் துறை கலைத்து விட முயன்றனர். அதற்கு அஞ்சாமல் போராட்டத்தை தொடர்ந்து நடத்தினர்.

பொதுமக்கள் பேருந்தை நிறுத்தியும், போராட்டத்தில் கலந்து கொள்ளாத மற்ற மாணவர்களையும் கலந்து கொள்ளுமாறும் கூறி மாணவர்களை போராட்டத்தில் அமர்த்தியும் ஆதரவை தெரிவித்தனர்.

காவல்துறை போராட்டத்தை கலைக்க முயன்றது.

மாணவர்கள் “இந்த அடக்குமுறைக்கு நாங்கள் பயப்பட மாட்டோம்,டாஸ்மாக்கை மூடும் வரை போராடுவோம்.” என்று அறிவித்து அன்றைய போராட்டத்தை முடித்துக் கொண்டனர். இந்த மாணவர்களின் உறுதிமிக்க போராட்ட உணர்வானது அங்கு கவனித்த மக்களையும் போராட அறைகூவி அழைப்பதாக அமைந்தது.

இப்படிக்கு
புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி,
தருமபுரி மாவட்டம்.
81480 55539.

2. கரூர்

மிழகமெங்கும் டாஸ்மாக்கை மூடக் கோரி மாணவர்கள் இளைஞர்களை அணிதிரட்டி பு.மா.இ.மு தலைமையில் கல்லூரிகளில் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது.

டாஸ்மாக்கை மூடக் கோரியும் கைது செய்யப்பட்ட பச்சையப்பன் கல்லூரி மாணவர்களின் கைதை கண்டித்தும் கடந்த 07-08-2015 அன்று கரூரில் சுவரொட்டி ஒட்டப்பட்டு 6 தோழர்கள் மீது பொய்யான வழக்கு பதிவு செய்யப்பட்டு சிறையில் அடைத்தது போலீஸ். 12-08-2015 அன்று நீதி மன்றத்தில் நிபந்தனை ஜாமீன் கிடைத்தது.

பிணையில் வெளிவந்த தோழர்கள் அடுத்த நாள் காலையிலேயே கரூர் நகர மைய பகுதியான ஜவகர் பஜாரில் சிவப்பு சீருடையுடன் கம்பீரமாக பிரச்சாரத்தை தொடர்ந்தனர்.

டாஸ்மாக்கை மூடச் சொல்லி போராட்டம் நடத்திய பொது மக்கள், தோழர்கள் ஆகியோரை விடுதலை செய்யக் கோரியும், டாஸ்மாக்கை நிரந்தரமாக மூடக்கோரியும் நடந்த இந்த பிரச்சாரம் கடைக்காரர்கள், தரைக்கடை வியாபாரிகள், தள்ளுவண்டிக்காரர்கள், பொது மக்களிடையே வரவேற்பைப் பெற்றது.

பிரச்சாரம் படங்கள்

 

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]

பிரச்சாரம் செய்யும் தோழர்களை மோப்பம் பிடித்து தேடி வந்த போலீசார் விசாரித்து விட்டு சென்று விட்டனர். பொய் வழக்கு போட்டு தோழர்களை முடக்கி விட்டதாக இறுமாந்திருந்த போலீசுக்கு தோழர்களின் இந்த நடவடிக்கை சரியான பதிலடியாக அமைந்தது.

பொது மக்களிடையே டாஸ்மாக்கை மூடவேண்டும் என்ற வேட்கையும் அதே நேரத்தில் அதை யார் செய்வது என்ற கேள்வியும் இருந்தது. செய்யாறு- அழிவிடைதாங்கி, பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் வழியில் நாம்தான் செய்ய வேண்டும் என்று உணர்த்தியதுடன் போலீஸ் மீதான அச்சத்தையும் களைந்திருக்கின்றனர்.

பெருந்திரளாக திரட்டப்படும் மக்கள் பலத்தோடு அரசின் அடக்குமுறைகளை முறியடிப்போம்.

டாஸ்மாக்கை மூடும் வரை ஓயாது எங்கள் போராட்டம் என்பதை பறைசாற்றும் வகையில் இப்பிரச்சாரம் அமைந்தது.

இப்படிக்கு

புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி,
கரூர்

3. பு.ஜ.தொ.மு, கும்மிடிப்பூண்டி

மூடு டாஸ்மாக்கை! குடிகெடுக்கும் அரசிடம் கெஞ்சாதே! தடுக்க வரும் போலீசுக்கு அஞ்சாதே!

tasmac-protest-gpd-demo-2புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் சார்பாக மூடு டாஸ்மாக்கை என்ற தலைப்பில் கும்மிடிப்பூண்டியில் விண்ணதிரும் முழக்கத்துடன் ஆர்பாட்டம் நடத்தப்பட்டது. தமிழகம் முழுதும் பற்றிப் பரவி எதிரொலித்துக் கொண்டிருக்கும் மூடு டாஸ்மாக்கை! என்ற முழக்கத்தை பச்சையப்பன் கல்லூரியில் தொடங்கி பட்டி தொட்டியெல்லாம் முழங்கச் செய்த புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணியை சேர்ந்த தோழர்கள் சிரையில் தாக்கப்பட்டதை கண்டித்து நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்துக்கு புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் திருவள்ளூர் கிழக்கு மாவட்ட செயலாளர் தோழர் கே.எம்.விகந்தர் தலைமை தாங்கினார்.

தலைமையுரையில், “கும்மிடிப்பூண்டி தொழிற்பேட்டையை விட்டு வெளியேறும் தொழிலாளிகள் எந்த வழியாக சென்றாலும் டாஸ்மாக்கை தரிசிக்காமல் செல்லக் கூடாது! என்ற வகையில் தமிழக அரசு பக்காவாக பிளான் போட்டு டாஸ்மாக் கடையை வைத்து தொழிலாளிகள் பணத்தை சிந்தாமல் சிதறாமல் கொள்ளையடித்து வருவதை” அம்பலப்படுத்தினார். “டாஸ்மாக் நடத்துவதற்கான நோக்கம் வருமானம் மட்டுமல்ல!, முதலாளிகளிடம் உழைப்பை பறிகொடுக்கும் தொழிலாளி வர்க்கமானது, தான் ஏன் கொத்தடிமையாக வாழ்கிறோம் என்பதை பற்றியோ, தனது உரிமைகள் பற்றியோ, சிந்தித்துவிடாமல் இருக்க, அவனது செலவிலேயே அவனுக்கு போதையூட்டுவதன் மூலமாக தொழிலாளர்களை உணர்வற்றவர்களாக மாற்றும் கேவலமான செயலை இந்த பாசிச ஜெயா அரசு திட்டமிட்டு செய்துவருகிறது” என விளக்கி அரசின் மற்றொரு முகத்தை திரைகிழித்து காண்பித்தார்.

அடுத்து பிரச்சார குழுவினரால் மூடு டாஸ்மாக்கை மூடு! என்ற மக்கள் கலை இலக்கியக் கழக மைய கலைக்குழுவின் பாடல் பாடப்பட்டது.

இதையடுத்து பு.ஜ.தொ.மு. மாநில இணைச் செயலாளர் தோழர் ம.சி.சுதேஷ்குமார் கண்டன உரையாற்றினார். “தமிழகத்தில் டாஸ்மாக்கை மூடு! என்ற முழக்கத்தை ஓட்டுக்கட்சிகள் என்ன நோக்கத்தில் பயன்படுத்தி வருகின்றன, இந்தப் போராட்டத்தில் அவர்களின் வரம்பு என்ன” என்பதையும், “புரட்சிகர அமைப்பான நாம் இந்த முழக்கத்தை முன்னெடுத்து போராடும் நோக்கம் என்ன?” என்பதையும் விவரித்து பேசினார். “அரசுக்கு டாஸ்மாக்கை விட்டால் வருமானம் இல்லை என அம்மாவின் அல்லக்கைகள் பரப்பி வரும் கருத்து எவ்வளவு அயோக்கியத்தமானது” என்பதையும் “தமிழக அரசுக்கு வருமானம் வரக்கூடிய அரசு நிறுவனங்களும் சொத்துக்களும் அரசியல்வாதிகளாலும் அதிகாரிகளாலும் கொள்ளையடிக்கப்படுவதையும்” அம்பலப்படுத்தினார்.

மேலும், “தொழிலாளி ஆகிய நாம், மாணவர்கள் தொடங்கி வைத்துள்ள இந்த போராட்ட பாதையை தொடர்ந்து கொண்டு செல்ல வேண்டியுள்ளது. குடிகெடுக்கும் அரசிடம் கெஞ்சி பயனில்லை, ஆயிரம் மனுக்கள் கொடுத்தாலும் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் தமிழக பெண்களின் தாலியறுப்பதை நிறுத்தப் போவது இல்லை.

ஆளும் அருகதையை இழந்து நிற்கும் அரசை கண்டு அஞ்சாமல் மக்களே அதிகாரத்தை கையிலெடுக்கும் போராட்டத்தை நடத்த வேண்டும். யாரோ உயிரைக் கொடுத்து போராடினால் அதை ஓட்டுக்காக பயன்படுத்த நாக்கை தொங்கப் போட்டுக்கொண்டு அலையும் ஓட்டுப் பொறுக்கி கட்சிகளை இனிமேலும் நம்பாதீர்கள்! புரட்சிகர அமைப்புகளுடன் இணைந்து டாஸ்மாக்குகளை அடித்து நொறுக்குங்கள்” என அறைகூவல் விடுத்தார்.

நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்ட இந்த ஆர்ப்பாட்டம் கும்மிடிப்பூண்டி பகுதியில் டாஸ்மாக்கை நொறுக்க வேண்டும் என்ற தாக்கத்தை ஏற்படுத்துவதாக அமைந்தது.

ஆர்ப்பாட்டம் தொடக்கத்தில் மூன்று போலிசார் மட்டுமே இருந்தனர். ஆனால் நூற்றுக் கணக்கான தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் கலந்துக் கொள்வதை கண்ட உளவு துறை போலிசு “யோவ்! இப்ப இருக்குற பிரச்சனையில இவனுங்க 4 பேர் இருந்தாலே அடங்க மாட்டானுங்க, முதல்ல போலிசு போர்ஸ்ச அதிகபடுத்துயா” என அலற அடுத்த 5 நிமிடத்தில் ஒரு வேன் நிறைய போலிசை குவித்து பீதியடைய வைக்க முயன்றனர். ஆனால் தொழிலாளர்களின் போர்முழக்கமும், கட்டுப்பாடும் போலிசை ஒதுங்கி நிற்க வைத்தது.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]

இது முடிவல்ல, தொடக்கம் தான்! டாஸ்மாக்கை மூடும் வரை எங்கள் போராட்டம் ஓயாது.

மறுநாள் செங்குன்றத்தில் திட்டமிட்டிருந்த ஆர்ப்பாட்டத்திற்கு போலீசு அனுமதி இறுதி நேரத்தில் மறுக்கப்பட்டது. “கருத்து சுதந்திரம் பறிக்கப்பட்டு விட்டது. இனி வீதியில் தான் போராட வேண்டும்” மென என போலீசு மறைமுகமாகவே சுட்டிக்காட்டியுள்ளது.

பு.ஜ.தொ.மு வின் போராட்டங்கள் இனி தொடரும்..

தகவல்
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி,
திருவள்ளூர்

4. பு.ஜ.தொ.மு, காஞ்சிபுரம்

tasmac-protest-ndlf-kpm-demo-1மூடு டாஸ்மாக்கை! என்ற தலைப்பில் டாஸ்மாக்கை தகர்த்த புரட்சிகர மாணவர்-இளைஞர் முன்னணி தலைமையிலான மாணவர்களுக்கு அடி-உதை-சிறையைக் கண்டித்து புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி, காஞ்சிபுரம் மாவட்டத்தின் சார்பில் காஞ்சிபுரம் சேக்குபேட்டை தாலுக்கா ஆபீஸ் எதிரில் 14-08-2015 அன்று மாலை 4.30 மணியளவில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]

தகவல்
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி,
காஞ்சிபுரம்

5. நெல்லை வழக்கறிஞர்கள்

tasmac-protest-nellai-lawyers-poster

  • தமிழகம் முழுவதும் டாஸ்மாக் ஒழிப்புப் போராட்டத்தில் ஈடுபட்ட அனைவரின் மீதும் போடப்பட்ட வழக்குகள் அனைத்தையும் வாபஸ் பெற வேண்டும்.
  • டாஸ்மாக்கிற்கு எதிராக மக்களோடு நின்று போராடி கைதாகியுள்ள “மக்கள் அதிகாரம்” அமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் ராஜு, சென்னை பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் மற்றும் தமிழகம் முழுவதும் கைது செய்யப்பட்டுள்ள அனைவரையும் உடனடியாக நிபந்தனையின்றி விடுதலை செய்ய வேண்டும்.
  • தமிழகம் முழுவதும் பூரண மதுவிலக்கை உடனே அமல்படுத்திட வேண்டும்.
  • ஒவ்வொரு குடும்பத்தையும் நாசமாக்கி பெண்களின் தாலியறுத்து, மாணவர்கள், இளைஞர்கள் எதிர்காலத்தை திட்டமிட்டே சீரழித்து வரும் “டாஸ்மாக்” கடையை அரசு உடனே மூட வேண்டும். இல்லையெனில் மக்களே அதிகாரத்தை கையிலெடுத்து அவரவர் ஊர்களில் டாஸ்மாக் கடையை மூடுவோம்.

போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி நெல்லை மாவட்ட நீதிமன்ற வழக்கறிஞர்கள் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]

இழுத்து மூடுவோம் இழுத்து மூடுவோம்
குடிகெடுக்கும் டாஸ்மாக்கை இழுத்து மூடுவோம்!

விடுதலை செய்! விடுதலை செய்!
டாஸ்மாக் போராட்டத்தில் சிறைசென்ற
மாணவர்கள் – வழக்கறிஞர்கள் – பொதுமக்களை
விடுதலை செய்! விடுதலை செய்!

வாபஸ் பெறு! வாபஸ் பெறு!
டாஸ்மாக் போராட்டத்தில் போடப்பட்ட
வழக்குகள் அனைத்தையும் வாபஸ் பெறு! வாபஸ் பெறு!

டாஸ்மாக்குக்கு எதிராக போராடிய பச்சையப்பன் கல்லூரி மாணவர்களை வெறி கொண்டு ஆக்கிய காக்கிச் சட்டை ரவுடிகளை – சிறைத்துறை காவலர்களை கைது செய்! சிறையில் அடை!

சசிபெருமாளை கொலை செய்தது
தமிழக அரசு! தமிழக அரசு!

போன்ற முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

பத்திரிகை செய்திகள்

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]

தகவல்
மக்கள் உரிமை பாதுகாப்பு மையம்,
திருநெல்வேலி
தொடர்பு – 9442339260

6. சிவகங்கை

11-08-2015 அன்று சிவ கங்கை பேருந்து நிலையம் அருகே மக்கள் அதிகாரம் அமைப்பின் மாவட்ட பொறுப்பாளர் மாணிக்கம் தலைமையில் மூடு டாஸ்மாக்கை என்ற முழக்கத்துடன் டாஸ்மாக் முற்றுகையிடச் சென்ற 30 பேரை டவுன் போலீசார்  கைது செய்தனர்.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]

தகவல்
மக்கள் அதிகாரம்,
சிவகங்கை

7. புதுச்சேரி

  • புதுச்சேரி,மற்றும் தமிழகமெங்கும் உள்ள டாஸ்மாக்-பார்,சாராயக்கடைகளை இழுத்து மூடு!
  • டாஸ்மாக்-க்கு எதிராக போராடிய மாணவர்கள்,வழக்கறிஞர்கள்,பொதுமக்கள் அனைவரையும் நிபந்தனையின்றி விடுதலைச் செய்!

என்ற தலைப்பின் கீழ் புதுச்சேரி முழுவதும் இரண்டு நாட்கள் மக்கள் மத்தியில் பிரச்சாரம் செய்யப்பட்டு இன்று 13-08-2015 மாலை 4 மணி அளவில் சாரம் பெரியார் சிலை அருகில் தொழிலாளி வர்க்கத்தைத் திரட்டி பேரணியாக மக்கள் குழுமி இருக்கும் நேரு வீதியின் வழியாக சென்று கவர்னர் மாளிகை முன்பு எழுச்சிமிகு ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

பு.ஜ.தொ.மு.வின் மாநில செயலாளர் தோழர் லோகநாதன் தனது கண்டனவுரையில், “இந்த அரசு மக்களுக்கான அரசு என்று சொல்லிக் கொண்டே டாஸ்மாக்கை மூடு என போராடும் மாணவர்கள், வழக்கறிஞர்கள், ஓட்டு போட்ட மக்கள் மீது போலிசு ரவுடி கும்பலை விட்டு அடித்து கைது செய்து பொய் வழக்கு போட்டுள்ளது. எனவே இந்த அரசு மக்களுக்கானதும் இல்லை போலிசு மக்கள் நண்பனும் இல்லை. இந்த அரசின் சமூக விரோத செயலை ஓட்டு போட்டோ அல்லது மனுகொடுத்தொ தடுக்கமுடியாது தண்டிக்கவும் முடியாது. ஒரே வழி மக்களே, தொழிலாளி வர்க்கமே தீர்வு. குடி கெடுக்கும் அரசை மக்கள் அதிகாரம் கொண்டுதான் தண்டிக்க முடியும்” என்று எழுச்சியுரை ஆற்றி முடித்தார்.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]

மக்கள் மத்தியில் ஆச்சரியமும் சரியான முயற்சி என்று நம்பிக்கை வைத்து பாராட்டினார்கள். மேலும் இந்த போராட்டம் இந்த மாநிலத்தில் எடுப்பதற்கு உங்களுடைய தைரியத்தை பாராட்ட வேண்டும் என்றார் ஒரு தரைகடை வியாபாரி.

புஜ செய்தியாளர்,
புதுச்சேரி.

8. திருவாரூர்

திருவாரூர் மாவட்ட பு.மா.இ.மு சார்பாக மாவட்டத்தில் உள்ள கல்லூரிகள், பள்ளிகள் மற்றும் மக்கள் கூடும் இடங்களில் சுவரொட்டிப் பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது.

tasmac-protest-thiruvarur-rsyf

9. திருநெல்வேலியில் மக்கள் அதிகாரம் அமைப்பினரின் டாஸ்மாக் எதிர்ப்பு முற்றுகைப் போராட்டம்!

18-08-2015 அன்று மாலை 5 மணி அளவில் நெல்லையில் உள்ள ஜங்சன் பேருந்து நிலைத்தில் மக்கள் அதிகாரம் அமைப்பு தோழர்களின் டாஸ்மாக் எதிர்ப்பு முற்றுகைப் போராட்டம் நடந்தது. நெல்லை, தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள தோழர்கள் முழக்க அட்டைகளையும் பேனரையும் பிடித்தபடி பேருந்து நிலைத்தின் உட்பகுதியில் அணிவகுத்தனர். பறையொலியுடன் டாஸ்மாக்கை மூடுபடி முழக்கங்களை எழுப்பியபடி பேரணியாக டாஸ்மாக்கை முற்றுகையிட சென்றனர்.

பத்திரிகையாளர்கள் சூழ கம்பீரமாக முழக்கம் எழுப்பியபடி வந்த அணிவகுப்பைக் கண்டு பதறியபடி ஓடிவந்து தடுத்தனர் சில காவலர்கள். மறித்த காவலர்களை தள்ளியபடி முன்னேறியது பேரணி. இதைப்பார்த்து இருபுறமும் நெருங்கிவந்த மக்களிடையே பிரசுரங்களை விநியோகித்தனர் தோழர்கள்.

பிரசுரத்தை வாங்கிய மக்கள் தமக்குள் கூட்டமாக கூடி விவாதிக்க ஆரம்பித்தனர். அதில் ஒரு 60 வயது தாய் “டாஸ்மாக்கை மூடுன்னு கெஞ்சக்கூடாது; கடைய அடிச்சு நொறுக்கணும்; அதுக்கு நா வருவேன்” என்று உரத்துக்கூறினார். சுற்றியிருந்தவர்களும் அதை ஆமோதித்தனர். இப்படி பொதுமக்களும் தமக்குள் பேசியபடி நம் பின்னே தொடர்ந்து வர ஆரம்பித்தனர்.

பேருந்து நிலைத்தின் வெளியேறும் வாயிலை காவலர்கள் மறித்து நின்றனர். சாலையில் போலீசு ஜீப்களும் கைதுசெய்து கொண்டுசெல்ல பெரிய வாகனமும் வந்து சேர்ந்து சாலையை அடைத்தது. பேருந்து நிலையத்தின் உள்ளிருந்தவர்களுடன் ஆட்டோ ஓட்டுனர்களும், மாணவர்களும் இரு சக்கர வாகனத்தில் சாலையில் செல்பவர்களும் இணைந்து நம்மை சூழ்ந்தனர்.

மேற்கொண்டு டாஸ்மாக்கை நோக்கி முன்னேற முடியாத நிலையில் அங்கேயே ஆர்ப்பாட்டமாக போராட்டம் தொடர்ந்தது. முன்னின்ற தோழர் ராமச்சந்திரன் டாஸ்மாக்கை நோக்கி செல்ல காவலர்களை தள்ள, காவலர்கள் தோழரை இழுத்து அப்புறப்படுத்த முயல கைகலப்பு ஏற்படும் நிலை உருவானது; தோழரை கீழே தள்ளினர். உடனே தோழர் அரிராகவன் உதவிக்கு சென்று போலீசுடன் “ சார் உங்க குடும்பத்து பெண்களின் பாதுகாப்புக்கும் சேர்த்துதான் போராடறோம்” என்று வாதிடவே போலீசின் பிடி சற்றே தளர்ந்தது.

சில காவலர்களால் தோழர்கள் பிடித்திருந்த முழக்க அட்டை பிய்த்தெறியப்பட்டது. ஒரு அதிகாரி “எங்களுக்கும் கடையை மூடணும்தான் ஆசை. ஆனா டிப்பார்ட்மெண்ட் உத்தரவுக்கு கட்டுப்பட்டு கடைக்கு காவல் நிக்கவேண்டியிருக்கு” என்று ஆதங்கத்தை கொட்டினார். உதவி கமிசனர் கந்தசாமி மட்டுமே மிடுக்குடன், கடுப்புடன் சுற்றி சுற்றி வந்து பொதுமக்களை விரட்டுவதை முடுக்கிவிட்டார். என்னதான் லத்தியை சுழற்றினாலும் பொதுமக்கள் அப்பொழுது பின்வாங்குவதும் மீண்டும் முன்வந்து சூழந்து நிற்பதுமாக இருந்தனர்.

வேறு வழியின்றி தோழர்களை குண்டுகட்டாக தூக்கிச்சென்று வேனில் ஏற்றினர். உடன் இருந்த தோழர்கள் சிலரை பொதுமக்கள் என்று கருதி ஒதுக்கித்தள்ளினர். அதே நேரம் தமது செல்போனில் போராட்டத்தை பதிவுசெய்த ஒரு இளைஞரை ஏதோ குற்றவாளியை கையும் களவுமாக பிடிப்பதுபோல பிடித்து வலுக்கட்டாயமாக வேனுக்கு இழுத்துவந்தனர். அவர் போராட்டத்தில் ஈடுபட்டவரல்ல என்று உள்ளிருந்த தோழர்கள் காவலர்களை கண்டிக்கவே அந்த இளைஞரை விடுவித்தனர். இப்படி 9 பேரை வேனில் ஏற்றி முடித்தவுடன் புதிய சிக்கலை எதிர்கொண்டது காவல்துறை.

போராட்டத்தில் முன்நின்ற பெண் தோழர் ஜோதி மற்ற தோழர்களைப்போலவே தானாக கைதாக மறுத்தார். “பொம்பள போலீச கொண்டுவராம உன்னை இவங்க தொட முடியாது; தைரியமா உக்காருமா” என்று சுற்றியிருந்த பொதுமக்களில் ஒருவர் உரத்துக்கூறி உற்சாகப்படுத்த தனிஒருவரின் தர்ணா ஆரம்பமானது. இதனால் சுற்றியிருந்த பொதுமக்கள்மேல் மூர்க்கமாக பாய்ந்தது போலீசு. ஒரு ‘குடி’மகன் சவுண்டு விடவே லத்தியால் பதில் தந்தனர்.

இந்த காக்கிச்சட்டைகளின் அராஜகப் போக்கால் வெறுப்படைந்த மக்கள் தமக்கே உரிய மொழியில் போலீசாரை திட்டித்தீர்த்தனர். வேனில் இருந்த தோழர்களோ போலீசின் அராஜகங்களை கண்டித்து முழக்கமிட்டனர். தோழர் தங்கபாண்டியன் படியில் நின்றபடி பத்திரிக்கை நிருர்களுக்கு பேட்டியும் தந்தார். இதனால் ஆத்திரமடைந்த காவல்துறை வண்டியை எடுக்க எத்தனித்தது. தோழர்களோ “எங்கள் பெண்தோழரை விட்டுவிட்டு வரமாட்டோம்; வண்டியை எடுக்காதே” என்று எதிர்த்து முறியடித்தனர். பேருந்து நிலையத்தின் வாயிலில் நடந்த தர்ணாவால் உள்ளிருந்த பேருந்துகள் வெளிவர முடியாமல் வரிசை கட்டி நின்றன. சாலையில் தோழர்களை ஏற்றிய வண்டியையும் எடுக்கமுடியாமல் அங்கும் கூட்டம் கூடி போக்குவரத்து ஸ்தம்பித்தது.

பள்ளி மாணவர்கள் ஆர்வத்துடன் வந்து தனி நபராக நின்று முழங்கிய நம் தோழரிடம் பிரசுரம் வாங்கிச் சென்றனர். தனியார் தொலைக்காட்சி சேனல்கள் பேட்டியெடுத்தன. ஒருவழியாக 20 நிமிடத்துக்கு பிறகு பெண்காவலர்களை வரவழைத்து தோழர் ஜோதியையும் கைது செய்தனர். அதன் பின்னர் அனைவரையும் பாலம் காவல் நிலைத்திற்க்கு கொண்டுசென்று இரவு 8.00 மணி வரை வைத்திருந்து விடுவித்தனர். மக்களின் ஆதரவால் உற்சாகத்துடன் கைதாகி வெளியில் வந்த தோழர்கள் அடுத்தகட்ட போராட்டங்களுக்காக மக்களைத்திரட்டும் வேலையில் இறங்கியுள்ளனர்.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]

தகவல்
மக்கள் அதிகாரம்,
திருநெல்வேலி

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க