privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புமறுகாலனியாக்கம்தொழிலாளர்கள்மாணவர்களை விடுதலை செய் ! கோவை, சிவகிரி ஆர்ப்பாட்டங்கள்

மாணவர்களை விடுதலை செய் ! கோவை, சிவகிரி ஆர்ப்பாட்டங்கள்

-

1.கோவையில் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி சார்பில் பச்சையப்பன் கல்லூரி மாணவர் போராட்டத்தை ஆதரித்து நடத்தப் போகும் ஆர்ப்பாட்டத்துக்கு அனுமதி கேட்க சென்ற பொழுதே, காவல்துறை தனது வழக்கமான சீண்டலுடன் ‘உங்க தோழருங்க, உங்க அமைப்புல இருக்கற தோழர்களை தூண்டி விட்டு அனுமதி கேட்காம ஒரு ஆர்ப்பாட்டம் செய்வீங்க, அப்புறம் நல்ல புள்ள மாதிரி ஒரு ஆர்ப்பாட்டம் அனுமதி கேட்டும் பண்ணுவீங்களா..?’ என்று கேட்டார். எப்படியோ சமாளித்துவிட்டு ஒரு வாய்மொழி உத்தரவை பெற்றுக் கொண்டு வந்தோம்.

கோவை பு.ஜ.தொ.மு ஆர்ப்பாட்டம்மீண்டும் ஆர்ப்பாட்டத்துக்கு முந்தைய நாள் அழைத்து, ‘நீங்க காலைல வந்து இன்ஸ்பெக்டரை பாத்துட்டு போயிருங்க’ எனக் கூறிய போதே எரிச்சல் கூடுதலாயிருந்தது.

“சுவரொட்டியை அடித்து ஒட்டியாயிற்று. இப்போது எதற்கு கூப்பிட்டு தொலைக்கிறார்கள். ரத்து செய்து விட்டால் என்ன செய்யலாம்” என பல்வேறு குழப்பங்களுடன் சென்றோம். மீண்டும் அதே போல் பல்லவி பாடிவிட்டு, ‘செஞ்சிலுவை சங்கத்திலிருந்து கொஞ்சம் பின்புறம் நடத்திக்கங்க’ என மாற்று இடத்தை கூறினர்.

இப்போது புதிதாக அந்த பகுதி காவல் நிலையத்திற்கு வந்திருக்கும் ஆய்வாளர், “சி‌.ஆர்‌.ஐ முதலாளி புகழ்” சோதி. புதுமையை செய்கிறேன் என இவர்கள் அளித்திருக்கும் ஆர்ப்பாட்ட இடம் நேரடியாக பந்தயசாலை காவல் நிலையத்தின் வாசலே. இருபுறமும் சாலைகள் மட்டுமே. மக்களின் நேரடிப் பார்வை மிகக் குறைவு.

இப்படியெல்லாம் நிபந்தனை போட்டு குறுக்குவதற்கு நேரடியாக பந்தயசாலை காவல்நிலையத்தினுள்ளேயே வைத்துவிட்டால் இன்னும் பாதுகாப்பாக இருக்குமே என்கிற அளவுக்கு எரிச்சல் வந்தது. சரி, அவர்களின் இடத்துக்கே வரச் சொல்லி அவர்களே அனுமதி கொடுத்து அவர்களை திட்டச் சொல்கிறார்கள். அதை சரியாக பயன்படுத்திக் கொள்வோம் என முடிவெடுத்து அவசர அவசரமாக வேலைகளை செய்து முடித்து ஆர்ப்பாட்டத்துக்கு ஆயத்தமானோம்.

கோவை பு.ஜ.தொ.மு ஆர்ப்பாட்டம்மாலை சரியாக 5.30 க்கு பு.ஜ.தொ.மு வின் மாவட்டத் தலைவர் தோழர் குமாரவேலுவின் தலைமையில் துவங்கிய ஆர்ப்பாட்டம் தோழர் கவியரசு மற்றும் தோழர் சம்புகன் ஆகியோரின் முழக்க ஒலியில் ஆர்ப்பரித்தது.

தோழர் குமாரவேலு தனது தலைமையுரையில், “இந்த டாஸ்மாக் தான் அரசாங்கத்தோட உயிர்மூச்சு மாதிரி நடத்திக்கிட்டு இருக்காங்க, இது ஒரு சமுதாய சீர்கேடு. இன்னிக்கு ஒரு பெண் குழந்தையை அதன் தகப்பன் போய் கொஞ்ச முடியாத சூழல் பெண்ணை ஏறெடுத்து பார்க்க முடியாத சூழல் இந்த டாஸ்மாக்னால. குடி வெறியில தகப்பன் மகளை கற்பழிக்கிறான்” என்று கூறி, குடியும் இந்த டாஸ்மாக்கும் தமிழ்ச்சமூகத்தை பண்பாட்டுப் ரீதியிலான படுகுழிக்குள் தள்ளுவதை விவரித்தார். இந்த டாஸ்மாக்கினால் இதுகாறும் பயனடைந்த அரசியல்வாதிகள் இப்போது அதனை மூடக் கோரும் பித்தலாட்டத்தை அம்பலப்படுத்தி மக்கள் புரட்சிகர அமைப்புகளின் பின்னால் அணிதிரள வேண்டியதன் அவசியத்தை கூறி முடித்தார்.

கண்டன உரைக்கு முன்னர்,”மூடு டாஸ்மாக்கை !” மையக் கலைக் குழுவின் பாடலை தோழர் சரவணன் குழுவினர் பாடியது தோழர்களின் உற்சாகத்தை இன்னுமோர் மடங்கு அதிகப்படுத்தியது.

தோழர் குமாரவேலு தலைமையுரை
தோழர் குமாரவேலு தலைமையுரை

புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் மாநில துணைத் தலைவர் தோழர் விளவை இராமசாமி தனது கண்டனவுரையில்,

“தோழர்களுக்கு வணக்கம், இந்த பரந்துபட்ட கோவையிலே பல லட்சம் மக்கள் இருக்கிறார்கள். தத்தமது வேலைகளை முடித்துக் கொண்டு ஒவ்வொருவரும் இருசக்கர வாகனங்களிலும் நான்கு சக்கர வாகனங்களிலும் போய்க் கொண்டும் வந்து கொண்டும் இருக்கிறார்கள். இத்துணை லட்சம் மக்களில் நாம் மட்டும் ஏன் இங்கு போராடிக் கொண்டிருக்கிறோம். வேறு வேலையில்லாமலோ ஜாலிக்காகவோ அல்ல.

டாஸ்மாக் தீமை என்பது மக்கள் மனதில் இருக்கிறது. டாஸ்மாக்கால் பாதிக்கப்படாத ஒரு தெருவாவது ஒரு குடும்பமாவது இங்கு இருக்கிறதா..? சமூகத்தின் பெரும்பான்மையான குற்றங்களுக்கு டாஸ்மாக் காரணியாக இருக்கிறது. செயின் பறிப்பு, கற்பழிப்பு என பல்வேறு குற்றங்களுக்கு அது காரணமாக இருக்கிறது. குற்றவாளிகளை உற்பத்தி செய்யும் தொழிற்சாலையாக டாஸ்மாக் அமைகிறது. ஆறறிவு உள்ள எவரும்; தொழிலாளியோ மாணவனோ விவசாயியோ இந்த டாஸ்மாக்கிற்கு எதிராக போராட வேண்டும். குடிப்பவனை மட்டும் பார்ப்பது குறுகிய பார்வையாகும். அதற்கப்பாலும் சமூகத்தை நாசம் செய்கிறது இந்த டாஸ்மாக்.

தோழர் விளவை ராமசாமி
தோழர் விளவை ராமசாமி

ஆகஸ்ட் 3-ம் தேதி சென்னை பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் சுமார் 1000 பேர் திறந்து ஒரு மறியலை செய்கிறார்கள். தங்களது கல்லூரிக்கு அருகிலேயே இருக்கும் டாஸ்மாக் கடைக்கு எதிராக போராடுகிறார்கள். தாங்கள் படிப்பதா..குடிப்பதா..? எனக் கேட்கிறார்கள். சாராயம் விற்று சர்க்கார் நடத்தும் இந்த கேடுகெட்ட அரசை சாடுகிறார்கள். அற வழியில் போராடியோரை எல்லாம் அலட்சியப்படுத்திய இந்த ஆளும் வர்க்கமே அலறும்படி இன்னும் சுருக்கமாக சொன்னால், எப்படிச் சொன்னால் அவர்களுக்கு சாராயம் விற்பவர்களுக்கு புரியுமோ அப்படிச் சொன்னார்கள். மானம் ரோஷம் உள்ள மனிதர்களாக ஆறறிவு உள்ளவர்களாக நடந்து கொண்டார்கள்.

பு.ஜ.தொ.மு ஆர்ப்பாட்டம்
முழக்கமிடும் தோழர்கள்

கல்லூரி அருகிலும் கோவில் அருகிலும் பள்ளி அருகிலும் மதுக் கடை இருக்கக் கூடாது என்ற சட்டத்தை அரசே மீறி ஒரு கிரிமினல் முதலாளி அளவுக்கு தரையிறங்கி சாராயம் விற்பதை எதிர்த்துப் போராடினார்கள். இவர்களை தாக்குவது யாரென்றால் காவலர்கள்,போலீசு.

ஏனையா, தருமபுரியில் ஜெயா கைதின் போது கோவை மாணவிகளை உயிரோடு எரித்த கயவர்களை பாதுகாப்பாக கொண்டு சென்ற போலீசு, இரண்டாம் இன்னிங்சில் ஜெயா கைதின் போது தமிழகத்தையே வன்முறைக்காடாக மாற்றிய அ.தி.மு.க காலிகளுக்கு பாதுகாப்புக் கொடுத்த போலீசு மதுவுக்கு எதிராக போராடிய மாணவர்களை அடிக்கிறது. என்ன ஒரு அராஜகம்!

ஏனையா, அந்த மாணவர்கள் எங்களுக்கு அது வேணும் இது வேணும் எங்க குடும்பத்துக்கும் வேண்டும் என்றா கேட்டார்கள். உன் குடும்பத்துக்கும் சேர்த்து தீமை விளைவிக்கும் டாஸ்மாக்குக்கு எதிராக போராடியதற்காக அடிக்கிறாயா…?

பு.ஜ.தொ.மு ஆர்ப்பாட்டம்இப்படி தனது வீரத்தை காட்டிய ஜெயாவின் காவல் துறை சிறைக்கு அழைத்துச் சென்று பின்னர் எதுக்கப்பா பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் இருவரது வீட்டிற்கு சென்று ஜாமீன் போட்டுக்கங்க போட்டுக்கங்க அப்டின்னு கெஞ்சினீர்களே…? வெட்கமாயில்லை. அந்த பெற்றோர் நாங்கள் அமைப்பின் வழிதான் நடப்போம் எனக் கூறிய பின்னர் முகத்தில் கரியை பூசிக் கொண்டு மீண்டும் சிறைக்கு வந்து அந்த மாணவர்கள் மீதான வழக்கை வாபஸ் வாங்கிக் கொண்டு வீட்டிற்கு அழைத்துச் சென்றீர்களே… வீராதி வீரணுக சூராதி சூரர்களே., இப்போது யார் கோழை நீங்களா மாணவர்களா…! நீங்கள் தான்.”

குறிப்பெடுக்கும் உளவுத்துறை
குறிப்பெடுக்கும் உளவுத்துறை

தோழரின் உரையை சற்றும் சலனமில்லாமல் பார்த்துக் கொண்டிருந்த காவலர்களும் உளவுப் பிரிவினரும் தருமபுரியில் மாட்டுச் சாணத்தை நெஞ்சில் வாங்கிய கடமை தவறா காவலர்களின் முகபாவனைகளுக்கு சற்றும் மாறுதலின்றி இருண்ட முகத்துடன் சென்றனர். வழக்கமாக வீடியோ எடுக்கும் உளவுப் பிரிவினருடன் கூடவே தோழரது உரையில் சர்ச்சைக்குரிய வார்த்தை வருகிறதா எனப் கவனித்து குறிப்பெடுக்க மட்டும் தனியாக இருவரை ஒதுக்கியிருந்தனர்.

இறுதியாக, புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் மாவட்ட இணைச் செயலர் தோழர் நித்தியானந்தன் போராடிய மாணவர்களுக்கும் கலந்து கொண்ட தோழர்களுக்கும் நன்றி நல்கி ஆர்ப்பாட்டத்தை நிறைவு செய்தார்.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]

தகவல்

புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி,
கோவை

2. சிவகிரியில் ஆர்ப்பாட்டம்

திருநெல்வேலி மாவட்டம் சிவகிரியில் கடந்த 21-08-2015 வெள்ளியன்று டாஸ்மாக் கடைகளை மூடக் கோரியும், பச்சையப்பன் கல்லூரி மாணவர்களை சிறையிலடைத்து கடுமையாக தாக்கியதைக் கண்டித்தும், டாஸ்மாக் கடை முற்றுகைப் போராட்டம் நடத்தப்பட்டது.

சிவகிரி ஆர்ப்பாட்டம் - மூடு டாஸ்மாக்கைபேருந்து நிலையத்துக்கு அருகிலுள்ள எதிரெதிரே அமைந்திருக்கும் இரண்டு டாஸ்மாக் சாராயக் கடைகளை முற்றுகையிடுவதெனத் தீர்மானித்து காலை 10:30 மணிக்கு தோழர்கள் 25 பேர் சாராயக் கடைகளுக்கு அருகிலுள்ள சந்திப்பிலிருந்து பேனர், முழக்க அட்டைகளுடன்  மக்கள் அதிகாரம் வெல்க, மூடு டாஸ்மாக்கை, எவன் வருவான் பார்ப்போம் போன்ற முழக்கங்களை விண்ணதிர முழங்கியவாறு சாராயக் கடைகளை நோக்கி திரண்டனர். முழக்கங்களைக் கேட்ட உடனே கடைகளை பூட்டி விட்டு வெளியேறினர் ஊழியர்கள். இரண்டு தோழர்கள் திரண்டு நின்றிருந்த மக்களிடமும், அருகிலுள்ள கடைக்காரர்களிடமும் பிரசுரம் வினியோகித்து போராட அழைப்பு விடுத்தனர்.  இருபுறமும் பேருந்துகள் நிறுத்தப்பட்டன.

மூக்கு வியர்த்த காவல்துறை இரண்டாவது சுற்று முழக்கங்கள் முடியுமுன்னரே வந்து சேந்தது.  வந்தவுடன் அடாவடியை தொடங்கியது. “ஏன் சாலையை மறிக்கிறீர்கள்”  என்று கேட்டுக் கொண்டே தோழர்களைப் பிடித்து தள்ளினார் காவல்துறை துணை ஆய்வாளர்.

“ஏன் தள்ளுகிறீர்கள்? சாலையை மறிப்பது எங்கள் நோக்கமல்ல. கடையைத்தான் முற்றுகை செய்துள்ளோம்” என்று தோழர்கள் வாக்குவாதம் செய்ய முழக்கங்கள் தொடர்ந்தன.

“அனுமதியில்லாமல் ஆர்ப்பாட்டம் செய்யக் கூடாது” என்ற காவல்துறையினரை, “அனுமதி கேட்டால் தந்து விடுவீர்களா? அ.தி.மு.க காலிகள் அனுமதி கேட்டுத்தான் ஆர்ப்பாட்டம் செய்கிறார்களா? அவர்களை என்ன செய்தீர்கள்?” என்று கேட்டதும் நைச்சியமாக பேசத் தொடங்கியது.

சிவகிரி ஆர்ப்பாட்டம் - மூடு டாஸ்மாக்கை“ஆர்ப்பாட்டம் தான் செய்து விட்டீர்களே. கலைந்து செல்லுங்கள் ஒன்றும் செய்யாமல் விட்டு விடுகிறோம்” அதை மறுத்து தோழர்கள் தொடர்ந்து முற்றுகையை நீட்டிக்கவே,

“மண்டபத்தில் வைத்திருந்து மாலையில் விட்டு விடுவோம் என்று எண்ணாதீர்கள், கைது செய்தால் ரிமாண்ட தான்” என்று மிரட்டியது.

அஞ்ச மாட்டோம் அஞ்ச மாட்டோம்
காவல்துறையின் மிரட்டலுக்கு
அஞ்ச மாட்டோம் அஞ்ச மாட்டோம்

பச்சையப்பன் கல்லூரி மாணவர்களை
கைது செய்து தாக்கிய
காவல்துறை ரவுடிகளை
கைது செய் கைது செய்

சிவகிரி ஆர்ப்பாட்டம் - மூடு டாஸ்மாக்கைபோன்ற முழக்கங்களுடன் தோழர் சமனஸ் இந்த போராட்டத்தில் மக்கள் கலந்து கொண்டு பங்களிக்க வேண்டிய அவசியத்தை வலியுறுத்தி பேசத் தொடங்கினார். மிரண்டு போன காவல்துறை முதற்கட்டமாக சுற்றியிலும் கூடியிருந்த மக்களை விரட்டத் தொடங்கியது. சட்டை கூட அணியாமல் துண்டு போட்ட முதியவர் ஒருவர் “சாலையில் நிற்பதற்குக் கூட உங்களிடம் அனுமதி வாங்க வேண்டுமா?” கேட்டபோது தான் நிலமையை உணர்ந்த காவல்துறை இதற்கு மேல் அனுமதித்தால் ஆபத்து என்று தோழர்களை வேனுக்குள் தள்ளத் தொடங்கியது.

தோழர்களுடன்  அருகில் நின்றிருந்த மூவரையும் வேனுக்குள் தள்ளியது போலீசு. தொடக்கத்தில் ஆர்வ மேலீட்டில் மக்களும் கைது நடவடிக்கையில் கலந்து கொள்கிறார்கள் போலும் என எண்ணிய தோழர்கள், வேனுக்குள் நெருக்கமாக அமர்ந்திருந்த போது தான் தெரிந்தது அவர்கள் மூக்கு முட்ட குடித்திருக்கிறார்கள் என்பது. அவர்களை கீழே இறக்க வேண்டும் என தோழர்கள் வற்புறுத்த அவர்களும் உங்களுடன் போராடியவர்கள் தான் என்று காவல்துறை அடம்பிடித்தது. ஒருவழியாக காவல்நிலையத்துக்கு அருகில் அவர்கள் இறக்கி விடப்பட்டார்கள். இதன் மூலம் போராடியவர்களே குடித்திருந்தார்கள் என்று செய்தி பரப்பப்படுவதற்கு முற்றுப்புள்ளி வைத்தார்கள் தோழர்கள்.

திருமண நாள் என்பதால் மண்டபம் கிடைக்கவில்லை. காவல்நிலையத்தின் முதல் மாடியில் பயன்படுத்தப்படாத வராண்டாவில் அமர்ந்து கொள்ளுமாறு கோரியது. சுத்தப்படுத்துபவர் காலையிலும் மாலையிலும் தான் வருவார் எனவே அட்ஜஸ்ட் செய்து கொள்ளுங்கள் என்று பழைய பேப்பர்களைத் தந்து இளித்தது காவல்துறை.  அடுத்து படியிலும் வராண்டாவிலும் அமர்ந்திருந்த தோழர்களை வீடியோ கேமிராவில் படம் பிடிக்கத் தொடங்கியது. படம் பிடிக்கக் கூடாது என தோழர்கள் மறுத்தனர். ஒரு பக்கம் ஆய்வாளருடன் வாக்குவாதம் செய்து கொண்டிருக்கும் போதே மறுபக்கம் படம் எடுப்பது தொடர்ந்தது. காவல் நிலையத்துக்கு உள்ளிருந்தே தோழர்கள் போலீசு அராஜகம் ஒழிக என்று முழக்கமிட்டதும் காமிராவை மூடிக் கொண்டு ஒடுங்கியது.

உள்ளே, டாஸ்மாக் குறித்த பாதிப்புகளை தோழர்கள் நேரில் பார்த்த அனுபங்களை பரிமாறிக் கொண்டார்கள்.  அங்கு தோழர்களுக்கு பாதுகாவலாக போடப்பட்டிருந்த காவலர்களிடமே அ.தி.மு.க நடத்தும் போராட்டங்களை வேடிக்கை பார்ப்பதும், மக்களுக்காக போராடுபவர்களை சமூக விரோதிகள் போல் நடத்துவதும் என முரண்பாடான விசயங்களை விவரித்ததும் பதில் கூற முடியாமல் விழித்தார்கள். எம்.ஜி.ஆர் தேவாரம் காலத்தில் சங்கம் அமைக்க காவல்துறை முயன்றபோது அவர்கள் கொடுமையாக நசுக்கப்பட்டதை சுட்டிக் காட்டியபோது, “கேரளாவில் எட்டு மணி நேரம் தான் வேலை. இங்கு தான் நேரம் காலம் இல்லாமல் கஷ்டப்படுகிறோம், நாங்களும் போராடுவதைத் தவிர வேறு வழியில்லை” என தாழ்ந்த குரலில் ஒப்புக் கொண்டார்கள்.

மாலை ஆறு மணிக்கு தோழர்கள் அனைவரும் விடுவிக்கப்பட்டனர். ஆனால் முழக்க அட்டை, பேனர் ஆகியவற்றை தர மறுத்தது போலீசு. வாக்குவாதத்தில் ஈடுபட்ட தோழர்களிடம் கோர்ட்டில் ஒப்படைப்போம் வாங்கிக் கொள்ளுங்கள் என்று மழுப்பினார்கள்.

காலையில் முற்றுகையிட்ட டாஸ்மாக் கடைகளில் போலீஸ் பாதுகாப்புடன் வியாபாரம் மும்முரமாய் நடந்து கொண்டிருந்தது.  இரண்டு கடைக்கும் வரும் குடிமகன்களின் பார்வையில் படுமாறு சுவற்றில் ஆணியால் அடிக்கப்பட்டிருந்த மூடு டாஸ்மாக்கை என்று கட்டளையிடும் மக்கள் அதிகாரம் பிளக்ஸ் பேனர் அவர்களைப் பார்த்து சிரித்துக் கொண்டிருந்தது, “இது முடிவல்ல, தொடக்கம்” என்று.

தகவல்
மக்கள் அதிகாரம்,சிவகிரி

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க