privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புமறுகாலனியாக்கம்கல்விபள்ளித் தலமனைத்தும் ‘பார்’ செய்குவோம் !

பள்ளித் தலமனைத்தும் ‘பார்’ செய்குவோம் !

-

மிழக மக்கள் நலன் மீது மயிரளவும் அக்கறை இல்லாத, வக்கிரமான மனோநிலையைக் கொண்டதுதான் பாசிசத் திமிர் பிடித்த ஜெ.கும்பல் என்பதை நிரூபித்துக் காட்டுவதற்கு இரு நிகழ்வுகள் சாட்சியமாக அமைந்துள்ளன.

பள்ளிக்கூடம் என்றால் அரசுக்கு செலவு, அதனால் அரசுப் பள்ளிகளை மூடு! டாஸ்மாக் என்றால் அரசுக்கு வருமானம், எனவே டாஸ்மாக் கடைகளை தெருவெங்கும் திற! – என்பதுதான் ஜெ.கும்பலின் கொள்கையாக இருக்கிறது. இதன்படி, மாணவர் எண்ணிக்கை குறைவாக இருப்பதைக் காரணம் காட்டி தமிழகமெங்கும் 1200 தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளை மூட ஜெ. அரசு திட்டமிட்டுள்ளது. அப்பள்ளிகளில் படித்துவரும் ஏழை மாணவர்களின் கதி இனி என்னவாகும் என்று தெரியவில்லை.

12-schools-to-wine-shopதனியார் பள்ளிகளில் மட்டுமே தரமான கல்வி கிடைக்கும், ஆங்கிலம் படித்தால் மட்டுமே அறிவாளியாக முடியும் என்ற தவறான நம்பிக்கையை தனியார் கல்வி வியாபாரிகள் ஏற்படுத்தியிருப்பதும், அரசுப் பள்ளிகளில் போதிய ஆசிரியர்கள் மற்றும் கட்டமைப்பு வசதிகள் இல்லாததும்தான் அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை குறைவுக்குக் காரணம். இதைச் சீரமைக்க வக்கற்ற ஜெ. அரசு, மறுபுறம் பார்ப்பன வெறியோடு அரசுப் பள்ளிகளில் தமிழ்வழிக் கல்வியை திட்டமிட்டே ஒழித்து, ஆங்கிலவழிக் கல்வியைத் திணித்து வருகிறது.

தனியார் பள்ளிகளின் கட்டணக் கொள்ளையையும் அடாவடித்தனத்தையும் தமது சொந்த அனுபவத்தின் வாயிலாக உணரத் தொடங்கியுள்ள மக்கள், படிப்படியாக அரசுப் பள்ளிகளை நோக்கித் திரும்பிக் கொண்டிருக்கின்றனர். தனியார் பள்ளிகள் மீதான மோகம் மக்களிடம் குறைந்து வரும் இந்த நேரத்தில்தான் அரசுப் பள்ளிகளை வக்கிரமாக மூடச் சொல்கிறது ஜெ.கும்பல்.

1200 அரசுப் பள்ளிகளை இழுத்து மூடச் சொல்லும் ஜெ. அரசு, மறுபுறம் தமிழகத்திலுள்ள 6,800 டாஸ்மாக் கடைகள் போதாதென்று, சென்னை உள்ளிட்ட அனைத்து மாநகராட்சிகளிலும் மாவட்டத் தலைநகரங்களிலும் எலைட் (உயர்தர) சாராயக் கடைகளைத் திறந்துள்ளது. வருவாய் போதவில்லை என்று இப்போது தமிழகத்தின் 226 வட்டங்களிலும் தலா இரண்டு கடைகள் வீதம் 552 எலைட் சாராயக் கடைகளை ஜூலை 30-ம் தேதிக்குள் திறக்க அவசர உத்தரவு பிறப்பித்துள்ளது. மேட்டுக்குடியினர் தயக்கமின்றி வாங்கிச் செல்வதற்கு வசதியாக ஷாப்பிங் மால்களிலும் சாராயத்தை விற்பனை செய ஏற்பாடு செய்துள்ளது. இந்தியாவிலேயே சாராயத்தின் மூலம் அதிக வருவா ஈட்டும் அரசாக முன்னணியில் நிற்கும் ஜெ. அரசு, குடிகெடுக்கும் டாஸ்மாக் மூலம் அரசுக்குக் கிடைக்கும் ரூ 30,000 கோடி வருவாயை 32 ஆயிரம் கோடியாக உயர்த்த இலக்கு தீர்மானித்து, மாவட்ட ஆட்சியர்களே இவற்றை நேரடியாகக் கண்காணித்து செயல்படுத்த வேண்டுமென்று கெடுபிடி செய்கிறது.

டாஸ்மாக் கடைகளை மூடக்கோரி தமிழக மக்களின் தன்னெழுச்சியான போராட்டங்கள் பெருகிவரும் நிலையில், ஓட்டுக்கட்சிகளே மதுவிலக்கைச் செயல்படுத்தக் கோரிவரும் சூழலில்தான் தமிழக மக்களின் உணர்வுகளை மதிக்காமல் ஜெ. அரசு திமிராக சாராயக் கடைகளைத் திறந்து கொண்டிருக்கிறது. குமரி மாவட்டம் மார்த்தாண்டம் அருகே உண்ணாமலைக்கடை பகுதியில் பள்ளிகள், கோயில்கள் அருகேயுள்ள சாராயக் கடையை அகற்ற வேண்டுமென உயர் நீதிமன்றம் ஆணையிட்ட பின்னரும், கல்நெஞ்சம் கொண்ட ஜெ. அரசு அக்கடையை மூடாததைக் கண்டித்து செல்பேசி கோபுரத்தின் மீதேறி போராட்டம் நடத்திய காந்தியவாதி சசிபெருமாள் கடந்த ஜூலை 31 அன்று போராட்டக் களத்திலேயே உயிரிழந்துள்ளார்.

ஏழை மாணவர்களின் கல்வி பெறும் உரிமையைப் பறித்து, 1200 அரசுப் பள்ளிகளை மூடிவிட்டு தெருவெங்கும் சாராயக் கடைகளைத் திறந்து வைக்கும் வக்கிரம் பிடித்த ஜெ. கும்பலின் பாசிச ஆட்சியை இன்னமும் சகித்துக் கொண்டிருக்கத்தான் முடியுமா?
________________________________
புதிய ஜனநாயகம், ஆகஸ்ட் 2015
________________________________