Friday, August 12, 2022
முகப்பு மறுகாலனியாக்கம் கார்ப்பரேட் முதலாளிகள் ஜட்டியை விட ரஃபேல் நடால் மேலானவர் அல்ல !

ஜட்டியை விட ரஃபேல் நடால் மேலானவர் அல்ல !

-

Rafel-Nadal-in-underwear-ad“நட்சத்திர சன்னலில் வானம் எட்டிப் பாக்குது; சிறகை விரித்துப் பறப்போம்” அப்படின்னு ஒரு பாட்டு கேட்டிருங்கீங்களா? படம் சூர்ய வம்சம்னு நினைக்கிறேன். 1997-ம் ஆண்டு வந்தது. இந்தப்பாட்டுலதான் “வானைப்புரட்டிப்போடு; வாழ்வில் கீதம் பாடு”ன்னு பல வரிகள் வரும்.

நாங்க பூவ கட்டிக்கிட்டே வானொலியில் பாட்டு கேட்குற காலத்துல தான் இந்த பாட்டு அறிமுகம். அப்ப எனக்கு வயசு 11. எனக்கு மட்டுமல்ல. ரஃபேல் நடாலுக்கும் தான்.

ரஃபேல் நடால் ஒரு விளையாட்டு நட்சத்திரம். உலகின் மிகச்சிறந்த டென்னிஸ் விளையாட்டு வீரர். இன்றைய தேதியில் இவர் சாதிக்காத பட்டங்களே கிடையாது. உலக டென்னிஸ் வரலாற்றிலேயே தொடர்ந்து அதிகபட்சம் பலவருசமா கிராண்ட் ஸ்லாம் பட்டம் வாங்குன ஆள் நடால் தவிர யாரும் கிடையாது. பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ்ல ஒன்பது பட்டங்கள் வாங்குனது நடால் மட்டும் தான்.

களிமண் தரையின் நாயகன் என்று அழைக்கப்படுகிற நடால் தான் சூர்ய வம்சம் படத்துல வர்ற பாட்டுக்கு பொருத்தமான நட்சத்திரம்னு நினைக்கிறேன். மனுசன்னா சாதிக்கணும் இல்லயா? ஏதாவது ஒரு துறைய தேர்ந்தெடுந்துகிட்டு அதுல நடால் மாதிரி ஆளுங்க ஜொலிக்கிறாங்க. உலகமே பாராட்டுது.

சிலபேருக்கு மட்டும் வாழ்க்கைன்றது இப்படி அர்த்தமுள்ளதா இருக்குதுல்லையா. நடால் கிராண்ட் ஸ்லாம் பட்டத்துக்கு பயிற்சி பெற்றுக்கொண்டிருந்த காலத்துல நான் கனகாம்பரம் பூ கட்டப் பழகியிருந்தேன். நுனி காம்புல வெச்சு பட்டயாக் கட்டணும். முந்தலும் பிந்தலுமா இருந்தா காசு கிடைக்காது. ஸ்கூலுக்கு போயிட்டு வர்ற மிச்ச நேரத்துல தான் இந்த வேலைய செஞ்சேன். ஆக நம்மள மாதிரி ஆளுகளுக்கு வயித்த கழுவுனாதான் வாழ முடியும்ன்ற நிலைமை. இதுல எங்கிட்டு விளையாடுறது?

விளையாட்டுன்னு மட்டுமில்ல. நம்ம சமூகத்துல சில பேருக்கு இசை ரொம்ப பிடிக்கும். எழுத்து துறையில் ஆர்வம் இருக்கும். சில பேரு நல்லா பேசுவாங்க. சில பேருக்கு சுற்றுலா பிடிக்கும். இன்னும் ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொருவிதமான திறமைகளும் ஆசைகளும் இருக்கும்.

ஆனா நீங்க யாரையாவது போயி உங்களுக்கு என்ன விருப்பம்னு கேளுங்களேன். அவங்க சொல்ற பதில் எல்லாம்

“இந்த கடன அடைக்கிற மட்டும் சம்பாதிச்சா போதும்.”

“அம்மாவுக்கு ஆப்ரேசன் இருக்கு; காசு சம்பாரிக்கணும்.”

“விவசாயம் தோல்வி; வேலைக்குப் போகணும்”

“கந்துவட்டிக்கடன் இருக்கு; வீட்டுக்காரருக்கு முடியல; நானும் வேலைக்கு போறேன்.”

“கல்யாணம் பண்ண குறைஞ்சது ஒரு இரண்டு இலட்சமாவது தேவைப்படுது. அதுக்கு காசு சேர்க்கணும்.”

ஜட்டி என்பது வெறும் உள்ளாடை அல்ல, பல கோடி வருமானத்தை தரும் சரக்கு!
ஜட்டி என்பது வெறும் உள்ளாடை அல்ல, பல கோடி வருமானத்தை தரும் சரக்கு!

“குழந்தைக ஸ்கூல் பீசுக்கு ஓவர் டைம் பாக்கணும்.”

நல்ல தண்ணிக்கு காசு. உப்புத்தண்ணிக்கு காசு. சாகக் கிடக்கிற கிழவி கூட காதுல போட்டுருக்க தண்டட்டி, சாவு முதலுக்குன்னு சொல்லுது.

ஆக நடாலை ஒப்பிடுகிற பொழுது நம்மோட நிலைமையை ஒரே கேள்வியில் அடக்கியிரலாம். “நாம வாழ்றதுக்காக சம்பாதிக்கிறோமா? இல்ல சம்பாதிப்பதற்காக வாழ்கிறோமா?”

ஓவர் டைம் பாக்குறவர்லருந்து சாவு-முதல் கிழவி வரை, இந்த வாங்கி-விற்கும் முதலாளித்துவ உற்பத்தி சமூகம் திறமைகளைச் சீரழித்து, கூலி உழைப்பை மட்டுமே நம்பி இயங்குது. கூலி என்பதே ஒரு தொழிலாளி தன்னை தக்கவைத்துக்கொள்ள ஒரு முதலாளி, தொடர்ந்து சுரண்டும் பொருட்டு உயிரோடு வைப்பதற்கு மட்டுமே தரப்படுகிற தொகைன்னு மார்க்ஸ் சொல்லுவாரு.

இப்படிப்பட்ட சமூகத்துல மனிதன் தன் திறமையையும் இலட்சியங்களையும் அடைவதற்கு உண்டான வழி ஏதாவது இருக்கா? சம்பாதிப்பது தான் வாழ்க்கைன்னு ஆகிவிட்ட பிறகு இங்கே இதெல்லாம் சாத்தியமா?

ஏன் சாத்தியமில்லை? ரஃபேல் நடாலும் இதே முதலாளித்துவ உற்பத்தி சமூகத்தில் இருந்து வந்தவர் தானே! அப்படின்னு ஒரு கேள்வி எழலாம் இல்லையா? இங்கு திறமைக்கு மதிப்பு உண்டு அப்படின்னு வாதிடலாம் இல்லையா?

ஆம். ரஃபேல் நடாலும் இதே முதலாளித்துவ உற்பத்தி சமூகத்தில் இருந்து வந்தவர் தான். ஆனால் ரஃபேல் நடாலை நாம் ஒரு நட்சத்திரமாக பார்க்கிற பொழுது முதலாளித்துவ உற்பத்திச் சமூகம் நடாலை எப்படி பார்க்கிறது? இந்தக் கேள்வியில் தான் பதில் அடங்கியிருக்கிறது.

29 வயது ஆன ரஃபேல் நடாலை முதலாளித்துவம் 25-08-2015 அன்று Tommy Hilfiger ஜட்டி விளம்பரத்தின் தூதுவராகவும் மாடலாகவும் நியமித்திருக்கிறது.

உலக டென்னிஸ் வரலாற்றின் ஆகச் சிறந்த விளையாட்டு வீரனை, பிரெஞ்சு ஓபன், யுஎஸ் ஓபன், ஒலிம்பிக் மெடல், விம்பிள்டன், ஆஸ்திரேலியன் ஓபன் ஆகிய அனைத்தையும் வென்ற விளையாட்டு வீரனை ஜட்டி விளம்பரத்தில் நடிக்க வைத்தால் எவ்வளவு காசு பார்க்கலாம் என்று நினைக்கிறது முதலாளித்துவம். நடால் என்ன நினைக்கிறார் என்பதை விட்டுத்தள்ளுங்கள். அதை எமது அரசர் புலிகேசி என்றைக்கோ கூறிவிட்டார்.

ஆனால் ஒரு மனிதனின் திறமையை முதலாளித்துவத்தால் வேறு எப்படியும் பயன்படுத்த இயலாது என்பதற்கு களிமண் தரையின் நாயகன் ரஃபேல் நடால் ஆகச் சிறந்த எடுத்துக்காட்டு என்பது தான் இங்கு முக்கியம்.

ஆனால் முதலாளித்துவ சமுதாயத்தில் நீங்கள் ஐட்டியை விட சிறந்த பொருள் அல்லர் என்பது தான் துணிபான முடிவு!
ஆனால் முதலாளித்துவ சமுதாயத்தில் நீங்கள் ஐட்டியை விட சிறந்த பொருள் அல்லர் என்பது தான் துணிபான முடிவு!

இதே நடாலை உடற்பயிற்சிக்கான தூதுவராகவோ, சுகாரத்துறை கோரும் ஆரோக்கியமான மனிதருக்கு சான்றாகவோ கூட இவர்கள் நியமிக்கவில்லை. அப்படியே ஐ.நா சபை அல்லது அசட்டு அரசுகளின் தூதுவராகவோ, தன்னார்வத் தொண்டு நிறுவனங்களின் கருணை முகமாகவோ நடாலை அப்படி நியமித்தாலும் அது வருடம் முழுக்க பிரியாணி சாப்பிடும் பண்ணையார் ரெண்டு நாள் மட்டும் விரதம் இருப்பதற்கு ஒப்பானது. மேலும் இந்த விரதங்களுக்கு ஊதியம் கொடுக்கப்பட்டாலும் வீரர்களைப் பொறுத்தவரை செல்வாக்கு இருக்கும் வரை காசு அள்ளவே விரும்புவர்.

நீங்கள் இந்த சமூகத்தில் பொறியாளராக, மருத்துவராக, விஞ்ஞானியாக, அறிவு சார் நிபுணராக, பாடகராக, நடனக் கலைஞராக, விளையாட்டு வீரனாக, இலட்சங்களில் சம்பாதிப்பவராக ஏன் முதலாளித்துவத்தை ஆதரிக்கும் பிரச்சார பீரங்கியாகக் கூட இருக்கலாம்.

ஆனால் முதலாளித்துவ சமுதாயத்தில் நீங்கள் ஐட்டியை விட சிறந்த பொருள் அல்லர் என்பது தான் துணிபான முடிவு!

ஆக இந்த இழிநிலையையும் தாண்டி இப்படி ஒரு சமூகம் தொடர்ந்து இயங்க அனுமதிப்பதை இனியும் நாம் தகர்க்காவிட்டால் நமது மூளைகளைப் பார்த்து ரஃபேல் நடால் விளையாடிய களிமண் தரையும் கைகொட்டிச் சிரிக்கும் என்பதை ஒத்துக் கொள்கிறீர்களா?

– இளங்கோ

இது தொடர்பான செய்தி

 

 1. வினவு நீங்க என்ன சொல்ல வரீங்க..
  டாம்ஸ் .. ஜட்டி போடகூடாதுன்னா இல்ல ரபேல் நடால பார்க்க கூடாதுன்னா.

 2. ஜட்டி கம்பேனி முதலாளிக்கு டென்னீஸ் வீரர் நடாலின் அனைத்து திறமைகளும் ஜட்டியாத் தெரிஞ்சிருக்கு. நடாலுக்கு விளையாட்டுல சம்பாதிச்ச பிறகும் போஸ் குடுத்து சம்பாதிக்க சான்ஸ் கிடைச்சிருக்கு.அதை மாதிரி இருக்கனும்,இது மாதிரி வாங்கனும்மின்னு நினைக்கிறவங்களுக்கு நடால் ஜட்டி வாங்கனும்மின்னு ஆச வரும்.ஜட்டி கம்பேனி கல்லா நிரையும்,அம்புட்டுதே !

 3. நடால் ஓர் அந்நிய தேசத்தவர். மேற்கத்திய நாடுகளில் இது சகஜம். அங்கு மக்கள் இதனை ஓர் பொருட்டாக எடுத்துக்கொள்ள மாட்டார்கள். நமது நாட்டை பாருங்கள். ஆல் இங்கிலாந்து பேட்மிண்டன் கோப்பையை இந்திய வீரர் கோபிசந்த் பெற்றபோது, அவரை கோக்ககோலா விளம்பரத்துக்கு அவரை அணுகின. கோபிசந்த் மறுத்தார். அதற்கு காரணம் கோக்ககோலா பானம் நச்சு என்பதை அவர் அறிந்திருந்ததுதான். இப்படி ஓரிருவர் பாராட்டக் கூடியவராக இருக்கத்தான் செய்கின்றனர். நடிகர் கமலஹாசன் எய்ட்ஸ் தடுப்பு விளம்பரத்துக்கு குரல் கொடுத்திருகிறார். அநாதை குழந்தைகளுகாகவும் குரல் கொடுத்திருகிறார். சூப்பர் ஸ்டார் ரஜனி, கமல்… போன்றவர்கள் பணத்துக்காக இதுவரையில் எந்தவொரு விளம்பரங்களிலும் நடிக்கவில்லை என்பது குறுப்பிடத்தக்கது.

 4. This is not how you explain capitalistic economy.There would be advertisements even in socialist society in Europe for underwear’s. Why are you viewing underwear advertisement as a disgusting thing? why are you comparing your life with Nadal and his age. Economic system should not be explained this way.This is totally sarcastic way of seeing your environment.

 5. //29 வயது ஆன ரஃபேல் நடாலை முதலாளித்துவம் 25-08-2015 அன்று Tommy Hilfiger ஜட்டி விளம்பரத்தின் தூதுவராகவும் மாடலாகவும் நியமித்திருக்கிறது//.

  ஏபிஜே அப்துல் கலாம் இறந்தபோது வைத்த பிளக்ஸ் பேனர்கள் எல்லாம் இப்போது ரியல் எஷீடேட் விளம்பரமாக மாறிவிட்டது.
  ஆயிரக்கணகில் ஏபிஜே அப்துல் கலாம் நகர் உருவாக்கங்கள்.
  ஏபிஜே அப்துல் கலாம் ரியல் எஷீடேட்டின் விளம்பரத்தின் தூதுவராகவும் மாடலாகவும் நியமித்திருக்கிறதுமுதலாளித்துவம்.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க