privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்அதிகாரிகள் என்ன ஆண்டைகளா ? - வேதாரண்யம் மக்கள் போராட்டம்

அதிகாரிகள் என்ன ஆண்டைகளா ? – வேதாரண்யம் மக்கள் போராட்டம்

-

அதிகாரிகள் என்ன ஆண்டைகளா? உழைக்கும் மக்கள் அடிமைகளா?- வேதாரண்யம் மக்கள் போராட்டம்

வேதாரண்யம் மக்கள் அதிகாரம்வேதாரண்யம் வட்டம் அண்டர்காடு கிராமத்தைச் சேர்ந்த உழைக்கும் மக்கள் நூறு நாள் வேலைத் திட்டத்தல் நடைபெறும் முறைகேடுகள், அதிகாரிகள் மக்களை அடிமைகள் போல் நடத்துவது, 70 நாட்கள்தான் வேலை தர முடியும், மீதி 30 நாட்களை கக்கூசுக் கட்டினால்தான் பார்க்க முடியும் என மிரட்டுவது, நூறு நாள் வேலை அட்டையை முகத்தில் தூக்கி வீசுவது என பல்வேறு பிரச்சனைகளால் குமுறிக்கொண்டிருந்தவர்கள் ஓட்டுக்கட்சிகளிடம் முறையிட்டும் பயனில்லாத நிலையில் மக்கள் அதிகாரம் மற்றும் புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி தோழர்களிடம் முறையிட்டனர்.

தோழர்கள் பகுதி மக்களைச் சந்தித்து, “இப்பிரச்சினைகளுக்குத் தீர்வு காண போராட்டம் ஒன்றுதான் வழி” என்பதைக் கூறி பகுதி மக்களை ஓரிடத்தில் கூடச் செய்து போராட்டத்தை எப்படி நடத்துவது என்பதை விளக்கிப் பேசி மக்களைத் அணிதிரட்டினர்

இதனை அறிந்த அதிகாரிகள் கீழ்நிலை ஊழியர்கள் மூலம் மக்களை பயமுறுத்தும் வேலைகளில் ஈடுபட்டனர். தோழர்கள் மக்கள் மத்தியில் நம்பிக்கை ஊட்டும் விதத்தில் தொடர் பிரச்சாரம் செய்து மக்களை அணிதிரட்டினர்.

வேதாரண்யம் மக்கள் அதிகாரம்திட்டமிட்டபடி 28-09-2010 அன்று காலை போராட்டத்திற்கான வேலைகள் நடந்து கொண்டிருக்கும் போது சில பேர் நூறு நாள் வேலைக்குச் சென்றுவிட்டதாகத் தகவல் வந்தது. உடனே போராட்டத்திற்கு வந்திருந்தவர்களும் தோழர்களும் வேலை நடைபெறும் இடத்திற்குச் சென்று வேலைக்குச் சென்றவர்களிடம் பேசி அவர்களையும் அழைத்து வந்தனர்.

நூறு நாள் வேலைத்திட்டத்தில் நடைபெறும் முறைகேடுகளைக் கண்டிக்கும் விதத்தில் 100 நாள் வேலைத்திட்டத்தை பாடைகட்டி தூக்கிக்கொண்டு அவர்களது கிராமத்திலிருந்து அண்டர்காடு கிராமப் பெண்கள், ஆண்கள் என 150-க்கும் மேற்பட்டோர் ஊர்வலமாக வேதாரண்யம் – திருத்துறைப்பூண்டி பேருந்து சாலையை நோக்கிப் புறப்பட்டனர். வழி நெடுக,

“மக்கள் அதிகாரம் வாழ்க, உழைக்கும் மக்கள் ஒற்றுமை ஓங்குக”
“அதிகாரிகள் என்ன ஆண்டைகளா. உழைக்கும் மக்கள் அடிமைகளா

வேதாரண்யம் மக்கள் அதிகாரம்என்று விண்ணதிரும் முழக்கங்களோடு பேருந்து சாலையை வந்தடைந்து 100 நாள் வேலைத்திட்டப் பாடையை சாலையின் குறுக்கே வைத்து சாலை மறியலில் ஈடுபட்டனர். இந்த மக்களோடு சாலையில் காத்திருந்த ஆதனூர் மற்றும் கோவில்தாவு பகுதியைச் சேர்ந்த உழைக்கும் மக்களும் கலlந்து கொண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சாலை மறியலில் ஈடுபட்ட மக்கள் மத்தியில் மக்கள் அதிகாரத்தின் மாநில ஒருங்கிணைப்புக்குழு உறுப்பினர் தோழர் மாரிமுத்து பேசுகையில், “ஆட்சியாளர்களால் விவசாயம் திட்டமிட்டு அழிக்கப்பட்ட நிலையில் 100 நாள் வேலைதான் மக்களுக்கு உதவியாக இருக்கிறது. அந்த வேலையும் தர முடியாதுன்னா மக்கள் என்ன செய்வார்கள். கக்கூசு கட்டுனாத்தான் 100 நாள் வேலை என்பதும், சரியான நேரத்திற்கு வரலைன்னா கார்ட மூஞ்சில தூக்கி வீசுவதும் மக்களை அடிமைகளாக அதிகாரிகள் நடத்துகிறார்கள் என்பதைத்தான் காட்டுகிறது. அதிகாரிகளுக்கு தக்க பதிலடி கொடுக்க மக்கள் அதிகாரத்தை கையில் எடுக்க வேண்டும்” என்று பேசினார்.

வேதாரண்யம் மக்கள் அதிகாரம்சாலை மறியல் நடைபெறும் இடத்திற்கு வந்த காவல் துறையினர், “அனுமதி வாங்காமல் எப்படி சாலை மறியலில் ஈடுபடலாம்” என்று தோழர்களிடத்தில் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர். தோழர்கள், “எதுக்கு அனுமதி வாங்கணும். அனுமதி வாங்கியெல்லாம் போராட்டம் நடத்த முடியாது. வேண்டுமானால் கைது பண்ணிக்கொள்ளுங்கள்” என்று சொன்னதும் காவல் துறையினர் செய்வதறியாது திகைத்துப் போய் நின்றனர்.

காவல்துறையினரைக் கண்டவுடன் மக்கள் ஓடிவிடுவார்கள் என நினைத்த போலீசின் எண்ணத்தில் மண் விழுந்த மாதிரி இருந்தது மக்களின் உறுதியான போராட்டம். போராட்டம் நடைபெற்ற இடத்திற்கு வந்த வட்டாட்சியர் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர்களிடம் மக்கள் சரமாரியாகக் கேள்விகளைக் கேட்கத் தொடங்கினார்கள். அதிகாரிகளால் பதில் எதுவும் சொல்ல முடியாமல் நமது தோழர்களிடம் பிரதிநிதியாய் “ஒருத்தர் பேசுங்க” என்று கெஞ்சினார்கள்

வேதாரண்யம் மக்கள் அதிகாரம்தோழர்களை தனியாக அழைத்துப் பேச அதிகாரிகள் முயற்சித்த போது தோழர்கள் அதற்கு இடம் கொடுக்காமல், “இது மக்கள் பிரச்சினை மக்கள் மத்தியில்தான் பேச வேண்டும்” என்றதும் வேறு வழி இல்லாமல் மக்கள் மத்தியில் பேசிய வட்டாட்சியர், “நீங்க எப்படி அனுமதி வாங்காம சாலை மறியல் செய்யலாம். இது சட்டத்தை மீறுகிற செயல்” என மக்களை பயமுறுத்தும் விதமாக பேசத் தொடங்கியதும் தோழர்கள் பதிலடி கொடுக்கும் விதமாக, “மக்களுக்கு 100 நாள் வேலை கொடுக்கணும். ரூபாய் 183 சம்பளம் கொடுக்கணும் எனச் சட்டம் சொல்லுது. ஆனால் நீங்க 100 நாள் வேலையும் தராம ரூபாய் 183 சம்பளமும் கொடுக்காம சட்டத்தை மீறுகிறபோது நாங்க சட்டத்தை மீறி சாலை மறியல் செஞ்சா என்ன தப்பு. சட்டத்தை மீறத்தான் செய்வோம். மக்கள் கோரிக்கை நிறைவேறும் வரை கலைந்து செல்லமாட்டோம். கைது செய்தாலும் தொடர்ந்து போராடுவோம்.” என்று பேசியதும் அதிகாரிகள் வேறு வழியில்லாமல் பேச்சு வார்த்தைக்கு வந்தனர்

வேதாரண்யம் மக்கள் அதிகாரம்பேச்சு வார்த்தையின் போது அதிகாரிகளிடம்

1. 100 நாள் வேலையை சுழற்சி அடிப்படையில் வழங்க வேண்டும்.

2. நிர்ணயிக்கப்பட்ட சம்பளம் ரூபாய் 183-ஐ வழங்கவேண்டும்

3. கழிப்பறை கட்டுபவர்களுக்குத்தான் 100 நாள் வேலை கட்டாதவர்களுக்கு 70 நாள் வேலை என்ற அதிகாரிகளின் மிரட்டலை விலக்கிக் கொள்ள வேண்டும்

4. அரசே இலவசமாக கழிப்பறைக் கட்டி கொடுக்க வேண்டும்

5. 100 நாள் வேலைத் திட்டத்தை பார்வையிடும் அதிகாரிகள் வேலை செய்யும் தொழிலாளர்களை இழிவாகப் பேசுவதை நிறுத்திக் கொள்ள வேண்டும்

6. பகுதி மக்களுக்கு குடிநீர் முறையாக விநியோகம் செய்ய வேண்டும்

என்ற கோரிக்கைகளை முன் வைத்து பேசப்பட்டது.

கோரிக்கைகளை ஏற்றுக் கொண்ட அதிகாரிகள் எழுத்து பூர்வமாக எழுதிக் கொடுக்க மறுத்தனர். இதை மக்கள் மத்தியில் தோழர்கள் எடுத்துக் கூறினர்.

வேதாரண்யம் மக்கள் அதிகாரம்“ஆறுமுகக்கட்டளைப் பகுதியில் டாஸ்மாக்கை அகற்றச் சொல்லி போராடினோம். அப்போது அதிகாரிகள் டாஸ்மாக்கை அகற்றுவதாக எழுதிக் கொடுத்துவிட்டு பிறகு அகற்றவில்லை. எனவே எங்களது அமைப்பின் சார்பாக மக்களைத் திரட்டி வட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்திய பிறகுதான் டாஸ்மாக்கை அகற்றினர்.

எழுதிக்கொடுத்ததையே செய்யாத இவர்கள் வாய்மொழியாகச் சொல்வதைச் செய்ய மாட்டார்கள். அதிகாரிகள் மோசடி செய்கிறார்கள். போராட்டத்தை தொடரலாமா, வேண்டாமா” என்று கேட்டதும் மக்கள் எல்லோரும் ஒருமித்தக் குரலில் உறுதியோடு, “போராட்டத்தைத் தொடருவோம்” என்றனர்.

மக்களின் உறுதியைக் கண்ட அதிகாரிகள் எதுவும் செய்ய முடியாமல், “உங்கள் கோரிக்கையை ஏற்கிறோம்” என்றனர். “மக்கள் மத்தியில் இதை நீங்களே அறிவியுங்கள்” என்றதும் அதிகாரிகள் மக்களிடம் தலை குனிந்து அறிவித்தார்கள்.

“அதிகாரிகள் கோரிக்கையை நிறைவேற்றாவிட்டால் போராட்டத்தை மீண்டும் தொடருவோம்” என்பதை தோழர்கள் விளக்கியதை ஏற்றுக்கொண்ட மக்கள் தோழர்களுக்கு நன்றியையும் வாழ்த்துகளையும் தெரிவித்துவிட்டு கலைந்து சென்றனர். இப்போராட்டமானது பகுதியில் மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளது

தகவல்

மக்கள் அதிகாரம்
வேதாரண்யம்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க