privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புஉலகம்ஈழம்ராகுல் காந்திக்கு கருப்புக்கொடி காட்டியதை அழிக்க முடியுமா ?

ராகுல் காந்திக்கு கருப்புக்கொடி காட்டியதை அழிக்க முடியுமா ?

-

2009-ம் ஆண்டு ஈழத்தில் இறுதி கட்டப் போர் நடந்து கொண்டிருந்த போது, தமிழ்நாட்டில் நாடாளுமன்ற தேர்தல் ஓட்டுப் பொறுக்கும் திருவிழா களை கட்டியிருந்தது. எதிரிகளும், துரோகிகளும், சந்தர்ப்பவாதிகளும் கூட்டணிகள் அமைத்து தேர்தலில் நின்றும், ஏதாவது ஒரு தரப்பை ஆதரித்தோ, எதிர்த்தோ பிரச்சாரம் செய்தும் ஈழத் தமிழர்கள் மீதான போரை முன்நின்று நடத்திக் கொண்டிருந்த இந்திய ‘ஜனநாயகத்துக்கு’ கொடி பிடித்துக் கொண்டிருந்தார்கள்.

அத்தகைய சூழலில் “ஈழப்போர் என்பது இந்திய அரசின் மேலாதிக்க நோக்கத்திற்காகவே. இதை முறியடிக்க போலி ஜனநாயகத் தேர்தலை புறக்கணிப்போம். புதிய ஜனநாயக புரட்சிக்கு அணி திரள்வோம்” என்ற முழக்கத்துடன் தமிழகத்தின் மனசாட்சியை தட்டி எழுப்ப புரட்சிகர அமைப்புகளான மக்கள் கலை இலக்கியக் கழகம் மற்றும் அதன் தோழமை அமைப்புகள் களம் இறங்கினர்.

ப.சிதம்பரத்துக்காக தேர்தல் பிரச்சாரம் செய்ய சிவகங்கை வந்த காங்கிரசின் இளைய இளவரசர் ராகுல் காந்திக்கு கருப்புக் கொடி காட்டி கைதான ம.க.இ.க, பு.ஜ.தொ.மு தோழர்களின் போலீசுடனும், நீதித்துறையுடனுமான போராட்டம் 6 ஆண்டுகள் நீடித்தது. காட்டியது கொடி என்றாலும் அரசும், போலிசும் அதை வைத்து எப்படி எதிர்ப்புணர்வை முடக்க நினைக்கிறது என்பதை இந்த 6 ஆண்டு கால வரலாறு காட்டுகிறது.

கருப்புக்கொடி !

ழத்தமிழ் மக்களுக்கு எதிரான இறுதிப்போர் 2009-ம் ஆண்டின் தொடக்கத்திலிருந்தே உச்சகட்டத்தில் இருந்தது. கொத்துக்கொத்தாக தமிழ் மக்களும், விடுதலைப்புலிகளும் கொன்று குவிக்கப்பட்டுக் கொண்டிருந்தனர். இந்தப் போரை இந்திய அரசுதான் சிங்கள இராணுவத்திற்க்கு முன்னணி படையாக நின்று வழி நடத்திக் கொண்டிருந்தது.

ஈழத்தமிழ் மக்களின் துயரக்குரல் ஒவ்வொரு நாளும் அதிகரித்துக்கொண்டே இருந்தது. “நாங்கள் கொத்துக்கொத்தாக கொல்லப்படுகிறோம். இந்தப் போரை நிறுத்துங்கள்” என்று கதறினார்கள். ஆனால், இந்தக் கதறல் நொடிக்கு நொடி தமிழ் மக்களின் துயரை பேசி திரிந்தவர்களின் காதில் விழவில்லை. (விழுந்தாலும் கேட்காத மாதிரியே நடித்தார்கள்) அவர்களின் காதில் விழுந்தது என்னமோ நாடாளுமன்ற தேர்தல், கூட்டணி பேரம், தொகுப்பங்கீடு என்று பொறுக்கித்தின்னும் அரசியலின் வாய்ஜாலங்களே. அவர்களுக்கு தேர்தல், நாற்காலி, அமைச்சரவை, எம்பி, எம்.எல்.ஏ. இதுதான் முக்கியம். இதற்காக அவர்கள் வாய் நீளாத இடமில்லை

இந்த அயோக்கியர்களின் உண்மை முகம் அறியாத தமிழ் மக்களோ இவர்களிடமே போரை நிறுத்த சொன்னார்கள். இது ஒரு குழந்தையை கடத்திச் சென்று கண்ணைப் பிடுங்கி, பிச்சை எடுக்க வைக்கும் அயோக்கியனிடமே, அந்தக் குழந்தை தன்னை விடுவிக்கக் கோருவதற்கு சமம். அந்தக் குழந்தைக்காவது தன் கண்ணை பிடுங்கியவன் யார் என்று தெரியும். பாவம் ஈழத்தமிழ் மக்களுக்கோ யார் பிழைப்புவாதிகள், யார் துரோகிகள் என்று தெரியாது. கையேந்தி உயிர்ப்பிச்சை கேட்டு நின்றார்கள்.

ஆனால் ஓட்டுப் பொறுக்கிகள் தங்களது கைதேர்ந்த பிழைப்பு வாதத்தை நாடாளுமன்ற தேர்தலில் காட்டினர்.

ஈழப் படுகொலை - தமிழக ஓட்டுப் பொறுக்கல்
ஓட்டுப் பொறுக்கிகள் தங்களது கைதேர்ந்த பிழைப்பு வாதத்தை நாடாளுமன்ற தேர்தலில் காட்டினர்.

1. “போரென்றால் மக்கள் சாகத்தானே செய்வார்கள்” என்று ராஜபக்சேவுக்கு ஆதரவாக பேசிய ஜெயாவுடன், தமிழ் மக்களின் இரத்த உறவு என்று சொன்ன வைகோ கூட்டணி, பழ.நெடுமாறன் கூட்டணி (இவர்கள் தான் இந்த தாயை ஈழத்தாயாக அறிவித்தார்கள்.)

2. நாம் தமிழர் – சீமானோ “இலை மலர்ந்தால் ஈழம் மலரும்” என்று முழங்கினார். தமிழர் கண்ணோட்டம் மணியாசனோ “காங்கிரசுக்கு ஓட்டு போடாதீங்க” என்று மறைவில் இலைக்கு ஆதரவு தேடினார்.

3. “தமிழ் நாட்டின் பிரபாகரன்” என்று அழைக்கப்பட்ட தொல் திருமாவளவனோ, ஈழத்தமிழ் மக்களின் மீதான போரை இந்திய அரசு சார்பில் நடத்திக் கொண்டிருந்த காங்கிரஸ் மற்றும் தி.மு.க.வுடன் அடைக்கலம்

4. பா.ம.க. இராமதாஸ் ஈழ ஆதரவு வேடம் தரித்து அ.தி.மு.க-உடன் இணைந்தார். ஒரு பின் குறிப்பு : மருத்துவரின் மகள் அன்புமணி இராமதாசோ, இதற்கு முன்னாள் காங்கிரசு அமைச்சரவையில், மத்திய அமைச்சர்; ஈழ மக்களுக்கு ஆதரவாக தனது இரண்டு மாத பதவியைக் கூட துறக்காத உத்தமர்.

5. இராஜீவின் ஆக்கிரமிப்பு இராணுவத்திற்க்கு கூஜா தூக்கிய வலது கம்யூனிஸ்டு கட்சி தா.பாண்டியன் ஈழ ஆதரவு நிலைப்பட்டுக்கா போயஸ் தோட்டத்தில் தஞ்சம் புகுந்தார்.

6. மார்க்சிஸ்டுகள் மட்டும் தான் அம்மாவுடன் கொள்கைபூர்வமாக கூட்டணி அமைத்தார்கள் என்பது இன்னொரு கேலிக்கூத்து.

7. பா.ஜ.க வெளிப்படையாகவே நாங்களும் காங்கிரசும் ஈழப்பிரச்சனையில் ஒன்று என்று பகிங்கிரமாகவே அறிவித்தது. ஆனால் இல.கணேசனும், தமிழிசையும் வாயளவில் பேசி தமிழின ஆதரவாளர்கள் பின்னால் திரிந்தார்கள்.

இப்படி எல்லா கூட்டங்களிலும் துரோகிகளும், சந்தர்ப்பவாதிகளும், பிழைப்புவாதிகளும் நிறைந்து இருந்ததால் எந்தக் கூட்டணியும் எதிர் கூட்டணியைப்பற்றி புகார் தெரிவிக்காமல் நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரம் அமைதியான வழியில் நடந்தது.

ஈழப் படுகொலை - தமிழக ஓட்டுப் பொறுக்கல்
தமிழகத்தின் மனசாட்சியை தட்டி எழுப்ப புரட்சிகர அமைப்புகளான மக்கள் கலை இலக்கியக் கழகம் மற்றும் அதன் தோழமை அமைப்புகள் களம் இறங்கினர் (கோப்புப் படம்).

காங்கிரஸ்காரர்களோ, “ஈழத்தில் போர் நிறுத்தம் ஏற்பட்டு விட்டது, ஈழதமிழ் மக்களுக்கு எல்லா உதவிகளையும் செய்வோம” என்று பொய் கூறி திரிந்தனர்; எந்த வித எதிர்ப்பும் இன்றி தமிழ்நாட்டுக்குள் ஓட்டு கேட்க வந்து போய் கொண்டிருந்தனர்.

இப்படிப்பட்ட நிலைமையில் தான் தமிழகத்தின் மனசாட்சியை தட்டி எழுப்ப புரட்சிகர அமைப்புகளான மக்கள் கலை இலக்கியக் கழகம் மற்றும் அதன் தோழமை அமைப்புகள் களம் இறங்கினர்.

“ஈழப்போர் என்பது இந்திய அரசின் மேலாதிக்க நோக்கத்திற்காகவே. இதை முறியடிக்க போலி ஜனநாயகத் தேர்தலை புறக்கணிப்போம். புதிய ஜனநாயக புரட்சிக்கு அணி திரள்வோம்” என்ற முழக்கத்தின் கீழ் மக்களை உணர்வூட்டும் பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். அதன் ஒரு பகுதியாக சிவகங்கை ம.க.இ.க மற்றும் புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியைச் சேர்ந்த தோழர்கள் நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரத்திற்காக காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியாவின் குலக்கொழுந்து ராகுல் காந்தி 08-05-2009 அன்று சிவகங்கை வரவிருப்பதை அறிந்தார்கள்

பொதுக்கூட்டம் நடக்க இருந்த 08-05-2009-க்கு ஒரு நாள் முன்பே கருப்புக்கொடி காட்டப்போவதாக பத்திரிகை மற்றும் காவல்துறைக்கு அறிவித்தார்கள். போலீசுக்கோ அதிர்ச்சி. அரண்டு போய் எழுந்து தோழர்களை வலை வீசித் தேடினார்கள். தோழர்கள் காவல்துறை கண்ணில் தட்டுப்படவில்லை. போலீசின் மோப்ப சக்தியை நன்கு உணர்திருந்ததால் வீட்டில் இல்லை. தோழர்களின் தொலைபேசிக்கு அழைத்து எப்படியாவது பேசி மயக்கி பிடித்து விடலாம் என்று கட்டம் கட்டினார்கள் அவர்களின் கண்ணில் மண்ணைத்தூவி பல அடுக்கு பாதுகாப்பையும் தாண்டி தாங்கள் மறைத்து வைத்திருந்த கருப்புக் கொடியுடன் சென்று முதல் வரிசையில் அமர்ந்தனர், ம.க.இ.க தோழர்கள் கணேசன், இராஜாங்கம் மற்றும் பு.ஜ.தொ.மு தோழர்கள் ஆனந்த் மற்றும் சபி.

ராகுல் காந்தி
காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியாவின் குலக்கொழுந்து ராகுல் காந்தி

தமிழகத்தில் முதன் முதலாக தேர்தல் பிரச்சாரத்திற்கு வந்த இராகுல் சிரித்த முகத்துடன், கை அசைத்து மேடையின் அருகில் வந்த போது தோழர்கள் நால்வரும் தங்கள் ஆடைக்குள் வைத்திருந்த கருப்புத் துணியை எடுத்து இராகுலின் முகத்திற்கு நேராக காண்பித்து, “ஈழத்தமிழ் மக்களை ஒடுக்கும்  இராகுலே திரும்பிப் போ” என்று கோசம் போட்டார்கள்.

இராகுலின் முகம் சுருங்கி போய் விட்டது. இராகுலின் முகத்தை பார்த்த ப.சிதம்பரம் மற்றும் தங்கபாலுக்கும் முகம் சுருங்கி இருண்டது. உடனே காங்கிரஸ் கயவாளிகள் கட்டையை உருவி தோழர் ஆனந்தின் தலையில் அடித்தனர். மற்ற தோழர்களையும் கடுமையாக தாக்கினார்கள். இதையெல்லாம் பொருட்படுத்தாமல் தோழர்கள் கோஷமிட்டனர். சிறிது நேரம் கழித்து வந்த காக்கி துறை அங்கிருந்த தோழர்களை பிடித்துக் கொண்டு போய் போலீஸ் வண்டியில் போட்டு அடைத்தனர்.

இதற்கு பின்பு பேச வந்த இராகுலுக்கு ஒரே நடுக்கம். பதின்மூன்றே நிமிடத்தில் மொழிப்பெயர்ப்புடன் கூடிய தனது உரையை முடித்து விட்டு, “ப.சிதம்பரத்துக்கு ஓட்டுப் போடுங்கள்” என்று கூட சொல்லாமல் அவசரமாக ஒடினார். சுதாரித்த ப.சிதம்பரம் வேகமாக போய் இராகுலின் காதில் முணுமுணுக்க அவர் திரும்பி வந்து “ப.சிதம்பரத்துக்கு ஓட்டு போடுங்கள்” என்று சொல்லி ஓடி விட்டார். இதன்பின் திருச்சிக்குச் சென்ற இராகுலுக்கு எதிர்ப்பு தெரிவிக்க அங்கு காத்திருந்தனர் புரட்சிகர இயக்கங்கள்.

ராகுல்காந்திக்கு சிவகங்கையில் கருப்புக் கொடி
ராகுல்காந்திக்கு சிவகங்கையில் கருப்புக் கொடி (கோப்புப்படம்)

ஆனால் கருப்புக் கொடி காட்டிய சிவகங்கை பகுதி தோழர்களை, போலீஸ் கடத்திச் சென்றது. ஐந்து மணி நேரமாக தோழர்கள் எங்கு இருந்தார்கள் என்பதே தெரியவில்லை. பின்பு இருக்கும் இடத்தை மக்கள் உரிமை பாதுகாப்பு மைய தோழர்கள் எஸ்.பி அலுவலகத்தை தொடர்பு கொண்டு பெற்றனர்.

கடத்தி சென்ற போலீஸாரோ தங்களால் முடிந்த அளவுக்கு தோழர்களின் ஆடைகளை கழட்டி இழிவுபடுத்தி, தகாத வார்த்தைகளால் திட்டி, கொடூரமாக தாக்கினர். சிவகங்கையில் இருந்து 15 கிலோமீட்டர் தொலைவில் உள்ள காளையார்கோவில் காவல்நிலையத்தில் வைத்து வழக்கு பதிவு செய்தனர். அங்கு சார்பு ஆய்வாளராக இருந்த லேடி சுந்தரி என்பவர் “யாரிடம்  எவ்வளவு பணம் வாங்கிக் கொண்டு கருப்பு கொடி காட்டினீர்கள்” என்று கேட்க,

“நாங்கள் புரட்சியாளர்கள் ம.க.இ.க, பு.ஜ.தொ.மு அமைப்புகளைச் சேர்ந்தவர்கள்” என்றவுடன் தான் சட்டையில் மாட்டியிருந்த நேம்பேட்ஜை கழற்றி பைக்குள் வைத்துக் கொண்டு சென்றவர் கடைசி வரை வரவில்லை.

ராகுல்காந்திக்கு சிவகங்கையில் கருப்புக் கொடி
ராகுல்காந்திக்கு சிவகங்கையில் கருப்புக் கொடி (கோப்புப்படம்)

தோழர்களை காளையார் கோவிலுக்கு கொண்டு செல்லும் வழியால் காட்டுப் பகுதியில் சென்றனர்.

“காட்டுக்குள் ஏன் செல்கிறீர்கள்” என்று கேட்க,

“உங்களை சுட்டுக் கொல்லப் போகிறோம்” என்றான் செல்லப்பனேந்தல் கார்த்திக் என்ற போலீஸ்காரன்.

“முடிந்தால் சுட்டுப்பார்” என்றனர் தோழர்கள்.

கோபமுற்ற போலீஸ்காரர்களான கார்த்திக், முத்துக்கருப்பன் கடுமையாக தோழர்களை தாக்கினார்கள்.

தோழர்கள் பதிலுக்கு, “நீங்கள் பணத்திற்காக வேலை செய்கிற அடியாள்படை. நாங்கள் லட்சியத்திற்காக போராடுகிற போராளிகள். நீங்கள் 15 பேர் நாங்கள் 4 பேர். வண்டியை விட்டு இறங்கி அடித்து பார்ப்போம் யார் யாரை அடிக்கிறோம்” என்று கூற எஸ்.ஐ-யாக இருந்த பிரபாகரன் சத்தம் போட்டு, “அடிக்காத கார்த்தி எஸ்.பி-யிடம் சொல்வேன்” என்றவுடன் அடிப்பதை நிறுத்தினார்கள்.

இதற்கு முன்னராக தோழர்கள் குடிப்பதற்கு தண்ணீர் கேட்டதற்கு, “சிறுநீர் தருகிறோம் குடிங்கடா” என்று கூறி அவமானப்படுத்தினார், கார்த்திக்.

பின்பு நள்ளிரவில் மாஜிஸ்ரேட்டிடம் கொண்டு சென்றனர். ஆனால் அங்கு கொண்டு செல்லும் முன்பாகவே போலீஸ்-மாஜிஸ்ரேட், காங்கிரஸ் சிவகங்கை மாவட்ட தலைவர் ஆகியோர் அனைவரும் சேர்ந்து தோழர்களுக்கு எதிராக பொய் கேஸ் தயாரித்து பிணையில் உடனே வெளி வர முடியாத அளவிற்கு எல்லா வேலைகளையும் செய்து முடித்த பின்பு தான் மாஜிஸ்ட்ரேட் அனுராதா வீட்டிற்கு அழைத்து வந்தனர். அந்தம்மா முன் கூட்டியே முடிவு செய்ததை, தோழர்களிடம் கையெழுத்து வாங்க காத்து நிமிடம் தான் ஆனது. எந்த விசாரணையும் செய்யவில்லை. தோழர்கள் அனுபவித்த கொடுமைகளை கேட்கவில்லை. இதற்காக வழக்கறிஞர் தோழர்கள் போராடியும், அந்தம்மா அதை மறுத்து ஓடி விட்டார்.

ராகுல்காந்திக்கு சிவகங்கையில் கருப்புக் கொடி
ராகுல்காந்திக்கு சிவகங்கையில் கருப்புக் கொடி (கோப்புப் படம்)

பின்பு தோழர்களை மதுரை மத்திய சிறையில் கொண்டு போய் அடைத்தனர். 15 நாட்கள் கழித்து தோழர்கள் வழக்கறிஞர் தோழர்களின் கடும் முயற்சியால் பிணையில் வந்தனர்.

ஆனால் பொய் வழக்கோ தொடர்ந்தது. பொய் வழக்கு என்னவென்றால் தோழர்கள் நான்கு பேரும் கருப்புக்கொடி காட்டவில்லையாம், (இராகுலின் முகத்திடம் கேட்டிருக்கலாம் பதில் சொல்லியிருக்கும்) மாறாக தோழர்கள் நான்கு பேரும் கூட்டத்தில் இருந்த காங்கிரஸ்காரர்களை கெட்டவார்த்தையால் திட்டி, கன்னத்தில் அறைந்து, வயிற்றில் குத்தி, அவர்கள் கையில் கட்டியிருந்த 2000ரூ கடிகாரத்தை உடைத்தும் அராஜகம் செய்தார்களாம். இப்படித்தான் இந்த முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைத்தார்கள். இந்த முழுப் பூசணிக்காயை சோற்றில் தேட நீதித்துறைக்கு ஆறு ஆண்டுகள் ஆகியுள்ளது.

இப்போது 2015 ஜூலை மாதம்தான் வழக்கை தள்ளுபடி செய்து தோழர்களை விடுவித்துள்ளார்கள். ஆறு வருடங்களாக வழக்கு, வாய்தா, போன்று தோழர்களின் வாழ்க்கையிலும், இழப்புகள் ஏராளம். இதையெல்லாம் கடந்து தான் தொடர்ந்து ஆளும் வர்க்கத்திற்கு எதிராகவும் ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாகவும் தோழர்கள் களத்தில் நின்றனர்.

இதை அன்றே உணர்ந்த ஒருவர் கருப்புக் கொடி காட்டியதற்க்கு மறுநாள் ஒரு டீக்கடையில் தோழர்கள் நின்று பேசும் போது அவர்களிடம் கூறியது. “அவர்கள் நான்கு பேரும் சிங்கம்யா. அவ்வளவு கூட்டத்தைப் பார்த்தும் பயப்படாமல் கருப்புக்கொடி காட்டி இரத்தம் சொட்ட அடிவாங்கி, கோஷமிட்டு துணிச்சலா நின்றதை நான் அருகில் நின்று பார்த்தேன். இராகுல், சிதம்பரம் முகம் சுருங்கி விட்டது. ஈழத்திலே தமிழர்களை அழித்து விட்டு தமிழ் நாட்டுக்குள் இவனுங்கள நுழைய அனுமதிக்கலாமா? மிகப்பெரிய காரியம் பண்ணிட்டாங்கையா. பலருக்கும் சந்தோசமையா” என்று கூறி முடித்தார்.

வெள்ளை ஆதிக்க காலத்தின் தொடக்கத்தில் ஆங்கிலேயர்களை எதிர்த்து நின்ற வீரமிகு வரலாற்றை இன்று இந்த மண்ணில் புரட்சிகர இயக்கங்கள் தொடர்கின்றன.

தகவல்
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி,
சிவகங்கை