Wednesday, September 23, 2020
முகப்பு கட்சிகள் அ.தி.மு.க தோழர் கோவன் கைது : மக்கள் அதிகாரம் பத்திரிகையாளர் சந்திப்பு

தோழர் கோவன் கைது : மக்கள் அதிகாரம் பத்திரிகையாளர் சந்திப்பு

-

புரட்சிகர பாடகர் தோழர் கோவன் கைதை ஒட்டிய பத்திரிகையாளர் சந்திப்பு

.க.இ.கவின் மைய கலைக் குழுத் தோழர் கோவன் மக்கள் அதிகாரம் அமைப்பிற்காக “மூடு டாஸ்மாக்கை” என்று பாடிய குற்றத்திற்காக தேசவிரோத வழக்கில் கைதானதும், அதனை ஒட்டி நாடு முழுக்க கண்டன குரல்கள் எழும்பியுள்ளதும் நாம் அறிந்ததே! இது தொடர்பாக மக்களுக்கு தங்களது நிலையை தெளிவுபடுத்தும் வகையிலும், இதனை எப்படி எதிர்கொள்வது என்ற வகையிலும் மக்கள் அதிகாரம் அமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் ராஜூ, மக்கள் அதிகாரத்தை சேர்ந்த வழக்கறிஞர் வாஞ்சிநாதன், வழக்கறிஞர் மீனாட்சி ஆகியோர் நேற்று (31-10-2015) பத்திரிகையாளர் சந்திப்பு நடத்தினர்.

மக்கள் அதிகாரம் பத்திரிகையாளர் சந்திப்பு
“மீண்டும் ஒரு எமெர்ஜென்சி காலத்தில் நாம் வாழ்கிறோமோ”

வழக்கறிஞர் ராஜூ பேசுகையில், “மீண்டும் ஒரு எமெர்ஜென்சி காலத்தில் நாம் வாழ்கிறோமோ என்பதை நினைவுறுத்தும் வகையில் தோழர் கோவனை கைது செய்துள்ளனர். வினவு இணையதளத்தை சார்ந்த தோழர் காளியப்பனை கைது செய்ய முயற்சித்துள்ளனர். இந்த சம்பவங்களை வன்மையாக கண்டிக்கிறோம். இந்த அநீதியான பாசிச நடவடிக்கையை கண்டித்த தி.மு.க தலைவர் கருணாநிதி, பொருளாளர் ஸ்டாலின், வி.சி.க தலைவர் தொல். திருமாவளவன், சி.பி.ஐ தலைவர் ராஜா இன்னும் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களுக்கும், ஊடக, இணையதளங்களுக்கும் எங்களது நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம். இப்படி பலமான எதிர்ப்பு குரல்கள் எழவில்லை என்றால் ஆந்திரா, மணிப்பூர்களில் நடைபெறுவது போல புரட்சிகர அமைப்பினரை கடத்தி சென்று என்கவுண்டர் செய்திருப்பர்.

கடந்த ஜூலையிலிருந்து டாஸ்மாக்கிற்கெதிராக நாங்கள் தொடர்ச்சியாக இயக்கம் நடத்தி வருகிறோம். இரண்டு மாதங்களுக்கு முன்பாகவே இப்பாடல் வெளியாகிவிட்டது. ஒவ்வொரு மேடையிலும் இதனை தோழர் கோவன் பாடியுள்ளார். அப்போதெல்லாம் நடக்காத கைது இப்போது ஏன் நடந்துள்ளது? ஏனென்றால் அது மக்களின் உணர்வுகளை சரியாக பிரதிபலித்துள்ளது என்பதனால்தான்.

தேசம் என்றால் ஜெயலலிதா, மோடி போன்றோர் தன்னையே தேசம் என நினைத்து கொள்கின்றனர். அதனால்தான் ஆங்கிலேயர் காலத்தில் நிலவியதை போல எதிர்த்து பேசுபவர்களை தேசதுரோக வழக்கில் கைது செய்கின்றனர். ஆனால் உண்மையில் இந்த நாட்டு மக்கள்தான் உண்மையான தேசம் என்பது எங்கள் மக்கள் அதிகாரத்தின் கோட்பாடு. அவர்களுக்காக போராடுவது, குரல் கொடுப்பது தேச நலனுக்கானதே!

இது வெறும் கருத்து சுதந்திரத்திற்கெதிரான நடவடிக்கை மட்டுமல்ல. இதைப் புரிந்து கொள்வதானால் தபோல்கர், பன்சாரே, கல்புர்கி படுகொலைகளுடன், அணுகுண்டை விட மோசமானது இந்து மத சர்வாதிகாரம் என்று விஞ்ஞானிகளால் கண்டிக்கப்பட்டதையும் சேர்த்து பார்க்க வேண்டியுள்ளது. தோழர் கோவன் ஏற்கனவே “இருண்ட காலம்“, “ஆண்ட பரம்பரையா? அடிமை பரம்பரையா?” போன்ற பாடல்களை இயற்றியுள்ளார்

கோவன் கைது செய்யப்பட்டதோ, எங்கள் தோழர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டதோ பெரிய விசியமல்ல, அதனை விட ஐயா சசிபெருமாள் இறப்பும், பச்சையப்பன் கல்லூரி மாணவர்களின் போராட்டமும், தமிழ்நாட்டு பெண்களின் கண்ணீருமே மிகப்பெரிது. என்ன காரணத்திற்காக இந்த பாடல் இயற்றப்பட்டதோ அந்த நோக்கமான டாஸ்மாக்கை மூடும் போராட்டம் மீண்டும் தொடங்க வேண்டும். தேர்தல் அரசியலுக்கு அப்பாற்பட்டு உண்மையான மக்கள் திரள் போராட்டமாக அனைத்து அரசியல் கட்சிகளும், அமைப்புகளும் அணிதிரண்டு போராடவேண்டுமென அறைகூவல் விடுக்கிறோம்” என பேசினார்.

மக்கள் அதிகாரம் பத்திரிகையாளர் சந்திப்பு
“சாதி, மதவெறி அமைப்புகளை தவிர்த்து அனைத்து ஜனநாயக கட்சிகளோடு சேர்ந்து வர்ற திங்கள் கிழமை தமிழகத்தின் முக்கியமான பகுதிகளில ஆர்ப்பாட்டம் நடத்துறோம்.”

அதனை தொடர்ந்த பத்திரிக்கையாளர்கள் கேள்விகள் எழுப்பினர்.

கே: உங்கள் பாடல் வரியில் ‘ஊத்தி கொடுத்த உத்தமி’ என்ற வரி முதல்வரைப் பற்றி கடுமையானதாக இல்லையா?

ப: டாஸ்மாக்கால் விதவையான கிராமங்களில் நாங்கள் சென்று பார்க்கும்போது அங்குள்ள பெண்களை சமூகம் கேவலமாக பார்ப்பதாகக் கூறி வேதனைப்படுகின்றனர். ஒரு அவசரத்துக்கு பேருந்துக்கு வண்டியில் ஆண் யாராவது ஏற்றிசென்றால் கூட அதனை சமூகம் தவறாக சித்தரிக்கின்றது. கணவனை இழந்து ஒட்டுமொத்த கிராமமும் குழந்தைகளை வைத்துக்கொண்டு கஷ்டப்படுகிறது. இப்படி பெண்களை ஜெயலலிதா இழிவுபடுத்துகிறார். அவருடன் ஒப்பிடுகையில் நாங்கள் குறிப்பிட்டது கடுமையானதல்ல. அதோடு நாங்கள் குறிப்பிட்டது பெருவாரியான மக்களின் உள்ளக்குமுறலே!

கே: ‘வாழவைச்ச தெய்வம்னு கூவலனா கொன்னுறுவா’னு பாடல் வரி வருது, இதுவரைக்கும் எத்தன பேரை கொன்னிருக்காங்க?

ப: ‘வொய் திஸ் கொலைவெறி’னு கூடதான் பாடல் வரி வருது. அதுல என்ன உண்மையிலேவா கொலைபண்ற வெறியில பெண்கள் இருக்காங்க? ஜெயலலிதா கட்சியில அவுங்கள எதிர்த்து பேசுன எத்தன பேரு பதவியில இருக்காங்க? அவுங்க உடம்பு சரியில்லைனு செய்தி போட்ட பத்திரிக்கைக்காரங்க கூட சிறையிலதான் இருக்காங்க. அதனால கொன்னுறுவாங்கிறதுக்கு அர்த்தம் அவுங்களோட கேள்வி கேட்க முடியாத அதிகாரம்தான்.

கே: அவரை கைது செஞ்சது சட்டவிரோதமா?

ப: பொதுவா கைது செய்றதுக்கான உச்சநீதிமன்ற வழிகாட்டுதலை மீறி கைது செஞ்சிருக்காங்க. சிவகங்கை சிறுமையை சீரழிச்ச போலிசை இப்படி விரட்டி கைது பண்ணல, கோகுல்ராஜ் கொலைவழக்கு குற்றவாளி யுவராஜ விரட்டி பிடிக்கல, டி.எஸ்.பி விஷ்ணுபிரியா கொலைவழக்குக்கு காரணமான எஸ்.பி செந்தில்குமார விசாரணைக்குக் கூட அழைக்கல. ஆனா டாஸ்மாக்கை மூடுனு பாடனதுக்காக நள்ளிரவுல தோழர் கோவனை கடத்திட்டு போற மாதிரி கைது செய்திருக்காங்க. இது ஒரு பாசிச நடவடிக்கை

கே: இப்போ அவரை கைது செஞ்சதுக்கு முதல்வரை திட்டி பாடனதுதான் காரணம்னு ஒரு குற்றசாட்டு இருக்குதே?

ப: இப்போ அ.தி.மு.கவோட கொள்கை பரப்பு செயலாளர் நாஞ்சில் சம்பத் அந்த அம்மாவை பேசாத பேச்ச நாங்க பேசிடல. ஆனா இப்போ அவரு இனோவா கார்ல போய்கிட்டு இருக்காரு. உண்மையிலேயே அப்படி ஒரு விசியம் இருந்தா எப்படி இனோவா சம்பத்த சேத்திக்கிட்டாங்க.

கே: உங்க அடுத்தகட்ட நடவடிக்கை

ப: சாதி, மதவெறி அமைப்புகளை தவிர்த்து அனைத்து ஜனநாயக கட்சிகளோடு சேர்ந்து வர்ற திங்கள் கிழமை தமிழகத்தின் முக்கியமான பகுதிகளில ஆர்ப்பாட்டம் நடத்துறோம்.

கே: இப்போ பி.ஜே.பி இந்த விசியத்துல அரச எதிர்க்குது அதனோடு கூட்ட வச்சிக்கலாமே!

ப: இல்ல, அவுங்க அடிப்படையா மனித உரிமைகளுக்கெதிரா செஞ்சிட்டு இந்த பிரச்சனையில ஒன்னு சேரலாம்னு சொன்னா நாங்க சேர்ந்துக்க மாட்டோம். எந்த காலத்திலேயும் சாதி, மதவெறி அமைப்புகளோட ஒண்ணு சேர்ரதில்லைங்கிறது எங்களோட அடிப்படை நிலைப்பாடு.

கே: ’போயசுல உல்லாசம்’ங்கிறது ஜெயலலிதாவ இழிவுபடுத்தலயா?

ப: இன்னிக்கு நாட்டுல ஆத்துமணல் கொள்ளை, தாது மணல் கொள்ளை, கிரானைட் கொள்ளை, இன்னும் டாஸ்மாக்ல இலட்சக்கணக்குல ஜனங்க சாவு இப்படி பிரச்சனைகளெல்லாம் இருக்கும்போது இத தீர்க்காம இருக்குறததான் உல்லாசம்னு சொல்றோம். இதுவும் நாங்க மக்கள் மத்தியில போகிறப்போ அவுங்களோட உள்ளக்குமுறல்தான் இது.

வினவு செய்தியாளர்கள்
சென்னை.

மக்கள் அதிகாரம் – தமிழ்நாடு பத்திரிகை செய்தி

kovan-arrest-pp-tamilnadu-poster

டாஸ்மார்க்கிற்கு எதிராகப் பாடல் இயற்றி பாடிய புரட்சிகர மக்கள் பாடகர் மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் தோழர் திருச்சி கோவன் அவர்கள் தேசத்துரோக வழக்கில் கைது!

வினவு இணையதள பொறுப்பாளர் தோழர் காளியப்பன் மீது தேடுதல் வேட்டை!

மிழ்நாட்டில் போதையும் போலிசும் தான் தமிழக முதல்வர் ஜெயலலிதா தலைமையிலான ஆட்சியைக் காத்து வருகின்றன. இவ்வுண்மையை தமிழக அரசு மீண்டும் ஒருமுறை உறுதி செய்திருக்கிறது. ஆண்டுக்கு பல ஆயிரம் கோடி ரூபாய் வசூல் செய்தாக வேண்டுமென்று அரசே இலக்கு வைத்து, போலிசு காவலுடன் சாராயம் விற்பனை நடத்துவது உலகில் வேறெங்கும் இல்லை. “அரசின் டாஸ்மாக் சாராய விற்பனையில் தலையிட முடியாது; அது அரசின் கொள்கை முடிவு” என்கிறது, “எம்.ஜி.ஆர். சமாதியின் நுழைவாயிலில் இருப்பது இரட்டை இலை அல்ல, பறக்கும் குதிரையின் இறக்கைகள்தாம்” என்ற ஆளும் கட்சியின் வாதத்தை ஏற்கும் உயர்நீதிமன்றம்!

டாஸ்மாக் சாராய கடைகளை மூடச் சொல்லி கடந்த ஜூலை மாதம் முதலாக மக்கள் அதிகாரம் அமைப்பு தமிழகம் தழுவிய அளவில் பரவலாக போராடி வருகிறது. ஆளும் கட்சி தவிர இங்கு உள்ள அனைத்து அரசியல் கட்சிகளும் சமூக அமைப்புகளும், பெண்கள், பள்ளி சிறுவர்கள் முதற்கொண்டு மாணவர்கள்-மாணவிகள், இளைஞர்கள் மற்றும் பொதுமக்களும் பல்வேறு வழிகளில் போராடி வருகிறார்கள். ஆனால், என்ன செய்தாலும் சரி, தனது சாராயக் கொள்கையை மாற்றிக் கொள்ளப் போவதில்லை என்பதில் உடும்பு பிடியாக நின்று ஜெயலலிதா – சசிகலா ஆட்சி போலிசு காவலுடன் சாராய வியாபாரத்தை நடத்தி வருகிறது.

ஈழத்தில் மட்டுமல்ல, இங்கும் தமிழக குடிமகன்கள் குடித்து நாளும் செத்தாலும், தமிழச்சிகள் தாலியறுத்தாலும் கவலைப்படாமல் தமிழ்ச் சமூகத்தை சீரழித்து வருகிறது, ஜெயலலிதா அரசு. அரசியல் சட்டப்படி, போதைப் பொருள் விற்பனையைத் தடுக்கவேண்டிய போலிசும், நீதித்துறையும் அரசின் சாராய வியாபாரத்துக்குத் துணை போகின்றன. டாஸ்மாக் சாராய எதிர்ப்பு என்றாலே, தங்களது வசூல் நின்று போய்விடும் என்று வெறிபிடித்தது போல ஜெயலலிதா ஆத்திரம் அடைகிறார். அதனால்தான் டாஸ்மாக் சாராயக் கடைகளை எதிர்த்து உறுதியுடன் போராடும் மக்கள் அதிகாரம் அமைப்பினர் மற்றும் மாணவர்களை தனது பாசிசக் கொடுங்கரங்கொண்டு ஒடுக்குகிறது, அரசு. அவர்களைத் தாக்கிக் கைதுசெய்து போலிசுக் காவலிலும் சிறையிலும் அடித்துச் சித்திரவதை செய்தது. கொலை முயற்சி உட்பட பொய் வழக்குகள் போட்டு, பிணையில் விடுவதற்கே சட்டத்துக்கு மாறாக பெருந்தொகை விதித்து பலநாட்கள் சிறை வைத்தது.

இவ்வாறான ஒடுக்கு முறைகளின் தொடர்ச்சியாக மக்கள் கலை இலக்கிய கழகத்தின் புரட்சி பாடகர் தோழர் கோவன் வியாழன் நள்ளிரவு இரண்டே முக்கால் மணிக்கு, திருச்சியில் அவரது வீட்டில் வைத்து கைது செய்யப்பட்டிருக்கிறார். அவரை கைது செய்வதற்கென்றே சுமார் பத்து பேர் கொண்ட சைபர் கிரைம் போலிசின் தனிப்படை ஒன்று சென்னையிலிருந்து அனுப்பப்பட்டிருக்கிறது. அவர் மீது 124ஏ தேசத்துரோக நடவடிக்கை, 153 சமூகத்தில் இரு பிரிவினருக்கிடையே மோதல் ஏற்படுத்துதல், 505/1 அவதூறு செய்தல் பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்திருக்கிறார்கள்.

அதேநேரத்தில் தஞ்சையில் மக்கள் அதிகாரம் அமைப்பின் மாநில பொருளாளர் தோழர் காளியப்பனின் வீட்டிற்குள் சுவரேறிக் குதித்து கொல்லைப்புறமாக உள்ளே நுழைந்திருக்கிறது சென்னையிலிருந்து சென்ற இன்னொரு தனிப்படை. வீட்டில் அவர் இல்லை, தனியே இருந்த அவரது மனைவியை மிரட்டிப் பார்த்துவிட்டு பயனில்லாததால் காளியப்பனைக் கைது செய்ய தஞ்சையிலேயே முகாமிட்டிருக்கிறது தனிப்படை.

தனிப்படை அமைத்து நள்ளிரவில் வீடு புகுந்து கைது செய்யும் அளவுக்கு இவர்கள் செய்த பயங்கரவாதக் குற்றமென்ன? டாஸ்மாக்கை எதிர்த்து இரண்டு பாடல்கள் பாடியதுதான் கோவன் செய்த குற்றம், அவர் பாடிய “மூடு டாஸ்மாக்கை” என்ற பாடலும், “ஊருக்கு ஊரு சாராயம் தள்ளாடுது தமிழகம்” என்ற பாடலும் வினவு இணையதளம், யு டியூப், பேஸ்புக், வாட்ஸ் அப் போன்ற ஊடகங்களின் வழியே பல இலட்சம் மக்களை சென்றடைந்துவிட்டது. இதனால் கோபம் அடைந்த தமிழக அரசு இபிகோ 124ஏ பிரிவின் கீழ் தேசத்துரோக குற்றத்துக்காக, கோவனை கைது செய்து, தேசிய பாதுகாப்பு சட்டத்தில் அடைக்க முயற்சிக்கிறது.

 • டாஸ்மாக் பாடலை பாடிய கோவனைக் கைது செய்து விட்டார்கள்.
 • இனி பரப்பியவர்களைக் கைது செய்வார்களா?
 • பாடலைக் கேட்பவர்களையும் கைது செய்வார்களா?
 • இது மக்களின் பாடல், இன்று அனைத்து ஊடகங்கள், உலகம் முழுவதும் ஒலிக்கிறது.
 • இந்தப் பாடல் கோட்டையை எட்டும்.
 • கொடநாட்டையும் எட்டும்.
 • மூடு டாஸ்மாக்கை என்ற மக்கள் குரல் அவர்களை செல்லுமிடமெல்லாம் விரட்டும்.

பாசிச ஜெயா அரசின் ஒடுக்குமுறையை பலரும் கண்டித்துள்ளனர். பலரும் கண்டிக்காவிட்டால், மக்கள் ஆதரவு இல்லாவிட்டால் தோழர் கோவனை தமிழ்நாடு போலீசு என்கவுண்டர் செய்திருக்கும். ஆகவே, தமிழகத்தில் உள்ள அனைத்து ஜனநாயக சக்திகளும் மக்களும் தோழர் கோவன் கைதைக் கண்டிக்க வேண்டும். எதிர்த்துப் போராட வேண்டும். தொடர்ந்து டாஸ்மாக் எதிர்ப்பு போராட்டங்களை தீவிரப்படுத்தி டாஸ்மாக்கை நிரந்தரமாக மூட வேண்டும்.

முதற்கட்டமாக, எதிர்வரும் 02-11-2015 திங்கட்கிழமை சென்னை, மதுரை, கோவை, விழுப்புரம், நெல்லை, திருச்சி, தர்மபுரியில் அனைத்துக் கட்சிகளின் ஜனநாயக சக்திகளைத் திரட்டி ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்.

மாநில ஒருங்கிணைப்பாளர்
மக்கள் அதிகாரம்

சந்தா செலுத்துங்கள்

இணையத்தில் உழைக்கும் மக்களின் குரலாக பதினோரு ஆண்டுகளாக போராடும் வினவுடன் கை கோருங்கள். ஆதரியுங்கள்

 1. ஜெயலிதா வீட்டின் watchman ஆக பணிபுரிந்த முன்னால் dgp நடராஜன் மக்கள் கலை இலக்கிய கழக அமைப்பு தீவரவாத அமைப்பு என்று கூறுகிறான்.
  _______________________

 2. தமிழ் நாட்டு அரசு ஆதரிக்கும் மதுவிற்பனைக்கு எதிரான, அதன் தலைமை அமைச்சருக்கு எதிரான பிரச்சார பாடலுக்கு தேச துரோக வழக்கு பதியப்படும் என்றால் அரசின் கொள்கையை அவர்களே(அரசே) ஆணித்தரமாக மதுவை விற்போம் என்று தானே ஆகிறது. மதுவை விற்பது தான் அரசின் கொள்கை என்றால் அதற்கு எதிராக போராடுவது என்பது மக்களின் மீது அன்பும் அக்கறையும் கொண்ட அமைப்புகளின் கடமையாகிறது. அத்தகைய கடமையை மக்கள் அதிகாரம் மற்றும் ம க இ க ஆகிய அமைப்புகள் தங்களின் அமைப்பு சக்தியையும் மீறி மக்களை திரட்டி போராடி இருக்கிறார்கள் என்பது கருவறை நுழைவு போர் போன்றே வரலாற்றில் பதியபடும் என்பதில் எந்த மாற்று கருத்தும் இருக்கமுடியாது. அதே நேரத்தில் நாம் வேறு விடயத்தையும் கவனிக்கவேண்டும்.

  இந்த 40% கமிசன் அரசால் அதனால் தேர்தல் சமையத்தில் ஊழல் மயம் ஆக்கபட்ட நமது தமிழ் சமுகம் இருக்கும் நிலையில் இந்த சீரழிவை நோக்கி பயணிக்கும் சமுகத்துக்கான விழிப்புணர்வு கடமையும் இத்தகைய இயக்கங்களால் மட்டுமே சாத்தியம் ஆகும்.ஒட்டு அரசியல் நடத்தும் அரசியல் கட்சிகளில் எது ஆட்சிக்கு வந்தாலும் அவைகள் அனைத்துமே மக்களை ஊழல் மயமாக்கும் வேலையை தான் பரிணாம வளர்சியுடன் செய்யவார்கள்.

  இன்றைய தேவை சமுக சீரழிவுகளை நோக்கி குரல் கொடுக்கும் மக்கள் அதிகாரம் மற்றும் ம க இ க போன்ற இயக்கங்கள் தான் என்பது என்னுடைய அவதனிப்பாகிறது..

 3. தமிழக மக்களின் போர்க் குரல்…!
  தோழன் கோவன் பாடல்
  தனியொருவன் குரல் அல்ல…!
  டாஸ்மாக் மீது கடுஞ்சினங் கொண்ட
  ஒட்டு மொத்த தமிழக மக்களின் போர்க் குரல்…!

  பாமரன் குரல்… பாட்டாளிகளின் எழுச்சிக் குரல்…!
  வியர்வை சிந்தி உழைக்கும் மக்களின் உக்கிர குரல்…!
  மனிதர்களை நேசிப்பவர்களின் கோபக் குரல்…!
  போதையின் விபரீதங்களின் காரணமாக
  தந்தையிடம்…தனயனிடம் கற்பையிழந்த
  பெண்களின்…குழந்தைகளின் ஓங்காரக் குரல்…!
  பெற்றெடுத்த மகனென்றும் பாராமல்…
  தாலி கட்டிய கணவனென்றும் பாராமல்…
  வேறு வழியே இல்லாமல்…கொலை செய்து விட்டு…
  குற்றவாளி கூண்டில் நிற்கும் அபலைப் பெண்களின் அக்கினிக் குரல்…!

  குடிக்க பணம் தரவில்லையென்று
  பெற்றெடுத்த மகனால் கொலை செய்யப்பட்ட
  தாய்-தந்தையரின் பரிதவிப்புக் குரல் …!

  டாஸ்மாக் மரண கிணற்றில் மாண்டுவிட்டவர்களின்
  மனைவி மார்களின் சாபக் குரல்…!
  போதையின் விளைவால்… பலவகை வன்முறைகள்…
  விவாக ரத்துக்கள்…சாலை விபத்துக்களில்
  பாதிக்கப் பட்டோர் குமுறும் குரல்…!
  பதின் வயது பள்ளி மற்றும் கல்லூரி மாணவ மாணவி
  பெற்றோர்களின் அபயக் குரல்…!

  கொள்ளையடித்தாவது… கொலை செய்தாவது…
  பிச்சை எடுத்தாவது…எப்படியாவது…
  குடித்து விடவேண்டும் என்கிற மனோபாவத்திற்கு
  ஆளானவர்களின் ஆர்பாட்டக் குரல்…!

  தன் வீட்டில் அரை சவரன்…கால் சவரன்…தாலி…
  அண்டா… குண்டா…எல்லாம் முடிந்த பிறகு…
  அரிசி…பருப்பு…மிளகாய்…உப்பு வரை திருடி
  மன நோயாளிகளாகி விட்ட மனங்களின் வேதனைக் குரல்…!

  தமிழக மக்களின்
  கோவணமும் டாஸ்மாக்கில் பறிக்கப்பட்ட நிலையில்…
  கோவனின் கோப வரிகள்…உண்மையானவை…! சத்தியமானவை…!!
  கோடிக்கணக்கான குரல்களின் ஒருமித்த குரல் கோவன் குரல்…!!!
  – அக்னி

 4. ஊத்தி குடுத்த உத்தமினா என்னாவாம், இந்த அம்மா சாராயம் விக்கிது பினாமி பெயரில் சாராய பாக்ட்ரி வச்சுக்கினு இருக்குனு சொல்லுறாங்க அதுல எல்லாம் வராத வெக்கமா ஊத்தி குடுத்த உத்தமினு சொன்னா வந்துடப்போகுது .போயசுல உல்லாசம்னு சொன்ன என்னவாம் இந்த அம்மா உல்லாசமாத்தான் இருக்குது டாஸ்மாக் வாசலில் புருசன் சம்பாதிச்ச காசெல்லாம் குடுத்துட்டு வ்ந்த பின்னாடி கஞ்சிக்கு வழி இல்லாத பொம்பளைக மாரி கஸ்டத்துலயா வாழுது உல்லாசமாத்தான் கொடநாட்டுல ஓய்வு எடுக்குது ,எல்லாரும் அம்மா அம்மானு சொல்ல இந்த அம்மா எல்லாருக்குமா அம்மா எச்ச பொறுக்கி பொரம்போக்கு அடிமைகளுக்கு மட்டும்தான் அம்மா இன்னும் 2 மாசத்துக்கு ஆடும் இந்த பாஸிச ஜெயா(லச்சுமி அக்கா) அப்புறம் எலக்சன் வந்தா மக்கள் இந்த அம்மாவ போமே வீட்டுக்குனு அனுப்பிருவாக…

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க