மோடி அரசின் பயங்கரவாதம் – கல்வி முதல் கறி வரை !

0

ஆர்.எஸ்.எஸ் எப்படி தேசத்துரோகியாக இருக்கின்றது?-ஒரு நிரூபணம்

ந்திய சுதந்திரப் போராட்ட வரலாற்றிலேயே வெள்ளையனை எதிர்த்துப் போராடாத ஒரே இயக்கம் ஆர்.எஸ்.எஸ் இந்துத்துவக்காலிகள் தான் என்பது ஊரறிந்த உண்மை.

‘வலியவன் என்றால் காலை நக்கு; எளியவன் என்றால் எட்டி உதை’ என்று காவிக் கூட்டத்தின் இந்துத்துவ சித்தாந்தத்தை ஒரே வரியில் அடக்கிவிடலாம்.

இவ்வழியில் ‘பாரத் மாதா கி ஜே’ என்று கோசம் போட்ட இந்தக் கும்பலின் பாசிச ஆட்சி இன்றைக்கு மாட்டுக்கறிக்கு தடை, மாட்டுக்கறி தின்றதாக மக்களைக் கொல்வது, இந்துத்துவ பார்ப்பனியத்தை எதிர்க்கும் எழுத்தாளர்களைக் கொல்வது, தலித்துகளை எரிப்பது, வகுப்புவாத கலவரங்களை மூட்டுவது, கல்வி நிலையங்களை காவிமயமாக்குவது, வரலாற்றைத்திரிப்பது, மை அடிப்பது என்று ஊழிக்கூத்து புரிகின்றன.

இதெல்லாம் ஆர்.எஸ்.எஸ்ஸின் செயல்திட்டத்தில் ஒருபகுதி தான். ஆனால் இதற்கு கைமாறாக ஆர்.எஸ்.எஸ் ஏகாதிபத்திய முகமைகளுக்கு ஏவல் நாயாக எப்படி இந்தியாவை விற்றுத் தீர்த்திருக்கிறது என்று தெரியுமா?

ஆர்.எஸ்.எஸ் கல்வியில் தனியார்மயம்
உலக வர்த்தக கழகத்தின் காட்ஸ் ஒப்பந்த பரிந்துரைகளை அமல்படுத்துவதன் பொருட்டு சி.எஸ்.ஐ.ஆர் ஆய்வு நிறுவனங்களை, விற்றுத்தீர்க்கும் பிரகடனத்தை ஆர்.எஸ்.எஸ் கும்பல் முன்னின்று நடத்திக்கொடுத்திருக்கிறது

28-10-2015 அன்று மத்திய அரசு, இந்தியாவில் அனைத்து சி.எஸ்.ஐ.ஆர் ஆராய்ச்சி நிறுவனங்களுக்கான நிதி ஒதுக்கீட்டை இரத்து செய்வதாகவும் இனிமேல் இவையனைத்தும் தங்களுக்குத் தேவையான நிதியை தாங்களே திரட்டிக்கொள்ள வேண்டும் என்றும் அனைத்து ஆய்வு நிறுவனங்களும் வணிகமயமாக்கப்படும் என்றும் இந்திய கல்வித்துறையையே காலியாக்கி இருக்கிறது.

இம்முடிவு கடந்த ஜூன் மாதமே டேராடூன் பிரகடனத்தில் (Dehradun Declaration) முடிவு செய்யப்பட்டிருக்கிறது. இப்பிரகடனத்தை செயல்படுத்திய முக்கியமான செயல்கர்த்தா ஆர்.எஸ்.எஸ் கும்பலின் விக்யான்பாரதி அமைப்பாகும். இதற்கு என்ன பதில் சொல்வீர்கள்? அல்லது எப்படி புரிந்துகொள்வீர்கள்?

“சிந்தான் சிவிர்” என்பதன் பெயரில் டேராடூனில் நடந்த இந்தக் கூட்டத்தில் பங்கேற்ற இந்திய அறிவியல் விஞ்ஞானிகள் ஓர் அதிர்ச்சிகரமான கேள்வி ஒன்றை முன் வைக்கின்றனர்.

ஆர்.எஸ்.எஸ்ஸிற்கு இந்த அறிவியல் கூட்டத்தில் என்ன வேலை என்பதுதான் அந்தக் கேள்வி. இது வழமைபோல ‘வேதக்கலாச்சாரத்தில் நானோ தொழில்நுட்பம்’, ’40க்கு 40 அடியில் விமானம்’ என்று திணிக்கிற இந்துத்துவக் காலித்தனம் அல்ல.

மாறாக, உலக வர்த்தக கழகத்தின் காட்ஸ் ஒப்பந்த பரிந்துரைகளை அமல்படுத்துவதன் பொருட்டு சி.எஸ்.ஐ.ஆர் ஆய்வு நிறுவனங்களை, விற்றுத்தீர்க்கும் பிரகடனத்தை ஆர்.எஸ்.எஸ் கும்பல் முன்னின்று நடத்திக்கொடுத்திருக்கிறது என்பதுதான்.

காக்கி டவுசர்கள் என்றால் காவிப்பயங்கரவாதம் மட்டும் தான் என்று பார்த்து பழகிய பொதுமக்கள், இக்கும்பல் எப்படி இவ்விதம் தேசவிரோதியாக செயல்படுகிறது என்பதை தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

ஏனெனில் இக்கும்பல் விட்ட தேசாபிமான ஊளைச்சவுண்டு அவ்வளவு காட்டமானது. ‘மாட்டுக்கறி தின்பவன் இந்தியாவில் இருக்கக் கூடாது’, ‘முசுலீம் கிறித்தவர்கள் இந்தியர்கள் அல்லர்’, ‘கலாமைப் போன்று முசுலீம்கள் தேசபக்தி உள்ளவர்களாக இருக்கவேண்டும்’ என்று பாரதமாதா சேவையில் 24*7 நேரமும் ‘வேலையில்’ இருந்தனர்.

ஆனால், இவர்கள் செய்துகொண்டிருக்கும் வேலை எத்தகையது? இந்திய கல்வித்துறையையே ஏகாதிபத்தியத்திற்கு விற்றிருக்கிறார்கள். இன்றைக்கு சி.எஸ்.ஐ.ஆர் ஆய்வு நிறுவனங்கள் அழிக்கப்படுகின்றன என்பது மட்டுமல்ல, இதே மோடி கும்பலின் மக்கள் நலவாழ்வுத்துறை அமைச்சகம், ஹெ.எச்.ஐ.வி மற்றும் எய்ட்ஸிற்கான ஆராய்ச்சி நிதிநல்கையை நிறுத்தியிருக்கிறது. எய்ட்ஸ் கட்டுப்பாட்டு அமைப்பின் 14 செயல்பாட்டு ஆராய்ச்சி திட்டங்களை நிறுத்தியிருக்கிறது. 18 நிதிநல்கை ஆராய்ச்சித்திட்டங்களையும் வாபஸ் பெற்றிருக்கிறது.

இந்துத்துவம் என்பதன் பெயரில் இரத்தம் குடிக்கும் ஆர்.எஸ்.எஸ் கும்பல் எப்படி இந்தியாவை விற்றுத்தீர்க்கும் களவாணியாக இருக்கிறது என்பதற்கு இது ஓர் எடுத்துக்காட்டு.

ஆர்.எஸ்.எஸ் போலி தேசிய கலாச்சாரம்
ஆர்.எஸ்.எஸ்ஸின் மாட்டுக்கறி அரசியல் இன்றைக்கு மனிதக்கறி வேட்டையாக மாறியிருக்கிறது.

இரண்டாவது எடுத்துக்காட்டு இன்னும் சற்று கவனிக்கத்தக்கது. ஆர்.எஸ்.எஸ்ஸின் மாட்டுக்கறி அரசியல் இன்றைக்கு மனிதக்கறி வேட்டையாக மாறியிருக்கிறது. தாத்ரியில் மாட்டுக்கறிதின்றார் என்ற புரளிக்காக இச்சமூகத்தின் சாமானியன் அடித்தே கொல்லப்பட்டார்.

இது வெளிவந்த சில நாட்களிலேயே பா.ஜ.க எம்.பி சங்கீத் சோம் (முசாபர் நகர் கலவரத்தை முன்னின்று நடத்திய காவிப் பொறுக்கி) தாத்ரி படுகொலையை இந்து-முசூலிம் வகுப்ப்வாத கலவரமாக மாற்றும் அரசியலை கையிலெடுத்தார். ஆனால் இந்தக்காவி ஓநாய் ‘அல்-துவா’ எனும் அரபுப் பெயரில் மாட்டுகறியை வெளிநாட்டிற்கு ஏற்றுமதி செய்யும் கம்பெனி நடத்திவருவது வெட்டவெளிச்சமாகிப்போனது.

இங்கு முக்கியமாக கவனிக்க வேண்டியது காவிக்கும்பலின் இத்தகைய தெள்ளவாரித்தனம் மட்டுமல்ல. இதே ஆர்.எஸ்.எஸ் கும்பல் சைவம் என்று சொல்பவர்களையும் எப்படி உயிரோடு வாழ அனுமதிக்கவில்லை என்பதைப் பற்றியும் தான்.

இன்றைக்கு பருப்புவிலை கிலோ ஒன்றிற்கு 220 ரூபாய்க்குப்போய்விட்டது. மாட்டுக்கறி தின்றால் தலித்துகளையும், முசுலீமையும், கிறித்தவனையும் கொல்வேன் என்று சொல்லும் இந்துத்துவ வானரங்களும் ஏ.பி.வி.பி குண்டாந்தடிகளும் பருப்பு விலையேற்றத்தை பேசாது இருப்பது ஏன்?

மோடி கும்பல் இதுவரை 80,000 டன் பருப்பு பதுக்கலை கண்டுபிடித்திருப்பதாக சவுண்டுவிடுகிறது. ஆனால் பொது விநியோகத்திட்டத்தையே காயடித்திருக்கிறது. பதுக்கலுக்கு சட்டப்பூர்வ வடிவம் கொடுக்கும் வழியில் வெளிமார்கெட்டை மட்டும் திறந்துவிட்டு அரசின் வினியோக-விவசாய கட்டமைப்புகளை நிர்மூலமாக்கியிருக்கிறது.

இந்நிலையில் சைவப் பட்சிணிகளின் புரத தேவையை சரி செய்யும் அத்வாசிய பருப்பை பதுக்கும் எந்தவொருவரும் ஆர்.எஸ்.எஸ் காவிக்கும்பலால் தாக்கப்படவில்லை என்பதைக் கவனிக்க வேண்டும். மையடிக்கப்படவில்லை! நெற்றிப்பொட்டில் சுட்டுக்கொல்லப்படவில்லை!

இது எதைக் காட்டுகிறது? சைவம் என்று சொல்கிறவனின் புரத்தேவையையும் இந்தக் காவிக்கும்பல் விடுவதாயில்லை. மாட்டுக்கறி உண்ணும் எளிய மக்களின் புரதத்தேவையையும் இந்தக் காவிக்கும்பல் விடுவதாயில்லை.

மொத்தத்தில் நம் நாட்டு மக்களின் மீது ஆர்.எஸ்.எஸ் காவிக்கும்பல் பகிரங்கமாக உணவுப்போரை நிகழ்த்திக்கொண்டிருக்கிறது!

இதிலிருந்து தெரிவது என்ன? இந்துத்துவ அரசியல் மறுகாலனியாதிக்கத்திற்கு ஈயும் பீயுமாக இருக்கிற அரசியல். அது உங்களிடையே வெறும் கலாச்சார பாசிசத்தை மட்டும் கட்டவிழ்த்து விடுவதில்லை.

இதுவரை இயற்கை வளங்களையும் நாட்டின் கட்டமைப்புகளையும் சூறையாடி வந்த ஏகாதிபத்தியத்திற்கு விசுவாசமான விலங்காக இருக்க வேண்டியது காவிக்கும்பலின் அரசியல் உயிர்வாழ்வதற்கான முன்நிபந்தனையாக நிற்கிறது. இவ்வகையில் அது தேசத்துரோகியாக இருப்பதன்றி வேறு எதுவாகவும் இருக்க இயலாது.

ஆர்.எஸ்.எஸ் கும்பல் எப்படி தேசத்துரோகியாக இருக்கிறது என்பதற்கான நிரூபணம் இது.

– இளங்கோ

இது தொடர்பான செய்திகள்

  1. Govt. tells labs: fund research by yourself
  2. Over 80,000 tonnes of seized pulses will be available in open market
  3. BJP’s leading anti-beef crusader owned a meat exporting company

சந்தா செலுத்துங்கள்

ஊடகத் துறையில் நிறுவன விளம்பரங்கள் இன்றி மக்கள் நலனுக்காக போராடும் வினவு தளத்திற்கு தோள் கொடுங்கள்!

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க