Wednesday, January 22, 2020
முகப்பு கட்சிகள் அ.தி.மு.க கோவன் கைது: ஜெயா,போலீஸ் தண்டிக்கப்பட வேண்டும் - மார்க்கண்டேய கட்ஜூ

கோவன் கைது: ஜெயா,போலீஸ் தண்டிக்கப்பட வேண்டும் – மார்க்கண்டேய கட்ஜூ

-

கோவனை உடனடியாக நிபந்தனையின்றி விடுதலை செய்யவும்.

தமிழக பாடகர் கோவனை ஜெயலலிதா உடனடியாகவும் நிபந்தனையின்றியும் விடுதலை செய்ய வேண்டும். அவருக்கு எதிராக கட்டமைக்கப்பட்ட குற்றச்சாட்டுகளை (தேசத் துரோகம் முதலானவை) திரும்பப் பெற வேண்டும். ஆனால், அவர் தான் பதவி பிரமாணம் எடுத்துக் கொண்ட, குடிமக்கள் அனைவருக்கும் பேச்சுரிமையும், கருத்துரிமையும் வழங்கும் அரசியல் சட்டத்தின்படி நடக்க தயாராக இல்லை என்று தெரிகிறது.

ஜெயலலிதா தனது தவறுகளிலிருந்து பாடம் கற்றுக் கண்டு பக்குவமடைந்து விட்டார் என்று நினைத்தேன், ஆனால் இப்போது அப்படி நடக்கவில்லை என்று தெரிகிறது. அதிகாலை 2 மணிக்கு கைது செய்யுமளவுக்கு கோவன் jaya police 700 pixசெய்த குற்றம் என்ன? மதுவிலக்கை அமல்படுத்தாதையும், இன்னும் பிற விஷயங்களையும் அவர் விமர்சித்தார் என்பதுதான். ஆனால், ஜனநாயகத்தில் மக்களுக்கு அரசாங்கத்தை விமர்சிக்க உரிமை உள்ளது.

நிலப்பிரபுத்துவ காலத்தில் அரசன்தான் எல்லோருக்கும் மேல், மக்கள் அவனுக்கு கீழ்ப் படிந்தவர்கள், எனவே அரசனை விமர்சிக்க மக்களுக்கு எந்த உரிமையும் இருக்கவில்லை. ஜனநாயகத்தில் இந்த உறவு தலைகீழாக்கப்பட்டுள்ளது. இப்போது மக்கள்தான் எஜமானர்கள், அனைத்து அரசு பதவிகள் வகிப்பவர்களும், இந்தியாவின் ஜனாதிபதியாக இருந்தாலும் சரி, பிரதமராக இருந்தாலும் சரி, பிற அமைச்சர்கள், முதலமைச்சர், தலைமை நீதிபதி, பிற நீதிபதிகள், அதிகாரிகள், காவல்துறையினர் அனைவரும் மக்களின் சேவகர்கள்தான். அப்படி இருக்கையில், அரசு பதவியில் இருப்பவர்களை விமர்சிப்பதற்கு மக்களுக்கு உரிமை உள்ளது. ஏனென்றால், சரியாக வேலை செய்யவில்லை என்று நினைத்தால், தனது சேவகர்களை (அரசு பதவியில் இருப்பவர்கள்) விமர்சிக்க எஜமானர்களுக்கு (மக்கள்) கண்டிப்பாக உரிமை உள்ளது.

பேராசிரியர் அம்பிகேஷ் மகாபத்ரா
மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியின் கேலிச்சித்திரத்தை வெளியிட்ட பேராசிரியர் அம்பிகேஷ் மகாபத்ரா

ஜெயலலிதாவின் நடவடிக்கை, தன்னைப் பற்றிய கார்ட்டூன்களை சமூக வலைத்தளங்களில் வெளியிட்ட பேராசிரியர் மகாபத்ராவை கைது செய்த மம்தா பானர்ஜியின் சர்வாதிகார, முறைதவறிய நடவடிக்கையை நினைவூட்டுவதாக உள்ளது. அல்லது சமீபத்தில் மகாராஷ்டிரா அரசு அனுப்பிய (பின்னர் திரும்பி பெறப்பட்டது) அரசாங்கம் மீதான எந்த விமர்சனமும் தேசத் துரோகமாக கருதப்படும் என்ற சுற்றறிக்கையை ஒத்துள்ளது.

அரசியல் சட்டத்தின் 19(1)(a) பிரிவு மட்டுமின்றி, 1979-ம் ஆண்டு இந்தியாவால் ஏற்றுக் கொள்ளப்பட்ட அரசியல் மட்டும் மனித உரிமைகளுக்கான சர்வதேச ஒப்பந்தமும் குடிமக்களுக்கு பேச்சுரிமையையும், கருத்துரிமையையும் உறுதி செய்கின்றன. இந்த உரிமை, மற்ற எந்த உரிமைகளையும் போலவே நிபந்தனையற்றது இல்லைதான். ஆனால், திரு இந்திரா தாஸ் எதிர் அசாம் அரசு வழக்கில் உச்சநீதிமன்றம் உறுதி செய்தது போல, உடனடியான வன்முறைக்கான அச்சுறுத்தல் (அமெரிக்க உச்சநீதிமன்ற நீதிபதி ஹோம்சின் புகழ்பெற்ற “தெளிவான முன்நிற்கும் அச்சுறுத்தல்”) இருந்தால் மட்டுமே அந்த உரிமையில் தலையிட முடியும். கோவன், உடனடி வன்முறையை தூண்டும் வகையில் எதையும் செய்யவில்லை. குடிப்பழக்கம் சமூகத்தை சேதப்படுத்துகிறது என்று கருதியதால் சாராயக் கடைகளை மூட வேண்டும் என்று மட்டும்தான் கோரினார்.

1920-களில் அமெரிக்காவில் மதுவிலக்கு அமல்படுத்தப்பட்ட போது குற்றச் செயல்கள் (மாஃபியா) அதிகரித்தன என்ற அனுபவத்திலிருந்து நான் தனிப்பட்ட முறையில் மதுவிலக்கை ஆதரிக்கவில்லை. ஆனால், தங்கள் கருத்துக்களைச் சொல்ல மக்களுக்கு உரிமை உள்ளது.

ஜெயலலிதா இது போன்று ஆணவமாக, அரசியல் சட்டத்துக்கு எதிராக தொடர்ந்து நடந்து கொண்டால், அரசியல் சட்டத்தின் 356-வது பிரிவின் கீழ் அவர் ஜனாதிபதியின் நடவடிக்கையை எதிர் கொள்ள நேரிடும் என்று அஞ்சுகிறேன்.

கோவனை கைது செய்ய உத்தரவிட்ட காவல்துறை அதிகாரிகளையும், அதை நிறைவேற்றிய கீழ்நிலை காவலர்களையும் kovan-police_katjuபொறுத்தவரை அவர்களுக்கு ஒரு விஷயத்தை சொல்ல விரும்புகிறேன்.

அவர்கள் அனைவர் மீதும் வழக்கு தொடரப்பட்டு கடும் தண்டனை வழங்கப்பட வேண்டும்.
இரண்டாம் உலகப் போருக்குப் பிந்தைய நூரன்பர்க் விசாரணைகளில், நாஜி கிரிமினல்கள் “உத்தரவுகள் உத்தரவுகள்தான்” என்ற தங்களை நடத்தையை நியாயப்படுத்தினார்கள். (அதாவது, அவர்களது அரசியல் தலைவர் ஹிட்லர் போட்ட உத்தரவைத்தான் அவர்கள் நிறைவேற்றினார்களாம்), ஆனால், அந்தக் காரணம் நிராகரிக்கப்பட்டு அவர்களில் பெரும்பாலானவர்களுக்கு தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டது.

காவல்துறை அதிகாரிகளும் பிற அரசு பதவி வகிப்பவர்களும், கோவன் விஷயத்தில் வழங்கப்பட்டது போன்ற சட்ட விரோத உத்தரவுகளை நிறைவேற்றக் கூடாது. அப்படி நிறைவேற்றினால் அவர்கள் கிரிமினல் சட்டத்தின் கீழ் வழக்கு தொடரப்பட்டு கடுமையாக தண்டிக்கப்பட வேண்டியவர்களாகிறார்கள்.

மூலம் : https://www.facebook.com/justicekatju/posts/1070378259669386

கோவன் கைது தொடர்பாக தந்தி டிவியில் மார்க்கண்டேய கட்ஜூ பேட்டி.
கோவனை விடுவிக்க வேண்டும். இல்லை எனில் ஜெயலலிதா ராஜினாமா செய்யவும், போலீசார் மீது நடவடிக்கை எடுக்கவும் வலியுறுத்துவேன்.

 

SUPPORT US

சந்தா செலுத்துங்கள்

இணையத்தில் உழைக்கும் மக்களின் குரலாக பதினோரு ஆண்டுகளாக போராடும் வினவுடன் கை கோருங்கள். ஆதரியுங்கள்