Friday, June 2, 2023
முகப்புஉலகம்அமெரிக்காமீட்டருக்கு சூடு போட வோக்ஸ்வேகனை அணுகுங்கள் !

மீட்டருக்கு சூடு போட வோக்ஸ்வேகனை அணுகுங்கள் !

-

volkswagan (1)_1சூடு வைத்த மீட்டர்களை வைத்து ஆட்டோ ஓட்டுநர்களை கலாய்ப்பதில் சென்னை சபா நாடகங்களுக்கு சலிப்பதேயில்லை. என்னதான் தொழில்நுட்ப புரட்சி வந்தாலும் அதை நமது ஆட்கள் முறைகேடாக பயன்படுத்துவார்கள், இந்தியா ஒரு போதும் முன்னேறாது என்று அவர்கள் சலித்தும் கொள்வார்கள். ஆனால் இந்த உலகில் சூடு வைத்து பெரும் சாம்ராஜ்ஜியத்தையே உருவாக்குவது யார்?

ஜெர்மனியை சேர்ந்த உலகின் மிகப் பெரியக் கார் உற்பத்தி நிறுவனமான வோக்ஸ்வேகன் (Volkswagen), புகையைக் கட்டுப்படுத்தும் கருவியில் ‘சூடு’ வைத்த மோசடியைக் கேள்விப்பட்ட பிறகு சூடு வைத்த  ஆட்டோ மீட்டர்களெல்லாம் ஒன்றுமே இல்லை என ஆகிவிட்டது. சில ஆண்டுகளாய் நடக்கும் இந்த தில்லுமுல்லுகள் அதிகாரபூர்வமாக செப்டம்பர் 18 அன்று அமெரிக்காவின் சுற்று சூழல் பாதுகாப்புத் துறைக்கு (Environmental Protection Agency) தெரிய வந்து பின்னரே அதன் மீது நடவடிக்கைகள் (!) எடுக்கப்பட்டன.

இப்படி மோசடியாக 11 மில்லியன் கார்களை இந்நிறுவனம் விற்பனை செய்துள்ளது. அதில் ஆடி (Audi), சியட் (Seat), ஸ்கோடா (Skoda) போன்ற பிரபலமான சொகுசு கார்களும், வோக்ஸ்வேகன் பயணிகள் வாகனங்கள் (Volks Wegan Passengers), வணிக வாகனங்கள் (Commercial Vehicles)  உள்ளிட்டவைகளும் அடங்கும்.

கடந்த ஆண்டு, தூய்மையான போக்குவரத்திற்கான சர்வதேச குழுமம் ( The International Council on Clean Transportation ), வோக்ஸ்வேகன் ஜெட்டா, வோக்ஸ்வேகன் பாசெட் மற்றும் பி.எம்.டபிள்யூ எக்ஸ்-5 ஆகிய  3 இலகுரக கார்கள் வெளியிடும் புகையின் அளவை பரிசோதனை செய்ய மேற்கு விர்ஜினியா பல்கலைகழகத்தின் மாற்று எரிபொருள் எஞ்சின்கள் மற்றும் உமிழ்வுகள் மையத்தை (Center for Alternative Fuels Engines and Emissions at West Virginia University) சேர்ந்த அறிவியலாளர்களை அமர்த்தியது.  இந்த குழு மேற்கொண்ட ஆய்வானது,  வோல்ஸ்வேகன் நிறுவன கார்கள் நிர்ணயிக்கப்பட்ட அளவை விட 15 – 35 மடங்கு அதிகமான அளவில் புகையை கக்கியதை உறுதி செய்தது. வேறு சில குழுக்கள் நிகழ்த்திய ஆய்வுகள்  40  மடங்குக்கும் அதிகமாக புகையின் அளவு இருப்பதாக  கூறுகின்றன.

இந்த மோசடிக்கு Defeat Device என்ற கருவியை இந்நிறுவனம் பயன்படுத்தி உள்ளது. இக்கருவி, உமிழ்வு கட்டுப்பாட்டு அமைப்பின் (Emission Control System) செயல்பாடுகளை மாற்றுவது, மட்டுப்படுத்துவது மற்றும் செயலிழக்க செய்வதன் மூலம் இயந்திரத்தின் திறனை ஊக்குவிக்கிறது.

முதலாளித்துவ நிறுவனங்கள் தமது இலாப நோக்கங்களுக்கு எப்படி தொழில் நுட்பங்களை பயன்படுத்தி கொள்கின்றன என்பதோடு ‘ஜனநாயக’ சட்டங்களையும் விழுமியங்களையும் மலந் துடைக்கும் காகிதங்களாக கூட மதிப்பதில்லை என்பதற்கும் முத்தாய்ப்பான சான்றாக இந்த புகை மோசடியை நாம் கருதலாம்.

இதனைத் தொடர்ந்து வோல்ஸ்வேகனின் மீது பல்வேறு வழக்குகளை தொடுத்தது அமெரிக்க சுற்றுசூழல் பாதுகாப்புத் துறை. அதற்கு அசைந்து கொடுக்காத நிலையில் அதன் விற்பனையை தடை செய்ய போவதாக ‘அச்சுறுத்தி’யவுடன் அந்நிறுவனம் சற்று இறங்கி வந்து தனது மோசடியை ஒப்புக் கொண்டது. அதன் பின்னர் அதன் தலைமை நிர்வாக அதிகாரி மார்ட்டின் வின்டர்காம் தனது வேலையை இராஜினாமா செய்ததும், இந்த தில்லுமுல்லுவில் ஈடுபட்ட அனைத்து ஊழியர்கள் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்க போவதாக அந்நிறுவனம் கூறியதும், பாதிக்கப்பட்ட கார்களை திரும்ப பெற்றுக் கொள்வதாகவும் மற்றும் நட்ட ஈடாக சுமார் 4.8 பில்லியன் டாலர்களை அளிப்பதாக கூறியதுமான நாடகங்கள் தொடர்ந்தன.

அந்த நாடகத்தின் இறுதி காட்சிகளாக ஒருபுறம் அமெரிக்க, ஐரோப்பிய உள்ளிட்ட நாடுகள் அந்நிறுவனத்தின் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்க போவதாகவும் மறுபுறம் வாடிக்கையாளர்களிடம் தனது நற்பெயரை மீட்டுருவாக்கம் செய்ய இருப்பதாவும், இனி அந்நிறுவனம் சூரிய ஒளியில் இயங்கும் வாகனங்கள் தயாரிப்பில் ஈடுபட போவதாகவும் செய்திகள் வெளி வந்து கொண்டு இருக்கின்றன. இதில் சில நிறுவனங்கள் அதன் விற்பனை எதிர்பார்த்த அளவிற்கு மோசமாகவில்லை என்று புள்ளி விவரங்கள் வெளியிட்டு முதலாளித்து புனித மாண்பை காக்க கங்கணம் கட்டுகின்றன.

2008 – அமெரிக்க நெருக்கடியின் போது திவாலான நிறுவனங்களுக்கு மக்களின் பணத்தை வாரிக் கொடுத்து தூக்கிவிட்ட அமெரிக்க அரசு வோக்ஸ்வோகனை மட்டும் அழித்துவிடுமா என்ன? மேலும் ஒரு கார் நிறுவனத்தின் நற்பெயர் மட்டுமல்ல, ஒட்டுமொத்த முதலாளித்துவ அமைப்பின் நற்பெயரே பாதிக்கப்படும் என்பதால் அமெரிக்க அரசு மட்டுமல்ல, அனைத்து முதலாளித்துவ அரசுகளும் கூட  வோக்ஸ்வோகனை விட்டுக் கொடுக்காது.

volkswagan (2)_1வோக்ஸ்வேகன் மோசடிக்கு பயன்பட்டிருப்பது ஒரு முன்னேறிய தொழில்நுட்பம் என்பதால் இதை சாதாரண மக்கள், நாடுகள் யாரும் என்ன மோசடி என்றே கண்டுபிடிக்க முடியாது. வெவ்வேறு காலக்கட்டங்களில் இத்தொழில்நுட்பங்களை விதவிதமாக பயன்படுத்தி முறைகேடுகளில் ஈடுபட்டு வருவது வோல்ஸ்வேகன் போன்ற ஏகதிபத்திய நிறுவனங்களுக்கு புதிதல்ல.

197௦ களில், அமெரிக்க சுற்றுசூழல் பாதுகாப்புத் துறை, போர்டு, வோல்ஸ்வேகன், ஜெனரல் மோட்டார்ஸ் டொயோட்டா போன்ற நிறுவனங்கள் தயாரித்த கார்களின்  சுற்றுப்புற வெப்பநிலை மாற்றிகளை (Ambient Temperature Switches) நீக்கச் சொல்லி உத்தரவிட்டது. இந்த கருவிகள் உமிழ்வு கட்டுப்பட்டு அமைப்பகத்தின் செயல்பாடுகளை மட்டுப்படுத்தி காற்றை மாசுபடுத்துவதாக அந்த துறை தெரிவித்தது. பிறகு கார் உற்பத்தி நிறுவனங்களுக்கும் அமெரிக்க சுற்றுசூழல் பாதுகாப்புத் துறைக்கும் இடையே ஏற்ப்பட்ட ஒப்பந்தத்தின் விளைவாக அந்நிறுவனங்கள் மீது அபராதமும், ஏற்கனவே விற்ற வாகனங்களை திரும்ப பெறத் தேவையில்லையெனவும் முடிவு செய்யப்பட்டது.

1995-ல், ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனம், மின்னணு கட்டுப்பாட்டகத்தை (Electronic Control Unit) பயன்படுத்தி காற்று – எரிபொருள் விகிதத்தில் (Air-Fuel Ratio) முறைகேடு செய்தது கண்டறியப்பட்டு  அபராதம் விதிக்கப்பட்டது.

1996-ல் ஹோண்டா நிறுவனத்திற்கு  எதிராக அபராதம் விதிக்கப்பட்டதும், 1998-ல் டிரக் தயாரிக்கும் பெரும் நிறுவனங்களான கேட்டர்பில்லர் (Caterpillar), கும்மின்ஸ் (Cummins), டெட்ராய்டு டீசல் (Detroit Deisel)  மேக் ட்ரக்ஸ் (Mac Trucks) ரெனால்ட் ட்ரக்ஸ் (Renault Trucks), வோல்வோ ட்ரக்ஸ் (Volvo Trucks)  செய்த புகை கட்டுப்பாட்டு மோசடிக்கு எதிராக அபராதம் விதிக்கப்பட்டதும் வரலாறாகும்.

இப்படி ஒவ்வொரு முறையும் முதலாளித்துவத்தின் புனித மரபு சோரம் போகும் போது முதலில் முதலாளித்துவ ஊடகங்கள் செய்வதறியாது விக்கித்து நிற்பதும் பின்னர் அந்நிறுவனத்தை அடிப்பது போல நடிப்பதும்  பின்னர் அந்நிறுவனங்கள்  புதுபுது வழிகளில் மீண்டும் மீண்டும் இது போன்ற சுரண்டல்களில் ஈடுபடுவதும் ‘அது போன வாரம்’ என்று முதலாளித்துவத்தை ஆராதிப்பவர்களின் முகத்தில் கரியைப் பூசுவதும் தொடர்கதையாகிவிட்டது.

இந்த வரிசையில் தற்போதைய புது வரவான வோக்ஸ்வேகனின் மோசடியால் முதலாளித்துவத்தின் புனித கற்பு பறி போய்விட்டதாக முதலாளித்துவ ஊடகங்களின் நீலிக் கண்ணீர் வடிக்கின்றன.

இந்த பூனையும் பால் குடிக்குமா என்ற ரீதியில் ISO-14000 சுற்று சூழல் பாதுகாப்பிற்கான தர நிர்ணய சான்றிதழை பெற்ற முதல் நிறுவனம் வோக்ஸ்வேகனே என்பது ஒரு முரண் நகை.

1996-97-களில் சுற்றுசூழல் பாதுகாப்பிற்க்கான திட்டங்களை நடைமுறைபடுத்துகிறேன் பேர்வழி என்று ஆரம்பித்த இதன் தகிடுதிடங்கள் தான் முதலாளித்துவ புனித மாண்பின் மீது ஒண்ணுக்கடித்த வரலாறு தான் முதலாளித்துவத்தின் வரலாறு.

2௦14 இல் நிறுவன சராசரி எரிபொருள் சிக்கனம் (The Corporate  Average Fuel Ecnomy )  என்ற தரக் கட்டுப்பாட்டு சான்றிதழ் பெற்றது மூலம் வரி விலக்கு மற்றும் இதர சிறப்பு சலுகைகளை பெற்றுக் கொண்டு அதன் பிறகு அந்த சட்டங்களை கடுகளவும் மதித்ததில்லை இந்நிறுவனம்.

volkswagan (2)இந்த மீப்பெரும் சுரண்டலுக்கு , முன்னால் தலைமை நிர்வாக அதிகாரி தனது பதவியை இராஜினாமா  செய்ததும், அந்நிறுவனத்தின் மீது அபராதம் விதிக்கப்பட்டதும்தான் தண்டனையாம்.  இனி இந்த மோசடிகளைக் கண்பிடிக்க முடியாத அளவுக்கு மீட்டருக்கு சூடு போடும் நுட்பத்தை கண்டுபிடிப்பார்கள்.

இத்தகைய மோசடியினால் அதிகரித்த  கரியினால் சுற்றுசூழல் பாதிக்கப்பட்டிருப்பதையோ, அதன் விளைவாக பல உயிர்கள் பலியாகி இருப்பதையோ ஒப்புக்கு கூட எடுத்துக் கொள்ளவில்லை இம்முதலாளிதுவ சட்டங்களும் நான்காவது தூண்களும். ஆனால் இவர்கள்தான் ஏழைநாடுகளும் மக்களும் உலகின் சுற்றுச்சூழலை மாசுபடுத்துவதாக நீலிக் கண்ணீர் விடுவார்கள். இவர்களது அடிமைகளாக இருக்கும் இந்திய கார்ப்பரேட் ஊடகங்களோ நம்மிடம் பாலிதீன் பயன்படுத்த கூடாது என்று உபதேசிப்பார்கள்.

இலாபமே குறிக்கோள் என்பதை அச்சாணியாக வைத்து செயல்படும் முதலாளித்துவ அமைப்பில் இத்தகைய மோசடிகள் இல்லாமல் போனால்தான் ஆச்சரியம். என்ரான், யூனியன் கார்பைடு, மைக்ரோ சாஃப்ட், ஃபோர்டு, கோக்கோ கோலா என்று ஏராளமான சாட்சியங்கள் இந்த உண்மையை தொடர்ந்து மெய்ப்பித்து வருகின்றன.

நுகர்வுக் கலாச்சார சந்தையை அவ்வப்போது தூக்கி நிறுத்துவதற்காக இத்தகைய தர நிர்ணய ஆய்வுகள் மேம்போக்காக நடத்தப்பட்டாலும் இந்தியா போன்ற நாடுகளில் அதுவும் இல்லை. ஆக முதலாளித்துவம் அருளிய இவ்வாழ்க்கையில் நமது அபாயத்திற்கு அளவே இல்லை.

– கதிரவன்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க