Monday, May 10, 2021
முகப்பு கட்சிகள் சி.பி.ஐ - சி.பி.எம் மூணாறு: பெண் தொழிலாளர்களின் போர்க்கோலம் !

மூணாறு: பெண் தொழிலாளர்களின் போர்க்கோலம் !

-

கேரள மாநிலத்தில் மூணாறில் அமைந்துள்ள கண்ணன் தேவன் தேயிலை தோட்ட பெண் தொழிலாளர்கள் நடத்திய வேலைநிறுத்தப் போராட்டம் அவர்களின் போனஸ் கோரிக்கையைச் சாதித்துக் கொடுத்திருப்பதோடு, அம்மாநிலத்தில் உள்ள பிற (கார்ப்பரேட்) எஸ்டேட் நிறுவனங்களும் தமது தொழிலாளர்களுக்கு 20 சதவீதத்துக்குக் குறையாமல் போனஸ் அளிக்க வேண்டிய நிலையை ஏற்படுத்திவிட்டது. மேலும், புதிய கூலி உயர்வு ஒப்பந்தம் போடுவதற்குச் சம்மதிக்காமல், கடந்த ஒன்பது மாதங்களாக அப்பிரச்சினையை இழுத்தடித்து வந்த எஸ்டேட் நிறுவனங்களை உடனடியாக கூலி உயர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்துப்போடும்படி அடிபணியச் செய்து விட்டது.

12-moonar-workersஇரண்டு குறிப்பிடத்தக்க வெற்றிகளை ஈட்டித் தந்துள்ள இப்போராட்டம் தேயிலை தோட்ட முதலாளிகளை எந்தளவிற்கு அச்சுறுத்தியதோ, அதற்குச் சற்றும் குறையாத அளவில் போலி கம்யூனிஸ்டு கட்சித் தலைமையையும், குறிப்பாக மார்க்சிஸ்டுகளை அச்சுறுத்தியிருக்கிறது. மார்க்சிஸ்டு கட்சியின் ஆங்கில வார இதழான “பீப்பிள்ஸ் டெமாக்ரசி”யில் தொழிலாளி வர்க்கத்தின் கோரிக்கைகளுக்காக சி.ஐ.டி.யு. சமீபத்தில் நடத்திய போராட்டங்களைப் பட்டியலிட்டு வெளியிடப்பட்டுள்ள விளக்கக் கட்டுரையே, அவர்கள் மூணாறில் எந்தளவிற்குத் தனிமைப்பட்டுப் போயிருக்கிறார்கள் என்பதை எடுத்துக் காட்டுகிறது.

கண்ணன் தேவன் தேயிலைத் தோட்ட பெண் தொழிலாளர்கள் அசாத்தியமான கோரிக்கை எதையும் முன்வைக்கவில்லை. “20 சதவீத போனஸ், 500 ரூபாய் கூலி உயர்வு, குடியிருப்பு உள்ளிட்ட அடிப்படையான வசதிகள்” – இந்த மூன்றும்தான் அப்பெண் தொழிலாளர்கள் முன்வைத்த கோரிக்கைகள். இவற்றுள் முதன்மையானது போனஸ் கோரிக்கை. தொழிலாளி வர்க்கத்தின் இந்த மிகச் சாதாரணமான கோரிக்கையைக்கூட ஏ.ஐ.டி.யு.சி., சி.ஐ.டி.யு., ஐ.என்.டி.யு.சி. தொழிற்சங்கங்களால் பெற்றுத் தர முடியாமல் போனதற்கு, இத்தொழிற்சங்கங்களின் சமரசம், கைக்கூலித்தனம், துரோகத்தைத் தவிர வேறு காரணங்கள் எதுவுமே கிடையாது. காங்கிரசின் ஐ.என்.டி.யு.சி. மட்டுமல்ல, போலி கம்யூனிஸ்டு தொழிற்சங்கத் தலைவர்களும் நிர்வாகத்தின் கைக்கூலிகளாக மாறி, “சுகஜீவிகளாக” வாழ்ந்துவருவது இப்போராட்டத்தின் ஊடாக அம்பலமாகியிருக்கிறது. ஒருபுறம் தொழிற்சங்க சுல்தான்களின் இந்த துரோகமும், மறுபுறம் சகிக்க முடியாத சுரண்டலும், கொத்தடிமைத்தனமும்தான் பெண் தொழிலாளர்களைத் தமது விதியைத் தாமே நிர்ணயித்துக் கொள்ளும் போராட்டத்தை நடத்தத் தூண்டியது.

உடலை ஊனமாக்கும் உழைப்புச் சுரண்டல்

டாடா குழுமத்தால் நிர்வகிக்கப்படும் கண்ணன் தேவன் தேயிலை எஸ்டேட், கேரளாவின் தேவிகுளம் வட்டத்திலுள்ள கண்ணன் தேவன் குன்றுப் பகுதியில் 1,36,600 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. 92 டிவிஷன்களாகப் பிரிக்கப்பட்டுள்ள இந்த எஸ்டேட்டில் வேலைபார்க்கும் 14,000 தொழிலாளர்களுள் பெரும்பகுதியினர் பெண்கள். தேயிலைக் கொழுந்துகளைப் பறிப்பதுதான் இவர்களுக்கு ஒதுக்கப்பட்டிருக்கும் வேலை. இதற்கு இதுவரை கொடுக்கப்பட்டு வந்த கூலி, படிகளையும் சேர்த்து 232 ரூபாய். படிகள் எதுவும் பெறாத நகர்ப்புறக் கூலித் தொழிலாளர்கள்கூட இதனைவிட இன்னொரு மடங்கு அதிகமாகக் கூலி பெறும் உண்மையோடு ஒப்பிட்டுப் பார்த்தால், சர்க்கரை அள்ளிப் போட்ட தேநீர்கூட இனி கசக்கவே செயும்.

இந்த 232 ரூபாய் கூலியைப் பெறுவதும்கூட சாதாரண விசயமல்ல. இதற்கு 21 கிலோ தேயிலையைக் கண்டிப்பாகப் பறிக்க வேண்டும். அதற்குக் குறைந்தால் அடிப்படை கூலியே கிடைக்காது. காலை 8 மணிக்குள் டிவிஷனுக்கு வந்துவிட வேண்டும். டிவிஷனில் வருகைப் பதிவு எடுக்கும்பொழுது ஆள் இல்லாமல் சற்று தாமதித்து வந்தால்கூட அன்று வேலையும் கிடையாது, கூலியும் கிடையாது. இவர்களுக்குச் சம்பளத்துடன் கூடிய விடுப்பும் கிடையாது, வேலைக்கு நடுவே ஒரு மணி நேரம், இரண்டு மணி நேரம் “பர்மிஷன்” கேட்கவும் முடியாது. அப்படிக் கேட்டுப் போனால், அதற்கேற்ப அடிப்படைக் கூலியில் வெட்டு விழும்.

இந்த நிபந்தனைகளைவிடக் கொடியதும், அபாயமும் நிறைந்தது தேயிலைப் பறிப்பது. தேயிலை பறிக்கச் செல்லும் முன் மேல்கட்டு எனும்படியான ஒரு உடுப்பை இடைக்கு மேலாக இறுக்கமாகக் கட்டிச் செல்ல வேண்டும். இந்த உடுப்பைக் கட்டிய பிறகு அதனை நினைத்த நேரத்துக்கு அவிழ்த்துவிட முடியாது. இந்த மேல்கட்டு உடுப்பே பெண் தொழிலாளர்களுக்கு மாதவிடாய் பிரச்சினையை ஏற்படுத்துவதாகக் குறிப்பிடுகிறார், போராட்டத்தில் கலந்துகொண்ட சுந்தரவள்ளி. இந்த மாதவிடாய் பிரச்சினையால் பெண் தொழிலாளர்கள் பலருக்கு கர்ப்பப்பை அகற்றப்பட்டுவிட்ட அவலத்தையும் சுட்டிக் காட்டுகிறார், அவர். இது கண்ணுக்குத் தெரியாத முடமாகிப் போன நிலை. ஆனால், அதற்காக எந்தவொரு எஸ்டேட் நிர்வாகமும் தண்டிக்கப்பட்டதுமில்லை; கர்ப்பப்பையைப் பறிகொடுத்த பெண்களுக்கு நட்ட ஈடு அளித்ததுமில்லை.

வெறும் 232 ரூபாயைக் கொண்டு குடும்பம் நடத்து முடியாது என்பதால், ஒவ்வொரு பெண் தொழிலாளியும் 21 கிலோவிற்கு மேலேயும் தேயிலையைப் பறிக்க வேண்டிய கட்டாயத்தில் நிறுத்தப்பட்டுள்ளனர். இன்னொருபுறமோ, கூடுதலாகப் பறிக்கப்படும் ஒவ்வொரு கிலோ தேயிலைக்கும் கங்காணி தொடங்கி எஸ்டேட் மேலாளர் உள்ளிட்ட அதிகார கும்பலுக்கு “இன்சென்டிவ்” வழங்கப்படுவதால், கங்காணிகள் பெண் தொழிலாளர்களைச் சிறுநீர் கழிப்பதற்குக்கூட அனுமதிப்பதில்லை; தேநீர் அருந்தும்போதுகூட இன்னொரு கை தேயிலையைப் பறித்துக் கொண்டிருக்கும்படி, அட்டைப் பூச்சிகளும் உண்ணிகளும் இரத்தத்தை உறிஞ்சும் வேளையிலும் தேயிலை பறிப்பது நின்றுவிடாதபடி அவர்கள் இயந்திரங்களைப் போல உற்பத்தி செய்து தள்ள பழக்கப்படுத்தப்பட்டிருக்கிறார்கள்.

சம்பளம், படி…..மோசடி

பெண் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
போனஸ் கோரிக்கையை முன்னிறுத்தி பாலத்தின் வலது புறம் தொழிற்சங்கங்கள் ஆர்ப்பாட்டம் நடத்திய பொழுது, அதனைப் புறக்கணித்து பாலத்தின் இடதுபுறம் பெண் தொழிலாளர்கள் நடத்திய ஆர்ப்பாட்டம்.

தினக்கூலி 232 ரூபாயிலிருந்து படிகளைக் கழித்துவிட்டால், ஒரு பெண் தொழிலாளியின் அடிப்படைக் கூலி 83 ரூபாய்தான். அதாவது, ஒரு கிலோ தேயிலையைப் பறிப்பதற்கு ரூ 3.95 அடிப்படைக் கூலி. ஆனால், 21 கிலோவுக்கு மேல் பறிக்கப்படும் தேயிலைக்கு இந்த அடிப்படைக்கூலி கூடத் தரப்படுவதில்லை. மாறாக, அதற்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள கூலி கிலோ ஒன்றுக்கு வெறும் ரூ 1.50 தான். அதேசமயம், 21 கிலோவிற்குக் கூடுதலாகப் பறிக்கப்படும் ஒவ்வொரு கிலோ தேயிலைக்கும் கங்காணிகளுக்கு 4 ரூபாய், நிர்வாக அலுவலர்களுக்கு 6 ரூபாய், மேலாளர்களுக்கு பத்து ரூபாய் இன்செண்டிவ் கிடைக்கும். இப்படி பாரபட்சமான, நியாயமற்ற முறையில் கூலி நிர்ணயிக்கப்பட்டிருப்பது ஒருபுறமிருக்க, இந்த அற்பக் கூலியைக்கூட அவர்கள் பெறமுடியாதபடி கங்காணிகள் செயும் தில்லுமுல்லுகளும், மோசடிகளும் தனியொரு கதை. குறிப்பாக, 21 கிலோவிற்கு மேல் பறிக்கப்படும் தேயிலையில் கணிசமாக கழித்துக்கட்டுவதன் மூலம், எங்களின் உழைப்பை எங்களின் கண்ணெதிரே கங்காணிகள் திருடி வருகிறார்கள் எனக் குற்றஞ்சுமத்துகிறார்கள், அப்பெண் தொழிலாளர்கள்.

இதற்கு அப்பால், அவர்களுக்குக் கிடைக்கக்கூடிய அற்பக் கூலியில் பிடித்தம் என்ற பெயரில் ஒரு பகற்கொள்ளையை எஸ்டேட் நிர்வாகம் நடத்தி வருகிறது. தொழிலாளர்கள் வளர்க்கும் மாடுகள் எஸ்டேட் பகுதிக்குள் மேவதற்கு மாதம் நூறு ரூபாய் நிர்வாகத்திற்குக் கப்பம் கட்ட வேண்டும். எஸ்டேட் நிர்வாகங்கள் மூன்று மாதங்களுக்கு ஒருமுறை 75 கிலோ அரிசியை ரேஷன் முறையில் தொழிலாளர்களுக்கு விநியோகித்து வருகின்றன. இதற்கு ஒவ்வொரு தொழிலாளியிடமிருந்தும் மாதமொன்றுக்கு 750 ரூபாய் பிடித்தம் செய்து கொள்ளப்படுகிறது. அரிசியின் தரத்தை ஒப்பிடும்பொழுது இது அநியாயக் கொள்ளை என்கிறார்கள் தொழிலாளர்கள். மாதம் 28 நாட்கள் முதுகொடிய வேலை செய்தாலும், இந்தப் பிடித்தம், தில்லுமுல்லுகள், மோசடிகள் எல்லாம் போக மூவாயிரம் ரூபாய் முழுசாகக் கிடைத்தாலே அதிருஷ்டம்தான் என்கிறார்கள் பெண் தொழிலாளர்கள். கங்காணிகளும், நிர்வாகமும் நடத்திவரும் இந்தத் திருட்டுத்தனங்களைக்கூடத் தடுக்காமல், தொழிற்சங்கங்கள் கூட்டுக் களவாணிகளாகச் செயல்பட்டு வருகின்றன.

நவீன கொத்தடிமைத்தனம்

லயன் வீடுகள்
பல நூறு கோடி ரூபாய்களை இலாபமாக ஈட்டும் டாடா நிறுவனம் தொழிலாளர்களுக்கு அளித்திருக்கும் குடியிருப்பு : லயன் வீடுகள் எனச் சொல்லப்படும் லாயம்.

எஸ்டேட்டுகள் அவற்றின் இயல்பிலேயே ஊர்ப்பகுதியிலிருந்து துண்டிக்கப்பட்டு தனித்தும், போக்குவரத்து வசதியற்றும் இருப்பதால், எஸ்டேட்டுகளில் வேலை பார்க்கும் தொழிலாளர்களுக்குத் தேவையான குடியிருப்பு, கல்வி, மருத்துவ வசதிகள் உள்ளிட்ட அடிப்படையான வசதிகள் அனைத்தையும் நிர்வாகங்கள்தான் செய்துதர வேண்டும். ஆனால், பிரிட்டிஷ் காலனிய ஆட்சியில் தேயிலை எஸ்டேட்டுகளை உருவாக்கத் தமிழகத்திலிருந்து தாழ்த்தப்பட்ட மக்கள் கொத்தடிமைகளாக இழுத்துச் செல்லப்பட்ட காலத்தில் கட்டப்பட்ட, குதிரை லாயங்களைவிடக் கேவலமான “லயன்”கள்தான் இன்றும் தொழிலாளர்களின் குடியிருப்புகளாக உள்ளன. கங்காணி சூபர்வைசராக மாறியிருப்பதைப் போல, லயன்களின் மேற்கூரை தென்னங்கீற்றிலிருந்து ஆஸ்பெஸ்டாக மாறியிருப்பதுதான் நடந்துள்ள ஒரே மாற்றம். எஸ்டேட் நிர்வாகம் நடத்தும் பள்ளிகளில் நான்காம் வகுப்புக்கு மேல் இலவசக் கல்வி கிடையாது என்பதால், தொழிலாளர் குழந்தைகளின் கல்வி அதற்குப் பிறகு கேள்விக்குறியாகி விடுகிறது. தொழிலாளர்களை எந்தவிதமான நோ தாக்கினாலும், எஸ்டேட் மருத்துவமனைகளில் மூன்று நாட்களுக்கு மேல் உள்நோயாளிகளாகத் தங்கி சிகிச்சை பெறுவதற்கு அனுமதி கிடையாது.

பெண் தொழிலாளர்கள் அனைவரும் தங்கள் குழந்தைகளின் அன்றாட பாதுகாப்பு, எதிர்காலம் குறித்துதான் மிகுந்த அச்சங்கொண்டிருக்கிறார்கள். இந்தப் பணிச்சுமையும், வாழ்க்கைச் சூழலும் குழந்தைகளைக் கவனிக்க முடியாத நிலைக்குத் தள்ளியிருப்பது குறித்துதான் அவர்கள் திரும்பத் திரும்ப பேசுகிறார்கள். இதனைவிட அதிகமாகக் கூலி கிடைக்கும் வேறு வேலைக்கு மாறிப் போவிடுவதை எஸ்டேட் நிர்வாகங்கள்கூடத் தடுக்க முடியாதுதான். அப்படி போனால், எஸ்டேட் நிர்வாகம் தந்துள்ள வீட்டைக் காலி செய்துவிட வேண்டும் என்பதால், ஆண்கள் வேறு வேலை தேடிப் போனாலும், பெண்கள் இதே, வேலையில் தொடர வேண்டிய அவலத்தில் சிக்கிக் கொண்டுள்ளனர். இது அத்தாழ்த்தப்பட்ட குடும்பங்களைத் தலைமுறை தலைமுறையாக எஸ்டேட் நிர்வாகங்களின் கொத்தடிமைகளாக இருத்தி வைப்பதை உத்தரவாதப்படுத்துகிறது.

கண்ணன் தேவன் தேயிலை எஸ்டேட் உள்ளிட்டு அனைத்து எஸ்டேட்டுகளிலும் பெண் தொழிலாளர்கள்தான் எண்ணிக்கையில் பெரும்பான்மையினர். வருடமொன்றுக்கு அத்தொழிலாளர்களின் கூலியிலிருந்து 200 ரூபாய் சந்தா பிடித்துக் கொள்ளப்படுகிறது. ஆனாலும், எந்தவொரு சங்கத்திலும் பெண் தொழிலாளர்களுக்கு முக்கியத்துவம் தரப்படுவதில்லை. குறிப்பாக, “இந்த ஆண்டு பத்து சதவீதம் போனஸ்தான் தர முடியும் என நிர்வாகம் எடுத்த முடிவை நீங்கள் எப்படி ஒத்துக் கொள்ளலாம்?” எனக் கேள்வி எழுப்பிய பெண் தொழிலாளர்களுக்குப் பதில் சொல்லக்கூட தொழிற்சங்கங்கள் முன்வரவில்லை. மாறாக, தங்களின் கள்ள மௌனத்தின் மூலமும், 10 சதவீத போனஸ் அறிவிப்பை எதிர்த்து தொழிலாளர்கள் நடத்தி வந்த உற்பத்திக் குறைப்பு போராட்டத்தைக் கைவிடக் கோரியதன் மூலமும், தங்களை மீறி வேலை நிறுத்தப் போராட்டத்தில் இறங்கக்கூடாது என எச்சரித்ததன் மூலமும் குமுறிக் கொண்டிருந்த பெண் தொழிலாளர்களைத் தொழிற்சங்கங்கள் அவமானப்படுத்தின.

இந்த நிலைமைகள்தான் பெண் தொழிலாளர்களை, தொழிற்சங்கங்களையும், ஓட்டுக்கட்சிகளையும் புறக்கணித்து, “பெண்கள் ஒற்றுமை” என்ற புதிய அமைப்பின் கீழ் அணிதிரண்டு போராட்டத்தில் இறங்க வைத்தது. மூணாறு பகுதியைச் சேர்ந்த பல்வேறு தரப்பட்ட மக்கள் மட்டுமின்றி, போலீசு அதிகாரிகள்கூட இந்தப் போராட்டத்திற்கு ஆதரவாக நின்றபொழுது, தொழிலாளர்களிடமிருந்து பெறும் சந்தாவைக் கொண்டு வயிறு வளர்த்து வரும் மார்க்சிஸ்டு கட்சியின் மூணாறு பகுதி சட்டமன்ற உறுப்பினர் கே.ராஜேந்திரன், இந்தப் போராட்டத்தைத் தமிழின தீவிரவாத அமைப்புகள் பின்னிருந்து இயக்குவதாக” வாய்க்கூசாமல் அவதூறு செய்தான். இதற்காக அவனைத் தங்களின் அருகே நெருங்கவிடாமல் துரத்தியடித்த பெண் தொழிலாளர்கள், சி.பி.எம். ராஜேந்திரன் மட்டுமின்றி, மூணாறு பகுதி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் ஏ.கே.மணி, சுந்தரமாணிக்கம், ஏ.ஐ.டி.யு.சி.ஐச் சேர்ந்த சி.ஏ.குரியன், ஐ.என்.டி.யு.சி.ஐச் சேர்ந்த ஜி.முனியாண்டி உள்ளிட்டு கண்ணன் தேவன் எஸ்டேட் நிர்வாகத்திடமிருந்து பணப்பெட்டிகளை இலஞ்சமாகப் பெற்ற 150 தொழிற்சங்கத் தலைவர்களின் பட்டியலை வெளியிட்டு” தொழிற்சங்கங்களின் துரோகத்தைச் சந்திசிரிக்க வைத்தனர். எஸ்டேட் நிர்வாகத்தின்
அச்சுறுத்தல், தொழிற்சங்கங்களின் புறக்கணிப்பு, அவதூறு ஆகியவற்றுக்கு இடையேயும், போராட்டத்தை உறுதியோடும், பொதுமக்களின் ஆதரவோடும் நடத்தி, தங்களின் குறைந்தபட்ச கோரிக்கையைச் சாதித்திருக்கிறது, பெண்கள் ஒற்றுமை.

நெருக்கடி என்ற ஒப்பாரி

சி.பி.எம் ராஜேந்திரன்
தங்களது போராட்டத்தை இழிவுபடுத்திய சி.பி.எம் கட்சி எம்.எல்.ஏ ராஜேந்திரனை முற்றுகையிட்ட பெண் தொழிலாளர்களிடமிருந்து அவரை மீட்டுச் செல்லும் போலீசு.

கேரளாவின் தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் தங்களது மாதாந்திரக் கூலி 500 ரூபாயாக உயர்த்தப்பட வேண்டும் எனக் கோரி வந்தார்கள். ஆனால், இது தொடர்பாக நடத்தப்பட்ட முத்தரப்பு பேச்சுவார்த்தையில் தோட்டத் தொழிலாளர்களுக்கு அதிகபட்சமாக 381 ரூபாதான் கூலியாக நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. கண்ணன் தேவன் எஸ்டேட் நிர்வாகமும் தனது தொழிலாளர்களுக்கு 20 சதவீதத்தையும் முழுமையான போனஸாக அளிக்க ஒப்புக் கொள்ளவில்லை. அந்த 20 சதவீதத்தில் 8.33 சதவீதத்தை போனசாகவும், மீதிமுள்ள 11.67 சதவீதத்தைக் கருணைத் தொகையாகவும் அளிப்பதாக உள்குத்து வேலை நடத்தியிருக்கிறது. இவ்வாறு தொழிலாளர்களின் கோரிக்கையை முழுமையாக ஒப்புக்கொள்ள மறுத்துள்ள நிர்வாகங்கள், தேயிலை வணிகம் நெருக்கடியில் சிக்கியுள்ள வேளையில் கட்டுப்படியாகாத கூலி உயர்வும், போனசும் அறிவிக்கப்பட்டிருப்பதாக பிலாக்கணம் பாடி வருகின்றன.

2013-ம் ஆண்டில் 19 கோடியாக இருந்த தனது இலாபம் 2014-ம் ஆண்டில் ஐந்து கோடியாகச் சரிந்துவிட்டதால்தான் போனஸை 10 சதவீதமாகக் குறைத்து அறிவித்திருப்பதாக விளக்கம் கொடுத்திருக்கிறது, கண்ணன் தேவன் எஸ்டேட் நிர்வாகம். இது முழுப்பூசணிக்காயைச் சோற்றில் மறைக்க முயலும் மோசடி என்பதே உண்மை (பார்க்க பெட்டிச் செய்தி). இதுவொருபுறமிருக்க, தேயிலையின் விலை 12 சதவீதம் மட்டுமே வீழ்ச்சியடைந்திருக்கும் பொழுது, இலாபம் எழுபது சதவீதம் அளவிற்கு எப்படி வீழ்ச்சியடைய முடியும் என்ற கேள்விக்கும், கொழுந்து தேயிலை விலை வீழ்ச்சியடைந்த பிறகும், சந்தையில் தேயிலைத் தூளின் விலை கொஞ்சங்கூட இறங்காமல் இருப்பதன் மர்மத்திற்கும் எஸ்டேட் நிர்வாகங்கள் விடையளிக்கப் போவதில்லை.

நெருக்கடி அல்லது நட்டம் என்ற மோசடியான வாதத்தை முன்வைத்துதான் கூலியை உயர்த்தாமலும், உரிய போனஸை அளிக்காமலும் தொழிலாளி வர்க்கத்தை ஏமாற்றி வருகிறது, முதலாளித்துவ வர்க்கம். தொழிலாளி வர்க்கத்தின் கொடுபடாத கூலிதான் போனசாக வழங்கப்படுகிறது என்ற நியாயத்தை முதலாளிகள் ஏற்றுக் கொள்வதேயில்லை. மாறாக, போனஸைத் தாங்கள் கருணையுடன் அளிக்கும் பிச்சையாகவும், அதை மனம்போன போக்கில் அறிவிக்கும் உரிமை தங்களுக்கு இருப்பதாகவும் கருதி நடந்துவருகிறது. அபரிதமான இலாபத்தை அப்படியே சுருட்டிக் கொள்ளும் முதலாளிகள், இலாபம் சற்று வீழ்ச்சியடையும்பொழுது அதன் சுமையைத் தொழிலாளிகளின் முதுகில் ஏற்றித் தப்பித்துக் கொள்கிறார்கள்.

தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களுக்கு அதிகபட்சமாக 69 ரூபாய் கூலி உயர்வு அளிக்க முன்வந்துள்ள தோட்ட நிறுவனங்களுக்கு மின்சார மானியம் வழங்கவும்; ஒரு ஹெக்டேர் பரப்புள்ள தோட்டப் பயிர்கள் மீது விதிக்கப்படும் வரியை எழுநூறிலிருந்து ஐநூறு ரூபாயாகக் குறைக்கவும்; விவசாய வருமான வரியைக் குறைக்கவும்; எஸ்டேட் நிறுவனங்கள் நடத்திவரும் பள்ளிகளில் போதிய ஆசிரியர்களை நியமிப்பதற்காக ஒரு மாணவனுக்கு பத்தாயிரம் ரூபா என்ற விகிதத்தில் நிதி ஒதுக்கவும்; தொழிலாளர் குடியிருப்புகளை மேம்படுத்த 20 கோடி ரூபா நிதி ஒதுக்கவும் கேரள அரசு முன்வந்திருக்கிறது. இதன் மூலம் நெருக்கடியில் இருப்பதாகக் கூறும் கார்ப்பரேட் எஸ்டேட் நிறுவனங்களை மக்களின் வரிப் பணத்திலிருந்து பெயில் அவுட்” செய்திருக்கிறது, கேரள மாநில காங்கிரசு அரசு. உண்மையில் போனஸ் கிடைத்திருப்பது தோட்டத் தொழிலாளர்களுக்கா, இல்லை முதலாளிகளுக்கா?

– ரஹீம்

***

கேரளா: ‘கடவுளின் தேசமா?’ டாடாவின் தனிச்சொத்தா?

1,36,000 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள கண்ணன் தேவன் தேயிலை எஸ்டேட்டின் “உண்மையான” உரிமையாளர்கள் யார் தெரியுமா? எந்தத் தொழிலாளர்கள் 20 சதவீதம் கேட்டு ஒன்பது நாட்கள் போராடினார்களோ, எந்தத் தொழிலாளர்கள் கூலியை 500 ரூபாயாக உயர்த்தித் தருமாறு கோரி வருகிறார்களோ, அந்த 14,000 தொழிலாளர்களின் பெயரில்தான் கண்ணன் தேவன் தேயிலை எஸ்டேட் நிறுவனத்தின் 68 சதவீதப் பங்குகள் உள்ளன.

2005-க்கு முன்பு இந்த எஸ்டேட்டின் முழு உரிமையாளராக இருந்த டாடா டீ நிறுவனம், காந்திய வழியில் திடீர் தர்மகர்த்தாவாக உருவெடுத்து, 18 சதவீதப் பங்குகளை மட்டும் தன்னிடம் வைத்துக்கொண்டு, 68 சதவீதப் பங்குகளை ஒவ்வொரு தொழிலாளிக்கும் 300 பங்குகள் கிடைக்கும்படி “உயில்” எழுதி வைத்தது. தேயிலை உற்பத்தியைத் தொழிலாளர்கள் கவனித்துக் கொள்ள, தான் தேயிலைத் தூள் விற்பனையை மட்டும் கவனிக்கப் போவதாகக் கூறி, இந்தப் பங்கு மாற்றத்திற்கு ஒரு உருக்கமான” காரணத்தையும் முன்வைத்தது, டாடா குழுமம்.

13-kerala-tata-property-2டாடாவின் இந்த பரோபகாரத்தின் பின்னே மறைந்திருப்பது அப்பட்டமான வியாபார தந்திரம். தேயிலை எஸ்டேட்டையும், தேயிலைத் தூள் விற்பனையையும் ஒரே நிறுவனத்தின் கீழ் வைத்திருப்பது இலாபத்திற்குக் கேடு என்பதால்தான், இந்தப் பாகப்பிரிவினையை ஏற்படுத்தியது, டாடா குழுமம். இந்தப் பாகப்பிரிவினையை நடத்தும்பொழுதே, கண்ணன் தேவன் தேயிலை எஸ்டேட்டில் உற்பத்தி செயப்படும் தேயிலைத் தூள் முழுவதையும் டாடா குழுமத்துக்குச் சொந்தமான டாடா குளோபல் பீவரெஜஸ் நிறுவனத்திடம்தான் விற்க வேண்டும் என்றும், கண்ணன் தேவன் தேயிலை பிராண்டை டாடாவைத் தவிர வேறு நிறுவனங்கள் பயன்படுத்த முடியாது என்றும் பட்டா எழுதி வாங்கிக் கொண்டது.

கண்ணன் தேவன் எஸ்டேட் நிறுவனத்திடமிருந்து ஒரு கிலோ சாதா தேயிலைத் தூளை வெறும் 80-90 ரூபாய்க்குப் பெறும் டாடா குளோபல் நிறுவனம், அதனை நானூறு ரூபாய்க்கு மேல் சந்தைப்படுத்திக் கொள்ளை இலாபம் அடித்து வருகிறது. தனது இலாபம் 5 கோடி ரூபாயாகச் சரிந்து விட்டது என்று கண்ணன் தேவன் எஸ்டேட் நிறுவனம் முதலைக் கண்ணீர் வடித்துக் கொண்டிருக்க, அதனிடமிருந்து தேயிலைத் தூளை வாங்கி விற்கும் டாடா குளோபல் நிறுவனத்தின் இலாபம் 242 கோடி ரூபாயாக இருப்பதை இந்த நிறுவனத்தின் முன்னாள் ஊழியரான ரெஜினார்ட் அம்பலப்படுத்துகிறார். எஸ்டேட்டில் வேலை பார்க்கும் தொழிலாளர்களின் வயிற்றில் அடிப்பதற்குத்தான் இந்தப் பாகப்பிரிவினை ஏற்படுத்தப்பட்டுள்ளது என்பதை இதன் மூலம் புரிந்து கொள்ளலாம்.

டாடா குழுமம், கண்ணன் தேவன் எஸ்டேட் தொழிலாளர்களை மட்டும் ஏமாற்றவில்லை. கேரள மாநில அரசின் ஆதரவோடு, அம்மாநில மக்களையும் ஏமாற்றி வருகிறது. சமூகத் சொத்தான இந்த 1,36,000 ஏக்கர் பரப்பிற்கும் டாடா குழுமம் ஆண்டொன்று அரசுக்குச் செலுத்தும் குத்தகை பணம் வெறும் 5,000 ரூபாய்தான். இது மட்டுமின்றி, டாடா குழுமம் கேரளாவில் மட்டும் ஏறத்தாழ 10 இலட்சம் ஏக்கர் பரப்பளவுள்ள எஸ்டேட் நிலங்களை அடிமாட்டு குத்தகை கொடுத்து ஆக்கிரமித்து வைத்திருப்பதாகக் கூறப்படுகிறது.
_________________________________
புதிய ஜனநாயகம், நவம்பர் 2015
_________________________________

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க