privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புமறுகாலனியாக்கம்தொழிலாளர்கள்தொழிலாளரை ஒடுக்கும் ஸ்ரீராம் சிட்ஸ் - கண்டனக் கூட்டம்

தொழிலாளரை ஒடுக்கும் ஸ்ரீராம் சிட்ஸ் – கண்டனக் கூட்டம்

-

ழைக்கும் மக்களே!

leit-windபன்னாட்டு முதலாளிகளே வியக்கும் வகையில் தங்கள் ஆலைத் தொழிலாளிகளை அடிமைகளாக, உரிமையற்றவர்களாக வைத்திருப்பதில் கும்முடிப்பூண்டி சிப்காட் முதலாளிகளுக்கென தனி இடம் உண்டு. தொழிலாளிகளை ஒருமையில் திட்டுவது, உரிமைகளை மறுப்பது, பண்ணையார்களைப் போல அடித்து உதைப்பது, பாதுகாப்பு உபகரணங்களை தரமறுத்து தொழிலாளிகளை கொல்வது, கொதிக்கும் உலைகளுக்கு தொழிலாளிகளை காவு கொடுப்பது என தொழிலாளிகள் மீதான முதலாளித்துவ பயங்கரவாதம் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. தொழிலாளர்களின் உரிமையைப் பறிக்கின்ற இந்த பயங்கரவாதச் செயலை ஈவு இரக்கமில்லாமல் நடைமுறைப்படுத்தி அனைத்து நிர்வாகங்களுக்கும் முன்மாதிரியாக கும்மிடிப்பூண்டி லைவிண்டு நிர்வாகம் செயல்பட்டு வருகிறது.

இந்தியாவின் முன்னணி நிறுவனமான ஸ்ரீராம் சிட்ஸ் (பைனான்ஸ் கம்பனி) மற்றும் இத்தாலி முதலாளியும் கூட்டு சேர்ந்து காற்றாலை மூலம் மின்சாரம் உற்பத்தி செய்வதற்கான தொழில்நுட்பத்தை நிறுவி இந்தியாவெங்கும் பல ஆலைகளில் தொழிலாளிகளின் உழைப்பை சுரண்டிக் கொழுத்து வருகின்றனர். கும்மிடிப்பூண்டி ஆலையில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு கடந்த 08 ஆண்டுகளில் இரண்டு முறை மட்டுமே சொற்பமான ஊதிய உயர்வை வழங்கியும், ஆலை நட்டத்தில் இயங்குவதாக தொழிலாளிகளை ஏமாற்றி போனசும் இந்நாள் வரைத் தரவில்லை. மேலும் “வாடா, போடா, நாயே” எனத் தினந்தினம் தொழிலாளிகளைத், அதிகாரிகள் திட்டுவதும், மிரட்டுவதும், தங்கள் வேலைகளைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டுமெனில் ‘ஜால்ரா’ அடித்தால் தான் வேலை செய்ய முடியும் என்கிற நிலைமைக்கு தொழிலாளிகள் தள்ளப்பட்டனர். இவ்வாலையில் பெரும்பான்மையாக உள்ள வடமாநில தொழிலாளர்களினுடைய மனக் கொதிப்பை வார்த்தைகளால் சொல்ல முடியாது. இந்நிலைமையில், முதலாளியின் கொடுமையை சகித்து சகித்து தாள முடியாமல் சங்கம் அமைத்தனர். மொழியே தெரியவில்லை என்றாலும் சங்கம் தான் நம் பிரச்சனையைத் தீர்க்கும் என வடமாநிலத் தொழிலாளிகள் உள்ளிட்டு அனைவரும் புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியில் தங்களை இணைத்துக் கொண்டனர். சுரண்டி சுரண்டிக் கொழுக்கும் லைட்விண்டு முதலாளியின் கொட்டத்தை ஒடுக்க ஒரே சங்கமாய் அனைவரும் இணைந்தனர்.

சொந்தம் செய்யாததை சங்கம் செய்தது. ஆம். சங்கம் துவக்கிய பிறகு, போராட வேண்டுமென்ற உணர்வைப் பெற்றதோடு, பறிகொடுத்த மானத்தையும் கெளரவத்தையும் மீட்டுக் கொண்டனர் தொழிலாளர்கள். வாடா போடா என்று மிரட்டிய அதிகாரிகள் எல்லாம் புரட்சிகர சங்கம் இருப்பதனால் மிரட்சி அடைந்துள்ளனர். தொழிலாளர்களோ போனசும், ஊதிய உயர்வைக் கூட பொறுமையாக வாங்கிக் கொள்ளலாம், தான் தொழிலாளி வர்க்கம் என்ற தலைக்கணத்தோடு தலைநிமிர்ந்து நடப்பதையே பெருமையாகக் கருதுகின்றனர்.

லைட் விண்டு தொழிலாளிகள் சங்கமாகச் சேர்ந்ததால் பதறிப்போன, SRF-ல் எந்த பதவி உயர்வும் வரவில்லை என்று லைட் விண்டுக்கு தாவிய மனிதவ(தை)ள அதிகாரி நாகேஸ்வரராவ் அவருடைய பாணியிலேயே (காட்டிக்கொடுத்தும், இப்படிப் பல கொடுக்கல்களை) பு.ஜ.தொ.மு சங்கத்தை உடைப்பதற்கு முதலாளிகளின் கைக்கூலி சங்கமான INTUC-ஐ துவக்கி, பெரும்பான்மையைக் காட்டுவதற்கு ஆலையின் அதிகாரிகளையும் மிரட்டி சங்கத்தில் சேர்த்து, 18(1) ஒப்பந்தம் போட்டு சாதனை படைத்த பெருமை லைவிண்டு HR-ஐ யேச் சேரும். இது முழுக்க முழுக்க சட்டைவிரோதம் என்று தெரிந்திருந்தும் 18(1)-ல் அனைவரும் கையெழுத்து போட வேண்டுமென அறிவிப்பது, ஒவ்வொரு தொழிலாளியையும் தனித்தனியே அழைத்து மிரட்டுவது என அனைத்தையும் செய்து பார்த்து மூக்குடைபட்டு போனார். தனக்கு எடுபிடியான சங்கத்தை வைத்துக்கொள்ளவும், உரிமை கேட்கும் சங்கத்தை நசுக்கவும் நிர்வாகம் எவ்வளவு கீழ்தரமான வேலையையும் செய்யச் சொன்னாலும் அதைக் கூசாமல் செய்வது தான் HR வேலை என்பதற்கு இதை விட வேறு உதாரணம் தேவையில்லை.

பு.ஜ.தொ.மு சங்கத்தை உடைக்க INTUC சங்கத்தில் சேர்பவர்களுக்கு அதிக ஊதியம், 08 ஆண்டுகளாக மறுக்கப்பட்ட போனஸ், சலுகைகள் தருவதாக அறிவித்த பின்னரும், தொழிலாளிகள் உறுதியாக பு.ஜ.தொ.மு-வில் தான் இருப்போம் “உன்னால் ஆனதைப் பார்த்துக்கொள்” என்று சவால் விட்டனர். ஆத்திரமடைந்த நிர்வாகம், 05 தொழிலாளிகள் மீது பொய்ப் புகாரின் பேரில் சஸ்பெண்டு செய்து நடவடிக்கை, 06 தொழிலாளிகளில், தமிழ்நாட்டு தொழிலாளிகளை வடமாநிலத்துக்கும், வடமாநிலத் தொழிலாளிகளை தமிழகத்தின் தென்கோடிக்கும் சட்டவிரோதமாக DEPUTATION என்கிற பெயரில் டிரான்ஸ்ஃபர் செய்துள்ளது. இப்படிச் செய்வதால் சங்கத்தை உடைக்க முடியும் என மனப்பால் குடிக்கிறது லைவிண்டு நிர்வாகம்.

நிர்வாகத்தின் இந்த டிரான்ஸ்ஃபரை எதிர்கொண்டு, தன் குழந்தையயும் பறிகொடுத்துவிட்டு, சங்கம் வெற்றி பெற வேண்டும் என்ற ஒரே காரணத்துக்காக தொடர்ந்து உறுதியாக போராடி வருகிறார் ஒரு தொழிலாளி. ஆம்! வடமாநிலத்துக்கு அனுப்பிவைக்கப்பட்ட மணிகண்டன் என்கிற தொழிலாளியுடைய மனைவி, நம் கணவர் திரும்பி வரவே மாட்டாட்டார் என்கின்ற மன உளைச்சலிலேயே கருவில் இருக்கின்ற குழந்தையைப் பறிகொடுத்தார். இதற்கு யார் காரணம்? இது முதலாளித்துவ பயங்கரவதம் அல்லவா? உலகம் முழுவதும் கோடானுகோடி உழைக்கும் மக்களை தனது லாபவெறிக்காக கொன்று குவித்து அந்த பிணங்களின் மீது வாழ்ந்து கொண்டிருக்கின்ற முதலாளித்துவத்துக்கு இதுவே சான்று.

நிர்வாகத்தின் சட்டவிரோத நடவடிக்கைகள் தடுத்து நிறுத்த வேண்டிய தொழிலாளர் துறை முதலாளியின் சட்டைப்பைக்குள் அடக்கமாகி விட்டது. உயர்நீதிமன்றத்தில் நிர்வாகத்தின் சட்டவிரோத நடவடிக்கைகளை நிறுத்த வேண்டும் என உத்தரவு (ரிட் எண்: WP. 15764 / 2015 ) வாங்கிய பிறகும் நீதிமன்ற உத்தரவை நிர்வாகம் மதிக்கவில்லை

நீதிமன்ற ஆணையை அமுல்படுத்த உத்திரவிட வேண்டும் என்று மாவட்ட ஆட்சியரிடம் முறையிட்டால், வருவாய்க் கோட்டாட்சியரை பார்க்கச் சொல்கிறார். வருவாய்க் கோட்டாட்சியரை கேட்டால் தாசில்தாரை பார்க்கச் சொல்கிறார். தாசில்தாரோ மீண்டும் வருவாய்க் கோட்டாட்சியரை கேட்கச் சொல்கிறார். இறுதியாக வருவாய்க் கோட்டாட்சியர் நீதிமன்ற அவமதிப்பு வழக்குப் போடச் சொல்கிறார். நீதிமன்றத்தாலும், அரசாலும் எந்த முதலாளியையும் கேள்வி கூட கேட்க முடியாது என்பதற்கு இதை விட சிறந்த உதாரணம் தேவையில்லை.

உரிமையைக் கேட்கின்ற தொழிலாளிகளுடைய வேலையைப் பறித்து, குடும்பத்தோடு நடுத்தெருவில் நிற்கவைத்து தொழிலாளர்களை பணியவைக்க உளவியல் ரீதியான தண்டனையை தொடுத்து வரும் முதலாளிகளுக்குத் தண்டனை கொடுப்பது யார்?

சங்கம் துவக்கியதற்காகவே டிரான்ஸ்ஃபர், சஸ்பெண்டு செய்து சங்க முன்னணியாளர்களை சிறைக்கு அனுப்பி பழிவாங்கும் CRP முதலாளி, சம்பளத்தை உயர்த்திக் கேட்டார்கள் என்பதற்காக கும்மிடிப்பூண்டி ஆலையை மூடிவிட்டு செங்கல்பட்டில் ஆலையை நடத்தும் ஏயான்ஸ் முதலாளி. நன்றாக உற்பத்தி நடந்த போதும், நிரந்தர தொழிலாளிகளுக்கு சம்பளம் கொடுக்க வேண்டுமா? அதற்கு பதிலாக குறைந்த கூலி ஒப்பந்த தொழிலாளிகளை வைத்துக் கொள்ளலாமென்ற நோக்கத்தோடு சட்டவிரோதமாக லே-ஆஃப் விட்டு தொழிலாளிகளை வயிற்றில் அடித்துள்ளான் அப்ரஃப் முதலாளி. உரிமை கேட்டால் பொய் வழக்கு போட்டு 04 பேரை பணிநீக்கம் செய்துள்ளது கொட்டடிக் கூடாரமான டால்மியா நிர்வாகம். மேற்கண்ட கும்மிடிப்பூண்டி ஆலை முதலாளிகளின் சட்டவிரோத நடவடிக்கைகளுக்கு எதிராக உயர்நீதிமன்ற ஆணைகள், தொழிலாளர் நலத்துறை அறிவுறுத்தல்கள் அனைத்துக்கும் தனது கழிப்பறை காகிதமாகவே பயன்படுத்தி வருகின்றனர். சங்கத்தை அங்கீகரிக்க மறுப்பது, தொழிலாளிகளை நாயினும் கீழாக நடத்துவது, உரிமை என்று வாயெடுத்தாலே பொய் புகார் சொல்லி நடவடிக்கை எடுப்பது என அனைத்து தாக்குதலையும் தொழிலாளிகளின் மீது ஏவி, ஏதுமற்ற அத்துக் கூலிகளாகவும் தனது அடிமைகளாகவும் வைத்திருக்க விரும்புகின்றனர் முதலாளிகள்.

எதை முதலாளிகள் விரும்புகிறார்களோ அதையே செய்து கொடுத்து, அவர்களின் நலனையே தனது நலனாக பாவித்து போராடுபவர்கள் மீது குண்டாந்தடியை ஏவி அடித்து நொறுக்குகிறது, அரசு. முதலாளிகள் வீசிஎறியும் எச்சில் துண்டுக்காக தொழிலாளி வர்க்கத்தையே அடகு வைக்கிறது கைக்கூலி தொழிற்சங்கங்கள். தொழிலாளி வர்க்கம் தனது வரலாற்று பாத்திரத்தை அறிந்து கொள்ளாமல் இந்த முதலாளித்துவ சகதியிலேயே கிடந்து சாக வேண்டுமென போதிக்கிறது பிழைப்புவாதச் சங்கங்கள்.

கும்மிடிப்பூண்டியில் மட்டுமல்ல, நாடு முழுவதும் இதுதான் நிலை. வேலைவாய்ப்பு வளர்ச்சி என்ற பெயரில் பன்னாட்டு முதலாளிகளின் வேட்டைக் காடாக நாட்டை மாற்றுவதற்காக நாடு நாடாக சுற்றி நம்மை நாசமாக்க பார்க்கிறார் மோடி. அந்நிய முதலீட்டை ‘அட்சயப் பாத்திரம்’ போலவும், அந்நிய முதலீடு குவிந்தால் இந்தியாவை வல்லரசாக்கி விடுவதாகவும் கதையளந்து கொண்டிருக்கிறது ஓட்டுப் பொறுக்கிக் கும்பல். சிறப்புப் பொருளாதார மண்டலம் என்ற கொலைக்களத்தில் முதலீடு போட்டு அம்பிகா என்ற ஒரு தொழிலாளியை கொலை செய்து, பல ஆயிரம் தொழிலாளிகளை நடுவீதியில் வீசியெறிந்து கோடி கோடியாய் கொள்ளையடித்துச் சென்றது, நோக்கியா ஆலை. தொழிலாளிகள் வேலையிழந்து வாழ்க்கை இழந்து, பஞ்சப் பராரிகளாய், சொந்த நாட்டிலேயே அகதிகளாகத் திரிந்து கொண்டுள்ள நிலை நம் கண்முன் உதாரணமாய் இருக்கிறது. மாபெரும் தொழிற்சங்க ‘சுல்தான்’கள் என்று சொல்லிக் கொள்பவர்கள் யாரும் நோக்கியா தொழிலாளிகளுக்கு ஆதரவாக இல்லை. நோக்கியா ஆலைத் தொழிலாளிகளை அணிதிரட்டி அவர்களுக்கு உணர்வூட்டி, ஆலை திறந்தால் இவர்களுக்குத் தான் முதலில் வேலை தரவேண்டுமென உயர்நீதிமன்றத்தில் ஆணை பெற்றுத்தந்துள்ளது பு.ஜ.தொ.மு.

மறுகாலனியாக்க கொள்கைகளான தனியார்மய, தாராளமய, உலகமயக் கொள்கைகளைத் தீவிரமாக நடைமுறைப்படுத்தியதன் விளைவாகவே உழைக்கும் வர்க்கம் மரணக்குழியைக் நோக்கித் தள்ளப்படுகிறது. முதலாளிகளின் நலனை முன்னிருத்தியே தொழிலாளர் நலச் சட்டங்கள் திருத்தப்படுகிறது. பெயரளவிலானச் சட்டங்கள் இருக்கும் போதே இந்த நிலைமை என்றால், முதலாளிகளின் கைக்கூலி மோடியால் முன்வைக்கப்படும் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு சட்டமாக்கப்பட்டுவிட்டால், தொழிலாளிகள் தற்போது அத்துக்கூலிக்கு விற்கும் உழைப்பை, இனிமேல் முதலாளிகளின் அடிமைகளாகவே வாழ நேரிடும்.

பு.ஜ.தொ.மு தொழிலாளர்களுக்கான உரிமையைக் கேட்டால் தீவிரவாதிகள் என முதலாளிகளினுடைய கைக்கூலிகள் பீதியூட்டுகின்றனர். ஆனால் உண்மை என்ன? பு.ஜ.தொ.மு தலைமையில் உள்ள பல ஆலைகளில் பேச்சுவார்த்தையின் மூலம் பிரச்சனைகளைத் தீர்த்து தொழிலாளர் – நிர்வாகம் பரஸ்பர உறவை மேம்படுத்தியுள்ளது. தொழிற்சங்க நடவடிக்கை என்கிற இந்த வட்டத்துக்குள்ளேயே தன்னை குறுக்கிக் கொள்ளாமல் “ஒட்டுமொத்த உழைக்கும் மக்களுக்குமே எதிரியாகிவிட்ட முதலாளித்துவத்தையும், அதன் அடியாளான இந்த அரசைமைப்பையும் தூக்கியெறிந்து ஒரு புதிய ஜனநாயக அரசமைப்பை உருவாக்கும் ஆற்றல் கொண்ட தொழிலாளி வர்க்கத்தின் பலத்தை உணரவைத்து, புரட்சிகர போராட்ட பாதையில் தொழிலாளர்களை வழிநடத்தி வருகிற புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் தலைமையின் கீழ் தங்களை ஒன்று திரட்டிக்கொண்டு போராட வேண்டியது அனைத்து தொழிலாளார்களின் அவசர, அவசியக் கடமையாக உள்ளது. இந்தக் கொள்கையை நிலைநாட்டவே போராடுகிறோம். தொழிலாளி வர்க்கத்தை அணிதிரட்டி நிச்சயமாய் நிலைநாட்டுவோம். இந்தக் கொள்கையை பின்பற்றுவதால் எங்களை தீவிரவாதிகள் என்று அழைப்பீர்களேயானால், நாங்கள் தீவிரவாதிகளாக இருப்பதற்கே விரும்புகிறோம்!

கும்மிடிப்பூண்டி லைட்விண்டு ஸ்ரீராம் ஆலையின் முதலாளித்துவ பயங்கரவாதத்தை அம்பலப்படுத்தி, தொழிலாளர் உரிமையைப் பறிக்கும் லைட்விண்டு ஸ்ரீராம்ன் முதலாளித்துவ பயங்கரவாதத்தை முறியடிப்போம்! என்றத் தலைப்பில் புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் திருவள்ளூர் கிழக்கு மாவட்டத்தலைவர் தோழர் சதீஷ் தலைமையில் நடைபெற உள்ள கண்டனக் கூட்டத்தில் மாவட்ட துணைத்தலைவர் தோழர் நாகராஜ் கண்டன உரையாற்றுகிறார். உழைக்கும் மக்கள் அனைவரும் கலந்து கொள்ளும்படிக் கேட்டுக்கொள்கிறோம்.

லைட்விண்டு ஸ்ரீராம்ன் முதலாளித்துவ பயங்கரவாதத்தை முறியடிப்போம்!

leit-wind-meet-bannerமாவட்ட நிர்வாகமே!

  • சங்கம் துவங்கினால் அடக்குமுறை!
    உரிமையை கேட்டால் வேலை பறிப்பு!
  • உயர்நீதிமன்ற உத்தரவையும், மாவட்ட ஆட்சியரின்
    அறிவுரையையும் மயிரளவும் மதிக்காத
    லைட்விண்ட் (LEIT WIND) நிர்வாகத்தின் மீது நடவடிக்கை எடு!

தொழிலாளர்களே

  • முதலாளிகளின் காலை நக்கிப் பிழைக்கின்ற
    பிழைப்புவாத சங்கங்களை விரட்டியடிப்போம்!
  • புரட்சிகர சங்கமான பு.ஜ.தொ.மு.வில் (NDLF)
    அணிதிரள்வோம்!

கண்டன ஆர்ப்பாட்டம்

தேதி : 27-11-2015, மாலை : 05 மணி
இடம் : கும்முடிப்பூண்டி பைபாஸ் சாலை
(பாண்டியன் ஹோட்டல் அருகில்)

தகவல்

புதியஜனநாயத் தொழிலாளர் முன்னணி
திருவள்ளூர் கிழக்கு மாவட்டம்
9445389536

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க