privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புகட்சிகள்அ.தி.மு.கசெம்பரம்பாக்கம் ஏரி வெள்ளம் - பாசிச ஜெயா அரசின் குற்றம் !

செம்பரம்பாக்கம் ஏரி வெள்ளம் – பாசிச ஜெயா அரசின் குற்றம் !

-

மழைக்கு முன்னர் செம்பரம்பாக்கம் ஏரி
மழைக்கு முன்னர் செம்பரம்பாக்கம் ஏரி

செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து திடீரென வெள்ள நீர் திறந்து விட்டப்பட்டது, அது தொடர்பான பொதுப்பணித்துறை விதிமுறைகள் மற்றும் வருவாய்த் துறை செய்திருக்க வேண்டிய முன்னெச்சரிகை நடவடிக்கைகள், வெள்ளம் சென்னையை மூழ்கடித்த பின் செய்திருக்க வேண்டிய மீட்புப் பணிகள் என்று சகல அம்சத்திலும் அரசும் அதன் மொத்த நிர்வாக அமைப்புகளும் சீட்டுக் கட்டு மாளிகை போல் சரிந்து விழுந்துள்ளது.

டிசம்பர் 1 மற்றும் 2-ம் தேதிகளில் சென்னை மற்றும் வட தமிழகமெங்கும் பேய் மழை பெய்யப் போகும் தகவல் சாதாரண மக்களுக்கு வேண்டுமானால் முன்கூட்டியே தெரியாமலிருக்கலாம். ஆனால், இந்த தகவல் அரசுக்குத் தெரியும். சென்னை வானிலை ஆய்வு மையம் மட்டுமின்றி பல்வேறு சர்வதேச வானிலை ஆய்வு மையங்கள் இந்த தேதிகளில் பெருமழை பெய்யப் போவதை முன்னறிவித்திருந்தன.

தற்போது தலைமைச் செயலர் மற்றும் பொதுப்பணித்துறை உயர் அதிகாரிகள் சொல்வது என்னவென்றால் எந்த வானிலை ஆய்வு மையங்களும் ஐம்பது செ.மீ மழை பெய்யப் போவதாக சொல்லவில்லை என்கின்றனர். பொதுவில் எந்த வானிலை ஆய்வு நிலையங்களும் எவ்வளவு மழை என்று துல்லியமாக சொல்வதில்லை. மாறாக மிதமான மழை, கன மழை, அதிக கன மழை, மிக அதிக கன மழை என்று சொல்வார்கள். அதன்படி அன்று மிக அதிக கன மழை பெய்யுமென சொல்லப்பட்டிருக்கிறது.

பொதுப்பணித் துறையைச் சேர்ந்த இடைநிலை அதிகாரிகளும், பொறியாளர்களும் நவம்பர் 26-ம் தேதியே தமது துறைச் செயலாளருக்கும் மற்ற உயரதிகாரிகளுக்கும் செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்டத்தை 22 அடியில் இருந்து 16 அடிக்கு குறைக்க வேண்டுமெனக் கோரி குறிப்புகள் அனுப்பியிருக்கின்றனர். நவம்பர் 26-லிருந்து 29-ம் தேதி வரை பெரியளவில் மழை இல்லாத நிலையில் அடையாற்றின் நீர் ஓட்டமும் குறைவாகவே இருந்துள்ளது.

இந்நிலையில் பொதுப்பணித் துறை அதிகாரிகள் துறைச் செயலாளருக்கு அனுப்பிய கோரிக்கை அவரிடமிருந்து தலைமைச் செயலாளர் ஞானதேசிகனிடம் அனுப்ப பட்டுள்ளது. மேற்படி கோரிக்கையின் மேல் நடவடிக்கை எடுப்பதற்கு “யாருடைய” உத்தரவிற்கோ ஞானதேசிகன் காத்திருந்து மதிப்பான நேரத்தை வீணடித்து விட்டார் என்று டைம்ஸ் ஆப் இந்தியா ஏட்டின் செய்தி தெரிவிக்கிறது. தமிழ் நாட்டின் எங்கோ ஒரு மூலையில் உள்ள பொதுக் கக்கூசில் பழுது பார்க்கப்பட்ட தண்ணீர்க் குழாயைத் திறப்பதாக இருந்தாலும், “புரட்சித் தலைவியின் ஆணைக்கிணங்க தான் நிறைவேற்றப்படும்” என்கிற எதார்த்தத்தை பொருத்திப் பார்த்தால், டைம்ஸ் ஆப் இந்தியா குறிப்பிடும் “யாரோ” யாராக இருக்கும் என்பதைப் புரிந்து கொள்ள முடியும்.

தற்போது இதே அதிகாரிகள் எல்லாம் முறைப்படி நடந்தது, வெள்ள உபரி நீரை திறப்போமென மக்களுக்கு அறிவித்தோம் என்றெல்லாம் கூசாமல் பொய்யுரைக்கிறார்கள். தண்ணீர் திறந்து விடப்ட்ட அன்று தகவல் தொடர்பு துண்டிக்கப்ட்ட பிறகு, மின்சாரம் இல்லாத நிலையில் இவர்கள் தொலைபேசி மூலம் சக அதிகாரிகளுக்கு கூட சொல்லியிருப்பது கடினம். இதில் மக்களுக்கு இந்த தகவல் எப்படி போய் சேரும்? சொல்லவில்லை என்பதை மறைக்க எப்படி அடித்து விடுகிறார்கள் பாருங்கள்.

ஆக, அணை நிரம்பி வெள்ளம் வெடித்து கிளம்பும் நிலையில், வெடிக்க காத்திருக்கும் அணுகுண்டின் மீது அமர்வதைப் போல் செம்பரம்பாக்கம் அணைக்குப் பொறுப்பான அதிகாரிகள் காத்திருந்த வேளையில், அவர்கள் அனுப்பிய கோரிக்கை மனு போயஸ் தோட்டத்தின் கதவுகளுக்கு முன் அநாதையைப் போல் காத்துக் கிடந்துள்ளது. ஒருவழியாக ‘அம்மாவுக்கு’ நேரம் கிடைத்து உத்தரவும் கிடைத்த போது டிசம்பர் 1-ம் பேய் மழையும் வந்து சேர்ந்திருந்தது. அதற்கு மேல் 29000 கூசெக் நீரை திறந்து விடாவிட்டால் மொத்த அணையும் உடைந்து பல லட்சம் உயிர்களை காவு வாங்கி விடும் என்கிற நெருக்கடியில் தான் அதிகாரிகள் செயல்பட்டுள்ளனர்.

திறந்து விடப்பட்ட நீரின் அளவு 29000 கூசெக் (அல்லது 33,500) என்பது தற்போது ஏடுகளில் வரும் செய்திகளின் அடிப்படையில் வெளிப்படையாகியுள்ளது. ஆனால், அதே டிசம்பர் 1-ம் தேதி மாலை 4 மணிக்கு சென்னை கலெக்டர் சுந்தரவள்ளி வெளியிட்ட அறிக்கையோ, செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து 5000 கூசெக் நீர் வெளியேற்றப்பட்டுள்ளது என்றும், நீர்வரத்து அதிகமிருப்பதால் வெளியேற்றப்படும் அளவு 7,500 கூசெக்காக உயர்த்தப்படலாம் என்றும், எனவே அடையாற்றின் கரையோரம் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறும் அறிவுறுத்தியது.

பொதுப்பணித் துறை திறந்து விட்ட நீரின் அளவு என்னவென்பது மாவட்ட ஆட்சியாளருக்கே தெரிவிக்கப்படவில்லை. மறுபுறம் நீர் திறந்து விடப்படுவதைத் தொடர்ந்து முன்னெச்சரிகை நடவடிக்கையாக மக்களை தாழ்வான பகுதிகளில் இருந்து அப்புறப்படுத்தவும் மாநகராட்சி ஊழியர்களுக்கும் காவல் துறைக்கும் போதிய நேரம் வழங்கப்படவில்லை. வெள்ளம் வரப்போகிறது என்று ஆட்சியாளர் வெளியிட்ட அறிக்கை, மக்களை எச்சரித்து காப்பாற்றும் களப்பணியில் ஈடுபடவுள்ள கீழ்கட்ட அரசு நிர்வாக அமைப்புகளுக்கு வந்து சேர்ந்த போது வெள்ளம் தலைக்கு மேல் ஏரியிருந்தது.

ஏரி மதகுகளைத் திறந்து விட உத்தரவிட்ட அரசுத் தலைமை, தண்ணீர் பாய்ந்து வரத் துவங்கிய பின் தான் மக்களைப் பற்றியே சிந்தித்துள்ளது. அது மக்களைக் காப்பாற்ற வேண்டும் என்கிற நோக்கத்தில் கூட இல்லை. வெள்ளத்தில் மக்கள் எறும்புகளைப் போல் அலைக்கழிக்கப்படும் போது தங்கள் உயிரைக் காப்பாற்ற காவல் துறையைத் தொடர்பு கொள்வார்கள் என்கிற அடிப்படை அறிவு கூட இல்லாமல், காவல்துறை அதிகாரிகள் செல்போன்களை அணைத்துள்ளனர்.

மின்னல் வேகத்தில் சகல திசைகளில் இருந்தும் தங்களை வெள்ளம் சூழ்ந்த நிலையில் மக்கள் எங்கே செல்வதெனத் தெரியாமல் திகைத்தனர். மொத்த பகுதியும் வெள்ளத்தில் மூழ்கிய நிலையில் வீடுகளின் கூரைகளின் மேல் ஏரி மூன்று நாட்கள் வரையும் கூட நீரும் உணவும் இன்றித் தவித்துள்ளனர்.

தி வயர் இணையப் பத்திரிகையின் செய்தியாளர் வெள்ளம் ஏற்படப் போகும் தகவல் பல்வேறு அரசுத் துறைகளைச் சேர்ந்த ஊழியர்களுக்கு எவ்வாறு, எந்த நேரத்தில் சொல்லப்பட்டது என்பதை மேலதிகாரிகளிடம் விசாரித்துள்ளார். அதன்படி டிசம்பர் 1-ம் தேதி மாலை நான்கு மணிக்கு ஆட்சியாளர் வெளியிட்ட அறிக்கையின் உள்ளடக்கம் ரோந்துக் காவலர்களுக்கு வயர்லெஸ் கருவிகளின் மூலம் சொல்லப்பட்ட போது இரவு மணி 8.

வெள்ளம் சூழும் போது மின் கசிவு ஏற்பட்டு அதனால் உயிரிழப்புகள் ஏதும் ஏற்படாத வகையில் முன்னெச்சரிகை நடவடிக்கை எடுக்கும் பொறுப்பு மின்வாரியத்துடையது. ஆனால், செம்பரம்பாக்கம் ஏரி திறந்து விடப்படுவதோ, வெள்ள அபாயம் அறிவிக்கப்பட்டிருப்பதோ மின்வாரியத்திற்கு தெரிவிக்கப்படவே இல்லை.

மழைக்கு முன்னர் செம்பரம்பாக்கம் ஏரி
மழைக்கு முன்னர் செம்பரம்பாக்கம் ஏரி

நவம்பர் மத்தியில் ஏற்பட்ட வெள்ளத்தின் போது மீட்புப் பணிகளுக்காக வந்த கப்பற் படையினர் டிசம்பர் 1 இரவில் தான் மீட்புப் பணிகளில் ஈடுபட கோரிக்கை அனுப்பப்பட்டுள்ளது. கடலோரக் காவல் படையினருக்கு மீட்புப் பணியில் ஈடுபடக் கோரி எந்த தகவலும் தெரிவிக்கப்படவே இல்லை. படகு மூலம் மீட்புப் பணிகளில் ஈடுபடுவதில் தொழிமுறைத் தேர்ச்சி கொண்ட இவ்விரு படைகளும் சென்னையிலேயே நிலை கொண்டிருந்தும் மாநில அரசாங்கம் அவற்றைப் பயன்படுத்திக் கொள்ளவில்லை. விளைவாக, பொதுமக்கள் தங்களது சொந்த செலவில் மீனவர்களிடம் படகுகளை வாடகைக்கு எடுத்துச் சென்று மீட்புப் பணிகளில் இறங்கியுள்ளனர்.

மாநகர நிர்வாகத்துறை மற்றும் நீர்வழங்கல் துறைகளுக்கு வெள்ள அபாயம் குறித்த தகவல் ஏதும் தெரிவிக்கப்படவில்லை. வெள்ளம் சூழ்ந்த மூன்று நாட்களுக்கு பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த மக்கள் குடிநீரின்றித் தவித்துள்ள நிலையில், இதை முன் அனுமானித்து சம்பந்தப்பட்ட துறையின் மூலம் செய்யப்பட்டிருக்க வேண்டிய முன்னெச்சரிகை நடவடிக்கைகள் ஏதும் செய்யப்படவில்லை.

சிவில் நிர்வாக அமைப்புகள் ஒவ்வொன்று வெள்ள நாட்களில் துண்டிக்கப்பட்டுக் கிடந்துள்ளது. பேரிடர்க் காலங்களில் சிவில் சமூகத்தை முன்னின்று வழிநடத்துவது, மக்களை ஆபத்திலிருந்து காப்பாற்றுவது உள்ளிட்ட பணிகளில் ஈடுபட வேண்டிய காவல்துறை, வருவாய்த்துறை, மாநகராட்சி நிர்வாகம் உள்ளிட்ட எல்லாத் துறைகளும் ஒரு மத்தியப்படுத்தப்பட்ட கட்டளையின் கீழ் இயங்கியிருக்க வேண்டும்.

வெள்ளம் வருவதற்கு முன்னும் வந்த பின்னும் அதை எதிர்கொள்வது எப்படி, மீட்புப் பணிகளை ஒருங்கிணைப்பது எப்படி, நிவாரணப் பொருட்கள் மற்றும் உணாவுப் பொருட்களை எங்கேயிருந்து எப்படி ஏற்பாடு செய்வது, தாழ்வான பகுதிகளில் இருந்து மீட்கப்படும் மக்களை எங்கே தங்க வைப்பது என்பதைப் பற்றி ஆலோசனை செய்யும் கூட்டம் நடத்தப்படவே இல்லை.

மேலும், வெள்ள பாதிப்புகள் மற்றும் அதைத் தொடர்ந்த மீட்புப் பணிகளை ஒருங்கிணைக்கும் மையப்படுத்தப்பட்ட கட்டுப்பாட்டு அறை டிசம்பர் 6-ம் தேதி வரை அமைக்கப்படவே இல்லை. இதன் விளைவாக அரசின் சார்பில் மீட்புப் பணிகளில் ஈடுபட்ட இராணுவம், தேசிய பேரிடர் மீட்புப் படை, தீயணைப்புத் துறை மற்றும் மாநில பேரிடர் மீட்புப் படை போன்ற அமைப்புகளைச் சேர்ந்த வீரர்கள் இலக்கின்றி வெள்ளத்திற்குள் வீசப்பட்டனர்.

உதாரணமாக, மீட்புப் பணிகளுக்காக டிசம்பர் 5ம் தேதி அனுப்பப்பட்ட 100 இராணுவ வீரர்கள் எங்கே செல்வது, யாரை மீட்பது என்கிற தகவல் ஏதுமின்றி சுமார் 10 மணி நேரம் சும்மா இருந்துள்ளனர். பின்னர் மாநில அரசு அளித்த தகவலின் படி அவர்கள் பள்ளிக்கரணை சென்றுள்ளனர் – அங்கோ ஏற்கனவே ஒரு இராணுவ படைப்பிரிவு மீட்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

மேலும், இன்னொரு படைப்பிரிவை தி.நகருக்கு அனுப்பியுள்ளனர். படகுகளோடு அங்கே மீட்புப் பணிகளுக்குச் சென்ற இராணுவ வீரர்களை கணுக்கால் அளவு தண்ணீர் தான் வரவேற்றுள்ளது. அரசு சார்பான மீட்புப் படையினரை பணக்காரர்கள் மற்றும் வி.ஐ.பிக்கள் வசிக்கும் பகுதிகளுக்கு அனுப்புவதிலேயே மாநில நிர்வாகம் குறியாக இருந்துள்ளது என்று ஆங்கில இந்து பத்திரிகையின் செய்தி ஒன்று குறிப்பிடுகிறது.

மீட்புப் பணிகள் மற்றும் நிவாரண உதவிகளில் காலம் கடந்த பின் தான் மாநில அரசு நிர்வாகம் இறங்கியது. டிசம்பர் 1,2,3 மற்றும் 4 தேதிகளில் தன்னார்வத்தோடு மீட்புப் பணிகளில் ஈடுபட்டனர் ஆயிரக்கணக்கான பொதுமக்கள். சமூக வலைத்தளங்களில் தங்களை ஒருங்கிணைத்துக் கொண்டு பாதிக்கப்பட்டவர்கள் பற்றிய தகவல்களை பரிமாறிக் கொள்வது, உதவி தேவைப்படும் இடங்கள், தேவையான உதவிப் பொருட்கள் பற்றிய தகவல்களை பிற தன்னார்வலர்களுக்கு சமூக வலைத்தளங்கள் மூலம் தெரிவித்து சரியான நேரத்தில் உணவும் உதவிகளும் சென்று சேர்வதை உத்திரவாதப்படுத்தினர்.

ஆளுங்கட்சி குண்டர்களோ, பல்வேறு பகுதிகளில் இருந்து நிவாரணப் பொருட்களைச் சுமந்து வரும் வாகனங்களை மறித்து பொருட்களை கொள்ளையடிக்கும் வேலையில் இறங்கினர். குறிப்பாக கடலூர் மாவட்டத்திற்கு மற்ற மாவட்டங்களில் இருந்து பொதுமக்களால் அனுப்ப பட்ட நிவாரணப் பொருட்கள் காவல் துறை உதவியோடே வழிப்பறி செய்யப்பட்டன. அந்தப் பொருட்களின் மீது ஜெயாவின் மூஞ்சியை ஸ்டிக்கராக ஒட்டி தாங்கள் ஏற்பாடு செய்து கொடுப்பதைப் போல் காட்டிக் கொண்டு வக்கிரமாக நடந்து கொண்டனர்.

கடலூர் ஆட்சியர் அலுவலகத்திலிருந்து நிவாரணப் பொருட்களை வாங்கி வந்த 8-வது வார்டு அதிமுக பிரமுகர் அதைத் தனது வீட்டில் பதுக்கி வைத்துள்ளார். இரவு நேரத்தில் அதைத் தனது கட்சிக்காரர்களுக்கு மட்டும் இரகசியமாக வினியோகித்ததை கண்டுபிடித்து மக்கள் அவரது வீட்டை முற்றுகையிட்டுள்ளனர். அதிமுகவின் இந்த வழிப்பறியை கண்டித்து சாலை மறியலில் ஈடுபட்ட பகுதி மக்களை போலீசார் தடியடி நடத்திக் கலைத்துள்ளனர்.

சென்னை அசோக்கரைச் சேர்ந்த அ.தி.மு.க வட்டச் செயலாளர் நிவாரணப் பொருட்கள் வழங்க வந்த தன்னார்வலர்களை மறித்து மிரட்டியும் அடித்தும் பொருட்களைப் பிடுங்க முயற்சி செய்த காட்சிகள் பாலிமர் செய்திகளில் காட்டப்பட்டது. எனினும், அ.தி.மு.கவின் இது போன்ற வழிப்பறி கொள்ளைச் செயல்களை காவல்துறை கண்டு கொள்ளாததோடு உறுதுணையாக நின்றுள்ளது.

வெள்ளத்தில் மாட்டிக் கொண்ட தங்கள் மாநில மக்களை மீட்க இலவச பேருந்துகளை இயக்கியது கேரளா மற்றும் கர்நாடகா மாநில அரசுகள். ஆனால், தமிழக அரசோ சென்னையில் இருந்து வெளி மாவட்டங்களுக்குச் செல்லும் மக்களுக்கு எந்த ஏற்பாடுகளையும் செய்யவில்லை. இதைப் பயன்படுத்திக் கொண்ட தனியார் பேருந்துகள் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொண்டு சீட்டு ஒன்றுக்கு மூவாயிரம் நான்காயிரம் என்று கொள்ளையடித்துள்ளனர்.

இறுதியில் டிசம்பர் 5-லிருந்து மாநகரப் பேருந்துகளில் மக்கள் கட்டணமின்றி இலவசமாக பயணிக்க மாநில அரசு ஏற்பாடு செய்ய வேண்டும் என்று உயர் நீதிமன்றம் மாநில அரசுக்கு அறிவுறுத்திய பின் அது தொடர்பாக அறிவிப்பு வெளியானது. அதையும் “தாயுள்ளத்தோடு புரட்சித் தலைவி அம்மா அறிவித்தார்” என்று கூச்சநாச்சமின்றி சொல்லிக் கொண்டதோடு பேருந்துகளில் ஜெயாவின் மூஞ்சியை ஒட்டி வைக்குமளவிற்கு ஆளும் கட்சியினர் வக்கரித்துப் போயினர்.

வெள்ளம் வடிந்தும் வடியாத நிலையிலும் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ள உயிரழப்புகள் சில நூறாகவும் பொருள் இழப்பு சில பத்து ஆயிரம் கோடிகளாகவும் உள்ளது. டிசம்பர் 3-ம் தேதி இறந்தவர்கள் எண்ணிக்கை 269 என்று மத்திய அரசு அறிவிக்கிறது – அதற்கு மறுநாள் மாநில தலைமைச் செயலாளர் ஞானதேசிகன் 245 என்கிறார். அதிகாரப்பூர்வமின்றி சுமார் ஆயிரத்திற்கும் அதிகமானோர் இறந்திருக்கக் கூடும் என்கின்றன பத்திரிகை செய்திகள். பிணங்களை எண்ணும் வேலையைக் கூட இந்த அரசு உருப்படியாகச் செய்யவில்லை.

அரசும் அரசு கட்டமைப்பும் அதன் ஒவ்வொரு உறுப்புகளும் புழுத்து நாறிப் போய் விட்டன. அவை ஒவ்வொன்றும் சீழ்பிடித்து மரணத்தின் விளிம்பில் ஊசலாடிக் கொண்டிருக்கின்றன என்பதை இந்த மழை வெள்ளம் நமக்கு உணார்த்தியுள்ளது. இந்நிலையில் ஆளும் கட்சியின் அராஜகத்தையும், அரசு நிர்வாக இயந்திரத்தின் செயலின்மையையும் வெறும் மெத்தனம் என்றோ அடாவடித்தனங்கள் என்றோ சுருக்கிவிட முடியாது.

அரசுக்கும், ஆளும் கட்சிக்கும் மக்களின் மேல் எந்தளவுக்கு வன்மம் இருந்தால் அவரகளைப் புழுப் பூச்சிகளைப் போல் தண்ணீரில் தத்தளிக்க விட்டிருப்பார்கள். ஜெயலலிதா என்கிற மேக்கப்பின் பின் ஒளிந்து கொண்டிருந்த அழுகிப் போன உண்மையான மூஞ்சி மேலும் ஒரு முறை வெளிப்பட்டுள்ளது.

ஆனால், இந்த அரசு அமைப்பின் தோல்வியை இந்த மழை தான் உண்டாக்கியதா? ஒரு பேரழிவிற்கான அடித்தளத்தை இவர்கள் ஏற்படுத்தி வைத்துக் கொண்டு மழை நாட்களில் எப்படி நிம்மதியாக இருந்தார்கள்? அரசு எந்திரத்தின் தோல்வியை எப்படிப் புரிந்து கொள்வது?

–    தொடரும்

–    தமிழரசன்