privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புகட்சிகள்அ.தி.மு.கசென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூரில் நிவாரணப் பணிகள்

சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூரில் நிவாரணப் பணிகள்

-

1. நுங்கம்பாக்கம் குடிசைப் பகுதியில் மக்கள் அதிகாரம்

நுங்கம்பாக்கம் பகுதியில் உள்ள மேற்கு நமச்சிவாயபுரம் மற்றும் கிழக்கு நமச்சிவாயபுரம் பகுதியில் மழை நீர் தேங்கி இன்று வரைக்கும் மக்கள்அவதிப்படுகிறார்கள். இந்தப் பகுதியில் டிசம்பர் 1-ம் தேதி மதியம் 3 மணிக்கு கூவத்திலிருந்து மழைநீரும், சாக்கடையும் இணைந்து வீடுகளுக்குள் புகுந்து விட்டது. பல வீடுகளில் முதல் தளம் வரை விறுவிறுவென தண்ணீர் ஏறியதால், வீட்டில் இருந்த எந்தப் பொருட்களையும் மீட்க முடியவில்லை. இன்று எதுவுமற்று வீட்டில் இருக்கிறார்கள், இப்பகுதி மக்கள்.

இங்கு வாழ்பவர்களில் பெரும்பான்மையினர் பெயிண்டிங், எலக்டிரிசன் வேலை என தினசரி சம்பளத்தில் வேலைகள்செய்கின்றனர். ஒரு சில இளைஞர்கள் மார்கெட்டிங் வேலைகள் செய்கிறார்கள். பலர் குடிக்கும் அடிமையாகி உள்ளனர்.

பகுதி வெள்ள பாதிப்பில் மிதந்த பொழுது,  பகுதி இளைஞர்கள் தான் படகின் மூலம் மக்களை காப்பாற்றியுள்ளனர். “லயோலா கல்லூரி Nungambakkam-Flood-Relief-People-Power-3இல்லையென்றால்நாங்கள் அனைவரும் செத்திருக்க வேண்டியது தான்” என்கின்றனர். பாதிக்கப்பட்டு பத்து நாட்கள் ஆகியும் பகுதியில் நிலைமை சீராகவில்லை. வீடுகளில் சேறு, குப்பைகள் தேங்கி மக்கள் வசிக்க முடியாத நிலையே நீடிக்கிறது. ”கொசுக்களின் தொல்லையால் இரவில் தூங்க முடியவில்லை. மாநகராட்சிபள்ளிக்கு தான் போகிறோம். தனிநபர்கள், DYFI போன்ற அமைப்புகள் தான் உணவு வழங்கினார்கள். அரசு நிர்வாகிகளோ, அதிகாரிகளோ, கட்சிக்காரர்களோ யாரும் வரவில்லை. பகுதியில் சில இடங்களுக்கு இன்றும் மின்சாரம் கிடைக்கவில்லை. பலர் இன்று வரை அருகில் உள்ள பள்ளிக்கூடத்தில் தான் தங்கியிருக்கிறோம்.” என்கின்றனர், மக்கள்.

“நாங்க அத்தியாவசிய பொருட்கள் அனைத்தையும் இழந்து நிற்கிறோம். வீட்டுக்கு 5000 ரூ என அரசு அறிவித்துள்ளது. இதை வைத்துக்கொண்டு என்னவாங்குவது? ஒரு மிக்ஸியே ரூ. 2000 விலை விற்கிறது. அதனால், ஒவ்வொரு வீடாக வந்து பார்த்து இழப்புகளை கணக்கிட்டு  பிறகு இழப்பீடு தீர்மானிப்பதுதான் சரியான நிவாரணமாக இருக்கும்” என்கின்றனர்.

பகுதியில் தேங்கியிருக்கும் குப்பைகளை அகற்றவேண்டும், மின்சாரம் வேண்டும் , தங்க இடம் வேண்டும் என கேட்டு போராட்டம் நடத்தினால் ”பத்து நாளில் வெளியே போக போற எதுக்கு போராடுற!” என போலிஸ் திமிராக மிரட்டுகிறது. ”எங்களுக்கு வீடு கொடுத்தால் நாங்கள் போக தயார். ஆனால்கட்சிக்காரங்களுக்கு ஒதுக்கி விட்டு மீதி தான் எங்களுக்கு வரும்” என்கின்றனர்.

பகுதியில் மக்கள் அதிகாரம் தோழர்கள்

மக்கள் அதிகாரம் இப்பகுதியில் வேலை செய்ய வந்தவுடன் மாநகராட்சி AE வந்து நம்மிடம் பதைபதைப்புடன் வந்து பேசினார். மக்களுக்கு உதவ வந்துள்ளோம் என தெரிவித்ததும், உடனே கிளம்பிவிட்டார்.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]

பகுதியில் மக்கள் அதிகாரம் தோழர்கள் மக்களோடு இணைந்து குப்பைகளை அகற்றியும் சேற்றை சுத்தம் செய்யும் வேலையில் மக்களோடு ஈடுபட்டனர். நிவாரண பணியில் மக்கள் கலை இலக்கிய கழகத்தின் மைய கலைக்குழு தோழர்கள் கோவன் மற்றும் சத்யா இருவரும் நம்மோடு சேர்ந்துவேலைகளில் ஈடுப்பட்டனர். தோழர்கள் இரண்டாவது நாளாக தொடர்ந்து இந்த பகுதிகளில் வேலைகளில் ஈடுபடுகின்றனர்.

தகவல்
மக்கள் அதிகாரம்,
சென்னை
9176801656

காஞ்சிபுரம் வெள்ளப் பகுதிகளில்
பு.ஜ.தொ.மு இருவாரமாக பணி

rain-relief-kanchi-ndlf-20வம்பர் மாதத்திற்கு முன்பு வரை தாம்பரத்து அருகே அழகான, அமைதியான குடியிருப்பு மனைகள், இரயில்,பேருந்து போக்குவரத்து வசதிகளுடன், பள்ளி, கல்லூரி, மருத்துவ மனைகள் செல்ல வசதியுள்ளது என்றெல்லாம் விளம்பரப்படுத்தி, விளை நிலங்களையும், நீர் நிலைகளையும், நீர்வழி பாதைகளையும் ஆக்கிரமித்து மனைகளும், குடியிருப்புகளும் உருவாக்கிய ஓட்டு பொறுக்கி கட்சிகள், இவர்கள் தலைமையிலான ரியல் எஸ்டேட் மாஃப்பியாக்களும், தொழில் வளர்ச்சி என்ற பெயரில் பன்னாட்டு நிறுவனங்கள், காஞ்சிபுரம் மாவட்டத்திற்கு உட்பட்ட ஒரகடம், இருங்காட்டு கோட்டை போன்ற பகுதியில் ஏரிகளை ஆக்கிரமித்தனர். இதன் தொடர்ச்சியாக பல அடுக்கு மாடி குடியிருப்புகள் நீர்வழி பாதைகளில் ஆக்கிரமிக்கப்பட்டன.

rain-relief-kanchi-ndlf-26இப்படிப்பட்ட ஆக்கிரமிப்புகள் நடந்ததின் விளைவுதான், தமிழகம் தழுவிய விளை நிலங்களும், குடியிருப்பும், மக்கள் உடமைகள் இழந்ததற்கு காரணம். பாதிப்பில் பரிதவித்த மக்களை சந்தித்து உதவி செய்வது, நிவாரண பணிகள் மேற்கொள்வதென்று மாவட்ட தலைநகரான காஞ்சிபுரத்தில் உள்ள திருங்காலிமேடு, அருந்ததியார் நகர் (தாழ்த்தப்பட்ட மக்கள் வசிக்கும் பகுதி) மக்களை 01-12-2015 அன்று மாலை சந்தித்து உதவினோம். அதைத் தொடர்ந்து மறு நாள் முடிச்சூருக்கு செல்ல பேருந்து இல்லாமல் வேன் பிடித்து சென்றும், நடந்து சென்றும் அப்பகுதி மக்களை சந்தித்து உதவினோம். அதைத் தொடர்ந்து 04-12-2015 அன்று முதல் 05-12-2015 வரை அன்றாடம் மக்களை சந்தித்து, லட்சுமி நகர் மேற்கு, பெரியார் நகர் ஆகிய பகுதிகளில் உள்ள மக்களுக்கு பால் பாக்கெட்,பிஸ்கெட்,தண்ணீர் ஆகியவற்றை கொடுத்தோம்.

இவை தவிர மாவட்டக் குழு தோழர்களின் ஆதவாளர்களை ஒருங்கிணைத்து, வேட்டி சேலை, குழந்தைகளுக்கான உடைகள், மெழுகுவர்த்தி, கொசுவத்தி, அமிர்தாஞ்சனம் தைலம், தீப்பெட்டி உள்ளிட்டவைகளை கொடுத்து உதவினோம். இது போன்ற உதவிகளும், இதற்கும் மேலும் பலரும்தான் செய்கின்றனர். இதில் என்ன விசேஷம்?

rain-relief-kanchi-ndlf-13உதவி செய்கின்ற பலரும், சாலைகளிலும், தெருமுனைகளிலும், வண்டியில் நின்றபடியே நிவாரண உதவிகள் செய்கின்றனர். இப்படி கொடுப்பதால், சக்தி உள்ளவர்கள் வாங்கி கொள்கின்றனர். நிவாரணம் முழுமையாக செல்வதில்லை என்பதுடன் மக்களை கையேந்தும் பிச்சைக்காரர்களாக்கி விடுகின்றது. இதற்கு மாற்றாக மக்களை மதித்து, ஒவ்வொரு வீட்டிற்கும் சென்று கொடுக்கப்பட்டது.

பாலும், உணவும், மட்டும் போதாது, மழை – வெள்ளம் வீட்டையும் நாசப்படுத்தியிருக்கின்றது. அனைத்தும் இழந்து பரிதவித்த மக்களிடம், மாவட்டக் குழு தோழர்கள் வீட்டை கழுவி சுத்தப்படுத்த வேண்டுமா? தாமாகவே கேட்டபோது, கட்டப்பொம்மன் தெருவில் உள்ள ஸ்டெல்லா என்பவர் நானும் எதிர் வீட்டு பிரியாவும் இணைந்து இருவர் வீட்டை சுத்தப்படுத்திக் கொண்டோம். என்றார். உழைக்கும் வர்க்கத்திற்கே உரிய சாதி, மத பேதங்களற்று, கூட்டுழைப்பும், ஒருவருக்கொருவர் உதவி செய்வது என்ற பண்பை வெளிப்படுத்துவதாக அமைந்தது.

rain-relief-kanchi-ndlf-23லட்சுமி கணபதி தெரு, வ.உ.சி உள்ளிட்ட தெருங்களில் மக்களை சந்தித்து உதவிகள் வேண்டுமா? என்றபோது, பலரும் நெகிழ்ந்து போய் நீங்கள் கேட்டபோதும் என்றனர். மோகன் என்பவர் தனியார் பள்ளியொன்றில் அட்னென்டராக பணிபுரிகின்றார். வெள்ளத்தால் அனைத்தையும் இழந்து விட்டோம் என்றார். மோகனின் தாயார் வீட்டை கழுவி சுத்தப்படுத்தி உதவுமாறு கேட்டபோது, தோழர்கள் அனைவரும் வீட்டிலுள்ள பொருட்கள் அனைத்தும் வெளியே எடுத்து வைத்து கழுவி சுத்தப்படுத்தி திரும்பவும் உள்ளே எடுத்து வைத்தோம்.

rain-relief-kanchi-ndlf-11

 

 

அதே போல, சாந்தி என்பவரது வீட்டையும், இரயில்வே ஊழியரான மணிகண்டன் வீட்டையும் முழுவதுமாக கழுவி சுத்தப்படுத்தி கொடுத்தோம்.

இரயில்வே ஊழியரான மணிகண்டன் பேசுகையில், “ மக்கள் மேல் உண்மையான அக்கரையோடு நீங்கள்தான் செயல்படுகின்றீர்கள்” என மிகுந்த உணர்ச்சி பெருக்கோடு தோழர்களுக்கு நன்றி தெரிவித்தார்.

நேசம் கரம் நீட்டிய தொழிலாளர்கள்

rain-relief-kanchi-ndlf-07மாவட்டக் குழு தோழர்களின் தலைமையில் செயற்குழு தோழர்களும், ஆக்ஸில் இந்தியா மற்றும் கீரிடோ இந்தியா கிளை சங்க தொழிலாளர்களும் உணர்வுபூர்வமாக வேலைகளில் பங்கெடுத்து வந்தனர். இவர்களை போலவே, திருப்பெரும்புதூரில் குடியிருப்புகளில் பல்வேறு பன்னாட்டுக் கம்பெனிகளில் பணிபுரிகின்ற தொழிலாளர்கள் தங்கி உள்ளனர். இந்தத் தொழிலாளர்கள் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவினானர்கள்.

ஹூண்டாய் ஆலையில் ட்ரெய்னியாக பணிபுரியும் தொழிலாளியொருவர், சக தொழிலாளர்களிடம் நிதி திரட்டி, பால், பிஸ்கெட் பாக்கெட் வாங்கி கொடுத்ததுடன், இரவு ஷிப்ட் முடித்து விட்டு, உடல்வலியும் பொருட்படுத்தாமல் உணர்வுடனும், உற்சாகத்துடனும் வேலைகளில் பங்கெடுத்து கொண்டது, பாட்டாளி வர்க்க உணர்வுக்கு ஒரு வகை மாதிரி. இவரைப் போலவே, ராஜீவ்காந்தி, தினேஷ், அறிவழகன் உள்ளிட்ட பல தொழிலாளர்கள் ஒன்று சேர்ந்து 200 பேருக்கு உணவு சமைத்து கொடுத்தது. மக்களுக்கு மக்கள்தான் உதவினார்கள் என்பதற்கொரு முன்னுதாரணமாகும்.

நிவாரணப் பணி பார்த்து மாவட்ட ஆட்சியர் வியப்பு!

rain-relief-kanchi-ndlf-03கடந்த 05-12-2015 அன்று காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் கஜலட்சுமி, லட்சுமி நகரில் ஆய்வை மேற்கொண்டார். அப்போது உடனிருந்த ஊராட்சி மன்ற தலைவரிடம், “மக்களுக்கான உணவு உள்ளிட்ட நிவாரணம் சரிவர கொடுக்கப்படுகின்றதா?” என கேட்டார். அதற்கு தலைவர், “தண்ணீர் முட்டிக்கால் அளவுக்குமேல் இருக்கின்றது. படகு வசதி இல்லை, முகாமில் தங்க வைத்து உதவகின்றோம்” என்றார்.

அப்போது தோழர் ஒருவர் குறுக்கிட்டு, “ஓட்டு கேட்க மட்டும், வீடு வீடாக வருகின்றீர்கள், மக்களுக்கு உதவ இது போன்ற நேரங்களில் வரமாட்டீர்களா?” என கேள்வியெழுப்பியபோது திகைத்து நின்றார்.

உடனே தலைவரின் கைத்தடிகள், “நீங்கள் யாரு உங்களை நாங்க பார்த்தது இல்லை” என்றபோது கூடியிருந்த மக்கள், “இவங்கதான் தொடர்ந்து வந்து உதவி செய்றாங்க” என்றதும் அடிமைகள் அடங்கி போனார்கள்.

rain-relief-kanchi-ndlf-30அதன் பிறகு அடுத்தடுத்த தெருக்களில் நிவாரண பணிகள் மேற்கொண்டொம். அப்போது 60 வயது மிக்க சரசானி என்பவர் தோழர்களை பார்த்து “நீங்கள் போன பிறகு கலெக்டர் அம்மா, ஊர் தலைவரிடம் உங்களுக்கு தேவையான நிதி, வண்டியெல்லாம் அரசு கொடுக்கின்றது, அதைப் பயன்படுத்தி மக்களுக்கு கொடுக்க முடியவில்லை. ஆனால் சிகப்பு சட்டைக்காரர்கள் இவ்வளவு தண்ணியிருந்தும், வீடு, வீடாய் போய் கொடுக்கிறாங்க, உங்களால் ஏன் முடியவில்லை கேள்வியெழுப்பினர்” என்று கூறி நம்முடைய பணியை அங்கீகரித்து நன்றி தெரிவித்தார்.

உள்ளூர் இளைஞர்களை ஈர்த்த நிவாரண பணியும், நெகிழ வைத்த அனுபவங்களும்

ஏற்கனவே குறிபிட்டப்படி, பல்வேறு தன்னார்வாளர்களும், அமைப்புகளும் நிவாரண உதவிகளை தெருங்களிலும், சாலைகளிலும் வாகனத்தில் நின்றபடி கொடுப்பது மக்களை இழிவுப்படுத்துவதாக உள்ளது. இதற்கு மாறாக வீடு, வீடாக மக்களை சந்தித்து கொடுத்தது உள்ளூர் இளைஞர்களான ஆரோக்கிய ராஜ், விஜய், தீபக், ஆறுமுகம் ஆகியோரை ஆர்வத்துடன் வேலைகளில் பங்கெடுத்துக் கொண்டனர்.

rain-relief-kanchi-ndlf-06அன்றைய வேலையை முடித்துக்கொண்டு அனுபவத்தை ஒவ்வொருவரிடமும் கேட்கையில்,எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவரான ஆறுமுகம் “எனக்கு சேற்று புண்ணு கால் வலி தாங்க முடியாமதான் இருந்தேன். ஆனால் எங்கிட்ட ஒரு புடவை கொடுத்து மக்களுக்கு கொடுங்க என்றதும், வலி எனக்கு தெரியவில்லை. இப்போ வரைக்கும் எனக்கு வலியில்லை. இதேபோல, மக்களுக்காக எல்லோரும் உதவி செய்ய வரணும்” என்றார்.

புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி காஞ்சிபுரம் மாவட்டத்தின் சார்பாக 03-12-2015 அன்று துவங்கி 09-12-2015 அன்று வரையிலும் நிவாரண பணிகள் மேற்கொண்டதில் மொத்தம் 60 தொழிலாளர்கள் கலந்து கொண்டனர். பெண் தோழர்கள் ஜோதி, கௌதமி உடல்நிலை சரியில்லா நிலையிலும் குறிப்பாக தோழர் கௌதமிக்கு சேற்று புண்ணால் அவதிப்பட்ட நிலையில் தன்னுடைய 2 வயது கைக்குழந்தையை தன்னுடைய அம்மாவிடம் விட்டு விட்டு, உற்சாகத்துடன் வேலைகளை செய்தது, தோழர்கள் அனைவரையும் நெகிழ வைத்தது. அதேப்போல கல்லூரி மாணவி தோழர் ராதிகா மக்கள் படும் துன்பத்தை தோழர்கள் மூலம் தெரிந்து கொண்டதுடன், நிவாரண வேலைகளில் உற்சாகத்துடன் கலந்து கொண்டனர்.

அந்த வகையில் பு.ஜ.தொ.மு காஞ்சிபுரம் மாவட்டக் குழு தலைமையில், கிளை சங்க தொழிலாளர்கள், ஆதரவாளர்கள், பிற ஆலையில் வேலை செய்யும் தொழிலாளர்கள் ஆகியோரை ஒருங்கிணைத்து மக்களுக்கு உதவி செய்தோம். மக்களை மதித்தது, மக்களின் துன்பத்தில் உணர்வுபூர்வமாக பங்கெடுத்து கொண்டு உதவியது, தோழர்களின் கூட்டுழைப்போடு வேலைகளை முன்னெடுத்தது, இவையாவும் சுயநலமற்ற, மக்களை நேசிக்க கூடிய சமூக அமைப்பு உருவாக்குவதற்கான போராட்டத்தின் ஒரு அங்கம்தான் எமது நிவாரண பணி.

ஆனால் இந்த மழை வெள்ள பாதிப்புக்கு காரணமான குற்றவாளிகள் பன்னாட்டு முதலாளிகள், ரியல் எஸ்டேட் மாஃப்பியாக்கள், மணல் கொள்ளையர்கள், ஒட்டு பொறுக்கி கட்சிகள், அவர்களது பினாமிகள் ஆகிய அனைவரையும் பாதுகாக்கின்றது, இந்த அரசமைப்பு. குற்றவாளிகளின் கூடாரமான இந்த அரசு, மக்களை பாதுகாக்காது என்பதை மழை வெள்ளம் இல்லாத நிலையில் உழைக்கும் மக்களின் வாழ்நிலையை ஒப்பீட்டு பேசி, உழைக்கும் மக்கள் நிலவுக்கின்ற இந்த அரசமைப்பை தகர்த்தெறிந்து அதிகாரத்தை நிலைநாட்டிக் கொள்ளும் சமுகமாற்றத்தின் மூலம்தான், நமது வாழ்க்கை முழு நிவாரணம் பெறும் என்பதை மக்களுக்கு உணர்த்தும் விதமாகத்தான் நிவாரண பணிகளை மேற்கொண்டோம்.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]

புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி,
காஞ்சிபுரம் மாவட்டம்.
88075 32859

திருவள்ளூர் மேற்கு மாவட்ட
நிவாரணப் பணிகளில் பு.ஜ.தொ.மு

rain-relief-ndlf-tvlr-1805-12-2015 அன்று, ஆவடி டியூப் புராடக்ட்ஸ் நிர்வாகம் மூலம் கொடுக்கப்பட்ட உணவு மற்றும் குடிநீர், அந்த நிறுவனத்தில் உள்ள நமது சங்கத்தோழர்களுடன் இணைந்து, பட்டாபிராம் – பூந்தமல்லி சாலையில் உள்ள வயலாநல்லூர், சத்திரம், கோளப்பன்சேரி ஆகிய கிராமங்களில் வழங்கப்பட்டது.

rain-relief-ndlf-tvlr-07வயலாநல்லூரிலும், கோளப்பன்சேரியிலும் முழங்கால் அளவு நீர் வடியாமல் நின்ற நாட்கள் அவை. குறிப்பாக வயலாநல்லூரில் வெள்ளம் வரக்காரணமே, அப்பகுதியில் உள்ள கால்வாயை ஆக்கிரமித்துக் கட்டப்பட்டுள்ள L&T நிறுவனத்தின் மெட்ரோ ரயில் யார்டு தான் என்றனர் உள்ளூர் இளைஞர்கள். சுமார் 40 அடி அகலமுள்ள கால்வாயை ஆக்கிரமித்ததால்தான் வெள்ளம் ஊருக்குள் புகுந்துவிட்டது என்பதை முன்வைத்து, ஆக்கிரமிப்பை அகற்றக் கோரிப் போராடிய மக்களை அடித்து விரட்டி, முன்னணியாளர்கள் மீது பொய்வழக்கு போட்ட போலீசு, L&T வளாகத்தில் காலை உணவை உண்டு, கையில் பணமும் வாங்கிக் கொண்டு சென்றதைக் கண்ட மக்கள் காறித்துப்புகிறார்கள்.

மின்சாரம் முற்றிலுமாகத் துண்டிக்கப்பட்ட இப்பகுதிகளில் உணவோடு மெழுகுவர்த்தியும் அவசியத் தேவையாக இருந்தது. நமது கிளை, இணைப்புச் சங்கத் தோழர்கள் மூலமும் அவர்களது நண்பர்கள் மூலம் இவை சேகரிக்கப்பட்டு மக்களுக்கு வழங்கப்பட்டது. குறிப்பாக டிஐ மெட்டல் ஃபார்மிங், டியூப் புராடக்ட்ஸ் ஆகிய சங்கத் தோழர்கள் தங்களுக்குக் கிடைக்கும் பிஸ்கட் பாக்கெட்டுகளில் 10 நாட்களுக்கானவற்றை முன்கூட்டியே பெற்றுக் கொடுத்தனர். அச்சங்க உறுப்பினரான ஒருதோழரின் தம்பியும் அவரது நண்பர்களும் காஞ்சிபுரத்திலிருந்து அனுப்பிய பிஸ்கட், வாழைப்பழம், மெழுகுவர்த்திகள், சேற்றுப்புண்ணுக்கான மருந்து மற்றும் மாத்திரைகள், அரிசி ஆகியவற்றையும் வீடிழந்த மக்களுக்கு முன்னுரிமை கொடுத்து விநியோகித்தோம். நீண்ட நேரம் நம்முடன் இருந்து, இவ்வேலைகளில் பங்கெடுத்த அவ்விளைஞர்கள் அடுத்தநாள் ஊருக்கு சென்றதும் மீண்டும் உணவுப் பொருட்களோடு, பேஸ்ட், பிரஷ், புடவைகள் ஆகியவற்றையும் அனுப்பி வைத்தனர். இந்நிவாரணப் பணிகளில் எல்.ஐ.சி ஊழியர் சங்கத்தினரும் தமது பங்களிப்பைச் செலுத்தி வருகின்றனர். இவர்களைப் போன்ற தோழர்கள், ஆதரவாளர்களது உதவியுடன், யாரும் செல்லாத குக்கிராமங்களில் நமது நிவாரணப்பணிகள் தொடர்ந்து நடந்து வருகின்றன.

rain-relief-ndlf-tvlr-08கோளப்பன்சேரியில் உள்ள தாழ்வான பகுதியில் உள்ள குடிசைகள், வீடுகளில் வெள்ளநீர் புகுந்ததில் கணிசமான குடும்பங்கள் பாதிக்கப்பட்டன. மற்ற ஊர்களில் எல்லாம் பள்ளிகளில் சென்று தங்கிக் கொள்ள முடிந்தது, இங்கோ பள்ளியே நீரில் மிதக்கிறது. சுமார் பத்து குடும்பங்கள் அங்கன்வாடி மையத்திலும், இன்னும் பத்து குடும்பங்கள் சிறிய கோவிலிலும் தஞ்சமடைந்துள்ளனர்.

டெல்டா மாவட்டங்களில் இருந்து வேலைக்கு வந்த பெண் ஒப்பந்தத் தொழிலாளிகள் 13 பேர் ஒரே வீட்டில் வாடகைக்குத் தங்கியிருந்தனர். அன்றாட அத்தியாவசியப் பொருட்கள் அனைத்தும் மழைநீரில் அடித்துச் செல்லப்பட்ட நிலையில், ஒருமாத காலமாக வேலையும் இல்லாமல், வீட்டிற்குள் புகுந்த வெள்ளநீரில் துணிகளும் நனைந்துபோய் மாற்றுடைக்கே வழியில்லாமல் சொல்லொணாத் துன்பத்தில் இருந்தனர். இவர்களுக்கான அத்தியாவசிய பொருட்கள்,, உடைகள், போர்வைகள் ஆகியவற்றை ஆதரவாளர்கள் மூலம் பெற்று உடனடியாக வழங்கினோம்.

மக்களது கோரிக்கைகளை நினைவில் வைத்திருந்து தேடிச் சென்று அவர்கள் கேட்ட பொருட்களை ஒப்படைத்தோம்.rain-relief-ndlf-tvlr-15பொதுவாக நிவாரணப் பொருட்களை வழங்குவோர் சாலையில் நின்று அங்கு வருபவர்களிடம் மட்டும் கொடுத்துச் சென்றுவிடுவது வழக்கம். வீடுகளை இழந்து நிற்பவர்கள் தகவலறிந்து உட்புறத்திலிருந்து வந்து சேர்வதற்குள் அனைத்துப் பொருட்களும் தீர்ந்துவிடும். ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்வார்கள். சிலசமயம் ஒருசிலரே அதிகப்படியான நிவாரணப் பொருட்களை வாங்கிச் சென்றுவிடுகின்றனர். ஆனால், வயலாநல்லூரில் இருந்த இளைஞர்களும் பெண்களும் பாட்டாளி வர்க்கப் பண்பாட்டை உயர்த்திப் பிடித்தனர். “எங்களுக்கு அதிகம் பாதிப்பில்லை, உள்ளே செல்லுங்கள் அங்குதான் அதிக அளவில் சேதம் ஏற்பட்டுள்ளது” என்று சொன்னதோடு உடன் வந்தும் குறிப்பான பகுதிகளில் இருந்த மக்களுக்கு உதவி சென்று சேர்வதை உத்தரவாதப்படுத்தினர். இதே போல கோளப்பன்சேரியிலும் நாம் உள்ளே உள்ள மக்களைத் தேடி சென்று பொருட்களை வழங்கியது அவர்களை நெகிழச்செய்தது.

இன்னும் ஏராளமான உதவிகள் ஆதரவாளர்கள், நண்பர்கள், தொழிலாளர்கள் மூலம் வந்து கொண்டிருக்கின்றன. அவற்றை உடனடியாகத் தேவையுள்ள மக்களுக்குக் கொண்டு சேர்க்கும் கடமையோடு பு.ஜ.தொ.மு செய்ய வேண்டிய முக்கியமான நிவாரணப்பணி ஒன்று நிகழ்ச்சி நிரலில் இருந்துகொண்டே இருக்கிறது. மழைவெள்ளம் மக்கள் குடியிருப்புகளுக்குள் புகுவதற்குக் காரணமான ஆக்கிரமிப்புகளை அகற்றுவதுதான் அது. ஆவடி நகராட்சியின் கீழ்வரும் பட்டாபிராம் – சார்லஸ் நகர் பகுதியில் இதற்கான வேலைகள் முன்பே துவங்கப்பட்டு விட்டன. இதை அனைத்துப் பகுதிகளுக்கும் விரிவுபடுத்துவதுதான் தலையாய கடமையாக நிற்கிறது. மக்களைத் திரட்டிக் கடமையை நிறைவேற்றும் உறுதியுடன் திருவள்ளூர் மேற்கு மாவட்ட பு.ஜ.தொ.மு.வின் வேலைகள் தொடர்கின்றன.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]

தகவல்
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி,
திருவள்ளூர் (மேற்கு)

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க