Tuesday, June 2, 2020
முகப்பு மறுகாலனியாக்கம் கல்வி மோடி அரசின் கல்விக் கொள்ளையை எதிர்த்து பு.மா.இ.மு தில்லியில் போராட்டம்

மோடி அரசின் கல்விக் கொள்ளையை எதிர்த்து பு.மா.இ.மு தில்லியில் போராட்டம்

-

காட்ஸ் மற்றும் புதிய கல்விக் கொள்கையை எதிர்த்து பு.மா.இ.மு டெல்லியில் நடத்திய போராட்டம்!

12-12-2015 அன்று புதுதில்லி, ஜந்தர் மந்தரில் புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி, ‘இந்தியாவே காட்ஸிலிருந்து வெளியேறு’, ‘மோடி கும்பலின் புதியக் கல்விக்கொள்கை இந்துத்துவம் மற்றும் உலக வர்த்தகக் கழகத்தின் கள்ளக் குழந்தை’ என்ற முழக்கத்துடன் போராட்டத்தை நடத்தியது.rsyf-delhi-protest-4டிசம்பர் 15 அன்று மோடி அரசு, உலகவர்த்தகக் கழகத்தின் காட்ஸ் ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதன் மூலம் நாட்டின் சேவைத்துறைகளான கல்வி, தண்ணீர், இயற்கை வளங்கள், சுகாதாரம் என அனைத்தையும் முற்றாக அடகு வைத்து நாட்டை மறுகாலனியாதிக்கத்தின் நிரந்தரப்பிடியில் சிக்க வைக்கும் வேலையைச் செய்துகொண்டிருக்கிறது. இதன் ஒரு பகுதியாக, புதிய கல்விக்கொள்கை-2015, காட்ஸின் அடியொற்றி நாட்டின் கல்விக்கட்டமைப்பை தகர்க்கும் வகையிலும் இந்துத்துவ பாசிசத்தை புகுத்தும் வகையிலும் முன் கூட்டியே மோடிகும்பலால் வடிவமைக்கப்பட்டிருந்தது.

புதிய கல்விக்கொள்கை அமல்படுத்தப்படுவதற்கு முன்பாகவே கடந்த சிலமாத காலமாக இக்கல்விக்கொள்கை முன்வைக்கும் அபாயங்களை மாணவர்கள் தம் அனுபவத்தில் கண்டு கொண்டு, பல்வேறு வகையான போராட்டங்களை இங்கொன்றும் அங்கொன்றுமாக நடத்தி வருகின்றனர்.

குறிப்பாக மாணவர்களின் உதவித் தொகையை இரத்து செய்தது, கல்வி நிலையங்களுக்குள் காவல் நிலையங்களை அமைப்பது, பல்வேறு சதிகளின் மூலம் பார்ப்பனியத்தைப் புகுத்துவது மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்களை தனியாருக்கு தாரைவார்ப்பது என பல்வேறு அட்டூழியங்களுக்கு எதிராக பல்கலைக் கழக மானியக் குழு முற்றுகை, பேரணி, ஆர்ப்பாட்டம், இணையப்பிரச்சாரம் என பலவகையான போராட்டங்களை மாணவர்கள் நடத்தி வருகின்றனர். ஆனால் இவையாவும் கல்வி என்ற ஒன்றை மட்டும் சுற்றி பொருளாதாரக் கோரிக்கைகளாக  மட்டும் புரிந்து கொள்வது சரியாக இருக்காது. நாட்டையே அடிமைப்படுத்தும் சதி இந்த புதிய கல்விக் கொள்கையில் இருக்கிறது.

இந்த வகையில் புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி தமிழ்நாட்டின் வெள்ள நிவாரணப் பணிகளுக்கிடையே டெல்லியில் காட்ஸை எதிர்க்கும் அகில இந்திய கல்வி உரிமைக்கான கூட்டமைப்பு (All India Forum for Right to Education) நடத்தும் காட்ஸ் எதிர்ப்பு இயக்க மாநாட்டில் முனைப்போடு பங்கேற்றது.

ஆர்ப்பாட்ட தயாரிப்புகள்

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]

08-12-2015 முதலே AIFRTE மேடையை அலங்கரித்த பல்வேறு சமூக இயக்கங்களுக்கு (AISA-All india stuents association, AISF-All India students federation, PSDU-Progessive democratic students union, TVV-Telengana Vidhya Vedika, APSC-Ambedkar Periyar Study Circle IIT Madras, KAPSC-Karnataka Amedkar Periyar Study circle, AIRSO-All india revolutionary students organization) மத்தியில் பு.மா.இ.மு புரட்சிகரப் பாடல்களைப் பாடினர்.

குறிப்பாக Education is our right, WTO get-out; WTO-get out; RSS-kick out என நமது தோழர்கள் செங்கொடிப் பதாகையை rsyf-delhi-protest-3ஏந்தி ஆங்கிலத்தில் இயற்றிப் பாடிய பாடலை பல்வேறு மொழிபேசும் மாணவர்கள் ஆர்வத்துடன் கேட்டனர்! குறிப்பாக AISA, பல்கலைக்கழக மானியக்குழு முற்றுகையின் போது, காட்ஸ் ஒப்பந்தம் நாட்டின் இறையாண்மைக்கு எதிரானது என்பதை எடுத்துச் சென்றது குறிப்பிடத்தக்கது.

புதிய கல்விக்கொள்கை-2015, ஆரம்பக் கல்வியிலே தொழிற்கல்வியைப் புகுத்துவதன் மூலம் எப்படி நாட்டின் பெரும்பான்மையான மக்களுக்கு பார்ப்பன வருணாசிரம அதர்மத்தின் கீழ் கல்வி உரிமையை மறுக்கிறது என்பதை மேடையிலே எடுத்துக்காட்டும் விதமாக பு.மா.இ.மு தோழர்கள் “ஆயிரம் காலம் அடிமை என்றாயே? அரிசன் என்று பேருவைக்க யாரடா நாயே?” என்று நாட்டை மறுகாலனியாக்கும் இந்துத்துவ  கும்பலை அம்பலப்படுத்தி தோலுரித்தனர்.

தமிழ்நாட்டில் தோழர் கோவன் டாஸ்மாக் பாடல்கள் பாடியதற்காக எப்படி இந்த ஆளும் வர்க்கம் தேசத்துரோக வழக்கை போட்டது என்பதை எடுத்துக்காட்டி, “புதியக் கல்விக்கொள்கையை அம்பலப்படுத்தும் விதத்தில் நாங்கள் பாடும் பாடலுக்காக, காட்ஸ் ஒப்பந்தத்தில் கையெழுத்திடும் மோடி கும்பல் தேசத்துரோகம் குற்றம் சாட்டுமானால் நாங்கள் தேசத்துரோகிகளே” என்று மேடையில் அறிவித்து பாடினார்கள்.

கலை நிகழ்ச்சி

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]

12-ம் தேதி பு.மா.இ.மு நடத்தும் ஆர்ப்பாட்டத்திற்கு முன்பு தோழர்கள் டில்லி மாணவர்களிடம் விரிவாக பிரச்சாரம் செய்தனர்.

பிரச்சாரம், முழக்கங்கள், ஊர்வலம்

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]

“தப்லி” என்று இந்தி மொழியில் அழைக்கப்படும் பறையை தோழர்கள் விண்ணதிர இசைத்து, கேளாத செவிகள் கேட்கட்டும் என்று பகத்சிங்கின் புரட்சிகரப்பாதையை டில்லியின் பல்வேறு பல்கலைக்கழக வளாகங்களுக்கு எடுத்துச் சென்றனர். குறிப்பாக அரசியல் விவாதம் பெரும்பான்மையாக நடைபெறும் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்திற்குள் பிரச்சாரம் செய்தனர். விடுதிவளாகம் (15 விடுதிகள்), சிற்றுண்டி வளாகம் (5 தாபாக்கள்), பொதுச்சாலை என அனைத்து இடங்களிலும் காட்சை முறியடிப்போம் என முழங்கி பிரசுரம் வினியோகித்தும், பறை இசைத்தும் புரட்சிகரப்பாடல்கள் பாடியும் பிரச்சாரம் மேற்கொண்டனர்.

தோழர்கள் நடத்திய பிரச்சாரம் ஜே.என்.யு, டில்லி பல்கலைக்கழகம், எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரி, ஐ.ஐ.டி டில்லி, பல்கலைக் கழக மானியக்குழு முற்றுகை நடக்கும் இடம் என டில்லி எங்கிலும் சென்றடைந்தது.

இதன் ஒருபகுதியாக 12-ம் தேதி ஆர்ப்பாட்டம் பு.மா.இ.மு ஒருங்கிணைப்பில் டில்லி ஜந்தர்மந்தரில் நடந்தது. தோழர்கள் நிறுவிய கார்ட்டூன் பிரச்சாரங்கள், செங்கொடிப்பதாகைகள், முழக்கங்கள், மோடி முன்வைக்கும் புதிய கல்விக்கொள்கையை தூக்கி எறிவது மட்டுமல்ல, மாணவர்கள் மற்றும் மக்களே தங்களது சுதந்திரமான படைப்பாற்றலை வெளிப்படுத்தும் கல்விக்கொள்கையை தாங்களே உருவாக்கிக்கொள்ள முடியும் என்ற நம்பிக்கையை  விதைத்தது.

rsyf-delhi-protest-2பு.மா.இ.மு மாநில ஒருங்கிணைப்பாளர் தோழர் கணேசன் தனது தலைமை உரையில் இங்கு நிலவும் ஜனநாயகம் எப்படி போலியானது ,மறுகாலனியாதிக்கப் பேரழிவுகள் எப்படி 90-களில் புகுத்தப்பட்ட தனியார்மய, தாராளமய, உலகமயக் கொள்கைகள் மூலம் இந்தியாவை வாரிச்சுருட்டியது, தற்பொழுது மோடி கும்பல் கையெழுத்திடப்போகும் காட்ஸ் ஒப்பந்தம் எப்படி இந்திய இறையாண்மையைப் பற்றி இறுக்குகிறது, புதியக் கல்விக்கொள்கை எப்படி பார்ப்பன பாசிசத்தைப் புகுத்துகிறது என்பதையெல்லாம் அம்பலப்படுத்தி பேசினார்.

குறிப்பாக கல்வி என்பது உரிமை என்ற நிலையில் இருந்து இந்த அரசு கைகழுவிக்கொண்டு, நிதிச்சுமை என்பதன் பெயரில் கார்ப்பரேட்டுகளுக்கு கல்வியை விற்று தரகு வேலை பார்ப்பதன் மூலம் இந்த அரசு ஆளத்தகுதியற்று, கல்விவழங்க வக்கற்று, தோற்றுப்போய்விட்டது என்பதை எடுத்துக்காட்டினார்.

நிதி இல்லை என்று சொல்லும் அரசிடம் நிதி எங்கே இருக்கிறது என்பதை பு.மா.இ.முவால் எடுத்துக்காட்ட இயலும் என அம்பானி, டாட்டா, கோயங்கா போன்ற தரகுமுதலாளிகளிடம் தான் அது சிக்கியிருக்கிறது என்பதை எடுத்துக்காட்டி தனியார்மயத்தை தூக்கி எறிவதன் மூலம் மட்டுமே கல்வியை அனைவருக்கும் பொதுவானதாக மாற்ற முடியும் என அறிவித்ததை பெரும்பாலானோர் கவனித்தனர்.

தங்களை இடதுசாரிகள் என்று அழைத்துக்கொள்பவர்கள் ஏகாதிபத்தியத்தை எதிர்த்துவிட்டு அதைச் செயல்படுத்தும் பார்ப்பனியத்தை கண்டுகொள்ளாமல் விடுகிற பொழுது புதிய கல்விக்கொள்கையில் பார்ப்பனியமும் ஏகாதிபத்தியும் எப்படி ஒத்திசைவாக இணைந்திருக்கிறது என்பதை சுட்டிக் காட்டினார்.

ஆயிரம் ஆண்டுகளாக பார்ப்பன பாசிசம் நாட்டின் பெரும்பான்மை மக்களுக்கு கல்வியை மனுதர்மத்தின்படி மறுத்தே வந்திருக்கிறது என்பதையும் தற்பொழுது புதிய கல்விக்கொள்கை எட்டாம் வகுப்பிலேயே தொழிற்கல்வியைக் கொண்டுவருவதன் மூலம் பொதுக்கல்வி மறுக்கப்பட்டு, வருணாசிரம பாசிசம் நிலைநாட்டப்பட்டு, தாராளமாக கூலிகளை மேல்நிலை வல்லரசுகளுக்கு எப்படி விற்கப் போகிறது என்பதை எடுத்துக்காட்டிய பொழுது பார்ப்பனியம் வேரறுக்கப்படவேண்டியது எத்துணை அவசியம் என்பதை ஜந்தர்மந்தரில் கூடியிருந்த மாணவர்கள் கண்டுகொண்டனர்.

இப்படிப்பட்ட புதிய கல்விக்கொள்கை தகர்க்கப்பட வேண்டுமானால் மாணவர்கள் போராட்டம் இக்கல்விக்கொள்கையின் காரணகர்த்தாவான ஏகாதிபத்தியத்தையும் பார்ப்பனியத்தையும் வீழ்த்துகிற புரட்சிகர அரசியலாக இருக்கவேண்டும் என்பது வலியுறுத்தப்பட்டது. இந்த வகையில் மாணவர்கள் அணிதிரண்டால் மட்டும்போதாது மாணவர்கள் இந்நாட்டின் பெரும்பான்மை உழைக்கும் மக்களான, விவசாயிகள், தொழிலாளிகள், பெற்றோர்கள் கூட்டிணைவை ஏற்படுத்த வேண்டிய அவசியம் முன்வைக்கப்பட்டது.

இதற்கு எடுத்துக் காட்டாக, தமிழ்நாட்டில் மது ஒழிப்புப் போராட்டம் எப்படி மாணவர்களால் எடுத்துச்செல்லப்பட்டு வீச்சான மக்களின் போராட்டாமாக மக்கள் தங்கள் அதிகாரங்களை நிறுவிக்கொள்ளும் போராட்டமாக மாறியது என்பது விவரிக்கப்பட்டது.

இதன் அடியொற்றி தோழர்கணேசனின் உரைக்குப்பின்பாக,

நாட்டைச்சூறையாடும் மறுகாலனியாதிக்க நச்சை முறியடிப்போம்.

பார்ப்பன பாசிசத்தை வீழ்த்துவோம்.

மக்கள் அதிகாரத்தை நிறுவுவோம்

என காட்ஸை வீழ்த்துவதற்கான போர்தந்திரம், முழக்கமாக முன்வைக்கப்பட்டது. பு.மா.இ.மு தோழர்கள் பாடிய பாடலில் “ஆர்.எஸ்.எஸ்ஸா? நக்சல்பாரியா?” எனும் கேள்வி வரி, பலத்த வரவேற்பை மாணவர்கள் மத்தியில் பெற்றது.

ஆர்ப்பாட்ட பேச்சாளர்கள்

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]

முழக்கத்தால் கவரப்பட்ட பிற பேச்சாளர்கள், குறிப்பாக கல்வியாளர் பேராசியர் அனில் சட்கோபால் இது சமரசமற்ற முழக்கம் என்று புரட்சிகர அரசியலின் காத்திரத்தை வரவேற்று பேசினார். AIFRTEயின் அமைப்புச் செயலாளர் தோழர் ரமேஷ் பட்நாயக், பு.மா.இ.மு தோழர்கள் மக்களை பாடல்களாலும் எழுச்சிமிகு உரைகளாலும் கட்டுக்கோப்புடன் வழிநடத்திச் சென்றதை பெருமையுடன் குறிப்பிட்டார். மேலும் பேராசிரியர் பிரேந்திர ராவத் பேசும் பொழுது புதிய ஜனநாயகப்புரட்சி எப்படி நடத்துவது என்பது தெரியாவிட்டாலும் பு.மா.இ.மு முன்வைக்கும் அரசியல் சரியானது என மேடையிலேயே பேசினர். பேராசிரியர் ரவிக்குமார், தெற்காசியப்பல்கலைக்கழகம், காட்ஸ் கொண்டு வரும் அபாயம் குறித்து விழிப்புணர்வூட்டிப் பேசினார். பேராசிரியர் சச்சின், AIFRTE, இந்தியில் புதியக்கல்விக்கொள்கையால் மாணவர் எதிர்கொள்ளும் அபாயம் குறித்து விளக்கினார்.  மேலும் தோழர் சுசிதா (AISA), தோழர் ஆனந்த் (TNM-The new materialists), தோழர் தாவா (DSU), தோழர் ரமேஷ் (அம்பேத்கர் பெரியார் படிப்பு வட்டம், ஐ.ஐ.டி சென்னை) ஆகியோர் காட்ஸை எதிர்த்து ஏகாதிபத்தியத்தையும் பார்ப்பனியத்தையும் ஒழிப்பதில் ஜனநாயக சக்திகள் ஓரணியில் திரள வேண்டும் என அறைகூவல் விடுத்தனர்.

இதில் குறிப்பாக AISA மற்றும் TNM தோழர்கள் பெருந்திரளாக கலந்துகொண்டு பு.ம.இ.மு முன் வைக்கும் புரட்சிகர அரசியலை ஊன்றிக் கவனித்தனர். ஒரு கட்டத்தில் பிற அமைப்பைச் சேர்ந்தவர்களும் (ராஷ்ட்ரிய சேவா தள்) கூட போராட்ட உணர்வால் பு.மா.இ.மு முன்வைக்கும் முழக்கத்தை முழங்கியது (இன்குலாப் ஜிந்தாபாத்) புரட்சிகர அரசியலை மக்கள் இறுகப் பற்றுவதற்கான சாட்சியாக அமைந்தது.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]

இதை மெய்ப்பிக்கும் வகையில் ஓர் முரண்பாட்டை இங்கு தெரியப்படுத்தவேண்டியது அவசியமாகும். பொதுவாக ஜந்தர் மந்தர் மக்களின் பல்வேறு போராட்டங்கள் நடைபெறும் இடமாக முழக்கமும் சத்தமுமாக இருக்கும். நம் நாட்டின் பாராளுமன்றமும் அத்தகையதுதான் என்பதை நீங்கள் அறிவீர்களோ என்னவோ, ஆனால் இந்த போலி ஜனநாயகத்தைத் தாங்கிப்பிடிப்பவர்கள் ஒவ்வொரு முறையும் இந்த போலி ஜனநாயகத்தைத் தூக்கி நிறுத்தும் பொருட்டு, பாராளுமன்றத்தின் மாண்பு ஓட்டுக்கட்சி உறுப்பினர்களால் சீரழிக்கப்படுவதாக அங்கலாய்ப்பார்கள். ஆனால் ஆச்சரியமாக இந்த முறை காட்ஸ் கையெழுத்தாகும் சமயத்தில் காட்ஸ் குறித்து கடுகளவு சத்தமும் பாராளுமன்றத்தில் இருந்து வெளிவரவில்லை. மாறாக அது ஜந்தர் மந்தரில் 12-12-2015 அன்று போர்முழக்கமாக வந்திருந்தது.

இந்தநாட்டின் பாராளுமன்றம் யாருக்கானது? எங்கிருக்கிறது என்பது பு.மா.இ.மு ஜந்தர்மந்தரில் நடத்திய ஆர்ப்பாட்டத்திலிருந்து தெரியவரும். முன்னது இந்த ஆளும்வர்க்கத்திற்கானது; ஆகையால் தான் பேரமைதி. பின்னது மக்கள் அதிகாரத்துக்கானது; ஆகையால் தான் பெருமுழக்கம்.

பு.மா.இ.மு டெல்லியில் காட்ஸை எதிர்த்து நடத்திய போராட்டத்தின் பருண்மையான முடிவு எது என்பதை கீழ்க்கண்டவாறு ஒரு வாக்கியத்தில் தொகுக்க முடியும்;

மக்கள் தங்கள் அதிகாரத்தை புரட்சிகரபதாகையின் கீழ் நிறுவிக்கொள்ளும் காலம் வெகு தொலைவில் இல்லை.

சந்தா செலுத்துங்கள்

இணையத்தில் உழைக்கும் மக்களின் குரலாக பதினோரு ஆண்டுகளாக போராடும் வினவுடன் கை கோருங்கள். ஆதரியுங்கள்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க