privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புமறுகாலனியாக்கம்கல்விஅரசு கல்லூரி கௌரவ விரிவுரையாளர்கள் - நவீன கொத்தடிமைகள் !

அரசு கல்லூரி கௌரவ விரிவுரையாளர்கள் – நவீன கொத்தடிமைகள் !

-

அரசு கலைக் கல்லூரி கௌரவ விரிவுரையாளர்கள் போராட்டம் வெல்லட்டும்!

  • கௌரவ விரிவுரையாளர்கள் மீதான அடக்குமுறை கல்வி தனியார்மயமாக்கத்தின் ஒரு பகுதியே!
  • ஏழை மாணவர்களின் கல்வி உரிமைப் பறிப்புக்கு எதிராகவும் கௌரவ விரிவுரையாளர்களை நிரந்தரமாக்கவும் ஒன்றிணைந்து போராடுவோம்!
  • கல்வியில் தனியார்மயத்திற்கு எதிராகவும் புதிய கல்விக் கொள்கையை முறியடிக்கவும் போராடுவோம்!
  • அனைவருக்கும் கட்டாய இலவசக் கல்வி பெற மக்கள் அதிகாரத்தை நிறுவுவோம்!

மாணவர்களே, பெற்றோர்களே, உழைக்கும் மக்களே!

மிழ்நாடு அரசுக் கல்லூரி கௌரவ விரிவுரையாளர்கள் ஜனவரி 28-ம் தேதி முதல் போராடி வருகின்றனர். வாயில் கருப்புத் துணி கட்டுக்கொண்டு போராடுவது, உண்ணாவிரதம் என பலவடிவங்களில் அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையிலான போராட்டங்களை நடத்தி வருகின்றனர். அரசு இவர்களது கோரிக்கைகளுக்கு செவி மடுக்காததால் தங்களை கருணை கொலை செய்யக் கோரி போராடுகின்றனர். அரசு உயர் கல்வித் துறையில் பணிபுரியும் இந்த விரிவுரையாளர்களது வாழ்க்கை அவலத்தின் முழு பரிமாணத்தையும் அறிந்துகொள்ள வேண்டியதும் அவர்களுடன் இணைந்து போராட வேண்டியதும் நம் அனைவரின் கடமையாகும்.

honorary-lecturers-struggleசுமார் 15 ஆண்டுகளுக்கு முன்பு கௌரவ விரிவுரையாளர்கள் என்ற பெயரில் இவர்கள் கல்லூரியில் புகுத்தப்பட்டனர். இன்று, தமிழ்நாட்டின் அரசு கலைக் கல்லூரிகளில் கௌரவ விரிவுரையாளர்களாக சுமார் 3,400 பேர் பணிபுரிகின்றனர். பல கல்லூரிகளில் இவர்கள் சரிபாதி விரிவுரையாளர்களுக்கும் அதிகமானவர்களாக உள்ளனர். சில துறைகளில் தலைவர்களே இல்லாமல், ஒரு பேராசிரியரும் இல்லாமல் இந்த விரிவுரையாளர்களைக் கொண்டே இயங்குகின்றன. உதாரணத்திற்கு கிருஷ்ணகிரி அரசு கலைக்கல்லூரியில் சுமார் 54 பேர் கௌரவ விரிவுரையாளர்களாக வேலை செய்கின்றனர். மாலை நேரக் கல்லூரியே இவர்களை நம்பித்தான் இயங்குகிறது. கல்லூரியின் மொத்த பாடச்சுமையையும் இவர்கள்தான் சுமக்கிறார்கள் என்றால் அது மிகையல்ல. இவ்விரிவுரையாளர்களின் தியாகத்தால்தான் பல அரசுக் கல்லூரிகளே இயங்கிக் கொண்டிருக்கின்றன. இவர்கள் இல்லையென்றால், ஆயிரக்கணக்கான ஏழை மாணவர்களின் பட்டப்படிப்பு என்பது பகல் கனவாகவே முடிந்துவிடும்!

கௌரவ விரிவுரையாளர்கள் அல்ல, நவீன கொத்தடிமைகள்!

இப்படி, அரசுக் கல்லூரியின் இரத்தமும் இதயமுமாக விளங்கும் கௌரவ விரிவுரையாளர்களை இந்த அரசு எப்படி நடத்துகிறது என்பதுதான் கொடுமையான விசயம். இவர்கள் கல்லூரிகளில் பணிபுரிவதற்கு எந்த எழுத்துப் பூர்வ ஆவணங்களும் கொடுப்பது கிடையாது. மாதம் ரூ 10,000 என்று தற்போது இவர்களுக்கு வழங்கப்பட்டு வரும் ‘ஊதியம்’ என்பதும் முழுமையாக ஊதியமாக தரப்படுவதில்லை. இவர்கள் ஒரு நாள் விடுப்பெடுத்தாலும் அதற்குரிய தொகை பிடித்தம் செய்துகொள்ளப்படுகிறது. மே மாதத்திற்கும், ஜூன் மாதம் கல்லூரி தொடங்கும் வரையிலும் இவர்களுக்கு ஊதியம் கிடையாது. இப்படி அத்துக்கூலிகளாகவே இந்த ‘கௌரவ’ விரிவுரையாளர்கள் நடத்தப்படுகிறார்கள். இதனைவிடக் கொடுமை என்னவென்றால், சென்ற இரு ஆண்டுகளாக, ஏப்ரல் மாதத்தில் வேலை செய்தால் அதற்கு ஊதியம் தருவதாக சொல்லி வேலை வாங்கிய அரசு, இவர்களுக்கு அந்த மாத ஊதியத்தை வழங்கவில்லை. இப்படி பகல்கொள்ளையர்களைப் போல இவர்களை ஏமாற்றி வருகிறது இந்த அரசு.

பேராசிரியர்களுக்கு நிகரான கல்வித்தகுதி கொண்டிருக்கும் இவர்களுக்கு பணி பாதுகாப்பு, மருத்துவ உதவிகள், விபத்து உதவிகள் என எந்த உரிமைகளும் கிடையாது. பேராசிரியர்கள் இவர்களை மதிப்பதும் கிடையாது. வேலை வாங்கும் போது மட்டும் இவர்களை அழைத்து பேசுகின்ற, இவர்களது உழைப்பைத் துல்லியமாக கணக்கிட்டு சுரண்டுகிற அரசு, இவர்களது வாழ்வாதாரத்தைப் பற்றி சிறிதும் கவலைப்படுவதில்லை. இதனால், பல ஆண்டுகள் உழைத்தும் பயனின்றி வேலையைவிட்டு சென்றவர்கள் பலர்.

பாடம் நடத்தும் திறமை கொண்டவர்கள் விடைத்தாள் திருத்தும் பணியிலும் ஈடுபடலாம் என்ற வகையில் பல்கலைக் கழங்கங்களும் இவர்களை விடைத்தாள் திருத்தும் வேலை செய்ய அங்கீகரித்துள்ளது. ஆனால், கல்லூரி நிர்வாகங்களோ, இவர்களுக்கு விடைத்தாள் திருத்துவதற்கான விடுப்பு வழங்குவதில்லை. அந்தவகையில் சிறு பொருளாதார உதவியும் இவர்களுக்கு சென்று சேர்ந்துவிடக்கூடாது என்பதில் அரசு வக்கிர புத்தியுடன் நடந்து கொள்கிறது.

கௌரவ விரிவுரையாளர்களின் பிரச்சனை கல்வி தனியார்மயமாக்கத்தின் விளைவு!

1992-ல் இந்தியாவில் கல்வித்துறையில் தனியார்மயமாக்கம் தொடங்கியது. அன்று தொட்டு கல்விக்கு கொடுத்துவந்த குறைந்தபட்ச முன்னுரிமைகளை கொஞ்சம் கொஞ்சமாகக் குறைத்து வந்தது அரசு. இதன் ஒரு பகுதியாக உயர்கல்வித் துறைக்கு ஒதுக்கி வரும் நிதியையும் குறைத்தது. நேரடியாக தனியார்மயமாக்கத்தைப் புகுத்தினால் மாணவர்கள், பேராசிரியர்கள் மத்தியில் அது போராட்ட உணர்வுக்கு வழி வகுத்துவிடும் என்றுணர்ந்த அரசு, கட்டம் கட்டமாக கல்வித்துறை கட்டமைப்பை சீரழித்தும் வெள்ளையர்கள் கையாண்ட பிரித்தாளும் வழிமுறையை பின்பற்றியும் கல்வித்துறையில் தனியார்மயமாக்கத்தைப் புகுத்தி வருகிறது.

இதன் ஒரு பகுதியாகத்தான் கௌரவ விரிவுரையாளர்கள் என்ற பதவி உருவாக்கப்பட்டது. நிரந்தர பேராசிரியர்களை நியமிக்காமல் அரசுக் கல்லூரிகளை கட்டம்கட்டமாக செயலிழக்க வைத்து இறுதியில் இழுத்து மூடுவதற்கான ஒரு இடைக்கட்டம்தான் இந்த கௌரவ விரிவுரையாளர்கள் என்ற பணி. கௌரவ விரிவுரையாளர்களும் தொடக்கத்தில் பணிநிரந்தரம் செய்யக்கோரி போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். பின்னர், இதற்கு முக்கியத்துவம் கொடுப்பதை நிறுத்திவிட்டு ஊதிய உயர்வு உள்ளிட்ட பிற கோரிக்கைகளுக்காகப் போராடி வருகின்றனர்.

நம்ப வைத்து கழுத்தற்குக்கும் ஆளத் தகுதியிழந்த அரசு கட்டமைப்பு!

கடந்த சட்டமன்றத் தேர்தலின் போது ஜெயலலிதா தனது தேர்தல் அறிக்கையில், “நாங்கள் ஆட்சிக்கு வந்தால் கௌரவ விரிவுரையாளர்கள் அனைவரையும் பணிநிரந்தம் செய்வோம்” என்று அறிவித்திருந்தார். ஆனால், இந்த நாலேமுக்கால் ஆண்டிலாக இவர்களை கண்டுகொள்ளவே இல்லை. மேலும், கடந்த 3 ஆண்டுகளாக ஊதிய உயர்வும் வழங்கவில்லை. இதனால் கௌரவ விரிவுரையாளர்கள் பெரிதும் ஏமாற்றமடைந்த நிலையில் தற்போது போராட்டத்தில் இறங்கியுள்ளனர்.

கௌரவ விரிவரையாளர்களுக்கு எதிரான ஜெயா அரசின் உயர் கல்வித்துறையின் இந்த அணுகுமுறை மேலும் பல வடிவங்களில் வெளிப்பட்டுக்கொண்டுதான் வருகிறது. உதாரணமாக, தமிழக அரசுத் துறைகளில் பதவி உயர்வில் மாற்றுத் திறனாளிகளுக்கு 3% இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று கோரி உயர்நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட மனுவிற்கு பதில் மனு தாக்கல் செய்யமால் 6 மாதங்களாக இழுத்தடித்து வந்தது உயர்கல்வித் துறை. இதற்கு ரூ.10,000 அபராதம் விதித்து, ஜனவரி 28-ம் தேதிக்குள் தாக்கல் செய்ய வலியுறுத்தியும் மீண்டும் பதில்மனு தாக்கல் செய்யாமல் இழுத்தடித்தது உயர்கல்வித் துறை. இதனால், உயர்நீதிமன்றம் தமிழக அரசை கடுமையாக கண்டனம் செய்து ரூ.10,000 அபராதம் விதித்துள்ளது. ஆனால், ஜெயா அரசு இந்தக் கண்டனங்களை கழிப்பறைக் காகிதம் போல கருதி வருகிறது. இந்த உயர்கல்வித்துறைதான் கௌரவ விரிவுரையாளர்களுக்கு ஊதிய உயர்வும் பணிநிரந்தரமும் வழங்க மறுத்து வருகிறது.

அதனால், சட்டத்திற்குள் போராடுவது நீதிமன்றத்தில் முறையிடுவது போன்ற எவையும் பயனளிக்கவில்லை. இதனை உணர்ந்து கொண்ட கௌரவ விரிவுரையாளர்கள் சங்கம் “தங்களைக் கருணைக் கொலை” செய்யுமாறு அரசிடம் தெரிவித்துள்ளது.

ஆனால், இந்தவகையிலான முறையீடுகள் போராட்டங்கள் எல்லாம் இந்த அரசினை சற்றுக்கூட அசைய வைக்காது என்பதுதான் உண்மை. காரணம், கல்வித்துறை தனியார்மயமாக்கத்தை நோக்கமாக கொண்டு செயல்படும் போது, அதன் பொருட்டு உருவாக்கப்பட்ட கௌரவ விரிவுரையாளர்களை ‘கௌரவமாக’ நடத்துவது என்பது பகல்கனவாகவே இருக்கும். அதுமட்டுமல்ல, பதில் மனு தாக்கல் செய்வதற்குக் கூட நீதிமன்றத்தை அரசே மதிப்பதில்லை. அரசின் ஒரு அங்கம் மற்றொரு அங்கத்திற்கு எதிராக செயல்படுகிறது.

புதிய கல்விக் கொள்கை 2015 – அரசுக்கல்வியை ஒழிக்கும் அணுகுண்டு!

கல்வி இன்று வியாபாரப் பொருளாக்கப்பட்டுள்ளது. காசுக்கேற்ற கல்வி என்ற அநீதி நிலைநாட்டப்பட்டுள்ளது. இந்தச் சூழலில் மோடி அரசோ, கல்வியை கடைசரக்குதான் என்று அறிவிக்கும் வகையில் சட்டம் இயற்ற இருக்கிறது. இதற்கான காட்ஸ் (General Agreement on Trade and Sevices – GATS) ஒப்பந்த்ததில் அண்மையில் கையொப்பமிட்டுள்ளது. இந்தச் சட்டப்படி மாணவர் என்பவர் கல்வி என்ற சேவையை வாங்குபவர்; ஆசிரியர் எனப்படுபவர் விற்பனையாளர் (Salesman); கல்வி நிறுவனம் என்பது கல்வி சேவை விற்பனை நிலையம் என்ற வகையில் கல்வித் துறையின் அடிப்படைக் கட்டமைப்பே மாற்றியமைக்கும் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதன் மூலம் கார்ப்பரேட் கம்பெனிகளின் முழு கட்டுப்பாட்டிற்குக் கல்வியைக் கொண்டு சென்றுள்ளது.

மேலும், இச்சட்டத்தின் மூலம், 8ம் வகுப்பு முதற்கொண்டு தொழிற்கல்வியைப் புகுத்துகிறது. இவ்வாறு புகுத்துவதன் மூலம் மாணவர்கள் அவரவர் சாதித் தொழிலைக் கற்றுக்கொடுப்பது, அதன் மூலம் 1967-களில் தமிழகத்தில் விரட்டியடிக்கப்பட்ட குலக்கல்வியை மீண்டும் நிலைநாட்டுவது என்று பார்ப்பன சதித்தனத்துடன் செயல்படுகிறது. இதன் மூலம், “யங் இந்தியா” இருக்கிறது என்று சொல்லி, குழந்தைகளை உழைப்பில் ஈடுபடுத்தி ‘கொள்ளை இலாபத்திற்கு நான் கேரண்டி’ என்று கூறி பன்னாட்டுக் கம்பெனிகளை கூவி கூவி அழைக்கிறது.

கல்வி நிறுவனங்கள் மாணவர்களிடமிருந்து பெறப்படும் வருவாயிலிருந்து (அதாவது ஃபீஸ் மற்றும் உழைப்பில் ஈடுபடுத்தி வரும் வருவாய்) நடத்தப்பட வேண்டும் எனவும் இதனால், கல்வி நிறுவனங்களுக்கு அரசு நிதி ஒதுக்கத்தேவையில்லை என்று அறிவித்துள்ளது. இது போன்ற பல கொடிய சரத்துக்களை இச்சட்டம் கொண்டுள்ளது.

ஒட்டு மொத்தத்தில் ஏழை மாணவர்களின் கல்வி உரிமையை முற்றிலுமாக பறிக்கும் வகையிலான புதிய கல்விக் கொள்கையை அமுல்படுத்துவதற்கான வேலைகளில் தீவிரமாக இறங்கியுள்ளது.

ஏழைகளுக்கு கல்வி எதற்கு – புதிய மனுநீதி!

கௌரவ விரிவுரையாளர்களுக்கு பணி நிரந்தர ஆணை வழங்காமல் இருப்பது என்பது ஏழை மாணவர்களின் கல்வியைப் பறிக்கும் சதித்திட்டத்தின் ஒருபகுதி. இந்திய அரசியல் சாசனத்தை வகுக்கும் போதே கல்வியை அடிப்படை உரிமைகளில் ஒன்றாக சேர்க்காமல் கவனமாக தவிர்த்துவிட்டது இந்திய அரசு. தற்போது, புதிய கல்வி கொள்கை கொண்டுவருவதன் மூலம் கல்வியையே சரக்காக்கிவிட்டது. அன்று பார்ப்பன மனுநீதி சூத்திரர்களுக்கு கல்வி உரிமையை மறுத்தது. இன்று ஏழைகளுக்கு கல்வி உரிமை மறுக்கப்படுகிறது. ஆம், புதிய கல்விக் கொள்கை என்பதே அந்த புதிய மனுநீதி! அதனால், கல்வி என்ற அடிப்படை உரிமைப் போராடி பெறவேண்டியுள்ளது.

மாணவர்கள் – விரிவுரையாளர்கள் இணைந்து போராட வேண்டும்!

தற்போது கௌரவ விரிவுரையாளர்கள் நடத்தி வரும் போராட்டம் அவர்கள் மட்டும் ஈடுபடுவதாக உள்ளது. இந்த வரம்பைத் தாண்டி போராட்டங்கள் முன்னெடுக்கப்பட வேண்டும். குறிப்பாக, கௌரவ விரிவுரையாளர்கள் மீதான அடக்குமுறை என்பது கல்வி தனியார்மயமாக்கத்தின் ஒரு பகுதி என்பதை அவர்கள் மாணவர்களுக்கும் பெற்றோருக்கும் உணர்த்த வேண்டும். அந்தவகையில் உடனடியாக பாதிக்கப்படுகின்ற இவர்களுடன் இணைந்து போராட்டங்கள் முன்னெடுக்கப்படவேண்டும்.

மாணவர்களை இணைத்துக் கொண்டு போராடினால் கல்லூரி நிர்வாகம் (தமிழக அரசு) கடுமையான நடவடிக்கை எடுக்கும், மாணவர்களின் எதிர்காலம் பாதிக்கப்படும் போன்ற வாதங்கள் எல்லாம் பத்தாம்பசலித்தனமானவை மட்டுமல்ல, மாணவர்களுக்கு இழைக்கப்படும் துரோகம். கௌரவ விரிவுரையாளர்களின் வகுப்புப் புறக்கணிப்புப் போராட்டத்தால் மாணவர்களுக்கு பாடங்கள் நடத்துவது அறவே நின்றுவிட்டது என்பதுதான் உண்மை. இதற்காக கேள்வி கேட்கும் மாணவர்களை கல்லூரி நிர்வாகங்கள் மிரட்டுகின்றன. இதன் மூலம், மாணவர்களை போராட்டத்தில் இறங்கிவிடாமல் தடுத்துவிடலாம் என பகல்கனவு காண்கின்றன.

தங்களது எதிர்காலமே அழியும் நிலையில் இருக்கும் மாணவர்களுக்கு அதனை உணர்த்தி, கல்வி தனியார்மயத்திற்கு எதிராக போராட்டங்களை வளர்த்தெடுக்க வேண்டியது, ஆசிரியர்களின் கடமை. தாங்கள் மட்டும் அரசிடம் சில சலுகைகளை வாங்கிவிடலாம் என்பதற்கான எந்த வாய்ப்பையும் இந்த அரசு விரிவுரையாளர்களுக்கு விட்டுவைக்கவில்லை என்பதையே, மேற்கண்ட தமிழக அரசின் அணுகுமுறைகளும் நீதிமன்ற உத்தரவுகள் செல்லாக்காசாகிவிட்டதும் நமக்கு உணர்த்துகின்றன.
தற்போதைய கல்வித் துறை கட்டமைப்பே காலாவதியாக இருக்கும் நிலையில் கௌரவ விரிவுரையாளர்களின் பணி நிரந்தர உரிமையை நிலைநாட்டவும் மாணவர்களுக்கு கல்வி உரிமையை நிலைநாட்டவும் இந்தச் சட்டமும் நீதியும் இலாயக்கற்றதாகிவிட்டதை உணர்த்த வேண்டும். தீர்வை இந்த அரசமைப்புக்கு வெளியே நிலைநாட்ட வேண்டும். ஏற்கனவே, சமச்சீர் கல்விக்காகவும், டாஸ்மாக்கை மூடுவதற்காகவும் மாணவர்கள் நடத்தியப் போராட்டங்கள் இதற்கான முன்னுதாரணமாகும். அந்தவகையில் மற்றொரு எழுச்சிக்குத் தயாராவோம்!

வெல்லட்டும், கௌரவ விரிவுரையாளர்கள் போராட்டம்!

பத்திரிகை செய்திகள்

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]

புஜ செய்தியாளர்,
கிருஷ்ணகிரி.