இரயில்வே பட்ஜெட் : முதலாளிகளுக்கா மக்களுக்கா ? சிறப்புக் கட்டுரை

0

இரயில்வே பட்ஜெட்: தொழிலாளர்களுக்கு எலும்புத்துண்டு! – முதலாளிகளுக்கு ’சூப்’பு!! – பொதுமக்களுக்கு ஆப்பு!!!

டந்த பிப்ரவரி மாதக் கடைசியில் 2016-2017-ம் ஆண்டுக்கான இரயில்வே பட்ஜெட் வெளியிடப்பட்ட போது பத்திரிக்கைகளும், பொருளாதார மேதைகளும் ஆகா, ஓகோவென புகழ்ந்தனர். குறிப்பாக, பயணச்சீட்டு விலை கூட்டப்படவில்லை என்ற அறிவிப்பு தான் சாதாரண மக்களின் வரவேற்பைப் பலமாகப் பெற்றுள்ளது. எனினும் உண்மை நிலை என்ன?

பயணிகள் இரயில் கட்டணம் மற்றும் சரக்கு இரயில் கட்டணம்:

ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு
ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு

கடந்த இரண்டு ஆண்டுகளாகவே, மோடி அரசு 3 மாதங்களுக்கு ஒருமுறை இரயில் கட்டணத்தை நேரடியாகவும், மறைமுகமாகவும் சிறிது சிறிதாக அதிகரித்து வந்துள்ளது என்பது அடிக்கடி இரயிலில் பயணம் செய்பவர்கள் அறிந்த உண்மை. உதாரணத்திற்குக் கடந்த டிசம்பர் மாதத்தில் தட்கல் கட்டணத்தை உயர்த்தினார்கள். அவ்வளவு ஏன்? பட்ஜெட் வெளியாவதற்கு சில நாட்களுக்கு முன்பு கூட, நூற்று தொண்ணூற்றொன்பது கிலோமீட்டர் தூரத்திற்குள் பயணம் செய்பவர்கள், பயணச்சீட்டு வாங்கிய நேரத்தில் இருந்து மூன்று மணி நேரத்திற்குள் இரயில் ஏறத் தவறினால் மீண்டும் புதிய பயணச்சீட்டு எடுக்க வேண்டும் என்று இரயில்வேத்துறை உத்தரவிட்டிருக்கிறது.

கடந்த ஆண்டில் மட்டும், சிறுவர்களுக்கான அரைக் கட்டணச் சலுகை பறிப்பு, தட்கல் கட்டண அதிகரிப்பு, சுவிதா வண்டிகளில் முதியோருக்கான சலுகைகளை ஒழிப்பது, முன்பதிவை ரத்து செய்யும் பட்சத்தில் திரும்பத் தரும் தொகையில் பிடித்தத்தை அதிகரிப்பது என பல வகைகளில் மக்களைக் கொள்ளையடித்திருக்கிறார்கள். ஆனால் ஊடகங்களும் பொருளாதார ’மேதை’களும் ஏற்கனவே புழக்கடை வழியே நுழைக்கப்பட்டக் கட்டணக் கொள்ளைகள் குறித்து மூச்சுக் கூட விடாமல் நேரடியான கட்டணக் கொள்ளை அறிவிக்கப்படாததை எண்ணி மகிழ்கின்றனர்.

பதம் பார்க்க வருகிறது இரயில்வே:

licensed-railway-porterஇரயிலில் பயணிக்கும் பயணிகளுக்கு பகுதிக்கேற்ற உள்ளூர் உணவுகளையும், ஆன்லைனில் உணவு ஆர்டர் செய்து சாப்பிடும் வசதியான இ-கேட்டரிங் சேவையையும் வழங்குவதற்காக பல்வேறு தனியார் உணவு நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டிருப்பதாக இரயில்வேத்துறை அமைச்சர் அறிவித்திருக்கிறார். கடந்த சில ஆண்டுகளாகவே ’மீல்ஸ் ஆன் வீல்ஸ்’ போன்ற தனியார் நிறுவனங்கள் தான் இரயிலிலேயே உணவைத் தயாரித்து (பேண்ட்ரி கார்) விற்பனை செய்து வருகின்றன. இந்த உணவுப் பொருட்களின் தரம், சுவை, அளவு குறித்துப் பயணிகள் காறி உமிழாத நாளே கிடையாது.

மோசமான உணவுத் தரம் குறித்து எழுப்பப்படும் புகார்களை மயிரளவிற்கும் கண்டுகொள்ளாத இரயில்வேத் துறை, புதியதாக வரப்போகும் மெக்டொனால்ட்ஸ், கே.எஃப்.சி போன்றவற்றையும் கண்டுகொள்ளப் போவதில்லை. ஏற்கனவே கொள்ளையடிக்கும் தனியார் நிறுவனங்களை விட அதிகமான விலையில் அதே கேவலமான தரத்தோடு நம்மை கொள்ளையடிக்க வருகின்றன என்பதைத் தாண்டி இத்திட்டத்தால் வேரொன்றும் நிகழப் போவது இல்லை. ஏற்கனவே உணவுப் பொருட்களின் விலை அதிகமாக இருப்பதால், பயணிக்கும் பலரும் அரை வயிற்றுக்குத் தான் உண்கின்றனர். இனி இத்தகைய புதிய நிறுவனங்களின் வரவால் பட்டினியோடும், கால் வயிற்று உணவோடும் தான் பயணிக்கும் நிலை ஏற்படும். ஊடகங்களால் கொண்டாடப்படும் இத்திட்டம் பயணிகளின் சுவை மொட்டுகளைப் பதம் பார்க்க கொண்டு வரப்படவில்லை. பயணிகளின் மணிப்பர்சைப் பதம் பார்க்கவே கொண்டு வரப்படுகின்றது

’சுவச்’சு பாரத்:

indian-train-toiletஉணவுக்கு அடுத்தபடியாக இரயில்களில் மோசமான நிலையில் இருப்பவை கழிப்பறைகள் தான். இப்போது அப்பிரச்சினையை ஒரே எஸ்.எம்.எஸ். மூலம் தீர்த்து விடலாம் என்கிறது இரயில்வே அமைச்சகம். இரயில்களின் பராமரிப்புப் பணிகளும் தனியாரிடமே ஒப்படைக்கப்பட்டிருக்கின்றன. இரயில் பெட்டிகளை, கிளம்பும் இடத்திலும், போய்ச் சேரும் இடத்திலும் பெயருக்கு சுத்தம் செய்துவிட்டு கணக்கு காட்டும் இத்தனியார் நிறுவனங்கள் தான் இரயிலை அனைத்து நேரத்திலும் சுத்தமாகப் பராமரிப்பதற்குப் பொறுப்பு.

பயணக் கட்டணம் என்ற பெயரில் இரயில்வேத்துறை அடிக்கும் கட்டணக் கொள்ளையில் கக்கூசைக் கூட சுயமாக ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் சுத்தம் செய்ய வக்கில்லாமல், கக்கூஸ் நாறினால் எஸ்.எம்.எஸ் அனுப்பலாம் என்றும், அதன் பிறகு பராமரிக்க வேண்டிய தனியார் நிறுவனம் வந்து கக்கூசை கழுவும் என்றும் கூறுவது வக்கிரத்தின் உச்சகட்டம். காசையும் கொடுத்து விட்டு, இது சூப்பர் ஸ்கீம் என்று கைதட்டும் விசிலடிச்சான் குஞ்சுகள் இருக்கும் வரை இது போன்ற பல திருப்பதி மொட்டை சமாச்சாரங்களை இரயில்வே அமைச்சகத்திடம் இருந்து எதிர்பார்க்கலாம்.

ஹை-டெக் – ரயில் நிலையங்கள்:

manual-scavenging
கையால் மலம் அள்ளும் அவலத்தை மாற்றாமல் வைஃபை வசதிக்கு அள்ளிக் கொடுக்கிறது இந்த மனுநீதி அரசு!

இந்த இரயில்வே பட்ஜெட்டில், இரயில் நிலையங்களில் வை-ஃபை வசதி ஏற்படுத்தப் போவதாக அறிவிப்பு வந்திருக்கிறது. இதற்காக கூகுள் நிறுவனம் ஏற்கனவே நூற்றுக்கும் மேற்பட்ட இரயில் நிலையங்களில் தனது வலையை விரித்து வைத்திருக்கிறது. டிஜிட்டல் இந்தியா என்னும் மோசடித் திட்டத்தின் கீழ் இதற்குள் நுழையப் போகும் கூகுள் போன்ற நிறுவனங்கள், முதலில் இலவச சேவையாக அறிமுகப்படுத்தி பின்னர் இதனை பணச் சேவையாக மாற்றும் சதித்திட்டத்தோடு காத்திருக்கின்றன. வங்கிகளில் ஏ.டி.எம் பயன்பாடு முதலில் இலவசமாக அறிமுகம் செய்யப்பட்டு, மக்களுக்கும் பழக்கப்படுத்தப்பட்டு பின்னர் அதற்கும் பணம் வசூலிக்கும் நடைமுறை கொண்டு வரப்பட்டதே இதற்கு நல்ல உதாரணம்.

வை-ஃபை, ஆன்லைன் புக்கிங் என்று ஹை-டெக் புரட்சி பேசும் இரயில்வே பட்ஜெட்டில் ஒரு ஓரத்தில் கூட இரயில் நிலையங்களில் தண்டவாளத்தில் மனித மலத்தை மனிதர்களே கையால் சுத்தம் செய்யும் அவலநிலை குறித்து பேசப்படவில்லை. ”மாட்சிமை பொருந்திய இந்திய வல்லரசில்”,”10,000 ஆண்டுகளுக்கு முன்பே விமானம் விட்ட ஞான பூமியில்” இத் தொழிலில் ஈடுபடுத்தப்பட்டுள்ள தாழ்த்தப்பட்ட மக்களின் துயரைப் போக்க ஒரு தொழில்நுட்பம் படைக்கக் கூட வக்கில்லையா என்ன? மனித மலத்தை மனிதனே அள்ளும் இழிநிலையை ஒழிக்க பல்வேறு போராட்டங்கள் நடத்தப்பட்டும், கண் துடைப்புச் சட்டங்களை இயற்றுவதைத் தவிர, வேறு எவ்வித நடவடிக்கைகளும், திட்டங்களும் இது நாள் வரையில் காங்கிரஸ் உள்ளிட்ட எந்த அரசாங்கமும் நடைமுறைப் படுத்தப்படவில்லை. ஹை-டெக் கனவான்களாகத் தங்களைப் பீற்றிக் கொள்ளும் பாஜக கும்பல் மனித மலத்தை மனிதனே அள்ளும் விசயத்தில் மட்டும் கள்ள மவுனத்தோடு தனது மனுநீதிப் பூணூலை உருவிக்காட்டுகிறது.

இரயில்வேத் துறை நவீனமயமாக்கம் – விரிவாக்கம்:

இரயில்வேத் துறையை நவீனமயமாக்கவும் விரிவாக்கவும் மிகப்பெரிய திட்டங்களை மத்திய அரசு கொண்டு வந்திருப்பதாகவும் முதலாளிகள் பாராட்டியிருக்கின்றனர். அவற்றில் முக்கியமானவை பின்வருமாறு:

1. சரக்குகளை இருப்பு வைக்க ரயில்வேத் துறை இரண்டு பிரத்யேக கிடங்குகளை உருவாக்கும்.

2. இந்தியாவிலேயே முதன் முறையாக, சென்னையில் கும்மிடிப்பூண்டி அருகில் ரயில் ஆட்டோ ஹப் அமைக்கப்படும்.

3. டில்லி முதல் சென்னை வரை, மும்பை முதல் கரக்பூர் வரை, கரக்பூர் முதல் விஜயவாடா வரை என மூன்று தனி சரக்கு இரயில் போக்குவரத்துப் பாதை அமைக்கப்படும்.

4. இரயில் நிலையங்களை, துறைமுகங்களுடன் இணைக்கும் பணி விரிவுபடுத்தப்படும்.

ஒரு நாட்டில் தொழில் வளர்ச்சி அடைய இரயில்வேத் துறை இவ்வளவு வேலைகளைச் செய்ய வேண்டும் என்று கூறிவிட்டு இவை அனைத்தும் பொதுத்துறை தனியார் கூட்டு நிறுவனங்களின் (PPP) மூலம் செயல்படுத்தப்படும் என்ற அறிவிப்பது எதற்காக? உலகம் முழுக்க பொதுத்துறை தனியார் கூட்டு மூலம் உருவாக்கப்பட்ட அனைத்து திட்டங்களும் தனியாருக்கு இலாபத்தை அள்ளித் தந்து பொதுத்துறை நிறுவனங்களை திவாலாக்குவதாகவும், பொதுமக்களைக் கொள்ளையடிக்கும் திட்டங்களாகவுமே இருந்திருக்கின்றன என்பது கண்கூடு.

பொதுத்துறை தனியார் கூட்டு (PPP) – அரசு விளக்குப் பிடிக்க தனியார் அடிக்கும் கொள்ளை:

உதாரணத்திற்கு வேறெங்கும் செல்ல வேண்டாம். மும்பை பெருநகர அபிவிருத்திக் கழகத்துடன் அனில் அம்பானியின் ரிலையன்சு உட்கட்டமைப்பு நிறுவனமும், வெயோலியா போக்குவரத்து நிறுவனமும் இணைந்து ”மும்பை மெட்ரோ ஒன்” என்னும் நிறுவனம் பொ.த.கூ (PPP) அடிப்படையில் உருவாக்கப்பட்டது. மும்பை மெட்ரோ ரயில் திட்டத்தை செயல்படுத்தவே மெட்ரோ ஒன் நிறுவனம் உருவாக்கப்பட்டது. தளவாடப் பணிகளை இரண்டு ஆண்டுகளில் முடிப்பதாகக் கூறிப் பொறுப்பேற்ற ரிலையன்ஸ் நிறுவனம் ஆறு ஆண்டுகளுக்கு இத்திட்டத்தை இழுத்தடித்து, செலவை மும்மடங்காகக் கணக்குக் காட்டி, நிர்ணயித்த ’ரூ 9 முதல் ரூ 13 வரை’ என்ற கட்டண அளவை விட மூன்று மடங்கு அதிகமாக்கி ’ரூ 10 முதல் ரூ 40 வரை’ என்ற கட்டணத்தை நிர்ணயித்தது. உண்மையில் சொல்லப் போனால் ரிலையன்ஸ் தான் சொன்னபடி இரண்டு ஆண்டுகளில் மெட்ரோவை கட்ட முடியாத தனது கையாலாகாத்தனத்திற்கான தண்டனையை மக்கள் மீது சுமத்தியிருகிறது. இதற்குக் கண்டனம் தெரிவித்த அப்போதைய மகராஷ்டிர முதல்வர் பிரித்திவிராஜ் சவுகானை மயிரளவிற்கும் கூட மதிக்காமல் தான் நிர்ணயித்த கட்டணத்தில் உறுதியாக இருந்தது ரிலையன்ஸ் நிறுவனம். வேறு வழியின்றி இன்றும் மும்பை மக்கள் அந்தத் தொகையைத் தான் கட்டி பயணிக்கின்றனர்.

தற்போது சென்னையில் ஒரு பகுதியில் ஓடிக் கொண்டிருக்கும் மெட்ரோ ரயிலின் கதையும் இது தான். சென்னை மெட்ரோ ரயில் திட்டத்திற்கு, மத்திய மாநில அரசுகளின் பங்களிப்போடு ஒரு ஜப்பானிய வங்கியும் (Japan International Corporation Agency) கடன் கொடுத்துள்ளது. 14,600 கோடி ரூபாய் திட்ட மதிப்பீட்டில் செயல்படுத்தப்பட்டிருக்கும் இத்திட்டத்தில் ஜப்பானிய வங்கியின் பங்கு வெறும் கடன் கொடுப்பது மட்டுமல்ல. அதனுடைய நிபந்தனைகளை ஏற்றுக் கொண்டு, அவர்கள் கூறும் இடத்திலிருந்து தான் கட்டுமானப் பொருட்களை வாங்க வேண்டும். உதாரணமாக தரமான மெட்ரோ ரயில் பெட்டிகளை ஒப்பீட்டளவில் குறைவான விலையில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த நிறுவனங்கள் தயாரித்தாலும் பிரான்சைச் சேர்ந்த பன்னாட்டு நிறுவனமான அல்ஸ்டோமிடமிருந்து தான் வாங்க வேண்டும் என ஜப்பானிய வங்கி நிபந்தனைகளை விதித்திருக்கிறது. அதன் அடிப்படையிலேயே அல்ஸ்டோமிலிருந்து மெட்ரோ ரயில் பெட்டிகள் அதிக விலைக்கு வாங்கப்படுகின்றன. இந்தக் கூடுதல் செலவு, அதன் மீதான வட்டி போன்றவை தான் அதிகக் கட்டணமாக நம் மீது சுமத்தப்படுகிறது. இத்தகைய பகிரங்கக் கொள்ளைகளை, பன்னாட்டு, உள்நாட்டு தொழிற்கழகங்கள் சட்டப்பூர்வமாக நடத்துவதற்கு ஏற்றவாறு கடந்த 2002-ம் ஆண்டு பாஜக அரசு மெட்ரோ ரயில் சட்டத்தை இயற்றியது என்பது குறிப்பிடத்தக்கது.

மும்பை மெட்ரோவின் நிர்வாகப் பொறுப்பில் உள்ள மெட்ரோ ஒன் நிறுவனத்தை ரிலையன்ஸ் கட்டுப்படுத்துகிறது. சென்னை மெட்ரோவை ஜப்பானிய வங்கி கட்டுப்படுத்துகிறது. இது தான் பொதுத்துறை தனியார் கூட்டு திட்டங்களின் நிலைமை. இவை ஆங்காங்கே எடுக்கப்பட்ட உதாரணங்கள் மட்டுமே. பொதுத்துறை தனியார் கூட்டில் நடக்கும் கொள்ளையைப் பற்றி விரிவாக எழுத வேண்டும் என்றால் தனித் தொடராக வெளியிட வேண்டும். பொதுத்துறை- தனியார் கூட்டுத் திட்டங்களில் அரசு மக்களின் வரிப்பணத்தைக் கணிசமாகக் கொட்டுவதோடு, இத்திட்டங்களுக்கான நிலத்தை மக்களிடமிருந்து பறிப்பதற்கான அடியாளாகவும் செயல்பட்டு தனியார்களின் கொள்ளை இலாபத்திற்கு துணை நிற்கிறது என்பதே உண்மை.

பொதுத்துறை நிறுவனங்களை கபளீகரம் செய்யக் காத்திருக்கும் ரயில்வே அமைச்சகம்:

Porterடில்லி-சென்னை, மும்பை-கோரக்பூர்-விஜயவாடா வழித்தடங்களில் பிரத்யேக சரக்குப் போக்குவரத்துப் பாதை அமைப்பதற்காக பிரான்ஸ் மற்றும் ஸ்பெயினைச் சேர்ந்த நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருப்பதாக அரசுத் தரப்பு தெரிவிக்கிறது. அதோடு இத்திட்டங்களுக்கான நிலத்தை கையகப்படுத்த மாநில அரசுகள் ஒத்துழைக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளதாகவும், பொதுத்துறை காப்பீட்டு நிறுவனமான எல்.ஐ.சி இத்திட்டத்திற்கு 1.5 இலட்சம் கோடி கொடுக்க முன் வந்திருப்பதாகவும், பற்றாக்குறைக்கு இரயில்வேயின் சொத்துக்களை விற்க இருப்பதாகவும் இரயில்வே அமைச்சகம் அறிவித்திருக்கிறது.

அனைத்து இரயில்வே பொதுத்துறை தனியார் கூட்டுத் திட்டங்களுக்கும் பொதுத்துறை வங்கிகள் கடன் வழங்க வேண்டும் எனவும் மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இதற்காகவே பெருமுதலாளிகள் வாங்கி ஏமாற்றிய வாராக் கடன் சுமையிலிருந்து பொதுத்துறை வங்கிகளை மீட்க 2016-17-ம் ஆண்டுக்கான பொது பட்ஜெட்டில் பல ஆயிரம் கோடி மக்கள் பணத்தை மத்திய அரசு கொட்டியிருப்பது குறிப்பிடத்தக்கது. இனி வரும் ஆண்டுகளில் தனியார் நிறுவனங்கள், அசுரவேகத்தில் இரயில்வேத் துறையை விழுங்க தற்போது தரப்பட்டிருக்கும் ஸ்டார்ட்டர் ’சூப்’பு (Starter Soup) தான் மக்கள் வரிப் பணத்தில் வங்கிகளை வாராக்கடன் சுமையிலிருந்து மீட்கும் நடவடிக்கை.

மக்களை ஒட்டச் சுரண்டும் தனியார் கொள்ளைக்குக் காவலனாகவும், மக்களிடம் இருந்து நிலத்தை அபகரிக்கும் அடியாளாகவும் வேலை பார்க்கும் இந்த அரசு, அதோடு நிற்காமல் நமது தொழிலாளர் வைப்பு நிதி, பொதுத்துறை வங்கிகளில் உள்ள நமது சேமிப்பு போன்றவற்றை அள்ளிக் கொடுத்தே தனியார் நிறுவனங்களை இலாபத்தால் குளிப்பாட்டுகிறது. எதிர்த்துக் கேட்டால் நம்மை வளர்ச்சிக்கு எதிரானவர்கள் என்று கூக்குரலிடுகிறது.

புட்டத்தில் தீ பற்றி எரியும் போதும் முன்னால் தொங்கும் கேரட்டின் கனவில் ஓடும் கிழட்டுக் குதிரை:

railway-budget-cartoonதனியார்மயத்தை ஒருபுறத்தில் தீவிரப்படுத்திக் கொண்டு மறுபுறத்தில் தொழிலாளர் அமைப்புகளின் வாயை மூட 7-வது சம்பளக்கமிசன் என்னும் அறிவிப்பை வெளியிட்டுள்ளது இரயில்வே பட்ஜெட். இரயில்வே தொழிற்சங்கங்களோ 7-வது சம்பளக் கமிசன் அமல்படுத்தப்படும் கனவில் எதைப் பற்றியும் கவலைப்படாமல் அமைதியாக இருக்கின்றன. 7-வது சம்பளக்கமிசன் பரிந்துரை நடைமுறைப்படுத்தப் படுமோ இல்லையோ இனி இந்திய இரயில்வேத்துறை தொழிற்சங்கங்களின் வசம் இல்லை என்பது மட்டும் உறுதி. அதனால் தான் தொழிற்சங்கங்கள் மவுனித்திருக்கும் போதும் உணர்வுள்ள எந்தத் தொழிலாளிக்கும் சிவப்பு நிறத்தைக் கண்டு போராட்ட ஞாபகம் வந்து விடக்கூடாது என்று போர்ட்டர்களின் சிவப்புச் சட்டையை மாற்றப் போவதாக சுரேஷ் பிரபு அறிவித்திருக்கிறார் போலும். நல்லவேளை இரயிலை நிறுத்தும் சிவப்புக் கொடியை மாற்றச் சொல்லவில்லை. அடுத்த பட்ஜெட் வரை சிவப்புக் கொடி மட்டும் தப்பியது. (பச்சைக்கொடி பாகிஸ்தான் அடையாளம் என்று இந்த ‘தேச’ பக்தர்கள் அடுத்த பட்ஜெட்டில் அதையும் மாற்றலாம்! யார் கண்டது?). தொழிற்சங்கங்களோ, வாய்க்கு எட்டாமல் கட்டப்பட்ட ஏழாவது சம்பளக்கமிசன் என்னும் கேரட்டை கவ்வும் நோக்கில் ஓடும் ஐந்தறிவு குதிரையின் நிலையில் தங்களை நிலைநிறுத்திக் கொண்டிருக்கின்றன.

பயணிகளுக்கு வைக்கப்போகும் ஆப்பிற்கான இரயில்வே அமைச்சகத்தின் முன்மொழிதல்:

மக்களுக்கான இரயில்வே பட்ஜெட் இது என்று ஊடகங்கள் மூலமும், பொருளாதார ’மேதை’கள் மூலமும் மக்களை இளித்தவாயர்கள் ஆக்கிய இரயில்வே அமைச்சகம், தனது பட்ஜெட் அறிவிப்பிலேயே, விரைவில் பயணிகளுக்கு ஆப்பு வைக்கப்படும் என்னும் விதமாக சூசக தகவல்களையும் வெளியிட்டுள்ளது. இரயில்வே பட்ஜெட்டில் 7-வது சம்பளக்கமிசனின் பரிந்துரைப்படி சம்பளம் வழங்கினால் ரூ 50,000 கோடி அதிக செலவு என்றும், குறைவான இரயில் கட்டணத்தினால் (இப்போது இருக்கும் கட்டணமே குறைவாம்) ஆண்டுக்கு ரூ 30,000 கோடி இழப்பு ஏற்படுவதாகவும் பஞ்சப் பாட்டை பாடியிருக்கும் அதே சமயத்தில் 2016-17 நிதி ஆண்டிற்கு கடந்த நிதி ஆண்டை விட 10.1% அதிகமாக வருவாய் ஈட்டத் திட்டமிடப்பட்டிருப்பதாகக் கூறியுள்ளது. ஆனால் வருவாய்க்கான மூலங்களைப் பற்றி வாய் திறக்கவில்லை என்பது கவனிக்கத்தக்கது. செலவு அதிகரித்திருக்கிறது, வருவாயும் அதிகரிக்க வேண்டும் என்றால் தற்போதுள்ள ஒரே வழி பயணிகளிடம் இருந்து நேரடியாகவும் மறைமுகமாகவும் கட்டணக் கொள்ளை நடத்துவது தான். அடுத்து நடைபெறவிருக்கும் ஐந்து மாநிலத் தேர்தல்கள் முடிந்தவுடன் நேரடி மற்றும் மறைமுகக் கட்டண உயர்வு இடியாக மக்கள் தலையில் இறங்கும் என்பதையே தனது பஞ்சப்பாட்டின் மூலம் மக்களுக்கு இரயில்வே அமைச்சகம் அறிவுறுத்துகிறது.

தொடரவிருக்கும் பகற்கொள்ளைக்கு சென்ற ஆண்டே சமர்ப்பிக்கப்பட்ட செய்முறை விளக்கம்:

விவேக் தெப்ராய்
விவேக் தெப்ராய்

மோடி என்றால் வளர்ச்சி என்று கூவிய நடுத்தர வர்க்க, குட்டிமுதலாளிகள் எல்லாம் வளர்ச்சியின் பெயரில் இரயில் கட்டண உயர்வு மற்றும் பிரீமியம் இரயில்கள், டைனமிக் கட்டண அறிவிப்புகள் வெளியான உடனேயே மோடியை விட மிகப்பெரிய மவுனிகளானது தனிக்கதை. அத்தகைய சிறப்புமிக்க ’வளர்ச்சிக்கு’ இரயில்வேத்துறையை இட்டுச் செல்லும் பொருட்டு மோடி அரசால் ஆட்சியில் அமர்ந்தவுடன் அமைக்கப்பட்ட குழு தான் விவேக் தெப்ராய் குழு. இரயில்வேத் துறையை எப்படி வளர்ச்சிப் பாதையில் எடுத்துப் போவது, அதாவது மக்களிடம் இருந்து எப்படி கட்டணக் கொள்ளையடிப்பது என்பது குறித்த காலக்கெடுவுடன் கூடிய செய்முறை விளக்கத்தை பரிந்துரைகளாக விவேக் தெப்ராய் குழு அளித்துள்ளது. அதன் முக்கியமான பரிந்துரைகளில் சில பின்வருமாறு:

1. இரயில்வேத் துறையில் சரக்கு ரயில்களை விடும் பொறுப்பை தனியாரிடம் விட்டுவிட வேண்டும். (ஏனெனில் அது மட்டும் தான் இரயில்வேக்கு 65% வருமானத்தை ஈட்டித் தரும் இலாபம் தரும் போக்குவரத்து)

2. அரசு இரயில்வேத்துறையில் தண்டாவாளம் போடுவது, சிக்னல் பராமரிப்பு, இரயில் நிலைய பராமரிப்பு ஆகியவற்றைத் தன் கையில் வைத்துக் கொண்டு, பயணிகள் இரயில் போக்குவரத்தையும் படிபடியாக தனியார் கையில் விட வேண்டும்.

3. அவ்வாறு தனியார் கையில் சரக்கு மற்றும் பயணிகள் இரயில் போக்குவரத்தை ஒப்படைக்கும் பட்சத்தில் கட்டண நிர்ணயிப்பில் அரசு தலையிடக் கூடாது. அதை சந்தை நிலவரத்திற்கேற்ப தனியாரே தீர்மானிப்பர். (தற்போதைய பெட்ரோல், டீசல் விலை போல)

4. அரசின் எந்த உறுப்பும் (நாடாளுமன்றம், நீதிமன்றம் உட்பட) தலையிட இயலாத வகையில் தனியார் நிறுவனங்களின் பிரதிநிதிகளும், இரயில்வேத் துறையின் பிரதிநிதிகளும் மட்டும் உறுப்பினராக இருக்கும் இரயில்வே ஆணையம் ஒன்றை அமைக்க வேண்டும். அதுவே தனியார் மற்றும் அரசுத்துறைக்கு இடையிலான பிரச்சினைகளை தீர்த்து வைக்கும்.

licensed-porter5. இப்போது ரயில்வேத்துறை பராமரித்து வரும் ரயில்வே பள்ளிகள், மருத்துவமனைகள், ரயில்வே பாதுகாப்புப் படை போன்றவற்றை தனியாரிடம் ஒப்படைத்துவிட வேண்டும். அவற்றின் நிர்வாகத்தில், கட்டண விதிப்பில் அரசு தலையிடக் கூடாது.

6. அடுத்த 4 ஆண்டுகளில் ஓய்வு பெறவுள்ள 2.25 லட்சம் தொழிலாளர்களுக்கு மாற்றாக புதிய தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்தக்கூடாது

7. ஓய்வுபெறும் ஊழியர்கள் மற்றும் பணியின்போது மரணம் அடைந்தவர்களின் குடும்பங்களுக்கு பணிக்கொடை உள்ளிட்ட நிதியை பணமாகத் தராமல், முப்பது ஆண்டுகள் கழித்து மட்டுமே பணமாக்கப் படக்கூடிய ’புல்லட் பாண்ட்’டாகத் தரவேண்டும்.

இது போன்று வெளிப்படையாகவே மக்களையும் தொழிலாளர்களையும் சுரண்டும் செயல்முறையை பரிந்துரைகளாக வெளியிட்டு அவற்றை அமல்படுத்துவதற்கான கால இலக்கையும் நிர்ணயித்திருக்கிறது விவேக் தெப்ராய் குழு. அதையே கடந்த பட்ஜெட்டிலிருந்து பளபளப்பான பெயர்களில் பல்வேறு திட்டங்களின் மூலம் நடைமுறைப்படுத்தி வருகிறது மோடி அரசு.

என்ன செய்யப் போகிறோம்?:

unhygenic-indian-railway-2தற்போது அறிவிக்கப்பட்டிருக்கும் இரயில்வேத் துறை வளர்ச்சித் திட்டங்கள் உண்மையில் இந்தியாவின் சுதேசி பொருளாதாரத்தை ஊக்குவிக்கும் வகையிலோ இல்லை பெரும்பான்மை மக்களின் நலன்களின் பாற்பட்டோ தீர்மானிக்கப்பட்டிருக்கிறதா என்பது ஒரு புறம். மறுபுறம், இந்தத் திட்டங்களைக்கூட இந்திய இரயில்வேத் துறையில் இருக்கும் கட்டமைப்பு வசதிகள் மற்றும் மனித வளத்தின் மூலமும் மற்ற இந்திய பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் வங்கிகளின் பங்களிப்பு மூலமும் எளிதில் நடைமுறைப்படுத்தத் தகுந்தவையே. ஆயினும் புகுத்தப்பட்டிருக்கும் தனியார்மய, தாராளமய, உலகமயக் கொள்கைகளின் விதிப்படி அவ்வாறு செய்வது மாபெரும் குற்றமாகும்.

எனவே மோடி தலைமையிலான அமெரிக்க அடிமைகள் அதனைக் கனவிலும் செய்ய முடியாது. மாறாக பல ஆண்டுகளாக தொழிலாளர்கள் இரத்தமும் வியர்வையும் சிந்தி உழைத்து உருவாக்கிய பொதுத்துறை நிறுவனங்களையும், விவசாயிகளிடம் இருந்து அடிமாட்டு விலைக்கு பிடுங்கப்பட்ட நிலங்களையும் தனியாருக்கும் பன்னாட்டு முதலாளிகளுக்கும் தாரைவார்க்கும் தரகு வேலையையே தற்போது பா.ஜ.க அரசும் அதற்கு முன்னால் காங்கிரஸ் அரசும் செய்து வருகின்றன. அதே வேளையில் தேசத்தை அன்னிய, தனியார் முதலாளிகளுக்குக் கூட்டிக் கொடுக்கும் தனது வேலையை ‘வளர்ச்சி’ என்று கூறி நம்மை ஏய்க்கப் பார்க்கின்றன. நமது உழைப்பைக் கபளீகரம் செய்யும் தனியார்மய, தாராளமய, உலகமய ஓநாய்களின் வெறியாட்டத்தை எவ்வாறு முறியடிக்கப் போகிறோம்?.

தேச பக்தி, தேச வளர்ச்சி என்ற மாயவாதங்களில் சிக்காமல் எதார்த்த நிலையில் இருந்து அணுகும் போதே அரசு அறிவிக்கும் திட்டங்களின் பின்னணியைப் புரிந்து கொள்ள முடியும். நமக்கு எதிரான சதி வலை வளர்ச்சி என்ற பெயராலேயே பின்னப்படுகிறது என்பதை உணரும்போது தான் விடிவுகாலம் பிறக்கும். தனியார்மய தாராளமயக் கொள்கைகளுக்கேற்ப மக்கள் விரோதமாக மாறியிருக்கின்ற, ஆள அருகதையற்ற இந்த அரசுக் கட்டமைப்பிற்கு எதிராகப் போராடும் போது தான் வெற்றி நம் பக்கம் உறுதியாகும்.

– கதிர்

சந்தா செலுத்துங்கள்

மக்கள் பங்களிப்பின்றி ஒரு மக்கள் ஊடகம் இயங்க முடியுமா? வினவு தளத்திற்குப் பங்களிப்பு செய்யுங்கள்.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க