Friday, September 30, 2022
முகப்பு மறுகாலனியாக்கம் தனியார்மயம் - தாராளமயம் - உலகமயம் மோடி அரசின் பட்ஜெட் முதல் மரியாதை யாருக்கு ? பி. சாய்நாத்

மோடி அரசின் பட்ஜெட் முதல் மரியாதை யாருக்கு ? பி. சாய்நாத்

-

இது விவசாயிகளுக்கு ஆதரவானது என்றால்….? பி.சாய்நாத்

ம், இனிமேல் அப்படித்தான். இந்த வருடத்திலிருந்து மத்திய அரசின் நிதி நிலை அறிக்கையில் “விட்டுக் கொடுக்கப்பட்ட வருவாய் பட்டியல்” என்பதே இருக்காது.

சொல்லப் போனால் பெருநிறுவனங்களுக்கு வருமான வரி, கலால் வரி, சுங்க வரி என்ற வகையில் ரூ. 5,51,000 கோடி தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. எப்போதும் போல பணக்காரர்களுக்கு பலனளிக்கும் முதல் மரியாதை இது. கடந்த ஆண்டு விட்டுக் கொடுத்த தொகையான ரூ. 5,00,823 கோடியை விட இது அதிகம். ஆனால் இனிமேல் அவற்றை ” விட்டுக்கொடுக்கப்பட்ட வருவாய்” என்று சொல்ல அனுமதிக்கப்பட மாட்டீர்கள். அவ்வாறு சொன்னால் நீங்கள் “தேச விரோதி” என்ற வளையத்திற்குள் கொண்டுவரப்படுவீர்.

“விட்டுக்கொடுக்கப்பட்ட” என்ற சொல் ஆளும் வர்க்கத்திற்கு சேதம் இழைப்பதாக இந்த ஆட்சியின் விளம்பர தூதர்களால் இனம் காணப்பட்டது. அது கார்ப்பரேட்டுகளுக்கு பெரும் அளவிலான இலவசங்கள் கொடுக்கப்படுவதை மக்களிடம் வெளிப்படுத்தி வித்தையை அம்பலப்படுத்தியது.

எனவே இந்த நிதிநிலை அறிக்கையைப் பொறுத்தவரை “விட்டுக்கொடுக்கப்பட்ட வருவாய்” என்பது ஒரே அடியாக கைவிடப்பட்டு விட்டது. அதற்குப் பதிலாக நமக்குக் கிடைத்திருப்பது”மத்திய வரி விதிப்பு அமைப்பில் வரிச்சலுகைகள் வருவாயில் ஏற்படுத்தும் தாக்கம் பற்றிய அறிக்கை’ என்பதுதான்.

captains-of-industries
எந்தக் கவலையும் இல்லை (பெரியஅளவிலான தொழிற்சாலை முதலாளிகளின் கூட்டமைப்பு மத்திய அரசின் நிதிநிலை அறிக்கை தாக்கலை பார்த்துக்கொண்டிருக்கும் காட்சி)

ஆகா! இது இன்னும் மிடுக்காக உள்ளது. ஆனால் விஷயம் அதேதான். பெரு (கார்ப்பரேட்) நிறுவனங்களுக்கான கடன் தள்ளுபடி தொடர்கிறது. தொகை இன்னும் அதிகம். 2005-06 முதல் இன்று வரை அதை கணக்கிட்டால் மொத்த தொகை 42 லட்சம் கோடி ரூபாயை தாண்டும். துர்நாற்றத்துக்கு எந்த பெயரிட்டாலும் அதன் வாடை குறைந்து விடப் போவதில்லை!

எடுத்துக்காட்டாக, கார்ப்பரேட் வருமான வரிகளை தள்ளுபடி செய்ததன் வாயிலாக வருவாயில் “தாக்கம்” என்பது ரூ. 68,711 கோடி. அதாவது கடந்த ஆண்டைக் காட்டிலும் ரூ. 3,644 கோடி அதிகம். தேசிய ஊரக வேலை வாய்ப்பு உறுதியளிப்புத் திட்டத்திற்கான ஒதுக்கீட்டில் ‘மகத்தான அதிகரிப்பு’ என்று சொல்லப்பட்ட ரூ 3,801 கோடியை விட பெரிய அளவில் குறைவு ஒன்றுமில்லை.

பின்னால் சொல்லப்பட்டது கோடிக்கணக்கான வறியவர்களின் வாழ்வாதாரம் சம்மந்தப்பட்டது, முன்னால் சொல்லப்பட்டது மிகச் சில கார்ப்பரேட் நிறுவனங்களின் வருவாய் தொடர்புடையது. இந்த நேரடி கார்ப்பரேட் வருமான வரி தள்ளுபடி என்பது விவசாயம் மற்றும் விவசாயிகள் நலனுக்காக ஒதுக்கீடு செய்யப்பட்ட ரூ 35,984 கோடியைவிட 91 சதவீதம் அதிகம்.

மேலும் அரசு தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதிமொழித் திட்டத்திற்கு ஒதுக்கப்பட்ட தொகையான ரூ 38,500 கோடி இதுவரையில்லாத அளவுக்கு அதிகம் என்று பொய்யாக சொல்லப்படுகிறது. உண்மை யாதெனில் 2006-ல் இந்தத் திட்டம் மிகச் சிறியதாக துவக்கப்பட்டபோது இதற்கு ஒதுக்கப்பட்ட தொகை ரூ 40,000 கோடி. திரு ப.சிதம்பரம் அதை பலவீனப்படுத்துவதற்காக கடும் முயற்சிகள் எடுக்க ஆரம்பித்தது வரை அது அந்த அளவிலேயே இருந்து வந்தது. இந்தத் திட்டத்திற்கான தொகை அதிகரிக்கப்பட்டதை பார்த்தால் பணவீக்கத்திற்கு தக்கவாறு அது சுருங்கிக் கொண்டே வந்துள்ளதை கவனிக்க முடியும்.

இன்னும் சொல்லப்போனால், ஊரக, கிராமப் பகுதிகளில் பாதிப்பு அதிகமாக உள்ளது என அரசே கூறும் இந்த ஆண்டில் இந்த ஒதுக்கீடு இயல்பாகவே அதிகரித்திருக்க வேண்டும். தேசிய ஊரக வேலைவாய்ப்பு உத்திரவாத திட்டம் படு மோசமாக செயல்படுத்தப்படும் மகாராஷ்டிர மாநிலத்தில் கூட மேலும் மேலும் அதிகமான வறியவர்கள் அதில் வேலை கோருகின்றனர். எப்படிப் பார்த்தாலும் இந்த பதிவுகளில் சொல்லப்படும் தொகைகளில் சுமார் ரூ 6,000 கோடி முந்தைய பாக்கிகளை தீர்க்கவே சரியாக இருக்கும்.

revenues-forgone-2016இந்த நிலையில்தான் இவற்றால் விவசாயிகளின் வருவாய் 2022-ல் இரட்டிப்பாக மாறும் என்ற கோமாளித்தனமான உரிமை கோரலும் முன்வைக்கப்படுகிறது. ஏறிவரும் விலைவாசியை சரிக்கட்டியபின் கிடைக்கும் உண்மையான வருவாயைச் சொல்கிறாரா நமது நிதியமைச்சர்? எவ்வாறு?

விவசாயிகள் சந்தித்து வரும் பிரச்சனை என்பது அரசின் கொள்கைகளால் விவசாயம் எப்படி சாத்தியமற்றதாக்கப்பட்டு விட்டது என்பதாகும்.

நிதியமைச்சர் அவரது கட்சியின் தேர்தல் வாக்குறுதியின் படி விளைபொருட்களுக்கான குறைந்த பட்ச ஆதரவு விலையை அதிகரிப்பாரா?

அல்லது இந்த உயர்ந்து வரும் செலவிலான பொருளாதார சூழலில் விவசாயிகளின் சுமையை குறைப்பதற்காக, சிறப்பான கடனுதவிகள், மலிவு விலை விதைகள், உரங்கள் போன்றவை அவர்களுக்கு கிடைக்கச் செய்வதைப் பற்றி தெரிவிக்கிறாரோ?

இல்லை இவை தொடர்பான ஒரு சிறு குறிப்பு கூட நிதிநிலை அறிக்கையில் இல்லை.

‘விவசாயக் கடன்’ என்பதில் (சிங்கத்தின் பங்கு) பெரும் பகுதி நகர்ப்புற மற்றும் பெரு நகரம் சார்ந்த தொழில்களுக்கு செல்கிறது.

மேலும் உத்திரவாதம் அளிக்கப்பட்ட பாசன வசதி என்பது – நீர்நிலைகளை தூர்வாருதல் போன்றவற்றால் (அதை தேசிய ஊரக வேலைவாய்ப்பு உத்திரவாத திட்டத்துடன் இணைத்துக் கொள்ளலாம்) செய்யப்படுமா அல்லது ஒப்பந்ததாரர்களுக்கு பெரும் லாபத்தையும், பாசன வசதியில் சிறிதளவு தாக்கத்தையும் மட்டுமே ஏற்படுத்தக் கூடிய நதிகள் இணைப்பு போன்ற கனவுகளாலா என்பது தெரியவில்லை.

இருப்பினும், பல தொலைக்காட்சி விவாத தொகுப்பாளர்கள், பல பத்திரிகை தலையங்கங்கள் இந்த நிதிநிலை அறிக்கையை “விவசாயிகளுக்கு ஆதரவானது”, “கிராமப்புறங்களுக்கு ஆதரவானது” என பறைசாற்றி வருகின்றனர். கடந்த 24 வருடங்களில் ஒவ்வொரு 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை இது போலத்தான் அவர்கள் பறைசாற்றியிருக்கின்றனர். ஆனால், ‘விவசாயிகளுக்கு ஆதரவான’ பட்ஜெட் என்கிற வார்த்தை எச்சரிக்கை மணியை ஒலிக்க வேண்டும். வழக்கமாக அதைத் தொடர்ந்து விவசாயத்தை மேலும் வணிகமயமாக்கும் நடவடிக்கைதான் எடுக்கப்படும். விவசாயிகளுக்கு கடுமையான சிரமங்கள் நிரம்பிய காலம் வரும்.

சிலரின் வருமானம் உண்மையில் 2022-ல் இரட்டிப்பாகும், ஆனால் நிச்சயமாக அது 2014 தேர்தலின் போது பா.ஜ.க அவர்களுக்கு வாக்களித்தது போல குறைந்த பட்ச ஆதரவு விலை அதிகரிப்பு தொடர்பாக ஏமாற்றப்பட்டு வரும் விவசாயிகள் அல்ல.

சமீபத்திய ஹருண் அறிக்கையில் இந்தியாவில் 111 பெரும் பணக்காரர்கள் (டாலர் கோடீஸ்வரர்கள்) இருப்பதாக பட்டியலிடப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில் அவர்களின் சொத்து ஒரே வருடத்தில் 25 சதவீதம் அதிகரித்துள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. உலகம் முழுவதும் கடந்த வருடத்திலிருந்து புதிய பெரும் பணக்காரர்கள் என பட்டியலிடப்பட்டுள்ள 99 நபர்களில் 27 பேர் அதாவது கிட்டத்தட்ட 3ல் 1 பங்கு இந்தியர்கள் என்கிறது அந்த புள்ளி விபரம்.

இந்த 111 பெரும் பணக்காரர்களின் மொத்த சொத்துக்கள் கடந்த 12 மாதத்தில் ஏறக்குறைய $6,200 கோடி (சுமார் ரூ 4 லட்சம் கோடி) உயர்ந்து $30,800 கோடியை (சுமார் ரூ ரூ 20 லட்சம் கோடி) எட்டியது என ஹாருண் அறிக்கை கணக்கிடுகிறது. இந்த உயர்வு வருவாய்க்கு மட்டும் தற்போதுள்ள ஐரோப்பிய வரி விதிப்பு முறையில் 30 சதவீத வரி என கணக்கிட்டால் கூட வரி $1,800 கோடி அதாவது ரூ 1,22,774 கோடி ஆகும். வருவாயில் “தாக்கம் (Impact)” என்று சொல்லப்படுகிற தள்ளுபடியில் நான்கில் ஒரு பங்கிற்கு நிகரானதுதான் இது. இந்தத் தொகையானது பெருமளவு அவலம் நிலவும் ஆண்டில் ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை 3 மடங்கு அதிகரிக்க போதுமானது.

தங்கம், வைரம் மற்றும் நகை வியாபாரிகளுக்கான தள்ளுபடி ரூ 61,126 கோடி. தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதியளிப்பு திட்டத்திற்கு ‘முன் எப்போதும்’ இல்லாத வகையில் ஒதுக்கீடு என பெருமைப்பட்டுக் கொள்கிற தொகையை விட 58 சதவீதம் அதிகம் இந்த தள்ளுபடி தொகை. மேலும் விவசாயம் மற்றும் விவசாயிகள் நலன் என ஒதுக்கியிருக்கும் தொகையைக் காட்டிலும் 70 சதவீதம் அதிகம் இது. 2005-06 லிருந்து தங்கம், வைரம், மற்றும் நகைகள் வகையில் தள்ளுபடி என்பது மட்டும் ரூ 4.6 லட்சம் கோடியை தாண்டுகிறது. இந்த வருடம் விவசாயம் மற்றும் விவசாயிகள் நலன் என ஒதுக்கியிருக்கும் தொகையைப் போல் 13 மடங்கு அதிகம் இது. இது விவசாயிகளுக்கு ஆதரவான பட்ஜெட் என்றால் விவசாயிகளுக்கு எதிரான பட்ஜெட் எப்படி இருக்கும் என்று நினைத்துப் பார்க்கவே முடியவில்லை.

முக்கியமாக ஒன்றை கவனத்தில் கொள்ளுங்கள். இவற்றையெல்லாம் ஆட்சியாளர்கள் “மானியங்கள்” என வகைப்படுத்தவில்லை, ஆனால் உண்மையில் அவை மானியங்கள்தான். ஆட்சியாளர்கள் மானியங்களை தாக்கும் போது, அவர்கள் உண்மையில் ஏழைகள், வறியவர்களுக்கு செல்லும் மானியங்களை, குறிப்பாக உணவு, வேலைவாய்ப்பு, உடல்நலம் சார்ந்த மானியங்களைத் தான் தாக்குகின்றனர்.  இருதயமேயில்லாத இத்தகைய தாக்குதலை தூக்கிப் பிடிப்பவர்கள் அவற்றுக்கு “வீணாகும் மானியங்கள்” என பெயரிடுகிறார்கள். ‘வருவாயில் தாக்கம்’ என்ற குப்பையை அவர்கள் ‘ஊக்கத்தொகை’ என்று அழைக்கிறார்கள்.

மானியம் என்பது பொதுவாக ஏழைகளுக்காக கொடுக்கப்படுவது. மானியங்களை அனைவருக்கும் வினியோகிக்கும் முறையை ‘இலக்கிலானது’ என்று மாற்றி கோடிக்கணக்கானவர்களை அதிலிருந்து ஒதுக்கி வைக்கிறார்கள்.

மறுபுறம் கோடீஸ்வரர்களுக்கான ‘தாக்கம்’ தள்ளுபடி (காட்ஸில்லா தள்ளுபடி என்று அறியப்படுவது) என்பது வருடந்தோறும் அதிகரித்துக் கொண்டுதானிருக்கிறது. வருவாய் “தாக்கம்” என்ற பெயரிலான தள்ளுபடி இது தொடர்பான புள்ளிவிபரங்கள் கிடைக்கும் 2005-06ம் வருட தொகையைக் காட்டிலும் இந்த ஆண்டு 140 மடங்கு அதிகரித்திருக்கிறது.

கார்ப்பரேட் வருமான வரியில், கலால் வரி, சுங்க வரி என்கிற இனங்களில் 2005-06 லிருந்து இது வரை மேற்கொள்ளப்பட்ட தள்ளுபடியை மட்டும் வைத்திருந்தால் தேசிய ஊரக வேலைவாய்ப்பு உத்திரவாத திட்டத்தை (100 நாள் வேலைத்திட்டம்) இன்றைய அடிப்படையில் 109 ஆண்டுகளுக்கு செயல்படுத்த முடியும். கோடிக்கணக்கான வறியவர்களின் வாழ்வை மேம்படுத்தியிருக்க முடியும். “விட்டுக்கொடுக்கப்பட்ட வருவாய்” என்கிற வார்த்தையை நீக்கிவிட்டு, முதலாளிகளுக்கான மானியத்தை சாதுர்யமாக “வருவாயில் தாக்கம்” என்கிற கோவணத்தால் மறைத்துக் கொள்வது மக்களின் வேதனையில் உப்பு தடவுவது போல உள்ளது. (குறிப்பாக சொல்லப் போனால் அது ‘விட்டுக் கொடுக்கப்பட்டது (foregone)’ அல்ல, ‘கண்டுகொள்ளாமல் விட்டது (forgone)” அது வேறு கதை).

இத்தகைய வார்த்தை மாற்றம் நடைமுறையில் குழப்பமூட்டும் முட்டாள்தனத்தை அறிமுகப்படுத்துகிறது.

சில பத்தாண்டுகளுக்கு முன்பாக அமெரிக்க இராணுவம் அதன் பல போர் நடவடிக்கைகளை நியாயப்படுத்துவதற்காக, சேதங்களைப் பார்த்து பெரிய அளவில் அதிர்ச்சி ஏற்படாமலிருக்க “தொடர்புடைய சேதம் (collateral damage)” என்ற வார்த்தையை பயன்படுத்தியது. அமெரிக்கா நடத்தும் போர்களில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கொல்லப்படுவதை குறிப்பதற்கான இடக்கரடக்கல் அது. படுகொலைகள் தொடர்ந்தன, ஆனால் அவை இப்படி வலிக்காமல் இலகுவாக குறிப்பிடப்படுகின்றன. நிதிநிலையறிக்கையின் இந்த மலிவு மொழி ஆசிரியர்கள் தமது வார்த்தை விளையாட்டில் அது போன்ற ஒன்றை செய்கிறார்கள். பொதுப்பணம் கொள்ளையடிக்கப்படுவது, அது போகும் இடம், வறுமையில் வாடும் கோடிக்கணக்கான மக்களின் கடும் துயரம் இவை அனைத்தும் இணை சொற்களில் மூழ்கடிக்கப்படுகிறது.

நன்றி – திரு பி.சாய்நாத் அவர்களின் இணையதளம் (www.psainath.org) (இக்கட்டுரை முன்னதாக அவுட்லுக் பத்திரிக்கையிலும் வெளியாகியுள்ளது)

தமிழில் – சித்ரகுப்தன்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க