privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புபோலி ஜனநாயகம்போலீசுதேசத்துரோக வழக்கைக் கண்டித்து தருமபுரி ஆர்ப்பாட்டம் !

தேசத்துரோக வழக்கைக் கண்டித்து தருமபுரி ஆர்ப்பாட்டம் !

-

டாஸ்மாக்கை மூடு என்றால் தேச துரோக வழக்கு !
தேச துரோக வழக்கு போடாதே என பேச அனுமதி மறுப்பு!
அனுமதி மறுக்காதே என்றால் கைது!
இதுதான் தேர்தல் ஆணையத்தின் ஜனநாயகம்!

மூடு டாஸ்மாகை  என்ற முழக்கத்தின் கீழ் திருச்சியில் பிப்ரவரி  14 சிறப்பு மாநாடு மக்கள் அதிகாரம் சார்பாக நடத்தப்பட்டது. இந்த மாநாட்டில் பேசிய மக்கள் அதிகாரம் தோழர்கள், மற்றும் சிறப்பு விருந்தினர்கள் ஆறுபேர் மீது தேசதுரோக வழக்குபோட்டுள்ளது தமிழக அரசு. டாஸ்மாக்கை மூடு என பேசியதற்காக தேசதுரோக வழக்கு போட்டதை பல்வேறு அரசியல் கட்சியினரும் ஜனநாயக சக்திகளும் கண்டனமும் எதிர்ப்பும் தெரிவித்து வருகின்றனர். இந்த தேசதுரோக வழக்கிற்கு எதிராக மக்கள் அதிகாரம் சார்பாக தருமபுரியில் ஆர்ப்பாட்டம்  நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து தருமபுரியில் உள்ள பல்வேறு கட்சியினர், ஜனநாயக சக்திகள் பேசுவதற்கு முன்வந்தனர்.

இந்நிலையில், ஏப்ரல் 6ஆம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்துவதற்கு மக்கள் அதிகாரம் தோழர்களும் சிபிஐ, சிபிஎம், திமுக, தேமுதிக, திக, விசிக உள்ளிட்ட கட்சியினரும் தருமபுரி பி.எஸ்.என்.எல் அலுவகம் முன்பாக குவிந்தனர்.

முன்னதாக, ஆர்ப்பாட்டம் நடத்துவதற்கான அனுமதியை உரிய நேரத்தில் வழங்காமல் இழுத்தடித்து வந்தது போலிசும்,தேர்தல் ஆணையமும். ஆர்ப்பாட்டம் தொடங்குவதற்கு முன்புவரை அனுமதி குறித்து எந்த தகவலும் தெரிவிக்கவில்லை. ஆன் லைனில் பதிவு செய்தால் உடனடியாக அனுமதி வழங்கப்படும் என தேர்தல் ஆணையம் பிரச்சாரம் செய்வதெல்லாம் மோசடி, பித்தலாட்டம். மக்களின் ஜனநாயக உரிமைகளை  மறுப்பதில், ஜனநாயக உரிமைகளை  நசுக்குவதில் போலீசை விட நாங்கள் சளைத்தவர்கள் அல்ல என காட்டிக்கொண்டது தேர்தல் ஆணையம்.

இது குறித்து போலீசிடம் விசாரித்த போது, நாங்கள் ஆர்ப்பாட்டம்  நடத்த அனுமதிக்கலாம் என்று சொல்லி தேர்தல் அதிகாரிக்குத் தெரிவித்து விட்டோம் என்றது. தேர்தல் அதிகாரியின் அலுவலகத்திற்கு நேரில் சென்று விசாரித்த போது, போலீசிடமிருந்து  எந்த  பதிலும் வரவில்லை என்றார் தேர்தல் அதிகாரி. போலீசு பதிலளித்துவிட்டதாகத் தெரிவித்தனரே  என்று கேட்ட போது,  உங்களது மனு தள்ளுபடி செய்யப்பட்டது என்று தெரிவித்தார். இந்த தகவல் மட்டும் உங்களுக்கு எப்படித் தெரியும் என்று கேட்டதற்கு பதிலளிக்காமல் வாய்மூடிக்கொண்டார். அனுமதி மறுத்துவிட்டதாக இருந்தால் எங்களுக்கு எழுத்துபூர்வமாக கொடுங்கள் என்ற போது, அதற்கும் பதிலளிக்கவில்லை. இதன் பின்னர், மாலையில் வருமாறு தெரிவித்தார் தேர்தல் அதிகாரி. மாலையில் தோழர்கள் சென்ற போது, இன்னும் உங்களுக்கு பதில் வரவில்லை என்றார். தேர்தல் அதிகாரியின் இந்த நடவடிக்கையைக் கண்டித்தும், சட்டத்தை நீங்கள் மதிப்பதில்லை, நீங்கள் சொல்லும் சட்டத்தை நீங்கள் மதிக்க வேண்டும் என்று எச்சரித்துவிட்டு வந்தனர். இந்நிலையில்தான் மறு நாள் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

காலை முதலே பலவேறு ஜனநாயக சக்திகள் ஆர்ப்பாட்டம் குறித்தும், தேசதுரோக வழக்கை போட்டதைக் கண்டித்தும் தங்களது ஆதரவை மக்கள் அதிகாரத்திற்கு தெரிவித்துவந்தனர். மக்கள் அதிகாரம் தோழர்கள் ஆர்ப்பாட்ட இடத்தில் குவிவதைக் கண்ட போலீசு அந்தப் பகுதியில் மக்கள் நடமாட்டத்தைத் தடுத்தது. இந்நிலையில் நூற்றுக்கணக்கான தோழர்கள், ஜனநாயக சக்திகள் ஊர்வலமாக ஆர்ப்பாட்ட இடத்தை நோக்கி முழக்கமிட்டபடியே சென்றனர்.

தருமபுரி ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட பெண்களும் குழந்தைகளும்
தருமபுரி ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட பெண்களும் குழந்தைகளும்

தடையை மீறி நடக்கும் ஆர்ப்பாட்டத்திற்கான ஊர்வலத்தை தோழர்.முத்துக்குமார்,  மண்டல ஒருங்கிணைப்பாளர், தருமபுரி தொடங்கிவைத்தார். இந்த ஆர்ப்பாட்டத்தில் கண்டன உரையாற்றிய விவசாயிகள் விடுதலை முன்னணியின் பென்னாகரம் வட்டச் செயலாளர், தோழர்.கோபிநாத் பேசும் போது, “டாஸ்மாக் இன்று தமிழகத்தின் ஒருதலைமுறையையே சீரழித்துவிட்டது. டாஸ்மாக்கினால் பல குடும்பங்கள் நடுவீதிக்கு வந்துள்ளன. பல தாய்மார்கள் விதவையாக்கியுள்ளனர். இப்படிப்பட்ட டாஸ்மாக்கை மூடு என்று பேசியதற்காக மக்கள் அதிகாரம் தோழர்கள், மாநாட்டில் சிறப்புரையாற்றிய பேச்சாளர்கள் மீது தேச துரோக வழக்கு பதிவு செய்துள்ளது. சிறுமியைக் கூட அந்த வழக்கில் இணைத்துள்ளது. பல்வேறு கட்சிகளை இணைத்துக்கொண்டு மக்கள் அதிகாரம் சார்பாக ஆர்ப்பாட்டம் நடத்துவதற்கு 4 நாட்கள் முன்னதாகவே விண்ணப்பித்தும், இன்று காலையில் பதிலளிக்கிறார்கள் போலீசு அதிகாரிகள். அனுமதி மறுக்கப்பட்டதாகத் தெரிவிக்கிறார்கள். அனுமதி இல்லை என்று மூன்று நாளாக அலைக்கழித்துள்ளது. அதனை எழுதித்தருவதற்கு கூட துப்பில்லை. இப்படிப்பட்ட அரசிடம் கோரிக்கை வைத்து, டாஸ்மாக்கை மூட முடியுமா? முடியாது. டாஸ்மாக் ஒரு சாதாரண விசயம். இதனை மூடுவதற்கு இந்த அரசிடம் கெஞ்சுவது  வீண்வேலை.

தேர்தல் என்ற நாடகத்திலே, ஆண்டுமுழுவதும் மக்களைத் திருடி கொள்ளையடிக்கும் அதிகாரிகள் கூட்டம், ஜனநாயகமாக நாங்கள் தேர்தலை நடத்துகிறோம் என்கின்றனர். இது ஒரு மோசடி. இதுமட்டுமல்ல, இந்த தேர்தலை நடத்திதான் டாஸ்மாக்கை மூட முடியுமா? முடியாது. ஆகையால், டாஸ்மாக்கை மூடுவதற்கான போராட்டத்தில் மக்கள் அதிகாரத்தைக் கையிலெடுக்க வேண்டும்” என்று போலீசையும் தேர்தல் நாடகத்தையும் அம்பலப்படுத்தி பேசினார். இதன் பின்னர், தோழர்களை போலீசு கைது செய்வதாக அறிவித்து கைது செய்தது.

அரை மணிநேரத்திற்கும் மேலாக நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தின் இறுதியில் குழந்தைகள், பெண்கள் உட்பட 30 பேர் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்டு மண்டபத்தில் அடைக்கப்பட்டிருந்த தோழர்களிடம் தேர்தல் அதிகாரிகள் வந்து, உங்களது ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது என்று சொல்லி, எழுத்துபூர்வமாக கடிதத்தைக் கொடுத்தனர். தேர்தல் அதிகாரிகளின் இந்த மோசடித்தனத்தையும் ஜனநாயகமாக குரல் கொடுப்பதற்கு கூட அனுமதி மறுத்துவிட்டு, இறுதியில் வந்து பசப்புவதையும் அம்பலப்படுத்தி தோழர்கள் அந்த அதிகாரிகளை விரட்டியடித்தனர்.

மக்கள் அதிகாரம்,
தருமபுரி.
தொடர்புக்கு: 8148573417

ஆர்ப்பாட்டத்தின் புகைப்படங்கள்:

 

பத்திரிக்கை செய்திகள்:

 

 

 

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க