Thursday, May 13, 2021
முகப்பு சமூகம் சாதி – மதம் அம்பேத்கரை மதம் மாற்றுகிறது ஆர்.எஸ்.எஸ். கும்பல் !

அம்பேத்கரை மதம் மாற்றுகிறது ஆர்.எஸ்.எஸ். கும்பல் !

-

ஆர்.எஸ்.எஸ். கும்பல் தனக்கு எதிராகச் சமரசமின்றிப் போராடுபவர்களைக் கொன்றொழிக்கிறது. ராம்விலாஸ் பஸ்வான், உதித் ராஜ் போன்ற தாழ்த்தப்பட்ட பிழைப்புவாதிகளை விலைபேசித் தன்வயப்படுத்திக் கொள்கிறது. மூன்றாவதாக, தனது ஜென்ம விரோதிகளை அணைத்துக் கொல்லவும் முயற்சிக்கிறது.

தீண்டாமைக் கொடுமைக்கு மூல முதற்காரணம் பார்ப்பன இந்துமதம்தான் என்பதை நிலைநாட்டி, நான் இந்துவாகச் சாக மாட்டேன் என்று கூறி, புத்த மதத்துக்கு மாறியவர் அம்பேத்கர். இந்து மதம் குறித்தும், ராமன் – கிருஷ்ணன் முதலான கடவுளர்கள் குறித்தும் அம்பேத்கர் செய்திருக்கும் விமரிசனங்களில் கால்பங்கைப் பேசினால்கூட, அவ்வாறு பேசுபவர்கள் மீது கொலைவெறித் தாக்குதல் நடத்தும் இந்து மதவெறிக் கும்பல், இன்னொரு பக்கம் அம்பேத்கரைத் துதிபாடுகிறது.

இந்து மதத்தின் தீமைகளைக் களைந்து, அதனை எப்படியாவது சீர்திருத்தவேண்டும் என்பதற்காகத்தான் அம்பேத்கர் கடுமையாக விமரிசித்தார். ஆர்.எஸ்.எஸ்.-இன் நோக்கமும் தீண்டாமை முதலான கொடுமைகளைக் களைவதுதான். அம்பேத்கருக்கும் ஆர்.எஸ்.எஸ். அமைப்புக்கும் நோக்கம் ஒன்றுதான். கருத்தைச் சொல்லும் முறையில்தான் வேறுபாடு என்ற பொய்யைப் பரப்புகிறது, இந்து மதவெறிக் கும்பல்.

இதனை உண்மையாக்குவதற்காக அம்பேத்கரின் கூற்றுகளைத் திரித்துப் பிரச்சாரம் செய்கிறது. அம்பேத்கர் தங்கள் தலைவர்களுடன் நெருக்கமாக இருந்ததைப் போன்ற பொய்க்கதைகளைக் கட்டவிழ்த்து விடுகிறது.

1980-களில் தாழ்த்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீட்டுக்கு எதிராக இந்தியாவிலேயே முதன்முறையாக பெரும் கலகம் ஒன்றை நடத்திய மாநிலம் குஜராத். அதனைத் தலைமை தாங்கி நடத்தியது ஆர்.எஸ்.எஸ். அன்று அதன் முன்னணி செயல்வீரராக இருந்த மோடி, அம்பேத்கர் மட்டும் இல்லையென்றால், நான் இந்நேரம் டீ ஆற்றிக் கொண்டிருப்பேன் என்று சென்டிமென்ட் வசனம் பேசுகிறார். அம்பேத் கருக்குச் சிலை வைக்கிறார்கள், விழா எடுக்கிறார்கள். கடைசியாக, இந்துத்துவ அம்பேத்கர் என்ற தலைப்பில் ஒரு நூலும் வெளியிடப்பட்டிருக்கிறது.

இந்தப் பொய்களை மறுப்பதற்கு உண்மை விவரங்களை அறிந்திருப்பது அவசியம். மனித உரிமை, மதச் சார்பின்மை செயற்பாட்டாளரும் மும்பையிலுள்ள இந்திய தொழில்நுட்பக் கழகத்தின் முன்னாள் பேராசிரியருமான ராம் புன்யானி அவர்கள் அம்பேத்கரின் சித்தாந்தம் – மதவாத தேசியமும் இந்திய அரசியலமைப்பும்  என்ற தலைப்பில் எழுதியுள்ள இக்கட்டுரை அதற்குப் பயன்படும். கட்டுரையின் சுருக்கப்பட்ட தமிழாக்கத்தை இங்கே தந்திருக்கிறோம்.

– ஆசிரியர் குழு

ரவலான மக்களின் நம்பகத்தன்மையைப் பெறும் பொருட்டு ஆர்.எஸ்.எஸ். பலவிதமான சரக்குகளை அவிழ்த்து விடுகிறது. காந்தி, ஆர்.எஸ்.எஸ். செயற்பாட்டால் ஈர்க்கப்பட்டார் என்று கூறியது. சமீபமாக, அம்பேத்கர் ஆர்.எஸ்.எஸ்.  சித்தாந்ததில் நம்பிக்கை வைத்திருந்தார் எனப் புளுகியிருக்கிறார் மோகன் பகவத்.

இந்து மதவெறி பயங்கரவாதத்தைத் தனது எழுத்துக்களின் மூலம் அம்பலப்படுத்திவரும் டாக்டர் ராம் புனியானி.
இந்து மதவெறி பயங்கரவாதத்தைத் தனது எழுத்துக்களின் மூலம் அம்பலப்படுத்திவரும் டாக்டர் ராம் புனியானி.

அம்பேத்கர் மற்றும் ஆர்.எஸ்.எஸ்.-இன் சித்தாந்தங்கள் நேரெதிரானவை. அம்பேத்கர், இந்திய தேசியம், மதச்சார்பின்மை மற்றும் சமூக நீதிக்காக இருந்தார். ஆர்.எஸ்.எஸ்.-இன் சித்தாந்தமோ பார்ப்பனியத்தன்மை வாய்ந்த இந்துமதக் கருதுகோள், இந்து ராஷ்டிரம் என்ற இரு தூண்கள் மீது நிற்கிறது.

இந்து மதத்தின் சித்தாந்தம் பற்றிய அம்பேத்கரின் கருத்து என்ன? அவர் இந்து மதத்தை பார்ப்பனிய இறையியல் என் கிறார். தாழ்த்தப்பட்ட மக்களுக்குக் கொடும் துன்பத்தை அளிக்கின்ற சாதி அமைப்புதான் தற்போது நிலவும் இந்துமதம் என்பதன் சாரம் என்கிறார், அவர்.

ஆரம்ப காலத்தில், இந்து மதத்தினுள் இருந்தபடியே சாதிய அமைப்பின் தளைகளை உடைக்க அவர் முயற்சி செய்தார். சவதார் தலாப் இயக்கம் (தலித்துகள் பொதுக் குடி நீரை உபயோகப் படுத்தும் உரிமை), கலராம் மந்திர் போராட்டம் (கோயில் நுழைவுப் போராட்டம்) போன்றவற்றை முன்னெடுத்தார். பார்ப்பனிய, சாதிய, பாலின படிநிலை ஆதிக்கத்தின் அடையாளமான  மனு ஸ்மிருதியை எரித்தார். இந்துமதம், பார்ப்பனியத்தின் மீதான அவரது விமர்சனங்கள் கடுமையாக இருந்தன. அதன் பயனாக,  வெகு சீக்கிரத்தில் இந்து மதத்தை விட்டு வெளியேறுவதென்ற முடிவை எடுத்தார். இந்து மதத்தின் புதிர்கள் என்ற நூலில், (மகாராஷ்டிர அரசால் 1987-இல் வெளி யிடப்பட்டது) இந்து மதத்தைப் பற்றிய அவரின் புரிதல்களை, குறிப்பாக அதன் பார்ப்பனியத் தன்மையை விளக்குகிறார். இந்த நூலில் அம்பலப்படுத்தப்படும் நம்பிக்கைகளை நாம் பார்ப்பனிய இறையியல் என்று அழைக்கலாம். இந்து மதம் என்பது காலத்தால் அழியாதது அல்ல என்பதை நான் மக்களுக்குப் புரிய வைக்க விரும்புகிறேன். பார்ப்பனர் களால் எவ்வாறு ஏமாற்றப்படுகிறோம் என்பது குறித்து சுயமாகச் சிந்தித்துப் புரிந்துகொள்ள மக்களுக்கு உதவுவதும், அவ்வாறு ஏமாற்றுவதற்குப் பார்ப்பனர்கள் பயன்படுத்தும் உத்திகளின்பால் மக்களின் கவனத்தை ஈர்ப்பதுமே இந்த நூலை எழுதுவதற்கான இரண்டாவது நோக்கம்.

1935-களில், தான் ஒரு இந்துவாக இறக்கப் போவதில்லை எனப் பகிங்கரமாக அறிவித்த காலத்திலிருந்தே அம்பேத்கர் இந்து மதத்திலிருந்து விலக ஆரம்பித்திருந்தார். 1936-ல் சீக்கிய மிஷனரி நடத்திய மாநாட்டில் கலந்து கொண்டார். அக்காலகட்டத்தில் அவர் சீக்கியத்தைத் தழுவும் யோசனையில் இருந்தார். 1936-ல் அம்பேத்கர் சாதி ஒழிப்பு எனும் நூலையும் எழுதி வெளியிட்டார். அது லாகூரில் நடந்த சாதி ஒழிப்பு இயக்க (ஜாத் பத் தோடக் மண்டல்) மாநாட்டில் பேசுவதற்காகத் தயாரிக்கப்பட்ட, ஆனால், பேசுவதற்கு மறுக்கப்பட்ட தலைமையுரையாகும். அதன் கடைசிப் பகுதியில், அம்பேத்கர் இந்து மதத்தை விட்டுவிட இருக்கும் தீர்க்கமான முடிவை வலியுறுத்தியிருப்பார்.

பொதுக் குளம் மற்றும் கிணறுகளில் தாழ்த்தப்பட்டோர் நீர் எடுப்பதை மறுத்த தீண்டாமைக்கு எதிராக 1927-இல் மகாராஷ்டிரா மாநிலம், ராய்காட் மாவட்டத்தில், மஹத் எனுமிடத்திலுள்ள சாவ்தார் ஏரியில் குடிநீர் பருகும் போராட்டத்தை அம்பேத்கர் தலைமையேற்று நடத்தியதைச் சித்தரிக்கும் ஓவியம்.
பொதுக் குளம் மற்றும் கிணறுகளில் தாழ்த்தப்பட்டோர் நீர் எடுப்பதை மறுத்த தீண்டாமைக்கு எதிராக 1927-இல் மகாராஷ்டிரா மாநிலம், ராய்காட் மாவட்டத்தில், மஹத் எனுமிடத்திலுள்ள சாவ்தார் ஏரியில் குடிநீர் பருகும் போராட்டத்தை அம்பேத்கர் தலைமையேற்று நடத்தியதைச் சித்தரிக்கும் ஓவியம்.

அவர் சொல்கிறார்,  “நான் முடிவு செய்துவிட்டேன். என்னுடைய மதமாற்றம் என்பது எதைவிடவும் உறுதியானது. எனது மதமாற்றமானது எந்த பொருள் ஆதாயத்துக்குமானது அல்ல. தீண்டத்தகாதவனாக இருப்பதன் காரணமாக, நான் சாதிக்க முடியாதது என்று எதுவும் இல்லை. எனது மதமாற்றமானது முழுக்க முழுக்க எனது ஆன்மீக நோக்கிலானது. இந்து மதம் எனது மனசாட்சிக்கு உகந்ததாக இல்லை. இது எனது சுயமரியாதைக்கும் ஏற்றதாக இல்லை. எவ்வாறாயினும், உங்களின் (அதாவது, தாழ்த்தப்பட்ட மக்கள் சமூகத்தின்) மதமாற்றம் என்பது பொருள் மற்றும் ஆன்மீக ஆதாயத்திற்கானது ஆகும். பொருள் ஆதாயத்திற்காக மதம் மாறுவது குறித்துச் சிலர் பரிகசித்துச் சிரிக்கலாம். அவ்வாறு சிரிப்பவர்களை முழுமுட்டாள்கள் என்று அழைப்பதில் எனக்கு தயக்கம் எதுவும் இல்லை” (Ambedkar – Salvation).

ராமன், ஆர்.எஸ்.எஸ். சொல்லிக்கொண்டிருக்கும் கலாச்சார தேசியத்தின் அடையாளமான கடவுளாக இருக்கிறார். கடவுள் ராமனைப் பற்றி அம்பேத்கர் என்ன சொல்கிறார் எனப் பார்ப்போம். “சீதையின் வாழ்வு அவனுக்கு ஒரு பொருட்டாகவே தெரியவில்லை. தன்னுடைய பேரும் புகழுமே பெரிதென அவன் நினைத்திருக்கிறான். அரசாளும் மன்னன் என்ற முறையில் அவ்வித அவதூறுகளைப் போக்கிட அவன் என்ன செய்ய வேண்டுமோ, அதையும் செய்யவில்லை. ஓர் அப்பாவி மனைவியின் நம்பிக்கைக்குரிய கணவன் ஒருவன் எதைச் செய்ய வேண்டுமோ அதையும் செய்யவில்லை. மேலும், காட்டிலுள்ள வால்மீகியின் ஆசிரமத்தில் அந்தச் சிறுவர்கள் (லவா, குசா) 12 ஆண்டுகள் வளர்ந்து, வாழ்ந்து வந்தனர். வால்மீகியின் ஆசிரமம் ராமன் அரசாளும் அயோத்தி நகருக்கு நெடுந்தொலைவில் ஒன்றுமில்லை. இந்த 12 ஆண்டுகளில் ஒரு தடவையாவது இந்த உதாரண புருஷனான ராமன், பாசமிக்க தந்தை, சீதை என்னவானாள், அவள் செத்தாளா, பிழைத்தாளா என்பதைப் பற்றி விசாரிக்கக்கூட இல்லை; காட்டுமிராண்டியைக் காட்டிலும் கேவலமாய் நடந்து கொண்ட இந்த இராமனோடு மீண்டும் மனைவியாய் சென்று வாழ்வதைக் காட்டிலும் சாவதே நல்லது என்று சீதை முடிவு செய்திருக்கிறாள்.”

அம்பேத்கரின் கனவான சாதி ஒழிப்பு என்பது இந்தியா சுதந்திரம் பெற்ற பின்னரும் நிறைவடையாமலேயேதான் இருக்கிறது. இந்தியாவில் சாதி என்பது ஒரு முக்கியமான அம்சமாக நீடிப்பதற்கு சமூகத்தின் இயங்கும் பல்வேறு காரணிகளும் பாத்திரமாற்றுகின்றன. அம்பேத்கரின் சாதி ஒழிப்பு என்ற கருத்துக்கு மாறாக, ஆர்.எஸ்.எஸ்.-ன் அரசியல் பல்வேறு சாதிகளுக்கிடையே நல்லிணக்கம் என்பதை வலியுறுத்துகிறது. இதன் பொருட்டு, அவர்கள் சமாஜிக் சமஸ்தா மன்ச் (சமூக நல்லிணக்க மன்றம்) என்கிற அமைப்பை உருவாக்கியுள்ளார்கள். சமூகப் பிரச்சினைகளில் ஆர்.எஸ்.எஸ்.-ன் அணுகுமுறை அம்பேத்கரின் அணுகுமுறைக்கு நேரெதிரானதாக இருப்பதைக் கவனியுங்கள்.

ஆர்.எஸ்.எஸ்.-ன் அரசியல் சித்தாந்தத்திற்கு இதயமாக இருப்பது இந்துத்துவம் அல்லது இந்திய தேசியமாகும். அம்பேத்கர், தனது பாகிஸ்தான் குறித்த கருத்துகள் எனும் நூலில் இப்பிரச்சினை குறித்து ஆழமாக எழுதியுள்ளார். அதில், இந்து தேசம் என்ற ஆர்.எஸ்.எஸ். கருத்தாக்கத்தின் மூலவரான சாவர்க்கர் மற்றும் முசுலீம் தேசியம் எனும் சித்தாந்தத்தின் மூல வரும் பாகிஸ்தானை முன்னிறுத்தியவருமான ஜின்னா ஆகிய இருவரின் கருத்துகளையும் அம்பேத்கர் விசாரணைக்கு உட்படுத்துகிறார்.

அம்பேத்கர் பிறந்தநாளை முன்னிட்டு ஆர்.எஸ்.எஸ். நடத்திய அணிவகுப்பு ஊர்வலம். (கோப்புப் படம்)
அம்பேத்கர் பிறந்தநாளை முன்னிட்டு ஆர்.எஸ்.எஸ். நடத்திய அணிவகுப்பு ஊர்வலம். (கோப்புப் படம்)

இது கொஞ்சம் விசித்திரமாகத் தோன்றலாம். ஆனால், ஒரு தேசமா, இரு தேசங்களா என்ற பிரச்சினையில் திரு சாவர்க்கரும், திரு ஜின்னாவும் எதிர்நிலையை எடுக்கவில்லை. இரண்டு பேருமே முழுவதுமாக உடன்படுகிறார்கள். உடன்படுவது மட்டுமல்ல, ஒரு முஸ்லிம் தேசம், ஒரு இந்து தேசம் என்று இரண்டு தேசங்கள் இருப்பதாக இருவருமே வலியுறுத்துகிறார்கள். எத்தகைய நிபந்தனைகளின் அடிப்படையில் இரண்டு நாடுகளும் உருவாக்கப்படவேண்டும் என்பதில் மட்டும்தான் இருவரும் வேறுபடுகிறார்கள்.

ஜின்னா, இந்தியாவை பாகிஸ்தான், ஹிந்துஸ்தான் என இரண்டு துண்டுகளாகப் போட்டு, முசுலீம் தேசம் பாகிஸ்தானையும், இந்து தேசம் ஹிந்துஸ்தானையும் எடுத்துக் கொள்ள வேண்டும் எனக் கூறுகிறார். சாவர்க்கரும், இந்தியாவில் இரண்டு தேசங்கள் இருப்பது உண்மைதான் என்று ஏற்றுக்கொண்ட போதிலும், அதை இரண்டாகப் பிரிக்கக் கூடாது என்கிறார். இரண்டு தேசத்தவரும் ஒரே நாட்டில், ஒரே அரசமைப்பு சட்டத்தின் வழிகாட்டு தலில் வாழலாம். ஆனால், அந்த அரசியலமைப்புச் சட்டமானது இந்து தேசம் தனக்கே உரித்தான மேலாண்மையைக்  கொண்டிருக்கும் வகையிலும், முஸ்லிம் தேசம் அதற்குக் கீழடங்கி ஒத்துழைக்கும் விதத்திலும் இருக்க வேண்டும் என்பது சாவர்க்கரின் கருத்து. (பாகிஸ்தான் மீதான கருத்துகள், மூன்றாம் பிரிவு, 7-ம் அத்தியாயம்).

ஆனால், அம்பேத்கர் ஒருங்கிணைந்த இந்தியாவை முன்மொழிந்தார். “1920 முதல் 1937 வரையில், மாண்டேக் செம்ஸ்ஃபோர்டு சீர்திருத்தத்தின் கீழ் இந்தியாவின் பெரும்பான்மையான பிராந்தியங்களில் இசுலாமியர்களும் பார்ப்பனரல்லாதவர்களும் மற்றும் ஒடுக்கப்பட்ட வர்க்கத்தினரும் ஒரே குழுவாக ஒன்றுபட்டு சீர்திருத்தத்துக்காகப் பணியாற்றவில்லையா? இந்து, முஸ்லிம் சமூகத்தினரிடையே நல்லிணக்கத்தை ஏற் படுத்தவும் இந்து ராச்சியம் என்ற அபாயத்தை ஒழிக்கவுமான பயனுள்ள வழி இதில் இருக்கிறது. திரு ஜின்னா எளிதாக இந்தப் பாதைக்கு வந்திருக்கலாம். இதில் வெற்றி பெறுவதென்பது அவருக்கு கடினமாக இருந்திருக்காது.” (பாகிஸ்தான் மீதான கருத்துகள், பக்.359 )

இந்து ராஜ்ஜியம் என்ற கருத்தை அம்பேத்கர் முழுமையாக எதிர்த்தார். பாகிஸ்தான் அவசியமா? என்ற அத்தியாயத்தில் அவர் கீழ்க்கண்டவாறு கூறுகிறார். “இந்து ராச்சியம் என்பது வரும் பட்சத்தில், அது இந்நாட்டிற்கு ஆகப்பெரும் பேரழிவாக இருக்கும் என்பதில் ஐயமில்லை. இந்துக்கள் என்னதான் சொன்னாலும், இந்து மதம் என்பது சுதந்திரம், சமத்துவம் மற்றும் சகோதரத்துவத்திற்கு எதிரான மிகப்பெரிய அச்சுறுத்தலாகத்தான் இருக்கும். இதன் காரணமாக அது ஜனநாயகத்துடன் பொருந்தி வரவே முடியாது. இந்து ராஜ்ஜியத்தை எப்பாடுபட்டாவது தடுத்து நிறுத்தியே ஆகவேண்டும்.” (http://ecumene.org/IIS/csss101.htm)
______________________________________________
புதிய ஜனநாயகம் – ஏப்ரல் 2016
_____________________________________________

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க